புதன், 11 டிசம்பர், 2013

அன்பெனப்படுவது.......



                               அன்பெனப்படுவது........
                                ------------------------



          அன்பெனப்படுவது யாதெனில் என்று
             எழுதத் துவங்கும் முன்பே ,முன்னே வந்து 
             நிற்கின்றன அனேக கேள்விகள் , சந்தேகங்கள்.
            அன்பே சிவம்,அன்பே  கடவுள் , அன்பே  எல்லாம்
             என்றெல்லாம்  கூறக் கேட்டாலும், அடிப்படையில்
             அன்பு  என்பதுதான்  என்ன.

அன்பு மனைவியிடம் அவளது எண்ணம் கேட்டேன்.
உடலில்,உணர்வில் ஏற்படும்  ரசாயன  மாற்றமே
உணர்ச்சிகளின்  வெளிப்பாடு, அதில்  அன்பெனப்படுவது 
உதிரம்  சம்பந்தப்படுகையில்  உயர்வாகிறது
அதுவே என் நிலைப்பாடும்  என்றாள். 
             உள்ளம்  சார்ந்த  பதில்  ஒன்றைக்  கூறிவிட்டாள். 
             அறிவு  சார்ந்த  பதிலை  நாடுதல்  தவறோ.?
தொப்புள்  கொடி  உறவு  உதிரம்  சார்ந்தது. 
ஆதலால்  ஒப்புக்  கொள்ளத்  தோன்றுகிறது. 
அந்த  உறவின்  உணர்வும்  அன்பும்  அறியப்படாமல் 
போய்  விட்டதால்  எழுகிறதோ  என் கேள்விகள்.?

   உணர்வுகள் புரிதலை  (EMPATHY)  அன்பெனக்கொள்ளலாமா?
  சார்ந்திருப்பதன்  சாராம்சமே அன்பின் விளைவா.?

           சேய்  தாயை சார்ந்திருப்பதால் அவளிடம் அன்பா.?
           பெற்ற சேயிடம்  தாய்க்கு என்ன எதிர்பார்ப்பு.
          ஆரம்பத்தில்  இல்லாதது நாள்படத் தோன்றுமோ. ?
          தாய் தந்தை மகன் மகள் கணவன் மனைவி 
          என்று எல்லோரிடமும் உணர்வுகளில் உறங்கிக்கிடக்கும் 
          எதிர்பார்ப்புகளின் மறு பெயர்தான் அன்போ.?
          எதிர்பார்ப்பில்லாத அன்பென ஒன்று உண்டா என்ன.?

கட்டிய மனைவியும்,பெற்ற  பிள்ளைகளும் 
கதறி அழும்போது வந்து விழும் வார்த்தைகள் 
எதிர்பார்ப்புகள் ஏமாற்ற மாவதைக்  காட்டுகிறதா.?
அன்பின் பிரிவால் ஏற்படும் அழுகையா, ?
அவலங்களை எதிர் நோக்கும் எண்ணங்கள் அழவைக்கிறதா?


           பாடுபட்டுக் கோடி பல விட்டுச் சென்றால் 
           பெருமையுடன் நினைப்பார்களோ.? உலகில் 
           பாடுபட விட்டுச் சென்றால் பழியேற்றுச் செல்ல வேண்டுமோ.?
           அன்புக்கும் ஒரு விலை உண்டு என்பதுதான்  உண்மையோ.?

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் ......
எண்ணிப்பார்த்தால் உண்டென்றே  தோன்றுகிறது. 

          எதிர்மறைக் கருத்துகள் இருக்கலாம் என்று 
          எண்ணும் இடமெல்லாம் கேள்விகளாக்கி  விட்டேன். 
          ஆன்றோரே சான்றோரே, உங்கள் கருத்துகள் 
          அறியக் காத்திருக்கிறேன்.. எது எப்படியாயினும் 
          முத்தாய்ப்பாக  நான் எண்ணுவது 


உழைத்துக் களைத்து உடலம் கிடத்தி உறங்கி எழுந்தால்
மறு நாளும்  உண்டு வாழ்வு, தொடரலாம் பணிகள். 
உறக்கத்தில் மூச்சு விட மறந்து எழாமல் போனால் 
என்னாகும்.?ஒன்றுமாகாது. பேரினை நீக்கி பிணமென்று கூறி
பாடையில் கிடத்தி கொண்டு போவார்கள் புதைக்கவோ எரிக்கவோ.

