நினைவில் நீ ( நாவல் தொடராக )
---------------------------------------------
( அடுத்த இதழுடன் முடியும் )
------ 18 --------
புது முறையில் துவக்கப்பட்ட பள்ளியில் சேர வந்தவர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்ள இடமிருக்கவில்லை. தொடங்கப் பட்ட சில நாட்களிலேயே விஸ்தரிக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்தது. சாதாரண முறையில் அமைக்கப் படாததால், அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.இருந்தாலும் படித்துத் தேறுவதை வாழ்க்கை வியாபாரத்துக்கான முதலீடு என்று எண்ணாதவர்கள்,,சாதாரணன பள்ளிக்கு தம் குழந்தைகளைக் காலையில் அனுப்பினாலும் மாலையில் இந்தப் பள்ளிக்கும் அவர்களையே அனுப்பினார்கள். பிள்ளைகளுக்கும் சிறை வாசம் என்றில்லாத முறையில் நல்ல கருத்துக்கள் விளையாட்டாகவே போதிக்கப் பட்டன. அவர்களும் விரும்பிக் கற்றனர்.
கூட்டுறவு முறையில் தொடங்கப் பட்ட பண்டக சாலைகளும் எதிர் பார்த்ததைவிட பலன் அளிப்பதாக இருந்ததால் ,எதிர் பார்க்காத முறையில் வளர்ச்சி அடைந்தது.
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மக்கள் மன்றத்தில் நடத்தப் பட்ட , நடத்தப்பட வேண்டிய காரியங்கள் செயல் முறைகள் எல்லாம் நன்றாக விவாதிக்கப்பட்டு ,திட்டமிடப் பட்டு நடத்தப் பட்டன. வேலையில்லாத இளைஞர்களுக்கு இதுவே ஒரு வேலையாய்ப் போய் பலனளிப்பதாயும் இருந்தது.
பாபுவுக்கு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டே இந்தப் பணிகளையும் கவனிப்பது இயலாமல் போயிற்று .தொழிற்சாலையில் ராஜினாமா கொடுத்து வீடு வந்தவன் செய்தியைச் சொன்னதும் கல்யாணி அம்மா விக்கித்துப் போனாள்.
”இருக்கிற வேலையை இப்படி விட்டுட்டு வந்தால் குடும்பம் எப்படிடா நடக்கும் பாபு.?வேலையோட இருக்கிற வரைக்கும் தானே உனக்கும் மதிப்பு. ராஜுவுக்கும் விசுவுக்கும் இன்னும் படிப்பு முடியலை. நீ செஞ்சது கொஞ்சங்கூட நல்லா இல்லை.”என்று பொரிந்து தள்ளினாள்.
பாபுவுக்கும் கல்யாணி அம்மாவின் எண்ணங்கள் புரிந்தது. இருந்தும் சாதாரணமானவர்கள் நடத்தும் வாழ்க்கையைத் தன்னால் தொடர்ந்து நடத்த முடியவில்லை என்று அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?அன்றாடங் காய்ச்ச வழியில்லாம போய்விடுமே என்னும் பயம் அவர்களுக்கு. ஒருவரை நம்பியா ஒருவர் வாழ்கிறார்கள் இந்த உலகில்.? தான் வேலைக்குப் போகாவிட்டால் குடும்பம் நடக்காதா.? இந்த நிலையில் உள்ளவர்கள் மேலும் உயர வேண்டும் என்றுதானே எண்ணுகிறார்கள். அல்லாமல் இதே நிலையில் எல்லோரும் வளர்ச்சி அடைந்திருக்கிறார்களா என்று மட்டும் ஏன் சிந்திப்பதில்லை.?
இவற்றையெல்லாம் அவர்களுக்கு எடுத்துரைப்பது இயலாத காரியம். தான் செய்ய வேண்டிய காரியங்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. ஆனால் இவர்களோ. பாரதி சொன்னது போல
தேடிச் சோறு நிதம் தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பம் மிகவுழன்று-பிறர்
வாடப் பல செயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி-கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் –பல
வேடிக்கை மனிதரைப் போல “ வாழ்ந்து வீழ வேண்டும் என்று நினைக்கிறார்களே, இது முறையா ,முடியுமா என்றெல்லாம் நினைத்துக் குழப்பத்தைக் குறைத்துக் கொள்ள முயன்றான்.
