Old is gold
பார்வையும்
மௌனமும்.
-----------------------------------
( ஒரு
சிறு
கதை.)
” ஹரே
ராம, ஹரே ராம, ராமராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ணகிருஷ்ண ஹரே ஹரே” வாய் ஓயாமல் ஈசுவரன்
நாமத்தை ஜெபித்துக் கொண்டு இருக்கட்டும். மனம் அலைபாயாமல் ஒரு நிலைப் படும். உன்
துன்பங்களை மறக்க இதுதான் சிறந்த வழி என்று , அன்று யாரோ சொல்லிச் சென்றதை கெட்டியாகப்
பிடித்துக் கொண்டு வாழ்ந்தாள் காமுப்பாட்டி.வாய் ஓயாமல் எதையாவது சொல்லிக்
கொண்டிருக்கலாம். மனம் ஓயாமல் சிந்திப்பதை தடுக்க முடியுமா.? பாட்டி என்று
எல்லோரும் அழைக்கின்றனரே. அப்படி அவளுக்கு என்னதான் வயதாகிவிட்டது.ஒரு
முப்பத்தைந்து இருக்குமா. ? முப்பத்தைந்து வயதில் பாட்டியா.? திருமணமே ஆகாதவள்
எப்படிப் பாட்டியாக முடியும்.?
சிறு வயதில் வைசூரி வந்து பார்வை போனவளை அவளது தமையன்
சுந்தா எனும் சுந்தரேசன்தான் பராமரித்து வந்தார். ஒரு கப்பல் கம்பனியில் ஸ்டூவர்ட்
ஆகப் பணியாற்றி அப்போதைய ரங்கூனில் பணியாற்றி வந்தவர் நல்ல நிலையில்தான்
இருந்தார். எப்போதும்போல் ஒரே மாதிரியாக வாழ்க்கை அமைவதில்லையே. இரண்டாம் உலகப்
போர் பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. அவரவர் உயிர் தப்பிப் பிழைக்க
இடம் பெயர்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆங்கிலேயரதும் ஜப்பானியரதும் குண்டு மழைக்குப்
பலியானோர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போயிற்று. ஆயிரக் கணக்கானோர் உழைத்து சேர்த்த
பொருளைத் துறந்து உடல் ஆவி காக்க நடந்தே தூரத்தைக்
கடக்கச் செய்த முயற்சியில் மனம் உடைந்தவர் பலர் .பல சமயங்களில் எடுக்கும் முடிவு
சரியா தவறா என்று சிந்திக்கக் கூட முடியாத நேரத்தில் எடுக்கப் படுகிறது.கட்டிய
மனைவி,பெற்ற பிள்ளைகள் இருவர் கண்
தெரியாத சகோதரி; மணமாகாதவள் யௌவனம் குன்றாதவள் .
உயிருக்குப் பயந்து ஓடும்போது அவளைச் சேதமில்லாமல் ஊர் கொண்டு போய்ச் சேர்க்க
அவளது தலை மழிக்கப் பட்டது. மணமேயாகாதவளுக்கு விதவைக் கோலம் போடப் பட்டது. உயிர்
பிழைக்க மெய் வருந்தி வந்து சேர்ந்தபோது அவளுக்குச் சற்றே மனம்
பிறழ்ந்திருந்தது.,சிறிது சப்தம் கேட்டாலும் நிலை குலைந்து போய்விடுவாள் ஆகாய
விமானங்கள் குண்டு மாரி பொழிகின்றன என்றே பயந்து அலறுவாள்.
”‘ராம ராம ராம ராம’ சுந்தா, பேப்பர் பையன் பேப்பர் போட்டுட்டு போய் விட்டான்.
மதிலோரத்தில் விழுந்திருக்கு பார்” கண் தெரியாதவ.ள்தான்.
ஆனாலும் வந்தது பேப்பர் பையன்,
வீசி எறிந்த பேப்பர் மதிலோரத்தில் வீழ்ந்திருக்கிறது என்று துல்லியமாகச் சொல்லுவாள்,
காமுப் பாட்டி.
அவளைப் போய் பாட்டி என்று சொல்ல மனம் வருவதில்லை.
ஆகவே இனி அவள் வெறும் காமுதான்.
கண்புலன் இல்லாதிருந்தாலும் காமுவுக்கு,
மீதி எல்லாப் புலன்களும் மும்மடங்கு கூர்மையானவை.
அவளது எல்லா வேலைகளையும் அவளே செய்து கொள்வாள்.
அடுப்பு மூட்டி வென்னீர்போட்டு குளித்து,
துணி துவைத்து என்று எல்லாப் பணிகளும் செய்வாள்.
அவளுக்கு சப்தம் சிறிது அதிகமானாலும் துடித்து விடுவாள்.
