புதன், 12 நவம்பர், 2014

கடவுளுடன் ஒரு நேர்காணல்


            கடவுளுடன் ஒரு நேர் காணல் ( ஒரு புலம்பல் பதிவு.)
          ---------------------------------------------
 எனக்கு அண்மையில் ஒரு காணொளி அனுப்பப் பட்டிருந்தது. வித்தியாசமான எதையும் பகிரும் எனக்கு  இதைக் கண்டவுடன் நான் முன்பு பதிவிட்டிருந்த ;கடவுளுடன் ஒரு உரையாடல்’ என்னும் பதிவு நினைவுக்கு வந்தது. அதை வெளியிட்ட மாதமும்  வருடமும் நினைவுக்கு வரவில்லை. ஏறத்தாழ ஐநூறு பதிவுகளுக்கிடையில் அதைத் தேடுவது சிரமமாக இருக்கவே கூகிளை நாடினேன். தேடு பகுதியில் தமிழில் “கடவுளுடன் ஒரு உரையாடல்” என்று தட்டச்சு செய்தேன் உடனே என் பதிவு வந்தது ஆச்சரியமில்லை. ஆனால் அதே தலைப்பில் இன்னொருபதிவர் எழுதி இருந்ததும் கண்டேன். அதைப் படித்துப் பார்க்கும்போது  என்னுடைய பதிவே வெகு சில மாற்றங்களுடன் எழுதப் பட்டிருந்தது . நான் எழுதியது நவம்பர் மாதம் 2011 ம் ஆண்டு.இந்தப் பதிவு ஃபெப்ருவரி 2012-ம் ஆண்டு.
நாம் பல விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்கிறோம். பல செய்திகள் நம் எழுத்துக்கு வித்தாகின்றன. கருத்துக்கள் ஒரு போல் இருப்பதை அதிகம் லட்சியம் செய்ய முடியாது. ஆனால் வார்த்தைகள் மிகச் சில மாற்றங்களுடன் என் பதிவையே அச்சு அசலாக ஒத்திருந்தது வேதனை அளித்தது. நான் என் எழுத்துக்கு காப்புரிமை பெற்றதில்லை. ஆனால் அதற்காக இப்படியா. ?
 இந்தப் பதிவு ஒரு காணொளி.நான் அன்று எழுதியது ஒரு வார்த்தை விளையாட்டு. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க லிங்க் கொடுக்கிறேன் ”இங்கே” கூகிளில் தமிழில் “கடவுளோடு ஒரு உரையாடல் என்று தட்டச்சு செய்தால் இரண்டு பதிவையும் பார்த்து வாசகர்களே ஒரு முடிவுக்கு வரலாம். மீண்டும் கூறுகிறேன். நம் எழுத்துக்களுக்கு வித்து நாம் எங்கோ படித்த அல்லது அனுபவித்த விஷயங்களில் இருக்கலாம். கண்ணதாசன் கவிதைகள் பலதும் இதற்கு எடுத்துக் காட்டாக இருக்கும்.
என்ன சொல்ல .? மனம் வேதனை அடைகிறது என்பது தவிர. .இப்போது காணொளியைக் காணுங்கள். கருத்திடுங்கள்.கடவுளின் வியாபிப்பைக் காட்டும் படங்கள் என் முந்தைய பதிவையும் படித்துப்பாருங்கள்(லிங்க் கொடுத்திருக்கிறேன்.)

   .  

திங்கள், 10 நவம்பர், 2014

கீதைப் பதிவு-16


                                               கீதைப் பதிவு - 16
                                               -----------------------


தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்
ஸ்ரீபகவான் சொன்னது
அஞ்சாமை, உள்ளத் தூய்மை. ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல், ஈகை பொறிகளை அடக்குதல், யாகம் ஸாஸ்திரம் படித்தல், தபஸ்.நேர்மை(1)
தீங்கிழையாமை, உண்மை, சினமின்மை, துறவு, அமைதி, கோள் சொல்லாமை, உயிர்களிடத்து இரக்கம், பிறர்பொருளை விரும்பாமை, இனிமை, நாணம்,மனம் சலியாமை(2)
தைரியம் பொறை மனவுறுதி, தூய்மை, வஞ்சகமின்மை, செருக்கின்மை, ஆகிய இவைகள் தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பாகின்றன அர்ஜுனா,(3)
பார்த்தா பகட்டும், இறுமாப்பும் தற்பெருமையும், சினமும் ,கடுமையும், அக்ஞானமும் அசுர சம்பத்தை உடையவனாய்ப் பிறந்தவனுக்கு உண்டு.(4)
தெய்வ சம்பத்து மோக்ஷம் தருவதென்றும், அசுர சம்பத்து பந்தப் படுத்துவதென்றும் கருதப் படுகின்றன.பாண்டவா, வருந்தாதே, நீ தெய்வ சம்பத்து வாய்த்துப் பிறந்துள்ளாய்.(5)
பார்த்தா,தெய்விகம் என்றும் அசுரம் என்றும் இருவகை உயிர்ப் பிறப்புகள்  இவ்வுலகில் உண்டு.தெய்வ இயல்பு விரிவாகப் பகரப் பட்டது. அசுர இயல்பை என்னிடம் கேள்.(6)
செய்யத்தகுந்த நல் வினையையும், தகாத தீவினையினையும் அசுர இயல்புடையார் அறியார். அவர்களிடம் தூய்மையும் நல்லொழுக்கமும் வாய்மையும் இல்லை(7)
உலகம் உண்மை இல்லாதது, தர்மப் பிரதிஷ்டை இல்லாதது, கடவுள் இல்லாதது, காமத்தைக் காரணமாகக் கொண்டு ஆண்பெண் இணக்கத்தால் ஆனது அன்றி வேறு என்ன இருக்கிறது என்கின்றனர்.(8)
இக்கொள்கை உடைய புல்லறிவாளர் ஆத்ம நஷ்டமடைந்தவர்களாய், கொடுஞ் செயல் புரிபவர்களாய், உலகின் பகைவர்களாய், அதன் அழிவுக்கென்றே தோன்றி இருக்கின்றனர்(9)
நிறைவேறாத நெடுங்காமம் பிடித்தவர்களாய், ஆடம்பரமும், பெருமையும், மதமும் பொருந்தியவர்களாய், மயக்கத்தால் கெட்ட எண்ணங்களைக் கிரகித்து தீய தீர்மானங்களுடன் தொழில் புரிகின்றனர்(10)
சாகும்வரையில் அளவுகடந்த கவலையை உடையவர்களாய், காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாகக் கருதி, மற்றொன்றுமில்லை என்று தீர்மானம் செய்தவர்களாய்;(11)
நூற்றுக்கணக்கான ஆசைக்கயிறுகளால் தளைக்கப் பட்டவர்களாய், காமக் குரோத வசப்பட்டவர்களாய்,காம போகத்தின் பொருட்டுச் செல்வக் குவியல் தேட முயலுகின்றனர். (12)
இன்று இது என்னால் அடையப்பட்டது; இவ்விருப்பத்தை நிறைவேற்றுவேன், இது இருக்கிறது, மேலும் எனக்கு இச்செல்வம் வந்துசேரும்(13)
அப்பகைவன் என்னால் கொல்லப்பட்டான், மற்றவர்களையும் கொல்லுவேன், நான் ஆளுபவன், போகத்தை அனுபவிப்பவன், காரிய சித்தன், வலிவுடையவன், இன்புறுபவன்(14)
செல்வம் படைத்து உயர் குலத்தவனாயிருக்கிறேன் எனக்கு நிகரானவன் வேறு எவன் இருக்கிறான்.? யாகம் செய்வேன், தானம் கொடுப்பேன், மகிழ்வடைவேன் என்று அக்ஞானத்தில் மயங்கியவர்கள்(15)
பல எண்ணங்களில் குழப்பமடைந்தவர்கள் மோக வலையில் மூடப் பெற்றவர்கள் காம போகங்களில் பற்றுடையவர்கள் பாழ் நரகில் வீழ்கின்றனர்.(16)
தற்புகழ்ச்சியுடையார், வணக்கமிலார், செல்வச் செருக்கும் மதமும் உடையார் பெயரளவில் யாகத்தை விதி வழுவி ஆடம்பரத்துக்காகச் செய்கின்றனர்(17)
அஹங்காரம் பலம் இறுமாப்பு காமம்  குரோதம் இவைகளை உடையவர்கள் தங்கள் தேகத்திலும் பிறர் தேகத்திலும் உள்ள என்னை வெறுத்து அவமதிக் கின்றனர்(18)
 துவேஷ குணமுடையவர்களை, கொடியவர்களை, கடையவரை, இழிந்தோரை பிறந்து இறந்து உழலும் உலகில் அசுரப் பிறவியிலேயே, திரும்பத் திரும்ப நான் அவர்களைத் தள்ளுகிறேன்(19)
குந்தியின் மகனே, மூடர்கள் பல பிறவிகளில் அசுர யோனிகளில் தோன்றி என்னை அடையாமல் இன்னும் கீழான கதியையே அடைகிறார்கள்(20)
காமம் குரோதம் லோபம் ஆகிய மூவித வாயிலை உடையது நரகம். இவை ஜீவனைக் கெடுக்கும் தன்மையன. ஆகையால் இம்மூன்றையும் துறத்தல் வேண்டும்(21)
அர்ஜுனா, இம்மூன்று நரக வாயில்களினின்றும் விடுபட்டவன் தனக்கு நலன் செய்து கொண்டு பின்பு மோக்ஷத்தை அடைகிறான்.(22)
காமத்தின் வசப்பட்டு சாஸ்திரத்தின் ஆணையை மீறி நடப்பவன் எவனோ அவன் பரி பூரணனாகான், சுகம் பெறான், முக்தி அடையான்(23)
ஆகையால் செய்யத் தகுந்ததையும்  தகாததையும் நிச்சயிப்பதில் சாஸ்திரம் உனக்குப் பிரமாண மாகிறது. இங்கு சாஸ்திரம் ஆக்ஞாபித்து உரைப்பதை அறிந்து கர்மம் செய்யக் கடவாய்.(24)
                   தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம் நிறைவு.                         
    .            
 
