Tuesday, March 31, 2015

சிந்திக்கவும் நகைக்கவும்


                      சிந்திக்கவும் நகைக்கவும்
                      -------------------------------------


சிந்திக்க ஒரு சிறு கதை ( நான் சற்று வித்தியாசமாகச் சிந்திக்கிறேன் அல்லவா?)
-----------------------
..பாட்டி இவ்வளவு அருகில் பேப்பரை வைத்துக் கொண்டு படித்தால் கண்ணுக்குக் கேடுஎன்று கூறி பாட்டியின் கையிலிருந்த “ தினசரிப் “ பேப்பரை சற்றே இழுத்தேன்.. பேப்பரை தரையில் வீசி எறிந்தாள் பாட்டி

 என்ன பாட்டி, படித்தது பிடிக்கலையா, இழுத்தது பிடிக்கலையா “ என்று கேட்டேன்.

படித்ததுதான் “ என்ற பாட்டி, “ பாலா....!, குழந்தைகள் முட்டை சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கும் , உடல் வலுவுக்கும் நல்லதுதானே

நடத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்கிறது.. பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் எல்லா தரப்புக் குழந்தைகளுக்கும் சமமான உணவு, என்பதும் நல்லதுதானே.என்றேன்.

சீருடையில் மாத்திரம் சமமென்பதைவிட, உணவிலும் சமம் என்றால் மாணவர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்லவா. ஏழைக் குழந்தைகளுக்கு வீட்டில் முட்டை சாப்பிடுவது முடியாத காரியமாகும். “

“ பாட்டி, பள்ளியில் முட்டை போடாததன் காரணம் மத சம்பந்தப் பட்டது ஆனதால்தான் இருக்கும்..அதுதான் பள்ளிகளில் முட்டை கொடுக்காததன் காரணம் என்கிறார்கள். “

“ மதமாவது கிதமாவது.....! அதெல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். நாளொரு முட்டை உடலுக்கு நல்லது என்று இந்த முட்டைத் தலையர்களுக்குத் தெரியாதா. மக்களுக்கு நல்லது செய்வதில் இந்த மாதிரி எண்ணங்கள் கூடாது. இதே ரீதியில் போனால் வெள்ளிக்கிழமைகளில் காலை 11- மணிக்கு புறப்படும் ரயில்களை “ராகு காலம் “ என்று சொல்லி தாமதப் படுத்துவார்கள் என்று போட்டாளே பாட்டி..இதையெல்லாம் தடுக்கும் ஜனங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் புஷ்டியான முந்திரி, பாதாம் , பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களை கோயில்களில் பிரசாதமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் குறைந்தா போவார்கள்.பாட்டி சரியான ஃபார்மில் இருந்தாள்.

பாட்டி உங்கள் சளி எப்படியிருக்கிறது..? இப்போது தேவலாமா.?

“ சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்று இரண்டு மூன்று வாரங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டேன். என்னவெல்லாமோ கஷாயங்கள் மருந்துகள்னு போதும் போதும் என்றாகி விட்டது. நீ கொடுத்த மருந்து சாப்பிட்டவுடன் அநேகமாக சரியாகி விட்டது.

 “எனக்கும் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது பாட்டி. இருந்தாலும் பார்க்கலாம் என்றுதான் அந்த வெளி நாட்டுக் கஷாயம் கொடுத்தேன். “

“ இரண்டே நாளில் பலன் தந்தது உன் கஷாயம். சரி ....அது என்ன மருந்தப்பா...

“ வெளிநாட்டுக் கஷாயம் பாட்டி. இரண்டு ஸ்பூன் ப்ராண்டி....

அடப் பாவி மனுஷா.... ! எனக்கு ப்ராண்டியா கொடுத்தே. ?

“ பாட்டி என்னென்னவோ மருந்தெல்லாம் சாப்பிட்டும் குணமாகாத உன் சளியும் இருமலும் இரண்டு ஸ்பூன் ப்ராண்டியில் குணமாயிற்று. .சின்னச் சின்ன விஷயங்களில் பிரச்சனை பண்ணக்கூடாது பாட்டி. குழந்தைகளுக்கு நாளொரு முட்டை தராதவர்கள் முட்டைத் தலையர்கள் என்றாயே. நல்லதுஎன்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத முட்டைத் தலை இல்லையே  உனக்கு...!

(  “நான் பால் குடிப்பதில்லை. அது நீர் மாமிசம். நான் ஒரு வெஜிடேரியன். ஆகவே ஒரு பெக் மது அருந்துவேன் “ என்று கன்னட எழுத்தாளர் டி.பி. கைலாசம் அவர்கள் கூறுவாராம். . அதை ஒட்டி எழுந்த கதை நீங்கள் மேலே படித்தது.)


இனி நகைக்கச் சில துணுக்குகள்
--------------------------------
ஆசிரியர்:-ராமு, இன்றைக்கு நீ ஏன்  லேட்.?
ராமு:-   நான் வருவதற்குள் மணி அடித்து விட்டார்கள், டீச்சர்.

ஆசிரியர்:- ராமு, பெருக்கல் கண்க்குகளை ஏன் தரையில் உட்கார்ந்து செய்கிறாய்.?
ராமு:-  பெருக்கல் கணக்குகள் செய்யும்போது டேபிள்ஸ் உபயோகிக்கக் கூடாது என்று சொன்னீர்களே டீச்சர்.

ஆசிரியர்:- ராமு, CROCODILE  எப்படி ஸ்பெல் செய்வாய்.?
ராமு:- KROKODILE
ஆசிரியர்:- தவறு.
ராமு:- இருக்கலாம். நான் எப்படி ஸ்பெல் செய்வேன் என்றுதானே கேட்டீர்கள்.

ஆசிரியர்:- ராமு, தண்ணீரின் ரசாயனக் குறியீடு கூறு.
ராமூ:- HIJKLMNO
ஆசிரியர்:- என்ன உளறுகிறாய்.
ராமு:- நேற்று நீங்கள் தானே கூறினீர்கள், H to O என்று.

ஆசிரியர் :- ராமு, இன்றுள்ளது பத்து வருடங்களுக்கு முன் இல்லாதது ஒன்று கூறு.
ராமு :- நான்.!

ஆசிரியர் :- ராமு, நாய் பற்றி நீ எழுதிய கட்டுரை சோமு எழுதியது போலவே இருக்கிறது. காப்பி அடித்தாயா.?
ராமு :- இல்லை டீச்சர். நாங்கள் இருவரும் ஒரே நாயைப் பற்றிதான் எழுதினோம்.

ஆசிரியர்.:- ஜார்ஜ் வாஷிங்டன் அவருடைய தந்தையின் செர்ரி மரத்தை தன் கோடாலியால் வெட்டினார். அதை அவரது தந்தையிடம் ஒப்புக்கொள்ளவும் செய்தார். இருந்தும் அவர் தந்தை அவருக்கு தண்டனை தரவில்லை. ஏன்.?
ராமு. :- ஜார்ஜ் வாஷிங்டன் கையில் கோடாரி இருந்தது.

ஆசிரியர்.:- ராமு, ஒருவர் எந்த ஆர்வமும் காட்டாது இருக்கும்போதும் பேசிக்கொண்டே  இருப்பவரை என்ன என்று சொல்வது.?
ராமு.:- ஆசிரியர். !
மேலே படித்தவை மீள் பதிவுகளே. இருந்தாலும் எனக்கு பதிவர்களின் ஞாபக சக்தியில் நம்பிக்கை உண்டு. .....! நம் எல்லோருக்கும் மறதி ஒரு
வரம்தானே.

Saturday, March 28, 2015

என்னையும் ஒரு பொருட்டாக.....


                      என்னையும் ஒரு பொருட்டாக,,,,
                      ----------------------------------------------                              


இந்த மாதம் 13-ஆம் தேதி  வெள்ளிகிழமை காலை உணவு அருந்திக் கொண்டிருந்தேன். என் வீட்டு தொலை பேசி அழைத்தது. என் மனைவி அதை எடுத்தாள். நாங்கள் அன்று மதியம் ஃப்ரீயாக இருக்கிறோமா, மதியம் பள்ளிக்கூடத்துக்கு வரமுடியுமா என்று கேட்டிருக்கிறார் நிசர்கா வித்தியாநிகேதன் ப்ரின்சிபால். ஏன் எதற்கு என்று என் மனைவி கேட்க, வண்டி அனுப்புகிறோம் வாருங்கள் என்றார் அவர். இந்தப் பள்ளிக்கூடம் பற்றி ஃபெப்ருவரி மாதம் “கற்ற பாடமும் இன்ன பிறவும் “ என்னும் பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . எனக்கு பள்ளிச் சிறார்களைக் காண்பதில் மகிழ்ச்சி என்று அவருக்குத் தெரியும். மதிய உணவு பள்ளியில் ஏற்பாடு செய்கிறோம் என்றார். நாங்கள் மதிய உணவை முடித்துவிட்டே வருகிறோம் என்றாள் என் மனைவி. எதற்கு நம்மை கூப்பிடுகிறார்கள் என்று தெரியாமலேயே நாங்கள் தயாராகி விட்டோம். மதியம் சுமார் ஒன்றரை மணி அளவில் கார் வந்தது.எங்களைக்கூட்டிப்போக. பள்ளிக்கு நாங்கள் சென்றவுடன் வாசலிலேயே ப்ரின்சிபால் எங்களை எதிர் கொண்டு அவரது ஆஃபீசுக்குக் கூட்டிச் சென்றார். எங்களை வரவழைத்ததன் காரணம் கேட்டோம். அதற்கு அவர் பிள்ளைகள் முழுப்பரீட்சைக்கு தயார் ஆகும் நிலையில் . காலையில் சரஸ்வதி பூஜை நடந்ததென்றும். மதியம் அதுவரை தேர்வுகளில் சிறந்த மாணவ மாணவிகளுக்கும் , மற்றும் விடுப்பே எடுக்காத மாணவ மாணவிகளுக்கும் பரிசு தர இருப்பதாகவும் அதை அச்சிறார்களுக்கு எங்கள் கையால் தரவேண்டும் என்றும் கூறினார். நாங்கள் மிகச் சாதாரணமானவர்கள் பதவி ஏதும் இல்லாதவர்கள் எங்களை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டோம். அதற்கு பதவிகளில் இருப்பவரைவிட நல்லவர்களிடம் இருந்து மாணவ மாண்விகள் ஆசி பெறுவது சிறந்தது என்று அவர் சொன்னபோது நாங்கள் நெகிழ்ந்து விட்டோம். அதுவுமல்லாமல் இன்னொரு நாள் இறுதி வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நான் அறிவுரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். இந்தமாதிரி மரியாதைக்கு நாங்கள் தகுதி உடையவர்களா என்னும் சிந்தனையே மேலோங்கி இருந்தது.
இந்த நிகழ்வு என்னை 1967-க்கு இட்டுச் சென்றது. நான் பி.எச்.இ.எல் நிறுவனத்தில் வேலையில் இருந்தபோது அருகில் துவாக்குடி என்னும் கிராமம் இருந்தது( இருக்கிறது) அங்கு இருந்த ஒரு பள்ளிச் சிறார்களுக்குப் புத்தகங்களும் பேனா பென்சில்களும் இலவசமாக வழங்க மெஷின் ஷாப் பணியாளர்கள் முடிவு செய்திருந்தனர்,.அதை வழங்க என்னைக் கூப்பிட்டு விழாமாதிரி செய்தது நினைவிலாடியது. அது அப்போதைய தமிழ் தினசரி ஒன்றில் படத்துடன் வெளியானது. எந்தத் தகுதி என்னை இவ்வாறு முன்னிலைப்படுத்துகிறது என்பது எனக்குக் கேள்விக்குறியாகவே இருக்கிறது. I WAS ONLY FEELING VERY HUMBLE THEN AND NOW.
வழக்கம் போல இறைவணக்கத்துக்குப் பிறகு என்னை அறிமுகப் படுத்தினார்கள்.குழந்தைகளின் முகங்களைப்பார்ப்பதே மகிழ்வாக இருந்தது. எங்களுக்கு மரியாதையாக ஒரு ஃப்ரேம் செய்த ஆஞசநேயர் படமும்  என் மனைவிக்கு பூ. பழம் அரிசி, வெல்லம் போன்றவையும் தரப் பட்டன. நாங்கள் மேடையிலிருந்ததால் எங்களால் ஃபோட்டோ ஏதும் எடுக்க முடியவில்லை. அவர்கள் எடுத்த ஃபோட்டோக்களை அஞ்சலில் அனுப்பி உள்ளனர். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினோம் அதை வாங்கும் போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியது 

