Sunday, June 18, 2017

திருமணங்களும் சில நினைவுகளும்

நான் வரைந்த முருகன்  கண்ணாடி ஓவியம் 
வெண்ணை தின்னும்  கண்ணன் 
ராதா கிருஷ்ணன் கண்ணாடி ஓவியம்  முதன் முதலில் முயன்றது
சமயபுரம் மாரியம்மன்

இந்த ஓவியங்கள் ஒரு சாம்பிளுக்கே  இப்போதெல்லாம் கண்களும்  கைகளும் ஓவியம் வரைய ஒத்துழைப்பதில்லை
பதிவுக்கு முன்  வாசகர்கள் பார்வைக்கு 

திருமணங்கள்  சில எண்ணங்களும்  நினைவுகளும்

சில அனுபவ வரிகள் வலையில் எழுதப்படும்போது ரசிக்கப் படுகின்றன; சில உதாசீனப் படுத்தப் படுகின்றன; சில வழி காட்டும் படிப்பினைகளாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. ஒருவராவது ரசிக்கிறார் என்றாலும் தொடர்ந்து எழுதும்படி எனக்கு ஆலோசனைகளும் வந்திருக்கிறது. திருமணம் பற்றி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் இருந்தது. பதிவு எழுத பொருள் தேடிக் கொண்டிருந்தபோது வந்ததால் இந்தத் தலைப்பிலேயே எழுதுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வம்ச விருத்தி செய்ய ஊரும் உலகமும் அளிக்கும் அனுமதியே. அனைத்து ஜீவராசிகளும் தங்கள் இனப் பெருக்கத்துக்கென்றே வாழுகின்றன என்று நான் கருத்து சொன்னால் அநேகம் பேர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.அதன் தாக்கத்தை சிறிது குறைக்க உண்ணவும் உறங்கவும் என்றும் சேர்த்துக் கொள்கிறேன். ஆறறிவு படைத்த மனிதன் தன் பரிணாம வளர்ச்சியில் தனக்கு விதித்துக் கொண்ட கட்டுப் பாடுகளில் திருமண பந்தமும் ஒன்றாகிறது.

திருமணம் பண்டைக்காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

இப்பொழுதும், இளமை ,வனப்பு, வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள் பார்த்துத்தான் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில் உறவின் வழியே நிச்சயமாகும் திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம் கவனிப்பதில்லை.அறிந்த மனிதர் ,இனம் குலம் எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து பத்துகள் குடும்பத்தைவிட்டு வெளியேறாது என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத் திருமணத்தில்ACCOUNTABILITY ---GUARANTEED  என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில் பெரும்பாலும் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில் விளையும் திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஜாதகப் பொருத்தம் சரியாக அமையாததால் பல ஆண்டுகளாக திருமணம் நடக்காமல் முதிர் கன்னிகளாக இருக்கும் சில பெண்களையும் எனக்குத்தெரியும்.

ஆனால் தற்காலத்தில் நடைபெறும் பல திருமணங்களில் பெற்றோருக்கு எந்த உரிமையும் கொடுக்கப் படுவதில்லை. ஆணும் பெண்ணும் சந்திக்கிறார்கள். ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப் படுகிறார்கள் (பெரும்பாலும் இனக் கவர்ச்சியால்) திருமணமும் செய்து கொள்கிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே தவறான முடிவால் பிரிகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தருபவரும் இல்லாமல் போகிறார்கள்

இதைக் கூறும்போது ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது

 நண்பர் ஒருவரின் மகள் வேற்று மொழி. சாதிப்பையனை விரும்பி காதலித்து இருக்கிறாள் பெற்றோர் வழக்கம் போல் அதை ஏற்கவில்லை. பிற்காலத்தில்  கஷ்டப்படுவாய் என்று கூறி இருக்கிறார்கள்  அதற்கு அந்தப் பெண் ஜீஎம்பி அங்கிள் அப்படித்தானே கல்யாணம் செய்து இருக்கிறார் அவர்கள் இத்தனை ஆண்டுகளாக  மகிழ்ச்சியாக இல்லையா என்று வாதாடி  சம்மதம் வாங்கினாளாம்  நண்பர் என்னிடம் கூறியது இது
எது எப்படி இருந்தாலும் திருமணங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட வேண்டும். பதிவு செய்யப் பட வேண்டும். இல்லையென்றால் திருமணத்தால் கிடைக்கும் உரிமைகள் இழக்க நேரலாம்.

இருமனம் இணைந்து நடக்கும் திருமணங்களில் கணவனும் மனைவியும் இரட்டை மாட்டு வண்டி போல் வாழ்க்கை சுமையையும் சுகங்களையும் இழுக்க வேண்டும். உற்றாரும் உறவினரும் கூடி நின்று வாழ்த்தி நடத்தும் திருமணங்கள் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமே.
 

