ஞாயிறு, 5 அக்டோபர், 2014

கீதைப் பதிவு -அத்தியாயம் 10


                                          கீதைப் பதிவு அத்தியாயம் 10
                                          ---------------------------------------

அண்மையில் கோகுலாஷ்டமி போது கண்ட குட்டிக் கிருஷ்ணன்



விபூதி யோகம்
ஸ்ரீபகவான் சொன்னது.
பாகுபலசாலீ,மேலாம் எம்மொழியை மீண்டும் கேளாய்;கேள்வியில் உவகையுடைய உனது நலம் கருதி அதை நான் நவிலுகிறேன்.(1)
வானவர் கூட்டங்களும் மாமுனிவரும் என் உற்பத்தியை உணரார். ஏனென்றால் வானவர்க்கும் மாமுனிவர்க்கும் முற்றிலும் முதற்காரணம் நானே(2)
ஆதி இல்லாதவன் என்றும், பிறவாதவன் என்றும், உலகுக்குத் தலைவன் என்றுமென்னை அறிகிறவன் மானிடருள் மயக்கமில்லாதவன். அவன் பாபங்கள் அனைத்தில் இருந்தும்  விடுபடுகிறான்.(3)

புத்தி ஞானம் மயக்கமின்மை, பொறுமை, சத்தியம்,அடக்கம், அமைதி, இன்பம் துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சாமை, அஹிம்சை, மன நடுவு,திருப்தி .தபசு, தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி, ஆகிய பலவித பாங்குகள்,உயிர்களுக்கு என்னிடத்திருந்தே உண்டாகின்றன.(4,5)
மஹரிஷிகள் எழுவரும், முன்னை மனுக்கள் நால்வரும் என் ப்ரபாவத்தோடு என் மனதில் உதித்தார்கள்.உலகில் உயிர்கள் யாவும் அவர்களிடத்து இருந்து வந்தவைகள்.(6)( ஏழு ரிஷிகள்= பிருகு, மரீசி, அத்ரி, புலகர், அங்கிரஸ், கிரது, புலஸ்தியர்.நான்கு மனுக்கள்=சுவாரோசிஷர், சுவாயம்புவர், ரைவதர், உத்தமர்)
எனது விபூதிகளையும் யோகத்தையும் உள்ளபடி அறிகிறவன் அசையாத யோகத்தைச் சார்ந்திடுவான். இதில் சந்தேகமில்லை.(7) (விபூதிகள்= விரிவுகள்.)
நான் அனைத்திற்கும் பிறப்பிடம் யாவும் என்னிடத்திருந்தே விரிகின்றன. இதை அறியும் ஞானிகள் என்னை அன்புடன் வழுத்துகின்றனர்.(8)
சித்தத்தை என்பால் வைத்து, உயிரை எனக்குரியதாக்கி, ஒருவர்க்கொருவர் என்னை விளக்கிக் கொண்டும், யாண்டும் என்னைப் புகழ்ந்து பேசியும் , மன நிறைவை யடைந்தும் மகிழ்வடைந்தும் இருக்கின்றனர்.(9)
என்றும் யோக முயற்சியோடு அன்புடன் என்னை வழுத்துபவர்களுக்கு புத்தி யோகம் வழங்குகிறேன். அதனால் அவர்கள் என்னை அடைகிறார்கள்(10)

நான் அவர்களுக்கு அருளால் இரங்கி, அந்தக் கரணத்தில் வீற்றிருந்து, மெய்ஞானச் சுடர் விளக்கால் அக்ஞானத்துதித்த ஆரிருளை அகற்றி விடுகிறேன்(11)
அர்ஜுனன் சொன்னது
மேலாம் பிரம்மம், உயர்ந்த இருப்பிடம், ஒப்பற்ற புனிதம் தாம் ஆவீர்.எல்லா ரிஷிகளும், தேவரிஷி நாரதரும், அப்படியே அஸிதர்,தேவலர் வியாசர், ஆகியவரும் உம்மை நித்தியமானவன், திவ்ய புருஷன், ஆதி தேவன், பிறவாதவன், எங்கும் நிறை பொருள் என்று இயம்புகின்றனர். தாமும் அப்படியே பகர்கின்றீர்,(12,13)
கேசவா, நீர் எனக்கு ஓதுவது யாவும் உண்மை என்றெண்ணுகிறேன்.பகவானே உமது தோற்றத்தைத் தேவர்களும் அறியார், தானவர்களும் அறியார்,(!4)
புருஷோத்தமா, உயிர்களைப் படைத்தவா, உயிகளுக்கு இறைவா, தேவ தேவா, அண்ட நாயகனே, உம்மை உம்மால் நீரே உள்ளபடி அறிவீர்(15)
எந்த விபூதிகளைக் கொண்டு இவ்வுலகங்களை நிரப்பி உள்ளீரோ, மேலாம் அவ்விபூதிகளை மிச்சமின்றி நீரே வர்ணித்தருள்க.(16)

