செவ்வாய், 15 ஜனவரி, 2013

எனக்குத் தமிழ் தெரியாது.


                                       எனக்குத் தமிழ் தெரியாது.
                                       -------------------------------------



அந்தக் காலத்தில் நான் பள்ளியில் படித்தபோது, தமிழில் ஒரு பாடம். ‘இறையனார் அகப் பொருளுரைஎன்ற தலைப்பில் இருந்தது. அதில் சில வரிகள் அவ்வப்போது மனத்திரையில் ஓடும். முழுவதும் நினைவுக்கு வரவில்லை
பண்டைக் காலத்தில் பாண்டிய நாடு  பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்ல பசிகடுகுதலும், அரசன் சிட்டரை எல்லாங் கூவி , வம்மின் யான் உங்களைப் புறந்தரகில்லேன். நீவீர் நுமக்கறிந்தவாறுபுக்கு, நாடு நாடாயின ஞான்று என்னையுள்ளி வம்மின் என்றான்,என அரசனைவிடுத்து எல்லோரும் போயின பின்றைக் கணக்கின்றி பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது பெய்தப்ன்னர் அரசன் நாடு நாடாயிற்றாதலின் நூல் வல்லாரை கொணர்க என எல்லாப்பக்கமும் ஆட்போக்க,எழுத்ததிகாரமும் , சொல்லதிகாரமும் , யாப்பதிகாரமும் வல்லாரை........ “இதற்குமேல் எதுவும்

ஓடவில்லை. இந்த உரைநடை நக்கீரனார் எழுதியது என்று படித்ததாக நினைவு. இப்போது அதன் முழு பகுதியையும் படிக்கும் ஆவலில் கணினியின் உதவியுடன் உலா வந்தேன். மேலும் சில விவரங்கள் படித்தேன். படித்தபிறகு ஒரு முடிவுக்கு வந்தேன், எனக்குத் தமிழ் தெரியவில்லை என்பதுதான் அது.

சொல்லதிகாரம், எழுத்ததிகாரம், யாப்பதிகாரம் இவற்றில் வல்லவர்கள் திரும்ப வந்தனர் என்றும் முக்கியமாக பொருளதிகாரம் வல்லார் எவரும் கிடைக்கவில்லை என்றும் அரசன் அறிந்து வருந்தியபோது மதுரை ஆலவாயிற்கடவுள் அரசனுக்குதவ அறுபது சூத்திரங்களை  செப்புப் பட்டயத்தில் எழுதி பீடத்தின் அடியில் இட.அடுத்த நாள் தேவர் குலம் வழிபடுவோன் தேவர் கோட்டத்தை எங்குந்துடைத்து நீர் தெளித்துப் பூவிட்டு எங்கும் அலகிட்டான். இட்டாற்கு அவ்வலகினொடு இதழ் போந்தன.போதரக் கொண்டு போந்து நோக்கினார்க்கு வாய்ப்புடைத்தாயிற்றோர் பொருளதிகாரமாய்க் காட்டிற்று. காட்ட பிரமன் சிந்திப்பான்.அரசன் பொருளதிகாரம் இன்றிக் கவல்கின்றான். என்பது கேட்டுச் செல்லா நின்றது உணர்ந்துநம் பெருமான் அருளிச் செய்தானாகும் எனதன் அகம் புகுதாதே, கோயில் தலைக்கடை சென்று நின்று கடைக்காப்பர்க்கு உணர்த்த கடைக் காப்பர் அரசர்க்கு உணர்த்தஅரசன் புகுதுக எனப் பிரமனைக் கூவசென்று புக்குக் காட்ட ஏற்றுக்கொண்டு நோக்கிப் பொருளதிகாரம் ! இது நம் பெருமான் நம் இடுக்கண் கண்டு அருளிச் செய்தானகற்பாலது ! என்று வணங்கி சங்கத்தாரிடம் அதற்குப் பொருள் கூறு மாறு ஏவினான் 

அகப் பொருள் பற்றிய இலக்கண நூல்களில் தொல்காப்பியத்துக்குப்பிறகு தோன்றிய சிறப்பு மிக்க நூல்  இறையனார் அகப் பொருள். இந்நூலுக்கு உரை பல சங்க காலப் புலவர்கள் எழுதினராம் மாதிரிக்கு ஒன்று.

அம்பலும் அலரும் களவு என்பது இறையனார் களவியலில் உள்ள 22-ம் நூற்பா. இதனை நக்கீரனார் உரை இவ்வாறு விளக்குகிறதாம் 


        அம்பல் என்பது முகிழ்முகிழ்த்தல்,
       
அலர் என்பது சொல் நிகழ்தல்;
       
அம்பல் என்பது சொல் நிகழ்தல்,
       
அலர் என்பது இல் அறிதல்;
       
அம்பல் என்பது இல் அறிதல்,
       
அலர் என்பது அயல் அறிதல்;
       
அம்பல் என்பது அயல் அறிதல்,
       
அலர் என்பது சேரி அறிதல்;
       
அம்பல் என்பது சேரி அறிதல்,
       
அலர் என்பது ஊர் அறிதல்;
       
அம்பல் என்பது ஊர் அறிதல்,
       
அலர் என்பது நாடு அறிதல்;
       
அம்பல் என்பது நாடு அறிதல்,
       
அலர் என்பது தேசம் அறிதல்.

