Monday, February 27, 2023

பரிணாமத்தில் நான்

        
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே






இப்படி இருந்த நான் 











                      ஒரு இன்ட்ராஸ்பெக்‌ஷன் என்னுள் எழுந்தது நான் வாழ்ந்த வாழ்வு என்ன எதை நோக்கி என் சிந்தனைகள் எழுகின்றன இதுவே பதிவாகிறது  என் வாழ்வு பற்றி நிறையவே பகிர்ந்து விட்டேன்  அவை என்  அனுபவங்களைச்
சார்ந்தது. அந்த அனுபவங்கள் என்னைச் செதுக்கி இருக்கின்றன, இன்னொரு முறை இதே வாழ்வு வாய்க்குமானால் அதையே அப்படியே ஏற்றுக் கொள்வேன் அந்த அளவு நான் என்னுடைய குணங்களிலும்  கொள்கைகளிலும் பிடிப்பாய் இருந்திருக்கிறேன் ஆனால் என்னைப் பற்றி நான்  நினைக்கும் போது பிறரும் என்ன்  நினைப்பார்கள் என்றும் தோன்றுகிறது
 அப்போது
    வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
        
விட்டாய்,வென்றுவிட்டாய்வாழ்க்கை நிறைவேயன்றோ
        
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.
என்று தோன்றுகிறது மேலும்

 ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?

கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?

பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ

யாரும் சிறியர்நானே பெரியோன்,எதிலும் சிறந்தது
என் செயலே,பாரினில் யாரும் எனக்கீடில்லை எனப்
பயனிலா சொற்கள் பகர்ந்தேனா.?

காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..

எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நீயோர்  ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?
இப்படியாகி..........


என்னும் எண்ணங்களே மேல் நோக்கி வரும்   வாழ்ந்து முடித்தாய்விட்டது எனக்கு யயாதிபோல் ஆசை வருவதில்லை என்னேரமும்  என்  முடிவை நோக்கித் தயாராய் இருக்கிறேன்  என்ன, யாருக்கும்  எந்த தொந்தரவும்  தராமல் போய்ச் சேரவேண்டும்முன்பொரு முறை வீழ்ந்த போது காலா என்  அருகில் வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்  என் காலால் என்று எழுதி இருந்தேன் எனக்குத் தெரியும் சண்டைகளில் நான் வெல்லலாம் இறுதிப் போரில் அவனே வெல்வான் அவ்வப்போது அவன்  என்  தோள் மேலேறி காதில் உன் நாட்களை எண்ணிக் கொள் என்பது போல் சொல்வது கேட்கும்

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி

என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் இனி எனக்குள்ள ஆசையெல்லாம் இதுதான்

  
          என்னுயிர்ப் பறவையே,
          
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
          
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
          
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
          
அழகாக வெளியேறிவிடுயாரும் அறியாமல்.
          
மூடிய கண்கள் விழித்து விட்டால்
          
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே.

 பதிவில் யாரோ அனாயாச மரணம்நேர அதிஷ்டம் செய்து இருக்க வேண்டும் என்பது போல் எழுதி இருந்தார்கள் நான் அம்மாதிரி அதிர்ஷ்டம் செய்திருக்கிறேனா எனக்கு எப்படி தெரியும்  நான் இறந்து விட்டால் நான் நானாக இல்லாமல் நினைவாகவேதானே இருப்பேன் இது இப்போதைய சிந்தனை மட்டுமல்ல பலவும்  என்  சிந்தனைகளின்  தொகுப்பே

இப்போது இப்படியாகி விட்டேன் ....!

Monday, February 20, 2023

வாய் முஹுர்தம் கைராசி முகராசி

 



                     மீண்டும் நினைவுகள் ... 

