குருவாயூர் வாழும் பகவானே
குருவாயூர் வாழும் பகவானே
----------------------------------------
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குப் பலமுறை சென்றிருக்கிறோம் பக்தர்கள் மனதில் நீங்கா இடம் குருவாயூர்க் கண்ணனுக்கு உண்டு. கோவிலில் ஆண்டவன் தரிசனம் என்பது மிகவும் மாறிவிட்டது. முன்பெல்லாம் நிர்மால்ய தரிசனம் காண்பது சிறப்பாகவும் எளிதாகவும் இருந்தது. அருகில் சென்று தரிசிக்கலாம் பலமுறை பிரதட்சிணமாக வந்து வந்து தரிசிக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் ஒரு முறை தரிசனம் செய்வதே கடினமாயிருக்கிறது. கோவிலின் பூஜை முறைகளுக்கேற்ப நடையை மூடி விடுகிறார்கள்சில நாட்களில் நடை சாத்திய நேரமே அதிகமாயிருக்கும் எந்தெந்த பூஜை முறைகளில் நடை மூடுகிறார்கள் என்று தெரிந்து செல்வது உத்தமம். என் மனைவிக்கு குருவாயூர் தரிசனம் மிகவும் பிடித்த ஒன்று. நானெல்லாம் ஒரு முறை தரிசனம் செய்து வந்தால் இவள் மீண்டும் மீண்டுமென்று சலிப்பே இல்லாமல் போய்க் கொண்டிருப்பாள். அண்மையில் கேரளா சென்றிருந்தபோது சிற்றூந்தில் இவள் பாடிக்கொண்டு வந்தாள். இதுவரை நான் கேட்காதது. ஊர் திரும்பியதும் அந்தப் பாட்டை மீண்டும் பாடக் கேட்டு மலையாளத்தில் இருந்ததை ஓரளவு தமிழ்ப் படுத்தி இருக்கிறேன் அதுவே நீங்கள் படிக்கப் போகும் இப்பதிவு.
அடியவர் செய்யும் பாவங்கள் எல்லாம்
பொடிப்பொடியாய்ப் போய்விடும்-பக்தியால்
பதமலர் பற்றித் தஞ்சம் என்றதும்
குருவாயூர் வாழும் பகவானே
ஆதிமுதல் அல்லல் கொண்டே வாழும்
என் ஆதங்கம் எல்லாம் தீரவும்
பீதியில் உழலும் எனைக் காத்திட வா
குருவாயூர் வாழும் பகவானே
இன்றுன் பாதம்சேரவே பக்தியால்
உள்ளம் விம்முதே கிருஷ்ணா
வந்துடன் என்னை ரட்சிப்பாய்
குருவாயூர் வாழும்பகவானே
ஈண்டென்னைச் சோகம் தழுவுமென்றென்
மனசில் கோவிந்தா நான் எண்ணவில்லை
கார்வண்ணா உந்தன் கருணை வேண்டும்
குருவாயூர் வாழும் பகவானே.
உண்டு சங்கடம் ஆசாபாசமும் மோகம்
கொண்டு நான் உழல்வதெல்லாம்
அன்று நான் செய்த வினைகளின் பலனா
குருவாயூர் வாழும் பகவானே
ஊக்கம் வேண்டியே நான் தவிக்கும் போதென்
புத்தியில்வந்து பலம் சேர்க்கவேண்டும்
தீக்குணங்கள் என்னை அண்டாது காப்பாய்
குருவாயூர் வாழும் பகவானே
என்னதான் நான் வேண்டுவேன் கிருஷ்ணா
மோகமும் பாசமும் என்னைத் தீண்டாமல்
என்றுமே உன் பாசத்தில் கட்டிடுவாய்
குருவாயூர் வாழும் பகவானே
ஏனிந்தப் பாராமுகம் கிருஷ்ணா
ஏழையெனைத் தண்டித்தல் முறையோ
என்றைக்கும் நான் உன் பக்தனல்லவா
குருவாயூர் வாழும் பகவானே
ஐய நின் பாதம் அர்ச்சிப்பதன்றி
வேறொன்றும் நான் வேண்டேனுன்
கழல் பற்றி என் காலம் கழித்திடஅருள்வாய்
குருவாயூர் வழும் பகவானே
ஒன்றும் அறியாமல் இத்தேகம் விட்டென்
மூச்சும் போகவேண்டும் போகும்போதும்
உன் நாமம் என் நாவில்நிற்க அருள்வாய்
குருவாயூர் வாழும் பகவானே,
ஓதும் வேதப் பொருளே வைகுந்தா
ஓர்த்திடுவாய் என்றும் ஏழையினை
நோய் நீக்கிடும் பீதிநாசனே
குருவாயூர் வாழும் பகவானே
ஔஷதம் ஏதும் வேண்டேன் ஐயா
உன் நாம கீர்த்தனமே ஔஷதம்
பாவ வினைகள் எனைத் தொடராதிருகவெ
குருவாயூர் வாழும் பகவானே
அந்திம காலத்தில் உற்றவனாய் வந்து
அந்தகன் பயம் எனைப் பீடிக்காதிருக்க
என்றும் என் அகத்தே நீ இருந்திடுவாய்
குருவாயூர் வாழும் பகவானே.
குருவாயூர் வாழும் பகவானே கிருஷ்ணா
கருணா சாகர கார் வண்ணா
கார்வண்ணா உந்தன் கருணை வேண்டும்
குருவாயூர் வாழும் பகவானே
.
அருமை ஐயா...
ReplyDeleteநன்றி
Deleteஅ முதல் ஔ வரை வரும்படி மொழிபெயர்த்திருப்பது சிறப்பு.
ReplyDeleteநன்றி
ReplyDelete