யோகீ, யாண்டும் உம்மையே சிந்தித்து நான் உம்மை அறிவது எப்படி? பகவானே என்னென்ன பாங்குகளில் நீர் என்னால் சிந்திக்கத் தக்கவர்,?(17)
ஜனார்த்தனா, உமது யோகத்தையும், விபூதியையும், மீண்டும் விரித்து விளக்குவீராக. ஏனென்றால் உமது அமுத மொழி எனக்குத் தெவிட்ட வில்லை.(18)
ஸ்ரீ பகவான் சொன்னது
நல்லது, குருகுலப் பேராளா, என் மேலாம் மஹிமைகளில் முக்கியமானவைகளை உனக்கு மொழிகிறேன்.ஏனெனில் என் விபூதியின் விஸ்தரிப்புக்கு ஒரு முடிவில்லை.(19)
விழிப்புடையோய், எல்லா உயிர்களின் உள்ளத்து உறையும் ஆத்மா நானே.உயிர்களின் ஆதியும் இடையும் இறுதியும் நானே(20)
ஆதித்தியர்களுள் நான் விஷ்ணு. ஒளிர்பவைகளுள் கதிர் நிறைந்த ஞாயிறு நான். மருத்துக்களுள் மரீசி, நட்சத்திரங்களுள் சந்திரன்.(21)
வேதங்களுள் நான் ஸாமவேதம், தேவர்களுள் இந்திரன், இந்திரியங்களுள் மனதும், உயிர்களில் உணர்வும் நானே.(22)
ருத்திரர்களுள் சங்கரனாகவும், யக்ஷரக்ஷசர்களுள் குபேரனாகவும், வஸுக்களுள் அக்னியாகவும், மலைகளுள் மேரு மலையாகவும் நான் இருக்கிறேன்,(23)
பார்த்தா, புரோகிதர்களுள் முக்கியமான பிருகஸ்பதி நான் என்று அறிக. சேனைத்தலைவர்களுள் நான் முருகக்கடவுள்.நீர்நிலைகளுள் நான் கடல்(24)
மஹரிஷிகளுள் நான் பிருகு, வாக்குகளுள் ஓரெழுத்தாகிய பிரணவம் நான், யக்ஞங்களுள் நான் ஜப யக்ஞம். ஸ்தாவரங்களுள் நான் ஹிமாலயம்.(25)
மரங்கள் எல்லாவற்றினுள் நான் அரச மரம், தேவரிஷிகளுள் நான் நாரதர், கந்தர்வர்களுள் சித்திரரதன், சித்தர்களுள் நான் கபில முனி. (26)
குதிரைகளுள் அமிர்தத்துடன் உண்டான உச்சைசிரவஸ் என்றும், யானைகளுள் ஐராவதம் என்றும், மக்களுள் வேந்தன் என்றும் என்னை அறிக,(27)
ஆயுதங்களுள் நான் வஜ்ராயுதம், பசுக்களுள் காமதேனு, பிறப்பிப்பவர்களிடத்து நான் மன்மதன், பாம்புகளுள் நான் வாசுகியாக இருக்கிறேன்.(28)
நாகங்களுள் நான் அனந்தன், ஜலதேவதைகளுள் நான் வருணன்,பித்ருக்களுள் நான் அரியமான், அடக்கி ஆள்பவர்களுள் நான் யமன் ஆவேன்,(29)
தைத்தியர்களுள் (கச்யபருக்கு மனைவியான திதி மூலம் பிறந்த மக்கள்)  நான் பிரஹலாதன், கணிப்பவர்களுள் காலம்,விலங்குகளுள் சிம்மம், பறவைகளுள் கருடன் ஆகவும் நான் இருக்கிறேன்,(30)
தூய்மைப் படுத்துபவைகளுள் காற்றாகவும், ஆயுதம் பிடித்தவர்களுள் ராமனாகவும், மீன்களுள் மகரமாகவும் நதிகளுள் கங்கையாகவும் நான் இருக்கிறேன்.(31)
அர்ஜுனா, சிருஷ்டிப் பொருள்களுக்கு நான் ஆதி நடு அந்தமாகிறேன். வித்தைகளுள் நான் ஆத்ம வித்தை,தர்க்கிப்பவர்கள் பால் நான் வாதமாகிறேன்(32)
எழுத்துகளுள் நான் அகரம், கூட்டுச் சொற்களுள் இரு சொற்கூட்டு, ஓயாத காலம் நானே, எங்கும் பரந்திருந்து வினைப்பயனை வழங்குபவன் நானே.(33)
அனைத்தையும் அழிக்கும் மரணம் நான், செல்வந்தர்களின் வளர்ச் செல்வம் நான், பெண்மைகளுள் நான் புகழ். திரு, சொல், நினைவு, அறிவு, திண்மை, பொறையாக இருக்கிறேன்.(34)
மேலும் நான் ஸாம கானங்களில் பிருஹத் ஸாமம், சந்தங்களில் காயத்ரீ, மாஸங்களில் மார்கழி, பருவங்களில் வஸந்த காலம் நான்.(35)
வஞ்சகர்களுடைய சூதாட்டம் நான், தேஜஸ்விகளுடைய தேஜஸ் நான், வெற்றியாகவும் முயற்சியாகவும், சாத்விகர்களுடையசத்துவ குணமாகவும் நான் இருக்கிறேன்.(36)
விருஷ்ணிகளுள் நான் வாசுதேவன், பாண்டவர்களுள் தனஞ்செயன், முனிகளுள் வியாசர், கவிகளுள் நான் சுக்கிறன்.(37)
தண்டிப்பவர்கள்பால் நான் செங்கோல், வெற்றி வேண்டுபவரிடத்து நான் நீதி, ரகசியங்களுள் நான் மௌனம், ஞானிகளுடைய ஞானமும் நானே.(38)
அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் வித்து எதுவோஅது நான். என்னையன்றி ஜங்கம ஸ்தாவரங்களில் வாழ்வது ஒன்றுமில்லை.(39)
எதிரியை வாட்டுபவனே, என் திவ்ய விபூதிகளுக்கு முடிவில்லை.என் விபூதி விரிவுகளில் ஒரு சிறிது என்னால் இயம்பப் பட்டது(40)
மஹிமையுமழகும் வலிவும் உடையது எது எதுவோ அதெல்லாம் என் பிரபையின் ஒரு பகுதியில் உண்டானது என்று அறிக.(41)
அர்ஜுனா, இதைப் பலவிதமாகப் பகுத்தறிவதால் உனக்கு ஆவதென்ன.?எனது ஓர் அமசத்தால் உலகு அனைத்தையும் தாங்கி இருக்கிறேன்.(42)
                 விபூதி யோகம் நிறைவு.    .    .           



    .
 

 
 
  

வெள்ளி, 3 அக்டோபர், 2014

சில நேரங்கள் -பேரனுடன்


                             சில நேரங்கள்-பேரனுடன்
                            ----------------------------------------
                      ( அல்லது பேரப் பிரலாபங்கள் OR பிரதாபங்கள் ..?)