முடிவெடுத்து செயலாற்றத் தொடங்கிய பிறகு அந்த முடிவைக் குறித்து சிந்தனை செய்தால் அது இன்னும் குழப்பத்தை அதிகரிக்கத்தான் செய்யும். பாபுவால் சிந்தனை செய்யாமல் இருக்க முடியவில்லை. தாயாரை சமாதானப் படுத்தித்தான் தீரவேண்டும் அவர்கள் கஷ்டப்படாமல் இருக்கச் செய்வது தன் பொறுப்பு என்பதை அவர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.
“ அம்மா, உங்களுக்கு என்னைத் தெரிந்ததுபோல வேறு யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் உங்களுக்கே என்னை சரியாகப் புரியவில்லை என்றால் எல்லோருக்குமே நான் ஒரு புதிராய் இருப்பது ஆச்சரியமில்லை. நான் ஒன்று கேட்கிறேன். நீங்களே சொல்லுங்கள் அப்பா இற்ந்த பிறகு அவர் இருந்த காலத்தில் நீங்கள் இருந்த நிலையைவிட குறைந்த நிலையில் உங்களை விட்டிருக்கிறேனா.? இனிமேல் அப்படி ஆகிவிடுவோமோ என்ற சந்தேகம் உங்களுக்கு இருப்பதால்தான் வீணாக வருத்தப் படுகிறீர்கள். இதுவரைக்கும் நான் யாரிடமும் சொல்லாததை சொல்லுகிறேன். நான் அதிக நாள் இருப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் இருக்கும் காலத்துக்குள் என்னால் இயன்றதை செய்யத் துடிக்கிறேன். அதற்கு தொழிற்சாலை வேலை தடங்கலாயிருந்ததால் ராஜினாமா செய்து விட்டேன். இதனால் நம் குடும்பம் கஷ்டப் படாத வகையில் நடத்துவது என் பொறுப்பு.” என்று என்னவெல்லாமோ கூறி, தாயாரை சமாதானப் படுத்த வேண்டும் என்று எண்ணினவனுக்கு எண்ணியதை சொல்ல முடியவில்லை. சொல்லப் போனால் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதை யாகலாம்.
”எல்லாவற்றையும் யோசித்துத்தான் அம்மா இந்த முடிவுக்கு வந்தேன்.தயவு செய்து என்னை கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்க விடுங்கள்” என்று சிடுசிடுக்கத்தான் முடிந்தது. கல்யாணி அம்மாவுக்கு இன்னும் ஒரு சோதனைக் காலத்தைக் கடக்க வேண்டும் என்ற விரக்தி மனப் பான்மையே மேலோங்கி நின்றது
எண்ணற்ற கவலைகள் எண்ணத்தில் உதயமாகும் போதெல்லாம் உள்ளத்தின் ஒரு கோடியில் முணுக் முணுக் கென்று ஒரு சிறு ஒளி தோன்றி மறைவதுபோல பாபுவுக்குத் தோன்றும். அந்த ஒளியை நன்றாக ஆராயும்போதெல்லாம் நிழல் போல் ஒரு உருவம் அதில் மங்கலாகத் தெரிவது மேலும் தெரியும். இதே ஆராய்ச்சியில் ஈடுபட்ட பாபுவுக்கு கலங்கரை விளக்குத்தான் நினைவுக்கு வரும். கரையின் அண்மையைச் சுட்டிக் காட்டும் கலங்கரை விளக்கம் தானோ உள்ளத்தில் உணரும் அந்த சிறிய ஒளி.?
ஒளியைப் பெரிதாகவும் அதில் தெரியும் உருவத்தை சியாமளா வாகவும் கற்பனை பண்ணிப் பார்ப்பதில் மகிழ்ச்சியடையும் பாபு, அதுவே உண்மையாகவும் இருக்கக் கூடாதா என்றும் ஏங்குவான். ஆனால் மறுகணமே வாழ்க்கைக் கரையின் ஒளியில் சியாமளாவைக் காணவே அவன் உள்ளம் நடுங்கியது.
இருந்தாலும் சியாமளாவைக் காண வேண்டும் என்ற உத்வேகம் அப்போது அதிகமாகும். அன்றும் அதே நிலையில் இருந்த பாபு மனதில் எழுந்த அந்த உருவத்துக்கு ஏற்கெனவே வரிவடிவம் கொடுத்திருந்தாலும் மறுபடியும் அதை நினைவுபடுத்தி எழுதத் துவங்கினான்.
நிலவைப் பழிக்கும் முகம்
நினைவைப் பதிக்கும் கண்கள்
நிலமடந்தை நாணும் எழில்-முத்துச்
சரம் விரித்த முல்லைச் சிரிப்பு-சிந்தக்
கமலமலர் செவ்விதழ் விரிப்பு-கொண்டு
படர்கொடிவெல்லும் துடியிடை- என்
இடர் சேர்க்க இடையிடையாட –மென்னடை
நடந்தென் முன் நின்றாள்-இன்பக்
கனவினை நனவாக்க எண்ணி-வந்த
கற்பனைக் கண் கண்ட கன்னி.
