தலைவர்கள் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைவர்கள் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஜூன், 2015

ஓ...அந்தக் காலம் சில சந்திப்புகள்


                       ஓ.. அந்தக்காலம் சில சந்திப்புகள்
                        -------------------------------------------------


ஓ ... அந்தக் காலம் பதிவில் சிலநேரங்களில் முன்பே பகிர்ந்த விஷயங்களும் இருக்கலாம் ஒரு முறை நினைவில் வந்தால் மறு முறை வரக்கூடாது என்றில்லையே.
நாங்கள் என் சிறு வயதில் அரக்கோணத்தில் இருந்தபோது தேசப் பிதா மகாத்மா காந்தியைப் பார்த்தது  குறித்து எழுதி இருக்கிறேன் இது அது பற்றி அல்ல. இருந்தாலும் ஒருசில உலகத் தலைவர்களை சந்தித்தது பற்றியே எழுதுகிறேன்
முன்பெல்லாம் இப்போது போல் தொலைக்காட்சிகள் இருக்கவில்லை. பத்திரிக்கைகளில் படித்தும் புகைப்படங்களைப் பார்த்துமே தலைவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் அந்த மாதிரியான சூழலில் நான் மிக அருகில் இருந்து பார்த்த தலைவர்களைப்பற்றிய நிகழ்ச்சியை நினைவு கூர்கிறேன்
 நான் கண்ட உலகத் தலைவர்களுள் மறைந்த சீனப் பிரதமர் சூ-என் -லாய் 
பிரத்தியேகமாய் நினைவுக்கு வருகிறார்.HAL-ல் பயிற்சியில் இருந்த சமயம்.
1956- 1957-ம் வருடம் என்று நினைவு.

மெயின் ஃபாக்டரியில் பயிற்சி என்பது, அங்குள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஓரிடம் இரண்டு வாரம் என்பதுபோல் இருந்தது. மெஷின் ஷாப், ஷீட்மெடல் போன்ற இடங்களில் நிறைய பிரிவுகளில் பயிற்சி. பயிற்சி என்றால் நம்மை யாரும் வேலை செய்ய விடமாட்டார்கள். தொழிலாளிகள் செய்வதை நாம் அருகிருந்து பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களோ நாம் முக்கியமான விஷயங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். பணிக்கு ஏற்ற செட்டிங் ஏதாவது செய்யும்போது நம்மை ஏதாவது காரணம் சொல்லி அகற்றிவிடுவார்கள். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் அனுபவத்தில் கற்றதை, பயிற்சி என்ற பெயரில் சின்னப் பையன்கள் நாங்கள் கற்றுக் கொண்டு பிற்காலத்தில் அவர்களையே அதிகாரம் செய்யும் நிலைக்கு வந்து விடுவோம் என்ற பயமே அவர்களது செயல்களுக்குக் காரணம். அனுபவமிக்கத் தொழிலாளியிடம் நட்புடன் பழகி எவ்வளவு தெரிந்து கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்வது நம் சாமர்த்தியம். கூடியவரை அவர்கள் சொல் பேச்சுக் கேட்டு, அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் எடுபிடி வேலையெல்லாம் பழகி கொஞ்சம் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அங்கிருந்தவர்களில் வேலை அறிந்தவர்கள் அதிகம் படிக்காதவர்கள்.


           இந்த காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது சீனப் பிரதமராயிருந்த சூ-என் லாய் இந்தியா வந்திருந்தார். அவர் எச்.ஏ.எல்.-க்கு வருகை தந்தார். அவரை மெஷின் ஷாப்புக்கு அழைத்து வரும்போது, வரும் வழியில் ஆட்டோமேடிக் லேத் மெஷின்களில் எனக்குப் பயிற்சி. அவர் உள்ளே வரும் வழியில் ஒரு புறத்தில் இந்த மெஷின்கள் ஓடிக்கொண்டிருக்க, அதன் அருகே சீனியர் ஆப்பரேட்டருடன் நானும் நின்று கொண்டிருந்தேன். வரிசையாகப் பார்வை இட்டுக்கொண்டு வந்தவர் எங்கள் அருகே வந்து ஏதோ கேட்டார். எங்களை சுட்டிக் காட்டிக் கேட்க, பயிற்சி எடுக்கும் பையன் என்று சொல்லி இருக்க வேண்டும். என் அருகில் வந்தவர், செல்லமாக என் கன்னத்தில் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்திச் சென்றார். உலகத் தலைவர்களில் ஒருவரின் செல்லத்தட்டு கிடைத்தது நினைத்து அன்றெல்லாம் மகிழ்ந்திருந்தேன்.
     1962-ம் வருடம் இந்திய சீன யுத்தம் வந்த போது, ஒரு சமயம் கோபத்தில் சூயென்லாய் தட்டிய என் கன்னத்தை நான் அடித்துக் கொண்டிருக்கிறேன்
   
  HAL-ல் பயிற்சி எல்லாம் முடிந்து Aero Engine Division-ல் வேலையிலிருந்தோம். அந்த டிவிஷன் தொடக்கத்திலிருந்தே அங்கு பணியிலிருந்தோம். போர்விமானத்துக்கான ORPHEUS ENGINE தயாரிப்பில் BRISTOL  SIDDELY நிறுவனத்துடன் ஒப்பந்தம். தொழிற்சாலைக்குத் தேவையான மெஷின்கள் வந்து ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சில மெஷின்கள் ஏற்கனவே உபயோகத்தில் இருந்தன. அந்த சமயம் (1959 ம் வருடக் கடைசி என்று நினைவு. )இந்தியப் பிரதமர் ,மனிதருள் மாணிக்கம் ,தொழிற்சாலைகளே இந்தியக் குடியரசின் கோவில்கள் என்று நம்பியவர், திரு, ஜவஹர்லால் நேரு, விஜயம் செய்தார். என்னென்ன மெஷின்கள் எதற்காக என்பன போன்ற விஷயங்களைத் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டார். அங்கு வந்திறங்கிய மெஷின்கள் ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன.ஃப்ரான்ஸிலிருந்து வந்த BERTHIEZ  என்ற வெர்டிகல் டரெட் மெஷினைப் பார்த்து எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார். அவர் அங்கிருக்கும்போது அவரைப் பொல ஒரு சிறிய BUST உருவம் அலுமினியத்தில் HYDROTEL என்னும் மெஷினில் அவர் முன்னாலேயே பிரதியெடுத்துக் கொடுத்தோம். மிகவும் மகிழ்ந்தார். இதன் நடுவே ஒரு தொழிலாளி, அவரை மாதிரியே ஒரு படம் வரைந்து ஆட்டோகிராஃப் கேட்டான். இதற்குள் அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாகவும் அதனையும் மீறி அந்தப் படத்தில் கையெழுத்துப் பொட்டுக் கொடுத்தார்.

      மேற்குறிப்பிட்ட சந்திப்புகள்  க்ளோஸ் குவார்ட்டர்ஸ் என்றால், சற்றுத் தொலைவிலிருந்து ராணி எலிசபெத், ப்ரின்ஸ் ஃபிலிப், ரஷ்யத்தலைவர்கள்  புல்கானின், க்ருஷ்சேவ் போன்றோரையும் பார்த்திருக்கிறேன்.

                                             ----------------------------------------------------------------------.