Tuesday, August 23, 2011

ஜப்பானில் நான்...

 

       
என்னுடைய ஜப்பான் பயணத்தை இருபத்தைந்து வருடத்துக்குப்
பிறகு நினைவு கூர்ந்து பதிவில் எழுதுவேன் என்று எண்ணி
யிருந்தால் அப்போதே நிறையக் குறிப்புகள் எடுத்து வைத்து
இருப்பேன்.நான் திருச்சி பாரத மிகுமின் கொதிகலன் தொழிற்
சாலை வால்வ் டிவிஷன் தரக்கட்டுப்பாட்டுக்கு பொறுப்பாளனாக
இருந்த சமயம் அது.கொதிகலன் தொழிற்சாலையிலேயே தனிப்
பட்டு இயங்கக்கூடிய சாத்தியக் கூறுகள் வால்வ் டிவிஷனுக்கு
இருந்தது. அதாவது அது மற்ற உற்பத்திகளிலிருந்து வேறுபட்டு
இருந்தது. அதைப் பற்றிய விவரங்கள் கூறுவதல்ல இப்பதிவின்
நோக்கம் BHELதன் உற்பத்திப் பொருட்களுக்கு நிறைய வெளிநாட்டு
நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. வால்வ்
டிவிஷனுக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
இருந்தது. அதில் ஒனறு ஜப்பானில் இருந்த TOA VALVE கம்பனி.
அவர்களுடைய உற்பத்தியின் நெளிவு சுளிவுகளை அறியவும்
நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளவும் BHEL சிலரை
ஜப்பானுக்கு அனுப்பியது.

வாழ்க்கையில் முதன் முறையாக ஆகாய விமானத்தில் பறக்கும்
அனுபவம். அதுவும் வெளிநாட்டுக்குச் செல்லும் அனுபவம்
அடியேனுக்கு வாய்த்தது சென்னை வரை ரயிலில் சென்று,அங்கு
பயண ஏற்பாடுகள் செய்து, விமானத்தில் டெல்லி சென்று,
அங்கிருந்து, ஒசாகா செல்ல வேண்டும். நாங்கள் செல்ல
வேண்டிய விமானம் இரவு ஒன்பது மணியளவில் புறப்பட
வேண்டும். ஆனால் பதினொரு மணியாகியும் புறப்படத் தாமத
மானது. விமான நிலையத்திலோ, விமானத்திலோ BOMB இருப்
பதாக செய்தி வந்ததாகவும்,அதனால் தாமதமானதாகவும் பிற்பாடு
அறிந்தோம்.ஏகப்பட்ட ஆர்வத்துடனும், பயத்துடனும் விமானம்
ஏறினேன்.இவனுக்கு எதுவும் தெரியாது, உடன் வந்தவர் வழி
 நடத்திச் செல்லவேண்டும் என்று வந்திருந்த உறவினர்கள்
ஒருவரை ஒருவர் வேண்டிக் கொண்டனர். என்னை வழியனுப்ப
யாரும் வர முடியவில்லை. மற்றவர்கள் செய்வது கண்டு அதே
போல் நானும் சீட் பெல்ட் மாட்டிக்கொண்டு, விமானப் பணிப்பெண்
சொல்லும் விதிமுறைகளையும் ஆபத்து காலத்திய வழிமுறை
 களையும் பயத்துடன் கேட்டுக் கொண்டேன் தலை சுற்றலாம்
 வாந்தி வரலாம் என்று ஏகத்துக்கு பயமுறுத்தி இருந்தார்கள்.
எதுவுமே நிகழவில்லை வானத்திலிருந்து இரவில்சென்னையைக்
கண்ட போது,கீழே கண்ட விளக்குகள், வைரங்களை வாரி
இரைத்தது போல் காட்சியளித்தது.இரவு நேரமானதால் சென்னையை   பார்க்கமுடிய வில்லை.