 திருமண நிகழ்வுகள் பல நினைவலைகளை மீட்டுச் செல்கின்றன

பல நண்பர்களது திருமணத்துக்குச் சென்று வந்திருக்கிறேன்..அவற்றில் சில மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் திருச்சியில் இருந்த காலம். நண்பர் ஒருவருக்கு வடுகூரில் ( வழுதூர் ?) திருமணம். நானும் இன்னொரு நண்பரும் முதல் நாள் மாலையே திருமணத்துக்குப் போக திட்டமிட்டிருந்தோம். அலுவலகப் பணி முடிந்து மாலை ஐந்து மணி அளவில் அவருடைய ஷெர்பா மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம். இரண்டு மணி நேரப் பயணம் இருக்கும் என்று கணக்கிட்டோம். போகும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. மழை நிற்கக் காத்திருக்கும்போதே இருட்ட ஆரம்பித்து விட்டது. எங்களுக்கு வழியும் சரியாகத் தெரியாது. சமயம் பார்த்து வண்டியின் ஹெட் லைட் எரியாமல் மக்கர் செய்தது. நான் பில்லியனில் அமர்ந்து கையில் ஒரு டார்ச் விளக்கைப் பிடித்துக் கொண்டு முன்னால் அடிக்க நண்பன் வண்டி ஓட்டிக் கொண்டு போனான். எதிரில் வரும் லாரிகளின் வெளிச்சம் கண்கூச வைத்து  மேலே போக முடியாமல் அவன் வண்டியை நிறுத்தினான். நல்ல வேளை.! மேலே சென்றிருந்தால் அருகிலேயே ஓடிக் கொண்டிருந்த ஆற்றுக்குள் போயிருப்போம்.கையில் டார்ச்சுடன் நான் ஒளிகாட்ட அதிர்ஷ்ட வசமாக  விபத்து நேராமல் தப்பித்த அந்த நிகழ்ச்சி மறக்க முடியாதது, அன்று ஒரு வழியாக திருமண வீட்டை அடைந்த போது இரவு பத்து மணியாகிவிட்டது. மழையில் சகதியான சாலையில் இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக தள்ளிக் கொண்டே சென்றோம்
.
திருவனந்தபுரத்தில் ஒரு நண்பருக்குக் கலியாணம். ஒரு பேரூந்து ஏற்பாடு செய்து நாங்கள் சென்றோம். நண்பன் வீடு நாகர்கோயிலில் இருந்தது என் இரண்டாம் மகன் பிறந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. போகும் வழியில் குற்றாலத்தில் குளித்துவிட்டுப் போனோம். முதன்முதல் குற்றாலக் குளியல் அனுபவம் கைக் குழந்தை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு குளித்தது மறக்க முடியாத அனுபவம். திருமணச் சடங்காக மாப்பிள்ளைக்கு உறவினர் தலைப்பாகை கட்டுகின்றனர் கட்டுகின்றனர் கட்டிக் கொண்டே இருக்கின்றனர் . அதுவே சுமார் முப்பது நாற்பது பேர்கள் கட்டி முடிப்பதற்குள் பசியில் பாதி உயிர் போய்விட்டது. ஒரு வழியாய் இந்த சடங்கெல்லாம் முடிந்து பந்தியில் உட்காரப் போகும் நேரம் நாங்கள் தடுத்து நிறுத்தப் பட்டோம். முதலில் பெண்கள் என்றனர்.பெண்ணுரிமை , முன்னுரிமை என்ன என்று அப்போது தெரிந்து கொண்டோம்

. நண்பனின் உறவினர்கள்பெண்ணு கொள்ளாமோஎன்று கேட்டனர். எங்கள் குழுவில் இருந்த பெண்கள்சேச்சே.. நாங்கள் இங்கிருந்தெல்லாம் பெண்கள் கொள்வதில்லைஎன்று பதில் கூறினர். அவர்கள் மலையாள வழக்கில் பெண் அழகாய் இருக்கிறாளா எனக் கேட்க அது புரியாமல் பெண் எடுப்பதில்லை என்று பதில் கூறி இருக்கின்றனர்.நாங்கள் மணம் முடிந்த பிறகுதிருச்சி’ போவோம் என்றதை நாங்கள் கோபித்துக் கொண்டு திரும்பிப் போவோம் என்று புரிந்து கொண்டு பரிதவித்தது மறக்க முடியாத அனுபவம்.

கும்பகோணத்தில் ஒரு நண்பன் திருமணத்தில் ஒரு சடங்காக ஆர்த்தி எடுக்க வேண்டும் என்று கூறி சுமார் அரை மணிநேரம் அவனை வீதியில் காக்க வைத்தசம்பவம் இன்றும் அவனைப் பார்க்கும் போது கேலி செய்ய உதவும்
.
கோவையில் ஒரு நண்பன் திருமணத்தில் அவனை கோயில் கோயிலாக அழைத்துச் சென்று வந்ததும் இப்படியெல்லாம் வழக்கங்களா என்று நினைக்க வைத்தது.