          இருந்தபோது  செய்ததன் விளைவு 
          பெற்றுத்தரும் விழி நீரோ, உமிழ் நீரோ. 


இல்லாமையின் வெறுமை உணரப்படலாம் சில நாட்கள். 
விட்ட குறை தொட்டகுறை எனப் பணிகள் 
விடுபட்டுப் போயிருந்தால். பல நாட்களாக அது மாறலாம். 
காலம் கடந்தபின் மிஞ்சுவதெல்லாம் சில நினைவுகள் மட்டுமே.

(அன்பு நேசம் பாசம் காதல் என்றெல்லாம் அறியப் படும் உணர்வு உண்மையில் என்ன?என்றோ எழுந்த கேள்வி பதிவாகி இருந்தது. இப்போது அதுவே மீள்பதிவாக)
 

         
 

 

திங்கள், 9 டிசம்பர், 2013

என்னென்னவோ நினைவுகள்....


                            என்னென்னவோ நினைவுகள்.
                            ------------------------------------------



எனக்கு என்னாயிற்று.?எதிலும் மனம் செலுத்த முடிவதில்லை. நினைவுகளில் இன்பமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு நேற்றைய நினைவுகள் சுகமாயிருப்பது போல் அல்லாமல் நாளைய நினைவுகள் சுமையாய் தெரிகிறதே. நாளை தினம் பற்றி நான் பொதுவாகக் கவலைப் படுவதில்லை. உடல் சோர்ந்து இருந்த போதும் மனம் சோர்ந்து இருந்ததில்லை

உள்ளம்--உடல் என்னும் இரட்டை மாட்டு வண்டி சவாரியில், மாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு தானே தவிர பிரித்துப் பார்க்க முடியவில்லை. இரண்டையும் தட்டிக் கொடுத்து பயணிக்க வேண்டியது தான்!

செய்யாத குற்றம் என்னும் பதிவுக்கு ஜீவி அவர்கள் பின்னூட்டத்தில் இவ்வாறு எழுதி இருந்தார் நினைவுக்கு வருகிறது. இருந்தாற்போல் இருந்து இரண்டு வினாடிகள் நான் எங்கோ இழுத்துச் செல்லப் படுவதுபோல் உணர்ந்தேன். திடீரென்று திமிறிக் கொண்டு சுய நினைவுக்கு வந்தபோது உடல் மிகவும் சோர்வுற்றிருந்தது. ஒரு வேளை என்னால் அப்படித் திமிறி வர முடியாமல் போயிருந்தால்....................!.

நானென்ன நசிகேதனா.? அதற்குப் பின்னால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள.?அவனை முன் வைத்து இப்புவியில் நாமெப்படி வாழ வேண்டும் என்று அறிவுறுத்த நம் முன்னோர்கள் சொல்லிப் போன உபனிஷத் கதை அல்லவா அது.? நான் மறைந்தபின் என்னாவேன் என்று எனக்கு நிச்சயம் தெரியும். .முன்பே எழுதி இருக்கிறேன். பேரினை நீக்கி பிணமென்று சொல்லி பாடையில் ஏற்றி புதைக்கவோ எரிக்கவோ செய்வார்கள். நானும் என் அப்பன் அவனுக்கப்பன் போல நினைவாக மாறி விடுவேன். இப்போது எனக்கு அது பற்றி சிந்தையில்லை. இருக்கும்போதுயாருக்கும் பாரமில்லாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?. என் உடல் நலம் பேணுவதும் நலமாய் இருப்பதும் முற்றிலும் என் கையிலா இருக்கிறது.?என்னென்னவோ எழுதத் தூண்டுகிறது. ஆனால் எண்ணங்கள்தான் கோர்வையாக வருவதில்லை. ஆகவே அன்று ஒரு முறை எழுதியதை மீள் பதிவாக்குகிறேன்.

எண்ணச் சிறகுகளில்..
------------------------------

அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.

       அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
       
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
       
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
       
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ

கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.

         அந்த நாள் அக்குயவன் கை
     
  ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
         
இந்த நாளில் ஏழையெனை
         
ஏனோ குறைகள் கூறுவரே.
         
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
         
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
         
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
         
மறந்து நீக்கிச் சென்றிடவே
         
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாய் நீயே.

எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவன் தானே நீ.?

        வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
       
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
       
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.
    என்னுயிர்ப் பறவையே,
         
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
         
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
         
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
        
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.

         மூ டிய கண்கள் விழித்து விட்டால்
    இன்னும் இன்னும் நீ  என்னில் எண்ணச் சிறகடிப்பாயே

 




வெள்ளி, 6 டிசம்பர், 2013

மறதி போற்றுவோம்


                                         மறதி போற்றுவோம்
                                         -----------------------------
(மறதி என்பது ஒரு உடற்கூறின் குறைபாடு என்று கூறுகிறார்கள்( ALZEIMER  வியாதி) ஆனால் மறதி என்பது பெரும்பாலும் வரம் என்றே தோன்றுகிறது. அதன் விளைவே இப்பதிவு)




அங்கிங்கெனாதபடி    எங்கும்    அவலங்கள்       
ஆனால்   நமக்கோ   அவை -- வெறும்    நிகழ்வுகள்   செய்திகள்
அண்டை  வீட்டுக்காரன்   மண்டையைப   போட்டால்
நமக்கென்ன  பாதிப்பு   ?
ஊரில்   உலகில்   ஆயிரம்   சாவுகள்
வெள்ளத்தால்   மழையால்    மண்சரிவால்
பூகம்பத்தால்  சுனாமியால்   கொடிய   நோய்களால்
ஒரே  நொடியில்  கோடீஸ்வரன்  ஒட்டாண்டியாகிறான்
மாடு   மனை   வாசல்   எல்லாம் துறக்கிறான்
எண்ணவே   இயலாத   அவலங்கள்
அரை   நொடியில்   மண்ணில்   நிகழ்வது  நிஜம் .
எங்கோ  குண்டு   வெடிக்கிறது
மரண ஓலங்களும்   வலியின்  வேதனைகளும்
நமக்கென்ன   தெரியும்  ? அவை வெறும் செய்திகள்தானே .
மூக்கறுந்த  பெண்ணும்      மொய்க்கும்   குழந்தைகளும்
பத்திரிகையில்   செய்திகள்  தொலைக்காட்சிப்  படங்கள்
என்ன செய்வது,எல்லாம்  தலை  எழுத்து
நாம்  என்ன செய்ய ,--ஐயோபாவம்    என்று
"
ஊச் "  கொட்டுவோம் .
இழப்பு   நமக்கு   நேர்ந்தால்  தெரியும்
 
வலியும் வேதனையும்
ஊர்  கூட்டிக் கதறி  ஒப்பாரி ஓலமிட்டு
 
காட்டுவோம்    உலகிற்கு

நமக்கு   நேரும்  இழப்பும்   வலியுமே
காலத்தின்  போக்கில்  மறக்கும்   நமக்கு
மாற்றானின்   வலியும்   வேதனையும்
வெறும்  நிகழ்வுதானே   செய்திதானே
மறப்பது   மனசுக்குள்ள  மருந்து
காலம்  நமக்கு   கொடுத்த     வரம்
எதுவும்    கடந்து   போகும்
 மறதி     போற்றுவோம்   !


 

புதன், 4 டிசம்பர், 2013

போராட்டங்கள் ஒரு அலசல்


                               போராட்டங்கள் ஒரு அலசல்
                               -----------------------------------------



காலையில்  எழுந்ததும்   பத்திரிகைகளைப்  பார்த்ததும்  தெரிவது , தொலைக்காட்சியை  இயக்கினால்  செய்திகளில்  தெரிவது , எங்கோ  எதற்கோ  யாரோ  போராட்டம்  நடத்துவதுதான் . இத்தகைய  போராட்டங்கள்  நடக்க   பல்வேறு   காரணங்கள்   இருக்கலாம். இப்போது  அந்த   காரண  காரியங்களை   ஆராய்வது அல்ல   இந்தப்  பதிவின்  நோக்கம் . போராட்டம் என்றாலே  ஏதோ   மனக்கசப்பை திருப்தியின்மையை , கையாலாகாத்தனத்தை   வெளிப்படுத்த  ஒரு   உத்தியாகும் . அது சரியா இல்லையா  என்று  ஆராய்வதும்   நம் நோக்கம்  அல்ல .
                    
