-----------------------------
வேலை தேடும் படலம் என்றொரு பதிவு எழுதி இருந்தேன்.
அதில் நான் HAL-ல் பயிற்சிக்குத் தேர்வானது வரை எழுதினேன்.
பெங்களூரில் வேலைக்குச் சேர நான் வந்தபோது,நான் என்
சொந்தக் காலில் நிற்க வேண்டும் உறவுகள் யாரிடமும் உதவி
பெறலாகாது என்ற முடிவில் உறுதியாய் இருந்தேன்.
அப்பாவின் சங்கடம் அனுபவித்திருந்தால்தான் தெரியும். நேர் காணலுக்கே மெட்ராஸுக்கு அனுப்ப முடியாமல் அவர் தவித்த தவிப்புபர்மா ஷெல் சுப்பிரமணியம் அவர்களால் உதவப்பட்டதால் தீர்ந்தது. மறுபடியும் அவரிடம் கையெந்த அவருடைய தன்மானம் தடுத்தது. அவர் கணக்குப்படி, அடுத்த மாதம் என் ஸ்டைபெண்ட் பணம்வரும்வரை, சமாளிக்க ரூ.60-/ ஆவது வேண்டும். என் தங்கும் செலவு, போகவர செலவு, சாப்பாட்டுச் செலவு. என்றெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். என்ன செய்தார், ஏது செய்தார் என்று நினைவில்லை. ட்ரெயின் டிக்கட் போக என்னிடம் ரூ.15-/ கொடுத்து மகனே உன் சமத்து எப்படியாவது சமாளி.இன்னும் பத்து நாட்களில் இன்னும் கொஞ்சம் பணம் அனுப்புகிறேன்.என்று ஆறுதலும் கூறினார். எனக்குத்தான் எந்த பயமும் கிடையாதே. கவலைப் படாதீர்கள் சமாளித்துக் கொள்கிறேன் என்று சமாதானம் கூறினேன்.