மன சாட்சி ( சற்றே பெரிய சிறுகதை.)
------------------------------------------------------
(1970-ஆம் வருடம் எழுதப்பட்ட கதை இது.நாடகத்துக்காக
கூடுதல் பாத்திரங்களுடன் மேடைக்கதை எழுதப் பட்டு
திருச்சிராப்பள்ளி பி. எச்.ஈ.எல் கம்யூனிடி செண்டரில் மேடை
ஏற்றப்பட்டது. ஆரம்பத்தில் கதாநாயகன் பாத்திரத்தில் நடிக்க
பலரும் தயங்கினர். நாடகம் மேடையேற்றப்பட்டபிறகு,அபார வரவேற்பு
கிடைத்தது. அக்காலத்தில் கதையின் கரு வித்தியாசமாகப் பட்டது )
--------------------------------------------------------------------------------------------------------------------
அழகாக உடுத்தியிருந்தான் அவன் ”ஸ்பாட்லெஸ் வைட்”
தூய்மையான வெண்மை. “போ டை “ அணிந்திருந்தான்.
விளம்பரங்களில் வரும் ஆண் மாடல்கள் கெட்டனர்.நல்ல
உயரம்;உயரத்திற்கேற்ற பருமன்;தன்னம்பிக்கை மிகுந்த
நடை. ஆனால் கண்களில் மட்டும் விவரிக்க முடியாத ஏதோ
ஒரு ஏக்கம். - வெறும் பிரமையாக இருக்கலாம்.
பொன்னிற மேனி;துடிக்கும் அதரங்கள்;படபடக்கும் இமைகள்;
வண்டாடும் விழிகள்;கொடியிடை; மென்னடை;”சிக்”ஆக உடை
அணிந்திருந்தாள்.புன்னகைத்த முகம் இடையிடையே இதழ்
விரியும்போது பளிச்சிட்டு தெரிந்தன விளம்பரப் பற்கள்.
மொத்தத்தில் ரவி ஒரு ஆணழகன்.மாலதி ஒரு பெண்ணழகி.
இருவரும் அந்த டான்ஸ் ஹாலில்தான் சந்தித்துக் கொண்டனர்
முதல் சந்திப்பிலேயே மாலதி தன் மனசை முழுமையாக
அவனிடம் பறி கொடுத்து விட்டாள்.
துரித கதியில் அடித்த “பீட்”டுக்கு ஏற்ப டான்ஸ் ஆடிக்கொண்டு
இருந்தனர்.தனித்தனியே ஆடாமல் ஓரத்திலேயே நின்று
கொண்டிருந்த இருவரும்,ஒருவரை ஒருவர் நோக்கினர்.
கண்ணசைவிலேயே இசைவினை உணர்ந்தனர். அவன் அவள்
இடையைப் பற்றினான். அவள் அவன் மீது கொடியெனத்
துவண்டாள்.நன்கு தேர்ச்சி பெற்ற பாதங்கள்” மொசைக் “
தரையில் இசைக்கேற்ப நழுவின. உடல்கள் ஒன்றையொன்று
தழுவியது.
“ யூ ஆர் ப்யூட்டிஃபுல் “
“ஓ..யூ ஆர் மார்வலஸ் “
கண்டு களித்ததிலும் பேசி மகிழ்ந்ததிலும் கொண்ட இன்ப
உணர்வு உடற் சோர்வு கொள்ளாமல் தடுத்தது. ஆடினர், ஆடினர்
விடாமல் ஆடினர்;மேலும் ஆடியிருப்பார்கள் ,ஆட்டிப்படைத்த
இசை மட்டும் தொடர்ந்திருந்தால்
டான்ஸ் முடிந்ததும் ஒருவரையொருவர் பிடித்திருந்த பிடியும்
நழுவியது. நிலைத்திருக்கும் அதே ஏக்கப் பார்வையுடன், --
இதுவும் பிரமையோ?--ரவி அவளைக் கண்டான். அவளோ
எதையோ நினைத்துக் கொண்டவள் போலதிடீரெனச் சிரித்தாள்
புரியாத அந்தச் சிரிப்பில் அவனும் கலந்து கொண்டான்.
“ஓ...மறந்துவிட்டேனே.. ஐ யாம் மாலதி.”
“ஐ யாம் ரவி. “
கை குலுக்கல்கள் .அர்த்தமற்ற சிரிப்பு. அதே ஏக்கப் பார்வை.
“ பார்” -க்கு போவோமே. பல நாள் பழகியவர்கள் போல் கை
கோர்த்துச் சென்றனர்.
“வைன் ?”
“ நோ. தாங்க்ஸ்.சாஃப்ட் ட்ரிங்க்ஸ் “
பிரகு பேசினார்கள் பேசினார்கள் என்னென்னவோ பேசினார்கள்
எதேச்சையாகப் பழக்கப் பட்டவர்கள் அடிக்கடி கண்டு களித்தனர்
கூடிக்குலவினர்.;தொட்டு மகிழ்ந்தனர்.மொத்தத்தில் நிரந்தரமாக
இன்புற்றிருக்கவென்றே ஒருவரைஒருவர் நாடினர்.
மாலதிக்கு ரவியிடம் காதல் ஏற்பட்டுவிட்டது. “எவ்வளவு
கண்ணியமானவர். எந்த நிலையிலும் தன்னிலை இழக்காத
உன்னத புருஷர். மணந்தால் இவரைத்தான் மணக்க வேண்டும் “
கன்னியவள் கற்பனையில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினாள்
”மாற்றங்கள் மாறி மாறிவரும் நிகழ்ச்சி நிரலின் மறுபெயர்தான்
வாழ்க்கை என்றாலும் அடிப்படை எப்போதுமே ஏமாற்றமாகத்தான்
இருக்க வேண்டும் என்பது என்ன நியதி.?தனக்காகவே ஏங்கும்
ஒருத்தியும் இல்லாமல் போய்விடவில்லை. நிரந்தரமாக
நெஞ்சில் குடிகொண்டுள்ள ஏக்கம் தீராதா என்ன.?”- இது மட்டும்
பிரமை அல்ல.ரவியும் சிந்திக்கத் தொடங்கினான்
“நம் திருமணத்தைப் பற்றிஎன்ன நினைக்கிறீர்கள் ரவி.?”ஆரம்பத்
திலிருந்தே அறியத் துடித்ததை கேட்டே விட்டாள் ஒரு நாள்.
ரவிக்கு நெஞ்சே வாய்க்குள் வந்து விடும் போலிருந்தது. இந்தக்
கேள்வியை அவன் எதிர்பார்த்துத்தான் இருந்தான். என்றாலும்
அதற்கான பதில் மட்டும் அவனால் சிந்திக்கப் படாமலேயே
இருந்தது. மேலெழுந்தவாரியாகக் கிளுகிளுப் பூட்டும் அந்தக்
கேள்வி, அவனது நெஞ்சின் அடித்தளத்தில் நெருஞ்சி முள்ளின்
நெருடலைத்தான் உண்டு பண்ணியது.
ஆவலோடு கண்ணிமைக்காமல் தன்னையே நோக்கிக் கொண்டி
ருக்கும் கன்னியிடம் என்ன பதில் கூறுவது.?சமாளித்துப்
பார்க்கலாமே..
“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன மாலதி.
