நினைவடுக்குகளில் இருந்த பயணம் -3
----------------------------------------------------------
(எனது பதிவுகளை தமிழ் மணத்தில் நானே இணைத்துக் கொள்வேன்.கடந்த சில பதிவுகளை யாரோ இணைக்கிறார்கள். தயவு செய்துவேண்டாமே.)
இரண்டு
மூன்று நாட்களுக்குப் பின் 8-ம் தேதி மாலை மதுராவில் இருந்து வாரணாசி நோக்கிப்
பயணமானோம். ஏற்கனவே சொல்லி இருந்தபடி என் பெரிய அண்ணாவும் அண்ணியும் இப்போது
எங்களுடன். அண்ணா தெரிந்த ஒருவர் மூலம் வாரணாசியில் சங்கர மடத்தில் தங்க ஒரு
சிபாரிசுக் கடிதம்கொண்டு வந்தார். வாரணாசியில் நாங்கள் நேராக சங்கர மடத்துக்குச்
சென்றோம். அது ஹனுமான் கட்டத்துக்கு அருகில் இருக்கிறது. ஆனால் மடத்துக்குப்
போய்ச் சேர்ந்தவுடன் எங்களுக்கு ஒரே
ஏமாற்றம். தங்குவதற்கு இடம் கிடைத்ததே தவிர படுக்கக் கட்டிலோ பாயோ தரப் படவில்லை. அங்கேயே
ஒரு மாமி உணவு சமைத்துக் கொடுக்கிறார். முன்னாலேயே சொல்லி விட வேண்டும். அங்கு
நாங்கள் சென்றிருந்தபோது உணவறையில் ஒரே கூச்சல். “ சித்தி “ வந்திருக்கிறார் என்ற
பரபரப்பு. பார்த்தால் நடிகை ராதிகா அவர் கணவர் சரத் குமாருடன் வந்திருந்தார்.
அவர்கள் தம்பதி பூஜை செய்ய ஏற்பாடு செய்யவே அந்த வருகை.
என்
அண்ணாவுக்குக் காசியில் சிரார்த்தம் செய்ய விருப்பம். என் குணம் தெரிந்து என்னைப்
பார்த்தார். நான் எனக்கு எந்த ஈடுபாடில்லாவிட்டாலும் அண்ணா செய்வதில் ஆட்சேபம்
இல்லை என்றேன். மறுநாள் காசி ஹனுமான் (g)காட்டில் ஒரு படகில்
சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டது.
அதெல்லாம் முடிந்தபின் அங்கிருந்து ஒரு துழாவும்
படகில் பிரயாகையில் உள்ள திருவேணி சங்கமத்துக்குப் பயணமானோம். இப்போது நினைத்தாலும்
சிலிர்ப்பாய் இருக்கிறது. படகில் நாங்கள் நால்வருடன் படகோட்டியும் ஒரு சாஸ்திரியும்
மட்டும்தான். கங்கை ஆறில் படகில் பயணிக்கும் போது விலங்கு மற்றும் மனித சடலங்களும்.
நடு ஆற்றில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்.... அது பற்றிய சிந்தனைகள் இப்போதே
வருகிறது திருவேணி சங்கமம் அருகே படகை நிறுத்தினார்கள். அங்கிருந்து நங்கூரம்
பாய்ச்சப் பட்ட இன்னொரு படகுக்கு மாறினோம். அதிலிருந்து இரு பக்கங்களிலும் கயிறால்
கட்டப் பட்ட மூங்கில் கழியில் கால்களை வைத்தால் நம் கனத்தால் மூங்கில் கழி கீழே
போகிறது. நாம் வெள்ளத்தில் இறங்குகிறோம். அப்போதே முழுக்குப் போட்டு மேலே வர
வேண்டும். . இது எல்லாம் ஒரு வித்தியாசமான அனுபவம். கங்கையில் மூழ்கும் முன் சிரார்த்தம்
செய்தவர்களின் மனைவி சற்று முடியை வெட்ட வேண்டும் என்றார்கள். என் அண்ணி முதலில்
பிடிவாதமாக, கணவர் இருக்கும் போது முடி வெட்டல் பாவம் என்று சொல்லி மறுத்து
விட்டார். பிறகு அண்ணா மிகவும் கேட்டுக் கொண்டதற்கிணங்க முடி நுனியில் சிறிது
வெட்ட அனுமதித்தார் கங்கையில் எடுத்த சில புகைப் படங்கள் கீழே.
![]() |
| கங்கையில் படகில் சிரார்த்தம் |
![]() |
| படகில் பிண்டம் தயாராகிறது |
![]() |
| கங்கையில் படகிலிருந்து ஸ்நான (G) கட்டங்கள்ஒரு காட்சி |
![]() |
| கங்கையில் துழாவும் படகில் to பிரயாகை |
![]() |
| பிரயாகை சங்கமத்தில் முழுக்கு |
![]() |
| பிரயாகையில் அண்ணா |
மறுநாள் காசி
விசுவநாதர், அன்ன பூர்ணேஸ்வரி விசாலாட்சி சன்னதிகளில் தரிசனம் செய்தோம். காசி
விசுவநாதரை நம் கைகொண்டு தொட்டு மகிழலாம். ஆனால் தரிசனத்துக்குப் போகும் போது
செக்யூரிடி கெடுபிடிகள் மிகவும் அதிகம். வெளியே பிரயாணம் செய்யும்போது பழங்கள்
வாங்கினால் நறுக்க என்று என் மனைவி ஒரு சிறுகத்தி வைத்திருப்பாள். பையை எல்லாம்
துழாவித் துழாவி சோதனை இட்ட காவல் துறையினர் கண்களுக்கு அந்தக் கத்தி தென்படாதது
அதிசயமே. அங்கு பைரவர் சன்னதியில் இருக்கும் பாண்டா, பிரசாதம் கொடுத்து பக்தர்கள்
முதுகில் ஓங்கித் தட்டுகிறார். என் முறை வந்தபோது நான் ஆட்சேபம் தெரிவித்து தட்ட
விடவில்லை. காசி விஸ்வநாதர் கோவிலும் ஒரு மசூதியை ஒட்டியே இருப்பதால் பதட்டம்
நிலவுகிறது அங்கிருந்து வெளியே வரும்போது ஒரு புடவை கடைக்காரர் நாங்கள் தமிழ்
பேசுவது கேட்டு விடாப்பிடியாக அவரது கடைக்கு அழைத்துச் சென்றார். போனவுடன் என்
கால்களைப் பிடித்து விடுவதும் தடவிக் கொடுப்பதுமாய் எங்களை அவர் திக்கு முக்காடச்
செய்து விட்டார். பேச்சின் ஊடே அவர் பெங்களூரு
ஹலசூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கூறி ஒரு விசிடிங் கார்டும்
கொடுத்தார். எல்லாமே வியாபார தந்திரம் என்பது என் மனைவி அங்கு புடவை வாங்கியதில்
தெரிந்தது மாலை கங்கை மாதாவுக்கு மஹா ஆரத்தி எடுப்பதைப் பார்த்தோம். கூட்டம்
அதிகமாயிருந்ததால் நாங்கள் இருவர் செருப்புகளுக்குக் காவல் இருக்க மற்ற இருவர்
அங்கிருந்த கங்கா மாதா கோவிலுக்குச் சென்று வருவதாகத் திட்டம் அப்போது
கோவிலுக்குச் சென்ற எங்கள் அண்ணி காணாமல் போக நாங்கள் அவரைத் தேடத்துவங்கினோம்.
அவர் கோவிலை விட்டு எதிர் திசையில் சிறிது தூரம் சென்று விட்டார். புறப்பட்ட
இடத்துக்கு வர வழி தெரியவில்லையோ என்றே எண்ணினோம் ஆனால் அது மறதி நோயின் ஆரம்பம்
என்று அப்போது தெரியவில்லை. ,.
மறுநாள் 11-ம் தேதி முற்பகல் 11 மணி அளவில்
அலஹாபாதுக்கு ரயில் ஏறினோம். அலஹாபாதிலும் ஒரு மடத்தில் தங்க அண்ணா ஏற்பாடு
செய்திருந்தார். அன்றிரவு அங்கு கழித்தது மறக்க முடியாது. ஏதோ டஞ்சன் போல் ஒரு
அறை. அதில் பல மூட்டைகளுக்கு நடுவே எங்களுக்கு இடம். இப்படி என்று
தெரிந்திருந்தால் ஏதாவது ஹோட்டல் நாடிப் போய் இருக்கலாமே என்று காலம் கடந்து
புத்தியில் உறைத்தது. இரவு நேரமாகி விட்டதாலும் ஊரில் எதுவுமே தெரியாது என்பதாலும்
சரியாக திட்டமிடப் படாததாலும் அன்றிரவு எலிகளுடன் வாசம். அலஹாபாத் பயணமே
ஹரித்த்வார் ரயில் ஏறத்தான். விசேஷமாக எதையும் திட்ட மிட்டிருக்கவில்லை. சாரனாத்
போய் வரலாம் என்றால் ஹரித்வார் ரயில் கிளம்பும் முன் வரமுடியுமா என்ற சந்தேகத்தால்
அதைக் கைவிட்டோம். அலஹாபாத் நகரைச் சுற்றிவரும் போது பண்டிட் ஜவஹர்லாலின் ‘ஆநந்த
பவனைக் ‘கண்டோம்.அலஹாபாதிலிருந்து ஹரித்வார் போகும் வண்டி வருமுன்பே நாங்கள் ஏறவேண்டிய
கோச் இதுதான் என்று போர்ட்டர் ஒருவர் கூறினார். ” என் அப்பா அம்மா போல் இருக்கிறீர்கள். உங்களுக்குத் தவறான
செய்தி சொல்ல மாட்டேன் “ என்று அவர் சொன்னவிதம் திருப்தி அளித்தது. மறு நாள்
ஹரித்வார் சென்றால் எங்கு தங்குவது என்று நாங்கள் பேசிக் கொண்டு இருந்தபோது சக
பயணி ஒருவர். ஹர்த்வாரில் நிறையவே சத்திரங்கள் இருப்பதாகவும் நல்ல வசதிகள்
இருக்கும் என்றும் கூறினார். அவரே எங்களை ஒரு நல்ல இடத்துக்குக் கூட்டிப் போவதாய்க் கூறினார். ஹரித்வார் ரயில் நிலையத்துக்கு எதிரே ஒரு இடத்துக்கு
எங்களைக் கூட்டிப் போய் தங்கும் வசதிக்கு ஏற்பாடு செய்தார். நன்றாகவே இருந்தது.
என்ன ஒரு குறை என்றால் எங்களுக்கும் அண்ணா அண்ணிக்கும் கொடுக்கப்பட்ட இடங்கள் இரண்டு தலங்களில் இருந்தது ஹரித்வார் அனுபவம் அடுத்த பதிவில்( வாசக நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் என் வீட்டில் சில மராமத்து வேலைகள் நடக்க இருப்பதால் இன்னும் சில நாட்களுக்கு என்னால் கணினிப் பக்கம் வரமுடியாது. பின்னூட்டம் எழுத முடியாது.பதிவு எழுத முடியாது. பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.) : . . .





