Thursday, September 13, 2012

மந்திர வழிபாடுகள்.


                                            மந்திர வழிபாடுகள்.
                                            --------------------------


ஓம் தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
 தியோ யோனஹ் ப்ரசோதயாத்

நான் என்னுடைய பதினாறாம் வயதில் பள்ளியிறுதிப் பரீட்சை எழுதி முடித்திருந்த நேரம். அந்த வயதுக்கே உரிய எதையும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்னும் ஆர்வத்துடன் ஆன்மீக விஷயங்களில் கவனத்தைச் செலுத்தினேன். அப்போது நாங்கள் வெல்லிங்டன் ( நீலகிரி ) வட்டக் குடியிருப்புகளில் குடி இருந்தோம்.விவேகாநந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சர், நாராயண குரு ஆகியோர் எழுதி இருந்த பல புத்தகங்கள் படித்தேன்.சுவாமி சிவானந்த சரஸ்வதி எழுதி இருந்தபடி தியானம் செய்யப் பழகினேன். அந்தக் குளிர் பிரதேசத்தில் விடியற்காலையில் எழுந்து குளிர் நீரில் குளித்து ஒரு தனி அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து : “ ஓம்  ,ஓம் “ என்று உரக்க உச்சாடனம் செய்வேன். ஏனோ தெரியவில்லை. என்னுள் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அந்த பரிசோதனைகளை நிறுத்தி விட்டேன். இருந்தாலும் ஆழ்மனதில் நான் எதையோ கற்றுக் கொள்ள முயன்று தோற்றுவிட்டதாக ஒரு எண்ணம். மனம் ஒன்றிய ஈடுபாடில்லாமல் முயன்றதனால் இருக்கலாம்.   

அப்போது நான் வளர்ந்த சூழ்நிலையிலும் சமூக நடப்புகளிலும் கவனம் சென்றது. அன்று சிந்திக்கத் துவங்கி இது நாள்வரை பல கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொள்ள முடியவில்லை. தெரிந்த மாதிரி எண்ணவும் முடியவில்லை. அதில் ஒன்றுதான் இந்த மந்திரங்களும் வழிபாட்டு முறைகளும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது. கேள்விகள் நான் எழுப்புவது எனக்குத் தெளிவு கிடைக்கத்தானே தவிர மற்றவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கவோ குறை கூறவோ அல்ல.

இப்பதிவின் தொடக்கத்தில் எனக்குத் தெரிந்த அளவில் காயத்ரி மந்திரத்தை எழுதி இருக்கிறேன். இதன் பொருள் மறைந்த தலைவர் திரு.சி என். அண்ணாதுரை கூறியதை எழுதி வைத்திருந்தேன். அதன்படி “ இருக்கு வேதம் பத்து மண்டிலம் , விசுவாமித்திரரால் தொகுக்கப் பட்ட மூன்றாவது மண்டிலத்தில் மிகச் சிறந்ததாகக் கருதப் படுவது காயத்திரி மந்திரம் . இதன் பொருள், ‘அன்பினாற் செய்யப்படுமெம் வேள்வி முறைகளை நடைபெறுவிக்குந் தெய்வத் தன்மையுடைய  சாவித்திரியின் விழையத்தக்க ஒளியை நாம் வழிபடுகின்றோம் என்பதாகும்

சிறந்த மந்திரம் எனக் கருதப் படும் காயத்திரியில் ஞாயிறின் வழிபாடே காணப் படுகிறது. பிற்காலத்தில் இந்த மந்திரத்தில் வரும் வார்த்தைகளுக்கான பொருள் என்னவென்று கண்டு கொண்டது. கீழே.

யோ = எவர்,   ந = நம்முடைய,    தத் = அப்படிப்பட்ட,    தியோ = புத்தியை,

ப்ரசோதயாத் = தூண்டுகிறாரோ,     தேவஸ்ய = ஒளிமிக்கவராக,  

ஸவிது = உலகைப் படைத்த,   வரேண்யம் = மிகவும் உயர்ந்ததான,

பர்கோ = சக்தியை,   தீமஹி = தியானிக்கிறோம்.