மேலும் நாம் திருமணம் செய்துகொண்டுதான் ஆக வேண்டியது
என்ன.?”--அவனுக்கே அவனுடைய பதில் உள்ளத்தைப்புண்
படுத்துவதாக இருந்ததை அவன் உணர்ந்தான். மாலதியின்
கண்களில் நீர்த் திரையிட்டது.
“ ஸோ ,யூ டோண்ட் லவ் மீ. நீங்கள் என்னை காதலிக்கவில்லை
விரும்பவில்லை.”
“நீ தவறாக எண்ணுகிறாய் மாலதி. திருமணம் என்பது ஒரு
லைஸென்ஸ் கேவலம் மனிதர்களது அப்பட்டமான மிருக
வெறியை, உடற்பசியைத் தணித்துக் கொள்ள ஊருலகம்
வழங்கும் ஒரு பர்மிட். அது இருக்கிறது என்னும் ஒரே காரணத்
துக்காக மனித நிலையிலிருந்து மாறுகிறோம். தூய அன்பு
புறக்கணிக்கப்படுகிறது. நாம் பாவிகளாகிறோம்.அது
இல்லாமலேயே நாம் அன்பில் இணைய முடியாதா.?”
“ஆண்களுக்கு அது சரியாகத் தோன்றலாம். கண்ணிறைந்த
புருஷ்னுடன் நீங்கள் கூறும் திருமண லைசென்ஸ் பெற்று
கருத்தொருமித்து வாழ்வதுதான் பெண்களுக்கு அணிகலன்.
அதை பாவச் செயலின் வித்து என்று குதர்க்கமாகக் கூறுவது
வாழ்வின் அடிப்படைத் தத்துவத்திற்கே விரோதமான பேச்சு. “
பேச்சின் போக்கே ரவிக்கு என்னவோபோல் இருந்தது. ஆனால்
ஒன்றை மட்டும் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள விரும்பினான்.
“ நம் திருமணத்தின் முக்கிய நோக்கமே, இருவருக்கும் உள்ள
பரஸ்பர அன்பினை ஊருலகத்துக்கு தெரியப் படுத்தவேண்டும்
என்பது மட்டுந்தானா.?”
“இதைப் புரிந்து கொள்ள இவ்வளவு நேரமா உங்களுக்கு..”
“அதுவானால் நான் திருமணத்துக்கு உடன்படுகிறேன். ஐ எக்ரீ!”
ரவிக்கும் மாலதிக்கும் திருமணம் முடிந்தது.இருவரது வாழ்விலும்
திருமணம் வெறும் உறவாக மட்டும் அமைந்தது. மற்றபடி
எல்லாம் பழையபடிதான் இருந்தது. ரவி அதே ஆணழகனாக ,
கண்ணியமுள்ளவனாக ,கண்களில் ஏக்கம் சற்றே குறையப்
பெற்றவனாக --இது பிரமை யா.?--தொடர்ந்திருந்தான். அடிக்கடி
--மனிதனை மிருகமாக்கும் உடலுறவை வெறுக்கிறேந்-என்றும்
கூறி வந்தான்.
வெறுக்கிறேன் என்று அவ்வளவு எளிதில் கூற முடிகிறதா ?அப்படி
கூறமுடிந்தாலும் அது உண்மை உள்ளத்துப் பிரதிபலிப்பா?
வெறுமே உதட்டசைவின் விளைவா.?
அது சரி. இந்த ஆராய்ச்சிகளெல்லாம் எதற்கு.?பேரமைதி என்று
இல்லாவிட்டாலும் அமைதி என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்கு
நிச்சலனமாக இருந்த வாழ்க்கை நதியில் சூறாவளியின்
கொந்தளிப்பு குமிழியிடுகிறதோ என்று மட்டும் அடிக்கடி
தோன்றும்.
மாலதிக்கு ஒன்றுமே விளங்க வில்லை. விளங்கியது போல்
தோன்றினாலும் உள்ளம் ஒப்புக்கொள்ள வேண்டாத ஒரு
வேதனை. மாலதி மனம் வாடி இளைக்கத் தொடங்கினாள்
குழந்தை இல்லாக் குறைதான், ஏக்கம்தான் இதற்குக் காரணம்
இது நிங்க, பிள்ளிவரம் வேண்டி, ஆலய தரிசனம் செய்ய
அறிவுரையும் வழங்கினர் பெற்றோர்.
“பிள்ளை பெற்றுத்தான் தீரவேண்டும் என்று அப்படி என்ன
கட்டாயம்?அதற்கு ஆலய தரிசனமாம், ஆண்டவன் வழிபாடம்!
ஸில்லி.!--ஒரேயடியாக அடக்கி விட்டான் ரவி.
சாதாரணமாக கிடைக்கும் பொருளை,நாமாக வேண்டுமானால்
வேண்டாம் என்றால் ஒதுக்கலாம், சஞ்சலமிருக்காது.மணவினை
யின் இன்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டு ஒதுக்கப்
பட்டுள்ளன என்றுதான் மாலதி முதலில் நம்பினாள்.ஆனால்.....
ஆனால் அதுவே தொடர்ந்து அரிதாக இருப்பதை உணர்ந்த போது
ஏக்கம், ஏமாற்றம் பதின்மடங்காக இருப்பதை அறிந்தாள்.
ரவி இன்றைய நாகரிகத்தின் வாரிசாக இருக்கலாம்.பொருளாதார
முறையில் தரம் தெரிந்தவனக இருக்கலாம். ஆணும் பெண்ணும்
சமம் என்று உணர்ந்தவனக இருக்கலாம். இருந்தாலும் அவனும்
சாதாரண மனிதந்தான்.மாலதி தன்னிடம் இருந்து விலகிச் செல்
வதை உணர்ந்தான். காரணம் தெரிந்தும் ,அதை நீக்க வழி
தெரியாமல்--தெரியாமலென்ன...முடியாமல் வேதனைப் பட்டான்.
நாளாக ஆக, ஏக்கமும் தாபமும் அதிகரித்தது. பலர் முன்னிலை
யில் வெளியிடப்படாதஏக்க உணர்ச்சி சாசுவதமாக முகத்தில்
தெரியும் அளவுக்கு இருவரும் மனம் வேதனைப் பட்டனர்.
ஒரு நாள் ,”மாலதி டியர், இந்த மாதிரி வருத்திக்கொண்டும்
ஏங்கிக் கொண்டும் இருப்பதில் பயனில்லை. பிள்ளைச் செல்வம்
வேண்டும் என்ற ஆசை, உனக்கிருக்கும் அளவுக்கு, எனக்கும்
உள்ளது. ஒருபடி மேலாகவே உள்ளது என்று வேண்டுமானாலும்
சொல்வேன். காரணம் ..நான் ஒரு ஆண்பிள்ளை.என் ஆண்மை.....
என் வீரியம்....சே...!என் மனசே வெடித்துவிடும் போல் இருக்கிறது.
கையாலாகாதவன் என்று வெறுக்கிறாயா மாலு.?--சொல்லப்
படாமல் நினைக்கப்பட்டே வந்த எண்ணங்கள் கூறப்பட்டு
விட்டன.
அழகன் ,வலியவன் போல் தோன்றிய ரவி ,மாலதிக்கு அரை
நொடியில் ஒரு பேடிபோல் காட்சி அளித்தான். அதே வினாடியில்
அடி வயிற்றிலிருந்து குமட்டிக் கொண்டும் வந்தது அவளுக்கு.