டெல்லி சென்றதும் விமான நிலையத்தருகில் ஐந்து நட்சத்திர
ஓட்டலான HOTEL CENTAUR-ல் தங்க வைக்கப் பட்டோம்.பின்
ஜப்பான் செல்லும் விமானம் ஏறினோம். BHEL-நிறுவன அதிகாரி
என்ற முறையில் எங்களுக்கு CLUB என்ற BUSINESS CLASS ஏற்பா
டாகியிருந்தது. டெல்லியிலிருந்து பாங்காக் வழியாக ஒசாகா
செல்லவேண்டும்..முதலில் எங்களுக்கு எகனாமி வகுப்பில் இடம்
கொடுத்து பாங்காக் சென்று மாற்றுவதாக உறுதியளித்தனர்.
பாங்காக் வரையிலான பயணம் எனக்கு, திருச்சியிலிருந்து
துவாக்குடி செல்லும் பஸ் பயணத்தையே நினைவு படுத்தியது.
பயணிகள் பெரும்பாலோர் நம் நாட்டு கிராம வாசிகளைப்போல்
தோற்றமளித்தனர். நிறைய பேர் இஸ்லாமிய சமூகத்தினர்போல்
இருந்தனர். பாங்காக்கில் பிசினெஸ் வகுப்புக்கு இடம் மாற்றிக்
கொடுத்தனர் வசதியான இருக்கை Slumberette like Hot drink இலவச
விநியோகம்.சாப்பாடுதான் பெரிய பிரச்சினையாய் இருந்தது.

மறுநாள் என் வாட்சில் காலை பதினொரு மணியென்று காட்ட
நாங்கள் ஒசாகாவி ல் இறங்கினோம் எங்களை வரவேற்க
வந்திருந்த டோவா பிரதிநிதி கொடி பிடித்து அடையாளம்
காட்டினார். அப்போது அங்கே மதியம் இரண்டு மணி என்று
இருந்ததாக நினைவு. எங்களை நாங்கள் தங்கும் இடத்துக்கு
அழைத்துச் சென்றார். பல மாடிக் கட்டிடம்,அது ஒரு ஓட்டல்
போல் இருக்கவில்லை. ஹாஸ்டல் போல இருந்தது. அதை
பராமரிப்பவர் முதலில் எங்களுக்கு ஒரு பாடமே எடுத்தார்.
அந்த இடத்தின் விதி முறைகளை விளக்கிக் கூறினார் என்று
பிற்பாடு புரிந்து கொண்டோம். வசதியான தனி அறை. ஒரு
நாளைக்கு 40- டாலர் வாடகை என்று நினைவு. அவர்கள்
கொடுக்கும் உணவு எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.நானோ
முட்டைகூட சாப்பிடாத 100% சைவம். எதையும் கேட்டுத்
தெரிந்து கொள்ள முடியாதபடி மொழிப் பிரச்சனை. அங்கிருந்த
வெண்டிங் மெஷினில் க்ரீன் டீ எப்போதும் கிடைக்கும்.
சாப்பிடுவது என்ன என்று தெரியாமல் சாப்பிட முடியாததால்
பெரும்பாலும் காலையில் ப்ரெட் சாப்பிடுவேன். அங்கிருந்தவரை
உணவு ஒரு பெரிய பிரச்சனையாகவே இருந்தது. ஜப்பானியர்கள்
அரிசி சாப்பிடுவர்ர்கள் என்று கேட்டறிந்து வீட்டிலிருந்து பருப்புப்
பொடிவகைகள் எடுத்துச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில்
அவை ஏதேனும் போதைப் பொருள்வகையைச் சேர்ந்ததா என்று
சந்தேகப்பட்டுக் கேட்டனர். அவர்கள் கொடுக்கும் சாதம் குழைந்து
இருக்கும். பருப்புப் பொடிகளும் அதிகம் உதவ வில்லை. இதனால்
நான் புகைத்த சிகரெட்டுகளின் எண்ணிக்கை கணிசமாகக்கூடியது
மாலைநேரங்களில் இந்திய ரெஸ்டாரண்ட் தேடி அலைந்து
உண்ண ஆரம்பித்தோம். எதிர்பார்க்காத அளவுக்கு செலவு எகிர
ஆரம்பித்தது.

அங்கிருந்தபோது இந்த ஜப்பானியப் பெண்கள் குறித்து எப்போதும்
ஒரு சந்தேகம் வரும். அவர்களுடைய வயதைக் கணிப்பதே மிகக்
கஷ்டம். எல்லோரும் மெழுகு பொம்மைகள் போல் தோற்றம்
கொண்டிருந்தனர். அனைவரும் ஒரு விதமாகக் குதித்துக் குதித்து
நடப்பார்கள். சாதாரணமாக நடக்கும்போது அவர்களது முடி பின்
பக்கம் மேலும் கீழும் பறந்து அடங்கும்.

