Tuesday, September 4, 2012

ஆதிமுதல்..தொடரும் வாதம் பிரதிவாதம்


                             ஆதிமுதல் ..தொடரும் வாதம் பிரதிவாதம்
                              ------------------------------------------------------------


கேள்வி:- அண்மையில் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்ததே படித்தாயா.?
பதில்:-   பத்திரிகைகளில் தினமும் என்னவெல்லாமோ செய்திகள் வருகிறது. நீ எதைச் சொல்ல வருகிறாய்.?
கேள்வி:- உனக்கு எழுதுவதற்கு தீனி போன்ற செய்தி. அலுவலகங்களில் பதவி உயர்வுக்கு ஒதுக்கீடு வழங்குவது பற்றிய செய்தி.
பதில்:-  நீ சொல்வது சரிதான். இட ஒதுக்கீடு பற்றிய கருத்துக்களோடு, பதவி உயர்வு தருவதிலும் ஒதுக்கீடு தேவையா என்பது குறித்தும் ஒரு பதிவு அவசியம்தான்.
கேள்வி:- உன் பதிவுகள்,மற்றும் கருத்துக்கள் என்ன மாற்றம் கொண்டு வந்து விட முடியும்.?
பதில்:- நான் எழுதுவது மாற்றம் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் எழுதப் படுவது அல்ல. அது படிப்பவர் மனதில் சில எண்ண அலைகளை உருவாக்கலாம். பல இடங்களில் பேசப்படும்போது எங்காவது கருத்து மாற்றத்துக்காவது விதையாகச் செயல்படலாம் என்றுதான் எழுதுகிறேன். என் கருத்துக்களை ஆதரிப்பவர் இருக்கலாம், எதிர்ப்பு தெரிவிப்பவர் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்.
கேள்வி:- சில நாட்களுக்கு முன் சிந்தனைப் பரிணாமங்கள் என்று எழுதினாயே. அதிலிருந்து நீயாவது ஏதாவது கற்றுக் கொண்டாயா. ?
பதில்:-  நிச்சயமாக. படிப்பவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் படித்துக் கருத்து தெரிவித்தவர்கள் அது குறித்து சிந்தித்திருக்கிறார்கள் என்று புரிந்தது. யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே மனதில் தோன்றுவதைப் பகிர்ந்து கொள் என்னும் பாடம் படிக்கிறேன். இந்த வயதில் இதையெல்லாம் தாங்க முடியுமா என்ற கேள்வி முதல், சோஷலிச சிந்தனைகள் என் எழுத்தில் தெரிகிறது என்றும் என் கருத்துக்களுக்கு ஓரளவு வரவேற்பு இருப்பதையும் தெரிந்து கொண்டேன். மேலும் கல்வி பற்றி தமிழ்மண நட்சத்திர பதிவாளர் எழுதிய கருத்தும் என்னை இதை சொல்ல வைக்கிறது.
கேள்வி:- ஒதுக்கீடு பற்றிய செய்திக்குப் பதிலா இது.
?
பதில்:- ஒன்றை ஒட்டியே மற்றது இருப்பதால் இத்தனை பீடிகைகள் தேவைப் படுகிறது. இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போதே மக்களிடம் இருந்த ஏற்ற தாழ்வு குறித்த சிந்தனையின் வெளிப்பாடாகவே இந்த ஒதுக்கீடு விஷயம் கருதப் பட்டது. தாழ்த்தப் பட்ட மக்கள் பழங்குடியினர்  போன்றோரின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கக் கண்டு, வாழ்வெனும் ஓட்டப் பந்தயத்தில் அவர்களையும் ஓட விட முடியாதபடி தாழ்வான நிலையில் இருந்தனர். ஒட்டப் பந்தயத்தில் அவர்கள் பங்கெடுக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு சில சலுகைகள் காட்டப் பட வேண்டும். வாழ்வு எனும் ஒட்டப் பந்தயத்தில் ஒடுவதற்கும் கல்வி மிகவும் அவசியம் எனக் கருதியே சில ஆண்டுகள் அவர்களுக்கு இட ஒதுக்கீடு எனும் HANDICAP வழங்க தீர்மானிக்கப் பட்டு விட்டது. 25- ஆண்டுகள் என்பது என் நினைவு. ஆனால் எத்தனை ஆண்டுகள் சலுகைகள் ஒதுக்கப் பட்டாலும் அவை போய்ச் சேர வேண்டியவர்களுக்குப் போகாமல் இருக்க எப்பொழுதும் ஒரு கும்பல் இருக்கிறது. மேலும் இந்த சலுகை விவகாரம் வைத்தே அரசியல் நடத்துபவர்களுக்கு, இந்த தாழ்த்தப் பட்ட மக்கள் முன்னுக்கு வந்துவிடுவது லாபமாயிருக்காது.
