Sunday, December 4, 2011

ஒரு திகில் அனுபவம்....ஓ..பாம்பு.!

                                               
                                                         ஓ...பாம்பு.......
                                                         --------------

இவன் திருச்சி BHEL-ல்வேலைக்குச் சேர்ந்த புதிது. ஒரு சில
நாட்கள் ஓட்டலில் தங்கி விட்டு, பொன்மலைப் பட்டியில் ஒரு
நண்பன் மூலம் வீடு பார்த்தான். பழைய வீடாயிருந்தது.கதவு
களிலும் கதவு நிலைகளிலும் மரம் உளுத்துப் போனதுபோல்
இருந்தது. பக்கத்தில் ஒரு டெண்ட் கொட்டகை இருந்தது. மாலை
வேளைகளில் பாட்டு கேட்கும்.மனைவி மற்றும் பிறந்து நான்கே
மாதங்களுமான குழந்தையுடனும் குடித்தனம் தொடங்கி
விட்டான். வாழ்க்கைப் படகு மெல்ல அசைந்து ஓடிக் கொண்டு
இருந்தது. ஒரு நாள் இரவு, அழுதுவடிந்து கொண்டிருந்த விளக்கு
வெளிச்சத்தில் ஏதோ ஒன்று ஓடிக் கதவின் பின்புறம் போவதைப்
பார்த்ததாக இவன் மனைவி சொன்னாள். என்ன ஏது என்று தீர்க்க
மாகச் சொல்லத் தெரியவில்லை. வேகமாக நெளிந்து ஊர்ந்து
சென்றதுபோல் இருந்தது என்றாள்.என்னதான் அது என்று வீடு
முழுவதும் தேடிப் பார்த்தும், எதுவும் தென்படவில்லை. சமையல்
அறைக்கும் ஹாலுக்கும் நடுவில் இருந்த கதவு நிலையின்
அடியில் ஒரு ஓட்டை இருந்தது. அதன் உள்ளிருந்து அவ்வப்போது
ஏதோ வெளியில் தெரிவதும் உள்ளே போவதுமாக இருந்தது.
பாம்பின் நாக்கு என்றே எண்ணியவர்கள் மிகவும் பயந்து போய்
விட்டார்கள். என்ன ஏது என்று தெரியாமல் கைக்குழந்தையை
வைத்துக் கொண்டு, வீட்டில் பாம்பும் இருந்தால்.....இவன் கையில்
ஒரு கழியை வைத்துக் கொண்டு கதவருகில் காத்திருந்தான்.
அவ்வப்பொது நாக்குதான் வெளியில் தெரிந்ததே தவிர, அந்தப்
பாம்பு வெளியே வரவில்லை. அந்த ஓட்டையில் ஒரு நீளமான
குச்சியை வைத்துக் குடைந்தான்.நீளமான குச்சி உள்ளே போகும்
அளவுக்கு பெரிய ஓட்டையாக இருந்ததால்தானோ என்னவோ
அது இன்னும் உள்ளே சென்றிருக்க வேண்டும். ஊதுபத்தியைக்
கொளுத்தி அந்த ஓட்டைக்குள் புகை போகும்படி செய்து பார்த்தும்
அது வெளியே வரவில்லை. இரவு நேரம் போய்க் கொண்டிருந்தது..
குழந்தையை நடுவில் கிடத்தி இரண்டு பக்கமும் இவனும் இவன்
மனைவியும் படுக்க ஏற்பாடு செய்யப் பட்டது. படுப்பதற்கு முன்பு
அந்தக் கதவின் நிலையைச் சுற்றி மண்ணை அள்ளிப் போட்டுப்
பரப்பினார்கள்.கண் அயர்ந்து தூங்கி விட்டால் , அது தெரியாமல்
வெளியில் வந்து விட்டால்.,தடம் பார்த்துத் தெரிந்து
கொள்ளலாமே. அன்று இரவு சிவ ராத்திரியாகக் கழிந்தது. அது
வெளியில் போனதற்கான தடம் தெரிய வில்லை. விடிய்ற்காலை
ஒரு பக்கம் இவனும் மறுபக்கம் அவளும் அது வெளியே வரக்
காத்திருந்தனர். அவள் கையில் கழி. இவன் கையில் இரும்புச்
சட்டுவம். அது எப்படியும் வெளி வரும்; வந்தவுடன் ஒரே போடு,
என்பதாகப் ப்ளான். கண்களில் எண்ணையை விட்டுப் பார்ப்பது
போல் கவனமாகக் கண் காணித்துக் கொண்டிருந்தார்கள். அது
உள்ளேதான் இருந்தது வெளியில்போனஅடையாளம்ஏதுமில்லை
திடீரென்று அது வெளியில் ஓடியது. என்ன ஏது என்று பார்க்காமல்
அந்த இரும்புச் சட்டுவத்தால் ஒரே போடு. வெளியே வந்த அது
இரண்டாக வெட்டுப்பட்டு இருந்தது, இறந்தது. பார்த்தால் அது ஒரு
அரணை.!
--------------------------------------------------------------------------------------                                   

14 comments:

  1. இப்போதும் அலுவலகத்திலேயே வருகிறது.. கேண்டீன் அருகில் ஒரு முறை பிடிதததை போட்டோ பிடித்து மெயிலில் அனுப்பியிருந்தார்கள். WRI ல் சர்வ சாதாரணமாய் வருமாம். கூடவே மயில்களும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு பதிவு எழுதும் முறைகளில் மாற்றம் கொண்டு வருவது தெரிகிறது.
    'இவன்' என்று தன்னிலையில் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தவுடன்,
    கவியரசரின் நினைவு வந்தது.

