செய்யாத குற்றம்.
-----------------------------
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
நிறையவே பார்த்து விட்டு,
நித்திரை செல்லப் போகுமுன்,
அன்றைய நிகழ்வுகள்
நினைவினில் நிழலாடும்.
என்னென்னவோ செய்ய எண்ணியவை
செய்தே முடிக்காமல் மறக்கப்பட்டிருக்கும்.
மறந்தாலும் பாதகமில்லை
முக்கியமானதாய் இல்லாதவரை.
கண்ணயர சில நேரம் பிடிக்கும்
பின் கண் மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க் கனவுகள், அலை அலையாய்
கதை போல விரிந்து பரவும்.
எழுத்தில் கொண்டு வந்தால்
இனிதே ரசிக்கலாம்,
இடுகையில் பதிக்கலாம்
என்றெல்லாம் கனவினூடே
நினைவுகளும் கூடவே வரும்,
விடியலில் எழுந்து இனிய கனவுகளை
அசை போட முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித் தோன்றுவதை எழுத்தில்
வடிக்க வார்த்தைகளும் வராது,
கற்பனையும் கை கொடுக்காது.
அதிகாலை நடை பயிலுகையில்
எழுதுவதற்கு விஷயங்கள் யோசிக்க
நடையினூடே வார்த்தைகளும்
அழகாக வந்து வீழும்.
சற்றே மலர்ந்து வீடு வந்து,
பேனா பிடித்தால் என்னதான்
எழுதுவது, ஒன்றும் தோன்றாது
நினைப்பது ஏன் மறக்க வேண்டும்..?
பார்த்த முகம் பரிச்சயமானது , பேர்மட்டும்
வேண்டும்போது நினைவுக்கு வராது.
ஆடும் சிறார் கண்டு மனம் மகிழும்
கூடவே ஓடியாட உடல் மறுக்கும்.
எண்ணங்களில் இளமை என்றுமிருக்கும்
உடல் உபாதைகள் முதுமையை நினைவூட்டும்.
வேண்டியதை விரும்பிச் செய்ய விழையும் மனமே,
உன்னால் முடியாது என்று கூடவே கூறும்.
உலகோரே உங்களிடம் கேட்கிறேன்
வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட தண்டனையா..?
------------------------------------------------------------------
The positives of your past should be considered as awards. - vibhu
ReplyDeleteLet us whither gently and enjoy the fruits of life bestowed on us at an advanced age..you have kindled lots of ripples and rightfully the fading memories need not be fussed upon..the eloquence in your writing succintly sums that all.. warm regards
ReplyDeleteகனவிலும் இழுத்துக் கொண்டு போகும் எழுத்து, காலை நடைப் பயிற்சி போதும் எழுத வந்து விழும் வார்த்தைக் கோர்வை என்று உள்ளத்திற்கு அது நினைக்கும் பொழுதெல்லாம் உற்சாகம் தான்!
ReplyDeleteஆனால் உடல்?.. அதன் மூப்பு இயற்கையானது; யதார்த்தமானது. தவழந்த பருவத்திலிருத்திலிருந்து தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறதே! உள்ளம் சோர்வுற்றாலும் அதற்கும் சேர்ந்து இதுவும் சோர்வுற்றது. இப்பொழுது இதற்கு சோர்வு வரும் பொழுது..
உள்ளம்--உடல் என்னும் இரட்டை மாட்டு வண்டி சவாரியில், மாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு தானே தவிர பிரித்துப் பார்க்க முடியவில்லை. இரண்டையும் தட்டிக் கொடுத்து பயணிக்க வேண்டியது தான்!
உங்களைவிட மூன்று வயது சிறியவன் எனக்கு கவிதையினூடே நீங்கள் சொன்ன கருத்து பொருள் பொதிந்ததாய் இருந்தது, ஐயா!
ரசித்துப் படித்தேன்.
ReplyDeleteகடைசி வரிகள் கேள்வியா சவாலா?
