நம்பிக்கைகள் .... நிகழ்வுகள்.
-----------------------------------------
ஒரு சில நிகழ்வுகளை ( என் சொந்தக் கருத்துக்கள் ஏதுமில்லாமல் ) பதிவிடுகிறேன் இதையும் நான் எழுதியிருக்கத் தேவை இல்லை.என் செய்ய? HABITS DIE HARD….!
எனக்கு ஒரு நண்பன் இருந்தாr. எங்களுக்குள் ஆழமான நட்பும் புரிதலும் இருந்தது. ஓரிரு வருடங்களில் ஓய்வு பெறும் வயதிலிருந்தார். ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாக இரண்டு பேர் அவர் பெற்ற செல்வங்கள். பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். மகன் ஹைஸ்கூலில் இருந்தான் ஓரளவு வசதி வாய்ந்த குடும்பம்.
ஒரு நாள் அவருக்கு உடல் நலமில்லாமையால் மருத்துவ மனையில் சேர்த்தார்கள். மருத்துவர்கள் அவருக்கு இதய நோய் என்றும் ஹார்ட் அட்டாக் வந்ததாகவும் கூறி சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.1982-83-ம் வருடம் என்று நினைவு. சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே அவருக்கு இரண்டாம் முறையும் அட்டாக் வந்தது. ஐசீயூ வில் வைத்திருந்தார்கள். நண்பருக்கு நோயின் தீவிரம் தெரிந்திருக்க வேண்டும். மண வயதில் ஒரு மகள் படித்துக் கொண்டிருக்குமொரு மகன் அவ்வளவு ஒட்டுதல்கள் இல்லாத உறவுகள். அவருக்குப் பின் குடும்பம் என்னாகுமோ என்னும் தவிப்பு.தனக்கு மரணம் சம்பவிக்குமோ என்னும் பீதி..! .அதே சமயம் சுரம் வேறு வந்து அவர் கிட்டத்தட்ட ஹிஸ்டீரிகல் நிலைமைக்குப் போய்விட்டார். மனசுக்கு மிகவும் வேதனையாய் இருந்தது. வேண்டாத நினைவுகளிருந்து அவருக்கு ஆறுதல் அளிக்கவும் அவர் நலம் பெற வேண்டியும் அருகில் இருந்த ஆலடத்துக்குச் சென்று அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டு விபூதிப் பிரசாதத்துடன் அவரைப் பார்க்கப் போனேன். அவருக்குக் கடவுள் பக்தி ஏதும் கிடையாது. நாத்திகர் என்றும் சொல்லலாம். இருந்தாலும் நான் அந்த விபூதிப் பிரசாதத்தை அவர் நெற்றியில் இட்டேன். அவரும் மறுப்பேதும் சொல்லாமல் இருந்தார். சிறிது நேரம் வெளியில் இருந்தோம். திடீரென்று அவர் கூச்சல் கேட்டது. ஒரு வகை DELIRIUM போல் தோன்றியது. அவருக்கு மூன்றாம் முறை வலி வந்திருக்கிறது. சாவை எதிர்நோக்கி இருந்த அவர் என்னை பார்த்ததும் நீயும் உன் விபூதியும் நீயே வைத்துக் கொள் என்று சத்தமிட்டார். அரைமணி நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.
--------------------------
அப்போது நாங்கள் விஜயவாடாவில் இருந்தோம். என் மனைவியின் இடது கையில் கட்டை விரலின் பின் புறத்தில் ஒரு மரு ( பாலுண்ணி ) வந்தது. அது சிறிது சிறிதாகப் பெரியதாகத் தொடங்கியது. மருத்துவரிடம் காண்பித்தோம். அதனால் பாதகமேதுமில்லை. வேண்டுமானால் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம் என்றார். பாதகம் ஏதுமில்லாததால் இருந்து போகட்டும் என்று விட்டு விட்டோம். அதன் பிறகு நான் மீண்டும் திருச்சிக்கே மாற்றல் கேட்டு வாங்கிவந்தேன். கையில் இருந்த அந்தப் பாலுண்ணி சற்றே பெரிதாகவும் அருகேயே இன்னும் ஒன்றிரண்டு கூடவே தென்படவும் செய்தது. பாதகம் இல்லாவிட்டாலும் பார்க்க ஒரு மாதிரி அருவருப்பாகத் தென்பட்டது. மருத்துவமனையில் தோல் நிபுணரிடம் ( skin specialist ) கன்ஸல்ட் செய்தோம். அவர் எங்களை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்து “ இதற்கு மருத்துவம் ஏதும் தேவை இல்லை. வைத்தீஸ்வரன் கோயிலில் உப்பு மிளகிட்டு குளத்தில் வெல்லம் கரைத்து விடுங்கள் எல்லாம் சரியாகும் “ என்றார். நாங்களும் அவ்வாறே செய்தோம். சில நாட்கள் கழித்துப் பார்த்தால் எங்களுக்கே தெரியாமல் அந்த பாலுண்ணிகள் காணாமல் போயே போச். !
-----------------------------
அது 1970-ம் வருடம். கம்பெனிக் குடியிருப்பில் இருந்தோம். சபரி மலைக்குச் செல்வோர் குடியிருப்பில் பலர் இருந்தனர் . குறிப்பிட்ட நேரத்தில் ஐயப்பனை ஜோதி வடிவில் தரிசிப்பது நன்மை பயக்கும் என்றார்கள். நானும் மாலை போட்டு ஒரு கன்னி ஐயப்பனாக தீவிர விரத அனுஷ்டானங்களில் ஈடு பட்டேன். எல்லா புலன்களையும் ஒரு மண்டல காலம் கட்டுப்படுத்தி வந்தால் நம்மை நாமே வெல்லும் வாய்ப்பு என்றதால், அட்சர சுத்தமாகக் கடை பிடித்தேன். தினம் ஒருவர் வீட்டில் பஜனை நடைபெறும். அந்த வீட்டின் அன்னதானத்தை ஏற்பது கொடுப்பவருக்கும் திருப்தி, பெறுபவரும் அகந்தை அடங்க வாய்ப்பு. பஜனை சமயத்தில் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு சாமியாடுவார்கள். அவர்களை மற்றவர் பக்தியுடன் பார்ப்பார்கள்.குடியிருப்பில் இருந்து பேரூந்து ஏற்பாடு செய்யப் பட போகும்போது பல ஆலய தரிசனத்த்டன் எருமேலி சென்று பேட்டை துள்ளி ( நான் எனும் அகம்பாவம் எல்லாம் போய்விடும்) சன்னிதானம் அடைந்து நெய்யபிஷேகம் செய்து , அன்று அங்கு அங்கப் பிரதட்ஷிணம் செய்து ஜோதி தரிசனத்துக்காக காத்து இருந்தோம். ஆ அதோ ஜோதி தெரிகிறது என்ற பக்தர்களின் ஆர்பரிப்பில் ஜோதி தரிசனம் காணும்போது அந்த ஆண்டவனையே நேரில் தரிசித்த அனுபவத்தில் மெய் உருகி கண்ணீர் மல்க கதறி அழுதேன். பின் எல்லோரும் நலமாக வீடு வந்து சேர்ந்தோம்.
அந்த அனுபவ அடிப்படையில் அடுத்த ஆண்டும் மாலை போட்டேன். கூடவே என் ஐந்து வயது மூத்த மகனையும் கூட்டிச் சென்றேன். எருமேலி சென்றோம். அந்தப் பேரூந்து ஓட்டுனர் அதற்கு மேல் பம்பா வரை வண்டி ஓட்ட முடியாது என்று சொல்லி விட்டார். பேரூந்தில் முதியவர்களும் குழந்தைகளும் இருந்ததால் எருமேலியிலிருந்து பெரிய பாதையில் நடந்து செல்ல முடியாது என்பதால் பம்பா வரை சென்று அங்கிருந்து மலைஏறுவதாகத் திட்டம் இட்டிருந்தோம். இப்போது எருமேலியிலேயே பேரூந்தை நிறுத்தி விட்டால்..... எல்லா திட்டமும் தரை மட்டமாகி விடும். அந்த ஓட்டுனரின் காலைப் பிடிக்காத குறை தொலைபேசியில் பேரூந்து ஓனரைத் தொடர்பு கொண்டால் அவர் ஓட்டுனரை எப்படியாவது சம்மதிக்கச் செய்யுங்கள். எருமேலி செல்லவே பெர்மிட் என்பதால் அவரால் ஏதும் செய்ய முடியாது என்றார். ஓட்டுனருக்கு கையூட்டு கொடுத்து , வழியில் போலீஸ் கெடுபிடி இருந்தால் எங்கள் பொறுப்பு என்று ஏற்றுக் கொண்டு பம்பா வந்து மலை ஏறி ஐயப்பன் தரிசனம் செய்தோம். இந்த முறை ஜோதி தரிசனம் செய்யும்போது I was composed. வரும் வழியில் அதிகாலை இரண்டு மணி அளவில் குருவாயூர் வந்தோம்..அப்போது அங்கே கிருஷ்ணாட்டம் நடந்து கொண்டிருந்தது. பலரும் அதைப் பார்க்கச் சென்று விட்டனர். பேரூந்தில் முதியோர் குழந்தைகள் தவிர்த்து ஐந்தாறு பேர் இருந்தனர். அப்போது ஒரு ஆறடி உயரமுள்ள ஐயப்பன் ஒருவர் பேரூந்தில் ஏறி முன் இருக்கை ஒன்றில் அமர்ந்து , கேட்கத் தகாத கெட்ட வார்த்தைகளைக் கூறிக் கொண்டு கையில் இருந்த கத்தியால் பேரூந்தின் இருக்கையைக் குத்த ஆரம்பித்தார். . நன்றாகக் குடித்திருந்தது தெரிந்தது. அவரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்து அவரை இருக்கையில் படுக்க வைத்து அவரிடம் இருந்த கத்தியையும் இடுப்பில் இருந்த பெல்டையும் எடுத்துவிட்டால் அவரால் ஆபத்து நேராது என்ற எண்ணத்தில் சிலர் அவர் பெல்டில் கை வைத்ததும் அவர் காலால் எட்டி உதைத்து கத்தியால் குத்த வந்தார். ஒரு வழியாய் இருந்த ஐந்தாறு பேரும் அவரை அமுக்கி கையைப் பின் புறத்தில் கட்டி அவரை பேரூந்திலிருந்து இறக்கி விட்டதும் அவர் போதையில் விழுந்து விட்டார். அருகில் இருந்த காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தால் அங்கிருந்து பஸ்ஸை அகற்றிப் போகுமாறு கூறினர். யாரும் இடத்துக்கு வரவில்லை. சரி, பஸ்ஸை நகர்த்திச் செல்வோம் என்று முயலும் போது அங்கிருந்த கடைகளில் இருந்து சிலர் வந்து “ தமிழன்மார் மலையாளி ஐயப்பனைத் தல்லிக் கொன்னு “ என்று கூச்சல் இடக் கேட்கவா வேண்டும். கும்பல் கூட. ஒரே களேபரம். பஸ்ஸைத் தீ வைத்துக் கொளுத்துவதாகப் பயமுறுத்தினர். மண்ணையும் கல்லையும் வீசினர். அந்த நேரத்தில் நாங்கள் பயத்தில் உறைந்து விட்டோம். ஒரு சில நிமிடங்களில் எங்கள் குருசாமி வந்தார். மலையாளி ஐய்ப்பனிடமிருந்து எடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க வற்புறுத்தினர். வீடு திரும்பும் எங்களிடம் பணம் மிகவும் சொற்பமே இருந்தது. எல்லோரிடமிருந்தும் இருந்ததை வாங்கி இருநூறு ரூபாய் வரைத் தேற்றி அந்தக் கும்பலில் இருந்த லீடர் போலிருந்தவனிடம் கொடுக்க அவன் பஸ்ஸில் ஏறிப் படியில் நின்று கொண்டு “ போலாம் ரைட்..!” என்றான்.
------------------------------------------------------ . .