எங்களுக்குஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. இளைய மகனின் மகன் ,வயது 9, பள்ளியில் விளையாடும் போது அடிபட்டு கீழ் உதட்டில் மூன்று நான்கு தையல்கள் போட வெண்டி இருந்ததாகச் செய்தி.மகன் வேலைக்குப் போகவேண்டும் . மறுமகளுக்கும் பள்ளிப்பணி. பேத்தி கல்லூரிபோக வேண்டும்  இவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் , ஓய்வில் இருக்கட்டும் என்பது மருத்துவர் உத்தரவு. பிள்ளையைத் தனியே வீட்டில் விட்டுப் போக முடியுமா.? நாங்கள் எதற்கு இருக்கிறோம்?. அங்கே ஆஜரானோம். என் பேரனுடன் நேரம் செலவிட இது ஒரு வாய்ப்பு. ஆனால்.... எனக்கு கை ஒடிந்ததுபோல் இருக்கும். அங்கே கணினி என் உபயோகத்துக்கு இல்லை.எப்போது நாங்கள் அங்கு சென்றாலும் அவனுடைய அறையில்தான் தங்குவோம். இந்த முறை போனபோது அறையின் கதவில் இருந்த வாசகம் என்னைக் கவர்ந்தது. அவனுக்கான ஒரு உலகில் அவன் இருக்கும்போது தொந்தரவு செய்யப் படுவதை அவன் விரும்புவதில்லை என்று புரிந்தது. நீங்களே பாருங்கள் அந்த வாசகங்களை  code என்பது பாஸ்வேர்ட். சொன்னால்தான் அனுமதி . அது அவன் விருப்பம் போல் மாறும் நான் போயிருந்தபோது NINJAஎன்பதே கோட்



என்னதான் காயம் பட்டிருந்தாலும் அது அவனது spirit ஐக் குறைக்கவில்லை. அவன் ஓடுவதும் ஆடுவதும் காணும்போது நம் வயிற்றில் புளியைக் கரைத்ததுபோல் இருக்கும்.
அவனை ஓர் இடத்தில் இருத்தி வைக்க அவனுக்கு ஏதாவது இதிகாசக் கதை சொல்ல ஆரம்பித்தால் ‘ அது எனக்குத் தெரியும் ‘ என்பான். தொலைக்காட்சியில் பல விதமாகக் காட்டப்படும் காட்சிகள் நிறையவே பார்த்திருப்பான் போல். அது அப்படி அல்ல என்று திருத்தப் போனால் நம்ப மாட்டான். தொலைக் காட்சிகளில் காண்பதில் அவ்வளவு நம்பிக்கை.

இவனே சிறிய பையன். இவனுக்கு இன்னும் சிறிய குழந்தையாக நடிப்பதில் உற்சாகம் அதிகம். குழந்தைக் குரலில் பேசியதைப் பதிவாக்கி இருக்கிறேன் கேளுங்களேன்




கணினி இல்லாமல் கை ஒடிந்ததுபோல் இருப்பதைஒரு முறை “இந்த வீட்டில் ஒன்றுமே இல்லை. மிகவும் bore ஆக இருக்கிறது என்றேன். அப்போது அவன் சொன்னது எனக்கு ஒரு பாடம் போல் இருந்தது
“அப்பா, இந்த வீட்டில் ஒன்றும் இல்லை என்று சொல்லாதீர்கள். உங்கள் லுங்கியில் மஞ்சள் நிறம் இல்லை யென்றால் எந்த நிறமுமில்லை என்றாகி விடுமா.?மஞ்சள் நிறம் இல்லை என்று சொல்லுங்கள். அதேபோல் உங்களுக்கு கம்ப்யூட்டர் இல்லை என்றால் கம்ப்யூட்டர் இல்லை என்று சொல்லுங்கள். அது எப்படி ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம்என்று ஒரு பிடி பிடித்தான். நான் அவனை வாரியெடுத்து உன்னில் என் ஜீன்கள் ஓடுகின்றதடா என்று உச்சி  முகர்ந்தேன். மிகச் சாதாரணமாக அருமையான கருத்தை கூறிச் சென்றான்.

அவனுடைய அறைக்குச் சென்று அவன்விளையாட்டைக் காண வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் அவனுக்குத் தனிமையில் ஆடுவது பிடித்த விஷயம் அவன் விளையாட்டுப் பொம்மைகளை வீடியோ எடுக்க அவனது அனுமதி கிடைத்துப் படமெடுத்தேன்.வீடியோவின் சைஸ் பெரியதாயிருப்பதால் பதிவில் அப்லொட் ஆக மாட்டேன் என்கிறதுவிலங்குகளைப் பற்றி அவன் எனக்கு ஒரு பாடமே எடுத்துவிட்டான் ஆஃப்ரிக்க சிங்கம் ஏஷியாடிக் சிங்கம் எக்ஸ்டிங்ட் ஆன டைனோசரஸ் பற்றியெல்லாம் தெளிவாகக் கூறினான் ஆஸ்திரேலியாவில் வாழும் மீனினம் ப்ளாடிபஸ் மட்டுமே முட்டையிடும் மம்மல் என்றான் அவனோடு எடுத்த நேர்காணல் காணொளி பதிவில் ஏறாதது ஏமாற்ற மளிக்கிறது    
எல்லா வீட்டுக் குழந்தைகளுமதிபுத்திசாலிகள் என்று தெரிந்தாலும் ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே
தாத்தாவின்  தோளில்( இரு வருடங்களுக்கு முந்தையபடம் 
கிரிக்கட் பயிற்சிக்குப் போகிறான்
அக்காவுடன் 
இளைய மகன் குடும்பத்துடன் புது மனை புகு விழாவன்று(29-09-2014)
( கனமான  பதிவுகளுக்கிடையே  ஒரு லைட்டான பதிவு )
இந்தப் பதிவை எழுதி முடித்ததும் இன்று காந்தியின் பிறந்தநாள் என்னும் நினைவு வந்தது. காந்தியைப் பற்றி எழுதலாம் என்றால் நேரம் போதாது, இருந்தாலும் சென்ற ஆண்டு எழுதிய பதிவை ப் பார்க்க இங்கே சொடுக்கவும்

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

கீதைப் பதிவு அத்தியாயம் -9


                                    கீதைப்பதிவு  அத்தியாயம் -9
                                    ---------------------------------------

                                             

