Sunday, December 16, 2012

சாந்தனுவின் சந்ததிகள்..


                              சாந்தனுவின் சந்ததிகள்.....
                             ---------------------------------



திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொள்வது அவரவர் வம்சம் தழைக்க என்பதுதான் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படும் செய்தி. நமது சமூகத்தில் வம்சம் தழைப்பது என்று கூறும்போது தகப்பனின் வம்சாவளி என்றுதான் பொருள்படுகிறது. இன்னாரின் மகன் என்று சொல்வதும் தந்தையைக் குறித்தே இருக்கும். நான் இங்கு கூறுவது சட்டப்படி அனுமதிக்கப் பட்ட குடும்ப வாழ்க்கை முறையையும் அதன் மூலம் வளரும் தலை முறையையும் குறிப்பிடுவதாகும். எக்செப்ஷனல் கேஸ்களைக் காட்டி என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது.
தலைமுறை இடைவெளி என்பதே தலைமுறைகளைப் பற்றிய செய்திகள் தெரியாமல் இருப்பதைக் குறிக்கிறதோ.?நான் ,என் தந்தை ,என் தந்தையின் தந்தை- இதை மீறிய தலைமுறை பற்றி இக்காலத்தில் தெரிந்து கொள்ள முடிகிறதா.? இதையெல்லாம் பற்றி சிந்தனை எழுவது நியாயம்தானே. சந்ததி தழைக்க வேண்டி மறுமணம் செய்யும் பலரையும் நாம் காணலாம். 

நம்முடைய மிகப் பெரிய இதிகாசமான மஹாபாரதத்தின்/ல் வம்சாவளி குறித்துப் படிக்கும்போது என்னவெல்லாமோ நினைக்கத் தோன்றுகிறது. சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.அவற்றைக்குறித்தஅபிப்பிராயங்களை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்..மஹாபாரதக்கதையை அதன் ஆதி வடிவில் நான் படித்ததில்லை. பலரும் படித்திருக்க வாய்ப்புமில்லை
மஹாபாரதம் வியாசமுனிவர் கூற விநாயகரால் எழுதப் பட்டது என்று நம்பப் படுகிறது. வியாசர் பராசர மஹரிஷிக்கும் சத்தியவதி எனும் செம்படவப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று அறியப்படுகிறார். இந்த வியாசமுனிவர் மஹாபாரதக் கதையின் ஒரு பாத்திரமாகவும் அறியப் படுகிறார். பராசர முனிவரிடம் கலந்ததில் இருந்து சத்தியவதியைச் சுற்றி ஒரு நறுமணம் திகழ்ந்திருந்ததாம். அந்த நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு சாந்தனு மஹாராஜா அவள் மேல் காதல் வசப்பட்டாராம். இந்த சாந்தனு மஹாராஜா ஏற்கனவே மணமானவர்.. கங்கையின் மேல் காதல் கொண்டு அவளை மணமுடிக்க விரும்பியபோது கங்கை ஒரு நிபந்தனை இட்டாள். அவளது எந்த செய்கையையும் சாந்தனு ராஜா கண்டு கொள்ளக் கூடாது என்பதே அது. சாந்தனு கங்கை திருமணத்தின் விளைவாய் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றையும் கங்காதேவி நீரில் எறிந்து விட . ஏதும் பேசாமல் இருந்த ராஜா எட்டாவது குழந்தையை நீரில் இடப் போகும்போது தடுத்துக் காரணம் கேட்கிறார். நிபந்தனையை மீறி கேள்வி கேட்ட சாந்தனு ராஜாவைவிட்டுப் பிரிந்து போகிறார் கங்காதேவி அந்த எட்டாவது குழந்தையை அரச குமாரனுக்கு வேண்டிய எல்லாத்தகுதிகளையும் கற்பித்து அவனை சாந்தனு ராஜாவிடம் ஒப்படைக்கிறார். அவர்தான் மஹாபாரதத்தில் பிதாமகர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர்.

என்ன செய்வது.?சில விஷ்யங்களைப் பற்றிக் கூறும்போது, கதையையும் கொஞ்சம் கூறத்தான் வேண்டியுள்ளது. படிப்பவர்களுக்கும் மஹாபாரதக் கதையின் ஆரம்ப பகுதிகளை ரிவைஸ் செய்ததுபோலும் இருக்கும்.