மனைவியின் உறவினர் மகளுக்கு மும்பையில் திருமணம். என் மனைவி அதற்கு முன் மும்பை பார்த்ததில்லை. என் நெருங்கிய உறவினர் மும்பையில் இருந்தார். அவருக்குக் கடிதம் எழுதி நாங்கள் அவர் வீட்டுக்கு வந்து இருக்கலாமா என்று கேட்டிருந்தேன். அவரும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எங்களை எதிர்பார்பதாகவும் பதிலளித்தார். பெண் வீடு உல்லாஸ்நகர். அங்கு இறங்கி மாதுங்காவில் திருமணம் முடிந்த பிறகு என் உறவினர் வீட்டுக்குப் போவதாக ஏற்பாடு. திருமண வைபவங்கள் முடிந்து உணவு அருந்தப் போகும் சமயம் என் உறவினர் அங்கு வந்தார். எங்களை அழைத்துக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறார் என்று மகிழ்ந்து அவரையும் விருந்துக்குக் கூட்டிச் சென்றேன் அவர் நாங்கள் அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்தவே வந்திருந்தார். அவருடைய சம்பந்திகள்  அவர் வீட்டுக்கு வந்திருப்பதால் நாங்கள் அங்கு வருவது உசிதமல்ல என்று சொல்லவே வந்திருந்தார். முன் பின் தெரியாத இடத்தில் எதிர்பாராத விதத்தில் சங்கடப் படுத்தப் பட்டோம். நல்ல வேளை என் நண்பன் ஒருவன் விலாசம் என்னிடம் இருக்க சமாளித்து விட்டோம். மூன்று நாட்கள் மும்பையில் தங்கி எல்லா இடங்களையும் பார்த்துப் பின் அந்த உறவினர் வீட்டையும் விசிட் செய்தோம்
.
உறவினர் ஒருவருடைய மகள் ஒரு ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டார். எல்லாருடைய சம்மதத்துடன் நடந்த திருமணம் ஆர்ய சமாஜ் குழுவினரால் நடத்தி வைக்கப் பட்டது. இந்திய முறைப்படி மந்திரங்கள் ஓதி மங்கல நாண் கட்டப்பட்டது. ஒவ்வொரு மந்திரம் உச்சரிக்கப் பட்டதும் அதன் பொருள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு திருமணம் நடத்தப் பட்டது. அது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது

                 ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு அனுபவம்.மன்னார்குடியில் நண்பன் ஒருவன் திருமணம். திருமணம் முடிந்து என்னை அவன் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தான். பெண் கிராமத்தில் இருந்து வந்தவள். என்று தெரியும். அறிமுகம் ஆனவுடன் கை கூப்பி வணக்கம் தெரிவித்தேன். ஆனால் அந்தப் பெண் கை குலுக்கக் கை நீட்ட , அது கண்டு நானும் நீட்ட, அவள் கை கூப்ப ஒரே  தமாஷாகி  விட்டது.

ஒரு திருமண விழாவுக்குச் சென்றபோது , முதலில் எனக்கு ஏதுமே விளங்கவில்லை. திருமணம் நடத்திவைக்கும் புரோகிதர் கழுத்தில் மாலையுடன் நின்றிருந்தார். கூட்டத்தில் நாங்கள் பின்னால் நின்றிருந்தோம். பிறகு பார்த்தால் புரோகிதரே பெண்ணுக்குத் தாலியும் கட்டினார். அப்புறம்தான் தெரிந்தது. அவர் புரோகிதர் அல்ல. அவர்தான் மாப்பிள்ளை என்று. .அந்த மாப்பிள்ளை இன்றைய ( அல்ல நாளைய ) சமுதாயத்தின் பிரதிநிதி என்று, குடுமி வைத்து, தாடியுடன் கடுக்கன் எல்லா அணிந்திருந்த அவர் ஒரு MNC-ல் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்று.Appearances can be deceptive  என்று விளங்குகிறது.நேற்றைய வழக்கங்கள் இன்றைய ஃபாஷனோ.?

 எது எப்படி இருந்தாலும்  திருமணங்களில் தான் உறவுகளை சந்திக்க முடிகிறது  பழைய தலைமுறையின்  எச்சங்களாக இருக்கும் நம்மை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் ரியாக்‌ஷன்   நான் ரசிப்பது  அதன் பிறகு அவர்கள் நம்மைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்  இன்னும்  என்னென்னவோ நினைவுகள் நீளம்கருதி முடிக்கிறேன்  

ஒரு திருமணப்படமில்லாமலா  நன்றி விக்கி பீடியா 

 
                   















              .










52 comments:

  1. உங்கள் அனுபவம் ரசிக்கும்படி இருந்தது. உங்கள் படங்களும் நல்லா இருக்கு.