இதையெல்லாம் படிக்கும்போது எனக்குத் தோன்றியதைத்தான்
எனக்குத் தமிழ் தெரியவில்லை என்ற ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தேன். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல்தான். இருந்தால் என்ன ? இதனை படிக்கும் பலரும் இந்த முடிவுக்குத்தான் வருவீர்கள் என்று எண்ணுகிறேன். ஆனால் ‘உன்னை வைத்து மற்றவரை எடை போடாதே ‘ என்று இன்னும் பலர் நினைக்கலாம்.

இன்னும் ஒரு சந்தேகம் எழுகிறது. நக்கீரர் எழுதியதாகச் சொல்லப்படும் உரை நடையில், சில வார்த்தைகள் அண்மைக்காலத் தமிழ் போல் தோன்றுகிறது. மூலம் சரியாகக் கிடைக்காமல் பாடபேதமாக பிற்காலச் செர்க்கைஇருக்கலாமோ என்பதுதான் அது.

ஆங்கிலத்தில் சில வார்த்தைகளுக்கு பொருள் தெரியவில்லை என்றால் டிக்‌ஷனரி என்று சொல்லப்படும் அகராதி நோக்கித் தெரிந்து கொள்ள முடிகிறது. அதைப் போல் பரவலாக உபயோகப் பட தமிழில் அகராதி இருக்கிறதா. ? இதுவரை நான் பார்த்ததில்லை. ஒரு வேளை எல்லா வார்த்தைகளையும் அகராதியில் கொண்டு வர முடியாதோ? இல்லையென்றால் உரைகளுக்கே உரை தேடும்படி இருப்பதுதான் தமிழில் தேர்ச்சி பெறுவதன் அடையாளமோ.? சிந்திக்க சிந்திக்க எனக்கு ஒன்று மட்டும் விளங்குகிறது. எனக்கு தமிழ் எழுதப் படிக்க மட்டுமே தெரியும். மொழி அறிவு பெற நான் நிறையப் பாடுபடவேண்டும்.

----------------------------------------------------

 



 

திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கும் மங்களம் எங்கும் தங்க.


                         பொங்கும் மங்களம் எங்கும் தங்க.
                         ----------------------------------------------



தையலே தைப் பெண்ணே நீ பிறந்தால் வழி பிறக்குமென
நம்பிக்கையோடு நாங்களும் நட்ட கன்னலும் சென்னெலும்
கதிர் அறுத்து புதுப் பானையில் பொங்கலிட்டுக் குலவையிட்டுக்
குதூகலத்துடன் ஞாயிறுக்கு நன்றி சொல்லி மகிழும் வேளை
பொங்கும் மங்களம் தங்குக எங்கும் என வேண்டி எம் இனிய
பொங்கல் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
----------------------------------------------- 

              

வெள்ளி, 11 ஜனவரி, 2013

விளிம்புகளில் தொடரும் கதை



                 விளிம்புகளில்தொடரும்கதை.
                  -------------------------------------------------------


(ன்  ”வழ்வின் விளிம்பில் “என்றிறுகை எழி இரந்தேன்  
 gmbat1649.blogspot.in/2010/11/blog-post_21.html அ



என்னதான்  எண்ணமாக  வருகிறது..? வாழ்வா  இல்லை  சாவா.? நான்  வாழ  வேண்டும்  என்றால்  சரியான  காரணம்  இருக்க  வேண்டும்  அல்லவா. நான்  போய  விடுவேன்  என்று  எண்ணி, ரயிலடிக்கு  வண்டியேற்ற  வந்திருப்பவர்கள்  போலல்லவா   தெரிகிறார்கள்  இங்கு  கூடியுள்ளவர்கள் .
         " ரயில்  புறப்பட  இன்னும்  இரண்டு  நிமிஷங்கள்  தானிருக்கிறது."



          ரங்கசாமியின்  நேரம்  முடிந்து  விட்டதா.? அவன்  உயிருடன்  வீட்டுக்குத்  திரும்புவானா.  அவன்  நினைப்பதுபோல்  எண்ணத்தின்  சக்தியால்  சாவைத் துரத்துவானா. எண்ணத்துக்கு  சக்தி  கொடுக்க  கடமைச்  சுமைகள்  இல்லாததால்  வலு     இழந்து   மடிவானா...
         அவன்  ஏன்  சாக வேண்டும்..? ஏன்  சாகக்கூடாது.? கேள்விகளுக்கு  விடை  கிடைக்குமா.? கிடைக்காதே.! கிடைக்குமானால்  புத்தன்  வெற்றி  கண்டதாகாதா. ? வெற்றி  கண்டிருந்தால்..... எல்லாம்  வீண்  கேள்விகள்...
         ஒன்று  மட்டும்  புரிந்து  கொள்ள  வேண்டும். வினை  விதைத்தவன்  வினை  அறுப்பான் . தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான். மரண  பயம்  இல்லாமல்  சாக  வேண்டும் . ரங்கசாமியின்  கொடுப்பினை  என்ன..?
என்று முடித்ிரந்தேன். அன் ொடர்ச்சியாக அல்லு இரண்டாம் பியாகை எடத்ுக் கொள்ளாம் )