எழுதி முடித்து ஒருமுறைப் படித்துப் பார்த்துக் கொண்டு திருப்தியடைந்து எழுந்தவனை எழவொட்டாமல் தோள்களை அமுக்கியது இரு கரங்கள்.
” யாரப்பா அந்த கற்பனைக் கண் கண்ட கன்னி.?நான் தெரிந்து கொள்ளலாமா.?” கானின் குரல் கேட்டதும் பாபுவுக்கு புதுத் தெம்பு வந்தது போல் இருந்தது.
“ கான், அப்பாடா... யாரோன்னு நெனச்சிட்டேன். என்ன சமாசாரம் ?ஏதாவது முக்கிய விஷயமில்லாமல் வீட்டுக்கு நீ வர மாட்டியே.”
“என் நண்பன் என்னடா ஒரு மாதிரியாக இருக்கிறானே ,என்ன காரணம் என்றெல்லாம் நான் குழம்பிக் கொண்டிருந்தேன்.எனக்கு மூக்கில் வியர்த்து வந்து பார்த்தால் அல்லவா தெரிகிறது உனக்கு காதல் நோய் பிடித்திருக்கிற விஷயம். இன்னும் யாரந்த பாக்கியவதி என்று சொல்ல வில்லையே.”
“அதெல்லாம் காலம் வரும்போது தெரியும் இப்போ வந்த விஷயத்தை உடை.” பாபுவின் பிடிவாதம் கானுக்குத் தெரிந்ததுதான்.வந்த காரணத்தை விளக்கினான்.
” எந்த நேரத்தில் தமிழ் மன்றம் மக்கள் மன்றமாக மாறியதோ அந்த நேரத்தில் நாம் நரி முகத்தில் விழித்திருக்க வேண்டும். பல லட்ச ரூபாய்கள் மூலதனமாகக் கொண்ட ஒரு ஆலையின் அதிபதி நம்மைத் தேடி வந்திருக்கிறார். மன்றத்தின் தோற்றம் வளர்ச்சி இவற்றைப் பற்றிக் கேள்விகள் கேட்டு என்னைத் திணற அடித்து விட்டார். அவர் கேட்ட கேள்விகளின் தோரணையை ஆராய்ந்து பார்த்தால் அவரால் மன்றத்துக்கு மிகவும் சாதகமான காரியங்கள் பல ஆகலாம். என்றே தோன்றுகிறது. வரவேற்பறையில் விட்டு வந்திருக்கிறேன்.சகோதரி சியாமளாவால் அவரை நன்றாக சமாளிக்க முடியும். கூட நீயும் இருந்தால்தான் முறையாக இருக்கும். மன்றத்துத் தலைவரை ஆலை அதிபதி சந்திக்கவும் விரும்புகிறார். உன்னைக் கையோடு கூட்டிக் கொண்டு போவதுதான் நான் வந்த நோக்கம்.”
” கான், நானும் உன்னையும் சியாமளாவையும் பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். எதற்கென்று அவரை அனுப்பியவுடன் சொல்கிறேன். “
பாபுவும் கானும் மன்றத்துக்குள் நுழைந்தனர்.வந்திருந்த மனிதரைக் கண்டதும் பாபுவுக்கு அவரை எங்கோ பார்த்தது போலிருந்தது.வந்திருந்தவரும் பாபுவை உற்றுப் பார்த்துக் கொண்டே” உங்களை எங்கோ...... “என்று இழுக்கவும், பாபுவும் “எனக்கும் உங்களை எங்கோ பார்த்ததுபோல் நினைவிருக்கிறது.” என்று சற்று யோசித்தவன், “உங்கள் பெயர் சுப்பிரமணியம், கோயமுத்தூரில் ஆலை அதிபர் அல்லவா நீங்கள் ?”
என்று கேட்டான். “ ஆமாம் , நீங்கள் யாரென்று......”
“பனிரெண்டு வருஷங்களுக்கு முன் உங்களிடம் வேலை தேடிக் கொண்டு வந்த ஒரு சிறுவனை கையில் பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தீர்களே.அந்தச் சிறுவன் பாபு நான்தான்.”
