O
ஆண்டு விழாவில்நாடகம் போட்டார்கள்.
அதில் பங்கு பெற எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. Henry Durant துவக்கிய ஸ்கௌட்ஸ் நடைமுறைக்கு வந்ததை, ஆங்கிலத்தில்
உரையாடல் மூலம் விளக்கும் நிகழ்ச்சி அது. மேடையில்தோன்ற என்னிடம் ஃபுல் பாண்ட்
ஏதும் இருக்கவில்லை. நண்பன் ஒருவனிடம் இரவல் வாங்கி, அதை உடுத்த நான் பட்ட பாடு
இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. பாண்ட் இரவல் கொடுத்த பையன் என்னைவிட
மிகவும் உயர மானவன்.அவனுடைய பாண்ட் எனக்கு மிகவும் நீளமானது. கணுக்கால் அருகே
மடித்து என்னுடைய அளவுக்குக் கொண்டுவந்து உடுத்தி, நடித்தேன். அந்தப் பாண்டின்
நிறம் கூட நினைவிருக்கிறது. ஊதாவும் சிவப்பும் கலந்த நிறம். நன்றாகப் பேசி
நடித்தேன் என்று பெயர் கிடைத்தது. நான் எட்டாம் ஒன்பதாம் வகுப்புகளில்நல்ல
மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தேன்.
எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்
அங்கண்ணத் தேவர். அவருடைய மகன் குப்புஸ்வாமி என் வகுப்புத் தோழன். பிற்காலத்தில்
அவருடைய வீட்டிற்கு அடையாளம் அறிந்து சென்றபோது, அங்கண்ணத் தேவர் இறந்து வெகு
நாட்களாகி விட்டன என்று தெரிந்தது. அவருடைய மகன் வழக்கறிஞராகப் பணி புரிகிறார்
என்று கேள்விப்பட்டேன். அவரை சந்திக்க முயற்சிக்கவில்லை. அந்தப் பள்ளிகூட இப்போது,
கோவை மாநகர ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளாகப் பிரிக்கப் பட்டு,
விரிவடைந்திருக்கிறது.
கோவையில் இருந்தபோது ஒரு முறை
வெங்கிடாசலம் அண்ணாவுடன்,பேரூர் சென்று வந்தது மறக்க முடியாத சம்பவம். அண்ணாவுக்கு
சைக்கிள் ஓட்டத்தெரியும்.சைக்கிளிலேயே பேரூர் செல்லலாம் என்று ஒரு வாடகை சைக்கிள்
பிடித்து வந்தோம். அண்ணா ஓட்ட நான் பின்னிருக்கையில். அந்தக் காலத்தில் சைக்கிளில்
டபிள்ஸ்போவது அனுமதிக்கப் படவில்லை. சட்டப்படி குற்றம். சிறிது தூரம் அண்ணா
ஓட்டுவார்.தொலைவில் யாராவது போலீஸ்காரர் வருவது போல அவருக்குத் தோன்றும்.
குற்றமுள்ள நெஞ்சல்லவா.. என்னை இறங்கச் சொல்லி அவர் ஓட்ட,நான் அவர் பின்னாலேயே ஓட
வேண்டும். சற்று தூரம் சைக்கிள் சவாரி. பிறகு ஓட்டம். பிறகு சைக்கிள்
சவாரி.இப்படியே ஏறத்தாழ ஓடியே பேரூர் சென்று வந்த நினைவு இப்போதும் பசுமையாக
இருக்கிறது.
ஒருமுறை அப்பா பாலக்காடு சென்றிருந்தார்.
அம்மாவுடைய பிரசவ காலம் என்று நினைவு. சந்துருவை பெற்றெடுக்கச் சென்றிருந்தார். அப்பா
எங்களிடம் ஒரு குறிப்பிட்ட நாளில் இரவு திரும்பி வருவதாகவும், வரும்போது அவருக்கு
கொஞ்சம் பால் குடிக்க எடுத்து வைக்கும்படியும் சொல்லியிருந்தார். பாலும் எடுத்து வைக்கப்
பட்டது. மாலையில் அவர் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தநேரம் வந்தும்
அவர் வந்திருக்கவில்லை. அவர் வரவில்லையென்றால் பால் கெட்டு விடும் ,வீணாகிவிடும்
என்று கூறி அதைக் குடித்து விடலாமா என்ற பெரிய சர்ச்சைக்குப் பிறகு எல்லோரும்பங்கு
போட்டுக் குடித்து விட்டோம். எனக்கு அது சரியாகப் படவில்லையென்றாலும், பெரியவர்கள்
தீர்மானத்துக்குப் பணிந்து விட்டேன். சற்றுத் தாமதமாக அப்பா நல்ல பசியோடு
வந்திருந்தார். குடிக்கப் பால் இருக்க வில்லை. மிகவும் மனசு நொந்து எல்லோரையும்
திட்டினார். இப்போது நினைக்கும்போது நாங்கள் நடந்து கொண்ட விதம் வெட்கப் பட
வைக்கிறது. கோவையில் இருந்தவரை வறுமையின் கொடுமை எங்கள் குடும்பத்தை மிகவும்
பாதித்து விட்டதாகத் தெரிகிறது. அப்போது அது வறுமை என்று தோன்ற வில்லை. வாழ்க்கை
முறையே அதுதான் என்று எனக்குத் தோன்றியது.