வேட்டையாடச் சென்ற சாந்தனு ராஜா சத்தியவதியை மணக்க வேண்டுமென்றால் அவளது பிள்ளைகள்தான் அரசுக்கு வாரிசாக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனையாக சத்தியவதியின் தந்தை விதித்தார். அதை ஏற்றுக் கொண்டால் தேவவிரதன் என்று பெயர் கொண்ட பீஷ்மர் அரசுரிமையைத் துறக்க வேண்டும். அவர் துறந்தாலும் அவருக்குப் பிறக்கும் வாரிசுகள் உரிமை கோராமல் இருக்க வேண்டி தேவ விரதன் பிரம்ம சாரியாய் காலங்கழிக்க சபதம் பூண்டார்.

சத்தியவதிக்கும் சாந்தனு ராஜாவுக்கும் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்று இரண்டு மகன்கள் பிறந்துஅவர்களுக்கு மணமுடிக்க பீஷ்மர் அம்பிகை அம்பாலிகை எனும் ராஜகுமாரிகளை சுயம்வரத்திலிருந்து அபகரித்து வந்து மணமுடித்தது ஒரு பெரிய கதை. அதை விட்டு விட்டு நம் கதைக்கு வருவோம். சித்திராங்கதன் அல்பாயுசில் உயிர் துறக்க விசித்திர வீரியன் மூலமும் மக்கள் இல்லாமலிருக்க சந்ததி வேண்டி ( யாருடைய சந்ததி.?), தாயார் சத்தியவதி, தன் முதல் கணவர் பராசர மஹரிஷி மூலம் பிறந்த வியாசரிடம் அம்பிகை அம்பாலிகைக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டுகிறார். வியாச மஹரிஷியும் தன் சகோதரர் மனைவிகளைப் புணர்ந்து மக்கட் செல்வம் தருகிறார். அம்பிகையுடன் சேர்ந்தபோது ரிஷியின் கோலத்தைக் கண்டு பயந்து கலவியின் போது கண்களை மூடிக் கொண்டதால் அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாகப் பிறந்ததாம், அவர்தான் திருத ராஷ்டிரர் என்னும் பெயர் பெற்றவர் அம்பாலிகையோ பயந்து முகமெல்லாம் வெளிறிப் போயிற்றாம். அந்தக் கலவியின் விளைவாய்ப் பிறந்தவர் பாண்டு என்று அழைக்கப் பட்டார். இரு பேரப் புத்திரரும் குறையுடன் பிறக்க மறுபடியும் முயல வியாசரை சத்தியவதி வேண்ட அம்பிகை அம்பாலிகை இருவரும்  விரும்பாமல் அவர்களது பணிப் பெண்ணை வியாசரிடம் அனுப்பி விடுகின்றனர். அந்த சேர்க்கை மூலம் பிறந்தவர் விதுரர்.

.திருதராஷ்டிரர், பாண்டு இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.?

இது மட்டுமல்ல. மூத்தவன் பிறவிக் குருடன் என்பதால் இளையவன் பாண்டு வுக்கு முடி சூட்டுகிறார்கள். பாண்டுவுக்கு ஒரு சாபம். மனைவியுடன் கலந்தால் மரணம். அவரும் வெறுத்துப் போய் தன் இரண்டு மனைவிகளுடன் காட்டுக்குப் போய் விடுகிறார். அவரது சந்ததி தழைக்க என்ன செய்வது.? குந்தி தேவிக்குக் கிடைத்த வரம் அதற்கு வழி வகுக்கிறது. மந்திரம் உச்சாடனம் செய்ததும் யமதர்மன், வாயு, இந்திரன் மூலம் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறாள் குந்திதேவி. தான் பெற்ற பேறு பாண்டுவின் இளைய மனைவிக்கும் அருளி, அவளும் தேவர்கள் மூலம் இரண்டு புத்திரர்களை பெற்றுக்கொள்கிறாள். இவர்களே பஞ்ச பாண்டவர்கள். இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.?

மஹாபாரதக் கதையில் தர்மம் உபதேசிக்கப் படுவதாகக் கூறப் படுகிறது. குருடன் என்னும் காரணத்தால் அரசைத் துறக்க வேண்டி வந்த திருதராஷ்டிரன் தம்பி பாண்டு இறந்தபோது தன் மக்கள் அரசுரிமை பெற விரும்பியது தவறா? துரியோதனனைவிட  யுதிஷ்டிரர் மூத்தவர் என்பதால் அவருக்கு அரசுரிமை என்பது சரியா.? இந்த மாதிரியான பின்னணியில் பங்காளிச் சண்டையை முன் வைத்து எழுதப் பட்ட மஹாபாரதம் , தன்னுள்ளே நூற்றுக் கணக்கான கிளைக்கதைகளை அடக்கி மிகப் பெரும் இதிகாசமாய் திகழ்கிறது.

