Sunday, March 16, 2014

எந்நன்றி கொன்றார்க்கும் ..........


         எந்நன்றி கொன்றார்க்கும்......( ஒரு சிறுகதை)
                                   =========================================


க்திவேல் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தான். அதிகக் கூட்டமில்லை. எதிர் இருக்கையில் ஒரு பெண்ணும் ஒரு அம்மாவும், அவளது தாயாயிருக்கலாம். இவனுக்கு அவர்களைப் பார்க்கும்போது தன் தாயையும் தான் காதலித்த பெண்ணையும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்து மெல்லிய புன்னகை உதிர்த்தான். அந்தப் பெண் அவளோடு இருந்த் பெண்மணியிடம் ஏதோ குசு குசுத்தாள். அந்தப் பெண்மணிக்கு  வந்ததே ஒரு கோபம். சக்திவேலைப் பார்த்து காட்டுக் கூச்சல் போட ஆரம்பித்தாள்
‘ இது போல் எத்தனை பேரடா கிளம்பி இருக்கிறீர்கள்/ ஒரு பெண் கொஞ்சம் லட்சணமாய் இருக்கக் கூடாதேஎன்று என்னவெல்லாமோ சொல்லிக் கூப்பாடு போட்டாள். சக்திவேலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனே மன உளைச்சலில் இருந்தான் எல்லாத் தொல்லைகளில் இருந்தும் விடுதலை பெற எங்கோ போய்க் கொண்டிருந்தான். அந்தப் பெண் சுகுணாவை நினைவு படுத்தியதென்னவோ உண்மைதான் அவனுக்கு அவனது மூளையில் ஏதோ மின்னியது போல் இருந்தது
“ அம்மா, என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. நான் உங்களை கை நீட்டி அடித்தது தவறுதான் என்னை மன்னித்து விடுங்கள். சுகுணா நீயாவது அம்மாவுக்குச் சொல்லேன் “ என்று அந்தத் தாயை காலைப் பற்றிக் கொண்டு அழுதான்

அந்த வழியே வந்த ஆர்பிஎஃப் என்ன என்று விசாரித்தனர் அந்தப் பெண்மணி சக்திவேல் தன் மகளிடம் தகாத முறையில் நடக்க எத்தனித்தான் என்று கூறினாள்.கேட்டால் என்னவெல்லாமோ பைத்தியக்காரன் போல் பிதற்றுகிறான்என்றும் கூறினாள். சக்திவேல் ஏதோ கூறி மறுப்பதற்குள் அவனை இழுத்துக் கொண்டு சென்று விட்டனர்

ரயில்வே போலீஸ் இவனை அடுத்த நிறுத்தத்தில் இறக்கி விட்டுச் சென்றனர். எங்கே இறக்கி விட்டால் என்ன. இவனே எங்கே போவது என்று தெரியாமலேதான் இருந்தான்

