Monday, March 14, 2011

முருகா, எனக்கு உன்னைப் பிடிக்கும்.....

முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும்....
--------------------------------------------------------

           நாளும் பொழுதும் என் நாவில்
           தவறாது வந்தமரும் முருகா,
           எனக்கு உன்னைப் பிடிக்கும்.

முருகு என்றால் அழகு
அழகு என்றால் முருகன்
என் கண்ணுக்கும் சிந்தைககும்
இந்த அண்டமே அழகாகத் 
தெரியும்போது அது நீயாகத்தானே 
இருக்க வேண்டும், தெரிய வேண்டும். 

            அழகை ஆராதிப்பவன் உன்னை 
            ஆராதிப்பதில் முரண் எங்குள்ளது.?

முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் 
உன்னைப் பற்றிய கதைகள் பிடிக்கும் 
ஏன் எனக்குப் பிடிக்கவேண்டும் என்றென்
மூளையைக் கசக்கினால் ,உன்னைக் கூறும் 
கதைகள் மூலம் நமக்குள் இருக்கும் 
சமன்பாடு நன்றாகத் தெரிகிறது. 

            உன் தந்தையின் பெயர் மகாதேவன்.
            உன் தாயின் பெயர் பார்வதி,
            உன் பெயர் பாலசுப்பிரமணியம்.
            என் தந்தையும் மகாதேவன்
            என் தாயும் பார்வதி
            நானும் பாலசுப்பிரமணியம்.
            புரிகிறதா நமக்குள்ள ஒற்றுமை

கந்தா, குமரா எனக்கு உன் கோபம் பிடிக்கும்.
பந்தயத்தில் நீ தோற்க உன் பெற்றோரே
வழி வகுக்க வந்த கோபம் தணிய
பழனிமலை மீதேறி தண்டம் பிடித்த
கதையில் உன் கோபம் பிடிக்கும்
நேர்வழி கொள்ளாது குறுக்கு வழியில்
வென்றால் பின் வாராதா கோபம்.?
எனக்கும் வரும்..

             பிரணவத்தின் பொருள் அறியா
             பிரம்மனின் ஆணவம் அடக்க
             அவனை நீ சிறை வைத்தாய்.
             உனக்குத் தெரியுமா, கற்பிப்பாயா
             என்றுன் அப்பன் உனைக்கேட்க
             பொருளுணர்த்தி நீ தகப்பன் சாமியான
             கதை எனக்குப் பிடிக்கும்.
             அறியாதார் யாரேயாயினும் நானறிந்தால்
             கற்பித்தல் எனக்குப் பிடிக்கும்.

புரமெரித்தவன் நுதல் உதிர்த்த
ஜ்வாலையில் உருவானவன் நீ.
தேவர்களின் அஞ்சுமுகம் தோன்ற
ஆறுமுகம் காட்டி, அவர் நெஞ்சமதில்
அஞ்சேல் என வேல் காட்டி,
சூரபதுமன் உடல் பிளந்து
இரண்டான உடலை மயிலென்றும்,
சேவல் என்றும் ஆட்கொண்ட உன்
அருள் எனக்குப் பிடிக்கும்.
எதிரியை நேசித்தல் எனக்கும் பிடிக்கும்.

              நாவல் பழம் கொண்டு,
             அவ்வைக் கிழவியின் தமிழ்
             ஆழத்தின் மயக்கம் தெளிவித்த
             உன் குறும்பு எனக்குப் பிடிக்கும்.
             தமிழைக் குத்தகை எடுத்து
             கொள்முதல் செயவதாய்க் கருதும்
             சிலரைச் சீண்டுதல் எனக்கும் பிடிக்கும்.

தேவசேனாதிபதி  உனக்குப் பரிசாக
வந்த தெய்வானைக் கரம் பிடித்த
கந்தா உன் கருணை எனக்குப் பிடிக்கும்.
மனமுவந்து செய்த பணிக்கு மணமுடிப்புப்
பரிசானால் எனக்கு அது ஒப்புதலே
ஆக அதுவும் எனக்குப் பிடிக்கும்.

