நினைவில் நீ ( நாவல் தொடராக.)
---------------------------------------------
----- 17 -------
தமிழ் மன்றம் மக்கள் மன்றமாய் மாறும் நாள் நெருங்க நெருங்க அதில் சம்பந்தப் பட்டவர்களின் வேலையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. பிரமாண்டமான முறையில் மூன்று நாள் விழாக் கொண்டாட திட்டமிட்டு அதன்படி செயல் நடத்தும்போதுதான்,இது எதிர்பார்த்த சுபிட்ச பாதையில் முன்னேற , அந்தப் பாதையின் துவக்கம் என்பதை எல்லோரும் உணர்ந்தனர்.
நிகழ்ச்சியின் முதல் நாளும் வந்தது. ஊரே திரண்டு வந்து ஆதரவு கொடுத்ததைக் கண்டபோதுதான், தாங்கள் பட்ட கஷ்டத்தின் பயனை அடைந்ததாக ஒரு நிறைவு ஏற்பட்டது.முத்தமிழ் விழாவில் இயல் இசை நாடகம் எல்லாம் பங்கு பெற்றன. பட்டிமன்றமும் கவி அரங்கமும் ,ஆடலும் பாடலும், நாடகமும், ஓவியமும் எல்லாம் கண் கொள்ளாக் காட்சியாக அமையப் பெற்றதோடு, அவர்கள் கொண்ட லட்சியத்தின் அடிப்படையில் எழுந்ததால், அவ்விடத்தில் தமிழ் மன்றம் ஒரு புரட்சியையே தோற்றுவித்து விட்டது.
வீட்டிற்கு வீடு சென்று எல்லோரையும் அழைத்தனர். தாங்கள் எடுத்துக் கொண்டிருந்த திட்டங்களை விவரமாக எல்லோருக்கும் எடுத்துரைத்து அதில் எல்லோரும் பங்கு பெறுவதான ஒரு திருப்தியை எல்லோருக்கும் அளித்தனர்.
எந்தக் காரியத்திலும் ஒவ்வொரு தனி மனிதனும் பங்கு பெறுகிறான் என்ற உணர்ச்சியை ஏற்படுத்தினால்தான் அந்தக் காரியம் வெற்றி பெறும் என்பதை நன்கு உணர்ந்திருந்த பாபு ,திட்டங்களை நிறைவேற்ற சீரான வழி முறைகளை வகுத்துக் கொடுத்திருந்தான். அதையும் அவரவர்களே உணர்ந்து செயவது போன்ற ஒரு சூழ் நிலையையும் ஏற்படுத்தி இருந்தான். எந்தக் காரியத்துக்கும் ஒரு காசு கூட தராத மகாப் பிரபுக்கள் எல்லோரும் அவரவர்கள் சக்திக்கும் மீறி உதவினார்கள் என்றால் அது அவர்களுக்கே மனதில் பட்ட குறைகளை சீர் திருத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பின் காரணம் என்றே திட்ட வட்டமாகக் கூறலாம்..
இன்ன காரணத்துக்காக விழா நடைபெறுகிறது, இன்னின்ன பிரச்சினைகள் தீர்வு காணப் பெறப் போகின்றன என்றெல்லாம் ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும் அவை இந்த அளவுக்கு வெற்றிகரமாக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன், மன்றத்து உறுப்பினர்களேகூட எதிர் பார்க்கவில்லை., பாபுவைத் தவிர.. பாபுவுக்கு இதையும் விட நன்றாகச் செய்ய முடிய வில்லையே என்ற குறைதான் மேலோங்கி இருந்தது. ஊண் ஒழித்தான், உறக்கம் ஒழித்தான், உடலின் உபாதைகளையே மறந்தான் தான் செய்யும் பணியில் ஆண்டவனைக் கண்டான். லட்சியக் கனவு ஈடேறுகிறது என்று அறியும்போது, ,--ஆண்டவனே இந்தப் பணி சீரான பாதையில் சென்று ,இந்த சமுதாயம் ஓரளவு நன்மை பெறுகிறது என்றால், அது தொடர்ந்து நடக்க அதில் சம்பந்தப் பட்டவர்கள் அனைவருக்கும் உன் ஆசிகள் தேவை. நல்லெண்ணத்தில் எழும் காரியங்களை செயல் படுத்த மனோ திடமும், உடல் தெம்பும் எங்களுக்குக் கொடுப்பாய் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் பணிகளை செய்ய எவ்வளவு பிறவிகள் எந்த இன்னல்களிலும் , வேண்டுமானால் எடுக்கத் தயாராய் இருக்கிறேன் ---என்று அடிக்கடி வேண்டிக் கொண்டான்
பாபுவுக்கு இரு கரங்களாகவும் , கண்களாகவும்,சியாமளாவும் கானும் பணி புரிந்தனர். பட்டி மன்றத்தில் விவாதம், “ சமுதாயம் வளர்வது தனி மனிதன் முயற்சியாலா, அல்லது கூட்டுறவாலா “ என்ற தலைப்பில் நடந்தது. சான்றோர்களும் பாமரர்களும் பங்கு கொண்ட விவாதம் சூடு பிடித்தது.