சக்திவேலைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம் வீட்டுக்கு மூத்த மகன் தந்தை இறந்தபின் குடும்ப பாரம் இவனே சுமக்க வேண்டி வந்தது  பொறுப்புணர்ந்து தன் தாயாரையும் தம்பி தங்கைகளையும் கவனித்துக் கொண்டான் இவன் என்னதான் பாடு பட்டாலும் இவன் தாய்க்கு இவனை விட இவன் தம்பி மேல்தான் பரிவும் பாசமும். மெள்ள மெள்ள இவனுக்கும் தன்னை தன் குடும்பத்தினர் கருவேப்பிலை போல் ஒதுக்கு கின்றனரோ என்று சந்தேகம் எழுந்தது இவன் கஷ்டப்பட்டு உழைக்க இவன் தம்பி பட்டப் படிப்பு படித்து முடித்தான். இவனால் முடிந்தவரை தன் இரு தங்கைகளுக்கும் திருமணம் செய்வித்தான். இவன் என்னதான்செய்தாலும் அந்தத் தாயின் சொந்த மகனில்லையே. அது தெரிந்தே பாபுவும் இதுதான் சகஜ நிலை என்று சமாதானப் படுத்திக்கொண்டான்
எதையும் சகஜமாக எண்ணிக்கொண்டு காலங்கழித்தவனின் வாழ்விலும் காதல் எட்டிப்பார்த்தது. தன் தாயிடம் தான் காதலிப்பதாகவும் தனக்காக பெண்வீட்டுக்குச் சென்று பெண்கேட்கச் சொல்லி வேண்டினான். இவனுக்குத் திருமணம் முடிந்து சென்றால் குடும்பத்திலிருந்து ஒதுங்கி விடுவான் என்று நினைத்த் அவன் தாயார் முதலில் அவன் காதலை உறுதிப் படுத்திக் கொள்ளச் சொன்னார். அது எப்படி அம்மா தெரிந்து கொள்ள முடியும். திருமணமானபின் காதலித்ததைச் சொல்லிக் கொள்கிறேன்  என்றான் 
 சக்திவேல் சுகுணாவை விரும்பினான் அது காதலா என்று உறுதியாகத் தெரியவில்லை எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு பெண்ணிடம் போய் ஐ லவ் யூ சொல்லத் தயங்கினான், சுகுணா அடுத்து வசிக்கும் தெரிந்த பெண்..பட்டப் படிப்பு படித்திருந்தாலும்  தனக்கு ஏற்றவளாக இருப்பாள் என்று நம்பினான். ஆகவே தாயிடம் முறையாகப் பெண்கேட்க வேண்டினான்.
 ஆனால் அவனது தாய் இப்படிச் செய்வாள் என்று சிறிதும் எண்ணவில்லை. அவர் அடுத்திருக்கும் சுகுணா வீட்டுக்குச் சென்று பெண்கேட்டு சம்மதமும் வாங்கிவந்தாள். ஆனால் அவர் பெண்கேட்டது சக்திவேலுக்கு அல்ல. அவனது தம்பிக்கு, அவரது சொந்த மகனுக்கு.. சக்திவேல் ஆடிப்போய் விட்டான். இதுவரை யாரும் அறிந்திராத ஒரு சக்திவேல் மனம் கொதிக்க கண்முன் வந்த எல்லோரிடமும் எரிந்து விழுந்தான்.அவன் தாய் சொன்ன சமாதானம் இவனுக்குப் புரியவில்லை. “ சுகுணா பட்டப் படிப்பு படித்தவள். நீயோ பத்தாங்கிளாஸ். எப்படி உனக்குப் பெண்கேட்பது. உன் தம்பி நன்றாகப் படித்திருக்கிறான். அந்தப் பெண் உன் தம்பிக்குப் பொருத்தமாய் இருப்பாள் என்று தோன்றியது. அதுதான் பேசிமுடித்து விட்டேன். உனக்கான பெண் பிறந்திருக்காமாலா இருப்பாள் . நல்ல பிள்ளையாய் நடக்க வேண்டியதைப் பார்என்றாள்
பாபுவுக்கு  ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆத்திரத்துடன் வெளியேறினான். நேராக அந்தப் பெண் வீட்டுக்குச் சென்றான். சுகுணாவின் கையைப் பிடித்து தர தரவென்று இழுத்துக் கொண்டு வந்தான். சக்திவேலின் தாய் இதைக் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டாள்.இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா. ?தம்பிக்குப் பார்த்த பெண்ணைக் கை பற்றி இழுத்து வந்திருக்கிறானேஎன்றெல்லாம் கத்தினாள். சக்திவேல் சுகுணாவிடம் தன்னை கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்டான்.அதெப்படிங்க முடியும் . பெரியவங்க நிச்சயம் செய்திருக்காங்க . நான் ஒண்ணும் செய்ய முடியாது “ என்றாள் சுகுணாவை மீட்க வந்த தன் தாயின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டு எங்கு போகிறோம் என்றே தெரியாதபடி நடந்து சென்றான்.
                                       *******************