கேள்வி:- குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். தாழ்த்தப் பட்டவர்கள் முன்னுக்கு வர வேண்டும் என்று அல்லவா அநேகமாக எல்லா அரசியல்வாதிகளும் கட்சிகளும் கூறி வருகின்றன. நீ சொல்வது விளங்க வில்லையே
பதில்:- எல்லோருக்கும் எல்லாம் விளங்கும் வகையில் அரசியல் நடத்தினால்அவர்களுக்கு லாபம் கிடைக்காது. மக்களை அறியாமை இருளில் வைத்திருந்தால் தான் அவர்கள் பிழைப்பு நடக்கும். எல்லோரும் சமம் என்ற எண்ணம் வரவேண்டும் என்றால் எதில் எதில் சமத்துவம் இல்லையோ அததில் அவற்றைக் கொண்டு வர முயற்சி வேண்டும். நீ தாழ்த்தப் பட்டவன் உன்னை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் என்னும் விஷக்கிருமியை அவர்கள் உணர்வுகளில் ஏற்றிவிடுவதில் அதிக முனைப்பைக் காட்டி வருகிறார்கள். என் சிறு வயதில் அந்தணர்களின் ஆதிக்கம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்டது. ஏன் ,என் சிந்தனை கூட அதை ஒட்டியே இருக்கிறது. ஆனால் அந்தணர்களின் இடம் இருப்பிடம் காணாமல் போகும் போது எல்லாம் சரியாகத்தானே வரவேண்டும். ஆனால் அப்படி இல்லையே. சலுகைக்களுக்காக. பலரும் தங்களைத் தாழ்த்தப் பட்டவராகவும் பின் தங்கியவர்களாகவும் காட்டிக் கொள்கின்றனர். அதை நிரூபிக்க ஏகப்பட்ட ஜாதிகளும் பிரிவுகளும் எங்கும் நீக்கமற தெரிகிறது. எழுபதுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஜாதி அமைப்புக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் போய்விட்டது. ஜாதி வித்தியாசங்களை பேணி வளர்ப்பது அந்தணர்கள் அல்ல. பொதுவாக அவர்களை ஜாதி ஹிந்துக்கள் என்றழைக்கிறார்கள். ஊரின் நடுவே மதில் கட்டியது அந்தணர்களா ? இல்லையே. சாதிக்கலவரம் அந்தணர்களால் ஏற்படுகிறதா.? காப்பி, டீ கடைகளில் தனிக் குவளைகள் அந்தணர்கள் ஏற்பாடா.?அவர்கள் இப்போது வெறும் பலி கடாக்களாகி விட்டனர்.
கேள்வி:- உணர்ச்சி வசப் பட்டு சொல்ல வந்த விஷயம் திசை மாறிப் போகிறதோ.?
பதில்:- இல்லை.சில விஷயங்களுக்குப் பின்னணி தெரியாமல் இருக்கக் கூடாதல்லவா. நான் சொல்ல வந்தது சாதிகளில் உயர்வு தாழ்வு என்பது நமது சமூகச் சீர்கேடு. அதைக் களைய வேண்டும் என்றால் மக்களது அறிவுக்கண் திறக்கப் பட வேண்டும். அதற்காகக் கொண்டு வரப் பட்ட  கல்வியில் இட ஒதுக்கீடு எதிர் பார்த்த பலனைத் தர வில்லை.
கேள்வி:- உயர்மட்டப் பதவிகளில் இருப்பவர்கள் சதவீதம் மக்கள் தொகையில் அவர்களது எண்ணிக்கைக்கு சம விகிதத்தில் இருக்க வேண்டாமா.?
பதில்:- உயர்மட்டப் பதவிகள் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரிக்கப் பட வேண்டும் என்னும் கருத்து தவறானது என்பது என் அபிப்பிராயம். தகுதியின்படி தேர்வு செய்யப் பட வேண்டும் என்பதே சரி
.
கேள்வி:- தகுதியின்படி தேர்ந்தெடுக்க முதலில் தகுதி உள்ளவர்களாக்க வேண்டாமா. ?