ஆண் ஆணாக உள்ளவரையில் எது நேர்ந்தாலும் எதிர்த்துப்
போராடும் மனவலிமை பெண்களுக்கு உண்டு. ஆனால் நிலைமை
மீறினால். .....பெண்ணே ஆணுக்கு ஆறுதல் கூறவோ, கொண்டு
நடத்த வேண்டிய குண்ம் கொள்ளவேண்டும் என்றால், ........
அகிலமே அப்படி மாறுகிறது என்றால் ...பூமி தாங்காது. வெறுமே
வெடித்துவிடும்.
ஆத்திரம்,வெறுப்பு, பச்சாத்தாபம், ஆகிய உணர்ச்சிகள் மாலதிக்கு
மாறிமாறி வந்தன முதன் முதலாக ரவியிடம் மதிப்பு குறைவதை
உணர்ந்தாள்.ரவிக்கு மாலதி அவனை நன்றாகப் புரிந்து கொள்ள
வேண்டும் என்ற எண்ணம். மாலதிக்கோ அவன் இரக்கம்
நாடுகிறானென்று உணர்ந்ததும் ஒருவித தலைக்கனம்அவனிடம்
இல்லாத ஒன்று தன்னிடம் இருப்பதைப் போல், ஒரு எண்ணம்
மின்னல் காட்டி மறைந்தது
“இப்போது வெறுத்து என்ன பயன்.?”
“ஸோ , யூ ஹேட் மீ..?”
“அதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா.?என்ன இருந்தென்ன?
வாழ்க்கையை ருசிக்க முடியாத அளவுக்கு வெறுத்து விட்டது. “
“குழந்தை இல்லாத ஏக்கம் உன்னை வெகுவாக பாதித்து விட்டது.
என்ன பேசுகிறோம் என்றே புரியாத அளவுக்கு உன் கண்ணையும்
பகுத்தறிவையும் மறைக்கிறது.”
“ ஷட் அப்.!குழந்தை இல்லா ஏக்கமாம் ....மண்ணாங்கட்டியாம்...!
ஒரு உண்மையான ஆணோடு வாழ்ந்தால் குழந்தை ஏன் பிறக்காது
யூ ஆர் இம்பொடெண்ட்..! ஐ ஹேட் யூ...! உங்களை வெறுக்கிறேன்.!
இங்கிருந்து போய் விடுங்கள். ..! “
சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம். ஸோ.. தட் இஸ் இட்.
அதுதான் விஷயம். குழந்தை இல்லாத ஏக்கம் என்பதெல்லாம்
போலி. வாழ்க்கையை ருசிக்க முடியவில்லையே என்ற ஏக்கமே
காரணமா. பாவி ..பிள்ளை இல்லாத ஏக்கத்தால் பரிதவிக்கிறாள்
என்று பச்சாதாபப்பட்டால், என் மீதே சாடுகிறாளே...! அவளைச்
சொல்லியும் குற்றமில்லை.அவள் கூறியது அத்தனையும்
உண்மைதானே. வேறு எந்தப் பெண்ணோடு நான் வாழ்ந்தாலும்
இதே கதைதான். ஆனால்..அவள்......
முதன் முதலில் ரவிக்கு தன் இதயத்தில் ஒரு விரிசல் கண்டு
விட்ட உணர்ச்சி.தன் மீதே வெறுப்பும் நஞ்சு போல் கலந்து
பரவத் தொடங்கியது. திடீரென்று சுவற்றில் மண்டையை மோதிக்
கொள்ளத் தொடங்கினான்.கையாலாகாத்தனம் மீறும்போது
தன்னையே வருத்திக் கொள்வதில் கொஞ்சமாவது நிம்மதி
தோன்றுகிறதோ என்னவோ...
ஆண்மையின்மை என்ற உண்மையை மீறி ஆலய தரிசனங்களும்
ஆண்டவன் வழிபாடுகளும், பிள்ளை பெறச் செய்து விடுமா,?
பிள்ளைத் தவமாவது ஒன்றாவது..! எல்லாமெ வாழ்க்கையை
வாழ்கிறோம் என்று நிரூபிக்கத்தானே என்று சற்று முன்புதானே
உணர்த்தினாள். அப்படியில்லை என்றால் வாழ்க்கையை
நாங்கள் அனுபவித்து வாழவில்லை என்ற உண்மை
எல்லோருக்கும் தெரிந்து விடுமா.?என்னுடைய இயலாமை
வெட்ட வெளிச்சமாகி விடுமா..? என்னால் தாங்க முடியாது. இது
நடக்கக் கூடாது.
“வீடு வரை உறவு..!வீதிவரை மனைவி..!
காடுவரை பிள்ளை ! கடைசிவரை யாரோ..!”
தெருக்கோடியில் ரெகார்ட் அலறிக் கொண்டிருந்தது.நாராசம்
போல் காதில் விழுந்தது. சுவற்றில் மோதிய தலை விண் விண்
என்று வலிக்கத் தொடங்கியது. “கடக்..கடக் ”வீட்டுக் கூரையில்
இருந்து சப்தம். அண்ணாந்து நோக்கினான். ஓடியது ஒரு பல்லி.
எதிர் கொண்டழைத்தது இன்னொன்று. ஒரு வினாடி வாலைத்
தூக்கிப் போருக்கு ஆயத்தம் செய்வதுபோல் நின்றது ஒன்று.
அழைப்பை உணர்ந்தது மற்றொன்று. அருகில் சென்றது
முதலாவது. அணைப்பில் தம்மை மறந்தன இரண்டும். .இவற்றுக்
கல்லவா வேண்டும் குடும்பக் கட்டுப்பாடு....!
சன்னல் வழியே வெளியே நோக்கினான்.ஒரு நாயைத் தொடர்ந்து
பல நாய்கள் .ஒன்று மட்டும் அடுத்துஓடியது. மற்றவை தொடர,
ஓட்டம் ..ஓட்டம் அப்படியொரு ஓட்டம் வாழ்க்கையை அனுபவிக்க
நாய்களுக்குள்ளேயே அப்படி ஒரு ஓட்டம் என்றால்.....
“எண்ணித் துணிக கருமம் “ என்றான் வள்ளுவன். எண்ணாமல்
துணிந்து விட்டான் ரவி உண்மையில் எண்ணாமலேயே துணிந்து
விட்டானா.? சூனியத்தில் நிலைத்த பார்வையில் ஒரு சின்ன ஒளி.
“ஆம்.. அதுதான் சரி.”.என்ன இது ஞானோதயம் பிறந்து விட்டதா
இவனுக்கு..?
“மாலதி , விரும்பியோ விரும்பாமலோ நாம் மணந்து இதுவரை
சேர்ந்தும் வாழ்ந்தாகிவிட்டது. உனக்கு என்மேல் வெறுப்பு
ஏற்பட்டுப் பலனில்லை. ஒரு சமயம் நாம் விவாகரத்து செய்து
கொள்ளலாம். இந்த சமுதாயத்தில் நான் விரும்பினால் பிறகு
மறுமணம் செய்து வாழலாம். என் சக்தி எனக்குத் தெரிந்து நான்
மறுபடியும் மணப்பது என்று நினைத்தாலே அது பைத்தியக்காரத்
தனம். ஆனால்... நீ... ? என்னதான் இந்த சமூகம் முன்னேறி
இருப்பது போலத் தோன்றினாலும், ஏற்கனவே மணந்த ஒரு
பெண்ணை மறுமணம் செய்து வாழ்வளிக்க வருபவர் மிகவும்
அரிது. மணம் செய்யாமல் கட்டுக்கடங்காமல் பெண்மையைப்
புணர வேண்டுமானால் ஆயிரமாயிரம் பேர் கிடைப் பார்கள் இதை
நீ விரும்ப மாட்டாய். உன்னைப் போலுள்ள எவரும் விரும்ப
முடியாது. அதனால் டிவோர்ஸ் இஸ் அவுட் ஆஃப் க்வெஸ்டின்.
