A MARRIAGE WITH A DIFFERENCE.
-------------------------------------------
வெகுநாட்களாகவே திருமணம் வேண்டாம் என்று சொல்லி வந்த பெண்,- நண்பரின் உறவினர்- கல்யாணத்துக்கு அழைப்பு இருந்தது. டிசம்பர் 26-ம் நாள் காலை 11 மணிக்கு மைசூர் செல்லும் சதாப்தியில் பயணம். மதியம் ஒரு மணிக்கு மைசூர் சேர்ந்தோம். ரயில் நிலையத்துக்கே வந்து எங்களை அழைத்துச் சென்றார்கள். நேரே டைனிங் ஹால்-விருந்து- முடிந்ததும் எங்களுக்காக புக் செய்யப்பட்டிருந்த ஹோட்டல் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். திருமண சம்பந்த நிகழ்ச்சிகள் மாலை ஆறு மணி அளவில் துவங்கும் என்றும் அதுவரை ஓய்வெடுக்கலாம் என்றும் கூறினார்கள்.சற்று ஓய்வுக்குப் பிறகு என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி தத்தாத்த்ரேயர் கோவிலுக்குச் சென்று வந்தோம்.
திருமணத்துக்கு வந்திருந்தவர்களை நோட்டம் விட்ட போது , இந்தத் திருமணம் –it is going to be different –என்று தோன்றியது. பூர்வீகம் கேரளாவிலிருந்து மைசூர் வந்து செட்டில் ஆன தமிழ்க் குடும்பம். கல்யாணப் பத்திரிக்கையே ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் இருந்தது. பத்திரிக்கை பழைய மோஸ்தரில் மஞ்சள் ரோஜா வண்ணத்தில் சமயத் தலைவர்களின் ஆசியுடன் என்று இருந்தது..
மாப்பிள்ளை அழைப்பு , ஜானவாசம் போன்றவை இல்லாமல் அவர்களின் முன்னோர் காலத்தில் இருந்தபடி திருமணத்துக்கு முதல் நாள் மாலையில், 20 .30. வேதவிற்பன்னர்களின் வேத கோஷங்களுடன் தொடங்கியது. சுமார் ஒன்றரை மணிநெரம் நான்கு வேதங்களையும் கோஷித்தார்கள். சற்றே வித்தியாசமான ஒலியுடன் கூடியதை சாமவேதம் என்று அடையாளப் படுத்த முடிந்தது. வேத கோஷங்களொலித்துக் கொண்டிருந்த போது தத்தாத்ரேயர் கோவில் தரிசனம் முடித்து நாங்கள் வந்து சேர்ந்தோம். அதன் பிறகு பிராம்மண சமூக வழக்கப் படி நிச்சயதார்த்தம் ( என்று நினைக்கிறேன் ) நடந்தது.அதன் பின் விருந்து.