வாய் முஹூர்த்தம்
-----------------------------


நான் சும்மா இருக்கும்போது- நான் எப்போது சும்மா இருக்கிறேன்.? எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது சும்மா இருப்பதாகுமா.?இப்போது நான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்?சும்மா இருக்கும் போது ( மீண்டும் சும்மா) எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சிலரது முகங்கள் கண்முன்னே ( மனக் கண்ணில் ) காட்சி அளிக்கின்றன. அப்போது அவரைப் பற்றிய சில நினைவுகள் முட்டி மோதுகின்றன. பொதுவாகவே நான் யாரையும் குறிப்பிட்டு எழுதுவதில்லை. என்றாலும் அம்மாதிரி பாத்திரங்கள் பல சமயங்களில் என் எழுத்துக்களில் புகுந்து விடுவது உண்டு. நானும் அந்த மாதிரி எழுதும்போது யார் மனதும் புண்படாதபடி எழுதுவதில் கவனமாய் இருப்பேன். இப்போது ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன். அந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தார். எனக்கு ஒரு பழக்கம். நான் எதையும் துருவித் துருவி கேட்பதில்லை. . இந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தபோது எதையோ என்னிடம் சொல்லத் துடிக்கிறார் என்று தெரிந்தது. முகம் மிகவும் வாடி இருந்தது. பொதுவாக அனைவரும் நலமா என்று கேட்டேன். அனைவர் என்ன இருப்பது நானும் என் மனைவியும் மட்டும்தான்” என்று சலித்துக் கொண்டார். குழந்தைகள் பற்றிக் கேட்டேன். ஐந்து முறை கர்ப்பம் தரித்தும் அனைத்துமே குறைப் பிரசவமாகி விட்டது என்று கூறி கண்கலங்கினார்.இந்த முறை ஆறாவது கர்ப்பம் ஆறு மாதமாகிறது கவலையாய் இருக்கிறது என்றார். நான் அவரைத் தேற்றும் விதத்தில் “ இந்த முறை கவலைப் படாமல் இரு. உன் மனைவி நிச்சயமாய் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்று கூறினேன். பிறகு அவர் மனம் உற்சாகப் படும் விதத்தில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர் போன பிறகும் அவரது நிலை குறித்த எங்கள் கவலை தொடர்ந்தது.
இது நடந்து சிலகாலம் வரை அந்த நண்பர் என் வீட்டுக்கு வரவில்லை. திடீரென்று ஒரு நாள் முகமெல்லாம் பூரிப்புடன் வந்து எங்களுக்கு இனிப்பு கொடுத்தார். அவரது மனைவி ஒரு பெண்மகவை நலமாக ஈன்றெடுத்திருக்கிறாள் என்று சொன்னார். அத்துடன் விடவில்லை “ உங்கள் வாய் முகூர்த்தமும் ஆசியுமே எனக்குப் பெண்ணாய் பிறந்திருக்கிறது. நாங்கள் முருகனை சேவிப்பவர்கள். நீங்கள் முருகக் கடவுள் சம்பந்தப் பட்ட ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள் அந்தப் பெயரையே வைக்கிறோம்” என்றார். இந்த எதிர்பாராத வேண்டுதலைத் தட்ட முடியவில்லை. பிறந்தது பெண்குழந்தை ஆதலால் “ கிருத்திகா அல்லது கார்த்திகா” என்று பெயர் சூட்டுங்கள் என்றேன் அவர் முகமும் அந்த நிகழ்வும் எந்த முகாந்திரமும் இல்லாமல் நினைவுக்கு வந்து எழுதிவிட்டேன்.இப்போது அவரும் அவரது மகளும் எங்கோ நலமாயிருக்க வேண்டுகிறேன்

கைராசி முகராசி
------------------

எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் சில நிகழ்வுகள். காரண காரியங்கள் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் ஏதோ abstract  எண்ணங்களின் வெளிப்பாடே. இந்த நிகழ்ச்சியும் நாங்கள் திருச்சியில் குடியிருப்பிலிருக்கும்போது நிகழ்ந்தது. ஒரு விடுமுறை நாள். ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரும் குடியிருப்பில் வசிப்பதாகக் கூறினார். அறிமுகப் படுத்திக் கொண்டவர் பின் அவர் மகன் பெயரில் திருவெறும்பூரில் ஒரு மின்சாரக் கருவிகள் சேல்ஸ் அண்ட் செர்வீஸ் கடை திறக்க இருப்பதாகக் கூறினார். முன் பின் பழக்கமில்லாத எங்களிடம் இதை எல்லாம் சொல்ல வேண்டிய காரணம் என்ன என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர் அந்த விண்ணப்பம் வைத்தார். அவர் புதிதாகத் திறக்க இருந்த கடையை என் மனைவி  குத்து விளக்கேற்றி திறக்க வேண்டும் என்றார். முதலில் அவர் விலாசம் தவறி வந்து விட்டார் என்றே நினைத்தேன். அப்போது BHEL  நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்தவர் பெயரும் என் பெயர்தான். என் இனிஷியல் ஏதோ தவறுக்கு வழி வகுத்துவிட்டதோ என்று சந்தேகம் வந்தது.எத்தனையோ பெரிய பிரமுகர்கள் இருக்கும்போது எங்களைஅழைத்தது ஏன் என்று அவரிடம் மீண்டும் கேட்டபோது அவர் என் மனைவியைக் கோயிலில் பார்த்திருப்பதாகவும் அவர் மேல் ஒரு மரியாதை எழுந்து அவரே அந்தப் புதுக் கடையை விளக்கேற்றி திறக்க வேண்டுமென்று தோன்றியதாகவும் கூறினார். பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல் என் மனைவியால் எனக்கும் மரியாதை கிடைத்தது அது நடந்து சில காலத்துக்குப் பின் இன்னொரு திறப்பு விழாவுக்கும் என் மனைவியை  (கூடவே என்னையும் ) முதல் கடை நன்றாக இயங்கியதால் அழைத்தார்

கருவேப்பிலை
------------
ஒரு முறை சாலையில் நடந்து கொண்டிருந்தபோது  எதிரே வந்த ஒருவர் புன் முறுவலுடன் என்னை நிறுத்தி நலம் விசாரித்தார். நானும் அவர் கேட்ட கேள்விகளுக்கு அனிச்சையாக பதில் சொல்லிக் கொண்டு வந்தேன். இருந்தாலும் “ இவர் யார் “ என்ற கேள்வி மனசைக் குடைந்து கொண்டே இருந்தது. ஒரு ஐந்து நிமிட விசாரிப்புக்குப் பின் அவர் போகத் தொடங்கினார். என் மன அரிப்பு , “ நீங்கள் யார் .? நினைவுக்கு வரவில்லையே “ என்றேன். அவ்வளவுதான். அவருக்குஒரேயடியாகக் கோபம் வந்து விட்டது. “ நீங்களெல்லாம் ஒரே மாதிரிதான்காரியம் ஆக வேண்டி இருந்தால் காலைப் பிடிப்பீர்கள். தேவை முடிந்து விட்டால் கருவேப்பிலை போல் தூக்கி எறிவீர்கள்” என்று பொரிந்து தள்ளிவிட்டார். அவரை சமாதானம் செய்து என் மறதிக்கு என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டு மீண்டும் அவர் யார் என்று கேட்டேன். HAL -ல்  பயிற்சியில் இருக்கும்போது வாரம் ஒரு இடம் என்று அநேக பிரிவுகளுக்குப் பயிற்சிக்கு அனுப்புவார்கள். அந்த மாதிரி ஒரு பத்து பன்னிரண்டு பிரிவுகளாவது இருந்திருக்கும். அப்படிப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு பிரிவில் ( என்ன பிரிவு என்று இப்போது நினைவுக்கு வரவில்லை)ஒரு வாரகாலம் பயிற்சியில் இருந்தபோது இவரது அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அது முடிந்து ஆண்டுகள் பல கழிந்து விட்டிருந்தன. திடீரென அவர் சாலையில் என்னைப் பார்த்துப் பேசியிருக்கிறார். இதைய்நெல்லாம் அவரிடம்விளக்கிக் கூறியும் அவர் சமாதானமாகாமலேயே சென்றுவிட்டார்.  சரி. இதை நான் இப்போது எழுதக் காரணம் என்ன.?நம்பினால் நம்புங்கள் திடீரென அவர் முகமும் அந்த நிகழ்வும் மனத்திரையில் ஓடியதுதான். பொதுவாக இளவயதில் பார்த்தவர்களின் உருவம் இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு நிழலாகத்தான் தெரியும். ஆனால் எப்போதோ நடந்த நிகழ்ச்சி இவ்வளவு தெளிவாகத் தோன்றுவதன் காரணமென்ன?
.
இன்னும் ஒரு கருவேப்பிலை
-------------------------


நாங்கள் பயிற்சி முடிந்து HAL AERO ENGINE DIVISION-ல் பணிக்கு அமர்த்தப் பட்டோம். அப்போது அது துவக்க நிலையிலேயே இருந்தது. பணி செய்யத் தேவையான மெஷின்கள் வந்த வண்ணமும் அவற்றை நிறுவுவதுமே முக்கிய பணியாக இருந்தது. அங்கிருந்த மெயிண்டெனன்ஸ் துறையின் மேற்பார்வையில் மெஷின்கள் நிறுவப் பட்டுக் வந்தன. அப்போதைய அந்தத் துறையின் மேலாளர் சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது “ இந்தத் தளவாடங்கள் நிறுவப்படும் வரையில் எங்களுக்கு மரியாதை. முன் வாசலில் வரவேற்கப் படுவோம். நிறுவி முடித்த பின்னர் எங்களை யாரும் சீண்டக்கூட மாட்டார்கள். நீங்கள் பரவாயில்லை. இங்கே வேலையில் தொடர்வீர்கள்  எங்களை கருவேப்பிலை மாதிரி ஒதுக்கி விடுவார்கள்வாழ்க்கையின் ஒரு அழகான தத்துவத்தை அவர் போதித்தார். ஒருவருக்கு நம்மால் காரியம் ஆகும் வரையே மதிப்பு முக்கியத்துவம் எல்லாம். பிறகு கருவேப்பிலை மாதிரி ஒதுக்கப் படுவோம். இதுதான் வாழ்க்கை. .
 
 

Tuesday, February 14, 2023

நினைவுகள் எண்ணண்ங்கள் ஒரு ஆய்வு

 

நினைவுகள் எண்ணங்கள் ஒரு ஆய்வு?
--------------------------------------


நினைவுகள் சுவையானவை ஏனென்றால்
அவை நடந்து முடிந்தவற்றின் எச்சங்கள்
நல்லன அசைபோடலாம்
அல்லன எழும் முன்னே போக்கலாம்
நினைவுகள் நம் கட்டுப் பாட்டில் இருப்பவை..

எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
பிணைந்திழையோட  இழையோட
கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க
பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி
மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப்
புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி
இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்
காதல்   பண்பாடி  பண்பாடி  |




   
கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க
எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க
தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க
மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம்  |


அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க
பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட
என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்
பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |


இருமன   மொன்றாய்  இணைய _அதனால்
இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க
இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்
இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது


கண்ட  கனவு  நனவாக  இன்று
காரிகையே   அழைக்கின்றேன் அன்புக்
கயிற்றால்   பிணைக்கின்றேன்;  கண்ணே
கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |     



என்றோ எழுதியது நினைவில்
ஆடுகையில் அனுபவிப்பது சுகமே

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்

சொல்லிப் போனான் பாரதி  

அவனுக்கென்ன சொல்லிவிட்டான்
நல்லவே எண்ணல் வேண்டும்
ஒரு வேளை அவனுக்குத் தெரியவில்லையோ
எண்ணங்கள் கட்டுக்குள் அடங்காதவை
எது எண்ணக் கூடாதோ அதுவே முன்னே சதிராடும்
மருந்து அருந்துகையில் குரங்கின் எண்ணம்
வரக்கூடாது என்றாலும் அதுதானே முன் நிற்கும்


எண்ணம், சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்
இன்பதுன்பம், விருப்பு வெறுப்பு, உயர்வு தாழ்வு,
எண்ணத்தின் நாடகமே;பிரபஞ்சத்தின்
ரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி;
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக்கப்பாலும் ஒன்றுமில்லை

மனவளக் கலை போதிக்கும் வேதாத்திரியார் வாக்கு


பிறந்தவன் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்
எண்ணத்தில் வாராமலேயே அது நிகழ்தல் வேண்டும்
உற்றவரின் இழப்பு நமக்கும் அதுதானே விதி
என்று எண்ண வைத்தாலும் அது எப்போதென்று
எண்ணாமல் இருக்க முடியவில்லை.
மூப்பினால் ஏற்படும் விளைவோ  என்னவோ
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும் என்பவர்
அதைக் கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்கிறார்
நமக்கது இப்போது தோதாகும் என்று தோன்றவில்லை


நினைவுகள் அதுவும் சுகமான நினைவுகள் கொண்டு
வேண்டா எண்ணங்களைத் துரத்த முயல்கிறேன்
எத்தனையோ போராட்டங்கள் பார்த்தாயிற்று நான்
வெல்லவில்லையா.?நானில்லாவிடினும் ஏதும் மாறாது
எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும்.

( பதிவிட தலைப்பு ஏதும் சிக்கவில்லை. நினைவுகளும் , எண்ணங்களும் எழுத வைத்து விட்டன.)    .     
       

Monday, February 6, 2023

சாந்தனுவின் சந்ததிகள்

 

சாந்தனுவின் சந்ததிகள்..


                              சாந்தனுவின் சந்ததிகள்.....
                             ---------------------------------



திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொள்வது அவரவர் வம்சம் தழைக்க என்பதுதான் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படும் செய்தி. நமது சமூகத்தில் வம்சம் தழைப்பது என்று கூறும்போது தகப்பனின் வம்சாவளி என்றுதான் பொருள்படுகிறது. இன்னாரின் மகன் என்று சொல்வதும் தந்தையைக் குறித்தே இருக்கும். நான் இங்கு கூறுவது சட்டப்படி அனுமதிக்கப் பட்ட குடும்ப வாழ்க்கை முறையையும் அதன் மூலம் வளரும் தலை முறையையும் குறிப்பிடுவதாகும். எக்செப்ஷனல் கேஸ்களைக் காட்டி என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது.
தலைமுறை இடைவெளி என்பதே தலைமுறைகளைப் பற்றிய செய்திகள் தெரியாமல் இருப்பதைக் குறிக்கிறதோ.?நான் ,என் தந்தை ,என் தந்தையின் தந்தை- இதை மீறிய தலைமுறை பற்றி இக்காலத்தில் தெரிந்து கொள்ள முடிகிறதா.? இதையெல்லாம் பற்றி சிந்தனை எழுவது நியாயம்தானே. சந்ததி தழைக்க வேண்டி மறுமணம் செய்யும் பலரையும் நாம் காணலாம். 

நம்முடைய மிகப் பெரிய இதிகாசமான மஹாபாரதத்தின்/ல் வம்சாவளி குறித்துப் படிக்கும்போது என்னவெல்லாமோ நினைக்கத் தோன்றுகிறது. சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.அவற்றைக்குறித்தஅபிப்பிராயங்களை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்..மஹாபாரதக்கதையை அதன் ஆதி வடிவில் நான் படித்ததில்லை. பலரும் படித்திருக்க வாய்ப்புமில்லை
மஹாபாரதம் வியாசமுனிவர் கூற விநாயகரால் எழுதப் பட்டது என்று நம்பப் படுகிறது. வியாசர் பராசர மஹரிஷிக்கும் சத்தியவதி எனும் செம்படவப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று அறியப்படுகிறார். இந்த வியாசமுனிவர் மஹாபாரதக் கதையின் ஒரு பாத்திரமாகவும் அறியப் படுகிறார். பராசர முனிவரிடம் கலந்ததில் இருந்து சத்தியவதியைச் சுற்றி ஒரு நறுமணம் திகழ்ந்திருந்ததாம். அந்த நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு சாந்தனு மஹாராஜா அவள் மேல் காதல் வசப்பட்டாராம். இந்த சாந்தனு மஹாராஜா ஏற்கனவே மணமானவர்.. கங்கையின் மேல் காதல் கொண்டு அவளை மணமுடிக்க விரும்பியபோது கங்கை ஒரு நிபந்தனை இட்டாள். அவளது எந்த செய்கையையும் சாந்தனு ராஜா கண்டு கொள்ளக் கூடாது என்பதே அது. சாந்தனு கங்கை திருமணத்தின் விளைவாய் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றையும் கங்காதேவி நீரில் எறிந்து விட . ஏதும் பேசாமல் இருந்த ராஜா எட்டாவது குழந்தையை நீரில் இடப் போகும்போது தடுத்துக் காரணம் கேட்கிறார். நிபந்தனையை மீறி கேள்வி கேட்ட சாந்தனு ராஜாவைவிட்டுப் பிரிந்து போகிறார் கங்காதேவி அந்த எட்டாவது குழந்தையை அரச குமாரனுக்கு வேண்டிய எல்லாத்தகுதிகளையும் கற்பித்து அவனை சாந்தனு ராஜாவிடம் ஒப்படைக்கிறார். அவர்தான் மஹாபாரதத்தில் பிதாமகர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர்.

என்ன செய்வது.?சில விஷ்யங்களைப் பற்றிக் கூறும்போது, கதையையும் கொஞ்சம் கூறத்தான் வேண்டியுள்ளது. படிப்பவர்களுக்கும் மஹாபாரதக் கதையின் ஆரம்ப பகுதிகளை ரிவைஸ் செய்ததுபோலும் இருக்கும்.

வேட்டையாடச் சென்ற சாந்தனு ராஜா சத்தியவதியை மணக்க வேண்டுமென்றால் அவளது பிள்ளைகள்தான் அரசுக்கு வாரிசாக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனையாக சத்தியவதியின் தந்தை விதித்தார். அதை ஏற்றுக் கொண்டால் தேவவிரதன் என்று பெயர் கொண்ட பீஷ்மர் அரசுரிமையைத் துறக்க வேண்டும். அவர் துறந்தாலும் அவருக்குப் பிறக்கும் வாரிசுகள் உரிமை கோராமல் இருக்க வேண்டி தேவ விரதன் பிரம்ம சாரியாய் காலங்கழிக்க சபதம் பூண்டார்.

சத்தியவதிக்கும் சாந்தனு ராஜாவுக்கும் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்று இரண்டு மகன்கள் பிறந்துஅவர்களுக்கு மணமுடிக்க பீஷ்மர் அம்பிகை அம்பாலிகை எனும் ராஜகுமாரிகளை சுயம்வரத்திலிருந்து அபகரித்து வந்து மணமுடித்தது ஒரு பெரிய கதை. அதை விட்டு விட்டு நம் கதைக்கு வருவோம். சித்திராங்கதன் அல்பாயுசில் உயிர் துறக்க விசித்திர வீரியன் மூலமும் மக்கள் இல்லாமலிருக்க சந்ததி வேண்டி ( யாருடைய சந்ததி.?), தாயார் சத்தியவதி, தன் முதல் கணவர் பராசர மஹரிஷி மூலம் பிறந்த வியாசரிடம் அம்பிகை அம்பாலிகைக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டுகிறார். வியாச மஹரிஷியும் தன் சகோதரர் மனைவிகளைப் புணர்ந்து மக்கட் செல்வம் தருகிறார். அம்பிகையுடன் சேர்ந்தபோது ரிஷியின் கோலத்தைக் கண்டு பயந்து கலவியின் போது கண்களை மூடிக் கொண்டதால் அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாகப் பிறந்ததாம், அவர்தான் திருத ராஷ்டிரர் என்னும் பெயர் பெற்றவர் அம்பாலிகையோ பயந்து முகமெல்லாம் வெளிறிப் போயிற்றாம். அந்தக் கலவியின் விளைவாய்ப் பிறந்தவர் பாண்டு என்று அழைக்கப் பட்டார். இரு பேரப் புத்திரரும் குறையுடன் பிறக்க மறுபடியும் முயல வியாசரை சத்தியவதி வேண்ட அம்பிகை அம்பாலிகை இருவரும்  விரும்பாமல் அவர்களது பணிப் பெண்ணை வியாசரிடம் அனுப்பி விடுகின்றனர். அந்த சேர்க்கை மூலம் பிறந்தவர் விதுரர்.