‘ என் ஆயுசை எடுத்துக் கொள். குண்டு போடாதே’
என்று வானம் பார்த்து
( ? ) அலறுவாள். அந்த நேரம் மாத்திரம்
மட்டுமே அவள் வித்தியாசமாய் நடந்து கொள்வாள். அதனால் அந்த வீட்டில் ஒருவர் பேசுவது
அடுத்தவருக்குக் கேட்பதே கடினம் என்றவகையில் மெதுவாகவே உரையாடுவார்கள்
.
காமு அந்த வீட்டில் இன்னொரு பொருள் என்ற நிலையிலேயே கருதப்
பட்டு வந்தாள். என்ன இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே. அவளுக்கும் ஆசாபாசங்கள்
இருக்காதா.?உடலும் மனதும் துணைக்காக ஏங்காதா.?. சுந்தரேசன் மனைவிக்கு இந்த எண்ணம்
அடிக்கடி ஏற்படுவதுண்டு. தன் கணவனிடம் அன்பாகப் பேசவே தயங்குவாள்.
காமுவுக்குத்தான் பாம்புச் செவியாயிற்றே. சிறிது சலனம் ஏற்பட்டாலும் ‘ என்ன’ என்று கேட்டுவிடுவாள்.
அந்த வீட்டுக்கு வந்து போகிறவர் யார் யார் என்று காமுவுக்கு நன்றாகத் தெரியும்
காலடி ஓசையிலேயே வித்தியாசம் கண்டு கேள்விகள் கேட்கத் துவங்கி விடுவாள்.
சுந்தரேசனின் மனைவியின் குடும்பத்து உறவினர்கள் அடிக்கடி
வந்து போவார்கள் பிள்ளைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியர் வருவார்.
இவர்கள் எல்லோரையும் காமுவுக்கு அடையாளம் ( ? ) தெரியும். காமுவுக்கு நல்ல குரல்
வளம். அவளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்தால். இசையில் மனம் லயித்து அவளைப் பற்றிய
சிந்தனைகள் அவளை அதிகம் வாட்டாது என்று எண்ணி காமுவுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க
ஏற்பாடாயிற்று. மதியம் பாட்டு சொல்லிக் கொடுக்க ஆசிரியர் வரும் சமயம் அநேகமாக
வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்.உச்சஸ்தாயியில் வரும் பாட்டை தவிர்க்க
ஆசிரியரிடம் வேண்டுகோள் வைக்கப் பட்டது. ஒரு விதத்தில் அது சுந்தரேசனின் மனைவிக்கு
அனுகூலமாக இருந்தது. அவருடைய மதிய உறக்கம் கெடாது அல்லவா.
வீட்டில் போதிய மனிதர்கள் இருந்தும் ஒருவருக்கொருவர் அதிகம்
பேசிக் கொள்வதில்லை. என்னதான் பேச முனைந்தாலும் ஒரு இறுக்கச் சூழல் இருந்து கொண்டே
இருந்தது. மனதில் தோன்றும் எண்ணங்கள் வெளிப்படுத்தப் படாமல் அநேகமாக சருகாகவே
உதிர்ந்து விடுவதுண்டு. காமுவுக்கு சில நேரங்களில் எல்லாவற்றின் மீதும் ஆத்திரம்
வரும். அப்போதெல்லாம் அவள் ஏதாவது சொல்ல வரும் போது ” கிருஷ்ணா, ராமா “ என்று
ஜபித்துக் கொண்டிரு. மனசை அலைய விடாதே என்று அடக்கி விடுவார் சுந்தரேசன்.
அவருக்குப் பதில் தெரியாக் கேள்விகள் கேட்டுவிடுவாளோ என்னும் பயம்.. ஒன்றுமே
தெரியாமல் பார்வையே இல்லாமல் வெறும் வார்த்தைகளைக் கொண்டு மனதை எதில் லயிக்கச்
செய்யமுடியும். ?கிருஷ்ணனையும் ராமனையும் வெறும் வார்த்தைகளால் தெரிந்து கொள்ளச்
சொல்கிறார்களே என்று கோபம் வரும் அந்த உணர்ச்சியையும் யாரிடமும் காட்ட முடியாது.