“ கூட்டுறவு என்பதே தனி மனிதனின் முயற்சியின் அடிப்படையில் எழுந்ததுதானே. ஒவ்வொருவனும் சமுதாயத்தின் சீர்கேட்டை உணர்ந்து அதற்கு நிவர்த்தி தேடும்போது, தேடும் பாதையாகக் கூட்டுறவு கொள்கை உருவாகிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களென்ற அளவில் எல்லோரும் செயல் படுவது , அவரவர்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துஆட்சிக்கு அனுப்புவதில் மட்டும் இருக்கக் கூடாது. ஒவ்வொருவனுக்கும் உள்ள கடமைகளை தன்னைச் சார்ந்தவர்கள் அதனால் பாதிக்கப் படுகிறார்கள் என்ற உணர்வில் செய்தால், அது நன்மையாகத்தான் முடியும். ஆக அந்த உணர்வோடு செயல்படும் தனி மனிதனின் முயற்சியால்தான் சமுதாயம் வளரும் என்று ஒரு கட்சியினர் சான்றுகளும் மேற்கோள்களும் காட்டி விவாதித்தனர். மேலும் ஒவ்வொருவனும் அவனது கடமைகளை ,உடைமைகளைப் பெருக்கும் விதத்தில் செயலாற்று கையில் சமுதாயம் தானாக வளரும் என்றும் விவாதித்தனர்.
கூட்டுறவு முயற்சி என்பது பல தனிப்பட்ட மனிதர்கள் தங்களது தனிப்பட்ட பல கருத்துகளை ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து,, அடுத்தவர்களை வாழ வைப்பதோடு தாங்களும் வாழ வேண்டும் என்ற கொள்கையில் எழுந்தால், சீர் கேடுகள் நிறைந்த சமுதாயம் சீர்திருத்தப் பெறும் பலரது கூட்டுறவால் விளையும் பலனும் அதிகமாகும். நான் எனது என்ற அகங்கார எண்ணம் மாய்ந்து , நாம் நமது என்ற பரந்த எண்ணம் விரியும். அதனால் சோம்பல் ஒழியும் கட்டுப் பாடு அதிகரிக்கும்.விட்டுக் கொடுத்து வாழும் சமூகத்தில் அன்பே மலரும், போட்டி பொறாமை குறையும் .எல்லோரும் ஓர் குலம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற நிலையை ஏற்படுத்தும். உலகில் சமதர்மம் சிறப்பாக நிலை பெறும். –என்றெல்லாம் மற்ற கட்சியினர் விவாதித்தனர்
தீர்ப்போ,தனி மனிதன் வளர்ந்தான் என்றால் சமூகம் வளர்ந்தது என்ற நிலை சரியாகத் தோன்றினாலும் எல்லோரும் ஒரே காலத்தில் மேன்மையடைவது என்பது இயலாத காரியம் ஆதலால், அவ்வளவு சரியெனக் கொள்ள முடியாது. ஆனால் தனி மனிதனின் கட்டுப் பட்ட வளர்ச்சி கூட்டுறவால் விளைந்தால் வளர்ந்த வளர்ச்சி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும். ஆதலால் அதுவே சிறந்தது என்று இருந்தது.
கவி அரங்கம் கூடி இருந்த மக்களின் அறிவுக்கு விருந்தாகவும் ,வளர்ந்து வரும் சமுதாயத்தின் சிறப்பை உணர்த்துவதாகவும் இருந்தது.. ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நமது கலை வளர்ச்சியை எடுத்துக் காட்டும் முறையில் இருந்தது. நாடகமோ நல்லது கெட்டது என்பன போன்றவற்றை நகைச் சுவையோடு வெளிப் படுத்துவதாக அமைந்தது.
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் எல்லோரும் நிறைவு பெற்றனர். நினைத்ததை நினைத்தபடி எடுத்துரைக்கவும், எடுத்துரைக்கப் பட்டவற்றை சீர்தூக்கி முடிவுக்கு வரவும் அவர்களால் எளிதில் முடிந்தது என்றால்,,எடுத்துரைக்கப் பட்டவை அனைத்தும் ஒவ்வொருவரையும் பாதிப்பதாகவும் சார்ந்ததாகவும் இருந்ததாகும்
நிகழ்ச்சிகளாலும் நன்கொடைகளாலும் ரூபாய் ஐம்பதாயிரம் திரட்டினர். அதுவே மக்கள் மன்றத்தின் தொடக்க ரொக்கமாக அமைந்தது.