ரங்கசாமி அப்போது பிழைத்துக் கொண்டான். ஆனால் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது அல்லவா. ஒரு நாள் அவன் திடீரென்று வாழ்விலிருந்து பிழைத்துக்
கொண்டான்.அதாவது.இறந்தானா.?

என்னைப் பாருங்களேன். ஏதாவது பேசுங்களேன். தூங்கத்தானே செய்கிறீர்கள். நான் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன். நன்றாக உறங்குங்கள். “ மாற்றி மாற்றி இதையே கூறிக் கொண்டிருந்தவள் திடீரென்று வெடித்து அழ ஆரம்பித்து விட்டாள்.


அவள்  ஏன் அழ வேண்டும்.?அழுகை என்பதே ஒரு வடிகால்தானே. அழட்டும் நன்றாக அழட்டும். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ. எல்லோருக்கும் தெரிந்தது தானே. மனித உணர்வுகளுக்கு அழுகையும் அதன் பின் வரும் மறதியும் வரம்தானே. இருந்தாலும் ஏறத்தாழ ஐம்பது வருட தாம்பத்திய வாழ்வில் கை கோத்துக் கூடவே வந்தவர் திடீரென்று இல்லை என்றாகி விட்டால்.......எத்தனை எத்தனை நினைவுகள்.எத்தனை எத்தனை கனவுகள். ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்து வருகிறதே.

என்ன தைரியம் இவருக்கு.?ஏதொ சம்யுக்தையை குதிரையில் கவர்ந்து போன பிருதிவி ராஜா என்ற நினைப்பு. இருந்தாலும் அவர் சைக்கிளில் ஆரோகணித்து வருவதே கம்பீரமாகக் குதிரையில் வருவதுபோல்தான் இருக்கும். அந்த நாள் மறக்க முடியுமா.? தினமும் நான் போய்வரும் வழியில் எங்கிருந்தாவது என்னைக் காண நிற்கும் அவர் அன்று வீதியில் வழிமறித்து நிறையப் பேச வேண்டும் . இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் இடத்துக்கு வந்து விடு. விவரங்கள் கடிதத்தில்என்று கூறி என் கையில் ஒரு கடிதத்தைத் திணித்துவிட்டு சிட்டாய் பறந்து விட்டார்.


சில காரியங்கள் நடக்கும்போது அவற்றின் முக்கியத்துவமும் பரிமாணமும் புரிவதில்லை.என்ன ஏது என்று தெரியாமலேயே சிறிது நேரம் குழம்பி இருந்தாள். பிறகு ‘ ஐயோ இது தவறு அல்லவாஎன்று கேட்டுக் கொண்டாள். இருந்தாலும் மனசுக்குள்ளே சிறிது மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது. இப்போதும் அடிக்கடி அவர் கேட்பார். உனக்கு என் மீது காதல் இருந்ததா? காதல் இருக்கா.? இத்தனை வருஷங்களுக்குப் பின்னும் கேட்கும் கேள்வி அபத்தமாகத் தெரியவில்லையா என்று கேட்டால். Justice is not enough if it is done, but it should appear to be done also. அதுபோல காதலித்தால் மட்டும் போதாது காதலிப்பது தெரியவும் வேண்டும்.என்பார். எதையும் வெளிப்படையாகப் பேசும் குணம். அதுவே அவரின் பலமும், பலகீனமும்.

அந்தக் காலத்தில் காதல் என்றால் என்ன என்றே அறியாதவள்,ஏதோ ஒன்றால் ஈர்க்கப் பட்டு அவரை  சொன்ன இடத்தில் சந்திக்கத் துணிந்து விட்டாள். என்ன பேசுவது.? பேசுவதை விளக்கமாகக் கூறுவதில் தேர்ந்தவர், என்னவெல்லாமோ சொன்னார். ஆனால் அவள் அடிமனதில் இப்படி சந்திப்பது தவறு என்று ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் இல்லையென்றால் யாருக்கும் தெரியாமல் ரெஜிஸ்தர் கலியாணம் செய்து கொள்ளலாம்  என்றபோது தூக்கி வாரிப் போட்டது. ‘அப்படிச் செய்வது தவறுஎன்றுமட்டும் முனகினாள்.அம்மாவிடம் பேசுகிறேன் என்றும் கூறினாள். அம்மா ஒப்புக் கொள்ளவில்லை என்றால் .... அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றாள்.பிறகு அம்மாவிடம் அவரே பேசியதும் கலியாணம் நடந்ததும் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது.

திருமண விஷயம் குறித்து சொந்தங்கள் பலரிடம் கூறச் சென்றபோது. திருமணத்துக்கு இசைவு கேட்க வந்தாயா இல்லை சேதி சொல்ல வந்தாயா என்று பலரும் கேட்டனராம். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்
கொள்ளுங்கள். ஆனால் திருமணத்துக்கு வாழ்த்து கூற அவசியம் வாருங்கள் என்றாராம்.

என்ன இருந்தாலும் நெஞ்சுரம் அதிகம்தான் அவருக்கு. திருமணம் முடிந்து சென்னைக்குப் புதிதாய் குடித்தனம் வைக்கப் போனபோது எந்த ஒரு சாமானமும் வீட்டில் இருக்கவில்லை. முதலில் மண் சட்டி பானையில் தான் சமையல். ஒரு விக் ஸ்டவ். படுக்கப் பாய் தலையணை. வீட்டுக்கு வருபவர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். ஆனால் இதையெல்லாம் வாழ்வின் கஷ்ட காலங்கள் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. வாழ்வில் இதெல்லாம் மிகவும் சகஜம் என்பதுபோல் ஒரு குணம். எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவர் அவள் முதலில் உண்டாகி இருப்பதையும் மூன்று மாதங்கள் கழித்துத்தான் மருத்துவரிடம் கூட்டிச் சென்று உறுதிப் படுத்தினார். திருமணம் ஆவதும் கர்ப்பம் தரிப்பதும் சர்வ சாதாரண நிகழ்ச்சி என்று எடுத்துக் கொண்டார். இரண்டாவது மகனை பிரசவிக்க அன்று காலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்த மருத்துவ மனைக்கு நடத்தியே கூட்டிச் சென்ற அரைமணி நேரத்தில் சுகப் பிரசவம் நடந்தது. இதெல்லாம் நம் மேல் அக்கரை இல்லாததாலா, என்று பிற்காலத்தில் கேட்டபோது BLESSED ARE THOSE THAT ARE IGNORANT  என்று கூறுவார்.அப்போது பிரசவ அறையில் தன்னைப் பார்த்த பிறகு இனி வேறு குழந்தை வேண்டாம், உன் வலியை உன் முகத்தில் கண்டேன், இனியும் உன்னைக் கஷ்டப் படுத்தமாட்டேன் என்றார். அதுவே அளவோடு பெற்று இதுவரை நிறைவோடு வாழக் காரணமாயிருந்தது.


ஒரு முறை வாழ்க்கையில் வேறு பெண்களை நினைத்திருக்கிறீர்களா என்று கேட்டபோது ‘ என் மனம் ஒரு ஃபிலிம் நெகடிவ் போன்றது. ஒரு முறைதான் எக்ஸ்போஸ் ஆகும். நீதான் எக்ஸ்போஸான அந்தபடம் “என்பார்.

நான் மட்டும் என்னென்னவோ எண்ணிக் கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கென்ன ஒரு கவலையுமில்லாமல் போய்ச் சேர்ந்து விட்டீர்களே என்று மீண்டும் அழத்துவங்கி விட்டாள் நான் இற்ந்தால் யாரும் அழக்கூடாது. நான் என் கடமைகளைச் செய்துவிட்டேன். இன்னும் ஜீவித்திருப்பது அடுத்தவருக்கு தொல்லையாய்த்தான் இருக்கும்என்பார்..தனிப்பட்ட முறையில் எந்த தேவையும் எதிர்பார்ப்பும் இல்லாதவர். ஆனால் அவர் செலுத்திய அளவில் பாதி அன்பாவது கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் எப்போதும் உண்டு. அன்பை வெளிப்படையாகக் காட்டுபவர் எல்லோரும் அதுபோல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததில் ஆச்சரியம் இல்லை.


நினைவுகள் போட்டிபோட்டுக் கொண்டு வருகின்றன. சில அந்தரங்கமானவை . வாய்விட்டுக் கதற முடியவில்லை. ‘ரயில் கிளம்ப இன்னும் இரண்டு நிமிஷங்களே உள்ளன ‘ என்று வண்டி ஏற்றிவிட வந்தவர்கள்  இல்லாமல் எதிர்பாராத விதமாய்ப் போய்ச் சேர வேண்டும் என்ற அவர் ஆசை நிறைவேறிவிட்டது. அது ஒரு வகையில் நல்லதுதான். அவரால் அவரது தனித்தன்மையை விட்டு விட்டு எங்கும் இருக்க முடியாது. அது தந்தையர் குணம்போலும். தாயானவள் அனுசரித்துக் கொண்டு போவாள்.உன்னை விட்டு என்னால் எங்கும் இருக்கமுடியாது. உனக்கு முன்னால் நான் போய்ச் சேரவேண்டும் . இல்லை நாம் இருவரும் ஒரே நேரத்தில் போக வேண்டும் என்பாரே. அவர் போய் தான் மட்டும் இன்னும் இருக்கிறோமே என்னும் ஆற்றாமை அலைக்கழிக்க மீண்டும் கதறுகிறாள்.