மறுநாள் காலை முஹூர்த்தம். காசியாத்திரை , மாலை மாற்றல், ஊஞ்சல் எல்லாம் கிரமப்படி(?) நடந்தது, மணப்பெண்ணையும் மணமகனையும் தோளில் சுமந்து மாலை மாற்றச் செய்தார்கள்...! ஊஞ்சலின் போது கல்யாண வைபோகமே என்று பாட்டெல்லாம் பாடினார்கள். திருஷ்டி சுற்றும்போது எல்லாதிசைகளிலும் போடும் அன்ன உருண்டைகள் சுற்றி இருப்பவர்களைக் கவனிக்காமல் போடப் பட்டன. நல்ல வேளை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்தத் திருமணத்தின் போது சில நல்ல விஷயங்கள் அனுஷ்டிக்கப் பட்டன. மணமெடையில் நெருங்கிய உறவினர்களே இருந்தனர். மேடை சற்று உயரமாக இருந்தது. வந்திருந்தவர்கள் அமர நாற்காலிகள் போடப் பட்டிருந்தது. மண நிகழ்ச்சிகளை இருந்த இடத்திலிருந்தே காண்முடிந்தது. திருமாங்கல்யம் வந்திருந்தோரின் ஆசிர்வாதத்துக்காக சுற்று வரப்பட்டபோதே ஆசிர்வாத அட்சதைகளும் வினியோகிக்கப் பட்டது. மாங்கல்யதாரணம் நடக்கும் போது அட்சதையை வீசித் தூவாமல் இருக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். மணமக்களை வாழ்த்தி கொடுக்கப் பட்ட அட்சதையைப் பெற்றுக் கொள்ள வேறு சிலர் வந்தனர். இந்த அட்சதைகளை யாரும் மேடைக்கருகே வராமலேயே மணமக்கள் மேல் தூவ ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மேடையில் நின்று ஒருவர் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்டுக் கொண்டிருந்தார். மணமகனுக்கு அவரது வருங்கால மாமனார் பாத பூசை செய்ததை ஆங்கிலத்தில் விளக்கியவர், ”வயதில் பெரியவர் ஒரு இளைஞனுக்கு பாத பூசை செய்வது சரியா என்று தோன்றலாம். திருமண விரதம் இருக்கும் வரனும் வதுவும் பரமேஸ்வரன் –பார்வதிக்குச் சமம் “ என்றொரு விளக்கம் கொடுத்தார்,! அதே போல் மாங்கல்யதாரணம் முடிந்த உடனே வாழ்த்துச் சொல்ல மேடைக்கு வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தார். சப்தபதி சடங்கு முடிந்தபிறகே வாழ்த்துச் சொல்லவும் கை கொடுக்கவும் அனுமதி என்றார். ஆக சாதாரணமாகக் காணப்படும் தல்லுமுல்லுகள் தவிர்க்கப் பட்டன,. திருமணம் இனிதே முடிந்தது.
இதில் பதிவிட என்ன இருக்கிறது என்று கேட்கத் தோன்றலாம் இந்தத் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்களில் பலரும் inter-caste inter-religion, inter-state inter-language மற்றும் inter-national திருமணங்கள் செய்து கொண்டவர்கள்போல் தோன்றிையது.ஊஞ்சலின் போது திருஷ்டி சுற்றி அன்ன உருண்டைகள் போட்டவரில் அயல் நாட்டினரும் இருந்தது added a colour to the ceremony. நான் சென்றிருக்கும் திருமணங்களில் ஹிந்து ஆங்கிலேயத் திருமணம் ஆர்ய சமாஜ் நடத்திவைக்கக் கண்டிருக்கிறேன். சாதி மாறிய திருமணங்களும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரே குடும்பத்தில் இத்தனை வேறுபாடுகளையும் உள்ளடக்கிய உறவினர்கள் கலந்து கொண்ட திருமணம் பார்ப்பது இதுவே முதல் தடவை. அதுவும் சம்பிரதாயங்கள் அதிகம் மாற்றப்படாமல் நடந்த திருமணம் என்று நினைக்கிறேன் A MARRIAGE WITH A DIFFERENCE.!
திருமணம் முடிந்த கையோடு வெற்றிலை பாக்கு தேங்காய் முதலியவற்றை காகிதப் பைகளில் போட்டுக் கொடுத்தனர். இந்தக் காகிதப் பைகள் ASSOCIATION FOR THE WELFARE OF THE MENTALLY DISABLED ( AWMD ) மூலம் செய்விக்கப் பட்டவை. இந்த சமூக அக்கறை போற்றத்தக்கது. இதல்லாமல் சிறிய கைவினைப் பொருட்களும் வினியோகிக்கப்பட்டது.
முதல் பந்தியில் உணவு உட்கொண்டு மதியம் மைசூரில் இருந்து புறப்படும் சதாப்தி ரயிலில் பெங்களூர் வந்தோம்.