அன்று எடுக்கப் பட்ட சில படங்களைப் பகிர்கிறேன் 

சரசுவதி பூஜை
பள்ளியில் மேடையில் அறிமுகம்
பள்ளி விழா மேடையில்
பரிசுக்காகக் காத்திருக்கும் சிறார்கள்
சிறார்கள் இன்னொரு காட்சி.
நான் பரிசு வழங்கிய இரு சிறார்களுடன்
என்னிடமிருந்த பரிசு வாங்கிய  வேறு இரு குழந்தைகள்.
பரிசு பெற்ற இரு சிறார்களுடன்
பரிசு வழங்கிய என் மனைவியுடன் இரு மாணவிகள்
என் மனைவியிடம் பரிசு வாங்கிய  மாணவிகள் இருவர்
என் மனைவியுடன் பரிசு பெற்ற இரு மாணவிகள்
எங்களுக்கு நினைவுப் பொருட்கள் வழங்கப் படுகிறது
என் மனைவிக்குக் கூடுதலாக-அரிசி வெல்லம் தேங்காய் பழம் -கன்னட வழக்கமோ
எனக்குக் கொடுக்கப்பட்ட ஆஞ்சநேயர் படம்
    .      


Wednesday, March 25, 2015

எழுதத் தூண்டிய எண்ணங்கள்


                                  எழுதத் தூண்டிய எண்ணங்கள்
                                  -----------------------------------------------


என்னுடைய சென்ற பதிவில் கேள்விகளே பதிலாய் எழுதப் பின் புலமாக  குழந்தைப் பேறு இல்லாத ஜோடி பற்றிய கதையை கருவாக எழுதி இருந்தது பற்றிக் கூறி இருந்தேன் 1970-ல் இதே கருவை வைத்து வேறு விதமாகக் கதை பின்னி இருந்தேன் அதையே நாடகமாகவும் மேடை ஏற்றி இருக்கிறேன் ஆனால் அந்தக் கதைக்கு குழந்தை பேறு இல்லாத ஒரு காரணத்துடன் ஏதேதோ செயல்களைச் செய்து விட்டு அதற்கு மனசாட்சியைத் துணைக்கழைப்பவர்களையும் கதாமாந்தர்களாக்கினேன் அந்தக் காலத்தில் ஏதோ புரட்சிகரமான கரு என்று பலரும் கருதினார்கள்.
நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவரது பதிவுகளில் சில கருத்துக்களைக் கூற மனசாட்சியைத் துணைக்கழைப்பார். ஒரு பின்னூட்டத்தில் அது பற்றி அவரிடம் விளக்க்வும் வேண்டி இருந்தேன். இல்லாவிட்டால் நானே மனசாட்சி பற்றி எழுதுவேன் என்றும் பயமுறுத்தினேன் நான் ஏற்கனவே மனசாட்சிப் பற்றி எழுதி இருந்ததையும் அது எப்படி என் கதைக்குக் கருவாக இருந்ததையும் இப்போது கூறுகிறேன்
மனசாட்சி பற்றிய என் கணிப்பே வேறு.பல சமயங்களில் நாம் கேள்விப்படுவது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பதாக வரும் சம்பாஷணைகள். என் கேள்வியே மனசாட்சி என்பது என்ன.?அதற்கென்று ஏதாவது அளவு குறியீடு இருக்கிறதா. எவனாவது தன் எந்த செயலையாவது மனசாட்சிக்கு விரோதமாகச் செய்ததாகச் சொல்கிறானா. ஒரு கொலையையும் செய்து விட்டு அதற்கான காரண காரியங்களை விவரிக்கும் போது மனசாட்சிக்கு விரோதமாக செய்யவில்லை என்பான் எந்த ஒரு செயலுக்கும் அவரவருக்கு ஒரு காரணம் இருக்கும். அதுவும் மனசாட்சிக்கு உட்பட்டே இருக்கும் மனசாட்சிதான் என்ன?கொண்ட கொள்கைகளின் மேல் எண்ணத்தின் மேல் இருக்கும் அசையாத நம்பிக்கையின் நிரந்தரமான சாசுவதத் தன்மையைக் குறிப்பிடுவது அல்லவா?அப்படியானால் கொள்கைகள் அல்லது எண்ணங்கள் (அவை சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்) அதன் காரணமாக எழும் செயல்கள் மனசாட்சியின் பிரதிபலிப்பல்லவா? அதாவது செய்யும் எல்லா செயல்களுக்கும் காரணங் காட்டி தெளிவு படுத்தி ஏதாவது ஒரு கோணத்திலிருந்தாவது மனசாட்சிக்கு விரோதமில்லாதது என்று நிரூபிக்க முடியும்
இந்த மனசாட்சி பற்றியும் குழந்தைப்பேறு பெற முடியாதவனின் செயல்கள் விளைவுகள் குறித்தும் எழுதிய கதையே மனசாட்சி. இதில் சொல்லப் பட்டிருக்கும் நிகழ்வுகள் நடக்க வாய்ப்பில்லாதவை அல்ல. ஆனால் நடக்கலாம் என்று ஏற்றுக் கொள்ளும் மனோநிலை நம்மில் பலருக்கும் இல்லை. அதுவே இந்தக் கதையை நான் எழுதவும் மேடையேற்றவும் எனக்கு இருந்த உந்து சக்திகளாகும். ஏனென்றால் எப்போதும் நான் என்னை “ I AM DIFFERENT” என்று காட்டிக் கொள்ளத் தயங்கினது இல்லை.
திரு ஹரணி அவர்கள் என் சிறு கதைத் தொகுப்புக்கான வாழ்த்துரையில் “ ஒவ்வொரு கதையும் வாழ்வின் ஒவ்வொரு சுவையை உணர்த்துபவை. சில கதைகள் இயல்பாய் இருக்கின்றன. சில கதைகள் அதிர்ச்சியூட்டுகின்றன.சில கதைகள் நம்மைக் கசிய வைக்கின்றன. சில கதைகள் வலி யேற்படுத்துகின்றன எவ்விதத் தயக்கமுமின்றி உள்ளதை உள்ளவாறே எடுத்துப் பேசிப்போகிறார் கதையாசிரியர்.அவரின் மனக் கிடக்கை வெகுவான நியாயங்களுடன் இக்கதை தொகுப்பு முழுக்கப் பயணிக்கிறதுஎன்று கூறுகிறார்
என் கதைகள் சிறுகதை எனும் கட்டமைப்புக்குள் ( அப்படி ஒன்று இருக்கிறதா என்ன.?) வருவதில்லை என்னும் குறையை நான் கேட்டிருக்கிறேன் . ஒரு சிறுகதை என்றால் ஒரு ஆரம்பம் நடுவு முடிவு என்று இருக்க வேண்டும் என்பதும் ஒரு சாராரின் வாதம் கதையின் சுட்டி தருகிறேன் படித்துப் பாருங்கள் கதையின் முடிவில் பின்னூட்டங்களும் காணுங்கள் உங்கள்கருத்துக்களையும் தாருங்கள்

 


                                     

Sunday, March 22, 2015

சில சிறுகதைகளின் பின்புலம்


                      சில சிறு கதைகளின் பின்புலம்
                     ------------------------------------------------


நான் பல சிறுகதைகள் எழுதி இருக்கிறேன் அப்படி எழுதிய
சிறு கதைகளில் சில வடிவமைந்த விதமும்  சில பின்னூட்டங்களும்.
நான் வாழ்வின் விளிம்பில் என்னும் சிறு கதைத் தொகுப்பை வெளியிட்டது பலரும் அறிந்திருக்கலாம்.பலரும் விமரிசனம் செய்திருக்கிறார்கள். நான் அதில் வரும் கதைகளின் பின்புலத்தை சற்றே அசை போட்டுப் பார்க்கிறேன்
கதைகள் பற்றி ஊமை விழிகள் அவரது பதிவில் கூறி இருக்கும் கருத்துக்கள்
 படைப்பாக்கம் குறித்துப்பேசும் நம் இலக்கணங்கள் நான்கு வழி முறைகளைச் சொல்கின்றன.
உள்ளதை வைத்து உள்ளதைச் சொல்வது, ( நடந்த சம்பவம் )
உள்ளதை வைத்து இல்லாததைச் சொல்வது, ( நடந்த கதை )
இல்லாததை வைத்து உள்ளதைச் சொல்வது, ( புராண வரலாறு ? )
இல்லாததை வைத்து இல்லாததைச் சொல்வது. ( கட்டுக்கதை )
                                                ( தொல்.பொருள். 53. நச்.)
வாழ்வின் விளிம்பில் என்ற என் சிறுகதைத் தொகுப்பில் என்னுரையாக நான் எழுதி இருந்ததுஎண்ணங்கள் கற்பனையோடு கலக்கும்போது கதைகள் உருவாகின்றனஎண்ணங்கள் பல நேரங்களில் அசல் வாழ்வின் பிரதி பலிப்புகளே.கதைக்குக் கரு ஒன்று கிடைத்து அதைச்சொல்ல கதா பாத்திரங்கள் உருவாகலாம்நேரில் கண்டும் பரிச்சயப் பட்டும் உலாவும் கதாமாந்தர்களைச் சுற்றி கதை பின்னலாம் இந்த இருவகையிலும் புனையப் பட்ட சிறு கதைகளே இத்தொகுப்பு. எனக்குப் பிடித்த வார்த்தைகள் உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளால் உரு கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும். இதையொட்டியே என் சிறு கதைகளும் இருக்கின்றன என்று நம்புகிறேன்

குழந்தை இல்லாதவர்கள் பற்றிய மையக் கரு ஒன்று என்னைக் கதை பின்னு என்று கேட்டுக் கொண்டிருந்தது. அதையொட்டி இரு க்தைகள் எழுதி இருந்தேன். ஒன்றில் மக்கள் திசைமாறி கடவுள் சக்தி உள்ளவர்கள்பின்னால் போவது குறித்த எண்ணங்களைக் கதையாக்கினேன்.அப்படி கதையாகச்சொல்லும்போது என் மனதுக்குப் பட்ட கருத்துக்களையும் சேர்த்தேன். கதை ஓரளவு நல்ல பின்னூட்டங்களைப் பெற்றுத் தந்தது. ஆனால் அவை நிச்சயமாக டெம்ப்லேட் பின்னூட்டங்கள் அல்ல. சில சம்பவங்களின் பின்னணிகளால்  முடிவை யூகத்துக்கு விடுவதே பலன் தரும் போலிருந்தது என் கணிப்பு தவறவில்லை என்றே நம்புகிறேன்
இதே கரு கொண்ட இன்னொரு கதை பற்றி அடுத்தபதிவில் இந்தக் கதையை வாசிக்க இங்கே சொடுக்கவும் இக்கதையைப் படித்து முடித்தபின் பின்னூட்டங்களைப் பார்க்க வேண்டுகிறேன்
சில பின்னூட்டங்கள்
-------------------------------
கதை முடியும் இடத்தில்தான் தொடங்கியிருக்கிறது. பாபுவின் மனதில் ஓடும் கேள்விகள் வெளிப்படையானவை அவற்றை நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. தவிரவும் கதை தொய்வில்லாமல் போகிறது. தேர்ந்த தன்மையை உணர முடிகிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு இதே தன்மையில் வேறு கதைப்பொருண்மையில் எழுதிய என்னுடைய கதையை நினைவுபடுத்திக்கொள்கிறேன். சில நெருடல்களான தருணங்களையும் இக்கதை என்னுடைய மனதில் பதிவு செய்கிறது. உணர்வுகள்தான் இருதரப்பிலும் நின்றுலகிறது காலங்கள்தோறும் பல கேட்கமுடியாத கேள்விகளையும் பெறமுடியாத பதில்களையும் மனதில் நிறுத்தி
உணர்வுக்கும் அறிவுக்குமிடையே போராட்டம் நிகழும்போது உணர்வுதான் கவனிக்கப்படுகிறது.வெல்லவும் செய்கிறது.

நீங்களே சொன்னதுபோல கதையோ கவிதையோ வாசகனின் மனதில் சிறிய வெற்றிடத்தை உண்டுபண்ணினால் அதை கதாசிரியனின் வெற்றி அல்லது அந்தக் கதையின் வெற்றியெனச் சொல்லலாம்.

தவிர கதைகள் எப்போதும் முடிவதில்லை எனும் ஜாதி நான்
.சில நேரங்களில் சில கேள்விகளுக்கான பதில்கள் அது பற்றி நாம் உருவாக்கிக் கொள்ளும் ஊகங்களாக இருக்கவே விரும்புகிறோம். நம் ஊகத்திற்கேற்ப பதில் கிடைக்காத பட்சத்தில் கிடைத்த பதிலை உண்மையென்று நம்பப் போவதும் இல்லை. இந்த மாதிரி சமயங்களில் அதுபற்றிக் கேட்கப்படும் கேள்விகளும் ஒப்புக்குத்தான் என்று ஆகிப்போகிறது. ஊகங்கள் அந்த அளவுக்கு உண்மை போலவே மனத்தை பலமாக ஆக்கிரமித்துக் கொண்டு உண்மை என்றே நம்மை நம்பச் செய்து விடுகிறது.. சில நேரங்களில் உண்மையாகவே ஊகங்கள் இருப்பினும் அதை மனம் நம்ப மறுக்கும். அது பொய்யாக இருக்கக் கூடாதா என்று ஏற்றுக் கொள்ள மறுக்கும்
கேள்விகளுக்கு பதில் காண விழைந்த பாபுவுக்கு மேலும்
கேள்விகளே பதிலாக அவன் மனதில் ஓடியது.



.
வித்தியாசமாக கதையை முடித்து விட்டீர்கள். இதுவும் நல்லா இருக்குது.
கதை நல்ல விறுவிறுப்பாகச் சென்றது. கடைசியில் என்ன ஆகுமோ என்ற ஆவலையும் தூண்டியது.

கேள்விகளுக்கு பதில் காண விழைந்த பாபுவுக்கு மேலும் கேள்விகளே பதிலாக அவன் மனதில் ஓடியது.//

ஆனால் கடைசியில், பாபு போலவே நாங்களும் !
பாராட்டுக்கள்
சுந்தர்ஜி சொல்வதுபோல் கதைகள் முடிவதில்லை. நீங்கள் முடித்து விட்டீர்கள். ஆனாலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது கதை எங்கள் மனதிலும், கண்ணனின் அக்கம்பக்கத்து இல்லங்களிலும் .

கதை வெகு அருமை சார்

there have been many things, happening to people all around you- that leaves you with lots of questions. the theme here- is one such. it fits exactly into that description that you've mentioned in your story. 'rationalizing'- as you say, sure does leave people with notions of being an 'atheist'. there are many places where the tale you've woven here, strikes a chord... the clash between the brain and heart... questions being answers (yes, the very title...). Took me for a while, back to my own experience in writing out something called 'Spatika Lingam', long time back-- in last june... my first attempt at writing a tamil story...
As we still stand, heads held high, questioning beliefs- when asked- 'why question'? we proudly answer- 'we seek answers- the truth'-- but alas! truth is, but-- questions!

Brilliant!
கேள்விகளை எழுப்பிகொண்டே
ஒரு தீர்க்கமான விடை தராத
வாழ்க்கை தரும் ஒரு துன்பமான
இன்பத்தைப்போலவே
விடைதராது மீண்டும் கேள்விகளை
வாசகனிடத்தில் விதைத்துப்போகும்
படைப்பே மிகச் சிறந்த படைப்பு என்பதில்
இரண்டுவித கருத்துக்கள் இல்லை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
PS: I was kind of away from blogging... Due to work and other such unimportant things that usually build up my already lazy schedule... But it was my dad., who had read this post of yours and recommended to me that I read it right away-- saying it was a 'must-read' for me and that I'd really like it! :) His taste never falters. So, a special thanks to him too...!

 


Thursday, March 19, 2015

நினைவோட்டங்கள்


                                நினைவோட்டங்கள்
                                -------------------------------


வாழ்வின் அநித்தியம் பற்றி நிறைய்வே பேசிவிட்டோம், எழுதிவிட்டோம் இந்த வாழ்வுக்குப் பின் என்ன இருக்கிறது? பதில் தெரியா புதிர் அது. ஹேஷ்யங்களை நான் நம்பத்தயாரில்லை. இறந்தபின் பேரினை நீக்கிப் பிணமென்பார்கள் ஓரிரு நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பார்கள். இறந்தவனை நினைத்துக் கொண்டே இருக்க முடியுமா. அதற்குத்தானே நமக்கு மறதி என்னும் வரம் இருக்கிறது. நான் நானாக இல்லாமல் சிலரது மனதில் நினைவாக இருக்கலாம். எனக்கு ஒரு ஆசை. இறந்தபின் நடப்பதை நான் எல்லோரோடும் வலையினில் பகிர வேண்டும். முட்டாள்தனமான ஆசை. நாம் உயிர்த்துடிப்புடன் இருப்பதாலேயே எண்ணங்கள் உருவாகின்றன. இருந்த இருப்பை எண்ணி என்றோ எழுதிய சில வரிகள் என்னை மீண்டும் பிடித்திழுக்கின்றன. எண்ணங்களைப் பகிரத்தானே வலை. என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே.



எண்ணச் சிறகுகளில்

அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.

       
அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
       
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
       
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
       
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ

கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.

         
அந்த நாள் அக்குயவன் கை
         
ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
         
இந்த நாளில் ஏழையெனை
         
ஏனோ குறைகள் கூறுவரே.
         
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
         
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
         
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
         
மறந்து நீக்கிச் சென்றிடவே
         
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாயே .

எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவன்தானே நீ.

       
வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
       
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
       
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.

         
என்னுயிர்ப் பறவையே,
         
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
         
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
         
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
         
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
         
மூடிய கண்கள் விழித்து விட்டால்
         
இன்னும் இன்னும் எண்ணங்களாக சிறகடிப்பாயே
.
 
 




  

Tuesday, March 17, 2015

அதிர்ச்சியின் விளைவுகள்


                                   அதிர்ச்சியின் விளைவுகள்
                                   ---------------------------------------


கடந்த பதிவில் இரண்டு மூன்று நாட்களுக்குப் பதிவுகள் எழுதாவிட்டால் பதிவர்கள் நம்மை மறந்து விடுவார்கள் என்று எழுதி இருந்தேன் அப்படியே மறந்தால் என்ன ஆகும் என்று ஒரு பதிவு எழுதுங்களேன் என்று நண்பர் டாக்டர் கந்தசாமி ஐயா கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு பக்கம் நான் என்னைப் பற்றி உயர்வாக சிந்திக்கிறேனோ
 நான் பதிவு எழுதாவிட்டால் என்னாகும் . ஒன்றும் ஆகாது
  
வாசகர்கள் நிலை தடுமாறுகிறார்கள். அதிர்ச்சி வீட்டு அட்டத்தில் ஏற பலரும் வீட்டு முற்றத்தில் வீழ்கிறார்கள் ஒரு காசளவு ஓட்டை வானத்தில் தெரிகிறது. கட்டி வைத்திருந்த பசுவின் கன்று கயிறு அறுத்து ஓடுகிறது  காசியில் கங்கை கலங்கி மலங்குகிறது.காரணம் தெரியாமல் ஊரே அதிர்ச்சியில் மூழ்குகிறது பதிவுலக முன்னோடி டாக்டர் கந்தசாமி. இதெல்லாம் ஜீஎம்பி பதிவு எழுதாததால் வரும் வினை. எல்லோரும் அவரை மீண்டும் எழுதத்தூண்டுவோம் என்ன மொக்கையானாலும் அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொல்ல. அனைவரும் , ஜீஎம்பி சந்தித்த சந்திக்காத பதிவுலகமே அவர் வீட்டின் முன் நின்று பதிவெழுத வேண்டுகிறது

இப்போது தெரிகிறதா நான் ஏன் எப்படியும் பதிவு எழுதுகிறேன் என்று என  மனைவியிடம் சொல்ல என் மனைவி என்னை.என்னாயிற்று உங்களுக்கு. ஏதேதோ உளறிக் கொண்டுஎன்று சொல்லிக் கொண்டே தட்டி எழுப்புகிறாள். ஆஹா... இப்படி எல்லாமுமா நடக்கும். ? கனவானாலும் இனிமையாக என் முக்கியத்துவத்தை அறிவித்தது நன்றாகவே இருந்தது.  

Saturday, March 14, 2015

பூனை நக்கிக் குடித்தது


                                 பூனை நக்கிக் குடித்தது
                             ---------------------------------------


இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து பதிவுகள் ஏதும் வெளியிடாவிட்டால் பதிவுலகம் நம்மை மறந்து விடும். தொடர்ச்சியாக எழுத கற்பனைகை கொடுக்காதபோது என் பழைய பதிவுகளைப் பார்ப்பது வழக்கம் அண்மையில்திரு ஜோசப் விஜு அவர்களது “ஊமைக்கனவுகள்என்னும் தளத்தில் சங்ககாலக் கவிதைகள் பற்றி எழுதி வருகிறார். என் மர மண்டைக்குப் பலவும் புரிவதில்லை. இந்தக் கேள்வி எனக்கு என்ன புரியும் என்று நான் என்னையே கேட்டுக் கொண்டு பதிவாக்கியதையும் பார்க்க நேர்ந்தது. அது மீள் பதிவாக்கினாலும் பழையதாய்த் தெரியாது என்று தோன்றியதால் மீண்டும் அப்பதிவு. இதை ஏற்கனவே படித்திருந்தாலும் அநேகமாக நினைவுக்கு வராத ஒரு பகிர்வுதான்

கேள்வி:- உனக்கு எத்த்னை மொழிகள் தெரியும்.?
பதில்:-   எனக்கு எழுத படிக்க பேச தமிழும் ஆங்கிலமும் தெரியும். சுமாராகப் பேச , பேசினால் புரிந்து கொள்ள மலையாள்மும் , கன்னடமும்தெரியும். பேசினால் ஓரளவு புரிந்து கொள்ளும் அளவுக்கு தெலுங்கு தெரியும். கஷ்டப்பட்டு எழுத படிக்க பேச இந்தியும் தெரியும்
.
கேள்வி:- தமிழ் ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமை இருக்கிறதா.?
பதில் :-  புலமை என்றால்.... குழப்பமாக இருக்கிறது. அண்மையில் கன்னட ஆசிரியர்களுள் சிறந்தவர் என்று கருதப் பட்ட டி.பி. கைலாஸ் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய DRONA என்னும் கவிதையை தமிழில் மொழி பெயர்க்க முடியாமல் தமிழாக்கம் செய்து என் ஆங்கில அறிவை வெளிப்படுத்திக் கொண்டேன்...! தமிழாக்கம் செய்ய அருகில் ஆங்கில அகராதியை வைத்துக் கொண்டு வார்த்தைகளுக்கு பொருள் தேடி  புரிந்து கொண்டேன் ஆக ஆங்கிலத்தில் புலமை என்று சொல்வதை விட WORKING KNOWLEDGE இருக்கிறது என்று சொல்வதே சரியாயிருக்கும்.

கேள்வி அப்படியானால் தமிழில் நல்ல புலமை இருக்கிறதாக எண்ணலாமா.?
பதில்:- தமிழில் எதை வைத்து புலமையை எடை போடுவது
.
கேள்வி: - தமிழில் நிறையப் படித்திருக்கிறாயா.?
பதில்:- பள்ளியில் படித்ததைவிட படிக்காததே அதிகம். பள்ளியில் கற்றிருக்க வேண்டிய இலக்கண இலக்கிய தெளிவுகள் கற்காமல் விட்டதாலும் என் ஞானம் பற்றி எனக்கே சந்தேகம் வருவதாலும் இக்கேள்விக்கு பதிலை கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்.

கேள்வி:- சரி. அப்படியே செய்யலாம். இந்திய இதிகாச நூல்களைப் படிதிருக்கிறாயா.?
பதில்:- ஓ..! படித்திருக்கிறேனே.

கேள்வி:- கேள்வியை சரியாகப் புரிந்து கொள். தெரியுமா என்று கேட்கவில்லை. படித்திருக்கிறாயா என்பதுதான் கேள்வி.
பதில்.:- தெரியும் என்பதற்கும் படித்திருக்கிறேன் என்பதற்கும் அவ்வளவு வித்தியாசமா.?

கேள்வி:- ஆம். இது உன் மொழி அறிவை சோதிக்க கேட்ட கேள்வி.
பதில்:- கம்ப ராமாயணம் படித்திருக்கிறேன். பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்திருக்கிறேன்..ஏன்... சாதாரணன்ராமாயணம் என்று  ஒரு கவிதை ஒரே வாக்கியத்தில்  நானே எழுதி இருக்கிறேன்.(சுட்டியைத் தட்டிப் படிக்கலாம்)

கேள்வி:- கவிதையா .? யாப்பிலக்கணத்தில் எதனைச் சார்ந்தது அது...?
பதில்: -யாப்பிலக்கணமா.. ? அது புதுக் கவிதை. எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராது.வார்த்தைகளை மடக்கிப் போட்டு வரிவடிவம் கொடுத்து எழுதுவது அது

கேள்வி:-மொழியும் தெரிய வேண்டாம் இலக்கணமும் தெரிய வேண்டாம்  என்பவர்களே புதுக் கவிதைக்கும் வசன கவிதைக்கும் வக்காலத்து வாங்குபவர்கள்.. போகட்டும். வால்மீகி ராமாயணத்தை கம்பர் தமிழில் எழுதியபோது  இராம காதை என்னும் தலைப்பில் எழுதினார் என்பதாவது தெரியுமா,?ஆறு காண்டங்களுடன் 118 படலங்களுடன் பன்னீராயிரத்துக்கும் அதிகமான விருத்தப் பாடல்கள் கொண்டது கம்ப ராமாயணம் எனப் படும் இராமகாதை. அங்கும் இங்கும் சில பாடல்களைப் படித்துவிட்டு கம்பராமாயணம் படித்திருக்கிறேன் என்று கூறுவது சரியா. ,செவி வழிக் கேட்டு கதை தெரிந்து கொள்வது வேறு, பொருள் தெரிந்து படித்தறிவது என்பது வேறு. மகாபாரதத்தை தமிழில் எழுதியவர் யார் என்றாவது தெரியுமா.?
பதில்.:-தெரியும் வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம்.படித்ததில்லை. ஆனால் இதில் வியாசரால் எழுதப் பட்ட மகாபாரதத்தின் முக்கிய பகுத்யான பகவத் கீதை பற்றி எழுதப்படவில்லையாம்.. மேலும் இவரால் விடப் பட்ட சில பகுதிகளை அரங்கநாதர் பாரதம் என்ற பெயரில் எழுதினாலும் அதை வில்லிபாரதத்தின் துணை நூலாகவே கருதுகின்றனர். பாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் என்ற தலைப்பில் பாரதியார் பாடியிருக்கிறார்.

கேள்வி.:- ஐம்பெருங்காப்பியங்கள் என்னவென்று தெரியுமா. ?
பதில்.:- சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி. இவை அணிகலன்களின் பெயரால் அறியப் படுபவை. இவற்றில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தை குடிமகன் காப்பியம் என்று கூறுவார்கள். கடவுளையோ அரசனையோ பாட்டுடைத் தலைவனாக்காமல் கோவலன் எனும் ஒரு குடிமகனின் கதையைக் காப்பியமாக்கி இருக்கிறார் இளங்கோவடிகள்.  இதெல்லாம் படித்துத் தெரிந்தது. ஆனால் சிலப்பதிகாரத்தை அவர் இயற்றிய வடிவில் படித்ததில்லை. அதேபோல்தான் மணிமேகலை எனும் காப்பியமும். வளையாபதி குண்டலகேசி ... மூச். ஒன்றுமே தெரியாது. ஆனால் இந்த சீவகசிந்தாமணி கதையை மூன்றாம் சுழியில் அப்பாதுரை எழுதியது படித்தது மூலம் தெரிந்து கொண்டேன்.

கேள்வி.:- ஐஞ்சிறு காப்பியங்கள் பெயராவது தெரியுமா. ?
பதில்.:- அப்படியும் காப்பியங்கள் இருக்கின்றனவா..தெரியாதே
.
கேள்வி..:- இப்போதாவது தெரிந்து கொள். அவை, நீலகேசி,யசோதரகாவியம், நாககுமாரகாவியம்,உதயண குமார காவியம், சூளாமணி.
பதில்.: -கடைசியாகச் சொன்ன தலைப்பில் அப்பாதுரை எழுதத் துவங்கி நிறுத்தி விட்டாரே அதுவா.?

கேள்வி .:- அது சூடாமுடி. பெயரைக்கூட சரியாக வாசிக்காமல் .....உனக்கு எவ்வளவு மலர்களின் பெயர்கள் தெரியும்.?
பதில்.:- ஏதோ நான்கைந்து . இல்லை ஏழெட்டு மலர்களின் பெயர்கள் தெரியும். சில நாட்களுக்கு முன் பதிவர் ஒருவர் ( சசிகலா என்று நினைக்கிறேன்) பல மலர்களின் படங்களுடன் பெயர்களையும் குறிப் பிட்டிருந்தார். நடிகர் சிவ குமார் அவ்வப்போது நூறு மலர்களின் பெயர்களை மூச்சு விடாமல் கூறி அசத்துவார்

கேள்வி.:- அவை குறிஞ்சிப் பாடலில் கபிலர் எழுதியவை ஆகியிருக்கும். மணிமேகலையில் சாத்தனார் பல மலர்களின் பெயரைக் கூறுகிறார்.
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி
ஏதாவது தெரிகிறதா. ?

பதில் :- கேள்வி கேட்பது எளிது. உண்மையில் எத்தனை பேருக்கு இந்தப் பூக்களை அடையாளம் காட்ட முடியும். சரி. நான் ஒரு பாடல் கூறுகிறேன். யார் இயற்றியது என்று ஊகிக்க முடிகிறதா பாருங்கள்.
வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண்ஆக்கிக்
கடல்வண்ணன் பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையர் கடை கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

கேள்வி.:- நான்தான் கேள்வி கேட்பேன். இருந்தாலும் பாடலைப் படிக்கும்போது ஆழ்வார்களில் யாராவது எழுதி இருக்கக் கூடும். என்பதே என் ஊகம்.

பதில்.:- அதுதான் இல்லை. நாலாயிரப் பிரபந்தப் பாடல்களின் மொழிபோல் இருந்தாலும்  இதைப் பாடியது இளங்கோ அடிகள் என்ற சமண முனிவர்..!

கேள்வி.:- குறவஞ்சி பாடல்களில் , மலர்களின் பெயர்களைப்போல், சுமார் 80 பறவைகளின் பெயர்களும் காணக் கிடைக்கும். தேடிப் படித்துப் பார். இப்போது கூறு.  உனக்குத் தமிழ் மொழி தெரியுமா.?

பதில்.:-கம்ப ராமாயணத்தில் இராமாவதாரத்தில் பாயுரச் செய்யுளாகக் கம்பனே

ஓசை பெற்று உயர் பார்கடல் உற்று ஒரு
பூசை, முற்றவும் நக்குபு  புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன், மற்று, இக்
-
காசில் கொற்றத்து இராமன் கதை அரோ

என்று. கூறுவான். தமிழ் ர்ன்னும் கடலை நக்கிக் குடிக்க நினைக்கும் பூனையா நான்.
தமிழ் கற்றேன் என்னும் அகந்தை சிறிதும் இல்லை.கற்றது கைம்மண் அளவு என்பார்கள். நானோ கடுகளவு என்பேன் உபரியாக... .சமீபத்திய தமிழ்க் காவியமாக இராவணன் காவியம் எழுதப் பட்டு வெளியிட்டிருக்கிறார்களாமே. 

( ஒரு திரைப்படத்தில் வடிவேலு, தன் வலக்கையை . ஆள்காட்டி விரல் அவரது கண்ணை நோக்கியவாறு வைத்து ஏதோ கூறுவார்.. அதுபோல் நான் என்னை நோக்கிக் கூறுவது : உனக்கு இது தேவையா.? உன் பவிசு எல்லோருக்கும் தெரிய வேண்டுமா..?)