ஒரு முறை ஒரு உயரமானக் கட்டிடத்திலிருந்து ஒசாகா நகரைக்
காண்பிக்க டோவா பிரதிநிதி அழைத்துச் சென்றார். நாங்கள் லிஃப்ட்
அருகே சென்றதும் அதை இயக்கும் ஒரு பெண் ஏதோ கூறி
எங்களை ஏற்றவில்லை.சற்றுப் பொறுத்து வந்து ஏதோசொல்ல
நாங்கள் லிஃப்டில் நுழைந்தோம். நாங்கள் வெளியேறும்போதும்
ஏதோ கூறினார். எதைச் சொல்லும்போதும் சிரித்துக்கொண்டே
கூறினார்.எங்களுடன் வந்தவரிடம் இது பற்றிக் கேட்டோம்.
முதலில் நாங்கள் ஏறமுற்பட்டபோது லிஃப்டில் இடமில்லாததால்
எங்களை ஏற்றமுடியாததற்கு வருத்தம் தெரிவித்தும் , மறுபடி
வந்தபோது எங்களை வரவேற்றும், நாங்கள்இறங்கும்போது
நாங்கள் லிஃப்ட் பயணம் ரசித்ததாக நம்புவதாகவும் தெரிவித்த
தாகவும் விளக்கம் கூறினார். இது மாதிரி லிஃப்டில் ஏறி இறங்கும்
அத்தனை வாடிக்கையாளர்களிடமும் இன்முகமாக பேசிப் பணி
புரியும் அந்தப் பெண்ணின் நினைவு எனக்கு வெகு நாட்களுக்கு
இருந்தது. அந்தப் பெண்ணையும் நம்மிடையே பணியாற்றும்
பலரையும் ஒப்பிட்டு நோக்காமல் இருக்க முடியவில்லை.

எங்களை TOA-வின் மேலதிகாரி அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார்
ஒரு ஜப்பானிய குடும்பத்துடன் ஒரு நாள் கழித்ததும் ஒரு
அனுபவம் அவருடைய தாயார் அவருடைய மண நாள் உடுப்பான
KIMONO-வைக் காட்டி மகிந்தார்.எல்லா நாட்டிலும் முதியோர்
குணம் ஒரேபோல் இருக்கிறது.எங்கள் தேவைகளைக் கவனித்துக்
கொள்ள நியமிக்கப் பட்டிருந்த அந்த இளம் அதிகாரி எங்களை ஒரு
ஓட்டலுக்குக் கூட்டிப்போய் ட்ரிட் கொடுக்க விரும்புவதாகக்
கூறினார்,நாங்கள் சரியென்றதும் அவருடைய மனைவியையும்
குழந்தையையும் கூட்டிவரலாமா என்று எங்களிடம் ஒப்புதல்
கேட்டது எங்களுக்கு எங்கோ நெருடியது. எல்லாம் முடிந்து
போகும்போது இது பற்றி அலுவலகத்தில் யாரிடமும் சொல்ல
வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது அவர் எதோ தவறு செய்
கிறார் என்று எங்களுக்கு உணர்த்தியது.

நாங்கள் ஷாப்பிங் செல்ல விரும்பி அவரால் எங்களுடன் கூட வர
இயலாத நிலையில் அவர் ஒரு உபாயம் சொன்னார்.ஜப்பானில்
பெரும்பாலோருக்கு ஆங்கிலம் தெரிவதில்லை. ஆங்கிலத்தில்
ஏதாவது கேட்டால் அரண்டு ஓடுகிறார்கள். இதைத் தவிர்க்க. சில
பொதுவான கேள்விகளை ஆங்கிலத்தில் நாம் கேட்க அதை எழுதி
அதன் கீழே அதையே ஜப்பானிய மொழியில் எழுதிகொடுத்தது
ஓரளவுக்கு உதவியாக இருந்தது கடைகளில் நாம் ஒரு பொருளை
கையில் எடுத்து பேரம் பேச முற்பட்டால் , முதலில் அந்தப்
பொருளை நம் கையிலிருந்து வாங்கி வைத்துக் கொண்ட பிறகே
பேச ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு
ஓடிவிடுவோமோ என்ற பயமாயிருக்கும்.