    "ஜீவராசிகளும் தங்கள் இனப் பெருக்கத்துக்கென்றே வாழுகின்றன" - உண்மைதான், ஆனால் அதற்குரிய பருவத்தில் மட்டும். நேற்று காடுகளில் நாய்கள் கூட்டத்தைப்பற்றிய ஒன்றை டிஸ்கவரியில் பார்த்தேன். தனக்கு வாரிசுகளைப் பெற்றுக்கொள்ளும் உரிமை கிடைக்காது என்று அறிந்து ஒரு பெண் நாய், கூட்டத்திலிருந்து விலகி, தானே ஒரு புதிய கூட்டத்தைத் துவங்கச் சென்றுவிடுகிறது. அதேபோல், சிங்கக் கூட்டத்திலும், ஆண் சிங்கங்களுக்கு இந்தச் சட்டம் (அதாவது ஒரு கூட்டத்தில் தலைவன் ஆண்சிங்கம் மட்டும்தான் இனத்தைப் பெருக்கமுடியும்) உண்டு. மற்ற ஆண் சிங்கங்கள் தனித் தனியே பிரிந்து தங்களுக்கென்ற கூட்டத்தைச் சேர்க்கவேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. வாரிசுகளைப் பெற நாய்க்கு உரிமை இல்லையா எப்படித்தெரிந்து கொண்டார்கள் மனிதர்களுக்கு உரிமை மறுக்கப்படவில்லை என்றே தெரிகிறது அதுவும் நெப்பேர்ப்பட்டவருக்கும் ஒரு துணை கிடைத்து விடுகிறது சில நேரங்களில் எப்படி என்னும் கேள்வியும் எழுகிறது இன்னார்க்கு இன்னார் என்னும் ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன் திருமண நினைவலைகள்/அனுபவங்கள் இன்னும் நிறையவே இருக்கிறது நீளம்கருதி கத்திரிக்கோல் வருகைக்கு நன்றி சார்

      Delete
  2. புரோகிதர்கள் தான் குடுமி வைச்சுக்கணும்னு இல்லை! என் இனிய நண்பர், உடன் பிறவா சகோதரர் கடலூர் வாழ் மருத்துவர் திரு வாசுதேவன் அவர்கள் குடுமி, பஞ்சகச்சத்தோடு தான் தினம் தினம் மருத்துவமனை செல்கிறார். அவர் மகனும் சம்ஸ்கிருத அறிஞர், முனைவர் பட்டம் வாங்கியவர் குடுமி, பஞ்சகச்சம் தான்! மற்றும் என் உறவினர்களில் சிலரும் குடுமி, பஞ்சகச்சம் உண்டு! எல்லோரும் மெத்தப் படித்துப் பெரியபெரிய பதவிகள் இருப்பவர்களே! அவர்கள் மனைவிமாரும் அந்தக் கால வழக்கப்படி ஒன்பது கஜம் மடிசாரோடு தான்!

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக நாம் கண்பதையே எழுதி இருக்கிறேன் என் தந்தை கூட திருமணமாகும்போது குடுமியுடந்தான் இருந்தாராம் கண்ட காட்சி சமகாலத்துக்கு வித்தியாசமாய்ப் பட்டது மற்றபடி குடுமி பற்றி எனக்கு வேறு எண்ணங்கள் ஏதும் இல்லை ஆனால் அடையாளத்துக்கு வேஷம்போடுவது மனசுக்கு ஒவ்வாதது

      Delete
  3. அந்தக் காலத்தில் பொருத்தம் பார்த்து அதுவும் ஜாதகப் பொருத்தம் பார்த்தெல்லாம் திருமணம் நிச்சயிக்கப் பட்டதாகத் தெரியவில்லை! இதைக் குறித்துத் திருமணம் குறித்த என் பதிவுகளிலும் சொன்ன நினைவு. தேடிப் பார்க்கணும்! :)

    ReplyDelete
    Replies
    1. ஜாதகப்பொருத்தம் என்பது தட்டிக்கழிக்க ஒரு உபாயமோ என்றும் நினைத்ததுண்டு பொருதங்களைப் பார்த்தும் அதில் இருக்கும் தவறுகள் சில நாட்பட்டே தெரிகிறது சிலருக்கு நான் ஜாதகப்பொருத்தம் பார்க்க வில்லை எனக்கும் என் மக்களுக்கும்

      Delete
    2. ஜாதகப் பொருத்தம் இருபது வருடங்களுக்கு முன்னால் தட்டிக் கழிக்கப் பிள்ளை வீட்டாரால் பயன்படுத்தப் பட்டு இப்போது பெண் வீட்டாரால் பயன்படுத்தப் படுகிறது! :( என் மாமியார், மாமனாருக்கும், அவங்களோட பெரிய பெண்ணான என் பெரிய நாத்தனாருக்கும் அவர் கணவருக்கும் ஜாதகப் பொருத்தமே பார்க்கவில்லை என்பார்கள்.