பெண்கள் வட்டத்தைப் போன்றவர்கள். ஆதி அந்தம் தெரிந்து கொள்வது மிகவும் கடினம். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் பக்குவம் படைத்தவர்கள். ‘ என்னைப்போல் plan your work and work your plan என்று இருப்பவர்கள் அல்லஎன்று ஏதேதோ சொல்வாரே. அவருடைய எந்த குணம் குறை கொண்டிருந்தது என்று சொல்வதே கடினம். ஆங்... அந்த முன் கோபம்தான் நம்முடைய எண்ணங்களையும் சொல்ல விடாமல் தடுக்கும். அதற்காக அன்பு இல்லாதவர் என்றோ ஆணாதிக்கம் கொண்டவர் என்றோ கூற முடியாது.மனசாலும் பெச்சாலும் செய்கையாலும் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்பாரே.


வாயுவேகம்  மனோவேகம் என்பார்கள். வாயு வேகத்தைவிட மனோவேகம் அதிகம். ஒரு சில வினாடிகள் இருக்குமா, ரங்கசாமி குப்புற வீழ்ந்து.?அவன் போய்ச் சேர்ந்துவிட்டான் என்ற நினைப்பில் எத்தனை எத்தனை எண்ணங்கள்.....ஏதோ அசைவு தெரிகிறதே என்று பார்த்தால்... ரங்கசாமி கண்விழித்துப் பார்த்து “ ஏனம்மா அழுகிறாய். நான்தான் அவனை எட்டி உதைத்து விட்டேனேஎன்று கூறியபடி  சிரிக்கிறான்......!

நான் விடும் மூச்சுக் காற்று , என் ஜீவாத்மா அந்தப் பரமாத்மாவுடன் அந்தகாரத்தில் ஐக்கியமாகு முன்னே சிறிது நேரம் இங்கேயே உலாவி இருக்க வேண்டும். நீ படும் துக்கங்களைத் தாங்க முடியாமல் மீண்டும் என் உடலில் புகுந்து கொண்டிருக்க வேண்டும். நீயில்லாமல் நானில்லை நானில்லாமல் நீயில்லை. வா... என்னோடு நீயும் வா  அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “ இருங்கள்... இருங்கள் .. நானும் கூட வருகிறேன்..என்று கூறியபடி அவனை அணைக்கிறாள். சரிந்து விழுகிறாள்.

நடந்தது ஏதும் புரியாமல் இவர்களை இந்த கோலத்தில் பார்த்தவர்கள். அவரவர் கற்பனைக்கேற்றபடி கதைக்கிறார்கள்.  
---------------------------------------------------------------  ...
 

 
 
 
 

   
 



செவ்வாய், 8 ஜனவரி, 2013

உரத்த சிந்தனைகள்.


                                    உரத்த சிந்தனைகள்.
                                    ---------------------------



இந்தப் பதிவு உங்களைப் பற்றியோ என்னைப் பற்றியோ அல்ல. நம்மைப் பற்றியது.. நம் நாட்டின் நிலையைப் பற்றியது. நம் சமூகம் குறித்தும் நாம் பின் பற்றும் வாழ்க்கை முறையைப் பற்றியும் சிலமணித் துளிகள் சிந்திக்கக் கோருவது..
ஒரு கொசு கடித்தால் முதலில் நாம் தேடுவது கொசுவத்திச் சுருளோ கொசுவை விரட்ட ஏதாவது repellent- ஓ  தான். நம்மைப் பரிபாலிக்கும் நகர சபையை ஏன் நாம் ஒன்றும் கேட்பதில்லை.?
குழாயில் வரும் தண்ணீரைக் குடிக்க நமக்கு தைரியம் இல்லை. பாட்டில் நீரையோ, அல்லது ஏதாவது சுத்திகரிக்கும் முறையையோதான் நாடுகிறோம். குழாயில் வரும் நீர் குளிக்கவும் துணி துவைக்கவும் மட்டும்தான் பிரயோசனப் படுமா.?குழாயில் குடிக்கவும் சமைக்கவும் நீர் பெறும் உரிமை இல்லையா.?
மின்தடை என்றால் இன்வெர்டர் அல்லது தடையில்லா மின்சாரம் கிடைக்க ஏதாவது ஜெனெரேடரையோ ஏன் நாடவேண்டும். மின் கம்பிகளின் மூலம் மின்சாரம் கிடைக்கப் பெறுவது நமது உரிமை அல்லவா. ?