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
ஸ்ரீ பகவான் சொன்னது
எதை அறிந்து அசுபத்திலிருந்து விடுபடுவாயோ, அனுபவத்தோடு கூடிய அந்த ஆழ்ந்த ஞானத்தைப் பொறாமைப்படாத உனக்கு நன்கு எடுத்துரைக்கிறேன்.(1)
இந்த ஞானம் வித்தைகளுள் வேந்து;. மறைபொருளுள் மேலானது.;தூய்மை தருதலில் சிறந்தது.;கண்கூடாக உணர்தற்குரியது.;தர்மத்தோடு கூடியது.; செய்தற்கு மிக எளியது.; அழிவற்றது.(2)
எதிரிகளை எரிப்பவனே, இந்த தர்மத்தில் சிரத்தை இல்லாதவர்கள் என்னை அடையாது மரண சம்சார மார்க்கத்தில் உழல்கின்றனர்.(3)
அவ்யக்த மூர்த்தியாகிய என்னால் ஜகத் யாவும் வியாபிக்கப் பட்டிருக்கிறது.பூதங்கள் என்னிடத்து இருக்கின்றன. ஆனால் நான் அவைகளிடத்தில்லை.(4)
பூதங்கள்  ( உண்மையில் ) என்னிடத்து நிற்பவைகளல்ல.என்னுடைய ஈசுவர மகிமையைப் பார்.! பூதகணங்களை ஆக்கவும் காக்கவும் செய்கிற என் சொரூபம் அவைகளிடத்தும் இல்லை.(5)
எப்பொழுதும் எங்கும் சஞ்சரிக்கின்ற பெருங் காற்று வானத்தில் நிலை பெற்றிருப்பது போன்று பூதங்கள் எல்லாம் என்னிடத்து இருக்கின்றன என்று தெரிந்து கொள்,(6)
குந்தியின் புதல்வா, பூதங்களெல்லாம் கற்ப முடிவில் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் கற்ப துவக்கத்தில் நான் அவைகளை தோற்றுவிக்கிறேன்.(7)
என் பிரகிருதியை அருளுடையதாகச் செய்து, சுதந்திரமில்லாது அப்பிரகிருதியின் வசமாயிருக்கும் இவ்வுயிர்த்திரள்  யாவற்றையும் திரும்பத் திரும்ப நான் தோற்றுவிக்கிறேன்(8)
தனஞ்செயா, அக்கர்மங்களில் பற்றற்றவனும் உதாசீனனைப் போல் உட்கார்ந்திருப்பவனும் ஆகிய என்னை அவைகள் தளைக்க மாட்டா.(9)
குந்தியின் மகனே, என்னால் கண்காணிக்கப் பெற்று, பிரகிருதியானது, ஸ்தாவர ஜங்கம உலகத்தைச் சிருஷ்டிக்கிறது.இதன் காரணத்தால் ஜகத்தானது சுழல்கிறது.(10)
என்னுடைய பர சொரூபத்தையும் நான் உயிகளுக்கெல்லாம் ஈசனாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.(11)
வீண் ஆசையுடையவர்கள், பயன்படாச் செயலாளர்கள், கோணலறிவு உடையவர்கள், விவேக மில்லாதவர்கள்.மையலூட்டுகிற ராக்ஷச, அசுர இயல்பை அடைகின்றனர்.(12)
பார்த்தா, ஆனால் மகாத்மாக்கள் தெய்விக இயல்பை அடைந்தவர்களாய், உயிர்களுக்குப் பிறப்பிடமும், அழியாதவன் நான் என்று அறிந்து, வேறு எதிலும் பற்று வைக்காது, என்னை வழிபடுகின்றனர்(13)
எப்பழுதும் என்னைப் புகழ்பவராயும், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும் பக்தியுடன் நமஸ்கரிப்பவர்கள் ஆகியும் நித்திய யோகிகள் என்னை உபாசிக்கிறார்கள்.(14).
ஞான  யக்ஞத்தால் வேட்பவர்களாகிய ஏனையவர்களும், என்னை ஒன்றாய், வேறாய், பலவாய்- இத்தனை விதங்களில் உபாசிக்கிறார்கள்.(15)
நானே கிரது என்ற வைதிக கருமம்;யக்ஞம் நானே; ஸ்வதாவாவது நான்;ஔஷதம் நான்;மந்திரமாவது நான்; ஹோமம் செய்யப்படும் நெய்யும் நான்; அக்கினியாவது நான்; வேட்டல் நானே.(ஸ்வதா=பித்ருக்களுக்குப் படைக்கப்படும் உணவு; கிரது=வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ஒரு வ்கை கர்மம் வேட்டல்=வேள்வி வேட்டல் எனும் வினையானது ஹுதம் எனப்படுகிறது)(16)
இந்த ஜகத்தின் தந்தை,தாய்,பாட்டனாரவனும் , கர்ம பலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும்,தூய்மை செய்பவனும்,ஓங்காரம், ரிக் சாமம் யஜுர் வேதங்கள் ஆகின்றவனும் நானே.(17)
புகலிடம், வளர்ப்பவன், உடையவன். சாக்ஷி, இருப்பிடம், அடைக்கலம். தோழன், ஒடுங்குமிடம், தங்குமிடம், களஞ்சியம்,அழியாத வித்து.(18)