வாழ்க்கையில்   உண்ண   உணவு , உடுக்க உடை , இருக்க  இடம்   என்று   மட்டும்   கிடைத்தால்   போதவில்லை . நம் வாழ்க்கையின்   நிலை    மற்றவரைவிட கீழான   நிலையில்   இருந்தால் , ஒப்பிட்டு  நோக்கி  அதிருப்தி  ஏற்படுகிறது .மற்றவர்   நிலையை விட   தாழ்ந்து   இருப்பதற்கான   காரண காரியங்கள்   ஆராயப்படுகின்றன

ஏற்ற  தாழ்வுகள்  கண்முன்னே   காரணங்களாக  விரிகின்றன
 .
                    "
நானும்  இந்த  நாட்டுக்  குடிமகன் . எனக்கும்  அவனுக்கும்  ஒரே  வயது .என்ன   வித்தியாசம்  ? நான் ஏழை , வசதியற்றவன் --அவன் பணக்காரன் ,வசதி  மிகுந்தவன் . கல்வியில்   நான்  முன்னேற  வாய்ப்புகள்   குறைவு --அவனுக்கு  அதிகம் .--நான் கிராமத்து   இளைஞன் , அவன் பட்டணத்து வசதிகளுடன்  வாழ்பவன் ---- நான் வாழ்க்கையில்   முன்னேற  தாண்ட வேண்டிய   தடங்கல்கள்   அதிகம் . அவனுக்குக் குறைவு ---எனக்கு   இரண்டு  வேளை  உணவு   கிடைப்பதே  மிகவும்   கஷ்டம் .அவன்  எல்லா வித   போஷாக்கு களுடன்  கூடிய  உணவு வகைகளில்  மிதக்கிறான் ----பசி  என்பது எனக்கு  சாதாரணமாக  நிகழ்வது . பசி என்னவென்றே  அறியாதவன்  அவன் ---- மானத்தை  மறைக்க   உடை உடுத்துவதே  எனக்கு   சாதனை    படாடோப உடை வகைகளில்  பலவற்றை   வைத்திருப்பவன்  அவன் "

                
இந்த  மாதிரி  மனசின்  அடிப்பகுதியில்   ஒருவனுக்குத் தெரியாமலேயே   ஏற்ற  தாழ்வுகள் பாதிப்பை  ஏற்ப்படுத்துகின்றன .வாழ்கையின்  மேல்நிலையில்  இருப்பவன் வசதிகளைப் பெருக்கிக்கொள்கிறான். பணக்காரன் மேலும் பெரிய  பணக்காரனாகிறான் .வாழ்க்கையின்  கீழ்நிலையில்  இருப்பவன் முன்னேறத்  துடிக்கிறான் ,.இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு  காரணம்  என்ன ?

ஒருவன்  ஏழையாகப்  பிறப்பது  அவன் தவறா ? வாழ்க்கையில்  உயர  வாய்ப்புகள்  சமமாக  இருக்கிறதா ? கீழே  உள்ளவன்  அடக்கப்பட்டு   இருப்பவனாகவும்  மேலே  உள்ளவன் அடக்குபவனாகவும்  இருப்பது சமூக  நிலையா  ?

               
காந்தி   பெரியார்   அம்பேத்கர்  போன்றவர்கள் தாழ்த்தப்  பட்டவர்களுக்கும்   ஒடுக்கப் பட்டவர்களுக்கும்  குரல்  கொடுத்து ஓரளவு விழிப்புணர்வை  ஏற்ப்படுத்தினார்கள் . விழிப்புணர்வின் அடிப்படையில்   வாய்ப்புகள்  வேண்டி போராட  வேண்டும்  என்ற நிலை  உருவானது .இத்தகைய  போராட்டங்களை  நடத்தி செல்ல வேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா  என்ற கேள்வி  எழும்போது   பதில் வல்லவர்களாக  இருக்கிறார்கள்  என்பதுதான் நிதர்சனம் . தலைவர்கள்  வசதிகளுடனும்   வாய்ப்புகளுடனும்  முன்னேறுகிறார்கள்

              
தலைவர்களுக்கு  தெரியும்  எங்கே  தட்டினால் பலன்  கிடைக்கும் , எந்த நிலை  நீடித்தால்  தாங்கள்  மேலும் முன்னேறலாம்  என்று ..இனம் மொழி மதம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் அவலங்களை வெளிச்சம்   போட்டுக் காட்டி  அதன்  மூலம் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு  வழி வகுத்துக்கொள்கிறார்கள் .இதனால் ஏற்பட்டிருக்கும்  ஏற்ற தாழ்வுகள்  குறைவதில்  அவர்களுக்கு  லாபம்  இல்லை .STATUS  QUO  தொடர வேண்டும் .ஆனால் , மக்களுக்காக அவர்கள் சேவை  செய்வது போன்ற மாயத் தோற்றம்  தொடரவேண்டும்
 .
            
