நினைவில் நீ ( நாவல் தொடராக )
---------------------------------------------
------- 8 -----
” ஆஷா,உலகத்து இன்பங்களை எல்லாம் நீயும் நானும் இப்படி சேர்ந்து இருக்கும்போது அனுபவிப்பது போன்ற ஒரு உணர்ச்சி.அழகுக்கு இலக்கணம் வகுத்தவள் நீ.உன் பார்வை ,செயல், நடை, ஹூம்.! எல்லாம் என்னைப் பித்தனாக்குகிறது.”- குடிபோதையில் குமாரின் பிதற்றல்.
”அதுதானே என் லட்சியம். அந்த அளவுக்கு உங்களை நினைக்கச் செய்கிறேன் என்பதே பெருமையல்லவா” –அருகில் இருப்பவனை ஆட்கொண்டுவிட்ட ஆஷாவின் மதர்ப்பு.
“ எனக்கு புகழ்ந்து பேசத்தெரியாது ஆஷா.ஆனால் ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது.உன் இதழொடு என் இதழைச் சேர்க்கும்போது இந்த உலக நினைவே இல்லை. இன்னும் ஒரு முறை என்னை சொர்கத்துக்கு அழைத்துச் செல் ஆஷா”—கிடைத்ததை மேலும் பெற புகழ் பேசத் தெரியாத ராஜனும் பேசுகிறான்.
“ என் ராஜனுக்குக் காரியத்திலேயே கண்:- செல்லமாகக் கடிந்து கொண்டாலும் கேட்டவனுக்கு இல்லை என்று சொல்லவில்லை ஆஷா.
“ மருத்துவம் படிக்கிறேன் டார்லிங், ஆனால் எனக்குள்ள வியாதிக்குத்தான் மருந்து தெரியவில்லை. நீ அருகிலிருக்கும்போது, உனது மென் கரம் என் மேனியில் படும்போது குளிருகிறது, ஜுரமடிக்கிறது. இருந்தாலும் அதிலும் ஒரு இன்பம். எனக்கு என்ன மருந்து ப்ரிஸ்க்ரைப் செய்கிறாய் ஆஷா?” மருத்துவ மாணவன் மோஹனுக்கு ஆஷா தரும் மருந்து.” வள்ளுவரின் காமத்துப்பாலில் ஒரு டோஸ், லேடீ சாட்டர்லீஸிலிருந்து ஒரு அத்தியாயம். இதிலும் குணமாகவில்லை என்றால், அதிக ஃபீஸுக்கு இன்னொரு மருந்து இருக்கிறது. அது...”
கல்லூரி மாணவர்கள் முதல் கில்லாடி ரங்கன்கள் வரை எல்லோரும் ஆஷாவுக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் அசிங்கமானதை அழகாகச் சொல்வதென்றால் பல வகை வண்டுகளுக்கும் தேன் சொரிந்து கொடுக்கும் வண்ண மலர் ஆஷா. உள்ளபடி சொல்லப் போனால் பேதமின்றி தங்கிச் செல்லும் ருபாய் நோட்டு ஆஷா.
அன்று கண்ணன் எத்தனை ஆர்வத்துடன் ஐ லவ் யூ என்று கூறினான். அந்த வார்த்தைகளை கேட்டதும் எவ்வளவு இன்பம் அடைந்தாள். இந்தப் பாழாய்ப் போன அம்மா மட்டும் வந்திருக்கா விட்டால்....கண்ணனாவது வீட்டிலிருந்தவன். அன்று வரை அவளிடம் மனம் விட்டுப் பேசக் கூடத் தயங்கியவன். காலேஜ் வாசலிலே தன் வருகைக்காகக் காத்திருக்கும் இள வட்டங்களின் முகங்களில் ஏற்படும் ஏக்கங்கலந்த பார்வைகள்.; தன் ஒரு கண் அசைவுக்காகக் காத்திருக்கும் அத்தனை பேர்களும், இசைவினை அறிந்தால் எத்தனை மகிழ்ச்சி அடைவார்கள். அனைவரும் தன் காலடியிலே வந்து விழ மாட்டார்களா/! ச்சே..! என்ன வாழ்க்கை இது. ! கற்பனையில் காலத்தை ஓட்டுவதைவிட உண்மை வாழ்க்கையை உணர வேண்டும்.. பாட்டியாவது தாத்தாவாவது...!அம்மா அப்பா யாராயிருந்தால் என்ன.?என் உரிமையை விட்டுக் கொடுத்துக் கட்டுப் பட்டு வாழ முடியாது. ---- நளினமான நினைவுகள் தோன்ற வேண்டிய இடத்தில் புரட்சிகரமான எண்ணங்கள் எழுந்தன. பலன்.? கட்டப் பட்ட தளைகள்த் தகர்த்து எறிந்து தாந்தோன்றித் தனமாக நடக்க ஆரம்பித்தாள். . முதலில் பயமாக இருக்கத்தான் செய்தது. நாளா வட்டத்தில் பயம் போய் உறுதி வளர்ந்தது. பாரதியின் புதுமைப் பெண்ணைப் பற்றிப் படித்திருந்தவள். தவறுதலாக தன்னை ஒரு புதுமை பெண்ணாகக் கற்பனை செய்து கொண்டாள். எவ்வளவு விரைவில் மன மாற்றமடைந்தாளோ அவ்வளவு விரைவில் , சுருங்கச் சொன்னால், கெட்டுப் போனாள். பெண்மையைப் பறி கொடுத்தாள். நிலைமை மோசமாகிக் கொண்டே போக மறைக்க முடியாத அளவுக்கு அவளின் செயலின் தவறு வெளிப்பட்டது.