.திருதராஷ்டிரர், பாண்டு இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.?

இது மட்டுமல்ல. மூத்தவன் பிறவிக் குருடன் என்பதால் இளையவன் பாண்டு வுக்கு முடி சூட்டுகிறார்கள். பாண்டுவுக்கு ஒரு சாபம். மனைவியுடன் கலந்தால் மரணம். அவரும் வெறுத்துப் போய் தன் இரண்டு மனைவிகளுடன் காட்டுக்குப் போய் விடுகிறார். அவரது சந்ததி தழைக்க என்ன செய்வது.? குந்தி தேவிக்குக் கிடைத்த வரம் அதற்கு வழி வகுக்கிறது. மந்திரம் உச்சாடனம் செய்ததும் யமதர்மன், வாயு, இந்திரன் மூலம் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறாள் குந்திதேவி. தான் பெற்ற பேறு பாண்டுவின் இளைய மனைவிக்கும் அருளி, அவளும் தேவர்கள் மூலம் இரண்டு புத்திரர்களை பெற்றுக்கொள்கிறாள். இவர்களே பஞ்ச பாண்டவர்கள். இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.?

மஹாபாரதக் கதையில் தர்மம் உபதேசிக்கப் படுவதாகக் கூறப் படுகிறது. குருடன் என்னும் காரணத்தால் அரசைத் துறக்க வேண்டி வந்த திருதராஷ்டிரன் தம்பி பாண்டு இறந்தபோது தன் மக்கள் அரசுரிமை பெற விரும்பியது தவறா? துரியோதனனைவிட  யுதிஷ்டிரர் மூத்தவர் என்பதால் அவருக்கு அரசுரிமை என்பது சரியா.? இந்த மாதிரியான பின்னணியில் பங்காளிச் சண்டையை முன் வைத்து எழுதப் பட்ட மஹாபாரதம் , தன்னுள்ளே நூற்றுக் கணக்கான கிளைக்கதைகளை அடக்கி மிகப் பெரும் இதிகாசமாய் திகழ்கிறது.

சுவையான கதை என்பதை ஒப்புக்கொள்ளும்போது, பல நெருடலான விஷயங்கள் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

ஒருவரை சுய அறிமுகம் செய்து கொள்ளும்போது அபிவாதயே சொல்லச் சொல்கிறார்கள் ( ஒரு சமூகத்தில் ) அப்படி அறிமுகம் செய்து கொள்ளும்போது  தன்னுடைய குலம் கோத்திரம் போன்றவற்றைக் கூறி இன்னாரின் பேரன் இன்னாரின் புதல்வன்  இன்ன பெயர் கொண்டவன் என்று கூறி வணங்க வேண்டுமாம். அதைப்பற்றிப் படிக்கும்போது சாந்தனுவின் சந்ததிகள் சொல்வது எப்படி இருக்கும் , சரியாக இருக்குமா என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு.
மேலும் இந்தப் பதிவில் நான் குறிப்பிடும் சம்பவங்கள் படித்துப் பெற்றதும் கேட்டுப் பெற்றதுமாகும். சரியெது தவறெது என்று கூறமுடியாது. மூலக் கதையை மூல வடிவில் படித்துணர்ந்தவர் உள்ளாரோ?
----