 

சனி, 8 நவம்பர், 2014

சற்று விச்ராந்தியாக........


                             சற்று விச்ராந்தியாக.....
                            -------------------------------


அவ்வப்போது சில பகிர்வுகள்  மின் அஞ்சலிலும்  தொலை பேசியிலும்.வருவதுண்டு நானும் அவற்றைப் பிடித்திருந்தால் பகிர்வதுண்டு. / என்னுடைய கீதைப் பதிவு படித்து வருபவர்களுக்கும் மற்றோருக்கும் ஒரு மாறுதலுக்காக சிந்திக்கவும் சிரிக்கவும் இதோ ஒரு பகிர்வு.
வார்த்தைகளில் வரும் எழுத்துக்களை இடம் மாறிப்போட்டு விளையாடும் ஒருவிளையாட்டு இவர்களால் எப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறது என்னும் வியப்பே இதை நான் பகிர்வதன் முக்கிய காரணம்

DILIP  VENGSARKAR. . எழுத்துக்களை இடம் மாற்றினால்  A SPARKLING DRIVE

PRINCESS DIANA------------- END IN A CAR SPIN

MONICA LEWINSKY-------- NICE SILKY WOMAN

DORMITORY-------------------DIRTY ROOM

ASTRONOMER-----------------MOON STARER

DESPERATION-----------------A ROPE ENDS IT

THE EYES---------------------THEY SEE

A DECIMAL POINT---------I’M A DOT IN PLACE

AND FINALLY

MOTHER IN LAW-----------WOMAN HITLER


ஒரு மாமியார் தன் மூன்று மாப்பிள்ளைகளைச் சோதித்துப் பார்க்க விரும்பினார் ஒரு பாலத்தின் அருகே முதல் மாப்பிள்ளையுடன் சென்று கொண்டிருந்தார். தவறிப் போய் ஆற்றில் விழுந்தார், முதல் மாப்பிள்ளை நீரில் குதித்து அவரைக் காப்பாற்றினான்.
அடுத்தநாள் அவன் வீட்டின் முன் ஒரு புதிய டோயோட்டா கொரொல்லா கார் நின்றிருந்தது.
இன்னொரு நாள் இரண்டாம் மாப்பிள்ளையுடன் பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தார்.தவறிப் போய் ஆற்றில் விழுந்தார். இரண்டாம் மாப்பிள்ளை நீரில் குதித்து அவரைக் காப்பாற்றினான்
அடுத்தநாள் அவன் வீட்டின் முன் ஒருபுதிய டோயோட்டொ கொரொல்லா கார்
நின்றிருந்தது.
இன்னொரு நாள் மூன்றாம் மாப்பிள்ளையுடன் பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தார்.தவறிப் போய் ஆற்றில் விழுந்தார். மூன்றாம் மாப்பிள்ளை கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்
அடுதநாள் அவன் வீட்டின் முன் ஒரு புதிய BMW  கார் நின்றிருந்தது. அதில் WITH BEST WISHES FROM  மாமனார் என்றிருந்தது...!   
     .      