”ஆமாம் ,ஆமாம், இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. அப்போதே உன்மேல் எனக்கு ஒரு அலாதியான பாசம் தோன்றியது. உண்மையிலேயே வேலை ஏதும் காலி இருக்கவில்லை. மேலும் அப்போது நீ ஒரு குழந்தை போல் இருந்தாய்.ஹூம்.! அன்றைக்கு நான் செய்ததும் சரிதான் இல்லையென்றால் இந்த பெங்களூரில் இந்த நிலையில் உன்னைக் காண இவ்வூர் மக்கள் கொடுத்து வைத்திருக்க மாட்டார்கள்.பாபு உன் மன்றம் என் மனசை தொட்டு விட்டது. “
“உன் மன்றம் என்று தவறாகச் சொல்கிறீர்கள் சார்.உங்கள் மன்றம் என்றால்தான் சரியாயிருக்கும். “
“சரியாகச் சொன்னாய் பாபு. ஏராளமான சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற நான் உன் மன்றத்தை, சாரி, உங்கள் மன்றத்தைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டேன். வாரிசில்லாத சொத்துக்கள் உங்கள் மன்றத்துக்கு உபயோகம் ஆகும் என்றால் என்னையும் ஒரு அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்’”
பாபுவுக்கும் கானுக்கும் சியாமளாவுக்கும் தங்கள் காதுகளையே நம்ப முடியவில்லை. கான் தான் முதலில் சமாளித்துக் கேட்டான்.
“ நீங்கள் நன்றாக யோசித்து வந்த முடிவுதானே இது.? இளைஞர்கள் நாங்கள் போகும் வழி புரட்சிப் பாதை. நீங்கள் விரும்பாததும் எதிர்பார்க்காததும் இங்கே நடக்கலாம்”
“ நான் இங்கு வந்து நேரில் கண்டதும் கேட்டதும்தான் என்னுடைய இந்த முடிவுக்குக் காரணம். அதுவும் பாபுவைப் பார்த்ததும் தீர்மானம் ஆனதாகப் போய்விட்டது. குழந்தை சியாமளா எனக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னாள். கோயமுத்தூரிலிருக்கும் ஆலையை விற்றுவிட்டுப் பணத்துடன் வருகிறேன்” என்றவரை பாபு இடைமறித்து “ அதை விற்க வேண்டிய அவசியமே இல்லை சார். சீரான முறையில் நடத்தப் படும் ஆலையில் வேலை செய்யும் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் சீரான முறையில் வாழவும் வகை செய்யுங்கள்.. இந்த மன்றம் பெங்களுரில் உள்ளது போல வேறு இடங்களிலும் செயல்பட வழி செய்யலாமே.” என்றதும் சுப்பிரமணியமும் ஒப்புக் கொண்டார். மேலும் அவரே மன்றத்துக்கான எந்த உதவியையும் செய்வதாக வாக்களிக்கவும் செய்தார்.
பாபுவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் கண்களில் நீர் துளித்தது. சுப்பிரமணியத்தின் உருவில் தன் தந்தையை மானசீகமாக வணங்கினான்..தன்னைப் போலவே கானும் ,சியாமளாவும் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவதைக் கண்டான். சுப்பிரமணியத்துக்கும் தன் மனசில் இருந்து ஒரு பெரிய பளு இறங்கின மாதிரி இருந்தது. பள்ளிக்கூடம் பண்டகசாலை,படிப்பகம் எல்லாவற்றையும் அவருக்குக் காண்பித்தனர். ஒவ்வொன்றைப் பற்றியும் அவை வளர்ந்த விதம் பற்றியும் விரிவாக விவரித்தனர். சிறிது நேரத்தில் தினமும் வருவதாகக் கூறித் தன் விலாசத்தையும் கொடுத்துவிட்டு சென்றார் சுப்பிரமணியம்.
“கான்,நல்ல காரியங்களுக்கு ஆண்டவனின் அருள் என்றைக்கும் உண்டு என்று நன்றாகத் தெரிகிறதல்லவா.? இளைஞர்கள் நம்மோடு வயது முதிர்ந்த அனுபவசாலி ஒருவர் சேருகிறார்.. அவர் அன்றைக்கு என்னிடம் காட்டிய பரிவை என்னால் மறக்க முடியாது. ஆயிரக் கணக்கான முகங்களை கண்டாலும் ஒரு சிலருடைய உருவம் சில நிமிஷ நேரமே சந்திப்பு என்றாலும் அழியாது பதிந்து விடுகிறது. ஏனென்றே விளங்கவில்லை. ” அது அந்த மனிதரின் தனித்தன்மையை விசேஷ முறையில் வெளிப் படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது” என்றாள் சியாமளா.
அதுவரை சியாமளா அருகில் இருந்தும் அவளைக் காணாது காண்பது போல் திடீரெனப் பாபுவுக்குப் பட்டது. மனதில் பட்டதைக் கூறவும் செய்தான்..