( குறையாகவோ தவறாகவோ எதாவது இருந்தால் சுட்டிக் காட்டவும். )

ஆலயங்களுக்குச் செல்கிறோம். நாம் பிரார்த்தனை செய்கிறோம் , செய்விக்கிறோம். அநேகமாக ஆலயங்களில் மந்திரங்களாக உச்சரிக்கப் படுவது , பெரும்பாலும் அந்த ஆண்டவனின் திரு நாமங்கள் தான். அதிலும் சில வரைமுறைகள் வைத்துக் கூறுகிறார்கள். அர்ச்சனைகள் செய்யும்போது செய்பவரின் பெயர் நட்சத்திரம் கோத்திரம் போன்றவை கூறப்பட்டு எல்லாநலங்களும் கோரப் பட்டு பின் ஆண்டவனின் திரு நாமங்கள் சொல்லப் படுகின்றன. ஆண்டவனின் திருநாமங்கள்தான் மந்திரங்களா. ?

இன்னொன்றும் கேள்விப்பட்டேன், மந்திரங்கள் உச்சரிக்கப் படும் போது எழும் ஒலி அதிர்வுகளே அந்த மந்திரத்துக்கு சான்னித்தியம் தருவதாகவும் உச்சரிப்பு குருவிடம் இருந்துதான் கற்பிக்கப் பட வேண்டும் எனக் கட்டுப் பாடுகள் இருப்பதாகவும் சில இடங்களில் படித்தேன். அதனால்தான் இரு பிறப்பாளராகக் கருதப் படும் முப்புரி நூல் அணிந்தவரே காயத்திரி மற்றும் மந்திரங்கள்  சொல்லலாம் எனும் விதி என்றும் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது..

ஒலி அதிர்வு ஏற்படுத்தும் மந்திரம் என நான் நினைப்பது  “ ஓம் “ எனும் ஓங்காரச் சொல்லே. நாங்கள் ஒரு முறை திருவண்ணாமலைக்குச் சென்றோம். வழிபாடு முடிந்தபிறகு மலை மேல் ரமணர் வாழ்ந்த இடம் நோக்கிச் சென்றோம். அப்போது இந்த ஒம் என்ற சொல் எழுப்பும் அதிர்வுகளை உணர்ந்தேன். ஓம் என்ற ஒலி மலை முகடு முழுவதும் அதிர்வது போல் உணர்ந்தேன்.பெயரும் உருவமில்லா பரமனுக்கு ஆயிரம் நாமங்கள் சொல்லி வழிபடும்போது ஒவ்வொரு நாமத்துக்கு முன் ஓம் என்று சேர்த்துச் சொல்வது அந்தப் பெயர்களுக்கு சான்னித்தியம் கிடைக்க வைக்கும் வழியோ என்னவோ.

இந்தவயதில் இந்த ஆராய்ச்சியெல்லாம் தேவையா எனும் எண்ணம் எழுந்தாலும் இந்தப் பாழும் அறிவு என்று நாம் நினைப்பது சும்மா இருக்க விடுவதில்லையே. எதையும் தெரிந்து கொள்ள வயது எனக்குத் தடையாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தெளிவு செய்ய விரும்புவோர் பின்னூட்டம் எழுதலாம். கணினி இருப்பதன் பலனை அனைவரும் துய்ப்போமே.  
                                                    -----------------------------------------------------------------       ,                                                            

                 .               









14 comments:

  1. கேள்விகள் நான் எழுப்புவது எனக்குத் தெளிவு கிடைக்கத்தானே தவிர மற்றவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கவோ குறை கூறவோ அல்ல.

    தெளிவான சிந்தனைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. //ஏனோ தெரியவில்லை. என்னுள் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. //

    எந்த மாற்றத்தை எதிர்பார்த்தீர்கள்?

    ReplyDelete
  3. ஓம் பூர் புவஸ்வ்ஹ தத் ஸவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமதிஹி
    தியோ யோனஹக பிரசோதயாத்.

    ReplyDelete


  4. அகத்திலே ஆண்டவனை இருத்தியவர்க்கு
    ஆயிரம் நாமாக்கள் தேவையில்லை தான்.

    ஆயினும் ஒரு கணம் அவனை நினைந்து
    அடுத்த கணம் அவனை நினைப்பதற்குள்
    இடையிலே ஈராயிறம் எண்ணங்கள்
    உங்க்ள் அனுமதி பெறாது உள் வருதே !!

    அதனாலே
    ஓம் என்ற ஒரு சொல் சொல்லி
    அடுத்த ஓம் சொலலும் முன்னால்
    சரவண பவ என்று சொல்லு.
    சிந்தையில் அந்த சரவணன்
    பால் மணம் மாறா
    பால சுப்பிரமணியன்
    பளிங்கு போல் நெஞ்ச்த்தில்
    பரவி நிற்கட்டும்.

    ஓம் சரவண பவ !!

    சுப்பு தாத்தா.

    ReplyDelete

  5. @ இராஜராஜேஸ்வரி--சிந்தனைகள் தெளிவாகத்தான் உள்ளன. கேள்விகளுக்குத்தான் பதிலில்லை. கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete

  6. @ஜீவி பதினாறு வயதில் என்ன எதிர்பார்த்திருக்க முடியும் . ஏய்ஹாவது மாற்றம் , என்ன வென்று தெரியவில்லை. இந்த வயதிலும் எதையும் அது அப்படித்தான் என்று ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகள் விடாமல் துரத்துகிறது. அறியாமை இருளில் இருப்பதே சுகம் என்று தோன்றினாலும்பதில் தெரிந்த மாதிரி இருக்கவும் முடியவில்லை. நன்றி ஜீவி.

    ReplyDelete

  7. @ லக்ஷ்மி-- காயத்ரி மந்திரம் ரிபீட்.!

    ReplyDelete

  8. @ சூரி சிவா. அகத்திலே அவனை இருத்தியவருக்கு ஆயிரம் நாமாக்கள் தேவை இல்லைதான். அந்த அவந்தான் யார்.. ? நிறையவே கேட்டு விட்டேன் சூரி சார். நிறைய பதில்களும் கேட்டுவிட்டேன். இந்தப் பதிவில் மந்திரங்கள் என்பது என்ன என்பது தான் என் கேள்வி. எனக்குத் தெரிந்ததையும் கூறி இருக்கிறேன். தெளிவாக்க முடியுமா. ? நானும் நாளும் என் நாவில் முருகனைக் கூப்பிடுகிறவந்தான். கேட்ட கதைகளில் பிடித்த பாத்திரம் / அவ்வளவுதான். நன்றி சூரி சார். எனக்கு 74 வயதாகிறது. சிந்திக்காமல் இருந்திருப்பேனா.

    ReplyDelete


  9. மந்திரம் என்றால் என்ன ?
    கொஞ்சம் சீர்யஸான விஷயம் தான்

    பகவான் கீதைலே சொல்றார்.
    மந்திரங்களிலே நான் காயத்ரி

    அந்த காயத்ரி மந்திரத்தோடு தான் நீங்க்
    இந்த பதிவினை துவங்கியிருக்கிறீர்கள்.

    மந்த்ரா என்ற வடமொழிச்சொல்லை
    வகுத்துப்பார்த்தால், விகரஹ சமாஸம்
    என்று சொல்வார்கள் அந்த ப்ராஸஸை.

    மனதினால் அறிந்துகொள்ளக்கூடியது.
    மனசினால் க்ரஹித்துக்கொள்ளக்கூடியது.
    மனம் என்பது ஒரு திரை . அவ்வளவே.
    ஐம்புலங்கள் மூலமாக என்ன நம்மால் க்ரஹித்துக்கொள்ளப்படுகிறதோ..
    அது தான் மனத்திரையில் படிகிறது எனலாம்.

    மனதினால் புரிந்துகொள்ளக்கூடியது என்றால்,
    அது பார்க்கப்படுகிற வ்ஸ்துவோ, கேட்கப்படுகிற வஸ்துவோ,
    உணரப்படுகிற வஸ்துவோ, நுகரப்படுகிற வஸ்துவோ,
    ருசிக்கப்படுகிற வஸ்துவோ, அது எதுவோ

    மந்திரமாவது நீறு ...( பார்க்கப்படுகிறது, உணரப்படுகிறது, நுகரப்படுகிறது, ருசிக்கப்படுகிறது, ஏன் அதை உச்சரிக்கையில் கேட்கப்படுகிறது)
    அஞ்சு குணாதீசங்க்ளையும் அடக்கியதால், நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதியை, நீறை, மந்திரம் என்று சொல்கிறோம்.


    அந்த பிரமன் என்று எதை சொல்கிறோமோ, அதை, அவனை
    இந்த ஐம்புலங்களின் மூலம் புரிந்துகொள்ளக்கூடிய
    அளவுக்கு கன்வர்ட் பண்ணித் தருவது மந்திரம் .

    இந்து மதத்தைப் பொறுத்தவரையில்
    யூனிடி இன் டைவர்சிடி.
    நீ என்னென்ன மாதிரி வேணுமானாலும்
    மனசுக்குப் புடிச்ச மாதிரி புரிஞ்சுக்கற மாதிரி
    என்னை நினைத்துக்கொண்டாலும்
    நான் ஒண்ணு தான்.

    ஆகாசாத் பதிதம் தோயம்
    யதா கச்சதி ஸாகரம்
    ஸர்வ தேவ நமஸ்காரஹ
    கேசவம் பிரதிகச்சதி.

    மந்த்ரம் அப்படின்னு சொல்றது
    ஒரு உபாயம். ஒரு கருவி
    ஒரு இன்ஸ்ட்ருமெண்ட்

    ரொம்ப பொடி எழுத்தா இருக்கு
    வெள்ள எழுத்து வந்துடுத்து.
    படிக்கணுமே ...அதுக்கு கண்ணாடி போட்டுக்கறோமே
    அது போலத்தான்
    மனசுக்குள்ளே இல்ல
    இந்த ஆத்மாவுக்குள்ளே
    அவனாக இருக்கறவனை
    புரிஞ்ச்சுக்கறதுக்கு
    மந்த்ரம் ஒரு சாதனம்.

    ரமணர் ஞானி.
    அவருக்கு மந்த்ரம் தேவையில்லை.

    நம் எப்போ ரமணர் ஆகிறது !
    அதுவரைக்கும் மந்த்ர ஜபம் தேவைதான் அப்படின்னு தோண்றது.
    இதெல்லாம் ஒரு இண்ட் ரொடக்ஷன்.

    போரடிச்சுதுன்னா,
    டெலிட் பண்ணிடுங்க்..

    மந்திரத்தை இல்ல,
    என்னை.



    சுப்பு ரத்தினம்.


    ReplyDelete
  10. மந்திர வழிபாடுகள் மிகவும் அருமை.தொடர்ந்து பகிருங்கள் ...........


    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  11. அறிந்து கொண்டேன்... நன்றி ஐயா...

    ReplyDelete
  12. நல்ல பதிவு.என்னுள் மாற்றமும் ஏற்படவில்லை என்று சொன்னது நல்ல விஷயம். நிறைய பேர் அடடா அது தெரியுது இது தெரியுது என்று புருடா விட்டு மேற்கொண்டு தொடரமுடியாமல் போவார்கள். அதற்கு கேள்விகளோடு இருப்பது நல்லது.

    மந்திர ஜெபம் என்பது மிக மிக எளிமையான ஒன்று.ஆனால் இதற்கு தேவை விடாமுயற்சி.சரியான வார்த்தை சிரத்தைதான்.

    தொடர்ந்து சொல்லும்போது கடைசியில் (பல வருடங்களுக்குப் பிறகு) அது ஒரு வகையான பித்து நிலையில்-மற்றவர் பார்வையில் பைத்தியம் என்றும் சொல்லலாம்-கொண்டு விடும்.

    இந்த மந்திரம் ஒளியைப் பற்றியதால் பார்க்கும்,தொடும், கேட்கும் (ஆம்...கேட்பது கூட) எல்லாமே ஒளி வடிவத்தில் போய் கடைசியில் மந்திர ஜெபம் தானாகவே நின்றுவிடும். அப்போது ரமணர் மற்றும் ஞானிகளுக்கு நடந்தது நிகழும் என்பதே இதன் இயங்கும முறை.

    இதற்கு பதிலாய் ஏதாவது கடவுளின் பெயரை சொன்னால் அந்த உருவமே எல்லாமாய் மாறி தெரியும,கேட்கும்.

    ஆனால் தேவை விடாப்பிடியாய் நிதானமாய் சொல்லிக் கொண்டே இருப்பது.

    ReplyDelete
  13. மந்திரம் ஒளி பற்றியது என்பது புரியவில்லை

    ReplyDelete