என்னோடு வாழ்ந்தே ,என் மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்தே
நீ வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தால்....ஐ யாம் அஷேம்ட் டு
ஸே.. சொல்வதற்கே வெட்கப் படுகிறேன். --எனக்கு ஆட்சேபணை
இல்லை..நீ அனுபவிக்கலாம். என் மனசாட்சிக்கு விரோதமில்லா
மல் நான் கூறுவதை நீ எப்படி வரவேற்பாயோ...என்ன எண்ணு
வாயோ எனக்குத் தெரியாது. “.
இரத்த நாளங்கள் புடைக்க , உணர்ச்சிப் பெருக்கீட்டினால், ஒரே
மூச்சில் கூறிய ரவியை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் அருவருப்
போடு பார்த்தாள் மாலதி. ஆனால் அவன் கூறியவற்றின் சாராம்
சம் சம்மட்டி கொண்டு அடித்ததுபோல் தலைக்கேறியது.
“ப்ளீஸ் ..லீவ் மி எலோன்.என்னைத் துன்புறுத்தாதீர்கள்.என்னை
நிம்மதியாக இருக்க விடுங்கள். “
ஸ்டாண்டில் கிடந்த கோட்டை எடுத்துத் தோளில் போட்டுக்
கொண்டான். சற்றே அவளை தலை தூக்கிப் பார்த்தான். ஆயிரம்
கதைகள் கூறியிருக்கும் பார்வைஎன்று வேண்டுமானாலும்
கூறலாம், இல்லை அர்த்தமற்ற சூனியப் பார்வைஎன்று வேண்டு
மானாலும் கொள்ளலாம். ரவி சென்றுவிட்டான். விரக்தியே உருக்
கொண்டு செல்வதுபோல் அவன் போவதையே மாலதி கண்டாள்.
இருந்த நிலையுணர இரண்டு மணி நேரம் பிடித்தது.உணர்ந்ததும்
தன்னை சுதாரித்துக் கொள்ள இரண்டே வினாடிகள் தான் பிடித்தது
அவளுக்கு உடனே தன் காலேஜ் பாய் ஃப்ரெண்ட்ஸ் ஒவ்வொருவர்
முகமும் அவள் அகத்தில் திரையிடப்பட்டுக் காட்டப் பட்டது.
கூடவே ரவியின் நண்பர் சிலரும் அவள் மனத்திரையில்
தோன்றினர். அகம் சிறிதே மலர்ந்திருக்க வேண்டும். ஒரு சிறிய
கீற்றுப்போல் புன்னகை இதழ் ஓரங்களில் நெளிந்தது.
சொன்னபடியே நடந்தும் காட்டினான் ரவி. தன் நண்பர்களை
வீட்டிற்கு அடிக்கடி வரவழைத்தான். மாலதியோடு கலந்து
உரையாட வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுத்தான். “ஹை
ஸொசைட்டி “அல்லவா.கண் முன் நடப்பவற்றைக் காணாதது
போலிருக்கவும் முடியும் என்று எண்ணினான். ஆனால் அவன்
எதிர்பார்த்த அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. மாற்றான்
மனைவி என்ற முறையில் வந்தவர்கள் ஒரு வரம்புக்குள்ளேயே
தான் பழகவும் செய்தனர். ரவிக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
அவன் கவலை அவனது இயலாமை எங்கே மற்றவர்களுக்குத்
தெரிந்துவிடுமோ என்பதுதா. அப்படித் தெரியாமல் இருக்க
எதையும் செய்யத் துடித்தான் ரவி.
அவனுடைய போக்கில் கண்ட மாற்றத்தைக் கண்டும் காணாதது
போல் இருக்க முயன்றாள் மாலதி. மேலும் என் மனைவி என்ற
ஸ்தானத்தில் இருந்து உனக்குத் தோன்றுகின்ற முறையில்
வாழ்க்கையை நீ அனுபவி என்று ரவி கூறியதன் அர்த்தமும்
விளங்கியும் விளங்காததுபோல் இருந்தது.
“மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கூறுகிறாராமே ? மனசாட்சி
தான் என்ன.?கொண்ட கொள்கைகளின்மேல் ,எண்ணத்தின்மேல்
இருக்கும் அசையாத நம்பிக்கையின் நிரந்தரமான சாசுவதத்
தன்மையைக் குறிப்பிடுவதல்லவா..?அப்படியானால் கொள்கை
கள் அல்லது எண்ணங்கள் -- அவைகள் சரியாகவும் இருக்கலாம்
தவறாகவும் இருக்கலாம்---காரணமாக எழும் செயல்கள் மன
சாட்சியின் பிரதிபலிப்பாகும் அல்லவா.? அதாவது செய்யும் எல்லா
செயல்களுக்கும் காரணங்காட்டி, தெளிவு படுத்தி, ஏதாவது ஒரு
கோணத்திலிருந்தாவது மனசாட்சிக்கு விரோதமில்லாதது என்று
நிரூபிக்கமுடியும்“தர்க்க குதர்க்க வாதங்களின் மூலம்,தன்னையே
தேற்றிக்கொள்ளவோ இல்லை மாற்றிக் கொள்ளவோ மாலதி,
மிகவும் சிரமப் பட்டாள் தானாக முன்னின்று இன்னபடி
செய்யலாம், இன்னபடி வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று
தலைமை தாங்கி நடத்தும் அளவுக்குபக்குவம் அவளுக்கு ஏற்பட
வில்லை என்றாலும் கால வெள்ளத்தின் சுழற்சியில் அடித்துச்
செல்லப் பட்டால்,சந்தர்ப்பங்கள் சரியாக வாய்த்தால், எதிர்த்துப்
போராடாமல் அனுபவிக்க வேண்டிய அளவுக்கு தன்னைத் தயார்
செய்து கொண்டாள். எதற்கும்தான் சமாதானம் கற்பித்துக்
கொள்ளலாமே.
சந்தர்ப்பங்களை மறைமுகமாக ஏற்படுத்திக் கொடுத்தாலும்
அவற்றைப் பற்றிக் கொண்டு, செயலாற்ற யாரும் முன் வராத
நிலையில் ரவி நேரடித் தாக்குதலில் இறங்கினான். உற்ற நண்பன்
சேகரிடம் மனந்திறந்துக் கொட்டி விட்டான் எல்லாவற்றையும்
ஒரு நாள்.
“எனக்கு வேண்டியது ஒரு குழந்தை சேகர். என் மனைவிக்குப்
பிறந்தாக வேண்டும். என் ஆண்மையின்மை யாருக்கும் தெரியக்
கூடாது. எங்கே மாலதியே என்னைக் காட்டிக் கொடுத்து
விடுவாளோ என்று பயமாக இருக்கிறது. வில் யூ ப்ளீஸ் ஹெல்ப்
மீ அவுட்.?எனக்கு நீ உதவுவாயா சேகர். ?