உலகில் ஒருவரது செயல் அவரை மட்டும் பாதிக்கிறது என்று இருந்து விட்டால் அது நாடக மேடை என்றே அழைக்கப் பட்டிராது.அழைக்கப் படுகிறது என்பதே மற்ற கதா பாத்திரங்களும் அதனால் பாதிக்கப் படுகிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும்.
பாட்டிக்கு இடி விழுந்த மாதிரி ஆகிவிட்டது.கிளை விட்டுப் படர்ந்திருந்த ஒரு பெரிய கௌரவமான குடும்பத்தின் நிகரற்ற தலைவி தான் என்று அவள் கொண்டிருந்த இறுமாப்புக்குக் கிடைத்த சவுக்கடி போல ,அடுத்தடுத்து நிகழும் நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சம் தன் உள்ளத்தை அலசி அழுக்கிருக்கிறதா என்று நோக்கச் செய்தது.
அவளைப் பொறுத்தவரை அவள் இதுவரை மன சாட்சிக்கு விரோதமாய் நடந்ததில்லை என்றே நம்பினாள். கொள்கைகளின்-அது சரியா தவறா என்று நினைத்துக்கூட பார்த்திராதவள்—காரணமாக எழும் செயல்களே மன சாட்சியின் பிரதி பலிப்பு என்ற அளவுக்கு ஏதோ நினைக்கத் தெரிந்தவள், தனது செயல்களே சரியானது அதனால் தனது மனசாட்சிக்கு விரோதமாக நடந்தது கிடையாது என்றே எண்ணினாள். அந்த எண்ணத்தின் அஸ்திவாரத்துக்கே ஆட்டம் கொடுக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சிகள் அவளைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. மேலும் அன்று பாபு “ அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் “என்று கூறியதை நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு உள்ளம் நடுங்கியது. மூட நம்பிக்கைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரட்டு கௌரவம் காரணமாக தான் ஒரு குடும்பத்தை தகர்த்து எறியக் காரணமானவள் என்று கூட அவளால் நினைக்க முடிய வில்லை. நினைத்து வருத்தப்படத் தெரிந்திருந்தாலாவது ஒரு சமயம் நடந்த நிகழ்ச்சிகள் தவிர்க்கப் பட்டிருக்கும்—ஆண்டவனின் மன்னிப்பால்.!
காலங்கடந்து ,நடந்த காரியங்களுக்குக் காரணம் காண நினைத்த பாட்டி, தன் வினை தன்னைச் சுடுகிறதோ என்று ஐயப்படத் துவங்கியதும் அரைப்பைத்திய நிலைக்கே தன்னை ஆளாக்கிக் கொண்டாள்.வரைந்து முடித்துவிட்ட வட்டத்தின் ஆரம்பப் புள்ளியை நிர்ணயம் செய்ய முயலும் அறியாமையின் விளைவே தன் நிலைக்குக் காரணம் என்று அவளுக்குப் புரியவில்லை.
---------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
- (-தொடரும் )
hmm...சிலரது வாழ்கை ஏன் எப்படி என்று ஆராய்ந்தால் மேலும் குழப்பமே மிஞ்சும். ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் அவனையும் மீறி நடக்கிறதோ என்ற அச்சம் மட்டுமே மிச்சம்.
ReplyDeleteவரைந்து முடித்துவிட்ட வட்டத்தின் ஆரம்பப் புள்ளியை நிர்ணயம் செய்ய முயலும் அறியாமையின் விளைவே தன் நிலைக்குக் காரணம் என்று அவளுக்குப் புரியவில்லை.
ReplyDeleteபுரியாமுடியாத புதிரே வாழ்க்கை,,!
ruppai nottu oppumai pidiththirukkirathu... vaalvin nambikkaiyai thulaikkum tharunangkal inriya vaalviyal neriyudan thanthullathu paaraattukkuriyathu... vaalththukkal
ReplyDelete