கல்யாணி அம்மாவைத் திருப்திப் படுத்தவென்றே ஒன்றிரண்டு கவள்ம் சோறு சாப்பிட்டு, சியாமளாவைக் காணப் புறப்படத் தயாரானான்.வாசல்படி அருகே வந்தவன் திடுக்கிட்டான். அவன் அங்கு கனவிலும் கமலத்தை எதிர் பார்த்திருக்க மாட்டான்.அவளது தோற்றம், நடை அதில் கண்ட பரபரப்பு எல்லாம் பாபுவுக்கு ஏதோ எதிர்பாராத சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று உணர்த்தியது.
வந்தவள் அந்த நிலையிலும் வீட்டுப்படி ஏற வில்லை. வாசலில் இருந்தபடியே பாபுவைத் தன்னோடு வரும்படி அழைத்தாள்.
“ உள்ளே வா, அக்கா. விஷ்யத்தைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லேன் .அம்மாவும் தம்பிகளும் ரொம்ப சந்தோஷப் படுவார்கள்.”
“ நான் இப்போது இருக்கும் நிலை எல்லோரும் சிரிக்கும்படித்தான் இருக்கு. பாபு நான் இப்போது உள்ளே வரதா இல்லை.உனக்கு உன் அக்கா மேல் அன்பிருந்தால் உடனே என் கூட வா. “
வெளியே புறப்பட்ட பாபு யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டதும் கல்யாணி அம்மா வெளியே வந்து பார்த்தாள்., கூடவே ராஜுவும் விசுவும் வெளியே வந்தனர். வந்தவர்களைக் கண்டதும், கமலம் எதுவும் பேசாமல் வெளியே சென்று விட்டாள். பாபுவுக்கு எதுவும் புரிய வில்லை. கல்யாணி அம்மாவுக்கு கமலம் வந்ததும், அவள் தன்னைக் கண்டும் எதுவும் பேசாமல் திரும்பிச் சென்றதையும் பார்த்த போது மனசை என்னவோ செய்தது போல இருந்தது.
”அவள் வந்து என்னிடம் பேசியதைக் கேட்கும்போது, ஏதோ கலவரம் நடந்த மாதிரித் தெரிகிறது. என்னவென்று விசாரித்து வருகிறேன் அம்மா” என்று தெரிவித்தவனுக்கு ஏனோ தானே குற்றவாளிக் கூண்டில் நிற்பது போல் இருந்தது. தாயிடம் தமக்கை நடந்து கொள்ளும் விதம் இதுவல்ல என்று அவன் உள்மனம் கூறியது. தாயென்றே அவள் ஏற்க வில்லையே என்று மறு புறம் சமாதானம் கூறிக் கொண்டது.
“ இந்தப் பெண்ணுக்கு என்னிடம் ஏன் தான் இந்த வெறுப்போ.” என்று நினைத்துக் கொண்ட கல்யாணி அம்மா, பாபு சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே காட்டிக் கொள்ள வில்லை. ராஜுவுக்கும் விசுவுக்கும் பற்றிக் கொண்டு வந்தது. “ வீடு வரை வந்தவளுக்கு வீட்டுக்குள் மட்டும் வரப் பிடிக்க வில்லை என்றால் வராமலேயே இருந்திருக்கலாம்” என்றான் ராஜு.
“ உன்னையும் என்னையும் காண வரவில்லை அவர்கள். பாபு அண்ணாவைப் பார்க்க வந்தார்கள். பார்த்தார்கள்,பேசினார்கள் போய் விட்டார்கள். ஏதோ இழவுக்கு சொல்லிக் கொள்ள வந்த மாதிரி இருக்கு “ என்றவனை மேலே பேச விடாமல் “கண்டபடி உளறாதேடா விசு. தமாஷுக்கும் அரட்டைக்கும் கூட அந்த மாதிரிப் பேசக் கூடாது” என்று கல்யாணி அம்மா தடுத்து விட்டாள்.
கமலத்தை தொடர்ந்து சென்ற பாபு, அவளோடு அவள் வீட்டை அடையும்போது குழந்தைகள் எல்லாம் பயந்து போய் வெளியில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நடந்த சம்பவங்களை ஓரளவு கேட்டுத் தெரிந்து கொண்டான் பாபு.