அர்ஜுனா, நான் வெப்பந்தருகிறேன்; மழையைப் பெய்விக்கவும் தடுக்கவும் செய்கிறேன்; சாகாமையும் சாவும், ஸத்தும், அஸத்தும் நானே.(19)
மூன்று வேதங்களை அறிந்தவர்கள். யாகங்களால் என்னைப் பூஜித்து, சோம பானம் செய்து, பாபத்தினின்று விடுபட்டவர்களாகி, வானுலகு ஏகுதலை வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணியமான தேவேந்திர லோகத்தை அடைந்து சொர்க்கத்தில் திவ்யமான தேவ போகங்களை அனுபவிக்கின்றனர்.(20)
அவர்கள் அந்த அகன்ற வானுலகை அனுபவித்து, புண்ணியம் தேய்ந்தபின்பு மண்ணுலகில் புகுகிறார்கள்.இங்ஙனம் மூன்று  வேத நெறிகளைப் பின் பற்றும் போக பித்தர்கள் பிறப்பு இறப்பு எய்துகின்றனர்(21)
எனக்கு அன்னியரல்லாதவராய், என்னையே நினைந்து, யாண்டும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய யோக க்ஷேமத்தை நான் வழங்குகின்றேன்.(22)
சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வணங்குங்கால், விதி வழுவியவர்களாய் என்னையே வணங்கு கிறார்கள்.(23)
நானே சகல யாகங்களுக்கும் போக்தாவாகவும்( உண்பவன்) பிரபுவாகவும் (தலைவன்) இருக்கிறேன். ஆனால் பல தேவதைகளை வணங்குபவர் என்னை உள்ளபடி அறிகிறார்களில்லை. ஆகையால் அவர்கள் வழுவிப் பிறவியில் வீழ்கின்றனர்(24)
தேவர்களைத் தொழுபவர் தேவர்களை அடைகின்றனர்.பித்ருக்களைப் போற்றுபவர் பித்ருக்களைப் பெறுகின்றனர், பூதங்களை வணங்குபவர் பூதங்களைப் போய்ச் சேருகின்றனர், என்னைப் பூஜிக்கிறவர்கள் என்னையே எய்துவார்கள்.(25)
யார் எனக்கு இலை, மலர், கனி, அல்லது நீரைப் பக்தியோடு படைக்கிறானோ அந்த தூய மனத்தானனது அன்பளிப்பை நான் (இன்புடன்) அருந்துகிறேன்.(26)
குந்தியின் புதல்வா, நீ எதைச் செய்தாலும், யாது புசித்தாலும்,ஏது ஹோமம் பண்ணினாலும். எதை ஐயமிட்டாலும், எத்தவத்தைப் புரிந்தாலும், அதை எனக்கு அர்ப்பணமாகச் செய்.(27)
இங்ஙனம் நன்மை தீமைகளைப் பயக்கின்ற வினைத்தளைகளிலிருந்து விடுபடுவாய், சன்னியாச யோகத்தில் உள்ளத்தை உறுதியாக வைத்தவனாய், வினையினின்று விடு பட்டு என்னை அடைவாய்.(28)
நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாயிருக்கிறேன்.எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை, ஆனால் என்னை பக்தியோடு பஜிக்கிறவர்கள் என்பால் உளர், நானும் அவர்கள்பால் உள்ளேன்.(29)
கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னை பஜிப்பானானால், அவன் சாது என்றே கருதப்பட வேண்டும்.ஏனென்றால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான்(30)
விரைவில் அவன் அறவாளன் ஆகிறான்.நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசமடைவதில்லை என்று நன்கு அறிவுறுத்துக.(31)
பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர், வைசியர், சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்.(32)
புண்ணியவான்களும் பக்தர்களுமாகிய பிராம்மணர்களையும் அவ்வாறே ராஜ ரிஷிகளையும் பற்றிப் பின்பு பேசுவானேன்.? நிலையற்றதும் சுகமற்றதுமாகிய இவ்வுலகைப் பெற்ற நீ என்னைப் பஜிப்பாயாக.(33)
மனதை என்னிடத்து வைத்து, என்பால் பக்தி பண்ணி, எனக்கு யாகம் செய்து, என்னை வணங்கு.என்னைக் குறியாகக் கொண்டு உள்ளத்தை உறுதி படுத்தி என்னையே அடைவாய்.(34)
                  ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் நிறைவு.         .           



    .
                          
 

சனி, 27 செப்டம்பர், 2014

கற்பிக்கும் காணொளிகள்


                                 கற்பிக்கும் காணொளிகள்
                                 ------------------------------------
அண்மையில் திருமதி கீதா சாம்பசிவம் ஒரு பதிவில் பறவைகளைப் பற்றி எழுதி இருந்தார் பறவைகள் என்றபோது எனக்கு வந்திருந்த ஒரு காணொளியைப் பகிர்கிறேன்

 விலங்குகளுக்கு  பகுத்தறியும் சக்தி உண்டா ? இந்த வீடியோவைப் பாருங்கள்.


கெஞ்சினால் மிஞ்சும் , மிஞ்சினால் கெஞ்சும் என்பது நினைவுக்கு வருகிறது.


இந்த வீடியோக்களைக் கண்டவுடன் உங்களுக்குத் தோன்றியதைப் பின்னூட்டத்தில் பகிரலாமே

நவராத்திரியை முன்னிட்டு


வியாழன், 25 செப்டம்பர், 2014

கீதைப் பதிவு அத்தியாயம் -8


                                    கீதைப் பதிவு  அத்தியாயம் - 8
                                     ----------------------------------------