              ஆனைமுகன் அண்ணன் துணை கொண்டு,
               காதல் குறமகள் வள்ளியின் கரம் பிடிக்க,
               நீ நடத்திய நாடகங்கள் எனக்குப் பிடிக்கும்.
               தம்பியின் துணை நாடி கைத்தலம் பற்றிய
               எனக்கு காதலும் பிடிக்கும்.

அசை  சீர் தளையுடன் மரபு மாறா
யாப்பிசை எனக்குத் தெரியவில்லை.
தெரிந்ததை அறிந்தவரை மனசில் பட்டவரை,
எனக்குனை ஏன் பிடிக்கும் என்றே கூறியுள்ளேன்
உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
=========================================












 






 








  









           




   

20 comments:

  1. முருகனை ஏன் பிடிக்கும் எனச் சொல்லிய விதம் மிக அருமை
    .உங்களுக்குள் முருகனின் திவ்ய குணங்கள்அடங்கியதையும்
    மறைமுகமாக அனைவரும் அடைய வேண்டும்
    என்கிற ஆதங்கதையும் சொல்லிச் செல்வதாக உள்ளது உங்கள் பதிவு
    மிகச் சிறந்த பதிவு பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //உன் தந்தையின் பெயர் மகாதேவன்.
    உன் தாயின் பெயர் பார்வதி,
    உன் பெயர் பாலசுப்பிரமணியம்.
    என் தந்தையும் மகாதேவன்
    என் தாயும் பார்வதி
    நானும் பாலசுப்பிரமணியம்.
    புரிகிறதா நமக்குள்ள ஒற்றுமை//
    புரிகிறது...

    ReplyDelete
  3. Muruga enaku neer sollum oru gunamum irukaa endru theriyavillai aanaal enaku unnai miga miga romba pidikum. Ne en uir muruga - bala

    ReplyDelete
  4. முருகு என்றால் அழகு
    அருமை ஐயா

    ReplyDelete
  5. முருகனை பிடித்ததாகச் சொன்ன காரணங்கள்
    அனைத்தும் முத்தமிழாய் இனித்தன.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. ரமணி அவர்களுக்கு முருகனின் திவ்விய குணங்கள் என்னுள் இருப்பதாக நான் கூற வரவில்லை. அவனுக்கும் எனக்கும் உள்ள சமன்பாட்டினை Equation)
    பாட்டில் வைத்து மகிழ்ந்தேன். இது ஒரு விதத்தில் நான் எடுத்துக்கொண்ட POETIC LIBERTY. அவ்வளவுதான்.நான் என்னைப் புரிய வைக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி. நாகசுப்பிரமணியம், ரத்னவேல், இராஜைராஜேஸ்வரி மற்றும் மஹாதேவனுக்கு பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  7. நீங்கள் உங்கள் படைப்பில் சொல்லியுள்ளதைபோல
    நான் சொன்னதில் முரண் ஏதும் இல்லை
    நீங்கள் சமன்பாடு எனச் சொல்கிறீர்கள்
    நான் வேறு விதமாகச் சொல்லுகிறேன்
    பாடலின் நோக்கமே அனைவரும்
    அந்த உயரிய குணங்களை அடைய வேண்டும்என்பதே என்பதில்
    நம் இருவருக்கும் எந்த குழப்பமும் இல்லை என நினைக்கிறேன்
    நீங்கள் இஙுகு அதனை மிகச் சரியாக உண்ர்ந்தவர்கள்
    அனைவருக்குமான குறீயீடாய் இருக்கிறீர்கள்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. //ஆனைமுகன் அண்ணன் துணை கொண்டு,
    காதல் குறமகள் வள்ளியின் கரம் பிடிக்க,
    நீ நடத்திய நாடகங்கள் எனக்குப் பிடிக்கும்.
    தம்பியின் துணை நாடி கைத்தலம் பற்றிய
    எனக்கு காதலும் பிடிக்கும். //

    arumai vaalththukkail .

