Thursday, March 5, 2015

மணப் பெண்ணுக்கு அறிவுரைகள்.


                    மணப் பெண்ணுக்கு அறிவுரைகள்.
                    --------------------------------------------------

           (இப்போதெல்லாம் கூறுகிறார்களா கூறினாலும் கேட்கிறார்களா?)



அண்மையில் திரு மாலி அவர்கள் எனக்கும் இன்னும் சில பதிவர்களுக்கும் ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார் அதில் திருமணமாகிப் புகுந்த வீட்டுக்குப் போகும் மணப்பெண்ணுக்கு கூறும் அறிவுரையாக ஒரு பாடல். அது
வேந்தன்பட்டி பழ.ந. நடராஜன் செட்டியார் அவர்களின் மனைவி வள்ளியம்மை ஆச்சி அவர்கள், இளம் வயதில் மனப்பாடம் செய்த பாடலை சொல்லக் கேட்டு எழுதியது என்றும்,இது நகரத்தார்குரல் மாத இதழில் வெளிவந்துள்ளது என்றும் தெரிவிக்கிறார். இதை நான் பெற்ற பேறு வலையுலகமும் பெற பகிர்கிறேன். ஆட்சேபணை ஏதும் இருக்காது என்றும் நம்புகிறேன்

திருணம் ஆகி புகுந்தவீட்டிற்கு செல்லவிருக்கும் மகளுக்கு தாய் சொல்லும் புத்திமதி இது. ( இது அந்தக்காலச் செட்டிநாட்டுப் பாடல்)...

கன்னியர் மெச்சும் கருத்துள்ள நாயகியாம்
கண்ணணொத்த உருவினனைக் கல்யாணம் தான்முடித்துப்
பயணத்திற்(கு) ஆயத்தம் பண்ணுகிற போது நல்ல
கயல் விழியாள் மாதரசி காசினியில் தனைஈன்ற
மாதாவிடம் ஏகி வணக்கமுடனே தொழுது

'"
மேதினியில் என்னை விருப்பமுடன் பெற்றெடுத்த
தாயே' நான் போய் வாரேன் தக்கமதி சொல்லிவிடு
ஆயி' நான் போய் வாரேன் ஆசீர்வதித்(து) அனுப்பிவிடு"
என்றழகுப் பெண்மணியாள் இனிய கரத்தாலே
பொன்துலங்கும் மாதாவின் பொற்பாதம் தெண்டனிட்டாள்.

தெண்டனிட்ட கண்மணியைச்சேர மடியிருத்தி
வண்டார் குழலகி மாதாவும் ஈதுரைப்பாள்:-
"
கண்மணியே போய்வா என் கைக்கிளியே போய்வா நீ
நன்மணியே உங்களுக்கு மெய்ப்பரனார் தஞ்சமுண்டு
போன இடத்தில் நீ புத்தியுடனே இருந்து
ஞானமுடன் வீட்டை நடத்துவாய் கண்மணியே"

தப்பிதம் நீ செய்தக்கால் தாரணியில் உள்ளவர் உன்
அப்பன் குணமென்பார் உன் ஐயாவை நிந்தை சொல்வார்
உன் மீது ஒரு குற்றம் உண்டானால் என் மகளே
என் மீது ஏத்தி இவள் தாயின் குணம் என்பார்கள்

பிள்ளை செய்த குற்றம் பெற்றோருக்கு நிந்தையம்மா
எள்ளவும் நிந்தை எங்களுக்(கு) உண்டாகாமல்
ஊரார்க்கும் நாட்டார்க்கும் உற்ற முறையார்க்கும்
யாரார்க்கும் நல்ல பிள்ளையாய் நடக்க வேண்டுமம்மா

வீட்டுப்பொருள் எதையும் வீணில் அழிக்காதே
கேட்டவர்க்கு எல்லாமே கேட்டபடி ஈயாதே
பாடுபாட்டு உண்ணாத பலசோம்பல், பிச்சையென்றால்
ஓடி வருவார்கள் ஒண்டொடியே ஈயாதே

கூனர் குருடர் குறையுள்ள பேர்கள் தமை
ஈனமுள்ளார்கள் என்று இகழ்ந்து நீ தள்ளாதே
நாளை நாம் எப்படியோ நல்லணங்கே! கண்ணிலொரு
ஏழையினைக்கண்டால் இரங்கி நீ பிச்சையிடு
பசித்தவர்க்(கு) அன்னமிடு பாவை இளம்குயிலே
வஸ்த்திரம் இல்லார்க்கு மனங்குளிரத் தானமிடு
வேலைக்காரனைக் கண்டால் வெஞ்சினமாய்ப் பேசாதே
சோலைக்கிளியே! அவர்முன் துர்நகையும் கொள்ளாதே
காரியப்புத்தியுடன் பலரும் மதிக்கநல்ல
காரியக்காரி என்று கண்மணியே நீ நடப்பாய்
வாசல்களும் திண்ணைகளும் மற்றும் முற்றம் வீதிகளும்
ஆசனமும் சுத்தமுற அனுதினமும் காப்பாற்று

பாத்திரங்கள் எல்லாமே பளிச்சிடவே தேன்மொழியே
நேத்திரங்கள் தோன்ற நித்தம் விளக்கி வைப்பாய்
கண்போலும் கண்ணுக்குள் கரிய விழி போலும்
பண்போலும் தேன்மொழியே உன் பர்த்தாவைக் காப்பாற்று
கணவருடன் எதிர்த்து கண்டபடி பேசாதே
மணவாளர்க்(கு) இவ்வுலகில் மன்னவரும் தான் நிகரோ?
மாலையிட்ட நற்கணவர் மனத்தில் ஒரு கோபம் வந்தால்
பாலை ஒத்த சந்திரமுகப் பாவையே நீ சகிப்பாய்
கல்யாணம் செய்த நல்ல கணவர் ஒரு சூரியரும்
நலமான பத்தினியாள் நங்கை ஒரு சந்திரரும்
மன்னவர் ஓர் அரசும் மனைவி ஒரு மந்திரியும்
என்னும்படி யோக்கியமாய் இசைந்து நட என் மகளே!