கருத்துகள் தெரிவித்த திரு.விபு,காளிதாஸ்,ஜீவீ,அப்பாதுரை அனைவருக்கும் நன்றி.கடந்த கால நற்செயல்களின் நற்பலன்களை விருதுகளாக ஏற்ப்து ஏற்புடையதாக உள்ளது.
ReplyDeleteஅற்புதமான எழுத்து. அனுபவம் மெருகேற்றிய கருத்துக் கோர்வை.ரசித்தேன் ஐயா!
ReplyDeleteஉங்கள் பின்னூட்டம் இந்த கிளிக்கு ஒரு நெல்.
ReplyDeleteநன்றி ஐயா, திரு. மோகன்ஜி
Kalakitinga aiya, vayodhigam enbathu purath thotram, ungalin agam endrum 16!
ReplyDeleteபாலு சார்.இனிமேதான் உங்களோட எல்லாச் சிறப்பான எழுத்தையும் எழுதி எங்கள இது மாதிரி அசத்தப்போறீங்க. வயோதிகம் குற்றமும் இல்லை. தண்டனையும் இல்லை. என் போன்ற சிறியவர்களுக்கு முன் ஏர் பிடித்துச் செல்லும் உங்களின் அனுபவம் கொடையும் வேண்டாத போது கிடைத்த வரமும்.
ReplyDeleteஎழுதுங்க. ரெடியா நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்.
>>>கிளிக்கு ஒரு நெல்
ReplyDeleteஆகா!
அன்புள்ள ஐயா,
ReplyDeleteவணக்கம். பாரதி சொன்ன அக்கினிக்குஞ்சாகவே உங்களைப் பார்க்கிறேன். பணியிலிருக்கும்போது சரி...ஓய்வுபெற்றபின்பும் சரி...வெந்ததைத்தின்று விதிவந்தால் சாவோம் என்று அதிகபட்ச விழுக்காட்டில் வயது முதிர்ந்தவர்கள் இருக்கிற இன்றைய சூழலில் நீங்கள் வழிகாட்டியாய்...முன் உதாரணமாய் வந்திருக்கிறீர்கள்..இளையவர்கள் உங்களைப் பார்த்து விழிப்புணர்வு பெறவேண்டும் ஐயா. அயல் நாடுகளில் பெரும்பாலான சாதனைகள் பணி முதிர்வுக்குப்பின்தான் வயது முதிர்ந்தோரால்தான் நிகழ்த்தப்படுகின்றன. இது உண்மை. எனக்குப் பெருமையாக இருக்கிறது. உங்களைப் போன்றோர் எங்களைப் போன்றோருக்கு பெரும் பொக்கிசம். ஐயா எழுதுங்கள். உங்களின் பல்வகை அனுபவங்களையும் எழுதுங்கள். அது பலருக்கு பாதையாக இருக்கும். பலரை தவறு செய்யாமல் தடுக்கும். பலருக்கு வழிகாட்டும். பலருக்கு ஆறுதல் அளிக்கும். பெரும் தெம்பு நீங்கள் ஐயா. 72 வயது புயல்காற்றாக உங்களை எதிர்நோக்குகிறேன். வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன். எழுதுங்கள் ஐயா. எழுதுங்கள். தொடர்ந்து இனி வாசிப்பேன் உங்களை.
அட, நான் நினைத்தவற்றை எல்லாம் ஹரணி சார் சொல்லிவிட்டாரே... வயோதிகம் என்பது தண்டனை என்றால் அல்ப ஆயுளில் போனவர்கள் அந்த தண்டனையை அனுபவியாத பாக்கியசாலிகள் என்று கொள்ளமுடியாதே... துரதிர்ஷ்டசாலிகள் என்றல்லவோ சொல்கிறோம்.