ஒரு முறைபாட்டுப்
படித்துக் கொண்டிருந்தபோது எங்கோ ஒரு பட்டாசுச் சத்தம் கேட்டு அல்றினாள். ” என்
ஆயுசை எடுத்துக் கொள்; குண்டு போடாதே” என்று துடித்தவளை அனிச்சையாக பாட்டு
வாத்தியார் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். முதல் முறை ஒரு ஆணின் ஸ்பரிசம்
காமுவுக்குள் என்னவோ சலனங்களை
ஏற்படுத்தியது. எதுவோ தனக்கு மறுக்கப்பட்டு இப்போது அறியாமல் பெறப் படும்போது
சற்றே மனமும் உடலும் குறு குறுத்தது. என்னவோ தவறு செய்கிறோமோ என்று தோன்றினாலும்
அந்தத் தவறை செய்வதில் அலாதி இன்பம் இருப்பதை உணர்ந்தாள்..பாட்டு ஆசிரியரும்
சற்றும் யோசிக்காமல் ஆறுதலாக அணைத்தவர், யாராவது பார்த்து விடுவார்களோ என்றுதான்
பயந்தார். கண் தெரியாவிட்டால்தான் என்ன. ?அவளது உடலில் ஓடிய உணர்ச்சிகள் அவரால்
உணரப் பட்டதே. ” வெறும் வெடிச்சத்தம்தான். யாரும் குண்டு போடவில்லை “என்று
ஆறுதலாகக் கூறியவர் அவளுடைய இந்த பயம் போக்கும் மருந்து தன்னிடம் இருப்பதை
உணர்ந்தார்.
அடுத்த சில நாட்களில் காமுவிடம் சற்று மாற்றம் இருப்பதை
சுந்தரேசன் உணர்ந்து கொண்டார் .ராம ராமாவுக்குப் பதில் சில பாட்டுக்கள்
முணுமுணுக்கப் பட்டன.” ஆசை
முகம் மறந்து போச்சே “ என்றும் கண்ணில் தெரியுதொரு தோற்றம் “ என்றும் அவளது பாட்டு
சத்தம் இயல்புக்கு முரணாக ஒலிக்கக் கேட்க சுந்தரேசன் தன் மனைவியிடம் இது பற்றிக்
கேட்டார். ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத் தெரியலாம் அல்லவா.
“காமுவின் சுபாவத்தில் என்னவோ மாற்றம் தெரிகிறதே
,கவனித்தாயா.”
“ அவள் முன்னைப் போல் இல்லை. நானும் கவனித்தேன்..அவகிட்ட
இது பற்றி எப்படிக் கேட்பது “
“ நீ எதையும் கேட்டு வைக்காதே. ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள்
தானாத் தெரியறது.” என்று மனைவிக்கு கடிவாளம்
போட்டார். சுந்தரேசன்.
அந்த நாள் சீக்கிரமே வந்தது. காமு ஒரு நாள் “வெண்ணிலவு நீ
எனக்கு;
மேவுகடல் நான் உனக்கு; பண்ணின் சுதி நீ எனக்கு; பாட்டினிமை
நான் உனக்கு “ என்று பாடிக் கொண்டிருந்தாள்.
“ ஹாய் ! அத்தைப் பாட்டி நல்லாப் பாடறாங்களே” என்று குழந்தைகள் பாராட்ட
வந்ததே கோபம் காமுவுக்கு
.
“ நான் என்ன பாட்டியா உங்களுக்கு. கிருஷ்ணா ராமா ன்னு இருந்தா
பாட்டியாகி விடுவேனா. காலா காலத்துல எனக்கும் கலியாணம் கார்த்தின்னு இருந்தா
இப்படிக் கூப்பிடுவேளா..எல்லாம் ஒங்கப்பாவச் சொல்லணும் “ என்று பிலு பிலுக்க
துவங்கி விட்டாள். யாருமே கொஞ்சமும் எதிர்பார்க்காத பிரச்சனையாகி விட்டது. காமுவை
பாட்டி என்று நம்பச் செய்தது.
அதன் பின் எல்லோரிடமும் காமு சிடுசிடுவெனவே இருந்தாள்
சுந்தரேசனும் அவன் மனைவியும் கலந்தாலோசித்தனர். காமுவின் மனம் முன்னைப் போல் ஈஸ்வர
நாமத்தில் லயிக்கவில்லை. எப்போதும் பாடிக்கொண்டே இருந்தாள். காமுவை எப்படியாவது
பாட்டுப் பாடுவதை நிறுத்தச் செய்ய வேண்டும்.பாடும் பாட்டு வேறு எண்ணங்களுக்கு
வித்திடலாம் அதனை நிறைவேற்றும் உத்தியாக பாட்டு ஆசிரியரை வர வேண்டாம் என்று
சொன்னார்கள். பாட்டுவாத்தியாருக்கு கொஞ்சம் புரிந்தது போலவும் , கொஞ்சம் புரியாதது
போலவும் இருந்தது. எதையாவது கேட்கப் போய் எங்காவது கொண்டு விட்டால் என்ன செய்வது.?
ஏதும் கேட்காமல் அவரும் நின்றுவிட்டார். பாட்டு நிறுத்தினது காமுவுக்கு
அதிர்ச்சியாக இருந்தது. காரணம் கேட்டாள். லௌகீகப் பாடல்கள் கற்றுக் கொள்வதால் மனம்
கட்டுக்கடங்காமல் போய்விடும்.. அதனால் அவளுக்கும்
மற்றவர்களுக்கும் மன அமைதி குறையும் என்றும் கூறி அவளை அடக்கப் பார்த்தனர். பாட்டு
வாத்தியாரால்தான் எல்லாம் கெட்டுப் போவதாகவும் அதனால்தான் அவரை
நிறுத்திவிட்டதாகவும் கூறினர். காமுவுக்கு எதையும் ஜீரணிக்க முடியவில்லை.
என்னவென்று சொல்ல முடியாத ஒரு வைராக்கியம் அவளது உள்ளத்தில் எழுந்தது. முன்
எப்போதும் இல்லாத அளவுக்கு விடாமல் பாடத் துவங்கி விட்டாள். பிள்ளையார் பிடிக்க
குரங்காய் முடியும் கதையாய் தோன்றியது சுந்தரேசனுக்கும் அவர் மனைவிக்கும்.
இவ்வளவு நாள் இல்லாத பிரச்சனை இப்போது தலை தூக்குவது
தெரிந்தது.
” கண்
தெரியாதவள், வேண்டாத எண்ண்ங்களுக்கு அடிமையாய் கெட்டுத் தொலந்தால் என்ன செய்வது.
எதையாவது சொன்னால் எதிர்த்தல்லவா பேசுகிறாள். கண் தெரியாதது போல் வாயும் ஊமையாய்
இருந்தால் எவ்வளவு நல்லதாயிருக்கும்.” கணவன்
மனைவி பேசிக்கொண்டதைக் காமு கேட்டு விட்டாள். என்னவென்று சொல்ல முடியாத பாரம் அவளை
அழுத்திற்று. குருட்டுக் கண்களானாலும் கண்ணீருக்குப் பஞ்சமா என்ன.?ஒரு இரவு
முழுவதும் அழுது கொண்டிருந்தாள். ‘ கண் தெரியாமல் இருப்பது போல் பேச்சும்
இல்லாதிருக்க வேண்டும் என்றுதானே இவர்கள் விரும்புகிறார்கள். இனி என் வாயிலிருந்து
ஒரு அட்சரமும் வெளிவராது. இனி என்றும் மௌனம்தான்’ என்று முடிவெடுத்துவிட்டாள்
காமு.
ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இருண்ட உலகில் பல்வேறு சப்தங்களுக்கிடையில்
நிரந்தர மௌனத்தின் ஓசையிலேயே காலம் கடத்திய காமுவின் நினைவுகள் சுந்தரேசனுக்கு
மிகுந்த மன வேதனையை அளித்தது.
“ மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும் “எங்கோ
ஒலிக்கும் பாடலும் அதன் முரணும் வலியை இன்னும் அதிகரிக்கச் செய்தது
-----------------------
பாவம் காமு(ப்பாட்டி)! அவள் உணர்வுகள் புரிந்துகொள்ளப்படாமலேயே போயின.
ReplyDeleteபாட்டியாக நினைக்கப்பட வைத்தவர்
Deleteகாமுப்பாட்டியின் கதை மனதைக் கனக்க வைத்துவிட்டது.
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்
Deleteஎத்தனையோ பெண் ஜீவன்கள் கஷ்டப்பட்டிருக்கின்றன. அதிலும் பிராமண சமூகத்தில். கொடுமைதான், இன்றைய அளவீடுகளுடன் ஒப்பிடும்போது. நம்பூதிரி, நாயர் குடும்ப வழக்கங்களைப் பற்றிப் படித்தேன். (நூறு வருடங்களுக்கு முன்பு இருந்த வழக்கங்கள்).
ReplyDeleteஒரு வழக்கம்பற்றி எ ழுதியகதையின் சுட்டி இதோ படித்துப் பாருங்கள்
Deletehttps://gmbat1649.blogspot.com/2012/10/blog-post_17.html
DeleteHappy birthday sir. Seeking your blessings.
ReplyDeleteTHANK YOU SRI
ReplyDeleteஎதையோ சொல்ல வருகிறீர்கள் என்று மட்டும் புரிகிறது ஐயா... அது உங்களுக்கே உரித்தானது...
ReplyDeleteபதிவை படித்தோமா கருத்து சொன்னோமா என்று இல்லாமல் ந ஏதொசொல்ல வருவது பற்றிய ஆராய்ச்சி தேவையா டிடி
ReplyDeleteமனம் கனத்துப் போய்விட்டது ஐயா
ReplyDeleteகதைதானே சார்
Deleteமனம் கனக்கச்செய்த கதை. பெண்ணின் பார்வையில் எழுதப் பட்டிரு்பது சிறப்பு.
ReplyDeleteகத்சைகளில் சில வாழ்க்கை நியதிகளை சொல்ல முய்ற்சி
ReplyDelete