      Delete
    3. எனக்குமிம்மாதிரி நடப்பது தெரியும் என் மூத்தமகனுக்கு மருமகள் வீட்டில் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றார்கள் எனக்கு ஆட்சேபணை இல்லைஎன்றேன் ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி விட்டேன் ஜாதக்ப் பொருத்த்கம் இருக்கிறது என்றார்கள் திருமணம் நடந்து வெள்ளி விழாவும் கொண்டாடி ஆயிற்று நான் சொன்னது போல் சில இடங்களில் வேண்டாம் என்று சொல்ல ஜாதகம் உபயோகப்படுகிறது இரண்டாம் மகனுக்கும் சம்பந்தி வீட்டில் ஜாதக ம் பார்த்தார்கள் முதலில் பொருந்தவில்லை என்று கூறி அதன்ம் பின் போருந்துகிறது என்று சொன்ன ஜோசியரிடம் சென்றதும் உண்டு ஆயிற்று அவர்கள் திருமணம் முடிந்து 23 ஆண்டுகள்

      Delete
  4. தற்காலங்களில் பொருத்தம் பார்த்து உறவினர் கூடிக் கிட்டத்தட்ட 50 லட்சம் செலவு செய்து நடந்த கல்யாணங்கள் எல்லாம் விவாகரத்தில் முடிந்திருக்கின்றன! :(

    ReplyDelete
    Replies
    1. எங்கோ அடிப்படையில் தவறு இருக்கிறது அதனை செலவு தேவையா என்பதும் கேள்விக்குறி

      Delete
    2. இப்போதைய பெண்களைப் பெற்றோர் வளர்க்கும் விதம் தான் முக்கியக் காரணம்! என்ன சொல்ல முடியும்! :(

      Delete
    3. சுயமாக சிந்திக்காமல் வழக்கம் என்று சொல்லி செயல் படுவதுமொருகாரணம் இதற்கு பெண்ணோ பிள்ளையோ எப்படி பொறுப்பாக முடியும்

      Delete
    4. நிச்சயமாய்ப் பெண்ணும் பிள்ளையும் தான் பொறுப்பு. திருமணத்திற்குப் பின்னர் ஒருத்தரை ஒருத்தர் அனுசரித்துப் போகாமல் பெரும்பாலான பெண்கள் பெற்றோரின் அறிவுரையைத் தினமும் நாடிக் கொண்டு அதன்படி நடக்கின்றனர். முன்னே எல்லாம் கணவன், மனைவிக்குள் ஒரு பிரச்னை என்று சண்டையோ வாக்குவாதமோ வந்தால் அது அந்தப் பெண்ணின் பெற்றோரை உடனடியாகச் சென்று அடையாது! பெண் கடிதம் போட்டுப் பெற்றோர் அதற்குப் பதில் போட்டு எனக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகிவிடும். அதற்குள் இங்கே பிரச்னை சூடு ஆறி இருக்கும். பின்னர் நிதானமாக யோசிக்கையில் அந்தப் பெண்ணோ அல்லது அவள் கணவனோ தங்கள் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்திருக்கலாம். இருவரும் ஒருவர் தவறை மற்றவர் உணர்ந்திருக்கலாம். ஆனால் இப்போதோ செல்ஃபோன் மூலம், வாட்சப் மூலம் பெற்றோருக்கு உடனடியாகப் போகிறது. விஷயத்தின் ஆழம் புரியாமல் அவர்களும் அதில் தலையிடுகின்றனர். இரு தரப்புப் பெற்றோர்களும் விலகி இருந்தாலே கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பூரணமாகப் புரிந்து கொள்ள முடியும்! பிள்ளையின் பெற்றோரும் பிள்ளை தவறு செய்தால் திருத்த வேண்டும். நம்மை நம்பி வந்திருக்கும் பெண்ணை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதற்குத் தங்கள் பிள்ளை விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போக வேண்டும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த மாமியாரும் அந்த வீட்டிற்கு ஒரு நாள் புது மருமகளாக வந்தவள் தானே! அதே நிலைமை தானே இப்போது வந்திருக்கும் பெண்ணிற்கும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும் அல்லவா!

      Delete
    5. /சுயமாக சிந்திக்காமல் வழக்கம் என்று சொல்லி செயல் படுவதுமொருகாரணம் இதற்கு பெண்ணோ பிள்ளையோ எப்படி பொறுப்பாக முடியும்/ என் இந்த மறுமொழியில் கூற வந்தது ஜாதகம் பார்க்கும் வழக்கத்தை /மற்றபடி திருமணம் நடந்து முடிந்தபின் வாழ்க்கை சக்கம் ஓடுவதில் இருவருமே பொறுப்புள்ளவர்களே

      Delete
  5. திருமணம் பற்றிய நினைவுகள் ஸ்வாரஸ்யம்...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறையவே உண்டு சார் வருகைக்கு நன்றி ( நீண்ட நாட்களுக்குப் பின் )

      Delete
  6. நல்ல நினைவுகள். ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  7. திருமணம் என்ற பந்தம் உருவானது வம்ச விருத்தியை தொடர்வதற்காக என்று முன்பு ஒரு பதிவு இட்டேன் ஐயா.