ReplyDeleteவயோதிகம் என்னும் கட்டத்தில், வதைக்கும் உடற்சோர்வையும் மீறி உள்ளத்தின் எழுச்சியால் உந்தப்பெற்று வாழ்க்கையை அனுபவிப்பவர்கள் எத்தனைப் பேர்? தங்களது வாழ்வியல் அனுபவங்களை அடுத்துவரும் தலைமுறையிடம் பகிர்ந்துகொள்பவர்கள் எத்தனைப் பேர்? நினைக்கும் ஆயிரத்தில் அரைப்பங்காவது எழுத்தில் கொணர்பவர்கள் எத்தனைப் பேர்?
வயோதிகத்தில் கிடைத்த இந்த வாய்ப்பை அழகாகப் பயன்படுத்தும் தங்களை வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து வயோதிகம் பற்றி உங்களுக்கு ஞாபகம் வந்துள்ளதால் மீண்டும் மீள் பதிவு வாசிக்க சொல்லி உள்ளீர்கள்... மனதில் உள்ள வயோதிகத்தை தூக்கி தூர போடுங்கள் ஐயா... தங்களின் அனுபவம் (பகிர்வுகள்) எங்களுக்கு பாடம்... வாசிக்க காத்துக் கொண்டிருக்கிறோம்...
ReplyDeleteசிறு வயது குறும்புகள், விளையாட்டுகள், ரசித்தவைகள், சின்ன விசயத்தால் மா(ற்)றிய-இன்று வரை தொடரும் பழக்கம், ரசிக்க வைக்கும் பாடல்கள், திரைப்படங்கள்... இப்படி உற்சாகமாக தொடருங்கள்... ஆர்வத்துடன் வாசிக்க நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்... நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்...
உங்கள் பதிவின் "இதோ"வைக் க்ளிக் செய்யணும்னு தோணலை. வலையகத்தைக் க்ளிக்கிப் போய்ப் பார்த்தேன். முதுமை என்பது எல்லாருக்கும் ஒரு தடை அல்ல. பலருக்கும் முதுமையில் தான் நல்ல பகிர்வு கிடைக்கிறது. உடல் சோர்வு என்பது எல்லாருக்கும் பொதுவானதே. ஜீவி சார் சொல்றாப்போல் இரண்டையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்கணும். :)))))
ReplyDeleteஉலகோரே உங்களிடம் கேட்கிறேன்
ReplyDeleteவயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட தண்டனையா..?//
முதுமை என்பது வரமா, சாபமா? என்று சிலர் கேட்பார்கள் முதுமையை சிலர் வரம் ஆக்கி கொள்வார்கள். சிலர் சாபம் ஆக்கி கொள்வார்கள். எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.
நீங்கள் உங்கள் முதுமையை அழகாய் வரம் ஆக்கி கொண்டு இருக்கிறீர்கள்.
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். மற்றவர்களுக்கு பயன் படுகிறது.
உடல்சோர்வு வரலாம், , மனச்சோர்வு வாராமல் பார்த்துக் கொண்டால் முதுமையை தண்டனையாக கழிக்காமல் இறைவனின் பரிசாக நினைத்து வாழலாம்.
மீள் பதிவு அருமை.
மீள்பதிவாயினும் மீண்டும் ஒரு முறை படிக்கையில்
ReplyDeleteஇன்னும் அதிகம் பொருள் கொள்ளமுடிகிறது
ஒருவேளை நாமும் அந்தக் காலத்தைத் தொட்டுக்கொண்டிருப்பதாலே
அல்லது அதுபோலவே சில அனுபவங்களை
அனுபவிப்பதாலா மிகச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
உலகோரே உங்களிடம் கேட்கிறேன்
ReplyDeleteவயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட தண்டனையா..?
இயற்கையானது;
நானும் உங்கள் வயதால் இருப்பதால் ரசித்தேன். ஆனால் எல்லோரும் ரசிக்கமாட்டார்கள். நமக்கு வயதாகிவிட்டது என்ற நினைவை நம்மோடுதான் வைத்துக் கொள்ளவேண்டும்.
ReplyDeleteஅய்யா வயோதிகம் என்பது உடலுக்குத் தானே தவிர, மனதிற்கல்லவே.