வாகனங்களில் நல்ல சாலைகளில் பயணிக்க டோல் வரி வசூலிப்பவர்கள், ,குண்டுங் குழியுமான சாலைகளில் பயணிக்க வைப்பதை கேட்க வேண்டாமா.?
வீட்டுவரி வசூலிப்பவர்கள் மிகச் சாதாரணமான அடிப்படை வசதிகள் செய்து தரல் அவசியம்ல்லவா.?
தொலைக் காட்சிகளில் வாய் கிழியப் பேட்டி எடுப்பவர்கள் நடுநிலையில் செய்திகள் தர வேண்டாமா?

சட்டங்களை இயற்றுபவர்கள் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப் பட்டு நடக்க வேண்டாமா?வரி ஏய்ப்பவனும் , கொள்ளை அடிப்பவனும், குடிகாரனும், கற்பழிப்பவனும்  கொலைகாரனும் எப்படி சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ அங்கம் வகிக்கலாம்?
அப்படி நிலை கெட்ட மனிதர்கள் பேசுவதையும் தலைமை வகிப்பதையும் கல்லூரிகளும் மேலாண்மை பயில்விக்கும் கலாசாலைகளும் வாய் பிளந்து கேட்டு கை தட்டி ஏன் ஆரவாரிக்க வேண்டும்?
குற்றம் செய்யும் சாதாரணக் குடிமகனுக்கு சட்டம் துரிதமாக செயல்பட்டு
நீதி வழங்குகிற் மாதிரி பதவியில் இருப்பவருக்கும் பணம் இருப்பவருக்கும் ஏன் விசாரணைகளும் தண்டனைகளும் வழங்குவதில் அசாதாரண கால தாமதம்.?

இப்படி கேள்விகள் கேட்கும் நாம் எப்படி இருக்கிறோம்.? சர்வ சாதாரணமாக விதிகளை மீறுகிறோம். சாலை விதிகளை மீறி ரூ.நூறு கொடுக்கத் தயாராய் இருக்கும் நாம் லஞ்சம் பற்றிப் பேசலாமா.? எந்த ஒரு வேலைக்கும் ஒரு விலை கொடுத்து சாதிப்பதை தயங்காமல் செய்யும் நமக்கு லஞ்சத்தை பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது. பள்ளிகள் வியாபாரகூடமாகி விட்டது என்று கூக்குரல் இடும் நாம் நம் பிள்ளைகளை அங்கு சேர்க்க எந்தவிலையும் கொடுக்கத் தயாராக இருப்பதேனோ. இலவசங்கள் கொடுத்து நம்மை ஏமாற்றும் அரசை நாம் மீண்டும் மீண்டும் அரசு கட்டிலில் அமர்த்துவது ஏனோ.?வாழ்க்கையில் மதிப்பீடுகள் மறைந்து விட்டன என்று குறை கூறும் நாம் அவற்றை மீட்டெடுக்க என்ன செய்கிறோம். சிறு துளி பெரு வெள்ளம் என்பதை சின்னச் சின்ன நல்ல பண்புகளைப் பேணவும் வளர்க்கவும் செய்தால் ஒட்டு மொத்தமாக ஒரு ஒழுங்கான சமுதாயம் மலர வழியாகாதா. ?CHARITY BEGINS AT HOME. என்று நாம் உணர வேண்டாமா..SMALL THINGS MAKE PERFECTION. BUT PERFECTION IS NO SMALL THING. என்று அறிவது அவசியமல்லவா. லஞ்சத்துக்கு எதிராக ஒரு முதியவர் தலைமையில் போராட முன் வந்தவர்கள், அந்தப் போராட்டத்தை ஏன் நிறுத்த வேண்டும். WRONG MEANS WERE CHOSEN TO MEET THE RIGHT ENDS என்று புரிந்து கொண்டோமென்றால் சரியான பாதையை த் தேர்ந்தெடுக்கலாமே. ஒரு பெண் சீரழிக்கப் பட்டாள் என்று தெரிந்தவுடன் பொங்கி எழுந்த இளைய சமுதாயம் VESTED INTEREST  கொண்டவர்கள் போராட்டத்தைக் கையில் எடுப்பதால் விளைந்த நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள வில்லையா.?போராட்டங்கள் தொடர வேண்டும். நம் செயலின் மீது நம்பிக்கை வேண்டும். ஆக, நம் இலக்கு தெரிந்து நாமும் நல்லவர்களாக இருந்து போராடல் அவசியம். WE SHOULD NOT REST TILL THE GOAL IS ACHIEVED.
-------------------------------------------------------- .  .  
 . .        


 

 



சனி, 5 ஜனவரி, 2013

கற்றதும் விட்டதும்....