சாதி  அடிப்படையில்  ஒதுக்கீடு  கேட்டுப் போராடுபவர்கள் , சாதிகள் மறைய என்ன செய்கிறார்கள் ? சாதிகள் மேலும் மேலும் வலுவடைந்து அவை சமூகத்தின் மறையாத அங்கங்களாக மாறிவிடும் அபாயம்தான்  தோன்றுகிறது .

             கல்வியறிவும்   வாழ்க்கையின்  தரமும்  உயரும்போது சாதிகள் தானாகவே  மறையும் .ஏதோ ஒரு அடிப்படையில் வாழ்க்கையில் சலுகைகளைப் பெற்றவன்  மேலும் மேலும் அதேஅடிப்படையில் மேலும் சலுகைகள் பெறுவது தடுக்கப்படவேண்டும் வாழ்க்கையில் ஓரளவு உயர்ந்தவர்கள் மற்றவர்களுக்கு  ஒதுங்கி வழி விடவேண்டும்.ஆனால் நடைமுறையோவேறு விதமாக உள்ளது
வாழ்க்கைச் சக்கரம்  உருண்டு கொண்டுதான் இருக்கிறது .ஆதி  காலத்தில் சமூகத்தை  நான்கு  வர்ணங்களாகப் பிரித்து  அவரவர்களுக்கு  இன்ன  வேலை என்று பகுத்தளிக்கப்பட்டு  இருதது.----- க்ஷத்ரியர்கள்  பிராமணர்கள்  வைசியர்கள்  சூத்திரர்கள் ---மனித குணம்  எப்போதுமே மற்றவனை  அடககியாளத்துடிக்கும்.. இந்த நிலையில் முதலில்  க்ஷத்ரியர்கள் (அரசர்கள் ) எல்லோரைவிடவும்   சக்தி  உள்ளவர்களாகவும் மற்றோரை அடக்கி ஆள்பவர்களாகவும்  இருந்தனர் .காலப்போக்கில் பிராமணர்கள்( மதகுருக்கள் ) அரசர்களுக்கே அறிவுரை சொல்லி அதன் மூலம்மிகுந்த சக்தி பெற்று விளங்கினர் பிற்காலத்தில் வைசியர்கள் எனப்படும் வணிகர்கள் (CAPITALISTS) கைஒங்கி எல்லாச்சக்தியும் வல்லமையும் கொண்டு வாழ்ந்தார்கள். இன்னும் வாழ்ந்துகொண்டும்  இருக்கிறார்கள் வாழ்க்கையின்  சுழற்சியில்  எஞ்சி நிற்பவன் சூத்திரனே அவனுக்குள்ள  வாய்ப்பும் கிடைக்கத்தானே  வேண்டும் ! ஒடுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்  சாதியின் அடிப்படையில்  மட்டுமல்ல  வாய்ப்பின் அடிப்படையிலும் சூத்திரர்களே . வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சியில்  அவர்கள் மேலே வரும்  காலம்தான்  நிகழப்போவது ,

             போராட்டங்களின்  முடிவு  ஒரு நல்ல தீர்வுக்கு  மக்களை  கொண்டு போகுமானால்  அது வரவேற்கத்தக்கதே . போராடுபவர்கள்  எதற்கு  போராடுகிறோம்   யாருக்காகப் போராடுகிறோம் என்று அறிந்து    மந்தை குணம் நீக்கி   சிந்திக்க  தொடங்குவார்கள்  என்று நம்புவோம் .