    ReplyDelete
  9. பெய‌ர் பொருத்த‌ம், குண‌ப் பொருத்த‌ம் மெத்த‌ச்ச‌ரி
    ம‌னைவிக்குப் பின் காதலியை க‌ர‌ம்பிடித்தல்?
    நெற்றிக்க‌ண்ணில் பிற‌ந்தாலும், குற்ற‌ம் குற்ற‌மே!

    ReplyDelete
  10. அய்யா:
    தாங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். வந்துபார்த்து செல்லுங்கள். உங்கள் கருத்தையும் பகிருங்கள்.

    http://niroodai.blogspot.com/2011/03/blog-post_17.html

    ReplyDelete
  11. ஒப்புக்கொள்கிறேன் வாசன். குற்றம் குற்றமே, இருந்தாலும் பரிசாய் வந்தவள் தெய்வானை. மறுக்க முடியுமா முருகனுக்கு.?அதனால்தான் ஒப்புதல் என்றேன். ஒரு தவறு கூட செய்ய விடமாட்டீர்களே.! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசன். மதுரை சரவணன் அப்பபோ தலை காட்டுவதோடு நிற்பது சரியா.?அடிக்கடி வாருங்கள் . நன்றி அன்புடன் மலிக்காவின் அழைப்புக்கு நன்றி. அடிக்கடி வருகை தாருங்கள்.

    ReplyDelete
  12. //எனக்குனை ஏன் பிடிக்கும் என்றே கூறியுள்ளேன்
    உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.//

    முருகனுக்கும் உங்களைப் பிடித்துதான்
    உள்ளது என்ற உங்கள் நம்பிக்கை சரிதான், ஐயா.

    அவன் அருளின்றி, அவனைப்பற்றி இப்படியொரு
    பதிவிட உங்களுக்குத் தோன்றிடுமா என்ன?

    ReplyDelete
  13. G.M Balasubramaniam கூறியது...
    என் பதிவில் பின்னூட்டத்தில் உங்கள் அழைப்பினைப் பார்த்தேன்.உங்கள் பதிவு பெண் எழுத்துப் படித்தேன். இது தொடர், ஆதலால் இதற்கு, எதிர்மறையான ஆண்களை அழைக்க வேண்டும் என்று என் பெயரையும் சேர்த்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி. முதலில் உங்களுக்கு என் திருமண வாழ்த்துக்கள். எனக்கு ஒன்று புரியவில்லை மலிக்கா. கருத்துக்களை பதித்து பகிர அழைத்துள்ளீர்கள் நான் எங்கு பகிர்ந்து கொள்வது.?உங்கள் பதிவின் பின்னூட்டத்திலா.?என் பதிவிலா.?பெண் எழுத்துப் பற்றிய கருத்துக்களா?இல்லை வெறுமே எழுத்து பற்றிய கருத்தா.?எதையும் தெரிந்து செய்ய விரும்பும் எனக்குப் புரிய வையுங்களேன், ப்ளீஸ்.!//


    அன்பின் அய்யா அவர்களுக்கு. இது ஒரு தொடர். அதாவது நான் எழுதியுள்ள பெண் எழுத்துக்களைப்பற்றிய தாங்களின் எண்ண வெளிப்பாடுகளை தங்களுடைய வலைதளத்தில் பதிவாக வெளியிட வேண்டும்.
    ஒருவர் தரும் தலைப்பில் அல்லது அவர்களுடைய எண்ண வெளிப்பாடுக்கும் நம்முடைய வெளிப்பாடுகளுக்கும் என்ன நம்முடைய வெளிப்பாடுகளுகும் வித்தியாசங்கள் மாற்றங்கள் இருக்குமல்லவா அதுதான் இந்த தொடரின் நோக்கம் .

    அப்படியே இங்கு நான் எழுதியயுள்ள எனெண்ண வெளிப்பாடுகளில் ஏதேனும் குறை நிறை இருப்பினும் தெரியப்படுத்தலாம்

    உங்கள் வலையில் உங்கள் எண்ணத்தை ஒரு பதிவாக வெளியிடுங்கள். விருப்பப்பட்டால் நீங்கள் அதை தொடர யாரையும் அழைக்கலாம்..

    ReplyDelete
  14. எனக்கும் பிடிக்கும்
    பாலசுப்பிரமணியனை

    ReplyDelete
  15. GMB Sir,
    எனக்கு முருகனை ரொம்பப் பிடிக்கும்.. அவனுக்கும் உமக்கும் உள்ள சமன்பாடு தெரிந்த பின்னர், உங்களையும் ரொம்பப் பிடிக்கிறது. இந்தப் பதிவை பார்க்க அழைத்தமைக்கு நன்றி. இல்லையெனில் நல்ல எழுத்தை பார்க்காது போயிருப்பேன்

    ReplyDelete
  16. //மூளையைக் கசக்கினால் ,உன்னைக் கூறும் கதைகள் மூலம் //

    'கதைகள் மூலம்' என்று ரொம்ப ஜாக்கிரதை உணர்வோடு தான் வார்த்தைகளை வெளிப்படுத்தியிருக் கிறீர்கள்.

    'முருகனின் திவ்விய குணங்கள் என்னுள் இருப்பதாக நான் கூற வரவில்லை. அவனுக்கும் எனக்கும் உள்ள சமன்பாட்டினை Equation)
    பாட்டில் வைத்து மகிழ்ந்தேன். இது ஒரு விதத்தில் நான் எடுத்துக் கொண்ட POETIC LIBERTY. அவ்வளவுதான்'-- என்று பின்னூட்டத்திலும் நிலை தடுமாறிப் போகாமல் நின்று இருப்பது நன்று.

    ''எதற்கும் ஏதாவது ஒரு சட்டம் கிடைக்கப்பெறும் என்று தான் நினைக்கிறேன். இது பற்றி கொஞ்சமே யோசித்தீர்களானால்..?/
    -- ஜீவி

    //யோசித்தேனே..பலனாகஒரு பதிவும் எழுதி இருக்கிறேன்.” முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும்”படிக்க:
    gmbat1649.blogspot.in/2011/03/blog-post_14.html //-- ஜிஎம்பீ

    சட்டங்களைக் கூடத் தேர்ந்தெடுப்பது நாம் தானே?.. அதனால் நம் கைவசம் இருக்கும் சட்டங்களுக்கு பொருத்தக் கூடியதாக 'தேர்வுப் பொருளை' அமைத்துக் கொள்கிறோம்
    என்று தெரிகிறது.

    தங்கள் அழைப்பிற்கு நன்றி, ஜிஎம்பீ சார்!

    ReplyDelete
  17. உங்கள் பதிவில் நான் ஏதோ எழுதப்போக, வாய்த்தது என் பதிவுக்கு ஒரு அருமையான பின்னூட்டம், வருகைக்கு மிக்க நன்றி ஜீவி சார்.

    ReplyDelete
  18. அன்பின் ஐயா..
    தங்களது முருக கானத்தினை வெகுவாக ரசித்தேன்..

    தாங்கள் முருகனை அணுகிய விதம் அருமை..

    இனிய பதிவினுக்கு மேலும் சுவை சேர்ப்பதாக வாசகர்களின் கருத்துரைகள்..

    இனிய பதிவினை வழங்கியமைக்கு நன்றி..

    ReplyDelete

  19. @ துரை செல்வராஜு
    பதிவுகள் எழுதும்போது பலரும் வந்து படித்துக் கருத்திட விரும்புகிறோம் கருத்திடும் வகையாப் பதிவினை அமைக்க நான் சற்று மெனக் கெடுகிறேன் என்று சொன்னால் மிகையாகாது. வந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  20. அழகெல்லாம் முருகனே.உங்களுக்கும் முருகனுக்கும் உள்ள (அப்பா, அம்மா, மகன் என்று) பெயர்ப் பொருத்தம்தான் , உங்களை முருகன்பால் இழுத்து இருக்குமோ?

    ReplyDelete