வால்வ் ஷாப்பில் ஒரு மெஷின் வாங்குவதற்கு ஏதோ திட்டம்
இருந்திருக்கும் போலிருக்கிறது அந்த மாதிரி மெஷின் தயாரிக்கும்
ஒரு கம்பனியிலிருந்து ஒருவர் எங்களை சந்தித்து உரையாடிக்
கொண்டிருந்தார். எங்களுக்கும் அந்த மெஷினுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை என்று அறிந்திருந்தும் அவர் எங்களை
உபசரிக்க ஒரு ஓட்டலுக்குக் கூட்டிப் போனார். அதில் உணவு
பரிமாறியவர்கள் எல்லோரும் பெண்கள். அரைகுறை ஆடைகள்
அணிந்து முயல் வேஷத்துடன் இருந்தனர். அது ஒரு வித்தியாச
மான அனுபவம்.

ஒசாகாவில் ஒரு துணி கடை வைத்திருந்த ஒரு சர்தார்ஜி
எங்களிடம் நல்ல சாரிகள் சிலவற்றை விற்றார். இன்னும்
அந்த சாரிகள் என் மனைவியிடம் புழக்கத்தில் இருக்கிறது.

ஒசாகாவில் இருக்கும்வரை அநேகமாக மெட்ரோ ரயிலில்தான்
பயணம். அங்கு எல்லோரும் ரயிலில்தான் பயணம் செய்கிறார்
கள். ரயிலில் நல்ல கூட்டமிருந்தாலும் எல்லோரும் ஒரு
ஒழுங்கை கடைபிடிப்பதால் நெரிசலிருந்தாலும் தெரிவதில்லை.
ரயில்பெட்டியின் கதவு வரும் இடங்களில் அடையாளம்
இட்டிருக்கிறார்கள். சரியாக அங்கே மக்கள் நிற்க ரயில் வருவதும்
மக்கள் ஏறி இறங்குவதும் எந்தக் களேபரமும் இல்லாமல்
நிகழ்கிறது. ரயில் வருவதும் போவதும் துல்லியமாக சரியான
நேரத்தில் நிகழ்கிறது. ரயிலின் வரவை வைத்து கடிகார நேரம்
செட் செய்து கொள்ளலாம்.  ஒரு இடத்தின் தூரத்தைக் குறிப்பிட
அவர்கள் ரயிலில் பத்து நிமிஷம் ரயிலில் இருபது நிமிஷம்
 என்றே கூறுகிறார்கள்.

ஒசாகாவிலிருந்து டோக்கியோவுக்கு JAL  ( ஜப்பான் ஏர்லைன்ஸ்)
-ல் பிரயாணம் செய்தோம். விமானத்தின் உள்ளிருந்தே விமானம்
டேக் ஆஃப் செய்வதையும் லாண்ட் ஆவதையும் ஓடு பாதை
தெரியுமாறு இருக்கையில் இருந்தே காணுமாறு CCTV அமைத்து
ஒளிபரப்புகிறார்கள். டோக்கியோவில் டிஸ்னி லாண்ட் கண்டு
களித்தோம். அமெரிக்காவில் இருப்பதன் டிட்டோ பிரதியாம்.