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

இரண்டு கொலை வழக்குகள்

         
                         இரண்டு கொலை வழக்குகள்
                        ------------------------------------------



பொதுவாக என்பதிவுகளில் பரபரப்பான செய்திகளையோ, திரைப்படங்கள் மற்றும் அரசியல் பற்றியொ எழுதுவதில்லை. ஆனால் அண்மையில் இரண்டு கொலை வழக்குகளின் தீர்ப்பு பற்றி பதிவர்களின் கருத்தறிய இப்பதிவினை எழுதுகிறேன். ஒரு 14 வயதுச் சிறுமியும்  அவர்கள் வீட்டில் பணியில் இருந்த ஒரு வாலிபரும் கொல்லப் பட்டு பல ஆண்டுகளாக நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்த கொலை வழக்கில் அச்சிறுமியின் பெற்றோர்கள் , (இருவரும் பல் மருத்துவர்கள்) குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறார்கள். நேரில் பார்த்த சாட்சிகளோ, எந்த சந்தேகத்துக்கும் இடமளிக்காத உறுதியான சாட்சியங்களோ இல்லாத நிலையிலும் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறது தீர்ப்பினைக் குறைசொல்லியும் ஆதரித்தும் கருத்துக்கள் பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் வந்த வண்ணம் இருக்கின்றன. கொலைக்கான காரணமாகப் பேசப்படுவதுஅந்தச் சிறுமிக்கும் அவர்கள் வீட்டில் பணியில் இருந்த வனுக்கும் இருந்த தகாத தொடர்பு கண்டு பிடிக்கப் பட்டு நடந்த ஒரு “கௌரவக் கொலை என்பதாகும் .கூடவே இருந்திருக்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் தொடர்பு தெரியக்கூட முடியாத படி நடத்திய வாழ்க்கையையா இல்லை தலைமுறை இடைவெளி காரணமாக புரிதல் போதாத காரணமா, எதுவாயிருந்தாலும் வருத்தம் அளிக்கிறது. பெற்று சீராட்டி வளர்த்த ஒரே பெண்ணைக் கொலை செய்யும் அளவுக்கு தகுதி அந்தஸ்து போன்றவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் வந்த விளைவா.?.மறுக்க முடியாத சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப் பட்டிருப்பதாகச் சொல்லப் படுகிறது குற்றவாளிகள் தப்பித்தாலும் நிரபராதிகள் தண்டிக்கப் படக் கூடாது என்னும் நீதியின் கொள்கை இருந்தும் பெற்றோர்களே தண்டனைக்குள்ளாகின்றனர் என்றால் .......நீதி தேவதைக்கு பாரபட்சம் கிடையாது என்று நிலைநாட்டப் படுகிறதா.?

ஆனால் இன்னொரு கொலை வழக்கில் சட்சியங்கள் பிறழ்ந்து விட்டனர் என்னும் காரணத்தால் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே விடுதலை ஆகி விட்டார்கள்.. ஒருவர் மீது குற்றம் சாட்டும்போது அவர்களுக்கெதிராக தடயங்களும் சாட்சிகளும் இருக்கின்றனர் என்றுதானே பொருள்.? காவல் துறையினர் யாரையாவது கைது செய்து குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால் என்ன தெரிகிறது.? ஏதாவது முன் விரோதமா....?, இல்லையென்று சொல்வதானால் குற்றம் சாட்டப் பட்டவர்கள் எதற்கு வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்றக் கோரி மனு செய்து அதற்கு ஒப்புதல் பெறுவதும் நடக்கிறது. குற்றம் சாட்டப் பட்டவரில் ஒருவர் கொலையுண்டு சாவதும் , இன்னொருவர் அப்ரூவராக மாறி வழக்கின் போது பிற்ழ்சாட்சியம் கூறுவதும் திரை மறைவில் என்னென்னவோ நடக்கிறது என்பதை உறுதி செய்கிறது. கொலை நடந்த சில நாட்களில் சிலர் குற்றத்தைச் செய்ததாகக் கூறி சரண்டர் ஆவதும் பின் அந்த நேரத்தில் அவர்கள் அங்கே இருக்கவில்லை என்று தெரியவருவதும் , கொலையுண்டவரின் உறவுகளே சாட்சியளிக்கத்  தடுமாறுவதும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாதபடி இருக்கிறது. பட்டப் பகலில் கோவில் வளாகத்தில் ஒருவர் படுகொலை செய்யப் படுகிறார். கொலைக்கான காரணம் என்ன.?கொலையாளிகள் கூலிப் படையினரா.....அப்படியானால் ஏவியது யார் ... என்றெல்லாம் கண்டுபிடிக்கப் படாமலேயே போய் விடுமானால் மக்களுக்கு குற்றவியல் நீதியில் நம்பிக்கை குறைந்து விடும்.