“ காண்பது, பார்ப்பது என்ற இரண்டு வார்த்தைகளும் ஒரே பொருள் கொண்டிருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் மாறுபட்ட பொருளையே குறிக்கும். காண்பது கண்ணின் செயல். பார்ப்பது கண்ணின் செயலோடு உள்ளமும் செயல்படும் தன்மையைக் காட்டுவது. ஆங்கிலத்தில் to see, to look என்பதுபோல. இதுவரை உன்னைக் கண்டு கொண்டிருந்தேன். Now I am looking at you. என்று விளக்கம் கூறி பாபு சியாமளாவைப் பார்த்த போது, பாபுவின் கற்பனைக் கண் கண்ட கன்னி யார் என்று கானுக்குப் புரிந்து விட்டது. புரிந்ததும் மெல்ல நழுவத் தொடங்கியவனை கவனித்த பாபு, “ கான் எங்கே போகிறாய் ?”என்று கேட்டான். “ எனக்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய வேலை ஒன்றிருக்கிறது. முடித்துவிட்டு உன்னைத் தனியாகக் கவனிக்கிறேன் “ என்று, தனியாக என்ற வார்த்தையை அழுத்தமாக உச்சரித்துவிட்டு கான் சென்றான்.
” சியாமளா.....”
” .....................”
”சியாமளா “
“ ஹூம்......”
” உன்னைப் பார்த்துப் பேச வேண்டும் என்று முயன்ற போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. இப்போதிருந்த தடங்கலும் தானாக விலகி விட்டது.” பேச ஆரம்பித்தவனுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. பேசுவதற்கு விஷயங்கள் இல்லாமல் அல்ல. சொல்ல வேண்டியவற்றை முதலிலேயே நன்றாக சிந்திக்க வேண்டியது அவசியம் என்று பாபுவுக்கு அடிக்கடி தோன்ற ஆரம்பித்ததால் தெரிவிக்க விரும்பிய ஆசை அன்பு மொழிகள் தெரிவிக்கப் படாமலேயே தொக்கி நின்றன. சியாமளாவுக்கு எதுவும் சரியாகப் புரியா விட்டாலும் ,பாபு எதையோ எண்ணி மனதில் புழுங்குகிறான் என்பது மட்டும் விளங்கிற்று. அவன் தன்னிடம் எதையோ சொல்லத் துடிக்கிறான்,ஆனால் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கவும் செய்கிறான் என்று உணர்ந்தபோது, பாபுவிடம் அவளுக்குப் பரிவு மேலோங்கியது.
”பாபு, நீங்கள் என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள்.உங்கள் போக்கு ,பேச்சு எல்லாமே புதிராக இருக்கிறது.என்னைக் கண்டு பேச முயலும் போதெல்லாம் எதையோ பறி கொடுத்தது போல் தோன்றுகிறீர்கள். என்னால் உங்கள் சஞ்சலத்தைப் போக்க முடியுமென்றால் நான் எதற்கும் தயார். சொல்லுங்கள் பாபு.”
“இதுவரை நான் எதையும் பறி கொடுக்கவில்லை சியாமளா. ஆனால் நாளாக ஆக, என் உயிரைவிட மேலாக நான் விரும்பும் உன்னை,யே பறி கொடுத்து விடுவேனோ என்ற மன உளைச்சல்தான் என்னைப் பைத்தியமாய் அடிக்கிறது.”
“உங்களுக்கு வாழ்க்கையின் உறு துணையாக நான் இருக்கப் பெரும் பேறு செய்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கொடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. அதை நீங்கள் நிறைவேற்ற சாதி, சமுதாயம், அந்தஸ்து ஆகிய எல்லா எதிர்ப்புகளையும் தாங்க வேண்டி இருக்குமே என்றுதான் நினைத்து நான் என்னையே கட்டுப் படுத்திக் கொள்கிறேன்.”