சுவையான கதை என்பதை ஒப்புக்கொள்ளும்போது, பல நெருடலான விஷயங்கள் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

ஒருவரை சுய அறிமுகம் செய்து கொள்ளும்போது அபிவாதயே சொல்லச் சொல்கிறார்கள் ( ஒரு சமூகத்தில் ) அப்படி அறிமுகம் செய்து கொள்ளும்போது  தன்னுடைய குலம் கோத்திரம் போன்றவற்றைக் கூறி இன்னாரின் பேரன் இன்னாரின் புதல்வன்  இன்ன பெயர் கொண்டவன் என்று கூறி வணங்க வேண்டுமாம். அதைப்பற்றிப் படிக்கும்போது சாந்தனுவின் சந்ததிகள் சொல்வது எப்படி இருக்கும் , சரியாக இருக்குமா என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு.
மேலும் இந்தப் பதிவில் நான் குறிப்பிடும் சம்பவங்கள் படித்துப் பெற்றதும் கேட்டுப் பெற்றதுமாகும். சரியெது தவறெது என்று கூறமுடியாது. மூலக் கதையை மூல வடிவில் படித்துணர்ந்தவர் உள்ளாரோ?
--------------------------------------------------------------------------         .    
  

22 comments:

  1. என்னங்க, நீங்க இப்படி படார்னு போட்டு ஒடச்சிட்டீங்க. சோ எழுதின மகாபாரதம் படிச்சிருக்கீங்களா? அதுல அவர் மகாபாரதம் நெஜமா நடந்தது என்று பல ஆணித்தரமான வாதங்கள் மூலம் சொல்றார்.

    ReplyDelete
  2. பாண்டவர்களும் கௌரவர்களும் சந்தனுவின் சந்ததிகளே. சந்தேகம் வேண்டாம்.

    இத்தனை வருஷம் கழித்து பிச்சினை பண்ணாதீர்கள்.

    ReplyDelete
  3. தனக்குப் பிறந்தால் தான் சந்ததி என்ற கண்ணோட்டத்தில் அவர்கள் சந்ததி அல்ல. ஆனால் 'தனக்குப் பிறந்தால் தான் சந்ததி' என்பது மிகக் குறுகியக் கண்ணோட்டமாகப் படுகிறது.

    மகாபாரதம் பெரும்பாலும் ஒரு கற்பனைக் கதை. சில அசல் நிகழ்வுகளை ஒட்டி புனையப்பட்ட அருமையான காவியம். அதற்கு மேல் அதில் அற்புதம் எதுவும் இல்லை. மகாபாரதத்தைப் படித்து வாழ்க்கை நெறியைக் கற்க வேண்டுமென்றால் அத்தனை பேரும் திருடராகவும், பித்தலாட்டக்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும், பொறாமை பேராசை பிடித்தவர்களாகவும் இருப்போம். மகாபாரத நெறி நாம் தவிர்க்க வேண்டியதைக் குறிப்பதாக வேண்டுமானால் சொல்லலாம்.

    பழனி கந்தசாமி சார், சோவுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. மகாபாரதம் நடந்த போது நேரில் பார்த்துப் பொறுக்கிய ஆணிகளைத் தான் இப்ப அடிச்சிருக்காரு. நம்புங்க :)



    ReplyDelete

  4. @ டாக்டர் கந்தசாமி- நான் எந்தப் பிரச்சனையையும் உருவாக்கவில்லை ஐயா. அதுதான் எழுதி விட்டேனே. படித்தபிறகு அபிப்பிராயங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று.

    ReplyDelete
  5. இதிகாசத்தில் இதெல்லாம் சகஜமையா.....:)

    ReplyDelete
  6. நீங்கள் அவ்வளவு காலம் தள்ளிப் போகவேண்டாம்
    இப்போது ராகுல் எப்படி நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்
    அவரது தாத்தாவின் குடும்பத்தை சேர்ந்தவராகத்தானே
    அவரை கருத வேண்டும் (அதாவது பாட்டியின் கணவர் )
    அதிகாரமும் பலமும் என்ன சொல்கிறதோ அதுதான்
    எப்போதும் சரி .

    ReplyDelete

  7. @ ரமணி- ராஹுல் நேரு குடும்ப வாரிசா? ஃபெரோஜ் காந்தியின் சந்ததியல்லவா.? பெயரிலேயே தெரிகிறதே. இந்துக்களின் வழக்கப்படி இந்திரா பிரியதர்ஷினி, மணமான பிறகு இந்திரா காந்தியானார். அவர் ஒரு பார்ஸியை மணந்ததால் குருவாயூர் கோயிலில் அனுமதி மறுக்கப் பட்டதாகப் படித்த நினைவு.

    ReplyDelete
  8. முதலில் உங்கள் புரிதலே தவறு.பராசர முனிவர் வெறும் உடல் ஆசையிலே சத்யவதியைக் கலக்கவில்லை. குறிப்பிட்ட கிரஹ சேர்க்கையில், குறிப்பிட்ட நக்ஷத்திரத்தில் தனக்குப் பிறக்கப் போகும் பிள்ளையால் வேதங்கள் வளம்பெறும் எனவும், சநாதன தர்மம் சிறப்புப் பெறும் என்றும் அந்த மகனால் ரிஷிகள் அனைவருமே சிறப்புப் பெறுவார்கள் என்பதையும் அறிந்து வைத்திருந்த பராசரர் தன் மனைவியிடம் செல்ல வேண்டி கங்கையைக் கடக்கிறார். சத்யவதி தான் படகை ஓட்டுகிறாள். படகில் செல்கையில் குறிப்பிட்ட நேரம் வந்துவிட, பராசரர் அவளிடம் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி, இந்த நேரத்தைத் தான் விட முடியாது எனக் கூறி அவளோடு தான் இணைய அநுமதி கேட்கிறார்.

    ReplyDelete
  9. சத்யவதி தயங்க, அவளிடம் தயக்கம் வேண்டாம் எனவும், பிறக்கும் குழந்தை மஹாவிஷ்ணுவின் அம்சம் எனவும், அந்தக் குழந்தையைத் தானே வளர்ப்பதாகவும்,இதன் மூலம் அவள் கன்னித் தன்மைக்குப் பங்கம் வந்துவிடாது எனவும் சொல்ல அவளும் இணங்குகிறாள். கங்கையின் நடுவிலே இருந்த ஒரு தீவில் அவர்கள் இணைய உடனே பிறக்கும் குழந்தைதான் வியாசர். தீவில் பிறந்ததாலும் கருநிறமாக இருந்ததாலு மஹாவிஷ்ணுவின் அம்சம் என்பதாலும் குழந்தைக்குக் க்ருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரிட்டுப் பராசரர் வளர்க்கிறார். தனக்கு இணங்கிய மச்சகந்தி என்னும் சத்யவதிக்கு அவள் உடலில் அதுவரை இருந்த மீன் வாடை போய் சுகந்தம் வீசும்படியும் அருள்கிறார். இவள் தான் பின்னர் ஷாந்தனுவை மணக்கிறாள்.

    ReplyDelete
  10. கங்கையும் காரியமில்லாமல் எந்தக் குழந்தையையும் தூக்கி கங்கையை வீசவில்லை. அவளுக்கும் ஷாந்தனுவுக்கும் பிறக்கும் குழந்தைகள் அஷ்டவசுக்கள் ஆவார்கள். அஷ்ட வசுக்களும் வசிஷ்டரின் பசுவைத் திருடி வந்துவிட்டார்கள். அதில் கடைசி வசுவான பிரபாசனின் மனைவி தான் வசிஷ்டரின் பசுவைக் கண்டு ஆசைப்பட்டது. அவனுக்கு உதவியதால் எல்லா வசுக்களுக்கும் பூமியில் பிறக்க வேண்டி வசிஷ்டர் சாபம் கொடுக்கிறார். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்க, மற்ற ஏழு பேரும் பூமியில் பிறந்ததுமே பெற்ற தாயால் சாபவிமோசனம் கிடைக்கப் பெறுவார்கள் எனவும், கடைசி வசுவான பிரபாசன் மட்டும் நீண்ட காலம் வாழ்ந்து தான் விரும்புகையில் மரணத்தைத் தழுவும் பேறு பெற்று தர்மாத்மாவாக வாழ்ந்து வருவான் எனவும், திருமணம் செய்து கொள்ளாமல் பிரமசாரியாகவே இருப்பான் எனவும் கூறுகிறார். தவறு செய்துவிட்டதால் கர்மாவுக்கான பலனான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் வேறு வழியில்லை என்கிறார். அவர்கள் கேட்டுக் கொண்டபடி கங்கையை ஷாந்தனுவின் கண்களில் பட வைத்து அவனுக்கு மனைவியாக்கி அவர்கள் மூலம் முதல் ஏழு வசுக்கள் உடனடியாக சாபவிமோசனம் பெறுகின்றனர். கடைசி வசுவான பிரபாசன் மட்டுமே பீஷ்மனாக பூமியில் தங்கி இருந்து தன் கடமையைச் செய்துவிட்டுத் தான் விரும்புகையில் உயிரை விடுகிறான்.

    ReplyDelete
  11. ஷாந்தனுவிடம் கங்கை இந்த உண்மையைச் சொல்லி விட்டால் அவன் வசுக்கள் தன் மகனாகப் பிறக்கையில் அவர்களைப் பிரியச் சம்மதிக்க மாட்டான். அவர்களுக்கு வசிஷ்டர் சொன்னபடி சாபவிமோசனம் கிடைத்தே ஆகவேண்டும். ஆகையால் அவனிடம் இருந்து மறைத்தாள், எட்டாவது வசுவையும் நீரில் தூக்கி எறிகையில் தான் குழந்தையோடு மறைந்தவள் தன் மகனை நன்கு வீரனாக வளர்த்து ஆளாக்கிப் பதினாறு வயதில் திரும்ப ஷாந்தனுவிடமே ஒப்படைப்பாள்.

    ReplyDelete
  12. நானெல்லாம் மஹாபாரதம் முழுவதும் படித்திருக்கிறேன். இணையத்தில் கூட முழு மஹாபாரதம் கிடைக்கிறது. சோ எழுதினதும் படித்துள்ளேன். தொலைக்காட்சியில் வந்த போதும் பார்த்து வியாசருக்கும் அதில் காட்டுவதற்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்த்துக் குறித்துக் கொண்டுள்ளேன். மற்றபடி அதைக் கதை என்றால் சுவாரசியமான கதை. நிகழ்வு என்றாலும் உண்மையாக நடக்கும் நிகழ்வு.

    ReplyDelete
  13. குந்திக்குக் குழந்தை பிறப்பது குறித்தும் எழுதலாம். ஆனால் நீளமாக ஆகிவிடும். பின்னர் ஒரு சமயம் வாய்க்கையில் எழுதுகிறேன்.

    ReplyDelete
  14. கிசாரி மோஹன் கங்குலியின் மஹாபாரதம் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது; இப்போது தமிழாக்கம் செய்யப்பட்ட முழு மஹாபாரதம் மொத்தம் 5,000 ரூபாய்க்குக் கும்பகோணத்தில் ஒரு நண்பரால் பதிப்பிக்கப்பட்டு, தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. வியாசரின் ஸ்லோகங்களோடு இருக்கும். இடைச்செருகல்கள் கிடையாது. வில்லி பாரதம் படித்தவர்கள் வியாசரைப் படித்தால் வித்தியாசங்கள் நன்கு புரியும். கம்பரையும், வால்மீகியையும் போல. :))))))

    ReplyDelete

  15. @ கீதா சாபசிவம்.
    மஹா பாரதக் கதை எனக்கும் தெரியும். நான் மூல வடிவில் படித்ததில்லை என்றுதான் கூறினேன்.மூல வடிவு என்று ஒன்று இருக்கிறதா.? வாய்வழி மூலம் சொல்லப் பட்டு வரும் நிகழ்ச்சிகள் எத்தனை சிதைவு பெற்றபின் நமக்குக் கிடைக்கிறதோ தெரியாது. எல்லாமே கதைகள்தான். ஆனால் சுவாரசியமான கற்பனைகள் நிறைந்த கதைகள். நான் இப்பதிவை தமிழில் வரும் தொலைக்காட்சி ஒளிபரப்பத் துவங்குமுன்னே எழுதி இருக்கிறேன்.எல்லா நிகழ்வுகளையும் அப்பட்ட உண்மை என்று நம்ப என் மனமிடங்கொடுக்கவில்லை. கதைகளையே உண்மை என்று வாழும் மக்களிடையே மனம் உறுத்தும் பகுதிகளை சொல்ல வேண்டும் என்றுபட்டது. உங்கள் நீண்ட பின்னூட்டத்திலும் என் சந்தேகங்களுக்குப் பதில் இல்லை. நீண்ட பின்னூட்டத்தில் பாரதக் கதையில் தெரிந்த ஒரு சில பகுதிகளையே கூறி இருக்கிறீர்கள். சிரமம் எடுத்து எழுதியதற்கு நன்றி.

    ReplyDelete
  16. தமிழில் எந்த மஹாபாரதத் தொடரையும் தொலைக்காட்சியில் பார்த்தது இல்லை; அதோடு நான் சொல்லி இருப்பது அனைத்துமே உங்கள் சந்தேகத்துக்கான பதில்களே. பராசரரோ, கங்கையோ, வியாசரோ, அல்லது குந்தியோ, மாத்ரியோ வெறும் உடல் ஆசையில் குழந்தைகள் பெறவில்லை. பராசரர் மச்சகந்திக்கு அளித்தது மிகப் பெரும் பேறு. நியாயமாய் அவர் மனைவிக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் விதியின் வலிமையை எவராலும் வெல்ல முடியாது என்பதோடு ஒரு மீனவப் பெண்ணின் மூலமாகவே வேதகுரு கிடைக்கவேண்டும் என்பதும் விதி வகுத்ததே. வியாசர் செய்தது விந்துதானம். நியோகம் என்பார்கள். மூலவடிவு கிடைக்கும் இடங்களையும் எழுதி உள்ளேன்.

    http://www.mediafire.com/download/84z48001y28x22w/Mahabaratham_Adiparva.pdf
    மேற்கண்ட சுட்டியில் சென்றால் மூலம் முழுதும் மொழிபெயர்க்கப்பட்டுக் கிடைக்கும். ஆய்வாளர்களால் சரிபார்க்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டவையே. நம்பிக்கை வேண்டும். அவ்வளவே. மனம் உறுத்தும் பகுதிகளாக உங்களுக்குப் பட்டிருக்கிறது. அவ்வளவே. அதன் உள்ளார்ந்த தாத்பரியத்தைப் புரிந்து கொண்டால் மனம் உறுத்தாது. :)))))

    ReplyDelete
  17. வாழ்க்கை நெறியைக் கற்கவேண்டுமானால் அத்தனை பேரும் திருடராக இருக்க வேண்டியதில்லை. அதிலிருந்து பெறவேண்டியவை பொறாமையும், பேராசையும், பெண்ணாசையும், மண்ணாசையும் ஒரு மனிதனை எப்படிச் சீரழிக்கிறது என்பதே. சாரத்தை விடுத்துச் சக்கையை மட்டும் வைத்துக்கொண்டால் என்ன செய்ய முடியும்? :)))))))

    ReplyDelete
  18. ஐயா , சாந்தனுவின் சந்ததிகள் வாசித்தேன் . பின்னூட்டங்களையும் படித்தேன் .மகாபாரதம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுக் கி.பி . 4 ஆம் நூற்றாண்டுவரை புதுப் புதுப் பகுதிகள் சேர்க்கப்பட்டு இப்போது உள்ள நிலையில் கிடைக்கிறது என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர் . யார் யார் எந்தக் காலத்தில் எதைச் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை .மிகப் பழைய காலப் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் நம் காலத்தில் விசித்திரமாய்த்தான் படும் .

    ReplyDelete
  19. ஐயா , சாந்தனுவின் சந்ததிகளையும் பின்னூட்டங்களையும் வாசித்தேன் . மிகப் பழைய காலத்துப் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் நம் காலத்தில் விசித்திரமாய்த்தான் தெரியும்.

    ReplyDelete
  20. ஐயா , சாந்தனுவின் சந்ததிகளையும் பின்னூட்டங்களையும் வாசித்தேன் . மிகப் பழைய காலத்துப் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் நம் காலத்தில் விசித்திரமாய்த்தான் தெரியும்.

    ReplyDelete
  21. இதிகாசங்கள் இரண்டினதும் வில்லன்களின் உள்ளக்குமுறல்களை இங்கே பார்வையிடலாம்
    "இலங்கை வேந்தன் எதிர் அஸ்தினாபுரி அரசன்" படங்களாக இணைக்கப்பட்டிருக்கிறது
    http://www.chummaah.blogspot.com/2010/06/blog-post_28.html

    ReplyDelete
  22. ஆஆஆஆவ்வ்வ் சத்தியவது-சந்தனு.. திருமணம் வரைதான் எனக்குத் தெரியும்... இப்போதான் தெரியும்..//திருதராஷ்டிரர், // இவர்களின் மூத்த மகன் என்பது ஓ மை கோட்ட்ட்ட்:))... அருமையாக சொல்லிட்டீங்க வியப்பாக இருக்கு எனக்கு.

    ReplyDelete