வியாழன், 6 நவம்பர், 2014

கீதைப் பதிவு --15


                                         கீதைப்பதிவு --15
                                         ------------------------


புருஷோத்தம யோகம்
ஸ்ரீபகவான் சொன்னது
மேலே வேருள்ளதும் , கீழே கிளைகளுள்ளதும் ஆகிய ஆலமரம் போன்ற சம்சாரத்தை அழிவற்றது என்கின்றனர். வேதங்கள் அதன் இலைகள்.அதை அறிபவனே வேதத்தை அறிபவன் ஆகிறான்(1)
அதன் கிளைகள் குணங்களால் செழிப்படைந்து, விஷயங்கள் என்னும் தளிர் விட்டு, கீழும் மேலும் படர்ந்திருக்கின்றன. மானிட உலகில் வினையை விளைவிப்பனவாய் அதன் வேர்கள் கீழ் நோக்கிப் பரவி இருக்கின்றன.(2)
இம்மரத்துக்கு இங்கு வடிவம் தென்படுவதில்லை, முடிவில்லை, துவக்கமில்லை, இருப்புமில்லை. வலுத்து வேரூன்றிய இந்த அசுவத்த மரத்தைப் பற்றின்மை என்ற உறுதியான வாளால் வெட்டி;(3)

எப்பதம் பெற்றுப் பிறப்பெடுப்பதில்லையோ அது அப்பால் தேடத்தக்கது. எவரிடத்திருந்து பண்டைத் தொழில் பெருகி வந்துள்ளதோ அதே ஆதி புருஷனைச் சரணடைகிறேன் (எனறுணர்க)(4)
ஆணவமும் அவிவேகமும் அற்றவர். பற்று என்னும் குற்றம் வென்றவர், பரமாத்ம ஞான நிஷ்டர், ஆசையற்றவர், இன்பதுன்பம் எனும் இருமைகளைக் கடந்தவர், மயக்கமொழிந்தவர்- இத்தகையார்கள் அவ்வழியா நிலை எய்துகின்றனர்.(5)
எங்கு சென்றவர்கள் திரும்பி வருகிறதில்லையோ. எதை ஞாயிறும் திங்களும் ,தீயும் விளக்க மாட்டாவோ அது எனது பரமபதம்(6)
எக்காலத்தும் எனது அம்சமே ஜீவனாகத் தோன்றி, ஜீவலோகத்தில் பிரகிருதியிலே நிற்கின்ற மனது உட்பட ஆறு இந்திரியங்களை (போகத்தில்) இழுக்கிறது(7)
மலர்களினின்று மணங்களை காற்று எடுத்து ஏகுவதுபோல், ஜீவன் உடல் எடுக்கும்போதும் விடும்போதும் இந்திரியங்களைப் பற்றிக் கொண்டு போகிறான்(8)
அவன் செவி,கண், மெய், நாவு, நாசி,மனது, ஆகியவைகளைத் தனதாக்கிக் கொண்டு விஷயங்களை அனுபவிக்கிறான்(9)
 

உடலை விடும்போதும், உடலில் இருக்கும்போதும் அனுபவிக்கும் பொழுதும் குணங்களோடு கூடி இருக்கும்பொழுதும் ஜீவனை மூடர் அறியார்; ஞானக் கண் உடையவர் அறிவர். (10)
உயற்சியுடைய யோகிகள் அவ்வாத்மனை தங்களுக்குள்ளேயே காண்கின்றனர். முயற்சி உடையார் எனினும் ஆதம பரிபாக மடையாத அறிவிலிகள் அவனைக் காண்பதில்லை.(11)
சூரியனிடத்திருந்து வந்து உலகம் முழுதையும் விளக்குகிற வெளிச்சமும், சந்திரனுடையதும் தீயினுடையதும் என்னிடமிருந்து வந்த பிரகாசம் என்று அறிக.(12)
என் வலிவால் நான் பூமியினுள் பிரவேசித்து உயிர்களைத் தாங்குகிறேன்; இனிமை வடிவாகிய சந்திரனாகவும் ஆகிப்பயிர்களைப் போஷிக்கிறேன்(13)
உதரக் கனலாக நான் உயிர்களின் உடலில் இருந்து கொண்டு பிராண அபான வாயுக்களுடன் கூடி நான்கு வித அன்னத்தைச் சேமிக்கிறேன்.(14)
எல்லோருடைய உள்ளத்திலும் நான் வீற்றிருக்கிறேன் நினைவும் ஞானமும் அவற்றின் அழிவும் என்னிடமிருந்து உண்டாகின்றன. வேதங்கள் எல்லாவற்றிலும் அறியப்படும் பொருள் நானே, வேதாந்த்தத்தைச் செய்தவனும் வேதத்தை அறிந்தவனும் நானே(15)
க்ஷரன் என்றும் அக்ஷரன் என்றும் உலகில் இரண்டே புருஷர்கள் இருக்கிறார்கள். வடிவெடுத்த எல்லோரும் க்ஷரன், கூடஸ்தனோ அக்ஷரன் எனப்படுகிறான்.(16)
இனி இவர்கட்கு அன்னியமானவர் புருஷோத்தமன். அந்த ஈசுவரன் நிர்விகாரப் பரமாத்மா என்று அழைக்கப் படுகிறார். அவர் மூவுலகினுட் புகுந்து அதைத் தாங்குகிறார்(17)
க்ஷரத்தை கடந்து அக்ஷரத்துக்கும் நான் மேலானவனாக இருப்பதால் உலகிலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்று புஅழ் பெற்றிருக்கிறேன்(18)
பாரதா, யார் மயக்கமற்றவனாய் இங்ஙனம் என்னைப் புருஷோத்தமன் என்று அறிகிறானோ, எல்லாம் அறிந்த அவன் முழுமனதோடு என்னை வழுத்துகிறான்(19)
குற்ற மற்றவனே, இங்ஙனம் ஆழ்ந்த இந்த சாஸ்திரம் என்னால் உரைக்கப் பட்டது. அர்ஜுனா, இதை அறிபவன் ஞானியும் கிருதார்த்தனும் ஆவான்(20)
                    புருஷோத்தம யோகம் நிறைவு.                 
    .            
 
   ;      
 

 

செவ்வாய், 4 நவம்பர், 2014

ட்ரையல் பதிவு


எனக்கு சிவகுமாரனின் கவிதை அறிமுகத்தை பதிவில் சேர்க்க முடியாத குறையை போக்க அந்தக் காணொளியை யூ ட்யூபில் கஷ்டப்பட்டு இணைத்தேன். யூ ட்யூபின்  லிங்கும் கிடைத்தது / ஆனால் அதை சிவகுமாரனுக்கு மெயிலில் அனுப்பினால் திறக்கவில்லை. ஆனால் அதையே என் பதிவில் இணைத்தால்திறக்கிறது.இந்த நெளிவு சுளிவுகளெல்லாம் கற்க வேண்டும்முழு அறிமுகமும் வீடியோ எடுக்கவில்லை. எடுத்தவரைப்பதிவிடுகிறேன். கீழே சிவகுமாரனின் வரிகள்

உச்சிமலை மீதிருந்து
  ஓடிவரும் பேரருவி.
பச்சைவயல் தோப்புகளில்
  பாடிவரும் பூங்குருவி.

காடுமலை மேடுகளைக்
  கடந்துவரும் காட்டாறு.
ஓடுகின்ற நதிநீரை
  உடைத்துவரும் பெருவெள்ளம்.

காரிருளைக்  கதிர்வீசி
  கிழிக்கின்ற செங்கதிரோன்
சூரியனை சந்திரனை
  சுற்றிவரும் வான்மேகம்.
பாலைவனப் பெரும்புழுதி
  கிளப்பிவரும் புயல்காற்று.
சோலைவனச்  சுகந்தங்கள்
  சுமந்துவரும் இளந்தென்றல்.

பார்த்தவற்றைக்  கவிதைக்குள்
  பதுக்கிவைக்கும் பகல்திருடன்.
வார்த்தைகளால் தவமியற்றி
  வரங்கேட்கும் கவிச்சித்தன்.

என் கவிதைகள்


உணர்வுகளின் போராட்டம்
  உள்மனதின் பேயாட்டம்.
மனத்தீயை அணைப்பதற்கு
  மடைதிறக்கும் நீரோட்டம்.

கனவுலகின் வீதிகளில்
  கற்பனையின் தேரோட்டம்
நனவாகும் ஆசையினில்
  நம்பிக்கை வேரோட்டம்

நரம்புகளின் முறுக்கேற்றம்
  நடத்துகிற போராட்டம்
வரம்புடைத்து மீறுகிற
  வார்த்தைகளின் அரங்கேற்றம்.

கருத்தரித்த சிறுகுழந்தை
  காலுதைக்கும் வேளையினில்
உருத்தெரியா வலிதன்னை
  உள்ளடக்கும் தாய்முனகல்.


வீறிட்டு வெளிக்கிளம்பி
 வெடிக்கின்ற எரிமலையாய்
பீறிட்டுப் பொங்கிவரும்
  பெருங்கோபத் தீப்பிழம்பு.

ஓட்டுடைத்து வெளிக்கிளம்பி
  உலகளக்கும் சிறகோசை  .
கூட்டுக்குள் அடைத்துவைத்த
  குருவிகளின் சிறு கூச்சல் .

பொங்கிவரும் அலைநடுவே
  புகுந்துவரும் நுரைக்குமிழி
கங்கைநீர் சுமந்துவரும்
  காசிநகர் சிறு கலயம் .

கடைவிரிக்க இயலாத
  காலாவதி பழஞ்சரக்கு
அடைகாக்க முடியாத
  ஆனையிட்ட பெருமுட்டை.

 வர்ணங்கள் வெளுத்திட்ட
  வானவில்லின் சோகங்கள்
கர்ணனுக்கு மறந்துபோன
  கடைசிநேர அஸ்திரங்கள்.