” நேற்றைக்கு இவர் வீட்டுக்கு வரும்போதே ராத்திரி பத்து மணிக்கு மேலாயிடுத்து. நீ அன்றைக்கு கொண்டு வந்த மாதிரி நேற்றைக்கு யாரோ கொண்டு வந்து சேர்த்தார்கள். வந்ததும் வாந்தி எடுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து ராத்திரி பூரா மூன்று நாலு தடவை வாந்திதான். ரொம்ப துவண்டு போனவருக்கு காலையிலேருந்து நல்ல சுரம். என்னென்னவோ சொல்றார். எனக்கு ரொம்ப பயமாயிடுத்து. கண்ணனைக் கூப்பிடலாம்னு போனா அவன் அங்கிருக்கலை.பாட்டியும்தான் இல்லையே. டாக்டர் கிட்டே காட்டலாம்னா கையிலெ கொஞ்சங்கூடப் பணமில்லை. கடைசிலே உங்கிட்ட வந்தேன். பாபு இந்த தடவை எப்படியாவது உதவி பண்ணு. அப்புறம் உதவின்னு நீ இருக்கிற திக்குலே கூடத் தலை வைத்துப்படுக்க மாட்டேன்.”
கமலம் பேசிய விதமே பாபுவுக்குப் பிடிக்க வில்லை. வேறு கதி இல்லையே என்று அவனிடம் வந்த்ததாகக் கூறியவள் நடந்து கொண்ட முறையிலும் அதேதான் தெரிந்தது. எந்த வார்த்தைகளை எப்படி உபயோகிப்பது என்று கூடத் தெரியாமல் இருக்கிற திக்குலே கூட தலை வைக்க மாட்டேன் என்கிறாள்
அறியாதவர்கள் அறியாமல் செய்யும் பிழைகள் பொறுக்கப் படட்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டவன், சிவராமனை நன்றாகக் கூர்ந்து கவனித்தான். மூடிய கண்களிலும் குழி விழுந்து கரு வளையம் மூடிக் கொண்டிருந்தது. உயர்ந்த உருவம் குறுகிய் மார்பு ஒட்டிய கன்னம் எல்லாவற்றையும் பார்த்தவனுக்கு சிவ ராமனின் உதடுகளும் நாசியும் புரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் பாவனையில் இருப்பது போல் தோன்றியது. அதிலும் ஒரு குரூரத் தன்மை, மூச்சுவிட்டு இழுக்கும்போது மூக்குடன் சேர்ந்தியங்கும் உதடுகளில் இருப்பது தெரிந்தது.
“ பாபு உன்னை என் கூட வரச் சொன்னேன். நீயும் வந்தாய். விவரங்களும் புரியும்படி சொல்லி யாயிடுத்து.நீ என்னடான்னா, பேசாமலேயே இருக்கே. என்ன பண்றதுன்னு சீக்கிரம் சொல்லு. எனக்கென்னவோ பகீர் பகீர்ன்னு அடிச்சுக்கிது. “
“அளவுக்கு மீறி குடிச்சதுனால ஏற்படற ஆஃப்டர் எஃபெக்ட்ஸ். அன்னக்கே நான் சொன்னேனே. அத்திம்பேர் இந்தப் பழக்கத்த நிறுத்தப் பண்றது உன் பொறுப்புன்னு. நீ கேட்கலை. என்ன உதவி என்னாலே இப்போ செய்ய முடியும்னு நீ நெனைக்கிறே. அவருக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லை. மயக்கம் தெளிஞ்சா எல்லாம் சரியாயிடும். உடம்பு சூடு குடிச்சதனாலே ஏற்பட்டது. சுரம் அல்ல. நீயும் வீணா மனசைக் குழப்பிக்காதே.நான் வரேன்.” என்று வெளியேறியவனை கமலம் தடுத்து நிறுத்திக் கேட்டாள்..
. கோபமும் ஆத்திரமும் மேலிடப் பேச ஆரம்பித்தவளுக்கு, அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. பாபுவுக்கும் தான் செய்வது சரியல்ல என்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால் மறுகணமே அவன் மனம் மாறிவிட்டது.ஏமாற்றுகாரர்களின் வலையில் தான் வந்து விழ இருந்த நிலை பூரணமாகப் புரிய ஆரம்பித்தது. அவன் கண்கள் வீட்டு சன்னலிலிருந்து இங்கு நடப்பதை ஆராய்ந்து கொண்டு இருந்த சிவராமனைக் கண்டன. ஒரு நாடகமே தன் முன்னால் நடிக்கப் ப்டுகிறது என்று ஒரு நொடிப் பொழுதில் யூகித்துக் கொண்டான்.
“ அக்கா ...நான் உனக்கு உதவினால் அது உபத்திரவமாகத்தான் முடியும். குடியைக் கெடுக்கும் குடிக்குப் பணாம் கொடுத்து உதவ என்னிடம் காசில்லை. பணத்துக்காக இந்த நாடகம் நடித்திருக்கவும் தேவை இல்லை. “என்று கூறிக் கொண்டே சென்றுவிட்டான்.
சென்று கொண்டிருந்தவன் காதில் “அவன் கிடக்கிறான் மடப் பயல் “ என்ற சிவராமனின் குரல் தெளிவாக விழுந்தது.
------------------------------------------------------------------------------------------
( தொடரும் )