பதில் :- மிகச் சரி. தகுதி உள்ளவர்களாக்க வழி செய்யும் முறையில் ஒன்றே இட ஒதுக்கீடுகள். இதனை மண்டல் கமிஷன் மூலம் கொண்டு வர முயற்சி செய்யப் பட்ட போது ஏகப் பட்ட எதிர்ப்புகள் நிலவின. அவை எல்லாமே அந்தணர்களால் நடத்தப் பட்டது அல்ல. இதனால் தற்போது அனுபவித்துவரும் வாய்ப்புகள் குறைந்து விடுமோ என்னும் பயமே எதிர்ப்பினைத் தூண்டியது. காலங் காலமாக ஆண்டையாக இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததில் அதிசயம் இல்லை. 25 வருட இட ஒதுக்கீடு என்பது இப்போது கால வரையற்ற ஒதுக்கீடாக மாறி வருகிறது. தாங்கள் சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கிறோம் என்பது கூடத் தெரியாதவர்கள் அதிகம். அதற்கான காரணங்கள் தெரிந்தவர்கள் அதைவிடக் குறைவு. கல்வி அறிவு அதாவது எழுதப் படிக்கத் தெரிவது மட்டும் போதாது. சிந்திக்கவும் தெரிய வேண்டும்
கேள்வி:- நீ சொல்வதைப் பார்த்தால் மனிதர்கள் சிந்திப்பதே இல்லை என்பது போல் தெரிகிறது
பதில்:- ஆம். சிந்திப்பது இல்லை என்பதை விட சரியாகச் சிந்திப்பது இல்லை என்பதே சரி. இல்லையென்றால் சாதிகள் ஒழிய வேண்டும் என்று கூறி வருபவர்கள் ஒரு புதிய சாதி உருவாக அனுமதிப்பார்களா.?இப்போதைய சாதிகளில் புதிதாய் முளைத்திருக்கும் ஏழை பணக்கார சாதிகள் மிகவும் மோசமானவை. மனித எண்ணங்களில் அவர்கள் அறியாமலேயே துவேஷ எண்ணங்கள் ப்யிராவதற்குக் காரணமாயிருப்பவை.
கேள்வி.:- உன் எண்ணங்கள் நீ சிந்திக்கும் விதத்தில் அர்த்தம் செய்து கொள்ளப் படும் என்பது உன் தவறான எண்ணம்.புரியும்படி பேசு.
பதில்:- சரி. உதாரணத்துடன் விளக்குகிறேன். சாதாரணமாகப் பணிக்குச் செல்பவர் வயது என்ன.?18-லிருந்து 25-க்குள் இருக்கலாம்.என்று வைத்துக் கொள்வோம். இந்த வயதுப் பிரிவினர் அடிமட்டத் தொழிலிலிருந்து மேல் மட்டம் வரை பணியில் சேர்கிறார்கள். பலரும் வேலை கிடைக்காமலேயே அவதிப் படுகிறார்கள். இதற்குக் காரணம் பெரும்பாலும் அவர்கள் கற்ற கல்வியின் அளவே. பணம் இருப்பவன் மேல் படிப்பு படிக்கிறான் இல்லாதவன் ஏதேனும் பணிக்குச் செல்ல முயல்கிறான். ஆனால் இவர்கள் வயது இனம் மொழி என்ப்வற்றில் சமமானவரே. ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளில் பெரும் மேடு பள்ளம் இருக்கிறது. சாதி வித்தியாசம் மட்டுமல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளிலும் வித்தியாசம். சம வயதுடையோர் அடக்கி வைக்கப் பட்ட உணர்வுகளை வெளிப்படுத்த எந்நேரமும் எரிமலை மேல் இருப்பது போல் இருக்கின்றனர். இதை அரசியல்வாதிகளும் பிரிவினையில் சூடு காயும் தலைவர்களும் அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சரியான சந்தர்ப்பங்களில் இவர்களைத் தூண்டி விட்டு அதன் மூலம் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கல்.
கேள்வி.:-இதற்குத் தீர்வுதான் என்ன. ?
பதில் :- ஏற்ற தாழ்வுகள் ஒழிய வேண்டும். அதற்கு சரியான காரணங்கள் உணரப் பட வேண்டும். அவர்களது அறிவுக் கண் திறக்கப் பட வேண்டும் கல்வியில் சமத்துவம் வேண்டும். அதற்கு ஒரே மாதிரியான கல்வி வேண்டும் ஏழை பணக்காரன் என்னும் பேதம் ஒழிய வேண்டும். அந்த சூழ்நிலையில் சிறுவர்கள் வளர்க்கப் பட வேண்டும். இதெல்லாம் சாத்தியமாக, அனைவருக்கும் கல்வி வேண்டும். அதுவும் சமக் கல்வியாக இருக்க வேண்டும். அரசாங்கம் கல்வியை இலவசமாக எல்லோருக்கும் கட்டாயப் படுத்திஅளிக்க வேண்டும் இலவசக் கல்வி இலவச உணவு இவை எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சூழ் நிலையில் வளரும் சிறுவர்கள் மனதில் ஏற்ற தாழ்வு எண்ணங்கள உதிக்காது. GOD WILLING இது நடைமுறைப் படுத்தப் பட்டால் இன்னும் ஓரிரு தலை முறைக்குப் பிறகு பாகுபாடு இல்லாத ஒரு சமூகம் இருக்க வாய்ப்புண்டு.