ReplyDeleteவயது அதிகரிக்கவில்லை அய்யா உங்களுக்க அனுபவம்தான் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கின்றோம் அய்யா.
ReplyDelete@ கீதமஞ்சரி
@ திண்டுக்கல் தனபாலன்
@ கீதா சாம்பசிவம்
@ கோமதி அரசு
@ ரமணி
@ இராஜராஜேஸ்வரி
@ டாக்டர் கந்தசாமி
@ கரந்தை ஜெயக்குமார்.
மனம் நினைத்ததைச் செய்ய உடல் ஒத்துழைக்க வில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இப்பதிவு. திண்டுக்கல் தனபாலனுக்கு, எனக்கு மனதளவில் வயோதிகம் ஒரு பொருட்டே அல்ல. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இது மீள்பதிவாகிறது என்றால், மனதோடு உடலின் ஒத்துழைப்பு குறைகிறது என்றே பொருள். கோமதி அரசுக்கு, முதுமையை நான் சாபம் என்று கூறவில்லை. தண்டனையோ என்பதுதான் என் கேள்வி. முதுமை பற்றிய எனது இன்னொரு பதிவும் நீங்கள் படித்தால் புரியும்.
வயதும் இளமையும் அவரவர் மனதைப் பொறுத்தது. முதுமை என்று சோர்ந்துவிடாத மனமே இளமைக்கு எடுத்துக் காட்டு. மறதி யாவர்க்குமுண்டு . உங்கள் அனுபவம் இளமைக்குவராது ஐய்யா .உங்கள் அறிவுரை எங்களுக்கு ஊட்டச்சத்து அல்லவா
ReplyDelete// எண்ணங்களில் இளமை என்றுமிருக்கும்
ReplyDeleteஉடல் உபாதைகள் முதுமையை நினைவூட்டும்.
வேண்டியதை விரும்பிச் செய்ய விழையும் மனமே,
உன்னால் முடியாது என்று கூடவே கூறும்.
உலகோரே உங்களிடம் கேட்கிறேன்
வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட தண்டனையா..? //
ஒரு பதிவராய் இருந்து சிந்தித்து இருக்கிறீர்கள். ஆசையே அலை போலே ... ..இளமை மீண்டும் வருமா? முதுமையே சுகமா?
ReplyDeleteஇல்லை ஐயா வயோதிகம் எம்மைப் பொருத்தவரை பரிசே என்பேன், எத்தனை பேருக்கு கிடைக்கிறது இந்தப் பாக்கியம்
உங்களின் கேள்வி என்னைச் சிந்திக்க வைக்கிறது.
ReplyDeleteஒரு சமயம் உங்களின் வயதானால் எனக்குப் புரியுமோ....
தண்டனையும் அல்ல, பரிசும் அல்ல ; இயற்கை நியதி .காலையில் மலர்ந்து நறுமணம் வீசும் வண்ணப் பூவுக்கு ஒரு நாள் தான் வாழ்வு .நாம் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் ?எப்படி வாழ்ந்தோம் , வாழ்கிறோம் என்பதே முக்கியம். உணர்ச்சிகளை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் . பாராட்டுகிறேன் .
ReplyDeleteஉங்கள் கருத்து எனக்கு 'வரும் காலம் இப்படி இருக்கப்போகிறது' என்பதற்கான பாடம். நிறையபேர், இன்னும் முதிர்ந்த நிலையில், சமயத்தில் எதற்காக இந்த வாழ்வு என்றெல்லாம் சொல்லியிருக்கின்றனர்.
ReplyDeleteநாம் நினைத்ததை எப்போதுமே வாழ்வில் செய்யமுடியாது.. எப்போது தளையில் அகப்பட்டுவிட்டோமோ அப்போதே, பிறருக்காகவும் வாழவேண்டியுள்ளது.
உங்கள் இடுகை எங்களுக்கான செய்தி என்ற அளவில் எடுத்துக்கொள்கிறேன்.