Saturday, September 13, 2014

கீதைப் பதிவு-அத்தியாயம்-6


                               கீதைப் பதிவு - அத்தியாயம் -6
                               ------------------------------------------
குட்டிக் கண்ணன் -கண்ணாடி ஓவியம்


தியானயோகம்
ஸ்ரீபகவான் சொன்னது,
கர்ம பலனைச் சாராது செய்ய வேண்டிய கர்மத்தைச் செய்பவனே ஸந்யாஸி,அவனே யோகி,அக்னிஹோத்திரத்தை( யாகம் செய்வதை ) நிறுத்தியவனும் கர்மத்தை விட்டவனும் ஸந்யாஸி யாகான்.(1)
பாண்டவா, எதை ஸந்யாஸம் என்கிறார்களோ, அதையே யோகம் என்று அறிக.ஏனென்றால்  சங்கற்பத்தைத்(கர்ம பலனைப் பற்றிய கற்பனை) துறவாதவன் யோகியாவதில்லை.(2)
தியானயொகத்தில்முன்னேற விரும்புகிற முனிவனுக்குக் கர்மம் உபாயமாகிறது. தியான சித்தி அடைந்தவனுக்கோ செயல் அற்றிருப்பது உபாயமாகிறது.(3)
எப்பொழுது ஒருவன் விஷயங்களில் பற்றற்றுக் கருமத்தில் கருத்து வைக்காது எண்ணங்களை விட்டொழிக்கிறானோ அப்போதுதான் அவன் யோகாரூடன்(யோகத்தில் நிலை பெற்றவன்)எனப்படுகிறான்.(4)
தன்னைத் தன்னாலே உயர்த்திக் கொள்க. தன்னை இழிவுறுத்தலாகாது. ஏனென்றால் தானே தனக்கு நண்பன்,தானே தனக்குப் பகை.(5)
தன்னைத் தான் வென்றவனுக்குத் தானே உறவினன்.ஆனால் தன்னை வெல்லாத ஆத்மா தனக்கே பகைவன் போல பகைமை சூழும்.(6)
தன்னை வென்றுமனம் தெளிந்தவனுக்குக் குளிர் வெப்பங்களிலும் இன்ப துன்பங்களிலும் அங்ஙனமே புகழ்ச்சி இகழ்ச்சிகளிலும் பரமாத்ம தரிசனம் நிலைத்திருக்கும்(7)
ஞான விக்ஞானத்தில் திருப்தி அடைந்த, மனம் சலியாத, புலன்களை வென்ற, மண், கல், பொன்னைச் சமனாகக் கருதுகின்ற யோகியானவன் சமாதியில்(யோகத்தில்) உறுதி பெற்றவன் எனப்படுகிறான்(8)
நல்லெண்ணமுடையவர், நண்பர், பகைவர், வெறுப்பவர், சுற்றத்தார்,சத்புருஷர், பாபிகள் ஆகியவர்களிடத்து ஒரே மனமுடையோன் மேலோன்.(9)
யோகி யாருக்கும் தென்படாது தனியனாய் இருந்து கொண்டு, உள்ளத்தையும், உடலையும் அடக்கி, ஆசையகற்றி, உடைமைப் பொருள் இலனாய் யாண்டும் மனதை ஒடுக்க வேண்டும். (10)
சுத்தமான இடத்தில் உறுதியானதும், அதிக உயரமில்லாததும், மிகத் தாழ்வில்லாததும், துணி, மான்தோல், தர்ப்பை இவைகளை உடையதுமாகிய ஆசனத்தை நன்கு அமைத்துக் கொண்டு(11)
ஆங்கு ஆசனத்தமர்ந்து, மனதை ஒருமுகப் படுத்தி, மனம் இந்திரியங்கள் இவைகளின் செயலை அடக்கி சித்த சுத்தியின் பொருட்டு யோகம் பயிலுக.(12)
தேகம் தலை கழுத்து, இவைகளை நேராக அசையாது வைத்துக் கொண்டு உறுதியாயிருந்து, தன் மூக்கு நுனியைப் பார்ப்பவன் போன்று திசைகளை பாராதிருத்தல் வேண்டும்.(13)
உள்ளம் அமைதி பெற்று, அச்சத்தை அகற்றி, பிரம்மசரிய விரதம் காத்து, மனதை அடக்கி, சித்தத்தை என்பால் இசைத்து, என்னைக் குறியாகக் கொண்டு யோகத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.(14)
இங்ஙனம் யாண்டும் மனதை தியானத்தில் நிறுத்தி உள்ளத்தை அடக்கிய யோகி, என்னிடத்துள்ள முக்தியிலே முற்றுப் பெறுகிற சாந்தி எய்துகிறான்.(15)
அர்ஜுனா, அளவு கடந்துண்பவனுக்கு யோகமில்லை. அறவே உண்ணாதவனுக்கும் அது இல்லை.மிகைபட உறங்குபவனுக்கும்  மிகைபட விழித்து இருப்பவனுக்கும் யோகம் இல்லை.(16)
மிதமாய் உண்டு உடற்பயிற்சி செய்பவனுக்கு, அளவுடன் கர்மங்களைச் செய்து உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை வகிப்பவனுக்கு யோகம் துன்பத்தைத் துடைப்பதாகிறது.(17)
ஆசைகள் அனைத்திலுமிருந்து நாட்டத்தை அகற்றி, நன்கு அடக்கப் பட்ட மனது, ஆத்மாவிலேயே நிற்கின்றபோது ஒருவன் யோகத்தில் உறுதி பெற்றவன் எனப்படுகிறான்.(18)
ஆத்ம தியானம் பழகுகிற யோகியின் அடங்கிய மனதுக்கு, காற்றில்லா இடத்து வைத்த தீபம் அசையாதிருப்பது உபமானமாகக் கருதப் படுகிறது.(19)
யோகப் பயிற்சியால் எப்பொழுது சித்தம் நன்கடங்கி அமைதி பெறுகிறதோ, மேலும் எப்பொழுது ஆத்மாவால் ஆத்மாவைக் கண்டு ஆத்மாவில் மகிழ்ச்சி அடைகிறானோ,(20)
இந்திரியங்களுக்கு எட்டாததும், புத்தியினால் கிரகிக்கப் படுவதும், முடிவில்லாததும். ஆகிய எந்த சுகத்தை யோகி அறிகிறானோ, எதில் நிலைத்தபின் ஆத்ம சொரூபத்திலிருந்து அவன் அசைவதில்லையோ(21)
எதை அடைந்து, அதிலும் மிக்கதொரு வேறு லாபத்தை  நினைப்பதில்லையோ எதில் நிலைத்திருந்து பெருந் துக்கத்தாலும் அசைக்கப் படுவதில்லையோ(22)