ணியில் மும்முரமாய் இருந்த எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. புதிய எண்ணாக இருந்ததால் சற்று தயக்கத்துக்குப்பின் எடுத்தேன்
சோம சுந்தரம் ஜெனரல் மானேஜர்தானே சார்
ஆம் நான் தான். நீங்கள் யார்.?
“நாங்கள்----- போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுகிறோம். உங்கள் கம்பனியில் சக்திவேல்  என்பவர் வேலை செய்கிறாரா.?
சிறிது பொறுங்கள். பார்த்துச் சொல்கிறேன்
பர்சொனல் துறையில் செக் செய்து பார்த்ததில் சக்திவேல்  என்பவர் வேலை செய்வதும் அவர் ஒரு வாரகாலமாயும் எந்த தகவலும் கொடுக்காமல் பணிக்கு வரவில்லை என்றும் தெரிந்தது.மேலும் சக்திவேலைப் பற்றி விசாரித்ததில் ஏழெட்டு வருடங்களாகப் பணியில் இருப்பவர் என்றும் எந்தக் குறையும் இல்லாதவர் என்றும் தெரிந்தது சற்று நேரத்தில் மீண்டும் போலீசிடமிருந்து அழைப்பு வந்தது. சக்திவேல்  என்பவர் ----ரயில்வே நிலையத்தில் ஆர்பிஎஃப் போலீசால் சக பயணிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக இறக்கி விடப்பட்டு போலீசுக்குத் தகவல் தரப்பட்டு இப்போது அவர்கள் பாதுகாப்பில் இருப்பதாகவும் கூறினார்கள்.
உடனே எங்கள் மனிதவளத்துறை அதிகாரி ஒருவரை அழைத்து வேண்டது செய்யச் சொல்லி அனுப்பி வைத்தேன்
மறுநாள் எங்கள் அதிகாரி சக்திவேலின் மனநிலை பிறழ்ந்து இருப்பதுபோல் இருக்கிறது என்றும் சில நேரத்தில் கட்டுப்பாடற்று நடந்து கொள்வதுமாகத் தகவல் தந்தார். அவரை  ஒரு நல்ல மருத்துவ மனையில் சேர்க்கச் சொல்லி தகவல் அனுப்பினேன்
இது நடந்து முடிந்த சமயத்தில் உள்ளூர் போலீஸ் நிலையத்திலிருந்து சக்திவேலை விசாரித்துக் கேட்டார்கள். அவரைச் சில நாட்களாகக் காணோம் என்றும் நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை அவரது குடும்பத்தார் கொடுத்திருப்பதால் போலீஸ் விசாரணை என்றும் தெரிய வந்ததுபோலீசிடம் எனக்குக்கிடைத்த தகவல் பற்றியும் சக்திவேலை மருத்துவ மனையில் சேர்த்திருப்பது பற்றியும் கூறி விலாசமும் கொடுத்தேன்.
சக்திவேலின் தாயாரும் தம்பியும் அவனைபற்றிய செய்திகள் அறிந்ததும் மருத்துவ மனைக்குச் சென்றனர். அவனுக்கு அவர்களை சந்திக்கவே விருப்பமிருக்கவில்லை. மாறாக ஆவேசம் அடைந்தவனாகக் கூச்சல் போட்டான்விஷயம் கேள்விப்பட்டு மருத்துவ மனைக்குப் போனேன். மருத்துவர்கள் அவனுக்குச் சித்தப் பிரமையின் துவக்கக் கட்டம் என்றும் அவன் சில நாட்கள் எந்த தொந்தரவும் இன்றி ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கூறினர். மருத்துவச் செலவைக் கேட்டதும் சக்திவேலின் தாயும் தம்பியும் ஏதும் பேசாமல் “ சரிங்க. சக்தி இங்கேயே ஓய்வில் இருக்கட்டும்என்று கூறி ஓசையில்லாமல் வெளியேறினர்
“ என்ன சார்; இப்படியா ஒருவனைவிட்டுப் போவார்கள் “ என்று எங்கள் கம்பனி மனித வள மேலாளர் என்னிடம்கேட்டார்.
“ இதப் பாருங்க. சக்திவேல் நன்றாய் இருந்தபோது அவர்களைப் பராமரித்திருக்கிறான். அதேபோல்நன்றாய் இருந்தபோது நம் கம்பனிக்காக எட்டு வருடங்கள் நன்றாகவே உழைத்திருக்கிறான் நாமாவது நன்றி உள்ளவர்களாக இருப்போம். அவன் பூரண குணம் அடையும் வரை கம்பனியின் பராமரிப்பிலேயே இருக்கட்டும்” என்றேன்
------------------------------------------------------------------------
( இந்தக் கதையில் ஒரு பிழை செய்திருக்கிறேன் கண்டு பிடியுங்கள்பார்க்கலாம்)                   

18 comments:

  1. /// “அம்மா, என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. நான் உங்களை கை நீட்டி அடித்தது தவறுதான் என்னை மன்னித்து விடுங்கள். சுகுணா நீயாவது அம்மாவுக்குச் சொல்லேன் “ என்று அந்தத் தாயை காலைப் பற்றிக் கொண்டு அழுதான்... ///

    இந்த வரிகள் வந்த இடம் தவறா...?

    ReplyDelete
  2. //அது தெரிந்தே பாபுவும் இதுதான் சகஜ நிலை என்று சமாதானப் படுத்திக்கொண்டான் //

    சக்திவேல் பாபுவான இந்த இடம்தான் தவறோ...

    சக்திவேலின் நிலை படித்து, மனதுக்குக் கஷ்டமாக இருப்பது உண்மை.

    ReplyDelete
  3. இந்த மாதிரியான நிர்க்கதியான நிலையில் எண்ணற்ற சக்திவேல்கள்..
    இதுகூட பரவாயில்லை!..
    கதை நாயகம் - ஆண்!..
    அதுவே - பெண்ணாக இருந்தால்!?...
    குடும்பத்திற்கு உழைத்து ஓடாகிப் போன பெண்களின் கதையும் உண்டே!..

    ReplyDelete
  4. ஸ்ரீராம் சார் சொன்னதும் சரி என்றே படுகிறது...

    ஆனால் குழப்புகிறது வரிகள்...!

    ReplyDelete
  5. முதல் பந்திக்கும் இரண்டாவதுக்கும் இடையில் வேறுபாடு சத்திவேல் பாத்திரத்தில்!