வெங்கடாசலம் அண்ணா
பள்ளிப்படிப்பு முடிந்து,மேல் படிப்புப் படிக்க மிகவும் ஆசைப்
பட்டார்.முடியவில்லை. அவர் ராணுவத்தில் சேர்ந்தார். ஆச்சு அண்ணா புனித மைக்கேல்
பள்ளியில் எஸ்.எஸ். எல். சி. தேர்வு எழுதி முடித்து ரிசல்டுக்குகாக
காத்திருக்கையில், பாய்ஸ் நேவியில் சேர மனு செய்து, (ரெட் ஃபீல்ட்ஸ் ரெக்ரூட்டிங்
செண்டர் )தேர்வுமாகி விட்டார். அவருடைய கண்களிலேதோ சிறிய குறை இருப்பதாகவும்
சிறிது காலம் மருந்து போட்டுக் கொண்டு பிறகுவரவும் கூறியிருந்தனர். பள்ளியிறுதி
முடிவு வரவும் அவருக்கு நேவியில் சேர உத்தரவு வரவும் சரியாக இருந்தது. ஆச்சு அண்ணா
நேவியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேலையில் பயிற்சிக்குச் சேரும்வரை, பட்ட
அனுபவங்களைக் கூறும்போது, அவர் பட்ட கஷ்டங்களும் வேதனைகளும் தெரிய வரும். எப்படியோ
கோயமுத்தூர் வாழ்க்கை முடிவதற்குள் இரண்டு அண்ணன்மார்களும்,வேலையில் சேர்ந்து
விட்டனர்.
அவர்கள் வேலைக்குச் சேர்ந்து எங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்று அப்பா மிகவும்நம்பிக்கையுடனிருந்தார். நான் ஃபோர்த் ஃபார்ம் முடித்திருந்தேன். அந்த நேரநேரத்தில் அப்பாவுக்கு வெல்லிங்டனுக்கு மாற்றலாகி இருந்தது. அப்பா அப்பர் கூனூரில் வீடு பார்த்திருந்தார். ஒரு பேரிக்காய் தோப்புக்கு நடுவே ஒரு வீடு. அடுத்தடுத்து வீடுகள் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்தன. ஸிம்ஸ் பார்க், பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட் அருகில் வீடு. அடுத்த வீட்டில் எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர். புதிதாகத் திருமணமானவர். பெயர் நினைவுக்கு வரவில்லை. அன்னியோன்னியமான தம்பதிகளாய்த் தெரிந்தனர்.
கோயமுத்தூரிலிருந்து
நாங்கள் கூனுருக்கு பஸ்ஸில் வந்தபோது, மாலை நேரமாகி இருந்தது.பழக்கப்படாத குளிர்
வெடவெடத்தது. அரை நிஜாரும் சொக்காயும்தான் உடை. இதெல்லாம் இப்போது
நினைக்கும்போதுதான்,அந்த அனுபவம் உறைக்கிறது.நாங்கள் அந்த வீட்டில் இருக்கும்போது,
சுற்று முற்றும் பேரிக்காய் மரங்களும், ஆரஞ்சு மரங்களும் ஆக கைக்கெட்டிய நிலையில்
பழங்கள் .எவ்வளவு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பறித்துத்
தின்னலாம்.வீட்டிலிருந்து ஐந்து பத்து நிமிட நடையில் பள்ளிக்கூடம்.செயிண்ட்.
ஆண்டனிஸ் ஹைஸ்கூல்..பத்தாம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளிக்கட்டணம் மாதம் ரூபாய்
ஆறேகால் என்று நினைவு.
பள்ளியில் சேர்ந்த புதிதில் நடந்த சம்பவம் ஒன்று நன்றாக நினைவுக்கு வருகிறது. வகுப்பில் ஆங்கிலப் பாடம் நடக்க இருந்தது. நான் புதிதாக சேர்ந்த பையன். வகுப்பு ஆசிரியர் ப்ரதர். மாண்ட்ஃபோர்ட் என்னிடம் அவர் நடத்திக் கொண்டிருந்த பாடத்தைப்படிக்கச் சொன்னார். ஷேக்ஸ்பியரின் ட்வெல்ஃப்த் நைட் என்ற பாடம். அதில் செபாஸ்டியன், வயோலா என்ற பாத்திரங்கள் வருவர். நான் மிகவும் இயல்பாக தைரியமாகப் படிக்க ஆரம்பித்தேன். VIOLA என்று இடம் வரும்போது, வயோலா என்று படித்தேன். வகுப்பே கொல்லென்று சிரித்தது. எனக்கு அவமானமாகவும் வெட்கமாகவுமிருந்தது. ப்ரதர். மாண்ட்ஃபோர்டும் புன் முறுவலித்துக் கொண்டே வகுப்பை அடக்கி, என்னையும் அமரச் சொன்னார். வகுப்பு முடிந்ததும் என்னருகில் அமர்ந்திருந்த சக மாணவர்களிடம் அவர்கள் கேலியாக சிரித்ததற்குக் காரணம் கேட்டேன். நான் வயோலா என்று படித்தது தவறு என்றும் வியோலா என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.wநான்ப்ராப்பர் நௌனில் வெற்று மொழியில்உச்சரிப்பு தவறு என்று கூறமுடியாது
என்று வாதிட்டேன் யாரும்நம்பவில்லை அடுத்த நாள் ஆங்கிலப் பாடம் நடத்த ப்ரதர் மாண்ட்ஃபோர்டுக்குப் பதிலாக தலைமை ஆசிரியர்,ப்ரதர் ஜான் ஆஃப் த க்ராஸ் வந்தார். அதே பாடத்தை அவர் நடத்தும்போது, வயோலா என்றே படித்தார். அப்போது நான் எழுந்து நின்று முதல் நாள் நடந்த சம்பவத்தைக் கூறினேன். அவர் என்னுடைய நிலை சரியென்று கூறினார். அன்று நான் அடைந்த கர்வம், ஆங்கிலப் பாடத்தில் நான் வகுப்பில் முதலாம் மாணவனாக நிலைக்க உறுதுணையாய் இருந்தது. அந்த பள்ளியி இருந்த காலத்தில் உற்ற நண்பர்களாக இருந்த வெங்கட ராவ், விஸ்வநாதன், தாமோதரன், மற்றும் கால்பந்தாட்ட வீரன் தியோஃபிலஸ் இவர்களையெல்லாம் மறக்க முடியாது*(தொடரும்)
பெங்களூரு-திருச்சி-மெட்ராஸ்-அரக்கோணம்-பாலக்காடு-கோவை-குன்னூர் என்று பத்து வகுப்புகளுக்குள் எத்தனை ஊர் மாற்றம். உண்மையிலேயே சிறு வயதில் பட்ட கஷ்டங்களை நினைத்து பார்க்க இயலவில்லை. சுய சரிதை தொடரட்டும். பகிர்வதால் ஒரு ஆசுவாசம் உண்டு.
ReplyDeleteJayakumar
இந்த கர்வம் அதாவது பெருமிதம் சிறப்பு...
ReplyDelete//அப்போது அது வறுமை என்று தோன்ற வில்லை. வாழ்க்கை முறையே அதுதான் என்று எனக்குத் தோன்றியது.//
ReplyDeleteஆம். பழகி விடுகிறோம்.
நன்றாக ஆங்கிலம் படித்த குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் நான் அசட்டுப் பட்டம் வாங்கி இருக்கிறேன். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தேங்க்ஸ் என்று சொன்னால் நோ மென்ஷன் என்பார்கள் நான் ஒருமுறை அந்த உறவினப்பெண் 'ஸாரி' சொன்னதற்கும் /நோ மென்ஷன் 'என்று சொன்னதும் அந்தப் பெண் சிரித்து விட்டாள்.
ReplyDeleteஅக்கால வாழ்க்கை முறைக்கும் இக்காலவாழ்க்கை முறைக்கும் ....அடேயப்பா எவ்வளவு வித்தியாசம்.
ReplyDelete