தீர்வுதான் என்ன.?
-------------------------
வர்ணாசிரம தர்மங்கள் ஆதிகாலத்தில் கடைபிடிக்கப் பட்டன.
அதன் அடிப்படைக் காரணம் , சிந்திக்கப்பட்டோ சிந்திக்கப்
படாமலோ DIVISION OF LABOUR என்னும் அடிப்படையே.மக்கள்
கூட்டத்தையும்,அரசு எல்லையைப் பேணிக் காப்பவர்கள்
க்ஷத்திரியர் என்றும், மக்களை நல்வழிப் படுத்தி, அறிவுரைகள்
கூறிப் பரமனுக்கும் பாமரனுக்கும் பாலமாய் இருப்பவர்களை
அந்தணர்கள் என்றும், பண்டமாற்றுக்கும்,வியாபாரத்துக்கும்
வைசியர்கள் என்றும் ,உடல் வருத்திப் பணி செய்பவர்களை
சூத்திரர்கள் என்றும் பிரித்தனர். ஆனால் இயற்கையிலேயே
மற்ற ஜீவ ராசிகளுக்கு இல்லாத பகுத்தறிவு என்ற ஒன்றை
இல்லாத அளவுக்கு வளைத்து , இந்த வகுப்பினரையே ஆண்டை
என்றும், அடிமை என்றும் எண்ணத் துவங்கி, எப்போதும் அவர்கள்
கை மேலோங்கி நிற்க,என்னவெல்லாம் செய்ய முடியுமோ
அவற்றைச் செய்து ,அவரவர் அதிகாரத்தை ஊர்ஜிதப்படுத்திக்
கொண்டனர். இதையே நான் என்னுடைய நாடகமொன்றில்
அரசன் ஆண்டான், பின் அவனுக்கு அறிவுரை என்று கூறி
அந்தணன் ஆண்டான், அதன் பின் பணபலம் படைத்த வைசியர்
ஆண்டனர், ஆண்டுகொண்டும் இருக்கின்றனர்.காலச் சுழலில்
இனி ஆள இருப்பவன் சூத்திரன் எனப்படும் தொழிலாளி என்ற
முறையில் வசனம் எழுதியிருந்தேன்..
மனிதரில் ஏற்ற தாழ்வு ஏன் என்ற எண்ணம் தோன்றும்போது
இதன் அடிப்படைக் காரணமே ஒருவனை அடக்கி ஆளவேண்டும்
என்ற மனிதனின் சீர்கெட்ட குணம்தான் என்று தெரிகிறது. மனித
குலத்தில் பிறப்பால் பெரியவன் சிறியவன் என்ற பேதமே
மற்றவரின் முதுகில் சவாரி செய்ய எண்ணும் கேடு கெட்ட குணம்
தான் காரணம் என்று தோன்றுகிறது.
எந்தக் காரணங்களுக்காக வர்ணாசிரம பேதங்கள் நடைமுறைப்
படுத்தப் பட்டனவோ அவை சமீப காலத்தில் செல்லாக் காரணம்
ஆகிவிட்டது
அடுத்தவன், பந்தயத்தில் நம்மை முந்திவிடுவான் என்ற
எண்ணமே அவனுக்கு வாய்ப்பு கொடுப்பதைத் தவிர்த்து வந்தது.
அறிவுக்கண்ணைத் திறக்க விடாமல்,அனாவசியமான
பேதங்களைக் காட்டிஒரு சமூகத்தையே குருடாக்கி வளர்த்து
விட்டோம். இதில் ஏகத்துக்கும் அநியாயம் என்னவென்றால்
இவற்றை கடவுளின் பெயராலும் ,மதத்தின் பெயராலும் இறுக்கி
விட்டோம். நம்மிடையே இருந்த இந்த பிரித்து, பிரிந்து வாழும்
குணங்களினால் நம்மை அந்நியர் ஆதிக்கத்துக்கு அடிமைப்
படுத்தி விட்டோம். வந்தவர்களுக்கு வரவேற்பு வாசலாகி ,அவர்
உதவியுடன் இந்த வேற்றுமைகளை பயிரிட்டு உரமிட்டோம்.
அவர்களுக்கென்ன ...எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்கினர் இவை
எல்லாமே கடந்த நானூறு வருடங்களுக்குள் நடந்ததே.
இவற்றை ஆராயக் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நாத்திகன்,
நம் கலாச்சாரத்தை மதிக்காதவன் என்றெல்லாம் பழி வருகிறது.
ஆத்திகம் நாத்திகம் ஆன்மீகம் என்றெல்லாம் ஏதேதோ கூறி,
அறிவுக் கண்களைத் திறக்க விடுவாரில்லை.
நடந்த தவற்றைத் திருத்த முனைவோரும், அதே தவறுகளை
செய்து தங்களுக்குச் சாதக மாக்கிக் கொள்ள முயல்கிறார்கள்.
ஒருவனை சுயமாக சிந்திக்க விடாமல் தலைவர்கள் வழி நடத்த
தொண்டர்கள் அதே தவறான பாதையில் கொண்டு செல்லப்
படுகிறார்கள்.
எனக்குத் தெரிந்து இந்த சாதீய வேறுபாடுகளை ஒழிப்பதில்
யாருக்கும் உடன்பாடில்லை. முக்கியமாக ,இந்த வேறுபாடுகளை
காட்டியே இன்னொரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கி
அடுத்தவன் முதுகில் சவாரி செய்ய, இன்னொரு கூட்டம் தயாராகி
வருகிறது. அறுபதுகளில் காணாத பேதங்கள் இப்போது முன்னை
விட அதிகமாக வெளிச்சத்தில் மிளிர்கின்றன.
எல்லோருக்கும் அறிவுக்கண்களைத் திறக்க கல்வி வழங்கப்பட
வேண்டும். கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி என்று எந்த சட்டம்
வந்தாலும் அவற்றை செயல் படுத்த விடாமல் எப்பொழுதும் ஒரு
கூட்டம் தயாராயிருக்கிறது. கல்வி லாபம் தரும் வியாபாரமாகி
விட்டது. நம் மக்களும் தனியார் பள்ளிகளே சிறந்த கல்விக்
கூடங்கள் என்று நம்பி அவற்றையே ஆதரிக்கிறார்கள். அதிகக்
கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் சிறந்தது என்ற ஒரு மாயையில்
நம் மக்கள் இருக்கின்றனர். அரசு பள்ளிகளோ பெயருக்குச் செயல்
படுவதுபோல் தோற்ற மளிக்கிற்து.கட்டாயக் கல்வித் திட்டத்தில்
25% இடம் ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை
நடைமுறைப் படுத்தவோ, செயல்படுத்தவோ எந்த முனைப்பும்
இல்லாமல் மெத்தனமாக இருக்கிறார்கள்.
எழுதும் போது எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றன. ஏற்ற
தாழ்வுகள் மறையாது. குறைக்கவாவது செய்ய வேண்டும்
என்றால், எல்லோருக்கும் கல்வி அறிவு அவசியம். அதுவும்
அனைவருக்கும் சமமாக இலவசமாக இருக்க வேண்டும்.
அடிப்படைக்கல்வியாவது வியாபாரமாக இல்லாமல் இருக்க
வேண்டும். அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.
-----------------------------------------------------------------------------------