    ReplyDelete
  6. சக்திவேல் குழம்பினாரோ இல்லையோ, தெரியாது. ஆனால் நான் குழம்பியிருப்பது உண்மை.

    ReplyDelete
  7. தங்க எழுத்தை ரசித்தேன் ஐய்யா இன்னும் ஒரு முறை படித்து விட்டு சொல்கிறேன்.

    ReplyDelete

  8. கதையும் கதையின் தலைப்பும் அருமை.

    எனக்குத் தெரிந்து தவறு இதுதான். ஆரம்பத்தில் ரயில்வே போலீஸ் இவனை அடுத்த நிறுத்தத்தில் இறக்கி விட்டுச் சென்றனர். என்று சொல்லியிருக்கிறீர்கள். பின்னால் ரயில்வே நிலையத்தில் ஆர்பிஎஃப் போலீசால் சக பயணிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக இறக்கி விடப்பட்டு போலீசுக்குத் தகவல் தரப்பட்டு இப்போது அவர்கள் பாதுகாப்பில் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.

    திரு ஸ்ரீராம் சொன்னதும் சரியே. நீங்கள் தான் சொல்லவேண்டும் எங்கே தவறு என்று!

    ReplyDelete
  9. தர்ட் பர்சனில் சொல்லப்பட்ட கதை திடீரென ஃபர்ஸ்ட் பர்சனுக்கு மாறியது சர்ப்ரைஸ்தான். கதையில் ஓரிரண்டு இடத்தில் சக்திவேல் பாபுவாக மாறியிருப்பதுதான் நீங்கள் (தெரிந்தே விட்ட) தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. கதையின் முடிவு அருமை ஐயா.

    ReplyDelete
  10. அது தெரிந்தே பாபுவும் இதுதான் சகஜ நிலை என்று சமாதானப் படுத்திக்கொண்டான்

    பாபுவுக்கு ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆத்திரத்துடன் வெளியேறினான்.//

    சக்திவேலை இரு இடங்களில் பாபுவாக மாற்றியுள்ளீர்கள்.

    ReplyDelete
  11. பழைய கதையின் பாதிப்போ? சக்திவேல் பாபுவாகி இருக்கிறான். இது தான் நீங்கள் செய்த தவறு என எண்ணுகிறேன். ஏற்கெனவே இரண்டு பேர் சொல்லி இருக்காங்க. :)

    ReplyDelete
  12. அப்போ ஒரே நேரம் மூணு தொலைபேசிகளும் கூப்பிடவே கதையைக் குறித்து எதுவும் சொல்லாமல் போய்விட்டேன். கதைப்படி சக்திவேல் நடத்தப்பட்ட விதத்தினால் அவன் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பாதிப்பு இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. கம்பெனியாவது அவனைக் கைவிடாமல் காப்பது குறித்து மகிழ்ச்சியே!

    ReplyDelete

  13. வலைப்பூவில் பலரும் மேலோட்டமாக வாசித்துப் போகிறார்கள் என்னும் எண்ணம் எனக்குண்டு. வாசிப்பவர் முதலில் மேய்ந்துவிட்டுப் போனாலும் மீண்டும்வந்து கூர்ந்து படிக்கும்படி செய்ய என் உத்தியே கதையில் சிறு பிழை செய்து வாசகர்களைக் கண்டுபிடிக்கச் சொன்னது.சக்திவேல் இரு இடங்களில் பாபுவாக மாற்றியதே நான் செய்த பிழை.ஸ்ரீராம் டிபிஆர் ஜோசப் ஊன்றிப் படித்ததற்கு நன்றி. கதை எழுதும்போது பல உத்திகளைக் கையாள்வதுண்டு அதில் ஒன்றே முதலில் தேர்ட் பெர்சனில் துவக்கி ஃபர்ஸ்ட் பர்சனில் முடித்தது. பாலகணேஷ் இனம் கண்டு கொண்டார். மகிழ்ச்சி
    பழைய கதையின் பாதிப்பல்ல கீதா மேடம். பழைய கதை படித்தவர்கள் பெயர் மாற்றத்தை அவ்வளவு எளிதில் கண்டுகொள்ள முடியாதுஎன்று நினைத்துத்தான் சக்திவேலை பாபுவாக எழுதினேன். வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  14. ஆட்கொணர்வு மனு.. அழகான தமிழ்.

    ReplyDelete
  15. சக்திவேலை வீட்டில் பாபு என்று கூப்பிடுவார்களோ! அதுதான் பாபு என்று குறிப்பிட்டு இருப்பீர்களோ என்று நினைத்தேன்.

    வாழ்க்கையில் ஏமாற்றப்படும் போது மனம் பேதலிப்பது நடக்கும் தான்.

    ReplyDelete