எல்லாவற்றையும் முதலில் இருந்தே சொல்ல முயற்சி இது. நிறைய  சிந்திக்க வேண்டியது இருக்கிறது. எங்கோ படித்தேன். வாதங்கள் நல்லது. விவாதங்கள் வெற்றி தோல்வி தீர்மானித்து எங்கோ எதிரியை உருவாக்கும்
--------------------------------------------------

   ,                  




  


6 comments:

  1. அறிவுக் கண் திறக்கப் பட வேண்டும் கல்வியில் சமத்துவம் வேண்டும். அதற்கு ஒரே மாதிரியான கல்வி வேண்டும்

    ஆசிரியர் தினம் கொண்டாடும் வேளையில் தங்களின் கல்விபற்றிய சிந்தனைகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள் ஐயா..

    ReplyDelete
  2. நல்ல கேள்வி-பதில்... அறிந்தேன்...

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஆழமான கருத்துக்கள். நிறைய சிந்தனையைத் தூண்டிப்போகும் கேள்விகளும் பதில்களும். எல்லாவற்றையும் புரிந்துகொள்வதற்கே எனக்கு நாளாகும். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. ஏற்ற தாழ்வுகள் ஒழிய வேண்டும். அதற்கு சரியான காரணங்கள் உணரப் பட வேண்டும். அவர்களது அறிவுக் கண் திறக்கப் பட வேண்டும் கல்வியில் சமத்துவம் வேண்டும். அதற்கு ஒரே மாதிரியான கல்வி வேண்டும் ஏழை பணக்காரன் என்னும் பேதம் ஒழிய வேண்டும். அந்த சூழ்நிலையில் சிறுவர்கள் வளர்க்கப் பட வேண்டும். இதெல்லாம் சாத்தியமாக, அனைவருக்கும் கல்வி வேண்டும். அதுவும் சமக் கல்வியாக இருக்க வேண்டும். அரசாங்கம் கல்வியை இலவசமாக எல்லோருக்கும் கட்டாயப் படுத்திஅளிக்க வேண்டும் இலவசக் கல்வி இலவச உணவு இவை எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சூழ் நிலையில் வளரும் சிறுவர்கள் மனதில் ஏற்ற தாழ்வு எண்ணங்கள உதிக்காது. GOD WILLING இது நடைமுறைப் படுத்தப் பட்டால் இன்னும் ஓரிரு தலை முறைக்குப் பிறகு பாகுபாடு இல்லாத ஒரு சமூகம் இருக்க வாய்ப்புண்டு//

    நீங்கள் சொல்வது மிக சரியே!
    அறிவுக் கண்ணை திறந்து வைத்து விட்டால் எல்லாம் நலமே!
    கல்வி எல்லோருக்கும் சமமாக வழங்கபட வேண்டும் அது மிக மிக முக்கியம்.
    ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete