வறுமைக் கோடும் புள்ளி விவரங்களும் .....
-----------------------------------------------------------
வறுமைக்
கோடு, வறுமைக் கோடு என்கிறார்களே அது என்ன கோடு.? எனக்குப் புரிபடாத சங்கதிகளில்
இதுவும் ஒன்று. அறிஞர்கள், வல்லுனர்கள் கணக்கியல் ( statistics) நிபுணர்கள் கூடி ( சில நாட்களுக்கு முன் படித்ததாக நினைவு) ஒரு
நாளைக்கு ஒருவனுக்கு வருமானம் ரூ 32/-( நகரத்தில்) அல்லது ரூ29/. கிராமத்தில்
கிடைக்குமானால் அவன் வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவன் என்று சொன்னார்கள். அதாவது
ஒருவன் நகரத்தில் ஒரு மாதத்துக்கு தலைக்கு ரூ960/-( per capita ) ஈட்ட முடிந்தால் வறுமைக் கோட்டுக்கு மேல்
இருப்பவன் ஆகிறான் .இந்த அடிப்படைக் கணக்கு எட்டுவதற்கு என்ன என்ன விஷயங்களை
எடுத்துக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. அவர்கள் அனைத்தும் அறிந்தவர்கள்
அல்லவா.. தவறு ஏதும் இருக்காது. ...! ஆனால் இந்த பாழாய்ப்போன மனசு எப்படி இந்த
இலக்கை நிர்ணயித்தார்கள் என்று தெரியாமல் தவித்தது.
இந்த
ரூ.32/- சரியில்லை என்றால் ஒரு சரியான கணக்கு வேண்டுமல்லவா.?என் வீட்டு சாமான்கள்
வாங்கும் பொறுப்பை என் மனைவி ஏற்றிருக்கிறாள். என் வீட்டு ஹோம் மினிஸ்டர். அவள்
உதவியை நாடினேன். எனக்கு பொருட்களின் தற்போதைய விற்கும் விலைகள் தெரியாது.
என் வீட்டுக்குத் தேவையான பொருட்களின் விலையே எனக்குத் தெரியாதபோது எப்படி இவ்வளவு
பணம் தேவை என்று கூறமுடியும்.?இந்த வறுமைக் கோடினை நிர்ணயிப்பவர்கள் எல்லாம்
தெரிந்தவர்கள் ஆயிற்றே...!
ஒரு குத்து மதிப்பாக இருவர் வாழும் ஒரு குடும்பத்துக்கு
இரண்டு வேளை உணவு உண்டு மொத்தத்தில் பசியில்லாமல் உயிர் வாழ எவ்வளவு ரூபாய்
தேவைப்படும் என்று என் மனைவியைக் கேட்டேன். அவள் உறுதியாக எதையும் சொல்ல முடியாது.
மார்க்கட் நிலவரம் நாளைக்கு நாள் மாறுபடுகிறது. எதையும் குறிப்பிட்டுக் கணக்கு
சொல்ல முடியாது என்றாள். ஆனால் விற்பன்னர்கள் எந்த வருடத்து விலைகளைக்
கணக்கெடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் விற்பன்னர்கள் அல்லவா... அவர்கள்சொல்வது
சரியாகத்தான் இருக்கும்....! இந்த மாதிரி எதையாவது சொல்லி நான் தப்பித்துக் கொள்ள
விரும்பவில்லை. நாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் கண்க்கு நான் போட்டு
பார்க்க விரும்பினேன். இரண்டு பேர் நாளைக்கு இரண்டு வேளை உண்ண என்னென்ன பொருட்கள்
தேவைப் படும். தென் இந்திய வழக்கப்படி சோறு வேண்டும். சுமார் 12 கிலோ அரிசி
இருந்தால் இரண்டு வேளை சமைத்து சாப்பிடப் போதுமானதாக இருக்கும் என்று
முடிவெடுத்தோம். எது போதும் எது போதாது என்று முடிவெடுக்க நீ யார் என்று என்னுள்
கேள்வி எழுந்தது. சும்மா ஒரு கணக்குக்குத் தானே என்று பதிலும் வந்தது. உணவு
எனும்போது அது சக்தியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும் கார்போஹைட்ரேட் ப்ரொடீன்
என்று ஏதேதொ தேவைப்படுமே. பசிக்கு உணவு என்றிருப்பவன் இந்தக் கணக்கெல்லாம்
பார்க்கக் கூடாது. ஒரு குத்து மதிப்பாக இவையெல்லாம் தேவை என்று தோன்றியதைப்
பட்டியலிடுகிறேன் அரிசி தவிர மளிகை சாமான்கள் என்னென்ன தேவைப்படும். . என்னென்ன
தேவைப்படும் என்பதை விட என்னென்ன போதும் என்றுதான் பார்க்கவேண்டும் வறுமைக் கோட்டை
நிர்ணயிக்கும் பணியல்லவா....!
இந்த விளையாட்டுக்கு என் மனைவி வரமாட்டேன் என்கிறாள்.
இருந்தாலும் எழுதத் துவங்கி விட்டேன் ஒப்பேற்ற வேண்டாமா. பருப்புவகைகள் எல்லாம்
சேர்த்து மாதம் இரண்டு கிலோ என்றால் ரூ. 100/- ஆகுமா. பால் தினம் அரை லிட்டர்
என்றால் ரூ15/-சர்க்கரை எண்ணை வகையறாக்கள் ரூ.200/-காய்கறிகள் தினம் சுமார் ரூ15/-
உப்பு புளி மிளகாய் வகையறாக்கள் மாதம் சுமார் ரூ150/-
இவற்றை சேர்த்துக் கணக்குப் பார்ப்போமா.?
அரிசி.... .ரூ.35x12= ரூ420/-
பால்...... .ரூ15x30-=ரூ
450/-
மளிகை.............. ரூ100+ரூ200+150=ரூ450/-
காய்கறி.................ரூ15x30=
450/-
இந்தக் கணக்கு ஒரு குத்து மதிப்புத்தான் இதையெல்லாம்
கூட்டினால்ரூ1770/-
அட per capita income மாதம் ரூ960/- என்றால் இருவருக்கு
ரூ1920/- செலவைவிட வரவு அதிகம் போல் தெரிகிறதே.
இந்தக் கணக்கு வெறுமே வயிற்றுப் பாட்டுக்கு மட்டுமே. இருக்கும் இட வாடகை,
மின்சாரக் கட்டணம் அடுப்பு எரிக்க எரிபொருள் போக்குவரத்துக் கட்டணங்கள் இதெல்லாம்
கணக்கில் வரவில்லையே. இது தவிர குழந்தைகள் இருந்தால் அவர்களது படிப்புச் செலவு
.துணிமணிகள் மருத்துவச் செலவு இதற்கெல்லாம் எங்கே போக...? வாழ்க்கை என்பது இரு
வேளை உணவு மட்டுமா....? உணவைக்குச் செலவு செய்வதை விட மனிதன் மனிதனாகக் காட்டிக்கொள்ள அதிகம் செலவாகிறது.
ஆக விற்பன்னர்களும் என்னைப் போல் வயிற்றுப் பாட்டை மட்டுமே
கணக்கில் எடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
இதை என் மனைவியிடம் காட்டியபோது வீட்டை நிர்வகிக்கும் பணியை
என்னிடமே தந்து விடுவதாக பயமுறுத்துகிறாள். என்னவோ சொல்வார்களே ...வேலியில் போகும்
ஓணானை......என்று அதுபோல் இருக்கிறது. எனக்குத் தெரியும் வாசகர்கள் பலரும்
என்னிடம் மல்லுக்கட்டத் தயாராய் இருப்பார்கள் என்று. என் இந்தப் பதிவின் மூலம்
நானும் இந்த statistical உத்தியோகத்துக்கு முயற்சி செய்யலாம்
என்று தோன்றுகிறது.
//உணவுக்குச் செலவு செய்வதை விட - மனிதன் மனிதனாகக் காட்டிக் கொள்ளவே அதிகம் செலவாகிறது//
ReplyDeleteஉண்மை.. முற்றிலும் உண்மை!..
இங்கே குவைத்தில் உழைத்தோமா!. ATM- ல் பணத்தை எடுத்து ஊருக்கு அனுப்பினோமா!.. அதோடு சரி..
சிறப்பான நிர்வாகம்!..
எல்லாம் - இல்லத்தரசி தான்!..
வாழ்க நலம்!..
பருப்பெல்லாம் கிலோவே 70ரூ, 80 ரூ விற்கிறது. ரேஷனிலேயே பருப்பு 30 ருபாய்க்கு விற்கிறாங்க. பால் லிட்டர் 40 ரூபாய்க்குக் குறைந்து கிடையாது. எண்ணெய் ரேஷனில் வாங்கினால் தான் 70 ரூபாய்க்குள்ளாக இருக்கும். வெளியே விலை அதிகம். காய்கறிகள் குறைந்த பக்ஷ விலை இப்போதைய நிலவரப்படி கிலோ 40 ரூபாய். அரிசி வேணா இலவச அரிசி கொடுக்கிறாங்களே, அதை வாங்கிக்கலாம். ஆனால் சாப்பிட முடியாது. :)
ReplyDeleteநாளொன்றுக்கு இவ்வளவு தேவை என கணக்குப் போட்டவர்கள் எவருமே கடைப்பக்கம் சென்றதில்லை என தோன்றுகிறது. சென்றிருந்தால் நிச்சயம் இன்றைய விலைவாசி தெரிந்திருக்கும்! :)
ReplyDeleteபொருத்தமில்லாக் கணக்கைத்தான் அவர்கள் சொல்லியிருந்தார்கள். எதை வைத்துக் கணக்கு போட்டார்களோ என்று எனக்கும் அடிக்கடி ஆச்சர்யம் ஏற்படும். மக்களின் கஷ்டம் தெரியாத, அன்றாட விலை நிலவரம் உணராத ஆட்சியாளர்கள்!
ReplyDeleteஇந்த விஞ்ஞான யுகத்தில் வறுமை கோட்டிற்கு இவர்கள் அளிக்கும் அர்த்தம் இருக்கிறதே அற்புதம் ஐயா.
ReplyDeleteகேட்பதற்கு நன்றாக இருக்கிறது
அனால் வாழ்வதற்கு?
வீட்டு நிர்வாகம் என்பது சாதாரணமான விசயம் இல்லை ஐயா...
ReplyDeleteகுடும்பத்தின் ஒருத்தரின் மேல் (குறிப்பாக மனைவியின் மேல்) இந்த விலைவாசி பளுவை சுமத்தக்கூடாது.
ReplyDeleteவிலைவாசி ஏற்றத்தை குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் அறிந்து இருக்க வேண்டும். அப்பொழுது விரலுக்கேற்ற வீக்கத்தோடு அன்றாட செலவுகள் அமையும்.
இந்த வறுமைக் கோடு நிர்ணயிப்பு பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.
ஒரு நபர் உயிர்வாழ்வதற்கு அத்யாவசிய உணவுப் பொருட்களின் தேவை அல்லது அவரின் உள்ளீடு என்று ஒரு கணக்கு நிர்ணயித்திருக்கிறார்கள். அது மட்டுமே ஒருவரின் வறுமைக்கோட்டு எல்லை.
துவரம்பருப்பு என்றால் 5 வகையான துவரம்பருப்பு உண்டு. இது தெரியும் இல்லையா உங்களுக்கு?..
வறுமைக்கோட்டுக்கு கடைசி வகை துவரம்பருப்பின் விலையை எடுத்துக் கொள்வார்கள். வழக்கமாக நீங்கள் வாங்கும் துவரம்பருப்பு அதை விட
மூன்று மடங்கு விலை இருக்கும்.
வெண்ணையும், முட்டையும் கூட இந்தக் கணக்கில் உண்டு.
வெண்ணை என்கிற பொழுது வனஸ்பதியை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.
எப்படிப்பார்த்தாலும் குடும்ப உறுப்பினர்களையும், ஒரு குடும்பத்தின் வருவாயையும் கணக்கிடும் பொழுது சராசரி உணவு உட்கொண்டு உயிர் சுமந்து உலாவுவர்கள் அத்தனை பேருமே வறுமைக்கோட்டுக்கு கீழே தான்.
கேளிக்கைகளுக்கு செலவிடுவதை விட உணவுக்கு செலவிடுபவர்கள்
குறைவாக இருப்பது இன்னொரு அவலம்.
உண்மையான வறுமைக்கோட்டையும்,
உணவு மட்டுமின்றி உயிர் வாழ்வதற்கு அத்யாவசிய தேவைகளையும் அனுசரித்து வருமானவரியும் இருக்க வேண்டும் என்பது உயிர்வாழ்வோரின்
நெடுநாளைய கோரிக்கை.
என் கணக்கைப் பாருங்கள்.அம்மா உணவகத்தில் காலையில் 4 இட்லி மாலையில் 4 இட்லி மொத்தம் 8 ரூபாய். மதிய சாப்பாடு 8 ரூபாய். ஒரு நாளைக்கு இரண்டு பேருக்கு 32 ரூபாய். வீடு இலவசம். மின்சாரம் இலவசம். டிவி இலவசம். படிப்பு இலவசம். குழந்தை பெற்றால் ஆஸ்பத்திரி செலவு இலவசம். கூடவே பணம் 12000 ரூபாய்.
ReplyDeleteஒரு ஆண் வாரத்திறகு ஒரு நாள் வேலைக்குப் போனால் கிடைக்கும் கூலி 600 ரூபாய். தினசரி செலவு போக மீதியில் டாஸ்மாக் போகலாம். அப்புறம் என்ன குறைங்க இருக்குது. தமிழ்நாட்டுக்கு வந்துடுங்க. அம்மா ஆட்சியில சொர்க்கத்தைக் காணலாம்.
ஒருவருக்கு ஒருநாளைக்கு 32 ரூபாய் கிடைத்தாலே வறுமைக்கோட்டுக்கு மேலே போய்விடுகிறானா? என்ன கொடுமை இது? வறுமைக்கோட்டை வரையறுத்தவர்களே அதைப்பற்றிக் கவலைப்படாதபோது, மனம் தாளாமல் கணக்குப் போட்டுப் பார்க்கும் உங்கள் இளகியமனத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
ReplyDeleteசம்பாதிக்கும் காசை குடித்தே அழிப்பவர்கள் எந்த வகையில் வருவார்களோ தெரியவில்லை.
வறுமைக்கோடு என்பது தற்போது சரியாக வரையறுக்கப்படவில்லை என்பதே உண்மை. அதையே அடிப்படையாக வைத்து மென்மேலும் புள்ளிவிவரங்கள் சேகரித்து நம்மை திசைதிருப்பிவிடுகிறார்கள் அரசியல்வாதிகள்.
ReplyDeleteவறுமைக் கோடு என்ன என்பதை உண்மையிலேயே வறுமையில் உள்ளவர்களால்தான் தீர்மானிக்க முடியும். அதாவது குடிசை வீடுகளில் வசிக்கும் ஒரு தினக் கூலி ஈட்டுபவருடைய அன்றாட தேவை என்ன என்பதை வைத்துத்தான் இதை முடிவு செய்கின்றனர். நம்மைப் போன்ற நடுத்தர மக்களால் அதாவது நிரந்தர மாத வருமானம் உடையவர்களால் அனுமானிக்க முடியாது. மளிகைக் கடைகளில் எந்த ஒரு பொருளையுமே கிலோ கணக்கில் அவர்கள் வாங்குவதில்லை. ஐம்பது, நூறு அல்லது ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்குத்தான் பருப்பிலிருந்து அனைத்தையும் வாங்குவர். பணம் இருந்தால் சாப்பாடு இல்லையென்றால் பட்டினி, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் பிள்ளைகளுடைய படிப்பைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. ஏனெனில் அதெல்லாம் அவர்களுக்கு எட்டா கனவு. தரமான மருத்துவமும் அப்படித்தான். அதனால்தான் அவர்களை வறுமையில் வாடுபவர்கள் என்கின்றனர். இப்படியுள்ள சூழலில் ஏசி அறையில் அமர்ந்து ஃபார்முலா அடிப்படையில் கணக்கிடும் வறுமைக் கோடு வெறும் லக்ஷ்மண் ரேகா போன்றதுதான். அதாவது கற்பனைக் கோடு என்கிறேன்.
ReplyDeleteவறுமைக் கோட்டுக்கு மேலே என்றால் வயிறார சாப்பிடுவது என்றாகாது. நீங்கள் குறிப்பிட்ட கணக்கு கூட வறுமைக் கோட்டுக்கு ரொம்ப வடக்கே.
ReplyDeleteதன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவையான அடிப்படை வசதியின்மை என்று வறுமையை வர்ணிக்கிறது யுஎன். ஒரு நாளைக்கு ஒரு வேளை விடுங்கள் மூன்று நாளைக்கு ஒரு வேளை சாப்பிட்டால் உயிர் வாழ முடியும் என்கிறது WHO.
உயிர் வாழ மூன்று நாளைக்கு ஒரு வேளை சாப்பிட்டால் போதும் என்றக் கருத்தின் படி நீங்கள் போட்ட கணக்கைத் திருத்திப் பாருங்களேன்?
அப்படி வாழ்வோமா என்பது வேறு விஷயம்.
ReplyDelete@ துரை செல்வராஜு
வளைகுடாப் பகுதியில் வாழ்பவர்களுக்கு வறுமைக் கோட்டைப் பறி தெரிந்திருக்க நியாயமில்லை. அங்கு இட்டி அனுப்பும் பணத்துக்கு இந்தைய அரசு டாக்ஸ் ஏதும் விதிப்பதில்லை என்று நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
நடை முறை விலைவாசி சரியாகத் தெரியாமல் இருக்கலாம். என் கணக்கும் பதிவும் ஒருவர் சுக ஜீவிதம் நடத்த எவ்வளவு பணம் வேண்டும் என்பது பற்றியல்ல. தயவு செய்து ஜீவி மற்றும் டாக்டர் கந்தசாமி அவர்களது பின்னூட்டங்களைப் பாருங்கள். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம்
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
வறுமை கோட்டை நிர்ணயிக்க தினசரி விலைகள் கணக்கெடுக்கப் படுவதில்லை.ஒரு base வருடத்திய விலைகள்தான் கணக்கிலெடுக்கப் படுகின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ReplyDelete@ ஸ்ரீராம்
வறுமைக் கோடு என்பது ஒரு குறியீடு. அரசின் வருமானம் செலவு செய்யும்போது பல நலத்திட்டங்கள் பரிசீலிக்கப் படுகின்றன. அதில் அடிமட்டத்தில் இருப்பவர் யார் என்று தெரிந்தால் நலத்திட்டங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் வகையில் திட்டமிடப் படலாம்.திரு.டி.பி.ஆர் சொல்லியிருப்பது போல் இந்த வறுமைக்கோடு ஏறத்தாழ லக்ஷ்மண்ரேகா போலத்தான் இருந்தாலும் எதற்கும் ஒரு அடிப்படை தேவை இல்லையா. அதற்குத்தான் ஒரு குறியீட்டை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இந்தக் குறியீடானது அனைத்து வகுப்பினரையும் திருப்தி செய்யாது. இந்தக் குறியீடு எந்த அளவு நம் எண்ணங்களோடு ஒத்துப் போகிறது என்பதை அறியவே இப்பதிவு எழுதினேன். வருகைக்கும்கருத்துக்கும் நன்றி.ஸ்ரீ.
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
ஐயா, வறுமைக் கோட்டுக்கு யார் யாரோ என்ன என்னவோ அர்த்தங்கள் கற்பிக்கலாம் ஆனால் அதைப் புரிந்துகொள்ள வாழ்ந்து பார்க்க வேண்டும் என்றில்லை ஒரு புரிதல் இருந்தாலே( empathy) போதும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
வீட்டு நிர்வாகமே சாதாரண விஷயம் இல்லாதபோது நாட்டு நிர்வாகம்....? வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி டிடி.
ReplyDelete@ ஜீவி
உங்களுடைய இந்த அணுகல் பிடித்திருக்கிறது. உணவுக்குச் செலவிடுவதைவிட கேளிக்கைகளுக்குச் செலவிடுபவர்கள் மிகையாக இருப்பது அவலம்தான் அரசின் பல நல்ல நலத்திட்டங்கள் யாருக்காக வகுக்கப் பட்டதோ அவருக்குக் கிடைககாமல் நடுவில் இடைத் தரகர்கள் கைப் போய் சேருவது இன்னும் அவலம் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி.
ஐயா வறுமைக்கோடு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல. அகில இந்தியாவுக்கும் சேர்த்தே நிர்ணயிக்கப் படுகிறது. thanks to ammaa தமிழகத்தில் வறுமை என்பதே காணாமல் போய் விட்டது.....?சுய உணர்வு இல்லாமல் பெரும்பாலோர் மிதக்கிறார்களே. வருகைக்கு நன்றி சார்.
ReplyDelete@ கீத மஞ்சரி
சில விஷயங்களைப் புரிந்து கொள்ள முயல்வதின் பாதிப்பே இப்பதிவு. நான் அறிந்தவரையில் அவரவர் வாழ்க்கை முறையை வைத்தே மற்றவரையும் அணுக முயற்சி செய்பவர்களே அதிகம். சம்பாதிக்கும் பணத்தைக் குடித்தே அழிப்பவர்கள் எல்லா நிலையிலும் இருக்கிறார்கள் என்பது என்கணிப்பு.வருகைக்கு நன்றி மேடம்.
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
எல்லோரும் உடன்படும் விதத்தில் இதை நிர்ணயம் செய்வது மிகவும் கடினம் என்று தோன்றுகிறது. வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ டி.பி.ஆர் ஜோசப்
வங்கி ஊழியத்தில் இருந்த உங்கள் பொருளாதார அறிவு சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் வங்கி நிர்வாகிகளுக்கு அனுபவம் அதிகம் இருக்கும் அல்லவா. ஒரு அடிப்படைக் கணக்கு வேண்டும் அது சரியாக இருக்கும் என்ற எண்ணமும் அது தோற்றுவிக்க வேண்டும்.. நாளொன்றுக்கு ரூ. 32/- என்னும் கண்க்கு குறைந்த பட்சத்தேவைகளையாவது பூர்த்தி செய்கிறதா எனும் கேள்விகேட்டதின் பலனே இப்பதிவு.வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.
ReplyDelete@ அப்பாதுரை
வழக்கில் இருக்கும் கணக்குக்கும் நான் போட்ட கணக்குக்குமே பலவித புரிதல்கள் இருக்கும்போது யூ.என். சொல்லும் விதத்தில் கணக்குப் போட்டால் அநேகமாக எல்லோருமே வறுமைக் கோட்டின் மேலே இருப்பவர்கள் தான் என்றாகி விடும் ..!