    தங்களது ஓவியங்கள் அருமை புகைப்படமோ என்று நினைக்கும் அளவு வியப்பாக இருந்தது.

    மலையாள-தமிழ் வார்த்தைகளின் குழப்பங்கள் ரசிக்க வைத்தன ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உள்ளதைத் தானே சொல்லி இருக்கிறீர்கள் புரிதலில் தவறுகள் சில சமயத்தில் சுவாரசியமாக இருக்கும்

      Delete
  8. முருகன் படம் ரொம்ப அழகு.

    இனப்பெருக்கம்தானே இயற்கையின் விதி? திருமணம் என்று இருவருக்குள் அதை நிறுத்துகிறோம். அல்லது நிறுத்த முயற்சிக்கிறோம்!!! உங்கள் அனுபவங்கள் .சுவாரஸ்யம். யார் திருமணத்துக்கு அழைத்தாலும் உடனே சென்று வீடாக கூடாது என்பது போல ஒரு உதாரணம் எனக்கு உண்டு. அந்த வீட்டிலேயே அழைத்தவரை மட்டும்தான் எனக்குத் தெரியும்.

    அவரும் (கூட்டம் வரவில்லையே என்று) கீழே வாசலில் நின்று வழிபார்த்தபடி வருவோரை வர்றவேற்றுக் கொண்டிருக்க, மேலே நான் (நல்லவேளை நான் மட்டும்) ரொம்ப எல்லாம் முழி முழி என்று முழித்து, மொய் தரும் நேரத்துக்காக காத்திருந்து (அதுவரை என்ன, அதற்குப் பிறகும் என்னை அழைத்த அந்த நண்பர் கண்ணுக்குப் படவில்லை!)மொய் கொடுத்து திரும்பி வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு காலத்தில் நண்பர்கள் திருமணத்துக்கு எப்படியாவது செல்வது வழக்கம் இப்போதும் முடிந்தவரை செல்ல முயற்சிக்கிறேன் மற்றபடி மொய் பற்றி எல்லாம் யோசித்தது இல்லை வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  9. எந்தவிதமான திருமணம் என்றாலும் மணமக்கள் வாழ்க்கை நல்லபடி நடந்தால் போதும் என்றுதான் நினைப்பேன்.

    அனுபவங்கள் எல்லாம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. அதுவும் இந்தக் காலத்தில் அப்படித்தா ந் நினைக்க வேண்டி இருக்கிறது வருகைக்கு நன்றி மேம்

      Delete
  10. பண்டைக்காலத்தில் திருமணம் பலவாறான பெயர்களில் அழைக்கப்பட்டதை இப்பதிவு மூலமாக அறிந்தேன். நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நானே பதிவு எழுதப் போகும் போதுதான் வாசித்து அறிந்தேன் வருகைக்கு நன்றி சார்

      Delete
  11. முருகன் ஓவியம் மிகவும் அழகு!
    திருமண அனுபவங்கள் அருமை!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி மேம் இப்போதெல்லாம் வரைய முடிவதில்லையே என்னும் ஆதங்கம் உண்டு

      Delete
  12. பல்வேறு திருமணங்களில் கலந்து கொண்ட உங்களது நினைவலைகள் எனக்கும் மலரும் நினைவுகளாக, எனது உறவினர்கள், நண்பர்கள் வீட்டு திருமணங்களில் நடந்த சில சுவையான நிகழ்ச்சிகளை நினைவூட்டின. இந்த பதிவினில் நீங்கள் குறிப்பிட்ட,

    // எது எப்படி இருந்தாலும் திருமணங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட வேண்டும். பதிவு செய்யப் பட வேண்டும். இல்லையென்றால் திருமணத்தால் கிடைக்கும் உரிமைகள் இழக்க நேரலாம் //

    என்ற வரிகள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

    இன்றைய காலகட்டத்தில், பலரும் ஜாதகப் பொருத்தம், கிரக நிலைகள் என்று அலசிப் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவேளை செவ்வாய் கிரகத்தில் குடியேறினாலும், அங்கும் போய், செவ்வாய் எத்தனையாவது இடத்தில் இருக்கிறான் என்றுதான் கட்டம் கட்டுவார்கள் போல் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இம்மாதிரி ஜாதகப் பொருத்தமும் ஒரு வித நம்பிக்கை அல்லவா சார் எனக்கு நம்பிக்கை இல்லை என்று தைரியமாகக் கூறுவேன் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்

      Delete
  13. நினைவலைகள் மறக்க இயலாதவை ஐயா
    ஒவ்வொரு படமும் அழகு
    மகிழ்ந்தேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

      Delete
  14. பாலமுருகன் படமும் சமயபுரத்து மாரியம்மன் வெண்ணெய் உண்ணும் கண்ணனும் அழகை ரசித்தேன்
    ரொம்ப அழகாயிருக்கு ..மொழியால் விளைந்த குழப்பங்களும் திருமண நினைவுகளும் ரசித்தேன் ..உங்கள் நண்பர் மகள் செம ப்ரில்லியண்ட் :) சரியானவரைதான் உதாரணம் சொல்லியிருக்கிறாள் :)
    காதல் திருமணமோ இல்லை பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமோ மணமக்கள் மனஒருமித்து சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி சென்றால் வாழ்வில் துன்பமிராது .

