Friday, June 15, 2012

நினைப்பது நடக்க.......


                                                   நினைப்பது நடக்க........
                                                  --------------------------- 


எண்ணங்களின் சிதற்ல்கள் இம்முறை பதிவாகிறது. எனக்கு ஊர் சுற்றப் பிடிக்கும். ஆனால் இப்போது சுற்றிவந்த ஊர்களின் நினைவுகளைத்தான் சுற்றமுடிகிறது. ஏனென்றால் எனக்கு வயதாகி விட்டதாம். நான் எங்கும் தனியாகப் போகக் கூடாதாம். அதனால் நான் ஒரு VIRTUAL  PRISONER ஆகவே இருக்கிறேன். வயதை மூன்று விதமாக
கணக்கிடலாம். ஒன்று-CHRONOLOGICAL ( எண்ணிக்கையின் அடிப்படையில் ).இரண்டு-BIOLOGICAL ( உடல் நிலை அல்லது உடற்கூற்றுப்படி.) மூன்றாவது-PSYCHOLOGICAL ( மனநிலை அல்லது உளக்கூற்றுப்படி ) முதல் நிலை நாம் பிறந்த தேதியின் அடிப்படையில். நம்மால் ஏதும் செய்ய முடியாது. இரண்டாவது நிலையை நாம் ஓரளவுக்கு நம் பிடிப்பில் கொண்டு வரலாம். நல்ல உணவு,பழக்க வழக்கங்கள், தேகப் பயிற்சி இத்தியாதி விஷயங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும். நல்ல சிந்தனைகளும் நம்பிக்கையான நடைமுறைகளும் மூன்றாம் நிலை வயதேற்றத்தை மாற்றும். நான் எனக்கு வயதாகிவிட்டது என்று எண்ணுவதில்லை. இருக்கும் நாளையும் நேரத்தையும் பொன்னாக மதிக்கிறேன். நேற்று என்பது வசூலான காசோலை. நாளை என்பது ப்ராமிசரி நோட். இன்றென்பதே கையிலிருக்கும் பணம். லாபகரமாகச் செலவு செய்வோம்.

ஆனால் அதீத அன்பில் சிக்குண்டு, நிறைய நேரங்களில் என் சுதந்திரத்தை பறி கொடுக்க வேண்டி உள்ளது .என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிறேன் நான். அப்படி நடக்க விடுவது ரிஸ்க்கானது என்கிறார்கள் என் மனைவியும் மக்களும். இருதலைக் கொள்ளி எறும்பாய் நடுவில் நான்.

முதலில் கூறினேன், எனக்கு ஊர் சுற்றப் பிடிக்கும் என்று. ஆனால் யாராவது கூட இருந்தால்தான் எங்கும் போக விடுகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன் ரயில்வேயில் சர்க்குலர் ட்ரெயின் டிக்கட் எடுத்து. ஜெய்ப்பூர், மதுரா, ஆக்ரா, வாரணாசி அல்ஹாபாத், ஹர்த்வார், ரிஷிகேஷ், டெல்லி என்று 22 நாட்கள் பயணித்தது நினைவுக்கு வருகிறது. எங்களுடன் என் அண்ணாவும் அண்ணியும் வருவதாக ப்ளான் செய்து டிக்கெட் எல்லாம் வாங்கிய பிறகு அண்ணா அண்ணி வர முடியவில்லை என்றார்கள். எங்கள் டிக்கெட்டையும் கான்செல் பண்ணும்படி என் பிள்ளைகள் கூறினர். நான் விடாப்பிடியாக மறுத்து பிரயாணம் மேற்கொண்டோம். மதுராவில் இருந்து என் பெரிய அண்ணாவும் அண்ணியும் சேர்வதாகக் கூறி இருந்தனர், அவர்களுக்கு நாங்களும் எங்களுக்கு அவர்களும் துணை. அந்த 22 நாட்கள் மறக்க முடியாதவை, ஜெய்ப்பூரில் எங்களை வரவேற்று எங்களுக்கு எல்லா உதவியும் செய்ய என் மூத்த மகன் ஏற்பாடு செய்திருந்தான். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஜெய்ப்பூரையும் சுற்றிலும் உள்ள இடங்களையும் பார்த்தோம். அங்கு சில இடங்களைப் பார்த்துக் குறிப்புகளை படித்த போது ராஜபுத்திரர்களின் வீர தீரக் கதைகளைப் படித்திருந்த எனக்கு, ஏனோ அவர்கள் ஆங்கிலேயர்களுக்குத் துணை போனவர்களாகவே தோன்றியது. 