                      ஒசாகாவில் ஒரு சிற்றுண்டி சாலையில்

                              டோக்கியோ நகர வீதி ஒன்றில்

நாங்கள் டிஸ்னி லேண்ட் அவசியம் பார்க்க வேண்டும் என்று
அதற்கு வேண்டிய சௌகரியங்கள் செய்து தந்தனர். HATO BUS
என்னும் டோக்கியோவின் சுற்றுலா பேரூந்தில் எங்களை ஏற்றி
அனுப்பி வைத்தனர் டிஸ்னி லேண்ட் முக்கியமாக ஐந்து பிரிவுகள்
கொண்டது Adventure land Western land Fantasy land Tomorrow land
 World  Bazaarஎன்பவற்றில் நாம் எல்லாவற்றையும் ஒரு நாளில்
 காண இயலாதுஅதுவும் எங்களைப் போல் மொழி தெரியாமல்  
ருப்பவர்கள் எங்கு போவது எதை விடுவது என்று குழப்பமடைவது சகஜம்தானே ஒவ்வொரு பகுதியிலும் எதாவது ஒன்றிரண்டு
இடங்களைப் பார்ப்பது என்று தீர்மானித்தோம். முதலில்  
 அட்வென்சர் லெண்டில் Western river rail road என்று கூறப்பட்ட
ரயிலில் ஏறினோம்.அதில் பயணப்பட்டபோது ஆதிகால அமெரிக்க
காடுகளை சுற்றிப் பார்ப்பதுபோல் இருந்தது. திடீரென
ஆதிவாசிகள் தோன்றுவதும் நம்மை பயமுறுத்துவதும்
நம்மைக் கண்டு பயந்து ஓடுவதும் எல்லாம் எதிர்பாரா
அனுபவங்கள்.வெஸ்டெர்ன் லேண்டில் மார்க் ட்வேய்ன் ரிவர்
போட் பயணமும், ஃபண்டசி லேண்டில் சிண்டெரெல்லா காசிலும்
கண்டோம். ஆனால் மறக்க முடியாத அனுபவம் என்றால் அது,
டுமாரோ லேண்டில் ஸ்பேஸ் மௌண்டன் பயணம்தான். இதய
பாதிப்பு உள்ளவர், ஸ்பாண்டிலிடிஸ் மற்றும் பேக் பிரச்சினை
உள்ளவர் அதில் பயணம் செய்யக் கூடாது என்று அறிவிப்பு
இருந்தது. வாழ்க்கையில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பை
நழுவ விட எங்க்ளுக்கு மனசில்லை. ஏறிவிட்டோம். அது
எங்களை இருண்ட அண்டத்துக்கு அழைத்துச் சென்றது. அதி
வேகபயணம். எதிரில் நட்சத்திரங்களும் கிரகங்களும் வேகமாக
எங்களை நோக்கி வருவது போல் பக்கத்தில் பறக்கும் இருட்டில்
அந்த பயணம் ஐந்து நிமிடத்துக்குள் இருக்கும். அதை விட்டு
நாங்கள் இறங்கும் போது எங்கள் கால்கள் தரையில் பாவாமல்
நாங்கள் மிதப்பது போல் உணர்ந்தோம். என் உடன் வந்த நண்பன்
நடக்க முடியாமல் தலை சுற்றல் வந்து அங்கேயே உட்கார்ந்து
விட்டான். அவன் சகஜ நிலைக்கு வர ஒரு மணி நேரத்துக்கும்
மேலாயிற்று. ஊர்பேர் தெரியாத வெளிநாட்டில் மிகவும் பயந்து
விட்டேன்.

இந்த பயணத்தின் கடைசி கட்டமாக இந்தியா திரும்பினோம்.
சென்னை விமானத்துக்கு நிறைய நேரம் இருந்ததால் டெல்லி
சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்தோம். செண்டார் ஓட்டலில்
இருந்து வெளியே வரும்போது என் நண்பன் எதிரே கண்ணாடி
சுவர் போல் இருப்பது கவனிக்காமல் அதன் ஊடே நடக்க அவன்
மேல் அந்தக் கண்ணாடிச் சுவர் தப தப வென விழ, தலையில்
இருந்து ரத்தம் ஆறாகக் கொட்ட யார்யார் உதவியையோ நாடி,
அவனை மருத்துவ மனைக்குக் கொண்டுபோய் சிகிச்சைஅளித்து
தலையில் ஏகப்பட்ட தையல்களுடன் ஓட்டலுக்கு வந்தது ஒரு
மறக்க முடியாத அனுபவம்.

ஏதுமே அறிந்திராத நான் எப்படியெல்லாமோ அனுபவப்பட்டு என்
நண்பனை அவன் வீட்டில் சேர்ப்பித்தபோது நன்றியுடன் அவன்
பெற்றோர் என்னிடம் பேசியதில் பட்ட கஷ்டங்கள் எல்லாம்
மற்ந்து ஏதோ சாதித்தது போல் உணர்ந்தேன்.
-------------------------------------------------------------
 (பழைய புகைப் படங்களை மொபைல் கேமராவில் படம் பிடித்து 
    கணினியில் ஏற்றியது.)
                                                                                     



14 comments:

  1. மிகவும் அருமையான, விஸ்தாரமான, பயண அனுபவங்களை அள்ளி வழங்கியுள்ளீர்கள். படிக்க மிகவும் நன்றாக இருந்தது.

    எங்கு போனாலும் சாப்பாட்டு பிரச்சனைகளை சமாளிப்பது மிகவும் கஷ்டமாகவே உள்ளது. ருசியாக சாப்பிட்டுப்பழகிய சைவ சாப்பாட்டுகாரர்களுக்கு, வெளியூர், வெளிநாடுகளில் மட்டுமல்ல, உள்ளூரிலே கூட, [வீட்டை விட்டு வெளியேறினால்] ஒரு வேளையைத் தள்ளுவது ஒரு யுகம் போலத்தான் இருக்கக்கூடும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  2. எத்தனை வருடங்கள் கடந்தாலும்
    சில நினைவுகள் நேற்றைய நினைவு போல்
    நம்முள் நீங்காது இடம்பெற்றிருக்கும்
    அந்த வகையில் தங்களுக்கு முதல்
    வெளி நாட்டு பயணம் என்பதால்
    ஜப்பான் பயணம் மனதில் பசுமையாகப்
    பதிந்திருக்கும் என நினைக்கிறேன்
    இல்லையெனில் இத்தனை வருடங்கள் கழித்து
    இத்தனை விஸ்தாரமாக எழுதுவது கடினம்
    படங்களுடன் பதிவும் அருமை

    ReplyDelete
  3. உங்க அனுபவங்களை மிக அழகாக
    பதிவு செய்திருக்கீங்க.வெளி நாடு
    போகும் நம்மவர்களுக்கு இந்த சாப்பாடு
    பிரச்சினை ரொம்பவே அதிகம்தான்.
    வெற்றிகரமாக ஜப்பான் பயணம் முடித்
    து வந்ததற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இத்தனை வருடங்கள் கழிந்த பின்னும் இவ்வளவு விவரங்கள் கொடுத்திருப்பது பெரிய சாதனைதான்.

    ReplyDelete
  5. மிகவும் அருமையான, விஸ்தாரமான, பயண அனுபவங்களை அள்ளி வழங்கியுள்ளீர்கள். படிக்க மிகவும் நன்றாக இருந்தது.

    எங்கு போனாலும் சாப்பாட்டு பிரச்சனைகளை சமாளிப்பது மிகவும் கஷ்டமாகவே உள்ளது. ருசியாக சாப்பிட்டுப்பழகிய சைவ சாப்பாட்டுகாரர்களுக்கு, வெளியூர், வெளிநாடுகளில் மட்டுமல்ல, உள்ளூரிலே கூட, [வீட்டை விட்டு வெளியேறினால்] ஒரு வேளையைத் தள்ளுவது ஒரு யுகம் போலத்தான் இருக்கக்கூடும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  6. சமீபத்தில் நடந்த விஷயங்களை போலவே, மிகவும் சுவாரசியமாக தொகுத்து எழுதி இருக்கீங்க. உங்களின் மறக்க முடியாத அனுபவங்கள் - நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    நன்றி ஐயா.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

    ReplyDelete
  8. அத்தனை வருஷம் முன் நடந்தவற்றை இத்தனை சுவாரசியமாக எழுத முடியுமா? well written!

    ReplyDelete
  9. சுவாரஸ்யமான பதிவு. மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் ஐயா, பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  10. படங்களுடன் பதிவும் அருமை...
    என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...

    ReplyDelete
  11. கோபுசாரும் சமுத்ராவும் எப்படி எழுத்துப் பிசகாமல் ஒரேமாதிரி பின்னூட்டமிடுகிறார்கள்.?திரு. ரமணி, லக்‌ஷ்மி, டாக்டர்கந்தசாமி சித்ரா,ரத்னவேல், ஜனா,ரஜனிபிரதாப்சிங், கோபு சார், சமுத்ரா, மற்றும் முதல் வருகை தரும்
    ரெவெரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  12. வரிக்கு வரி ரசித்துப் படிக்கவைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  13. அய்யா, புகைப்படத்திர்க்கு சோடாபுட்டி கண்ணாடி போட்டு எடுத்தது போல தெரிகின்ற‌து :)

    ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவம். தங்களின் பயனஅனுபவ கதை அருமை அய்யா.

    ReplyDelete

  14. @ யாதவன் நம்பி
    தேடி வந்து தகவல் சொன்னதற்கு நன்றி ஐயா

    ReplyDelete