Sunday, January 3, 2021

பிழைகள்


பிழைகள் 

 

தாயைக் காட்டுகிறேன், தந்தையைக் காட்டுகிறேன்,

தட்டானே கல்லைத்தூக்கு என்றே வாலில் நூல்கட்டிய

தும்பியும் பிடிமானம் கிடைக்கக் கல்தூக்க தன் சொல் கேட்டு

அது பணிவதாக எண்ணும் பாலகன் அறிவானா

அது ஒரு கருத்துப் பிழை என்று.?

 

நீண்டிருக்கும் தார்ச் சாலையில் வழுக்கி ஓடும்

பேரூந்தில் ஒரு மதிய நேரம் பயணிக்கும்போது,

சற்றுத் தொலைவில் சாலையில் தேங்கி நிற்பது நீரோ

அல்லது மழையின் சுவடோ என எண்ணி அருகில்

காணும்போது நீரேதுமின்றி கண்டது கானலெ

அன்றி காட்சிப் பிழை என்றும் அறிவோமன்றோ.?

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று

ஆன்றோர் கூறினர் அன்று;அகத்தின் அழுக்குப்

பற்றிக் கூற மறந்தனரோ, இல்லை கூற இயலாது

என்றே விட்டனரோ.? அழகான முகங்கள் எல்லாம்

அகத்தில் அழகானதா, புற அழகற்ற  முகங்கள்

அகத்தில் அழகாய் இருக்கக் கூடாதா.?

 

உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவோர்

உறவு கலவாமை வேண்டும் என்று எளிதே கூறினர்.

முன் பல்லெல்லாம் தெரியக் காட்டி,

முகமெல்லாம் மகிழ்ச்சி கூட்டி

கடைவாய்ப் பல்லால் கடித்துக் குதறி

வன்மம் காட்டும் மனிதரும்  காட்சிப் பிழையில்

கண்டறியாது போதல் சாத்தியமன்றோ.?

 

கண்ணால் காண்பதும் பொய்யாகலாம்,

காதால் கேட்பதும் பொய்யாகலாம்

காட்சிப் பிழையும், கருத்துப் பிழையும்

பிழையாகவே என்றும் இருக்கட்டும்..

ஆண்டவன் நம்மை ரட்சிக்கட்டும்.!

---

 

 

 

 

12 comments:

  1. அழகான முகங்கள் அழகற்ற முகங்கள் - பொதுவா அழகானவர்கள் உள்ளம் கொஞ்சம் கருமை படிந்து இருப்பதும் அழகற்றவர்கள் என நம் மனதுக்குத் தோன்றுபவர்களில் பலர் மனங்கள் பளீரிடுவதும் வாழ்க்கையில் கவனிக்க நேர்ந்தவைதான்.

    ReplyDelete
    Replies
    1. அனுபவங்கள் பேசுகிறதோ

      Delete
  2. காட்சிகள் பிழையன்று. கானல் நீர் காட்சி நம் மனம் உருவகப் படுத்துவது. பிழையாக திரிப்பது நமது மூளையே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளையே. அல்லாது பொலிவல்ல. 
    ஆனால் நீங்களே அவை பிழையாகவே இருக்கட்டும் என்று முடித்துவிட்டீர்கள். 

    ReplyDelete
    Replies
    1. ஒரு குச்சியை நீரில்நிற்க வைத்தால் வளைந்து காண்[பது போல்தோன்றும் அதுகாட்சிப் பிழையா கருத்துப் பிழையா

      Delete
  3. அதானே என்றே கேட்கத் தோன்றுகிறது...

    முடிவில் இவையெல்லாம் பிழைகள் என்று உணர வைத்த ஆண்டவன் ரட்சிக்கவில்லையோ...?

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவன் என் கருத்துக்கு வலு சேர்க்கட்டும்

      Delete
  4. நல்ல சிந்தனை.  பொய்மையும் உண்மையும் இடம், காலம், நேரம் பொறுத்து மாறலாம். 

    ReplyDelete
    Replies
    1. மாறுவதுபோல் தோன்ற்லாம்

      Delete
  5. ரசிக்க வைத்த வரிகள் அல்ல பிழைகள்.

    ReplyDelete
  6. சொற் பிழை
    பொருட் பிழை
    கடந்து
    காட்சிப் பிழை
    தொடருங்கள்
    தொடருகிறேன்

    ReplyDelete
  7. பிழைகள் என்பவை பிழைகள் இல்லாமலும் இருக்கக்கூடும்

    ReplyDelete