இந்த உலகம் கரும்பு தின்னக் கூலியா கேட்கும்.?வலிய வருவதை
விரும்பி அனுபவித்தான் சேகர். மாலதியும் மனசாட்சியின் துணை
யோடு வாழ்க்கையை அனுபவித்தாள் .ஆண் பெண் புணர்ச்சியில்
விளையும் விபத்தும் நேர்ந்தது. மாலதி கருவுற்றாள்.
ஆரம்பத்தில் மகிழ்ந்த ரவியும் நாளாவட்டத்தில் எதையோ பறி
கொடுத்த எக்கம் தன்னை வாட்டுவதை உணர்ந்தான். என்ன
இருந்தாலும் அவன் ஒரு ஆண் மகனல்லவா.?ஆண்டவனே
தனக்கு துரோகம் செய்து விட்டதுபோல் வெதும்பினான். உடல்
நலிந்தான். உள்ளம் குமைந்தான். மொத்தத்தில் வாழ்க்கையில்
இருந்த பிடிப்பையே விட்டொழிந்தான். நடை பிணமானான். ஒரு
நாள் அவனுக்குச் சித்தம் கலங்கி, பைத்தியமே பிடித்து விட்டது
“நான் ஒரு ஆண்பிள்ளை.என் மனைவி கருவுற்றிருக்கிறாள்.
எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. ...ஹா ..ஹா..ஹா. நான்
ஒரு ஆண்பிள்ளை” என்று கத்தவும் தொடங்கி விட்டான்.
இதுகாறும் தன்னோடு ஒத்து வந்த மனசாட்சி திடீரென்று கட்சி
மாறிவிட்டதை மாலதி உணர ஆரம்பித்தாள் ஆரம்பத்தில் சரி
கட்ட முயன்றாள். முயல முயல அது மூர்க்கமாக அவளை
எதிர்த்துச் சாடியது. தன் வயிற்றில் உள்ள கருவின் அசைவினை
உணரும்போதெல்லாம். தன் உடல் சில்லிடுவதைப்போல்
உறைவதை உணர்வாள். கற்பு நெறி பற்றி கட்சி சார்பற்ற
உண்மைகளை எண்ணி அலசுவாள். எப்படி முயன்றாலும்
அவளால் அவளையே சமாதானப் படுத்தி கொள்ள முடிய
வில்லை. மனதின் அடித்தளத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு
-சிவப்பு ஒளி- “முணுக் முணுக் “கென்று தோன்ற ஆரம்பித்து
சற்றைக்கெல்லாம் பூதாகாரமாக “நி ஒரு பாவத்தின் சின்னத்தை
தாங்கிக் கொண்டிருக்கிறாய். ..நீ பாவி ..பழிகாரி”என்று ஒளி
போட்டு -சிவப்பு ஒளிதான் -பிரகாசிக்கவும் தொடங்கியது.
மாலதிக்கு நிலை கொள்ளவில்லை ஆயிரம் யானைகள் நெஞ்சில்
ஏறி மிதிப்பதுபோல் இருந்தது.
கண்நிறைந்த கணவன் கருத்திழந்து, பித்துப் பிடித்த நிலையில்
இருக்க, கருத்திசைந்து கணவனுடன் வாழ வேண்டியவள்,பொலிவு
இழந்து, புன்னகை இழந்து, கற்பு நெறி தவறி மனசாட்சியை
துணைக்கழைத்தாள். அது ஏன் வருகிறது.?அவளை “அம்போ”என
விட்டு விட்டதும் அல்லாமல், குத்திக் குதறி கத்திக் கதறவும்
வைத்தது.
நெஞ்சத்து வலியோடு, உடல் உபதையும் சேர தாங்கமுடியாதவள்
தன்னிலை தவறினாள். மனசாட்சியின் பூதாகாரமான சிவப்பு ஒளி
உள்ளமெங்கும் ஒளியூட்டி வியாபிக்க, உடலிலும் சிவப்பு நிறம்
பரவியது.- சிவப்பு ரத்தத்தால்.-எல்லாமே தெளிவாக உணர்வது
போல் ஒரு பிரமை. கண்கள்,காணும் காட்சிகள் அனைத்தையும்
காணவே விரிந்தனவோ.!செவிகள் கேட்கும் அனைத்தையும்
கிரகிக்க முடுக்கி விடப்பட்ட நிலையடைந்ததோ..!மாலதிக்கு
ஒரு சில வினாடிகளுக்கு நினைவு மீண்டது. அப்போது அவள்
ரவி அவளையே வெறி பிடித்து நோக்குவதைக் கண்டாள். “நான்
ஆண்மையுள்ளவன்...எனக்குக் குழந்தை பிறந்து விட்டது..”
ரவியின் அலறல் அவளால் கேட்டு கிரகிக்கப்பட்டவுடன் அவள்
தலை சாய்ந்தது. பிறகென்ன..?அமைதி....ஒரே மயான அமைதி....
--------------------------------------------------------------------------------!
.
.
நல்ல உணர்ச்சிகள் கொப்புளிக்கும் வாக்கியங்கள். சாதாரண சிறுகதைகளிலிருந்து மாறுபட்டு நிற்கிறது. படித்ததும் ஒரு சோகம் மனதைக் கவ்வுகிறது. சிறுகதையின் நோக்கமே மனதை நெகிழ்விப்பதுதானே.
ReplyDeleteவித்யாசமா யோசிச்சு சற்றே பெரிய சிறுகதை சொல்லி இருக்கீங்க.சோகம் தூக்கலாதெரியுது. அதான் உங்க கதையின் வெற்றி.
ReplyDeleteநல்ல நடை. சில நேரங்களில் யார் மீது தவறு என்றே சுட்டிக்காட்ட முடியாத சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதுண்டு. இங்கு யார் தான் குற்றவாளி? காலத்தின் நிகழ்வுகள் தானோ?!
ReplyDeleteவருத்தம் வியாபிக்கிறது.
1970 க்கு
ReplyDeletethought much ahead... kudos for the daring attempt.
இப்படிப்பட்ட கதை ஒன்றில் யார்தான் நடிக்க விருப்பபடுவார்கள். இந்த கதை சமூக அவல நிலையை சுட்டிக்காட்டும் ஒன்று. அதனால்தான் நல்ல பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. கதையின் முடிவும் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கிறது ஐயா. நேற்று ஒரு திரைப்படம் பார்த்தேன். நிலவே மலரே எனும் திரைப்படம். தனது நண்பனுக்காக, நண்பனின் குழந்தைக்காக தனது காதலியை தாரை வார்க்கும் கதை. அடச்சீ என்றுதான் இருந்தது. அதேபோல் தங்களின் கதையும் அடச்சீ என்றுதான் இருந்தது. ஆனால் வாழ்வியலின் போராட்டத்தை மிகவும் அருமையாகவே எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDeleteஐயா!
ReplyDeleteமனம் வலிக்கிறது!
யாரை குறை சொல்வது
குற்றவாளிக் கூண்டில் யாரை ஏற்றுவது...?
புலவர் சா இராமாநுசம்
கதாபாத்திரங்களின் உண்மை உணர்வுகளைச் சொல்லும் கதையாக உள்ளது. மிகவும் சோகமாக நிகழ்வுகள்.
ReplyDeleteஇதுபோன்று இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆங்காங்கே இலைமறை காய்மறைவாக நடக்கவும் நடக்கலாம்.