அக்ஷரப்ரஹ்ம யோகம்
அர்ஜுனன் சொன்னது
ஓ புருஷோத்தமா, அந்தப் பிரம்மம் யாது, அத்யாத்மம் எது, கர்மம் என்பதுயாது, அதி பூதம் என்று சொல்லப் படுவது எது, மேலும் அதிதெய்வம் என்று எது அழைக்கப் படுகிறது.?(1)
மதுசூதனா, இந்த தேகத்தில் அதியக்ஞன் என்பவர் யார்.?அவர் எப்படி இருக்கிறார்,? தன்னடக்கம் பழகியவர்களால் மரணகாலத்திலும் நீர் எங்ஙனம் அறியப்படுபவர் ஆகின்றீர்.?(2)
ஸ்ரீபகவன் சொன்னது
அழிவற்றதாயும் மேலானதாயும் இருப்பது பிரம்மம். அதன் ஸ்வபாவம் அத்யாத்மம் ( தன்னைத் தானே தோற்றுவித்துக் கொள்ளும் குணம்) என்று சொல்லப் படுகிறது உயிர்களை உண்டு பண்ணி, நிலைத்திருக்கச் செய்தலாகிய வேள்வி கர்மம் எனப்படுகிறது.(3)
உடல் எடுத்தவர்களுள் உயர்ந்தவனே, அழியும் பொருள் அதிபூதம் என்று சொல்லப் படுகிறது. புருஷன்(அகிலாண்டத்தையும் தன் இருப்பிடமாகக் கொண்டு இருப்பவன்)அதி தெய்வம் (ஹிரண்ய கர்ப்பன், எல்லோருக்கும் முன்பே உடலை எடுத்தவன், சுயம்பு) எனப்படுகிறான்.இனி நானே ஈண்டு தேகத்தினுள் அதியக்ஞமாகிறேன். (ஜீவன் தன்னை அடியோடு இறைவனிடத்து ஆஹுதியாகக் கொடுக்கும்போது யக்ஞம் உச்சஸ்தானம் பெறுகிறது.(4)
 மரண காலத்திலும் என்னையே நினைத்துக் கொண்டு, உடலைத் துறந்து, யார் போகிறானோ அவன் என் சொரூபத்தை அடைகிறான்,இதில் ஐயமில்லை.(5)
குந்தியின் புதல்வா, இறுதிக் காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உகுக்கிறானோ எப்பொழுதும் அப்பொருளைப் பாவிப்பவனாகிய அவன் அதையே அடைகிறான்.(6)
ஆகையால் சர்வகாலமும் என்னை நினைத்துக் கொண்டே போர் புரி., மனம் புத்தியை என்னிடத்து அர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றி என்னையே அடைவாய்.(7)
பார்த்தா, வேறு விஷயங்களில் செல்லாது அப்பியாசம் எனும் யோகத்தோடு கூடிய சித்தத்தால் தேஜோமயமான பரமபுருஷனை சிந்திக்கிறவன் அப்புருஷனை அடைகிறான்.(8)
முற்றும் உணர்ந்தவனை, தொல்லோனை, அனைத்தையும் ஆள்பவனை, அணுவுக்கும் நுண்மையனை, அனைத்தையும் தாங்குபவனை, சிந்தனைக்கு எட்டாத வடிவுடையோனை, கதிரவனைப் போன்று ஒளிர்பவனை, அக்ஞான இருளுக்கு அப்பாற்பட்டவனை, பக்தியோடும் உறுதியான மனத்தோடும் யோக பலத்தோடும் புருவத்தின் மத்தியில் பிராணன் முழுதையும் வைத்து மரண காலத்தில் யார் நினைக்கிறானோ அவன் அத்திவ்விய பரம புருஷனை அடைகிறான்.(9, 10)
வேதத்தை அறிந்தவர்கள் எதை அழிவற்றது என்கின்றனர், பற்று நீங்கிய துறவிகள் எதனுள் புகுகின்றனர், எதை விரும்பி அவர்கள் பிரம்மசரியத்தைக் கடை பிடிக்கின்றனர், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன்(11)
பொறி வாயில் யாவையும் அடக்கி, மனதை ஹிருதயத்தில் நிறுத்தி, தன் பிராணனை உச்சந்தலையில் வைத்து, யோக தாரணையில் நிலைத்திருந்து, “ஓம்என்கிற ஏகாக்க்ஷரமாகிய பிரம்ம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, என்னை ஸ்மரித்துக் கொண்டு, யார் உடலை நீத்துப் போகிறானோ, அவன் பரமகதியைப் பெறுகிறான்.(12,13)
பார்த்தா,வேறு எண்ணமின்றி யார் என்னை நெடிது இடையறாது ஸ்மரிக்கிறானோ, அந்த ஒரு நிலைப்பட்ட யோகிக்கு நான் எளிதில் அகப்படுகிறேன்.(14)
பரம பக்குவப்பட்ட மகாத்மாக்கள் என்னை அடைந்து, துன்பத்துக்கு இருப்பிடமும் நிலையற்றதுமாகிய மறுபிறப்பை எடுப்பதில்லை.(15)
அர்ஜுனா, பிரம்ம லோகங்கள் வரையில் உள்ள உலகங்களுக்கு மறு பிறப்புண்டு,குந்தியின் மைந்தா, மற்று என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பில்லை.(16)
ஆயிரம் யுகம் பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றும், ஆயிரம் யுகம் அவருக்கு ஒரு இரவு என்றும் அறிபவர், இராப்பகலின் தத்துவத்தை அறிப்வர் ஆகின்றனர்.(17)
(பிரம்மாவின்) பகல் வரும்போது, தோன்றா நிலையிலிருந்து தோற்றங்கள் யாவும் வெளிப்படுகின்றன. இரவு வரும்போது ஒடுக்கம் என்பதனுள் அவைகள் மறைகின்றன.(18)
அர்ஜுனா, அதே இந்த உயிர்த்தொகை பிறந்து பிறந்து இரவு வரும்போது தன் வசமின்றி ஒடுங்குகிறது.பகல் வரும்போது வெளிப்படுகிறது.(19)
ஆனால் அந்த அவ்யக்த்ததைக்(தோன்றும் அனைத்தும் தோன்றாநிலைக்குப் போவது) காட்டிலும் மேலான, நிலைத்துள்ள அவ்யக்தம் ஒன்று உளது. உயிர்களெல்லாம் அழியும்போதும் அது அழிவதில்லை.(20).
அவ்யக்தம் ,அக்ஷரம் என்று சொல்லப் படுவதை பரமகதி என்று சொல்லுவர். எதை அடைந்து (உயிர்கள்) திரும்பி வருவதில்லையோ, அது என்னுடைய பரமபதம்.(21)
அர்ஜுனா, உயிர்கள் எவனுள் இருக்கின்றனவோ, எவனால் இவை யாவும் வியாபிக்கப் பட்டும் இருக்கின்றனவோ அந்த பரம புருஷன் அனன்ய பக்தியால் (ஒரே குறியுடைய ) அடையப் படுகிறான்.(22)
பரதகுலப் பெருமகனே, எக்காலத்தில் உடலை விட்டுப் போகின்ற யோகிகள் முக்தி அடைகின்றனரோ, எக்காலத்தில் போகின்றவர்கள் பிறக்கின்றனரோ அக்காலத்தைச் சொல்லுகிறேன் (23)
தீ, ஒளி ,பகல், சுக்கில பக்ஷம் , உத்தராயணத்தின் ஆறு மாதங்கள் இவைகளில் உடலை நீத்துப் போகின்ற பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை அடைகின்றனர்.(24)
புகை, இரவு கிருஷ்ணப்க்ஷம், தக்ஷிணாயணத்தின் ஆறு மாதங்கள்-இவைகளில் போகின்ற யோகி, சந்திரனது ஒளியைப் பெற்றிருந்து மறு பிறவி அடைகிறான்.(25)
ஒளியும் .இருளும் ஆகிய இவ்விரண்டு வழிகள் இயற்கையில் என்றென்றும் உள்ளவை என்று எண்ணப் படுகின்றன.ஒன்று பிறவாமைக்குப் போவது, மற்றொன்று பிறப்பைத் த்ருவது.(26)

இவ்விரண்டு வழிகளையும் அறிகிற எந்த யோகியும் மோகத்தை அடைகிறதில்லை.ஆகையால் அர்ஜுனா, எப்பொழுதும் யோகத்தில் நிலைத்தவனாய் இரு..(27)
இதை அறியும் யோகியானவன் வேதம், வேள்வி, தவம், தானம் ஆகியவைகளின் நற்பலனைக் கடந்து ஆதியாம் பர நிலையை அடைகிறான்(28)
               அக்ஷரப் பிரம்ம யோகம் நிறைவு.  
 

 

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

என் கேள்விக்கு என்னபதில்....