                                       கற்றதும்  விட்டதும்....
                                       ----------------------------


முதன் முதலில் நான் மது அருந்திய நினைவு எனக்கு வந்து அதுவே ஒரு பதிவுக்கு வழி வகுத்து விட்டது. பெங்களூரில் நான் அந்தக் காலத்தில் வாழ்ந்த இடங்கள் வழியே செல்ல நேரும்போது நினைவுகள் போட்டிபோட்டுக் கொண்டு வந்து மோதும். 1962 என்று நினைக்கிறேன். கமெர்ஷியல் ஸ்ட்ரீட் அருகே வீரப்பிள்ளைத் தெரு. ஒரு நாள் அந்த வழியே போய்க் கொண்டிருந்தபோது அங்கு ஒரு கட்டிட மாடியில் என் நண்பன் ஒருவனைக் காணச்சென்றேன். மாலை ஆறு அல்லது ஏழு மணி இருக்கலாம். அவன் மாடியில் ஒரு அறையில் தங்கி இருந்தான். அவனது சொந்த ஊர் குடகு பக்கம் எங்கோ. அறைக் கதவு சாத்தி இருக்க நான் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்தவன் என்னைக் கண்டதும் திடீரென்று என்னை உள்ளே இழுத்துக் கொண்டு கதவை மூடினான். அவனது அறையில் ஒரு மேசை மேல் பாட்டில்களும் கொறிக்க முந்திரிப் பருப்பு வகைகளும் இருந்தன. “ என்ன... தண்ணி எல்லாம் போடுவியா ?என்றேன். அவன் வாயில் விரலை வைத்து என்னைப் பேசக்கூடாது என்று சைகை காட்டினான். ஒரு டம்ப்ளரில்  பாட்டிலிலிருந்து எனக்கு ஊற்றிக் கொடுத்தான். முன்னே பின்னே குடித்துப் பார்த்திராத எனக்கு பயமாக இருந்தது. கூடவே அதில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமும் இருந்தது. And peer pressure.? மது வகையறாக்களில் பீர் போதை ஏற்படுத்தாது என்று கூறக் கேட்டிருக்கிறேன். “ இது பீர் என்றால் குடிக்கிறேன் “ என்றேன். “ஹூம்.. ஹூம். “ என்று கூறிக்கொண்டே டம்ப்ளரை என்னிடம் கொடுத்தான். முன்னே பின்னே செத்தால்தானே சுடுகாடு
தெரியும். குடிபற்றி ஏதும் தெரியாத நான் அதை ( பிறகு அது ரம் என்று தெரிந்து கொண்டேன்) வாங்கி மட மடவென்று ஒரே மூச்சில் குடித்துவிட்டேன். விசேஷமாக எந்த ருசியும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் வயிற்றின் உள்ளே காந்தத் துவங்கியது. சிறிது நேரம் என்னென்னவோ உளறிக்கொண்டிருந்தேன். வீட்டுக்குப் போக வேண்டும் என்ற நினைவு வந்து அவனிடம் “பை “ சொல்லி மாடிப்படி இறங்கக் கால் வைத்தால்............. ஒவ்வொரு படியும் கீ கீ கீழே எங்கோ இருப்பதுபோல் தோன்றியது . எப்படியோ விழாமல் தட்டுத்தடுமாறி கீழே வந்தேன். அங்கே என் தம்பி ஒரு பெட்டிக்கடை அருகே நின்றிருந்தான். நான் அந்தக் கடையில் சிகரெட் வாங்குவது வழக்கம். நான் குடித்திருப்பது தெரியாமல் மறைக்க கூடவே லாசென்சஸ் சில வாங்கினேன். “என்ன அண்ணா குடிச்சீங்களாஎன்ற என் தம்பியை “ ஊஷ் “ என்று அடக்கினேன். கால்கள் பின்னிக் கொள்ள நடக்கத் தடுமாறினேன். என் நண்பனின் ஓட்டல் எதிரே இருந்தது. அங்கே போய் அவனிடம் குடிக்க மோர் கேட்டேன்.என்னய்யா... தண்ணியா “ என்றவனிடம் ஏதும் கூறாமல் மோர் வாங்கிக் குடித்துவிட்டு வெளியே வந்து என் தம்பியின்

தோள்களில் சாய்ந்து கொண்டு  அலசூர் நோக்கி நடக்கத் துவங்கினோம். ஒரு வழியாய் வீடு வந்ததும் சமையலறையில் என் மற்ற தம்பிகள் உணவருந்திக் கொண்டிருப்பது தெரிந்ததும் முன் அறையில் இருந்தே “ எனக்கு சாப்பாடு கீப்பாடு எதுவும் வேண்டாம் “ என்று கத்தினேன். என் தம்பிகளில் ஒருவன் மூக்கை உறிஞ்சிக் கொண்டே “ ஏதோ பிராண்டி வாசனை வருகிறதே “ என்றான். “ இனி அது ஒன்றுதான் பாக்கி “ என்று என் தாயார் சத்தம் போடுவது கேட்டும் ஏதும் தெரியாதது போல் படுக்கையில் வீழ்ந்தேன்..