” சியாமளா, துன்பங்களையும் எதிர்ப்புகளையும் கண்டு அஞ்சுகிறவன் நானல்ல. அவற்றை எதிர்த்துப் போராடுகின்ற முயற்சிக்குப் பெய்ர்தானே வாழ்க்கை. என் சஞ்சலமும் சங்கடமும் அதல்ல.நான் எண்ணியவற்றை செயலாற்ற வாய்ப்பே தராமல் ஆண்டவன் என்னை ஏமாற்றிவிடுவான் என்று என் உள்ளத்தின் ஒரு பகுதி அடிக்கடி எச்சரிக்கிறது..சியாமளா ஒன்று மட்டும் நிச்சயம்..என் வாழ்க்கையில் மணவினை என்றுஒன்று இருந்தால், அந்த சடங்கில் என்னுடைய மறு பாதியாக நீதான் வீற்றிருப்பாய். அது நிறைவேற மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆண்டவனின் கிருபைதான் வேண்டும். ஒருக்கால் அது அப்படியில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் சித்தம் என்றால் நீ என்னை மறந்து விட வேண்டும். உனக்குப் பிடித்த ஒருவனோடு நீ இல்லறம் நடத்த வேண்டும். இதைச் சொல்லத்தான் நான் காத்திருந்தேன்..கற்பனை எண்ணங்களில் உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ள மாட்டாய் என்று எனக்கு உறுதி கொடு, சியாமளா.”
“ பாபு உங்களை நான் அடையத்தான் போகிறேன்.அதுதான் ஆண்டவனின் சித்தமும். நீங்கள்தான் ஏதேதோ கற்பனை எண்ணங்களில் உங்களையே ஏமாற்றிக் கொண்டு வருகிறீர்கள். இனி உங்களை ஒரு உல்லாச புருஷ்னாகச் செய்வது என் பொறுப்பு.” என்ற சியாமளா,கான் வருவதைக் கண்டதும் விடை பெற்றுக் கொண்டு சென்றாள்.
“ கங்கிராஜுலேஷன்ஸ் ,பாபு,! பிடித்தாலும் புளியங்கொம்பாய்த்தான் பிடித்திருக்கிறாய். என்னுடைய கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. வாழ்க உங்கள் காதல்.! வளர்க அதன் அடிப்படையில் எழும் உங்கள் இல்லறம்.”
கானுக்கு உண்மையிலேயே,பாபுவையும் சியாமளாவையும் இணைந்து காண்பதில் சந்தோஷம்தான். அதுவே உண்மையான நிலை என்று அறிந்ததும் அது பதின்மடங்காயிற்று.
கான். என் உயிர் நண்பன் நீ. உன்னிடம் மறைப்பதில் எனக்கேதும் லாபமில்லை.. ஆனால் ஒரு சமயம் அப்படி நடக்காமல் போனால், அனாவசியமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாய்ப் போகும். இந்த விஷயம் உன்னோடு இருக்கட்டும்.இன்னொன்று நாம் எண்ணுவதுபோல் நடப்பது ஆண்டவனுக்குப் பொறுக்க வில்லை என்றால்,சியாமளா அவளுக்குப் பிடித்த ஒருவனோடு வாழ்க்கை நடத்த வேண்டும். அவளை உன் சகோதரியாக பாவித்து அதை நீ செய்வது உன் கடமை.”
“ என்னய்யா உளர்றே நீ.! சியாமளாவுக்கும் உனக்கும் திருமணம் நடப்பது ஆண்டவனுக்குப் பொறுக்காதா.? ஆண்டவனே எதிர்த்தாலும் அது நடந்தே தீரும்.அபயம் அளிக்கிறேன் பக்தா.....கலங்காதே.!”
“ விளையாடும் நேரமல்ல கான். இது நான் உனக்குச் சொல்வது, நீ கேட்க வேண்டியது. அவ்வளவுதான்.”
வீட்டுக்கு வந்த பாபுவுக்குத் தன் மனப்பளு சற்றே குறைந்த மாதிரி இருந்தது. வேலையை ராஜினாமா செய்தது பற்றி அவன் யாரிடமும் எதுவும் சொல்ல வில்லை. கல்யாணி அம்மாவிடமும் சொல்லி இருக்க வேண்டாம் என்று தோன்றியது.
கண்ணனைக் காண வேண்டும் போலிருந்தது பாபுவுக்கு. உடற்சோர்வையும் பொருட்படுத்தாமல் போனான்.கண்ணன் வழக்கம்போல் பூஜையறையில் அமர்ந்திருந்தான். மாலதி பயபக்தியுடன் நின்றிருந்தாள். ஓசைப் படுத்தாமல் ஷூவைக் கழற்றி வெளியில் வைத்து உள்ளே நுழைந்த பாபுவை கண்ணன் சற்றும் எதிர்பார்க்கவில்லை..அப்போது பூஜையை முடிக்க இருந்தவன் வேண்டுமென்றே காலத்தைக் கடத்தினான்.பாபு எதையும் பொருட்படுத்தவில்லை. சற்று நேரம் தன் அண்ணனையும் அண்ணியையும் பார்த்துக் கொண்டிருந்தவன்,பிறகு எழுந்து போகப் புறப்பட்டான்.