    ReplyDelete
    Replies
    1. இந்தப் படங்களை முன்பே அவ்வப்போது பதிவு செய்திருக்கிறேன் இந்த மீள்பதிவு எனது வலைத்தளத்துக்கு அண்மையில் வரத்துவங்கியவர்களுக்காக ரசித்ததற்கு நன்றி ஏஞ்செல்திருமணத்தில் விட்டுக் கொடுத்துப் போகும் குணம் வேண்டும் காதலிக்கும் போது அழகாகத்தெரிபவை எல்லாம் திருமணத்துக்குப் பின் மறையலாம் குறைகளே முன்வந்துநிற்கும் சந்ஃடோஷமாக வாழ்க்கையை நடத்திச் செல்லலுக்கு இந்தப்புரிதல் அவசியமாகும்

      Delete
  15. உங்க்கள் ஓவியங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன் முன்பே. அருமையான அழகான ஓவியங்கள்.
    திருமண விழாக்களுக்கு சென்று வந்த அனுபவம் மிக அருமை.

    / எது எப்படி இருந்தாலும் திருமணங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட வேண்டும். பதிவு செய்யப் பட வேண்டும். இல்லையென்றால் திருமணத்தால் கிடைக்கும் உரிமைகள் இழக்க நேரலாம் //

    உண்மை , நன்றாக சொன்னீர்கள். இந்த காலத்திற்கு மிகவும் அவசியம்.


    ReplyDelete
    Replies
    1. திருமண விழாக்களுக்கு சென்று வந்த அனுபவம் ஒரு பதிவு எழுத விஷயம் கொடுத்தது உறவில் செய்து வைக்கும் திருமணங்களில் எதிர்பார்ப்புகளே வேறு வருகைக்கு நன்றி மேம்

      Delete
  16. திருமணம் என்பதை அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம் - என்று பெர்னார்டு ஷா கூறினாரே! அதைப்பற்றி உங்களுக்கே உரிய வார்த்தைகளில் கூறலாமே? ஆவலோடு காத்திருக்கிறோம். -இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
    Replies
    1. அந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை ஒருவனுக்கு ஒருத்தி என்னும் திருமணம் விபச்சாரம் ஆகாது இதற்கெல்லாம் ஆவலா வருகைக்கு நன்றி சார்

      Delete
  17. ////என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வம்ச விருத்தி செய்ய ஊரும் உலகமும் அளிக்கும் அனுமதியே. அனைத்து ஜீவராசிகளும் தங்கள் இனப் பெருக்கத்துக்கென்றே வாழுகின்றன என்று நான் கருத்து சொன்னால் அநேகம் பேர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்./////

    அருமை. என் கருத்தும் அதுவே

    ReplyDelete
    Replies
    1. சில ரைடர்களைக் காண்கிறேன் வம்ச விருத்தி ஒரு காலத்துக்கு மட்டுமே அதன் பின் வயதானால் கம்பானியன்ஷிப் மட்டுமே

      Delete
  18. அனுபவங்கள் ரசிக்கும்படி இருந்தது..... திருச்சி போவதும் கைகூப்புவதும் என நிறைய இடங்கள் புன்னகைக்க வைத்தன... என் தோழி ஒருத்தியின் திருமணம் பெங்காலி வழக்கப்படி நடுராத்திரியில் நடைபெற்றது மறக்க முடியாதது. அப்புறம் ஒரு நிக்காஹ். இவ்வளவு தானா திருமணம் என ஆச்சரியப்பட வைத்தது. நம் சடங்குகளின் நீளங்கள் பல நேரம் ஆயாசமாய் இருக்கிறது...

    அப்புறம் உங்கள் ஓவியங்கள் அற்புதம் அபாரம்...உண்மையாகவே மிகப்பிரமாதம்.