பெரும்பாலானோர் இதுபோன்ற கதைகளை மனதளவில் ஒத்துக்கொண்டு, புரிந்து கொண்டு,அதிலுள்ள யதார்த்தத்தை நன்கு அறிந்திருப்பினும், வெளிப்படையாக கதைக்கு வரவேற்பு அளிக்க இந்தக் காலக்கட்டத்திலும் கூட, அவ்வளவு சுலபமாக முன் வரமாட்டார்கள்.
இதை ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி, மேடை நாடகமாக்கியிருக்கிறீர்கள் என்பது, ஆச்சர்யமாகவே உள்ளது.
தங்கள் துணிவுக்குப் பாராட்டுக்கள். vgk
அப்போது மட்டுமல்ல எப்போதும் இது போன்ற சிந்தனைகள் பெரும்பான்மையுடன் ஒத்துப்போகாததுதான் பாலு சார்.
ReplyDeleteஆனால் சமூகத்தில் புரிந்து கொள்ள முடியாத விலங்காய் மனித இனம் இருப்பதால் அவன் சிந்தனைகளும் அப்படிப்பட்டதாகவே இருக்கிறது.
ஒவ்வொரு கட்டுக்குள்ளும் இப்படியான மீறல்கள் நடந்தபடித்தான் இருக்கின்றன.திருக்குறள் போன்ற பொதுமறைகளும் வழிகாட்டியபடியேதான் இருக்கின்றன.காலம் கரைந்தோடுகிறது ஒளியும் நிழலும் தொடர.
இந்தமாதிரியான கருவுள்ள கதை பலதரப் பட்ட கருத்துக்களை சந்திக்கும் என்று எனக்குத் தெரியும். ஒரு ஆண்மையற்ற மனிதனின் உள்ள அழற்சிகளைக் கற்பனை செய்ததில் உருவானதுதான் இக்கதை. மேடையேற்றும்போது கத்தி மேல் நடப்பது போல் உணர்ந்தேன். மேலும் மனசாட்சி என்ற சொல்லுக்கு எந்த அளவுகோலும் இருப்பதில்லை என்னும் என் எண்ணமுமே இக்கதைக்குக் காரணம்.
ReplyDelete/பெரும்பாலானோர் இதுபோன்ற கதைகளை மனதளவில் ஒத்துக்கொண்டு, புரிந்து கொண்டு,அதிலுள்ள யதார்த்தத்தை நன்கு அறிந்திருப்பினும், வெளிப்படையாக கதைக்கு வரவேற்பு அளிக்க இந்தக் காலக்கட்டத்திலும் கூட, அவ்வளவு சுலபமாக முன் வரமாட்டார்கள்./ கோபுசாரின் கருத்தே என் எண்ணமும்.
நமக்கு விதிக்கப்பட்ட விதிகளின்படியான சமுகப் பின்புலத்தில் இறுக்கமாக வாழவேண்டியிருப்பதால் இக்கதை எக்காலத்திலும் தமிழப்புலத்தில எதிர் விளைவுகளைத்தான் சந்திக்கும். சுநதர்ஜி சொன்னதுபோல எப்படியிருப்பினும் பெரும்பான்மையின் கருத்துக்களையே சார்ந்திருக்கவேண்டிய நிலை. ஒரு மனைவியின் மனவுணர்வுகளை அதுவும் தன்னை விருப்பின்பேரில் மணந்துகொண்டவள் சுகமாக இருக்கவேண்டுமென்று விரும்பி செய்துவிட்டாலும் அதன் வன்மை அவனையும் கொன்றுவிடுகிறது. அவளையும் கொன்றுவிடுகிறது. உயிர் போதல் மட்டுமல்ல மனம் பேதலித்தலும்கூடதான்.
ReplyDeleteஎனக்குத் தெரிந்த ஒருவர் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் வழியில் வந்தவன் அவருடைய மகன். அவன் மட்டுமே அவரின் திரண்ட சொத்துக்கு வாரிசு. இப்போது யாரும் கேட்கமுடியாத நிலையில் அவன் மனைவிக்காக அவனே குறிப்பிட்ட ஆண்களை வீட்டுக்கு அழைததுவந்து விட்டுவிட்டு போகிறான். காசு வருகிறது. இத்தனைக்கும் அவனுக்கு வயதுவந்த பெண்ணும் பையனும் இருக்கிறார். இது கொழுப்பெடுத்தத்தனம். இப்படியும் இருக்கிறார்கள். காசு பிரதானமாக உள்ளது. இக்கதையில் மனஉணர்வுகள். ஒரு குழந்தைக்கான தேவையை வலியுறுத்தும் மனவுணர்வுகள்.
இக்கதையின் பொருண்மை அயல்நாட்டுத் தன்மையை ஒட்டியது என்றாலும். இன்றைக்கு இது தமிழ்ச் சூழலில் மறைவாக மலினப்பட்டு வருகிறது. ஒருகாலத்தில் வெளியாகும்.
இதை நீங்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே செய்திருப்பது பாராட்டிற்குரியது. ஒரு பெண்ணுக்கான உரிமைய மீட்டெடுப்பது பெண்ணை மீறி இங்கே ஆண் பங்கெடுத்திருப்பது இச்சிறுகதையின் பலம். சங்க இல்க்கியத்தில வெள்ளிவீதியார் எனும் பெண்மணி தன்னுடைய பாலியல் தேவையை நிறைவேற்றாத கணவனைப் பற்றிய பாடல் இருக்கிறது. (கன்றும் உண்ணாது கலத்தினும்படாது....எனும பாடல்).
கதையை எழுதிவிட்டு அதனை விளக்கவும் வேண்டிய சூழ்நிலை, ஒரு சமயம் எனக்குக் கதை சரியாக எழுத வராததால் இருக்கலாம். குழந்தை பிறக்காமலிருப்பது பெண்ணின் கர்ருவூலத்தில் பெண்முட்டையும் ஆண் விந்தும் ஒருங்கிணையாமல் இருப்பதால் ஏற்படுவது. குறை பெண்ணிடமோ ஆணிடமோ இருக்கலாம் . ஆனால் என் கதையின் கரு அதல்ல. ஒரு ஆண்மையற்றவனின் மனசில் ஏற்படும் எண்ணங்களும் சமுதாயத்தில் அதனால் அவன் நினைக்கும் அவமானங்களும்சேர, ஒரு உந்துதலில் செயல்படும் அவனது போராட்டமும், எண்ணற்ற கனவுகளுடன் இல்வாழ்வு தொடங்கும் ஒரு பெண்ணின் போராட்டமும், விளைவுகளால் ஏற்படும் குற்ற உணர்ச்சியும் , அதைத் தாங்க இயலாத சமுதாயப் பின்னணியுமே. கதையின் சாராம்சம். நான் கதையில் உடற்பசிக்காகவோ பணத்துக்காகவோ எங்கும் கதாபாத்திரத்தை சித்தரிக்கவில்லை.
ReplyDeleteஎன் நாடகத்தில் சிலர் நடிக்கத் தயங்கினர் என்றால் அது நிஜ வாழ்வில் சிலரது கேலிக்கு உள்ளாகலாம் என்ற பயமே. நடித்தவர் யாரும் தொழில்முறை நடிகர்களல்ல.
ஒரு வித்தியாசமான சூழலின் உணர்ச்சிப் போராட்டங்களையே கதையாகத் தந்துள்ளேன்.
வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
திருச்சி BHEL ல் கம்யூனிட்டி செண்டரில் மேடை ஏற்றப்பட்டது என்கிற வரி பார்த்து உற்சாகமானேன்.