துக்கத்தின் சேர்க்கையிலிருந்து பிரிந்து கொள்தலே யோகம் எனப்படுவதாகத் தெரிந்து கொள்க. தளரா நெஞ்சத்துடன் உறுதுயாகத் தொடர்ந்து அந்த யோகத்தைப் பயிலுக.(23)
சங்கற்பத்தில் பிறந்த ஆசைகள் அனைத்தையும் மிச்சமறத் துறந்துவிட்டு, உள்ளத்தால் எல்லாப் பக்கங்களினின்றும் இந்திரியக் கூட்டத்தை நன்கு அடக்கிக் கொண்டு(24)
உறுதியான அறிவினாலும் ஆத்மாவின்கண் நிலை நாட்டப் பெற்ற மனதாலும் சிறிது சிறிதாக அமைதி பெறுக.வேறு ஒன்றையும் நினையாதிருந்திடுக.(25) ,


அலைவதும் நிலை அற்றதுமாகிய மனது எக்காரணத்தால் எதன் எதன் கண் திரிகிறதோ அதன் அதனிடமிருந்து  மீட்டுவித்து ஆத்மாவின் வசத்துக்குக் கொண்டு வருக,(26)

மிகச் சாந்தமான மனதையுடைய,ரஜோ குணத்தின் வேகம் தணிந்த, பாபமற்ற, தானே பிரம்மமான யோகிக்கே பேரின்பம்  வந்தடைகிறது(27)

இங்ஙனம் மனதை ஆத்மாவில் சதா லயிக்கச் செய்து பாபம் நீங்கப் பெற்ற யோகியானவன் பிரம்ம ஞானத்தில் பிறக்கும் பேரானந்தத்தை எளிதில் எய்துகிறான்(28)
யோகத்தில் உறுதி பெற்று எங்கும் சமதிருஷ்டி உடையவன் தன்னை எல்லா உயிர்களிடத்திலும் , எல்லா உயிகளிடத்தும் தன்னையும் இருப்பதாக காண்கிறான்.(29)
யார் என்னை எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் என்னிடத்திலும் காண்கிறானோ அவன் காட்சியினின்று நான் மறைவதில்லை. அவனும் என் காட்சியினின்று மறைவதில்லை.(30)

உள்ளது ஒன்றே என்று உறுதி கொண்டு, எல்லா உயிர்களிலும் இருக்கிற என்னைப் போற்றும் யோகி, எப்பாங்கில் இருப்பினும் என்னிடத்து இருப்பவன் ஆகிறான்(31)
அர்ஜுனா, தன்னையே உவமையாகக்கொண்டு இன்பத்தையும் துன்பத்தையும் எங்கும் ஒப்பக் காண்பவன் பரமயோகி எனக் கருதப்படுகிறான்.(32)
அர்ஜுனன் சொன்னது
மதுசூதனா, ‘சமமாகப் பார்த்தல்என்று தாம் புகட்டிய இந்த யோகமானது உறுதியாக நிலைத்திருக்கும் என்று அலைகின்ற என் மனதுக்குத் தோன்றவில்லை.(33)
கிருஷ்ணா, மனம் அலையும் தன்மையது, திகைக்கச்செய்வது, வலிவுடையது, திடமுடையது. அதை அடக்குவது காற்றை அடக்குவது போன்று இயலாதது என்று நினைக்கிறேன் (34)
ஸ்ரீபகவான் சொன்னது
தடந்தோளாய், மனம் கட்டுப்படாதது அலையும் தன்மையது என்பதில் ஐயமில்லை. எனினும் , குந்தியின் மைந்தா, அப்பியாசத்தாலும் வைராக்கியத்தாலும் அதை அடக்கலாம்.(35)
மனதை அடக்கான் யோகம் அடையான் என்பது என் கருத்து. மனதை அடக்கி உபாயத்தால் முயலுபவனுக்கே அதை அடைய இயலும்.(36)
அர்ஜுனன் சொன்னது
சிரத்தை உடையவன் ஆயினும், முயற்சிக் குறைவால் யோகத்திலிருந்து மனம் வழுவியவன், யோகம் நிறைவேறாது என்ன கதியை அடைகிறான் , கிருஷ்ணா.?(37)
பெருந்தோளோய், பிரம்ம மார்க்கத்தில் மோகமடைந்தவன், பற்றுக் கோடின்றி, இரண்டிலிருந்தும் வழுவி, சிதறடைந்த மேகம் போல் அழிந்து போகிறான் அல்லவா?(38)
கிருஷ்ணா, எனது இந்த ஐயத்தை அறவே அறுக்கத் தெரிந்தவர் நீரே. உம்மையின்றி இச்சந்தேகத்தைச் சிதைப்பவர் எவருமிலர்.(39)
ஸ்ரீபகவான் சொன்னது.
பார்த்தா அவனுக்கு இம்மையிலோ மறுமையிலோ அழிவென்பது இல்லை. நலஞ் செய்பவன் (சுப காரியம்) எவனும் நலிவுறுதல்(துர்க்கதியை, கீழ்மையை அடைவதில்லை) இல்லையப்பா.(40)
யோகப் பிரஷ்டன் புண்ணியம் செய்தவர் உலகங்களை அடைந்து, அங்கு நெடிது வாழ்ந்திருந்து செல்வம் நிறைந்த புண்ணியவான் இல்லத்தில் பிறக்கிறான்.(41)
அல்லது அறிவாளர்களாகிய யோகிகள் குலத்திலேயே (யோகப் பிரஷ்டன்) பிறக்கிறான். இது போன்ற பிறவீவ்வுலகில் பெறுதற்கரியது.(42)
குருநந்தனா, இதில் முற்பிறப்பின் யோக சாதன அறிவைத் திரும்பவும் பெறுகிறான், மோக்ஷத்தின் பொருட்டு மேலும் அதிகமாக அவன் முயலுகிறான்(43)
தன் முயற்சியின்றிப் பூர்வ ஜன்ம அப்பியாச வேகத்தால் அவன் யோக சாதனத்தில் இழுக்கப் படுகிறான் வெறும் யோக ஆராய்ச்சியாளன் கூட வேதத்தைக் (வேதம் சொல்லும் கர்மபலனை) கடப்பவன் ஆகிறான்.(44)
பெரும் முயற்சியுடைய யோகி, பாபங்களற்றுப் புனிதவனாய், பல பிறவிகளில் பக்குவமடைந்து பரகதியைப் பெறுகிறான்.(45)
தவசிகளைவிட யோகி மேலானவன்; கல்வி ஞானம் உடையவர்களைவிட மேலானவனாக அவன் கருதப் படுகிறான். கர்மிகளைவிட அவன் சிறந்தவன். ஆகையால் அர்ஜுனா யோகியாவாயாக,(46)
யார் சிரத்தையுடன் சித்தத்தை என்பால் வைத்துப் பஜிக்கிறானோ, அவன் யோகிகளெல்லோர் உள்ளும் மிக மேலானவன் என்பது என் கருத்து(47)
                     தியான யோகம் நிறைவு           


 .           

 

        
 

26 comments:

  1. //தன்னைத் தான் வென்றவனுக்குத் தானே உறவினன்.ஆனால் தன்னை வெல்லாத ஆத்மா தனக்கே பகைவன் போல பகைமை சூழும்//

    ஆஹா...

    //சுத்தமான இடத்தில் உறுதியானதும், அதிக உயரமில்லாததும், மிகத் தாழ்வில்லாததும், துணி, மான்தோல், தர்ப்பை இவைகளை உடையதுமாகிய ஆசனத்தை நன்கு அமைத்துக் கொண்டு//

    அமர்வதற்கு இவ்வளவு நிபந்தனைகளா?

    ReplyDelete
  2. //அல்லது அறிவாளர்களாகிய யோகிகள் குலத்திலேயே (யோகப் பிரஷ்டன்) பிறக்கிறான். இது போன்ற பிறவீவ்வுலகில் பெறுதற்கரியது//

    நமக்கு அந்த அதிருஷ்டம் இருக்க வேண்டும்! :))

    //தன் முயற்சியின்றிப் பூர்வ ஜன்ம அப்பியாச வேகத்தால் அவன் யோக சாதனத்தில் இழுக்கப் படுகிறான்//

    போன ஜென்மத்தில் செய்திருந்தால் உண்டு. அல்லது அதற்கு இப்பிறவியில் என்ன செய்ய வேண்டும்? அடுத்த பிறவியில் கிடைக்கும் என்று என்ன நிச்சயம்?!!

    ReplyDelete
  3. //வெறும் யோக ஆராய்ச்சியாளன் கூட வேதத்தைக் (வேதம் சொல்லும் கர்மபலனை) கடப்பவன் ஆகிறான்//

    ஓஹோ... கலிகாலத்தில் நாராயண நாம ஸ்மரணை ஒன்றே போதும் என்று வேளுக்குடி உரை சமீபத்தில் கேட்டேன்.

    ReplyDelete
  4. குட்டிக் கண்ணன் -கண்ணாடி ஓவியம்
    கருத்தைக் கவர்ந்தத்து.

    //தன்னைத் தன்னாலே உயர்த்திக் கொள்க. தன்னை இழிவுறுத்தலாகாது. ஏனென்றால் தானே தனக்கு நண்பன்,தானே தனக்குப் பகை.(5) தன்னைத் தான் வென்றவனுக்குத் தானே உறவினன்.ஆனால் தன்னை வெல்லாத ஆத்மா தனக்கே பகைவன் போல பகைமை சூழும் //

    சிறப்பான விளக்கம்.

    ReplyDelete
  5. ஒவ்வொரு பதிவும் மனம் கவர்கின்றது.
    தொடர்கிறேன் ஐயா!..

    ReplyDelete
  6. அழுத்தமான பதிவு. மனதில் உள் வாங்க முயற்சிக்கிறேன். தொடர்கிறேன்.

    ReplyDelete

  7. @ ஸ்ரீராம்
    கீதா(கீதா சாம்பசிவம் மன்னிக்கவும்)கீதை சுலோகங்களுக்கு உங்கள் காமெண்ட் ரசித்தேன். வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. கண்ணாடி ஓவியம் அழகு.


    தொடர்கிறேன்.

    ReplyDelete

  9. @ இராஜராஜேஸ்வரி
    கண்ணாடி ஓவியம் ரசித்ததற்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete

  10. @ துரை செல்வாராஜு
    தொடர்ந்த வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  11. @ வே. நடனசபாபதி
    தொடர்ந்த வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  12. @ வெங்கட் நாகராஜ்
    ஓவியத்தை ரசித்ததற்கும் தொடர்வதற்கும் நன்றி சார்.

    ReplyDelete
  13. அமர்வதற்குக் கூட இத்துனை நெறிமுறைகளா
    நன்றி ஐயா

    ReplyDelete
  14. அன்புள்ள ஐயா

    வணக்கம். மிகப்பெரிய பணி இது. பதிவுலகின் மைல்கல். தொடங்கியிருக்கிறீர்கள். அருமை. மனம் அமைதிகொள்ளும் அற்புதப் பதிவு. தொடர்ந்து வாசிப்பேன்.

    மகிழ்ச்சிகள் ஐயா.

    ReplyDelete

  15. @ கரந்தை ஜெயக்குமார்
    சில இடங்களில் பயன் படுத்தும் வழக்கங்களுக்கு கீதையில் கூறி இருக்கும் நெறிமுறைகளும் காரணமாக இருக்கலாம். வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  16. @ ஹரணி
    உங்கள் வருகையும் கருத்துப் பதிவும் மகிழ்ச்சி தருகிறது. இந்தப் பதிவுகளுக்கான முன்னுரையில் எழுதக் காரணம் கூறி இருந்தேன். என்னதான் எழுதினாலும் அவை மிகவும் குறைந்த வாசகர்களாலேயே மட்டும் வாசிக்கப் படுகிறது. தொடங்கி விட்டேன். உங்களைப் போல் நல்லெண்ணம் கொண்டவர்களின் ஆசியால் முடிப்பேன் என்று நம்புகிறேன், நன்றி ஐயா.

    ReplyDelete
  17. யார் என்னை எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் என்னிடத்திலும் காண்கிறானோ அவன் காட்சியினின்று நான் மறைவதில்லை. அவனும் என் காட்சியினின்று மறைவதில்லை//

    கண்ணன் சொன்னது உண்மை. காணும் இடங்களில் எல்லாம் நந்தலாலா உன் கரியநிறம் தோன்றுதடா என்றார் பாரதியார்.
    நம் பார்வையில் அவரும் அவர் பார்வையில் நாமும் இருக்கும் போது நமக்கு என்ன கவலை.
    உனக்கு என்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா !
    பாடல் நினைவுக்கு வருது. அவர் ஆணைப்படி நாம் ஆடுகின்றோம்.

    அருமையாக இருக்கிறது தியானஸ்லோகம்.

    ReplyDelete

  18. உங்கள் கண்ணாடி ஓவியம் குட்டி கண்ணன் மிக அழகு.

    ReplyDelete

  19. @ கோமதி அரசு
    கீதையின் வாசகத்தை பாரதியின் பாடலோடு இணைத்துக் கருத்திட்டது ரசிக்க வைக்கிறது. வருகைக்கு நன்றி மேடம். உங்கள் கால் வலி இப்போது தேவலாமா.?

    ReplyDelete

  20. @ கோமதி அரசு
    கண்ணாடி ஓவியக் கண்ணனை ரசித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  21. தங்களது பதிவை தொடர்ந்து படிக்கிறேன். படத்தை ரசிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  22. கண்ணாடி ஓவியக் கண்ணன் தான் மனதைக் கவர்ந்தான். ஒரு சில எழுத்துப் பிழைகள் இருக்கின்றன ஐயா. அவற்றைக் கவனிக்கவும். யோகம் பயில்வது என்பது சாதாரணமான ஒன்றல்ல என்பதைப் புரிய வைக்கும் பகுதி.

    ReplyDelete
  23. //ஆங்கு ஆசனத்தமர்ந்து, மனதை ஒருமுகப் படுத்தி, மனம் இந்திரியங்கள் இவைகளின் செயலை அடக்கி சித்த சுத்தியின் பொருட்டு யோகம் பயிலுக.(12)//

    ஆசனப் பயிற்சி முடிந்து மூச்சுப் பயிற்சிக்கு உட்காரும்போதே மனதை ஒருமுகப் படுத்த முடியலை. இந்திரியங்கள் அப்போது தான் படாத பாடு படுத்தும். :(

    ReplyDelete
  24. அடுத்தடுத்து வேலைகள், அலைச்சல் போன்ற காரணங்களால் உடனே வர முடியவில்லை. தாமதமாய் வந்ததுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete

  25. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    தொடர் வருகைக்கும் படத்தை ரசித்ததற்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  26. @ கீதா சாம்பசிவம்
    கண்ணாடி ஓவியத்தை ரசித்ததற்கு நன்றி. எழுத்துப் பிழைகள் எங்காவது வரலாம். தவிர்க்க முயற்சிக்கிறேன் கீதையிலேயே அப்பியாசத்தால் கைவரப் பெறலாம் என்றும் கூறி இருக்கிறதே. தாமதமானாலும் தொடர்ந்து வர வேண்டுகிறேன் நன்றி மேடம்

    ReplyDelete