    ReplyDelete
    Replies
    1. நம் வழக்கங்களிலும் சடங்குகள் மாறிக் கொண்டுதான் இருக்கின்றன முன் காலத்து வழக்கங்கள் இப்போது நாட் ரெலெவெண்ட் நானும் ஆண்டிராவில் இரவுதான் திருமணங்கள் நடப்பதைப் பார்த்திருக்கிறேன் என் விஜயவாடா நண்பர் ஒருவர் இப்போது ஒஹையோவில் இருக்கிறார் தொலைபேசியில் பேசினார் அவரது மகள் திருமணம் இரவில்தான் நடந்தது அது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் என் ஓவியங்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் பாராட்டுக்கு நன்றி மேம்

      Delete
  19. அடடா கண்ணாடி ஓவியங்கள் ரொம்ப ரொம்ப அழகு.. இப்படி வரைந்து நீங்கள் ஒரு கடையே திறக்கலாமே.. அதிலும் அந்த முருகன் படம்.. நம்ப முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நான் வரைந்த ஓவியங்கள் பலவற்றை பரிசாக உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்திருக்கிறேன் ஒரு தஞ்சாவூர் ஓவியம் என் மருத்துவருக்குக் கொடுத்தேன் இப்போது பார்த்தாலும் அதை நினைத்துக் கொள்வடாகக் கூறுவார் இப்போது ஏதும் வரைய இயலுவதில்லை

      Delete
  20. இப்பதிவை இரண்டாக்கிப் போட்டிருக்கலாமோ?.. கல்யாண வீடுகளும்.. சந்திப்புக்களும்.. இக்காலத்தில் இப்படி ஏதும் விசேசங்களில் பங்கு பற்றினால் மட்டுமே உறவுகளைக் காண முடிகிறது.. மற்றும்படி எங்கே கிடைக்கிறது நேரம். நல்ல நல்ல அனுபவங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதுவே நீளம் கருதி சுருக்கியது இன்னும் எத்தனையோ அனுபவங்கள் உண்டு. உறவுகளை இம்மாதிரி நிகழ்ச்சிகளில் காண்பதுதான் வருகைக்கு நன்றி அதிரா

      Delete
  21. திருமணம். மனம் சேர்ந்தால் மணம். இல்லையேல் வெறும் கனம்.

    ReplyDelete
    Replies
    1. திருமணம் என்பது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இழுக்கும் வண்டி சேர்ந்து இழுக்கும் போது கனம் தெரியாது

      Delete
  22. தாங்கள் வரைந்துள்ள படங்கள் அனைத்தும் அருமை.

    உறவினர்களுக்கிடையே அதுவும் நெருங்கிய உறவினர்களுக்கிடையே நடக்கும் திருமணத்தில் உருவாகும் வாரிசுகள் மரபியல் வழி வரும் சில வியாதிகளால் அவதிப்பட நேரிடும் எனத் தெரிந்தும் மக்கள் அதை நாடுவது சொத்துக்காக மட்டுமல்ல சொந்தம் விட்டுப்போகக்கூடாது என்பதற்குத்தானாம்.

    எனக்குத்தெரிந்து ஒரு குடும்பத்தில் அக்கா மகளைத் திருமணம் செய்துகொண்டவருக்கு பிறந்த குழந்தைகள் அனைத்தும் ‘மகோதரம்’ என்ற வயிறு உப்புச நோயால் அவதிபட்டன. நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் நடத்தக்கூடாது என சட்டமே இயற்றலாம்.

    திருமண விழாவில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உறவுகளில் செய்யும் திருமணம் அக்கௌண்டபிலிடி காரண்டீட் என்பது போல்தான் இருக்கிறது பிறக்கும் வாரிசுகளைப் பற்றியாரும் சிந்திப்பதில்லை. அதுவும் தொன்றுதொட்டு வரும் பழக்கங்களை பலரும் விடுவதில்லை அதிலும் உரிமையுடன் தகராறு கள் நடக்கும் வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  23. படங்கள் மிக அழகு சார்!!! உங்கள் கைவண்ணம்!!!

    திருமணங்களை க் குறித்த உங்கள் அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம். உங்கள் நண்பர் மகள் படு ஸ்மார்ட் போல!!!

    இனப்பெருக்கம் அதுதானே இயற்கையின் நியதி!! திருமணம் என்பது நாம் மக்கள் இட்டுக் கொண்ட சமூகக் கட்டுப்பாடு. பண்டைய முறையில் இது போன்ற கட்டுப்பாடுகள் இருந்ததாகச் தெரியவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் கலாச்சார, நாகரீக பண்பாட்டு வளர்ச்சியில் வந்தவையே! ஜாதகம் பார்ப்பது என்பது சாதகமாகவும் ஆக்கிக் கொள்ளப்படுகிறது வேண்டாம் எனச் சொல்லவும் பயன்படுகிறது. ஜாதகம் பார்த்துக் கல்யாணம் செய்து பின்னர் பிரச்சனைகள் வரும் போது யார் இந்த ஜாதகங்களை இணைத்தது என்ற கேள்விகள் அதே ஜோசியரால் எழுப்பப்பட்டதும் நடக்கிறது...

    நல்ல சுவையான பதிவு சார்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  24. There seems to be a problem again my posts do not open through google search Iam not able to write in Tamil from mozilla search

    ReplyDelete