ReplyDeleteகதை சிறப்பாக உள்ளது.
ReplyDeleteஅவன் அப்படி ஆக செய்தது இயற்கையின் குற்றம். அவர்கள் பிரிந்து மறுமணம் கண்டு வாழ்ந்திருந்தால் ஒருவரேனும் நல்ல முறையில் வாழ்ந்திருக்கலாம், அல்லது இருவருக்கும் நல்ல வாழ்கை துணை கிடைத்திருக்கலாம்.
திருமணம் முன்பே இருவரும் இது பற்றி பேசி இருந்தால், எதிர்பார்புகளை பகிர்ந்திருந்திருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது.
சுகமாக வாழ பிறந்தவன் மனிதன். தவறு ஏற்படுவது இயற்கை. சமுகத்தை பற்றி நிறைய நினைக்காமல் , அவர்கள் அடுத்த வழி கண்டிருக்க வேண்டும்.
சமுகம் எதையும் மறக்கும்.
மனசாட்சி என்பது அவரவர் வசதிக்கு ஏற்ப வளைக்கபடும் விஷயம். அதனால் தான் எல்லா அவலங்களும் நேர்கின்றன.
அய்யா வணக்கம்.
ReplyDeleteநீங்கள் இந்தக் கதையைப் பதிவிட்ட போது பதிவுலகிற்குள்நான் நுழைந்திருக்கவில்லை.
பாத்திரங்களின் அறிமுகத்தில் அவர்களின் விவரணையில் பழமையின் சாயல் பிரதிபலிக்கிறது. நீங்கள் 70 களில் எழுதப்பட்டது என்று சொல்லாமலேயே இக்கதை 80 ற்கு முன் எழுதப்பட்டது என்று யூகிப்பதற்கு இடமளிக்கிறது இப்பகுதி.
மற்ற பகுதிகள் சரளமாக கதையை நகர்த்திப் போகின்றன.
புனைவுகள் என்பவை சமுதாய அறங்களைப் போதிப்பன சமுதாயம் அவற்றிலிருந்து வழுவிச் செல்லும் போதுகூட அதைப் பிரதிபலிப்பதாய் இலக்கியம் இருக்கக் கூடாது என்கிற கட்டுப்பெட்டித் தனங்கள் இருந்த காலகட்டத்தில் இது போன்ற கருவினைக் கொண்டு நீங்கள் கதை எழுதியது நிச்சயம் துணிச்சலானதுதான்.
மாதொருபாகனின் தொடர்ச்சியான ஆலவாயனிலோ அர்த்தநாரியிலோ இதுபோன்று நல்லாப்பிள்ளை சித்தப்பாவை ஒரு பெரிய ஜமீந்தார் வீட்டுக்கு அழைத்து இரண்டு மூன்று தார மண முடித்தும் பிள்ளையில்லாக் கொடுமையை விளக்கிப் பிள்ளை வரம் வேண்டுவார் அம்முறையில் பிள்ளையும் கிடைக்கும். அதை நினைத்துக் கொண்டேன். இதுதான் மரபு என்று வகுத்துச் சென்று கொண்டிருக்கும் போது அதை மீறிச் செல்கின்ற எல்லாம் எதிர்ப்பினைச் சந்தித்தே ஆக வேண்டும்.
நாளடைவில் அப்படி மீறிப்போகின்றவர்கள் அதிகமாகின்ற போது அதுவும் மரபாகிவிடுகிறது.
நீதி போதனைக் கதைகளில் இருந்து நடப்பியலுக்கு நகர்ந்த இலக்கிய மரபு இதுபோன்றே ஆரம்பத்தில் எதிர்ப்பினைச் சந்தித்தே தமிழி்ல் வளர்ந்துள்ளது.
சற்றே திடுக்கிடல் இருந்தாலும் ( அது முற்கூறிய அறநாவல்களையே படித்ததால் வந்த திடுக்கிடல்) இது போன்ற கதைகளை வாசகன் படித்து விவாத்திக்கும் அளவிற்கு மொழி வளர்ந்துவிட்டது.
சமூகம் என்பது ஒரு மரத்தின் கனிந்து உண்ணக் கூடிய பழம் மட்டுமல்ல. அதன் அழுகும பகுதியும் சேர்ந்ததுதான்.
படைப்பாளியை பழத்தின் சுவையை மட்டுமே பாடிக்கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வது அழுகலையும் பழம்தான் என்று வாதத்திற்காய்ச் சொல்வது போலத்தான்.
நன்றி அய்யா.
கூடுதலாய் இந்தக் கதையை நீங்கள் எழுதிய போது நான் பிறந்தே இருக்கவில்லை.
ReplyDeleteரவியோட இயலாமையைச் சொல்லி எளிதாக விவாகரத்துப் பெற்று வேறு திருமணம் முடித்திருக்கலாம். மனசாட்சியும் உறுத்தி இருக்காது. சட்டரீதியாகவும் பாதுகாப்பு.அதை விட்டு விட்டுப் போகாத ஊருக்கு ஏன் வழி தேட வேண்டும்? :)
ReplyDeleteஇப்படி கதையை முடித்திருக்கலாம் / அப்படி கதையை முடித்திருக்கலாம் என்பதை விட, மனச்சாட்சியின் போராட்டம் உண்மை...
ReplyDelete
ReplyDelete@ ஊமைக்கனவுகள்
ஐயா வருகைக்கு நன்றி. நான் இதனை எழுதத் தூண்டிய காரணங்களைப் பதிவிடும் முன் சிலரது பின்னூட்டங்களின் தன்மை எப்படி இருந்திருக்கிறதுஎன்று தெரியவரும் வித்தியாசமான பொருண்மையில் எழுதினால் அது இலக்கியம் என்ற பெயரைப் பெரும் என்று நினைக்கவில்லை. இதையே நான் நாட்கமாகப் பதிவிட்டிருக்கிறேன் அப்போது சில காட்சிகளை நான் எப்படி அமைத்தேன் என்னும் கேள்வி எழுந்தது. நண்பர் ராதாகிருஷ்ணன் பின்னூட்டம் எப்படி எடுத்துக் கொள்வது தெரியவில்லை. நான் இதை ஒரு சவாலாகக் கருதியே எழுதினேன். அதுவும் நாடக மேடையில் கத்திமேல் நடப்பது போன்று இருந்தது. ஏன் எழுத நினைக்க வைத்த எண்ணங்கள் பதிவுக்கு பலரது வருகையே காணோம்.
ReplyDelete@ ஊமை விழிகள்
நீங்கள் என் இரு மகன்களையும் விட இளையவர் என்பது புரிகிறது.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
கதையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. சொல்ல வருவதைச் சொல்லவே கதை. நீங்கள் ஆழ்ந்து கவனித்திருந்தீர்கள் என்றால் உங்கள் யோசனையும் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப் பட்டு விட்டதற்கான இடங்களும் தெரியவரும். வருகைக்கு நன்றி மேடம்
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
கதையின் பின் புலத்தைச் சரியாகப் புரிந்து கொண்டதற்கு நன்றி டிடி.