                 என் கேள்விக்கு என்ன பதில்.. ?
                 -----------------------------------------                                
.
நண்பர் ஒருவர் பதிவினில் வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோஎன்னும் சொற்றொடர் என்னைக் கவர்ந்தது. இதையே தலைப்பாக்கி ஒரு கவிதை எழுதலாமா என்ற எண்ணம் உதித்தது. வழக்கம்போல் எழுத ஆரம்பித்தேன் மூன்று நான்கு வரிகள் எழுதியதும் என் சிந்தனை என்னை வேறு பாதையில் இழுத்துச் சென்றது. அது போன போக்கிலேயே எழுதியதையும் பதிவிடுகிறேன்

வீசு தென்றல் காற்றிருக்க  வேறெதுவும் வேண்டுவரோ
பேசும் பொற்சித்திரம் அருகிருக்க அருகினிலே
ஓடும் ஓடையின் தண்ணீரும் சுவை தருமோ 

தென்றல் காற்று , தண்புனல் சித்திரம்போல் பாவை
போதுமா இப்புவியில் வேறெதுவும் வேண்டாமா
பசிக்கும் வேளை புசிக்க உணவு அது ஒன்றே
போதும் என்று சொல்ல வைக்கும். பாரீரே அறிவீரே.
கொடுப்பதன் இன்பம் அதை எடுக்கவிட்டுக்
கொடுப்பதில் கூடும் இன்பம் உணர்வோமே.
கொடுத்துத்தான் பார்ப்போமே

ஈசன் அருளைப் பெற ஈதல் ஒன்றே நல்வழி-அதைவிட்டு  
அவன் சொன்னான் இவன் சொன்னான் எனக் கூறி
பாலையும் பழத்தையும் தேனையும் தீஞ்சுவை இளநீரையும்
பூசனை என்ற பேரிலும் அபிஷேகம் எனும் பேரிலும்
கல் மீதும் மண் மீதும் பொழிந்தே வீணடித்தல் ஏனோ? முறையோ.?
ஈசன் அருளைப் பெறவே இத்தனையும் தேவை என்றால்
அறிவீரே அன்பர்காள், அத்தனையும் அறியாமையின் வழிமுறை

பக்தி செய்யவே பாசாங்கு வேண்டியதில்லை. எங்கும்
நிறைந்த ஈசன் என்னிலும் உள்ளான் எவரிலும் உளான்
இதுவன்றோ உண்மை நிலை.?ன்பே சிவம் எனச்
சொல்வதோடு நில்லாமல் நேசி ; உன்னை நேசி; இவனை நேசி
அவனை நேசி; உவனை நேசி. அனைவரையும் நேசி

பாரினில் பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்.
போகும்போது என்ன கொண்டு போவோம்.
இருப்பதனைத்தும் எனக்கென்றால் அது
என்னுள் உறையும் இறைவனுக்கும்தானே
என்னுள் இருப்பவன் அவனிலும் உளான் ஆக
எனதெல்லாம் அவனுக்கும் உரிமைதானே
கிடைத்ததெல்லாம் அவன் கொடுத்தது- அது
அனைவருக்கும் உரியது. .இருப்பவன் என்று
என்னையோ உன்னையோ தேர்ந்தெடுத்தான் என்றால்
உன் மூலம் என் மூலம் இல்லாதோர் பெற
வேண்டும் என்பதே அவன் சித்தமாயிருக்கலாம்

கேள்வி இதோ. எந்தப் பதிவரின் வரிகள் என்னை எழுத வைத்தது? ஒரு க்ளூ தருகிறேன் . என் அந்தப் பதிவுக்கு இந்த வரிகளுக்கு உரியவர் வருகை தரவில்லை. தந்திருந்தாலும் பின்னூட்டமெதுவும் இடவில்லை.ஒரு வேளை அவர் இப்பதிவுக்கு வருகை தந்தாலும் இது அவரது வரிகள் என்று கூறாமல் கருத்திட வேண்டுகிறேன் பதிவுகளில் எழுதுவதை எத்தனை பேர் ஊன்றிப் படிக்கிறார்கள் என்பதை அறிய ஒருசின்ன டெஸ்ட்.
(நான்கைந்து நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களால் வலைப்பக்கமே வர முடியவில்லை. வந்ததும் கனமான கீதைிப் பதிவுக்குப்பதில் சற்று மாற்றத்துக்காக இது )
.

வியாழன், 18 செப்டம்பர், 2014

கீதைப் பதிவு-அத்தியாயம் 7


                                     கீதைப் பதிவு-அத்தியாயம் -7
                                     ---------------------------------------