அவசரத்திற் கடகு வைக்க
  ஆகாத அணிகலன்கள்.
கவசகுண் டலங்களிவை
  கவிதையல்ல சத்தியமாய்



திங்கள், 3 நவம்பர், 2014

கீதைப் பதிவு-14



                                              கீதைப் பதிவு-14
                                              ----------------------


 அத்தியாயம் 14
----------------------
(ஒரு இடைவெளிக்குப் பின்  மீண்டும் கீதைப் பதிவு)


குணத்ரய விபாக யோகம்
ஸ்ரீபகவான் சொன்னது
முனிவர்கள் எல்லோரும் எதை அறிந்து இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் மேலாம் சித்தியை அடைந்தார்களோ, ஞானங்களுள் சிறந்ததும் பரம் பொருளைப் பற்றியதுமான  அந்த ஞானத்தை மீண்டும் உரைப்பேன். (1)
இந்த ஞானத்தை அனுஷ்டித்து என் சொரூபத்தை அடைந்தவர்கள் சிருஷ்டியில் தோன்றுவதில்லை, பிரளயத்தில் துன்புறுவதில்லை(2)
பாரதா, பெரிய பிரகிருதி எனது கர்ப்பாசயம்.அதில் நான் கர்ப்பத்தை வைக்கிறேன். அதினின்று உயிர்களெல்லாம் உற்பத்தியாகின்றன.(3)
குந்தி புத்ரா, கர்ப்பாசயங்கள் எல்லாவற்றிலும் பிறக்கின்ற வடிவங்களுக்குப் பெரிய பிரகிருதி தாயாகிறாள்.கர்ப்பாதானம் செய்யும் தந்தை நான்.(4)
பெருந்தோளோய், பிரகிருதியிலிருந்து உண்டான சத்வம், ரஜஸ், தாமசம் என்னும் குணங்கள் அழிவற்ற தேகியை  தேகத்தில் பிணிக்கின்றன(5)
பாபமற்றவனே, அவற்றுள் சத்துவம் அழுக்கின்மையால் ஒளி பொருந்தியது, இடர்படுத்தாதது, சுகப் பற்றுதலாலும் ஞானப் பற்றுதலாலும் அது பிணைக்கிறது(6)

குந்தி மகனே, ரஜோகுணத்தை ஆசை வடிவுடையதென்றும், வேட்கையையும் பற்றுதலையும் உண்டு பண்ணுவதென்றும் அறி. வினைப்பற்றால் அது தேகியைத் தளைக்கிறது(7)
பாரதா, தமோகுணமோ அக்ஞானத்தில் பிறந்தது என்றும் உயிர்களை எல்லாம் மயக்குவது என்றும் அறி. அது அசட்டை, சோம்பல், உறக்கம் இவற்றால் கட்டுகிறது.(8)
சத்துவ குணம் சுகத்தில் சேர்க்கிறது, ரஜோ குணம் கர்மத்தில், தமோ குணமோ, பாரதா, ஞானத்தை மறைத்துக் கவனமின்மையில் இணைக்கிறது(9)
சத்வம் ரஜஸையும் தமசையும் அடக்கி மேலெழுகிறது, ரஜஸ் சத்துவத்தையும் தமசையும் ஆளுகிறது.அங்ஙனம் தமஸ் சத்துவத்தையும் ரஜசையும் அடக்குகிறது அர்ஜுனா.(10)
இத்தேகத்தின் பொறிவாயில் அனைத்திலும் எப்பொழுது ஞானஒளி வீசுகிறதோ அப்பொழுதே சத்துவம் ஓங்கி உள்ளதென்று அறிதல் வேண்டும்(11)

பரத சிரேஷ்டா, பேராசை, பிரவிருத்தி, வினைப்பெருக்கு, அமைதி இன்மை, வினையில் விருப்பம் இவைகள் ரஜோ குணம் மேலெழும்பும்போது உண்டாகின்றன.(12)
குருவம்சத்து வீரா, விவேகமின்மை, முயற்சியின்மை, தவறுதல், மதிமயக்கம்-ஆகிய இவைகளே தமோ குணத் தலையெடுப்பால் விளைகின்றன(13)
தேகம் எடுத்துள்ளவன் சத்துவ குணம் ஓங்கி இருக்கும்போது மரணம் அடைவானாயின் ஞானவான்களுடைய நல்லுலகங்களை அடைவான்(14)
ரஜோகுணத்தில் காலமாகின்றவன் கர்மப் பற்றுடையவர்களுக்கு இடையிலே பிறக்கிறான்.அவ்வாறே தமஸில் சாகின்றவன் அறிவிலிகள் கர்ப்பத்தில் பிறக்கிறான் (15)
நற்செய்கையின் பயன் சாத்விகமும் தூய்மையும் என்பர்.ரஜோ குணத்தின் பயனோ துன்பம். தமோகுணத்தின் விளைவு அறிவின்மை.(16)
சத்துவத்திலிருந்து ஞானம் உதிக்கிறது, ரஜஸிலிருந்து பேராசையும், தமசிலிருந்து அக்ஞானமும் கவனமின்மையும், மதி மயக்கமுமெ உண்டாகின்றன.(17)
சத்துவ குணத்தில் உள்ளோர் மேலேறுகின்றனர்.ரஜோ குணத்தில் உள்ளோர் இடையில் நிற்கின்றனர்.கடையான குணமாகிய தமோகுணத்தில் இருப்போர் கீழிறங்கு கின்றனர்(18)