ஒரு சிறுகதையின் வெற்றியே வாசகனின் மனதில் அது ஒரு எண்ண அதிர்வலையை உண்டாக்குவதில் தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த சிறுகதை வெற்றி அடைந்திருக்கிறதென்றே சொல்வேன் நான். சில சமயம் உண்மைகள் கசந்தாலும் உண்மை உண்மை தானே. சில பேரால் தான் இது போன்று துணிச்சலாக எழுதவரும். தாங்கள் அதை செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteகதை மிகவும் அருமை அதுவும் அந்த காலகட்டத்திற்கு மிகவும் துணிச்சலான கதையே! உணர்வுகளின் கொந்தளிப்புகள் அழுத்தமாகச் சொல்லப்பட்ட மிகவும் கனமான ஒரு கதை சார். இயக்குநர் பாலச்சந்தர் நினைவுக்கு வந்தார் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். அவருடைய பெரும்பாலான கதைகள் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் சற்று புரட்சியாகவே இருக்கும். கல்கி திரைப்படம் உட்பட. எப்படி ஒரு கால கட்டத்தில் இருந்த சில சமுதாயக் கோட்பாடுகள், விதிமுறைகள் காலம் மாற மாற மறுகின்றதோ அது போன்று தான் உங்களுக்குத் தவறு என்று தோன்றுவது உங்கள் பேரக் குழந்தைகளுக்குக் கண்டிப்பாகத் தவறு என்று தோன்றாது. அதே போன்று உங்களுக்குச் சரி என்று தோன்றுவது உங்கள் சம வயதினருக்கே கூடத் தவறு என்று தோன்றலாம் இல்லை உங்களது மூன்றாவது தலைமுறையினருக்குத் தவறு என்று தோன்றலாம்.
ReplyDeleteஒவ்வொரு குழந்தையும் வளரும் சூழல், காலகட்டம், அந்தக் குழந்தையைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அதற்கு ஏற்படும் அனுபவங்கள் இவற்றின் அடிப்படையில் தான் ஒவ்வொரு குழந்தை/நபரின் மனனிலையும், எண்ண ஓட்டங்களும், கருத்தும், கொள்கைகளும் அமைகின்றன. இந்த எண்ணங்கள், அது நேர்மறையோ, எதிர்மறையோ, சரி தவறு என்ற இரண்டு வாதங்கள் எல்லாமே மனதில் ஆழமாகப் பதிந்த அலைகளின், சுற்றி நோக்கி நடப்பவைகளின் பிரதிபலிப்பே. நம் மனதில் ஒரு கொள்கை, நிலைப்பாடு இருக்கும். அதை அனுசரித்து ஒரு மனம் அதாவது எண்ணம். இந்த சமுதாயத்தின் இல்லை என்றால் பெரும்பான்மையோரின் கருத்து, கொள்கைகள்ம் கட்டுப்பாடுகள் இவற்றைப் பார்க்கும் போது ஒரு மனம்/எண்ணம். இவை இரண்டிற்கும் இடையில் ஏற்படும் ஒரு மோதல். மனதில் வாக்குவாதம் ஏற்படாமல் இருக்கின்றதா? இதில் மனசாட்சி என்பதும் நம் மனம்/எண்ணம்தான். அதுவும் நமது மனமே! ஆழமாகப் பதிந்த என்ணங்கள், கொள்கைகளின் வெளிப்பாடு.
உதாரணமாகத் திருடுவது என்பது, பொய் சொல்லுவது என்பது தவறு என்று நமக்குப் போதிக்கப்பட்ட ஒன்று. சிறுவயதிலிருந்தே. நல்ல பழக்கவழக்கங்கள் என்பதாக. நாமே கூட சில சமயங்களில் பொய் சொல்ல நேரிடும். அந்த இடத்தில் நிச்சய்மாக நமது மனதின் ஆழத்தில் பதிந்துள்ள, போதிக்கப்பட்டக் கொள்கை தலை தூக்கி, "ஏய் நீ பொய் சொல்லற. தவறு. மாட்டிக் கொள்வாய்" என்று சொல்லும். நாம் அதைப் புறம் தள்ளி பொய் சொல்லி மாட்டிக் கொண்டு இன்னும் பல பொய்கள் சொல்லி சமாளிக்க நேர்ந்து மனம் நிலைகெட்டுத்தவிக்கும் போது, "சே அன்னிக்கு நம்ம குரல் சொன்னதே கேக்காம போயி...இன்னைக்கு அவஸ்தை" என்று புலம்பும் சமயம் அந்தக் குரல்...அதற்கு ஒரு பெயர் வேண்டும் இல்லையா? அதுதான் மனசாட்சி என்று நாம் சொல்லுவது. இந்தக் குரல் எல்லோர் உள்ளும் அவரவர் வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி வரலாம். அதனால் தான் நியாயப்படுத்தல். எப்படி சில சமயம் நாம் அதே பொய்யை ஒரு நபரைக் காப்பாற்ற வேண்டிச் சொல்லிவிட்டு வள்ளுவரைத் துணைக்கு அழைத்துக் கொள்கின்றோமோ (அங்கு வள்ளுவர் தான் மனசாட்சி நம் மனதில்)அதே போல்தான்....
பல சமயங்களில் மனதில் ஒரு முடிவு எடுக்கும் போதோ, தவறு செய்ய நேரிடும் போதோ, மனதில் போராட்டம் எழும்....அதில் சில சமயம் அந்த நல்ல குரலைக் கேட்டுவிட்டால் நல்ல முடிவும், தவறு செய்யாமல் போவதும் உண்டு. அப்படித் தவறே செய்ய நேர்ந்தாலும் நோ ஜஸ்ட்ஃபிக்கேஷன்....ஆம் தவறு செய்து விட்டோம் என்று சொல்லும் நேர்மை வேண்டும்...இல்லையேல் தவறு சரி என்றாகிவிடுமா? அது அந்த நபருக்கும் உள்ளில் இருக்கும் நீ செய்தது தவறு என்று. நிச்சயமாக, மன நிலை பிறழாதவராக இருந்தால். ஆனால் தவறை நியாயப்படுத்தல் அது அவரது ஈகோ.
உங்கள் கதை நிச்சய்மாக நல்ல கேள்விகளை எழுப்புகின்றது என்பதை மறுக்க முடியாது சார். நியாயமான கேள்விகளும் கூட.
ஸோ மனசாட்சி என்பதும் நமது மனம்தான்.
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
வாருங்கள் நண்பரே. பதிவு எழுதும் போது சுட்டி கொடுத்தால் அநேகமாகப் பலரும் படிக்காமல் போகும் பொழுது, வருகை தந்து வாசித்து கதையையும் கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து கருத்திட்டதற்கு சம்பிரதாய நன்றி கூறுவதை விட உக்களைப்பாராட்டவே தோன்றுகிறது. நீங்கள் பாலசந்தரைப் பற்றிக் குறிப்பிடும்போது , எனக்கும் என் பாதை மாறி இருந்தால் ஒரு வேளை அந்த லைனுக்கே போய் இருக்கலாம் என்னும் எண்ணம் வரும்.என் பதிவு ஒன்றில்பகிர்ந்தும் இருக்கிறேன்.சரி எது தவறு எது என்பதை நான் ஆராயவில்லை.ஆனால் மனசாட்சியைப் பற்றிக் கொண்டு எந்த செயலுக்கும் நியாயம்கற்பிக்கும் சிலரைக் கண்டதால் எழுந்த கற்பனையே இக்கதை என்று கூறிக் கொள்ளவிரும்புகிறேன். நேரம் இருப்பின் என் நாடகத்தையும் பதிவில் வாசியுங்கள். அட் லீஸ்ட் முதல் காட்சி. நாடக உத்தியை வலையில் கொண்டு வர ஒரு முயற்சி வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கும் நன்றி சார்.