    ReplyDelete
  3. Wow!! What an experience... :) I have heard my friends from Township say such stories. But I have never had such an experience before... the narrative was a real thriller!

    ReplyDelete
  4. உண்மையிலேயே திகில் இரவுதான் சார்.. அரணை கடித்தால் அரைமணிநேரதில் மரணம் என்று சிறுவயதில் நம்பிகொண்டிருந்தேன். ஏகனமொகனையா ஏதையாவது சொல்லி பயமுறுத்துவது நம் சமூக வழக்கம்...

    அரணை என்ற உயிரினத்தை பார்த்தே ரொம்பநாள் ஆகுது சார்

    ReplyDelete
  5. ரிஷபன் சொன்னதுபோல சர்வ சாதாரணமாக எங்கள் வீட்டை சுற்றி ஓடுகிறது. அது யாரையேனும் நக்குவதற்கென்று போகுமாம். ஆனால் அதை மறந்துவிட்டு வேறு பக்கம் போகுமாம். பல கதைகள் இதுபோல அரணை ப்ற்றி உண்டு.

    ReplyDelete
  6. ஒரு திகில் அனுபவம்....ஓ..பாம்பு.!

    "திகிலான அனுபவம்தான்..

    ReplyDelete
  7. இதேமாதிரி ஆஸ்திரேலியாவில் தோட்டத்தில் இருந்த அரணை போன்ற தோற்றத்தில் இருக்கும் ப்ளூ டங்க் என்னும் நீல நாக்கு பல்லியைப்பார்த்து பாம்பு என்று அலறி அடித்து வீட்டுக்குள் ஓடிய நினைவு தலை நீட்டுகிறது....

    ReplyDelete
  8. சிறு வயதில் வெட்டுக்கிளி,ஓணான் மற்றும் அரணை பிடித்து விளையாடியுள்ளேன். அப்போது அரணை கடித்தால் மரணம் என்று அம்மா சொல்வார்கள். ஆனால் பாவம், என் கையில் சிக்கி அவை தான் மரணமடைந்தன. உங்கள் அனுபவம் உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைத்தது ஐயா.

    ReplyDelete
  9. அரணைகள் பாம்பை நினைவூட்டினாலும் அவை மிகவும் சாதுவானவை. பாம்புகளுமே அப்படித்தான்.நமக்கு இயல்பாகவே அவற்றின் மேல் ஒரு பயம் சூழ்ந்திருப்பதற்கு அடிக்கடி அவற்றை நாம் பார்க்காதிருப்பதும் காரணம். உண்மையில் மனிதனை விட மோசமான உயிரினங்கள் எதுவுமில்லை.

    உங்கள் பதிவு திகிலுடன் சென்று பாவம் ஒரு அரணையின் மரணத்துடன் முடிந்தது.

    ReplyDelete
  10. இதுவரை படிக்காத கதை. திகுலுடன் இருந்தது. பகிர்விற்கு நன்றி ஐயா!
    நம்ம தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    ReplyDelete
  11. எதார்த்தமான திகில் அனுபவம்

    ReplyDelete
  12. @ரிஷபன் நீங்களும் BHEL-ஆ.வருகைக்கு நன்றி.
    @ஜீவி-கூர்ந்து கவனிக்கிறீர்கள் கருத்துக்கு நன்றி.
    @மாதங்கி-எப்போதோ வருகிறீர்கள். நிறைய அனுபவங்கள் பகிர்ந்து கொள்கிறேன்.இதுவும் ஒன்று. நீங்கள் படிக்க வேண்டும் என்று நான் நினைப்பவை மிக அதிகம். வருகைக்கு நன்றி.
    @குடிமகன். -முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
    @ஹரணி-நானும் கேள்விப் பட்டிருக்கிறேன் பகிர்வுக்கு நன்றி.
    @இராஜராஜெஸ்வரி.-சில பதிவுகள் சில நினைவுகளைக் கிளறும்.வருகைக்கு நன்றி.
    @உமேஷ்-இளமைக்கால நினைவுகள் சுகமானவை பகிர்வுக்கு நன்றி.
    @சுந்தர்ஜி.-என் பயம் ஒரு அரணையின் மரணத்தில் முடிந்தது அப்போது தவிர்க்க முடியாதது. அது இறந்த பிறகுதான் அரணை என்று தெரிந்தது. கருத்துக்கு நன்றி.
    @திண்டுக்கல் தனபாலன். -இது கதை அல்ல ஐயா .நிகழ்ந்தது. மேலும் கதையாகவே இருந்தாலும் இது ஒரிஜினல்.!
    @சிவா- தொடர்ந்து வாருங்கள் சிவா. நன்றி.
    @ரத்னவேல். -வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  13. கைக்குழந்தையிருக்கும் வீட்டுக்குள் பாம்பு போன்ற ஒரு ஜந்துவை வைத்துக்கொண்டு அது எப்போது வெளியில் வருமோ என்ன செய்யுமோ என்ற பதற்றத்துடன் ஒரு இரவைக் கழிப்பதென்பது பெரும் சவால்தான். அன்றைய இரவின் திகிலுணர்வை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்.

    என்னுடைய மொழிபெயர்ப்பு புத்தகத்தில் முதல் கதை கிட்டத்தட்ட இப்படிப்பட்டதொரு அனுபவத்தைக் கொண்டுதான் எழுதப்பட்டிருக்கிறது.

    ReplyDelete