“பூஜை முடியும் வரைக்கும் காத்திருக்க நேரமில்லை உனக்கு..இரு வரேன்.”ஆண்டவனை வேண்டிக் கொண்டிருந்தவன் பாரவை பாபுவின் பொறுமை எந்த அளவுக்குச் சோதிக்கப் படுகிறது என்று அளந்து கொண்டு இருந்ததால், அவன் புறப் பட்ட போது காத்திருக்கச் சொன்னான்.
“ நேரமில்லை அண்ணா. உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் போலிருந்தது .வந்தேன். பார்த்தேன். போகிறேன்.வேறு விசேஷமாக எதுவுமில்லை. வருகிறேன்”.
பாபுவின் வரவைக் கண்ணனும் மாலதியும் எதிர் பார்த்திருக்க வில்லை என்றால்,வந்தவன் இப்படி நடந்து கொள்வான் என்று கனவிலும் கருத வில்லை. பாபுவை அவமானப்படுத்தக் கண்ணன் கொண்ட முயற்சிகளிலெல்லாம் அவனுக்குத் தோல்வியே கிடைத்தது. மேலும் சில சமயங்களில் அவனே அவமானப் படவும் வேண்டி இருந்தது.
வருகிறேன் என்று சொல்லித் திரும்பிய பாபுவுக்கு எப்போது என்று மட்டும் நிச்சயமாக சொல்லி இருக்க முடியாது. வருவோமா, வரமுடியுமா என்ற கேள்வியே அவனைத் திணற அடித்தது.அவனுக்கே அவனது எண்ணங்களின் போக்குக்குப் பொருள் விளங்க முடியவில்லை. அவன் நடந்து கொண்டு வந்த விதமும் செய்து வந்த செயல்களும் ,அவனுள்ளிருந்து அவனுக்கே புரியாமல் அவனை ஆட்டி வைக்கும் ஒரு சக்தியின் கட்டுப் பாட்டுக்கு அடங்கியதாக இருந்தது.
வீடு வந்து சேர்ந்தவன் கல்யாணி அம்மா சற்றும் எதிர்பார்க்காத முறையில் இரவு சாப்பிட்டான்.சாதாரணமாக சாப்பிட உட்காருபவன் சாப்பிட்டு எழுவது கூடத் தெரியாது. ஆனால் அன்று தம்பிகளுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டவன் அவர்கள் எப்படி எப்படி எல்லாம் விளங்க வேண்டு மென்று அறிவுறுத்தினான்..குறிப்பாக ராஜுவும் விசுவும் நடந்து கொள்ள வேண்டிய வழி முறைகளை எல்லாம் விளக்கினான்.
கல்யாணி அம்மாவும் தம்பிகளும் பாபு சந்தோஷமாக இருக்கிறான் என்பதை அறிந்த போதே மகிழ்ச்சியுற்றனர். எல்லாமே இருந்தும் ஒன்றுமே இல்லாதவன் போல் பாபு வாழ்கிறான் என்று மற்றவர்கள் தவறாக நினைத்தாலும் இருப்பதையும் சரியாக அனுபவிக்காமல் மனம் வாடுகிறான் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களுக்கு பாபுவின் மனமாற்றம் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது.
பாபுவுக்கு பொது வாழ்வில் கிடைத்தவை பெரும்பாலும் வெற்றிதான் என்றாலும் அவன் குடும்பத்தைப் பொறுத்தவரை பெரும் தோல்விதானென்று அவன் கருதினான். நான்கு சுவர்களுக்கிடையே நடத்தும் ஆட்சியில் சுவருக்கொரு கட்சியாக குடும்பத்தவர் பிரிந்திருந்ததைத் தவிர்க்க முடியாத அவனது கொள்கைகளிலேயே சில சமயம் அவனுக்கு சந்தேகம் ஏற்படும்..தவிர்க்க முடியாதவைகள் அனுபவித்தே தீரப் படவேண்டும் என்ற விரக்தி மனப்பான்மையில்தான் அவனால் வாழ்க்கை நடத்த முடிந்தது..
கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்ச்சிகளில் எல்லாம் மனம் செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு, ஒரு அற்ப ஆசை ஏற்பட்டது.