ஜீவன் எப்பொழுது குணங்களுக்கு வேறான கர்த்தாவைக் காண்பதில்லையோ, குணங்களுக்கு மேலாகப் பரம்பொருளைக் காண்கிறானோ, அப்பொழுது அவன் பிரம்ம சொரூபத்தை அடைகிறான்.(19)
உடம்பை உண்டாக்கும் இம் முக்குணங்களையும் கடந்து, பிறப்பு இறப்பு ,மூப்பு, துன்பத்தினின்று விடுபட  ஜீவன் மரணமிலாப் பெரு வாழ்வு பெறுகிறான்.(20)
அர்ஜுனன் சொன்னது
இறைவா, எந்த அடையாளங்களால் (ஜீவன்) இந்த மூன்று குணங்களையும் கடந்து நிற்பவன் ஆகின்றான்? அவனது நடத்தை யாது.? எங்ஙனம் இம் முக்குணங்களைக் கடக்கிறான்.?(21)
ஸ்ரீபகவான் சொன்னது
பாண்டவா, (சத்துவத்தின் காரியம்) ஒளி, (ரஜஸின் காரியம்) செயல், (தமஸின் காரியம்) மயக்கம்-இவை வாய்த்த விடத்து அவன் வெறுக்கிறதில்லை, ஒழிந்தவிடத்து வேட்கை யுறுகிறதில்லை(22)

வெறும் சாக்ஷியாய் இருந்துகொண்டு யார் குணங்களால் அசைக்கப் படுவதில்லையோ, குணங்களே தொழில் புரிகின்றன என்று ஆத்மாவில் அசையாது இருக்கிறானோ;(23)
துன்பத்தையும் இன்பத்தையும் சமமாகக் கொண்டவன்,ஆத்மாவில் நிலைத்தவன், மண், கல். பொன்னை நிகராகக் காண்பவன் இனியதையும் இன்னாததையும் ஒன்றாக ஓர்ப்பவன், பேரறிஞன், இகழ்ச்சி புகழ்ச்சியை ஒரே பாங்குடன் பார்ப்பவன்(24)
மான அவமானத்தை நிகராக நினைப்பவன், நண்பனிடத்தும் பகைவனிடத்தும் ஒரே பாங்குடையவன், தனக்கெனத் தொழில் செய்யாதவன் யரோ, அவன் குணாதீதன் எனப்படுகிறான்.(25)
மாறாத பக்தி யோகத்தால் என்னை யார் உபாசிக்கிறானோ, அவன் இக்குணங்களை முற்றும்  கடந்து, பிரம்மம் ஆவதற்குத் தகுதி உடையவனாகிறான்.(26)
அழியாத மோக்ஷ நிலையாகிய பிரம்மத்துக்கும் சாசுவதமான தர்மத்துக்கும்  ஒப்பற்ற சுகத்துக்கும் நானே இருப்பிடம். (27)
                குணத்ரய விபாக யோகம் நிறைவு.         
 
















சனி, 1 நவம்பர், 2014

மதுரைப் பதிவர் திருவிழா


                             மதுரைத்  தமிழ்ப் பதிவர் பேரவை
                            ----------------------------------------------


அக்டோபர் 26-ம் நாள் நடந்து முடிந்த தமிழ் வலைப் பதிவர் திருவிழா பற்றி ஆறு நாட்கள் கழிந்தபின்  பதிவு எழுதுகிறேன். அக்டோபர் 24-ம் தேதிவரை பதிவர் விழா நடக்குமா என்னும் அளவில் தமிழகத்தில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. திரு தனபாலனிடம் மழை பற்றி விசாரித்து நிலைமை அறிந்து கொண்டேன். போகமுடியுமா என்பது கடைசிவரை நிச்சயமில்லாத நானே 25-ம் தேதி காலை சென்னையிலிருந்து என் மகன் காரில் கூட்டிப்போக  அன்று மதியம் 12 மணி அளவில் மதுரையில் ஹோட்டல் எடுத்து ரூம் போட்டு விட்டோம். மாலை மீனாட்சி அம்மையை தரிசனம் செய்து 26-ம் தேதி காலை ஒன்பது மணி அரங்கத்துக்கு வந்து விட்டோம். ஆனால் என்ன ஒரு ஏமாற்றம். பதிவில் பழக்கமுள்ள ஆனால் நேரில் பரிச்சயப்படாத பல பதிவர்கள் வரவில்லை. இத்தனைக்கும் வருவதாக் உறுதி செய்தவர்கள். என்னவோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் நான் ஏமாந்தது நிஜம் புலவர் ராமானுசம், சேட்டைக்காரன், துளசிதரன் தில்லையகத்து, நண்டு @ நொரண்டு, வெங்கட் நாகராஜ். ரஞ்சனி நாராயணன். மற்றும் பார்த்துப் பரிச்சயப்பட்ட கவியாழி கண்ணதாசன். டாக்டர் கந்தசாமி.செல்லப்பா யக்ஞசுவாமி மற்றும் பலர் வருகை தரவில்லை. ஆனால் பார்த்துப் பரிச்சயப் படாத முனைவர் ஜம்புலிங்கம். தருமி முத்து நிலவன் கில்லர்ஜி ஜோக்காளி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல் நடராஜன் மற்றும் திருமதி சீனா ஆகியோரை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியே, இளம் பதிவர்களில் பரிச்சயப்பட்ட ஸ்கூல் பையனை முதலில் அடையாளம் தெரியாமல் வழிந்ததும் உண்மை. இளம் பதிவர்கள் பலர் வந்திருந்தும் அவர்களுடன் உரையாடி மகிழ சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை.
மதுரைக்குப் பல முறை சென்றிருந்தும் ஜிகிர் தண்டா சாப்பிட்டது பதிவர் விழாவில் மட்டும்தான்.
பல பதிவர்கள் விழா குறித்து எழுதி இருந்தாலும்  என் இப்பதிவு ஒரு காணொளிப் பதிவாக இருக்கும். துண்டு துண்டாக இருக்கும் படப் பிடிப்பு என் மகனும் மனைவியும். ஒன்று சொல்ல மறந்து விட்டது. நான் சற்றும் எதிர்பாராவிதத்தில் எனக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.  என் கையால் தமிழ்வாசிக்கும், திண்டுக்கல் தனபாலனுக்கும் நினைவுப் பரிசு கொடுக்கச் சொன்னார்கள் நான் சென்ற ஆண்டு பதிவர் விழாவுக்குச் செல்ல முடியாமல், சென்றிருந்தால் என்ன சொல்ல நினைத்திருப்பேனோ அதை இங்கு உரையாக வாசித்து விட்டேன் வாசித்ததைக் காண ”இங்கேசொடுக்கவும்
 ( காணொளி  அப்லோட் ஆகததால் பதிவிட முடியவில்லை)
பலரது வலைகளில் விழாபற்றி என்னதான் எழுதி இருந்தாலும் எனக்கு நிறைவாகவே இருந்தது. மறுநாள் என் மகனுக்கு வேலைக்குச் செல்ல   வேண்டி இருந்ததால் அன்று மதியம் இரண்டு மணி அளவில் சென்னைக்குப் பயணப்பட்டோம். போகும் முன் பால கணேஷ் மறக்காமல் விழாக்குழுவினர் கொடுக்க ஏற்பாடு செய்திருந்த ஒரு மஞ்சள் பையை அதில் ஒரு பாகுடன்(bag) மறக்காமல் கொடுத்தார்.குறும்பட வெளியீட்டுக்கும் பதிவர்கள் எழுதிய நூல்கள் வெளியீட்டையும் காணக் கொடுத்து வைக்கவில்லை.பெங்களூரு விஜயத்தின் போது என் வீட்டுக்கு வந்து கௌரவித்த திருமதி துளசியையும் அவர் கணவர் கோபாலையும் மீண்டும் விழாவில் சந்த்தித்தது நிறைவாக இருந்தது.இனிகாணொளிகள் சில. காணொளிகள் பலவும் 100mb -க்கும் மேலாக இருப்பதால் அப்லோட் ஆவதில்லை

 


நாங்கள் இருந்தவரை எல்லா நிகழ்ச்சிகளையும் cover செய்திருந்தும் அவற்றைப் பதிவிட முடியாமல் போவது வருத்தமளிக்கிறது. நிபுணர்கள் ஆலோசனை ஏதாவது உள்ளதா.?ஏறத்தாழ அநேக காணொளிகள் 100mb-க்கு மேற்பட்டவையே.       .