அடுத்த குடித்த அனுபவம் சற்றே வித்தியாசமானது. நான் அப்போது விஜயவாடாவில் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் இருந்தேன். ஒப்பந்ததாரர் ஒருவர் எனக்கு அவர் வீட்டுக்கு வர அழைப்பு விடுத்தார். நான் அழைப்புக்குக் காரணம் கேட்டேன். வீட்டுக்கு வந்ததும் சொல்கிறேன் என்றார். மேலும் விஜயவாடாவின் பல முக்கிய புள்ளிகளை சந்திக்கலாம் என்றார். ஊர்ப்பெரிய மனிதர்களின் அறிமுகம் இருந்தால் நல்லதுதானே என்று நானும் வர சம்மதித்தேன். மாலை அங்கு போனபொழுது ஏழெட்டு பேர் இருந்தனர், ரெயில்வேயிலிருந்தும் சிலர் வந்திருந்தனர். அங்கு போய்ச் சேர்ந்ததும் அவரிடம் அழைப்புக்கான காரணம் சொல்லக் கேட்டேன். அவர் ஏதோசொல்லி சமாளிக்க முயன்றார். நான் அவரிடம் ஒரு ஒப்பந்ததாரரின் அழைப்பை ஏற்று நான் அங்கு போனது தெரியவந்தால் எனக்கு கெட்ட பெயர் வரும் என்று கூறி முறைத்தேன். அங்கிருந்தவர்கள் என்னை சமாதானப் படுத்தும் வகையில் நட்பில் இந்தமாதிரி எல்லாம் யோசிக்கக் கூடாது என்று கூறினார்கள். இரவு டின்னருக்காக ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருந்தது, நான் சைவ உணவு உட்கொள்ளுபவன் என்பதால் எனக்காக சைவ உணவு வகையறாக்களும் தயாராய் இருந்தது. அப்போது நான் குடிப் பழக்கம் இல்லாதவன் என்று கூறி குளிர்பானம் கேட்டேன். எல்லோரும் ஒருமுகமாக பீர் மிகவும் மைல்ட் ஆனது ,கெடுதல் இல்லை என்று கூறி எனக்கும் ஒரு க்ளாஸ் ஊற்றிக் கொடுத்தார்கள். டம்ப்ளரில் அது பீரா, விஸ்கியா என்று தெரிய வில்லை. நானும் குடித்து வைத்தேன். சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் சுற்றுவதுபோல் தோன்றவே பாத் ரூமை நோக்கி ஓடினேன். பின் என்ன.? ஒரே வாந்தி.என்னை ஒரு அறையில் படுக்க வைத்து ஜாம் ஜாமென்று அவர்கள் குடித்து மகிழ்ந்திருக்க வேண்டும். இரவு பனிரெண்டு மணி சுமாருக்கு என்னைக் காரில் ஏற்றி ட்ரைவரிடம் வீட்டில் சேர்க்கச் சொன்னார்கள். வீடு போய்ச் சேர்ந்ததும் என் மனைவி கதவைத் திறந்ததும் ட்ரைவர் ஓடியே போய் விட்டான். நான் வாய் குழறிக் கொண்டே தெரியாமல் குடித்து விட்டேன் என்று
மனைவியிடம் கூறினேன். என்னிடம் இதை என் மனைவி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அடுத்த நாள் தலை மிகவும் பாரமாக இருந்தது. இருந்தும் பணிக்குப் போனேன். என்னை அங்கு கண்டதும் அந்த ஒப்பந்த்ததாரர் காணாமல் மறைந்து விட்டார். அவர் இன்னொரு நண்பரிடம் பின் ஒரு நாள் என்னைக் காட்டி “ மொட்ட மொதலுஎன்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். நான் என்னை ஏதோ மொட்டைப் பயல் என்று தெலுங்கில் கூறுகிறாரோ என்று எண்ணி  அவர் சொன்னதன் அர்த்தம் கேட்டேன். அவர் அதற்கு அந்த காண்ட்ராக்டர் முதன் முதலாய் இந்த மாதிரி ஒருவரைப் பார்ப்பதாகக் கூறினாராம்.

அதன் பிறகு நான் குடித்தது ஜப்பானுக்கு விமானத்தில் க்ளப் க்ளாசில் பயணித்தபோது விமானப் பணிப் பெண் கொடுத்த பீர்தான் பிறகு ஜப்பானில் அவர்கள் கொடுத்த விருந்தின் போதும், சில ஹோட்டல்களில் உணவு அருந்தப் போகும் போதும் கொஞ்சம் பீர் மட்டும் குடிப்பது என்றாகி விட்டது. அங்கிருந்து திரும்பி வரும்போது என் மாமனாருக்காக CHIVAAZ REGAL WHISKY வாங்கி வந்தேன். என் மாமனாரால் நம்ப முடியவில்லை.
பணியிலிருந்து ஓய்வு பெற்று பெங்களூரில் செட்டில் ஆனபிறகு சில கம்பனிகளுக்கு ஆலோசகராய் இருந்தபோது சில பார்ட்டிகளில் வெறும் குளிர் பானம் மட்டும் வாங்கிக் கொண்டு குடித்தவர்கள் பேசும் உண்மை மொழிகளை ரசித்ததுண்டு. 
---------------------------------------------------------------          .