ராதா கிருஷ்ணா-ராஜஸ்தானி ஸ்டைல்-கண்ணாடி ஓவியம்



ஞானவிக்ஞான யோகம்
ஸ்ரீபகவான் சொன்னது
பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னிடத்து அடைக்கலம் புகுந்தவனாய், ஐயமற என்னை முற்றும் அறிவது எங்ஙனமென்று சொல்லக் கேளாய்(1)
விக்ஞானத்த்தோடு கூடிய இந்த ஞானத்தை மிச்சமில்லாமல் நான் உனக்குச் சொல்கிறேன். இதை அறிந்தபின் மேலும் நீ அறிய வேண்டியது எதுவும் பாக்கியில்லை.(2)
ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மன நிறைவின் பொருட்டு முயலுகிறான்.முயலுகின்ற பெரு வாய்ப்பு உள்ளோர்களில் யாரொ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.(3)
நிலம், நீர் நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாகஎன் பிரகிருதி பிரிவு பட்டிருக்கிறது.(4)
இது என்னுடைய கீழான பிரகிருதி.இதினின்று வேறானதும், உயிர் ஆவதுமாகிய என்னுடைய மேலான பிரகிருதியை அறிவாயாக. தோள்வலியோய் இந்த ஜகத் ஆனது இதனால் தாங்கப் படுகிறது.(5)
உயிர் அனைத்தும் இவ்விரண்டு பிரகிருதிகளில் இருந்து உண்டானவை என்று அறிவாயாக. நான் ஜகத் முழுவதன் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் காரணம்(6)
தனஞ்செயா, எனக்கு மேலானது வேறு எதுவும் இல்லை.நூலிலே மணிகள் போன்று இவை யாவும் என்மீது கோக்கப்பட்டிருக்கின்றன.(7)
குந்தியின் மைந்தா, நான் நீரில் சுவையாகவும், சந்திர சூரியர் களிடத்து ஜோதியாகவும், எல்லா வேதங்களிலும்  ஓங்காரமாகவும், வானில் ஓசையாகவும், மக்களிடத்து ஆண்மையாகவும் இருக்கிறேன்.(8)
மண்ணில் நறுமணமாகவும், தீயில் சுடராகவும் நான் இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பாகவும், தபஸ்விகளுள் தபஸாக இருப்பதும் நான்.(9)
பார்த்தா, எல்லா உயிர்களின் நிலைபேறுடைய வித்து என்று என்னை அறிக. அறிவாளர்களுடைய அறிவாகவும் தேஜஸ்விகளுடைய தேஜஸ் ஆகவுன் நான் இருக்கிறேன்.(10)
பரதத் தலைவா,பலவான்களிடத்துக் காமமும்(புலப்படாத பொருள் களைப் பெற விரும்புதல்) ராகமும் (புலப்படுகின்ற பொருள்களைப் பெற விரும்புதல்) நீங்கப் பெற்ற சாமர்த்தியமாக நான் இருக்கிறேன்.உயிர்களிடத்து தர்மத்துக்கு முரண்படாத காமமாக இருக்கிறேன்.(11)
சத்வ ரஜஸ் தமோ குணங்களில் உண்டான பொருள்களெல்லாம் என்னிடத்துத் தோன்றியவைகளே என்று அறிக. ஆயினும் நான் அவைகளைச் சாரவில்லை, அவைகள் என்னைச் சார்ந்து இருக்கின்றன.(12)
இந்த மூன்று குணங்களால் ஆகிய வஸ்துக்களினால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவைகளுக்கு மேலாகிய அழியாத என்னை அறிகிறதில்லை.(13)
குணங்களால் ஆகிய என்னுடைய இந்த தேவ மாயையானது உண்மையில் தாண்ட முடியாதது.யார் என்னையே சரணடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகின்றனர்.(14)
பாபச் செயலை உடையவர், மூடர், மக்களுள் கடைத் தரமானவர், மாயையினால் ஞானம் அபகரிக்கப் பட்டவர், அசுர இயல்பைப் பற்றி நிற்பவர்-இத்தகையோர் என்னைப் போற்றுகின்றதில்லை.(15)
பரதகுலப் பெருமகனாகிய அர்ஜுனா, துன்புற்றவன் , ஞான வேட்கை உடையவன் பொருளின்பம் தேடுபவன், ஞானி ஆகநான்கு விதமான அறச் செயலாளர்கள் என்னைப் போற்றுகின்றனர்.(16)
அவர்களுள் இடையறா யோகம் பூண்டு மாறாத பக்தி பண்ணும் ஞானி மேலானவன்.ஏனென்றால் நான் ஞானிக்கு மிகப் பிரியமானவன்.(17)
இவர்கள் எல்லாரும் நல்லார்களே.ஆயினும் ஞானி என் ஆத்ம சொரூபமே என்பது என் கருத்து. ஏனென்றால் யோகத்தில் நிலைத்திருப்பவனாகிய அவன் மிக உத்தமமான கதியாகிய என்னையே கடைப் பிடித்திருக்கிறான்.(!8)
பல பிறவிகளுக்குப் பிறகே “யாவும் வசுதேவ சொரூபம்என்று ஞானி வணங்கி என்னை வந்தடைகிறான்.அத்தகைய மஹாத்மா கிடைப்பதற் கரியவன். (19)
பற்பல ஆசைகளால் அறிவை இழந்தவர்கள் அவரவர் இயற்கையால் தூண்டப்பட்டு , அது அதற்கு ஏற்ற நியமத்தை கையாண்டு பிற தெய்வங்களைப் போற்றுகின்றனர்.(20)
எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவ வடிவத்தை சிரத்தையோடு அர்ச்சிக்க விரும்புகிறானோ அவனவனுடைய அந்த சிரத்தையை அசையாததாக நான் செய்கிறேன்(21)
சிரத்தையோடு கூடியவனாகிய அவன் அத்தேவதையை ஆராதித்து அதனின்று தான் ஆசைப்பட்டவைகளை அடையப் பெறுகிறான். ஆயினும் அவ்வாசைப் பொருள்களை உண்மையில் வகுத்து வழங்குபவன் நானே.(22)
ஆனால் அற்ப அறியாதவர்களாகிய அவர்கள் அடையும் பயன் அல்பமானதாகிறது. தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களை அடைகின்றனர். என் அடியார்கள் என்னையே அடைகின்றனர்.(23)
என்னுடைய அழிவற்ற , ஒப்பற்ற பர சொரூபத்தை அறியாத அறிவிலிகள், புலன்களுக்கு எட்டாத என்னை புலன்களுக்குத் தென்படும் இயல்பை அடைந்தவனாக எண்ணுகின்றனர்.(24)
யோக மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான், எல்லோருடைய அறிவுக்கும் எட்டுகிறதில்லை.பிறவாத, அழியாத என்னை இந்த மூட உலகம் அறிகிறதில்லை.(25)
அர்ஜுனா, சென்றனவும், இருப்பனவும், வருவனவும் ஆகிய உயிர்களை எல்லாம் நான் அறிவேன்.ஆனால் என்னை யாரும் அறியார்.(26)
பகைவரை வாட்டுகின்ற பாரதா,விருப்பு வெறுப்பினின்று உண்டாகும் துவந்துவ மோகத்தால்(இருமை மயக்கத்தால்)  பிறக்கும்போதே எல்லா உயிர்களும் குழப்பமடைகின்றன(27)

ஆனால் புண்ணிய கருமங்களை உடைய எந்த ஜனங்களுக்குப் பாபம் முடிவடைகிறதோ, துவந்த மோகத்தில் இருந்து விடுதலை அடைந்த அவர்கள் உறுதியான விரதமுடையவர்களாய் என்னை வழிபடுகின்றனர்(28)

மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுவதற்கு என்னை வழிபட்டு முயற்சி செய்கின்றவர்கள் அந்த பிரம்மத்தையும் அத்யாத்மம்(ஆத்ம சொரூபம்) முழுவதையும் , கர்மம் அனைத்தையும் அறிகின்றனர்.(29)

யார் என்னை அதிபூதத்துடனும், அதிதெய்வத்துடனும், அதி யக்ஞத்துடனும் கூடினவனாக அறிகிறார்களோ,யோகத்திலே நிலை நின்ற மனதை உடைய அவர்கள் சாகும் தறுவாயிலும் என்னை அறிகின்றனர்.
                 ஞான விக்ஞான யோகம் நிறைவு.