மதுராவில் ஏறத்தாழ மூன்று நாட்கள் இருந்தோம். கண்ணன் பிறந்த இடம் முதல் அவனது லீலைகள் நடந்த இடங்கள் எல்லாம் பார்த்தோம். அங்கு வசிப்பவர்கள் தங்களை ப்ரிஜ்வாசி என்று அழைத்துக் கொள்கிறார்கள். அங்கு எங்கும் ஏழ்மையே தாண்டவமாடுவதைக் கண்டோம். தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபடேஹ்பூர் சிக்ரி எல்லாம் பார்த்து வாரணாசி போயிருந்தோம். ஹனுமான் காட் அருகே சங்கர மடத்தில் தங்கினோம். அப்போது அங்கே ஒரே களேபரமாயிருந்தது. என்ன வென்று பார்த்தால் “சித்திராதிகா தன் கணவன் சரத் குமாருடன் தம்பதி பூஜை செய்ய வந்திருந்தார்.
பெரிய அண்ணா அண்ணியுடன் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை செய்து விட்டு, அங்கிருந்து த்ரிவேணி சங்கமத்துக்கு கையில் துழாவும் படகில் கங்கையில் பயணித்தோம். எந்த பயமும் இல்லாமல் பயணித்தது இன்று நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. த்ரிவேணி சங்கமத்தில் படகிலிருந்து மூங்கிலில் கால் பதித்து நிற்க வைத்து இறக்குகிறார்கள் அதுவும் மறக்க முடியாத அனுபவம். காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு  கால பைரவர் சன்னதியில் அங்கிருந்த பாண்டா பிரசாதம் தருமுன் ஒவ்வொருவரையும் குனிய வைத்து முதுகில் ஓங்கி அடிப்பதைக் கண்ட நான் என்னை அவர் முதுகில் தட்டுவதை விரும்பவில்லை என்று கூறியதை வித்தியாசமாகப் பார்த்தனர். ஹர்த்வார் ரிஷிகேஷ் என்று ஒவ்வொரு இடத்திலும் மறக்க முடியாத அனுபவங்கள். 

அந்த சுற்றுலாவில் ஒட்டக வண்டி சவாரி, டோங்கா சவாரி, படகு சவாரி, கேபிள் கார் சவாரி டெல்லியில் மெட்ரோ ரயில் சவாரி என்று எல்லாம் பயணித்தோம். சாதாரண காமிராவில் நிறைய புகைப் படங்கள்  எடுத்தோம். அந்த சமயத்தில்தான் என் அண்ணியின் ALZHEIMER நோய் தொடங்கினதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன, அது தெரியாமல் பல முறை அவரிடம் கோபப்பட்டுக் கொண்டிருந்தார் பெரிய அண்ணா,

அந்த டூரில் எனக்குள் எழுந்த சந்தேகம், இதுதான். ராமர் கோயில் விஷயமாக நடந்த எல்லாக் கலவரங்களும் காசியிலும் மதுராவிலும் நிகழ வாய்ப்பிருந்தது. இந்த இரண்டு புண்ணிய ஸ்தலங்களும் அமைந்திருக்கும் இடமும் சூழலும் அப்படி இருக்கிறது. மசூதியில் கோவிலா, கோவிலில் மசூதியா என்று சந்தேகப் படும்படி அமைந்திருக்கிறது. போலீஸ் கெடுபிடிகள் அதிகம் என்று தோன்றினாலும் அது தேவையே என்றும்  புரிந்தது

நான் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன் என்றாலும் கிழக்கில் விசாகப் பட்டினத்துக்கு அப்பால் ஒடிஷா, வங்காளம் எல்லாம் செல்ல வில்லை. எப்படியாவது பிள்ளைகளிடம் அனுமதி பெற்று கொனாரக் கோயில்களுடன் கொல்கொத்தா நகரையும் காண ஆசை. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்......

ஆனால் நடப்பதெல்லாம் ஏதோ காரணம் கொண்டே நடக்கிறது., அந்த டூரில் எங்கள் இருவருக்கும் 22 நாட்கள் பயணிக்க ஆன செலவு ரூ.20,000-/ க்கும் குறைவே. ஆனால் இப்போது அதே பயணம் அதற்கு இரு மடங்குக்கும் மேலாகும் என்னால் அவ்வளவு பணம் செலவு செய்ய முடியாது. இப்போது புரியும் அனுமதி ஏன் தேவை என்று. மாற்றம் ஒன்றே மாறாதது, மாற்றங்கள் எண்ணத்தில் செயலில் புரிதலில் என்று எங்கும் இருக்கிறது.எதுவும் ஏதோ காரணத்தோடே நிகழ்கிறது என்றாவது ஒரு நாள் நாம் உயிர் துறக்கத்தான் வேண்டும் யாரும் உயிரோடு இந்த உலகை விட்டுப் போக முடியாது. இருக்கும் காலம் மகிழ்ச்சியோடு இருக்கவும் அதற்கு வேண்டியதைச் செய்யவும் அனைவரும் பாடுபட வேண்டும் அனைவரும் எனும்போது அவரவருக்கு மட்டுமல்ல அடுத்தவருக்கும் என்ற பொருளில்தான் எழுதினேன்        






5 comments:

  1. யாரும் உயிரோடு இந்த உலகை விட்டுப் போக முடியாது. இருக்கும் காலம் மகிழ்ச்சியோடு இருக்கவும் அதற்கு வேண்டியதைச் செய்யவும் அனைவரும் பாடுபட வேண்டும் அனைவரும் எனும்போது அவரவருக்கு மட்டுமல்ல அடுத்தவருக்கும் என்ற பொருளில்தான் எழுதினேன் //

    தங்கள் அனுபவத்தின் விளைச்சலாக
    சொல்லப்பட்ட கட்டுரையின் இந்த இறுதி வரிகள்
    அதிகம் மனம் கவர்ந்தது
    ம்னம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @ ரமணி , உங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. //ஆனால் நடப்பதெல்லாம் ஏதோ காரணம் கொண்டே நடக்கிறது.//

    அந்தக் காரணம் வேதாளம் கடைசியாகச் சொன்ன, விடை தெரியாக் கதையில் விக்கிரமாதித்தன் விழித்தது போல் இருக்கிறது.

    ReplyDelete
  4. சமீபத்தில் படித்ததில் மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  5. @ அப்பாதுரை--சமீபத்தில் படித்ததில் மிகவும் பிடித்தது/---என் ப்ளாகிலா அல்லது....? பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete