ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

அம்மா

 

        
                தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்

நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மா, நீயின்றி நானில்லை என்று ?. 

என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மா, என் அன்பு என்றும் மாறாதது.

விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.

இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா
உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!

-----------------------------------------------------














சனி, 1 ஏப்ரல், 2023

அது நீங்களில்லையா


 


                                          அது நீங்களில்லையா..........?
                                          ----------------------------------------------

நான் அம்பர்நாத் பயிற்சிப் பள்ளியில்  பொறி இயல் பயிற்சி பெற்றவன் என்று எனது முந்தைய பதிவுகள் சிலவற்றில் பகிர்ந்துள்ளேன்  அங்கு பயிற்சி பெற்றவர்கள் ATS AMBARNATH ALUMNI MEET என்று ஆண்டு தோறும் கூடுகிறார்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும்  இதற்கான சாப்டர்கள் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சாப்டரில் கூடுகிறார்கள்

 நான் சென்னை சாப்டரில் 2010-ம் ஆண்டு கலந்து கொண்டேன்  இந்தமாதிரி கூடும் போது ஆகும் செலவுக்கு ரெஜிஸ்திரேஷன்  என்று ஒரு தொகை வருபவர்களிடம் இருந்து வசூலிக்கப் படுகிறது 2010-ம் ஆண்டு ரூ. தலைக்கு ரூ 600-/ என்று வசூலித்தார்கள் . மேலும் அந்த சாப்டரின் கமிட்டி மெம்பர்கள்  கூடுவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறார்கள் ஒரு சூவநீரும் பதிவிடுகிறார்கள் 2016-ம் ஆண்டு ஃபெப்ருவரி மாதக் கடைசியில் பெங்களூரு சாப்டர்  துவங்கி கூடுதலுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்பர்நாத் பயிற்சிப் பள்ளியின் மாணவர்கள் அகில இந்தியாவிலிருந்தும் வருபவர்கள்
நாங்கள் எச் ஏ எல்  லிலிருந்து பயிற்சிக்கு அனுப்பப் பட்டவர்கள் மொத்தமாக சுமார் 200 பேர்கள் எச் ஏ எல் லிலிருந்து பயிற்சி அளிக்கப் பட்டனர். நான் முதலாம் பாட்சைச் சேர்ந்தவன் சில ஆண்டுகள் கழிந்ததும் அந்த மாதிரி பயிற்சி நடத்துவது நின்று விட்டது பயிற்சி பெற்றவர்கள் உலகின் எல்லாக் கோடிகளிலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்
2016-ம் ஆண்டுக்கான ஆலும்னி மீட்டில் சுமார் 200 பேர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள் தனி நபருக்கு ரூ1500-/ ம் மனைவியுடன் வந்தால்  ரூ2500-/ம்  கட்ட வேண்டும் இரண்டு நாள்  நிகழ்ச்சி . முதல் நாள் சந்திப்பும் கூடுதலும் இரண்டாம் நாள் பெங்களூரைச் சுற்றி உலாவும்  இருக்கும்  சூவநீரும் தயாராகிக் கொண்டிருக்கிறது


எனக்கு இந்த மாதிரி கூடுதலில் பெரிய அளவு நம்பிக்கை இல்லை.  நான்  1957-லிருந்து 1959 வரை பயிற்சியில் இருந்தேன் அந்த நாளைய நண்பர்கள் வெகு சிலரிடமே தொடர்பு உள்ளது.  மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற வருவோர்  பெரும்பாலானோர் எனக்குப் பரிச்சயப் படாதவர்களே. பதிவர் சந்திப்பிலாவது என் எழுத்துக்களைப் படிப்பவர்க்கு நான் யாரென்று தெரிந்திருக்கலாம் ஆனால் ஒரே பயிற்சிப்பள்ளியில் பயின்றவர்கள் என்பது தவிர வருவோரைப் பிணைக்கும்  சக்தி ஏதாவது இருக்கிறதா தெரியவில்லை.

இருந்தாலும் இந்தச் சந்திப்புக் கமிட்டி என் முகவரி தெரிந்து என்னைத் தொடர்பு கொண்டு அழைப்பிதழும் ரெஜிஸ்திரேஷன் படிவமும்  அனுப்பி இருக்கிறார்கள்.  பெங்களூரிலேயே சந்திப்பு என்பதால் நானும் என்  துணைவியாருடன் பங்கு கொள்ளப் போகிறேன்  இதில் இன்னொரு சுவாரசியமானத் தகவல் என்ன வென்றால்  பங்கு பெறுவோர் அனைவரும் அவர்களது எழுபதுகளில் இருக்கும்  இளைஞர்கள். சந்திப்புக் கமிட்டியின் காரியதரிசி என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்திருந்தார் அது பற்றி ஒரு பதிவும் எழுதி இருந்தேன் “ வெக்கலாமா பெட் “ எனக்கு இந்தக் குழுவிலிருந்து வரும் செய்திகளில்  முக்கியமானது யாராவது ஒருவரது மறைவுச் செய்தியைத் தாங்கி இருக்கும்  ஒரு மாதத்தில் குறைந்தது நான்கு மறைவுச் செய்திகளாவது இருக்கும்

இருந்தாலும் பங்கு பெறப் போவோரின் ஆர்வம் ஆச்சரியமளிக்கிறது இந்தியாவிலிருந்தும்  உலகின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவோர் நன்கு முன் கூட்டியே திட்டமிட வேண்டும் விமான முன் பதிவு, ரயில் முன் பதிவு. தங்குமிடம் பற்றிய முன் பதிவுக்கான விவரங்களுடன் குழுவுடன் தகவல் பரிமாற்றம்  சந்திப்பு எல்லாம் திட்டமிடப்பட்டு நடக்க வேண்டும் இதன்  அகில இந்தியக் குழுவின் தலைவர் தற்போது  அமெரிக்காவில் இருக்கிறார். அவரது பேரன் அமெரிக்க ஜனாதிபதியின் கையால்  டென்னிஸ் விளையாட்டில் பரிசு வாங்கினார் என்று பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்ஹாக்கி விளையாட்டில் தேர்ச்சி பெற்றிருந்தார் இப்போதெல்லாம் நேர்முக வர்ணனைகளில்  ஈடுபடுகிறார்
எனக்கு பரிச்சயமானவர்கள் வெகு சிலரே என்னுடன் பயிற்சி பெற்ற என் பாட்ச் மேட் பல ஆண்டுகளுக்குப் பின் அதே ஏ டி எஸ் பயிற்சிப்பள்ளியில் வைஸ் ப்ரின்சிபாலாக இருந்தவர் அண்மையில் காலமானார்
நாட்களை எண்ணிக் கொண்டிருப்போர் ஆனாலும் இருக்கும்  போது வாழ்க்கையை அனுபவித்து விட வேண்டும் என்று நினைப்பவரே இந்த மாதிரி சந்திப்பில் பங்கு கொள்ள நினைப்பார்கள் என்று நம்புகிறேன்  ஆகவேதான் நானும்  பங்கு பெற எண்ணுகிறேன் 
 ஒரு கொசுறுச் செய்தி
நான் காலையில் நடைப் பயிற்சியில் இருக்கும் போது ஒருவர் அறிமுகமில்லாதவர்  என்னை நிறுத்தி என் வீட்டருகே அண்மையில் ஏதாவது இறப்பு நிகழ்ந்ததா என்று கேட்டார். நான் முதலில் இல்லை என்று சொல்லி சற்று நேரம் கழிந்து என் வீட்டு மாடியில் குடி யிருப்பவர் ஒருவர் அண்மையில்  தவறி விட்டார் என்றேன் “ ஓ அதுதானே பார்த்தேன் அது நீங்களில்லையா.? சந்தேகமாய் இருந்தது...” என்றாரே பார்க்கலாம்..........!






புதன், 22 மார்ச், 2023

பாட்டியும் முட்டை தலையும்

 

பாட்டியும் முட்டைத் தலையும்


                                          பாட்டியும்  முட்டைத்தலையும்
                                        ---------------------------------------------
 (  படித்தவை எல்லாம்ன் நினைவில் இருக்கிறதா என்ன?என் சிந்தனையோடு ஒத்துப் போவதும் பலரும் படிக்காமல் விட்டதுமான சில பதிவுகளை மீள் பதிவாக்குவதில் தவறில்லை என்று தோன்றுகிறது )

.” பாட்டி இவ்வளவு அருகில் பேப்பரை வைத்துக் கொண்டு படித்தால் கண்ணுக்குக் கேடு” என்று கூறி பாட்டியின் கையிலிருந்த “ ப்ரஜாவாணி “ பேப்பரை சற்றே இழுத்தேன்.. பேப்பரை தரையில் வீசி எறிந்தாள் பாட்டி ” என்ன பாட்டி, படித்தது பிடிக்கலையா, இழுத்தது பிடிக்களையா “ என்று கேட்டேன்.
” படித்ததுதான் “ என்ற பாட்டி, “ பாலா....!, குழந்தைகள் முட்டை சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கும் , உடல் வலுவுக்கும் நல்லதுதானே
 நடத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்கிறது.. பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் எல்லா தரப்புக் குழந்தைகளுக்கும் சமமான உணவு, என்பதும் நல்லதுதானே.” என்றேன்.
” சீருடையில் மாத்திரம் சமமென்பதைவிட, உணவிலும் சமம் என்றால் மாணவர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்லவா. ஏழைக் குழந்தைகளுக்கு வீட்டில் முட்டை சாப்பிடுவது முடியாத காரியமாகும். “
“ பாட்டி, பள்ளியில் முட்டை போடாததன் காரணம் மத சம்பந்தப் பட்டது ஆனதால்தான் இருக்கும்..அதுதான் பள்ளிகளில் முட்டை கொடுக்காததன் காரணம் என்கிறார்கள். “


“ மதமாவது கிதமாவது.....! அதெல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். நாளொரு முட்டை உடலுக்கு நல்லது என்று இந்த முட்டைத் தலையர்களுக்குத் தெரியாதா. மக்களுக்கு நல்லது செய்வதில் இந்த மாதிரி எண்ணங்கள் கூடாது. இதே ரீதியில் போனால் வெள்ளிக்கிழமைகளில் காலை 11- மணிக்கு புறப்படும் ரயில்களை “ராகு காலம் “ என்று சொல்லி தாமதப் படுத்துவார்கள் என்று போட்டாளே பாட்டி..இதையெல்லாம் தடுக்கும் ஜனங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் புஷ்டியான முந்திரி, பாதாம் , பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களை கோயில்களில் பிரசாதமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் குறைந்தா போவார்கள்.” பாட்டி சரியான ஃபார்மில் இருந்தாள்.
” பாட்டி உங்கள் சளி எப்படியிருக்கிறது..? இப்போது தேவலாமா.?


“ சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்று இரண்டு மூன்று வாரங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டேன். என்னவெல்லாமோ கஷாயங்கள் மருந்துகள்னு போதும் போதும் என்றாகி விட்டது. நீ கொடுத்த மருந்து சாப்பிட்டவுடன் அநேகமாக சரியாகி விட்டது.
 “எனக்கும் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது பாட்டி. இருந்தாலும் பார்க்கலாம் என்றுதான் அந்த வெளி நாட்டுக் கஷாயம் கொடுத்தேன். “
“ இரண்டே நாளில் பலன் தந்தது உன் கஷாயம். சரி ....அது என்ன மருந்தப்பா...
“ வெளிநாட்டுக் கஷாயம் பாட்டி. இரண்டு ஸ்பூன் ப்ராண்டி....
 அடப் பாவி மனுஷா.... ! எனக்கு ப்ராண்டியா கொடுத்தே. ?
“ பாட்டி என்னென்னவோ மருந்தெல்லாம் சாப்பிட்டும் குணமாகாத உன் சளியும் இருமலும் இரண்டு ஸ்பூன் ப்ராண்டியில் குணமாயிற்று. .சின்னச் சின்ன விஷயங்களில் பிரச்சனை பண்ணக்கூடாது பாட்டி. குழந்தைகளுக்கு நாளொரு முட்டை தராதவர்கள் முட்டைத் தலையர்கள் என்றாயே. நல்லது என்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத முட்டைத் தலை இல்லையே உனக்கு...!
(  “நான் பால் குடிப்பதில்லை. அது நீர் மாமிசம். நான் ஒரு வெஜிடேரியன். ஆகவே ஒரு பெக் மது அருந்துவேன் “ என்று கன்னட எழுத்தாளர் டி.பி. கைலாசம் அவர்கள் கூறுவாராம். . அதை ஒட்டி எழுந்த கதை நீங்கள் மேலே படித்தது.) .


திங்கள், 20 மார்ச், 2023

ஸ்றோக் வ்ந்தால்

 ஸ்ட்ரோக் வந்து விழுந்தவரை உடனே இட மாற்றம் செய்யாதீர்கள். இட மாற்றம் செய்வதால் நுண்ணிய ரத்தக் குழாய்கள் பழுதாகலாம், ஸ்ட்ரோக் வந்து விழுந்தவரை அதே இடத்தில் உட்கார வைத்து, ஒரு சிறிய ஊசியால் அவரது கையின் பத்து விரல்களிலும் நகத்திலிருந்து ஒரு மில்லி மீட்டர் தூரத்தில்  சுருக் என்று குத்தி ஒவ்வொரு விரலிலிருந்தும் ஒரு சொட்டு ரத்தம் ( ஒரு பட்டாணி அளவு ) வர வழைக்க வேண்டும். அப்போதே பாதிக்கப் பட்டவரின் பார்வை தெளிவாகும், ஸ்ட்ரோக்கினால் வாய் கோணி இருந்தால் அவரது இரு காது மடல்களையும் சிவக்கும் அளவுக்குப் பிடித்திழுத்து ஊசியால் குத்தி ரத்தம் ( ஒரு சொட்டு ) வரவழைக்க வேண்டும்  சிறிது நேரத்தில் அவர் சுய நிலைக்கு வந்து விடுவார்


இது சீனாவின் ஒரு பழமையான , ஆனால் குணம் தரும் வைத்திய முறையாம் . எதிர்பாராத விதமாக யாருக்காவது ஸ்ட்ரோக் வந்தால் முதல் உதவியாக இதைச் செய்வதால் எந்த பாதகமும் ஏற்படாது. ஆனால் ஸ்ட்ரோக்கில் இருந்து குணமடைந்தால் நல்லதுதானே. குத்தும் ஊசி ஸ்டெர்லைஸ் செய்ததாய் இருந்தால் இன்னும் நல்லது.


திங்கள், 27 பிப்ரவரி, 2023

பரிணாமத்தில் நான்

        
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே






இப்படி இருந்த நான் 











                      ஒரு இன்ட்ராஸ்பெக்‌ஷன் என்னுள் எழுந்தது நான் வாழ்ந்த வாழ்வு என்ன எதை நோக்கி என் சிந்தனைகள் எழுகின்றன இதுவே பதிவாகிறது  என் வாழ்வு பற்றி நிறையவே பகிர்ந்து விட்டேன்  அவை என்  அனுபவங்களைச்
சார்ந்தது. அந்த அனுபவங்கள் என்னைச் செதுக்கி இருக்கின்றன, இன்னொரு முறை இதே வாழ்வு வாய்க்குமானால் அதையே அப்படியே ஏற்றுக் கொள்வேன் அந்த அளவு நான் என்னுடைய குணங்களிலும்  கொள்கைகளிலும் பிடிப்பாய் இருந்திருக்கிறேன் ஆனால் என்னைப் பற்றி நான்  நினைக்கும் போது பிறரும் என்ன்  நினைப்பார்கள் என்றும் தோன்றுகிறது
 அப்போது
    வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
        
விட்டாய்,வென்றுவிட்டாய்வாழ்க்கை நிறைவேயன்றோ
        
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.
என்று தோன்றுகிறது மேலும்

 ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?

கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?

பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ

யாரும் சிறியர்நானே பெரியோன்,எதிலும் சிறந்தது
என் செயலே,பாரினில் யாரும் எனக்கீடில்லை எனப்
பயனிலா சொற்கள் பகர்ந்தேனா.?

காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..

எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நீயோர்  ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?
இப்படியாகி..........


என்னும் எண்ணங்களே மேல் நோக்கி வரும்   வாழ்ந்து முடித்தாய்விட்டது எனக்கு யயாதிபோல் ஆசை வருவதில்லை என்னேரமும்  என்  முடிவை நோக்கித் தயாராய் இருக்கிறேன்  என்ன, யாருக்கும்  எந்த தொந்தரவும்  தராமல் போய்ச் சேரவேண்டும்முன்பொரு முறை வீழ்ந்த போது காலா என்  அருகில் வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்  என் காலால் என்று எழுதி இருந்தேன் எனக்குத் தெரியும் சண்டைகளில் நான் வெல்லலாம் இறுதிப் போரில் அவனே வெல்வான் அவ்வப்போது அவன்  என்  தோள் மேலேறி காதில் உன் நாட்களை எண்ணிக் கொள் என்பது போல் சொல்வது கேட்கும்

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி

என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் இனி எனக்குள்ள ஆசையெல்லாம் இதுதான்

  
          என்னுயிர்ப் பறவையே,
          
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
          
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
          
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
          
அழகாக வெளியேறிவிடுயாரும் அறியாமல்.
          
மூடிய கண்கள் விழித்து விட்டால்
          
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே.

 பதிவில் யாரோ அனாயாச மரணம்நேர அதிஷ்டம் செய்து இருக்க வேண்டும் என்பது போல் எழுதி இருந்தார்கள் நான் அம்மாதிரி அதிர்ஷ்டம் செய்திருக்கிறேனா எனக்கு எப்படி தெரியும்  நான் இறந்து விட்டால் நான் நானாக இல்லாமல் நினைவாகவேதானே இருப்பேன் இது இப்போதைய சிந்தனை மட்டுமல்ல பலவும்  என்  சிந்தனைகளின்  தொகுப்பே

இப்போது இப்படியாகி விட்டேன் ....!

திங்கள், 20 பிப்ரவரி, 2023

வாய் முஹுர்தம் கைராசி முகராசி

 



                     மீண்டும் நினைவுகள் ... 

வாய் முஹூர்த்தம்
-----------------------------


நான் சும்மா இருக்கும்போது- நான் எப்போது சும்மா இருக்கிறேன்.? எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது சும்மா இருப்பதாகுமா.?இப்போது நான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்?சும்மா இருக்கும் போது ( மீண்டும் சும்மா) எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சிலரது முகங்கள் கண்முன்னே ( மனக் கண்ணில் ) காட்சி அளிக்கின்றன. அப்போது அவரைப் பற்றிய சில நினைவுகள் முட்டி மோதுகின்றன. பொதுவாகவே நான் யாரையும் குறிப்பிட்டு எழுதுவதில்லை. என்றாலும் அம்மாதிரி பாத்திரங்கள் பல சமயங்களில் என் எழுத்துக்களில் புகுந்து விடுவது உண்டு. நானும் அந்த மாதிரி எழுதும்போது யார் மனதும் புண்படாதபடி எழுதுவதில் கவனமாய் இருப்பேன். இப்போது ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன். அந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தார். எனக்கு ஒரு பழக்கம். நான் எதையும் துருவித் துருவி கேட்பதில்லை. . இந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தபோது எதையோ என்னிடம் சொல்லத் துடிக்கிறார் என்று தெரிந்தது. முகம் மிகவும் வாடி இருந்தது. பொதுவாக அனைவரும் நலமா என்று கேட்டேன். அனைவர் என்ன இருப்பது நானும் என் மனைவியும் மட்டும்தான்” என்று சலித்துக் கொண்டார். குழந்தைகள் பற்றிக் கேட்டேன். ஐந்து முறை கர்ப்பம் தரித்தும் அனைத்துமே குறைப் பிரசவமாகி விட்டது என்று கூறி கண்கலங்கினார்.இந்த முறை ஆறாவது கர்ப்பம் ஆறு மாதமாகிறது கவலையாய் இருக்கிறது என்றார். நான் அவரைத் தேற்றும் விதத்தில் “ இந்த முறை கவலைப் படாமல் இரு. உன் மனைவி நிச்சயமாய் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்று கூறினேன். பிறகு அவர் மனம் உற்சாகப் படும் விதத்தில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர் போன பிறகும் அவரது நிலை குறித்த எங்கள் கவலை தொடர்ந்தது.
இது நடந்து சிலகாலம் வரை அந்த நண்பர் என் வீட்டுக்கு வரவில்லை. திடீரென்று ஒரு நாள் முகமெல்லாம் பூரிப்புடன் வந்து எங்களுக்கு இனிப்பு கொடுத்தார். அவரது மனைவி ஒரு பெண்மகவை நலமாக ஈன்றெடுத்திருக்கிறாள் என்று சொன்னார். அத்துடன் விடவில்லை “ உங்கள் வாய் முகூர்த்தமும் ஆசியுமே எனக்குப் பெண்ணாய் பிறந்திருக்கிறது. நாங்கள் முருகனை சேவிப்பவர்கள். நீங்கள் முருகக் கடவுள் சம்பந்தப் பட்ட ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள் அந்தப் பெயரையே வைக்கிறோம்” என்றார். இந்த எதிர்பாராத வேண்டுதலைத் தட்ட முடியவில்லை. பிறந்தது பெண்குழந்தை ஆதலால் “ கிருத்திகா அல்லது கார்த்திகா” என்று பெயர் சூட்டுங்கள் என்றேன் அவர் முகமும் அந்த நிகழ்வும் எந்த முகாந்திரமும் இல்லாமல் நினைவுக்கு வந்து எழுதிவிட்டேன்.இப்போது அவரும் அவரது மகளும் எங்கோ நலமாயிருக்க வேண்டுகிறேன்

கைராசி முகராசி
------------------

எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் சில நிகழ்வுகள். காரண காரியங்கள் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் ஏதோ abstract  எண்ணங்களின் வெளிப்பாடே. இந்த நிகழ்ச்சியும் நாங்கள் திருச்சியில் குடியிருப்பிலிருக்கும்போது நிகழ்ந்தது. ஒரு விடுமுறை நாள். ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரும் குடியிருப்பில் வசிப்பதாகக் கூறினார். அறிமுகப் படுத்திக் கொண்டவர் பின் அவர் மகன் பெயரில் திருவெறும்பூரில் ஒரு மின்சாரக் கருவிகள் சேல்ஸ் அண்ட் செர்வீஸ் கடை திறக்க இருப்பதாகக் கூறினார். முன் பின் பழக்கமில்லாத எங்களிடம் இதை எல்லாம் சொல்ல வேண்டிய காரணம் என்ன என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர் அந்த விண்ணப்பம் வைத்தார். அவர் புதிதாகத் திறக்க இருந்த கடையை என் மனைவி  குத்து விளக்கேற்றி திறக்க வேண்டும் என்றார். முதலில் அவர் விலாசம் தவறி வந்து விட்டார் என்றே நினைத்தேன். அப்போது BHEL  நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்தவர் பெயரும் என் பெயர்தான். என் இனிஷியல் ஏதோ தவறுக்கு வழி வகுத்துவிட்டதோ என்று சந்தேகம் வந்தது.எத்தனையோ பெரிய பிரமுகர்கள் இருக்கும்போது எங்களைஅழைத்தது ஏன் என்று அவரிடம் மீண்டும் கேட்டபோது அவர் என் மனைவியைக் கோயிலில் பார்த்திருப்பதாகவும் அவர் மேல் ஒரு மரியாதை எழுந்து அவரே அந்தப் புதுக் கடையை விளக்கேற்றி திறக்க வேண்டுமென்று தோன்றியதாகவும் கூறினார். பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல் என் மனைவியால் எனக்கும் மரியாதை கிடைத்தது அது நடந்து சில காலத்துக்குப் பின் இன்னொரு திறப்பு விழாவுக்கும் என் மனைவியை  (கூடவே என்னையும் ) முதல் கடை நன்றாக இயங்கியதால் அழைத்தார்

கருவேப்பிலை
------------
ஒரு முறை சாலையில் நடந்து கொண்டிருந்தபோது  எதிரே வந்த ஒருவர் புன் முறுவலுடன் என்னை நிறுத்தி நலம் விசாரித்தார். நானும் அவர் கேட்ட கேள்விகளுக்கு அனிச்சையாக பதில் சொல்லிக் கொண்டு வந்தேன். இருந்தாலும் “ இவர் யார் “ என்ற கேள்வி மனசைக் குடைந்து கொண்டே இருந்தது. ஒரு ஐந்து நிமிட விசாரிப்புக்குப் பின் அவர் போகத் தொடங்கினார். என் மன அரிப்பு , “ நீங்கள் யார் .? நினைவுக்கு வரவில்லையே “ என்றேன். அவ்வளவுதான். அவருக்குஒரேயடியாகக் கோபம் வந்து விட்டது. “ நீங்களெல்லாம் ஒரே மாதிரிதான்காரியம் ஆக வேண்டி இருந்தால் காலைப் பிடிப்பீர்கள். தேவை முடிந்து விட்டால் கருவேப்பிலை போல் தூக்கி எறிவீர்கள்” என்று பொரிந்து தள்ளிவிட்டார். அவரை சமாதானம் செய்து என் மறதிக்கு என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டு மீண்டும் அவர் யார் என்று கேட்டேன். HAL -ல்  பயிற்சியில் இருக்கும்போது வாரம் ஒரு இடம் என்று அநேக பிரிவுகளுக்குப் பயிற்சிக்கு அனுப்புவார்கள். அந்த மாதிரி ஒரு பத்து பன்னிரண்டு பிரிவுகளாவது இருந்திருக்கும். அப்படிப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு பிரிவில் ( என்ன பிரிவு என்று இப்போது நினைவுக்கு வரவில்லை)ஒரு வாரகாலம் பயிற்சியில் இருந்தபோது இவரது அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அது முடிந்து ஆண்டுகள் பல கழிந்து விட்டிருந்தன. திடீரென அவர் சாலையில் என்னைப் பார்த்துப் பேசியிருக்கிறார். இதைய்நெல்லாம் அவரிடம்விளக்கிக் கூறியும் அவர் சமாதானமாகாமலேயே சென்றுவிட்டார்.  சரி. இதை நான் இப்போது எழுதக் காரணம் என்ன.?நம்பினால் நம்புங்கள் திடீரென அவர் முகமும் அந்த நிகழ்வும் மனத்திரையில் ஓடியதுதான். பொதுவாக இளவயதில் பார்த்தவர்களின் உருவம் இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு நிழலாகத்தான் தெரியும். ஆனால் எப்போதோ நடந்த நிகழ்ச்சி இவ்வளவு தெளிவாகத் தோன்றுவதன் காரணமென்ன?
.
இன்னும் ஒரு கருவேப்பிலை
-------------------------


நாங்கள் பயிற்சி முடிந்து HAL AERO ENGINE DIVISION-ல் பணிக்கு அமர்த்தப் பட்டோம். அப்போது அது துவக்க நிலையிலேயே இருந்தது. பணி செய்யத் தேவையான மெஷின்கள் வந்த வண்ணமும் அவற்றை நிறுவுவதுமே முக்கிய பணியாக இருந்தது. அங்கிருந்த மெயிண்டெனன்ஸ் துறையின் மேற்பார்வையில் மெஷின்கள் நிறுவப் பட்டுக் வந்தன. அப்போதைய அந்தத் துறையின் மேலாளர் சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது “ இந்தத் தளவாடங்கள் நிறுவப்படும் வரையில் எங்களுக்கு மரியாதை. முன் வாசலில் வரவேற்கப் படுவோம். நிறுவி முடித்த பின்னர் எங்களை யாரும் சீண்டக்கூட மாட்டார்கள். நீங்கள் பரவாயில்லை. இங்கே வேலையில் தொடர்வீர்கள்  எங்களை கருவேப்பிலை மாதிரி ஒதுக்கி விடுவார்கள்வாழ்க்கையின் ஒரு அழகான தத்துவத்தை அவர் போதித்தார். ஒருவருக்கு நம்மால் காரியம் ஆகும் வரையே மதிப்பு முக்கியத்துவம் எல்லாம். பிறகு கருவேப்பிலை மாதிரி ஒதுக்கப் படுவோம். இதுதான் வாழ்க்கை. .
 
 

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

நினைவுகள் எண்ணண்ங்கள் ஒரு ஆய்வு

 

நினைவுகள் எண்ணங்கள் ஒரு ஆய்வு?
--------------------------------------


நினைவுகள் சுவையானவை ஏனென்றால்
அவை நடந்து முடிந்தவற்றின் எச்சங்கள்
நல்லன அசைபோடலாம்
அல்லன எழும் முன்னே போக்கலாம்
நினைவுகள் நம் கட்டுப் பாட்டில் இருப்பவை..

எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
பிணைந்திழையோட  இழையோட
கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க
பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி
மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப்
புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி
இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்
காதல்   பண்பாடி  பண்பாடி  |




   
கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க
எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க
தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க
மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம்  |


அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க
பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட
என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்
பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |


இருமன   மொன்றாய்  இணைய _அதனால்
இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க
இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்
இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது


கண்ட  கனவு  நனவாக  இன்று
காரிகையே   அழைக்கின்றேன் அன்புக்
கயிற்றால்   பிணைக்கின்றேன்;  கண்ணே
கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |     



என்றோ எழுதியது நினைவில்
ஆடுகையில் அனுபவிப்பது சுகமே

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்

சொல்லிப் போனான் பாரதி  

அவனுக்கென்ன சொல்லிவிட்டான்
நல்லவே எண்ணல் வேண்டும்
ஒரு வேளை அவனுக்குத் தெரியவில்லையோ
எண்ணங்கள் கட்டுக்குள் அடங்காதவை
எது எண்ணக் கூடாதோ அதுவே முன்னே சதிராடும்
மருந்து அருந்துகையில் குரங்கின் எண்ணம்
வரக்கூடாது என்றாலும் அதுதானே முன் நிற்கும்


எண்ணம், சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்
இன்பதுன்பம், விருப்பு வெறுப்பு, உயர்வு தாழ்வு,
எண்ணத்தின் நாடகமே;பிரபஞ்சத்தின்
ரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி;
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக்கப்பாலும் ஒன்றுமில்லை

மனவளக் கலை போதிக்கும் வேதாத்திரியார் வாக்கு


பிறந்தவன் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்
எண்ணத்தில் வாராமலேயே அது நிகழ்தல் வேண்டும்
உற்றவரின் இழப்பு நமக்கும் அதுதானே விதி
என்று எண்ண வைத்தாலும் அது எப்போதென்று
எண்ணாமல் இருக்க முடியவில்லை.
மூப்பினால் ஏற்படும் விளைவோ  என்னவோ
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும் என்பவர்
அதைக் கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்கிறார்
நமக்கது இப்போது தோதாகும் என்று தோன்றவில்லை


நினைவுகள் அதுவும் சுகமான நினைவுகள் கொண்டு
வேண்டா எண்ணங்களைத் துரத்த முயல்கிறேன்
எத்தனையோ போராட்டங்கள் பார்த்தாயிற்று நான்
வெல்லவில்லையா.?நானில்லாவிடினும் ஏதும் மாறாது
எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும்.

( பதிவிட தலைப்பு ஏதும் சிக்கவில்லை. நினைவுகளும் , எண்ணங்களும் எழுத வைத்து விட்டன.)    .