“அம்மா,இப்போதிருக்கும் இந்த நிலை காட்சி மாறி,நான் ஒரு குழந்தையாகத் தவழ வேண்டும்போல் இருக்கிறது.அப்படி நடக்குமானால் துன்பங்களே நிறைந்த இந்த வாழ்க்கை இருப்பதே அறியாத, நல்லது பொல்லாதது என்ற உணர்வே இல்லாத,பயம் கோபம் என்ற உணர்ச்சிகளே இல்லாத ,அன்பே தெய்வம் எனத் துலங்கும் எண்ணம் ஒன்றே உடையதான,கள்ளங்கபடம் இல்லாத பக்குவமான மனம் கொண்டவனாக மாறலாம் அல்லவா..அந்த நடக்க முடியாத காட்சியை மானசீகமாகவேனும் உணர வேண்டும் போல் இருக்கிறது..நான் ஒரு குழந்தையாம். உங்கள் மடியில் படுத்துக் கொள்கிறேனாம்” என்று கூறிக் கொண்டே, கல்யாணி அம்மாவின்மடியில் தலை வைத்துப் படுத்தான். கண்களை சற்றே மூ.டிக் கொண்டான்.பாபுவுக்கு ஏற்பட்ட இந்த ஆசையில் மனம் நெகிழ்ந்த கல்யாணி அம்மாவும் அவன் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தாள்.
கண்களை மூடியபடி படுத்திருந்தவன் புற உலகக் காட்சிகளைக் காணவில்லை. ஒளிமயமான உல்லாசபுரியின் அரியணையில், லட்சோப லட்சம் மக்கள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டான்.ஒரே அரியணை என்றாலும் எல்லோரும் இடம் பெறக் கூடியதான புதுமையுடையதாக இருந்தது.அங்கு கண்டவர்கள் எல்லோரும் குழந்தைகள்.அன்பின் அரவணைப்பில் கட்டுப் பட்டவர்கள். மெல்லத் தவ்ழ்ந்து சேருகிறது இன்னொரு குழந்தை. அது பாபுவின் சாயலையே கொண்டிருக்கிறது.
இன்பமான கற்பனையில் கிடந்தவன் உதடுகள் சற்றே விரிகின்றன. கல்யாணி அம்மா, ராஜு, விசு, சந்துரு ,ரவி, அனைவரும் பாபுவின் இந்தப் புதுமையான ஆசை நிறைவேறிக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்தவர்கள் அந்தப் புன்னகையையும் கண்டனர்.
” அண்ணாவுக்குக் குஷி. குழ்ந்தை சிரிக்கிறது “-ரவியின் குரல் கேட்டதும் பாபு கண்களைத் திறந்து கொண்டு,பார்க்கிறான். தன்னைச் சுற்றிலும் அனைவரும் இருப்பதைப் பார்த்ததும் ஒரு அலாதியான திருப்தி ஏற்படுகிறது.
”அம்மா, குழந்தை அழுகிறேனாம்.! நீ பால் புகட்டுவாயாம் ! அம்மா...ஆ ஆ ஊ ஊ”
“ என்ன பாபு விளையாட்டு இது. “
“ நீ பால் தரலைன்னா நான் அழுவேன்.அம்ம்ம்மாஆ ஆ”
விளையாட்டின் பூரண சுவையை அனுபவித்துக் கொண்டிருந்த ரவி, ஓடிப் போய் பாலாடையும் பாலும் கொண்டு வந்தான்..
கல்யாணி அம்மாவும் பாலைப் புகட்டினாள் பாபுவுக்கு. இரண்டு மிடறு விழுங்கியவன் போதும் என்று சைகை காட்டினான். சுற்றும் ஒரு முறை எல்லோரையும் பார்த்துக் கொண்டான்.சற்றே கண்களை திருப்தியுடன் மூடினான். மறுபடியும் அதே காட்சி.! புதிய குழந்தை....பாபு....மெல்லத் தவழ்ந்து குழந்தைகள் உலகிற்குச் செல்கிறான்.முகத்தில் மீண்டும் புன்னகை.!
இந்தப் புன்னகை என்றுமே அழியாத புன்னகை.! உலகின் குரோத, விரோத கட்டுப் பாடுகளிலிருந்து விடுதலை தேடித் தந்த புன்னகை. !
ஆடவேண்டிய விளையாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டுக் களைப்பே இல்லாமல் படுத்துக் கிடந்த பாபுவை கண்ட கல்யாணி அம்மாவுக்கு உலகமே இருண்டு விட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. ஆயிரமாயிரம் சம்மட்டிகள் கொண்டு ஆயிரமாயிரம் பேர் இடிப்பதைப் போன்ற ஒரு வேதனை. அலறி விடுகிறாள்.
“ பாபு... பாபு...... “
“ அண்ணா.... அண்ணா.... “
சுந்தரபுரி போல் இருந்த இடம் மயானபுரியாகி விட்டது.
---------------------------------------------------------------------------------------------------------------
( அடுத்த இதழில் முடியு.ம் )
.