அன்புடைய நற்புருஷ ரானால் அவரே நல்
வன்பெரிய பொன் குவியும் மாளிகையும் ஆகாரோ?
பெண்ணே! குணமுடைய புருஷர் உண்டானால்
என்ன குறைவு வரும்! எடுத்த தெல்லாம் கை கூடும்

சற்குண நல் நாயகரைச் சார்ந்த பெண் பாக்கியத்தை
கற்கண்டே! யான் உரைக்க கரையுண்டோ? இப்புவியில்
நல்ல மாப்பிள்ளை கண்டால் நமது குல தெய்வம்
சொல்ல உன் பங்காச்சு! சுவாமியை நீ தோத்தரிப்பாய்
காலையிலும் மாலையிலும் கனமதிய வேளையிலும்
வாலைக்கிளியே நீ மாபரனைக் கைவணங்கு
எவரை மறந்தாலும் இரவு பகல் ஆதரிக்கும்
அவரை மறவாதே! அவரே உன் "தஞ்சம்" என்றாள்.

வாழ்த்தினாள் முத்தமிட்டாள் மார்போடு எடுத்தணைத்து
"
தாழ்த்தினார்க்(கு) அன்பு செயும் தற்பரனார் காவல்" என்றாள்.

(
முற்றும்)
புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே, சில புத்திமதிகள் சொல்றேன் கேளு முன்னேஎன்னும் திரைப்படப் பாடல்( திருமதி டி ஏ. மதுரம் பாடியது என்று நினைக்கிறேன்)நினைவுக்கு வருகிறதா?எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்றுதானே.


33 comments:

  1. படித்தேன், ரசித்தேன். நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் (புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே) ஆண்குரலில் வருவது! பானை பிடித்தவள் பாக்கியசாலி படத்தில் திருச்சி லோகநாதன் பாடியது!

    ReplyDelete

  2. எத்தனை பொருள்களை உள்ளடக்கி அர்த்தமுடன் எழுதியிருக்கின்றார்கள் அருமையான அறிவுமதி பாடல் வெளியிட்டமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  3. அழகான... அருமையான... கருத்துள்ள பாடல்...

    ReplyDelete
  4. அருமையான அறிவுரைகள்..

    மனதில் கொண்டால் - மக்களுக்கு நல்லது..

    தாங்கள் சொல்லியிருக்கும் பாடல் திருச்சி லோகநாதன் அவர்கள் பாடியது.

    அது அண்ணன் தன் தங்கைக்கு புத்திமதி கூறுவது போல வரும்!..

    அந்தப் பாடல் முழுதும் கேட்ட நாளில் இருந்தே மனனம்.

    கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே!..- நீ
    காணாததைக் கண்டேன் என்று சொல்லாதே!.. - இந்த
    அண்ணன் சொல்லும் அமுத வாக்கைத் தள்ளாதே!.. - நம்ம
    அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே!..

    நீங்கள் கூறிய மாதிரி -
    சொன்னாலும் யார் கேட்கின்றார்கள்.

    ReplyDelete
  5. மரகதவல்லிக்கு மணக்கோலம்...
    என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்...
    கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால்...
    கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்...
    கோலம் திருக்கோலம்... (மரகதவல்லிக்கு)

    காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்...
    மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்...
    திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்...
    வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்...
    கட்டித் தங்கம் இனிமேல் அங்கே என்ன பூவை அணிவாளோ...?
    கட்டிக் கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ...?
    தினந்தோறும் திருநாளோ...? (மரகதவல்லிக்கு)

    மலர் என்ற உறவு பறிக்கும் வரை...
    மகள் என்ற உறவு கொடுக்கும் வரை...
    உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்...
    உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்...
    எந்தன் வீட்டு கன்று இன்று...
    எட்டி எட்டிப் போகிறது...
    கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து...
    எட்டி எட்டிப் பார்க்கிறது...
    இமைகள் அதை மறைக்கிறது...

    படம் : அன்புள்ள அப்பா
    வரிகள் : வைரமுத்து

    ReplyDelete
  6. அருமையான பாடல். எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    அன்புள்ள அப்பா பாடலும், பானை பிடித்தவள் பாக்கியசாலி படப் பாடலும் நினைவுக்கு வந்தது.....

    ReplyDelete
  7. எங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று இன்றைய இளம் தலைமுறையினர் நினைக்கிறார்கள்.

    ReplyDelete
  8. அருமையான பாடல்கள்
    அருமையான அறிவுரைகள்
    ஆனால் இக்காலத்தில் கேட்கத்தான்
    ஆளில்லை....
    நன்றி ஐயா

    ReplyDelete
  9. எக்காலத்துக்கும் பொருந்துவன தங்களது இந்த மணப்பெண்ணிற்கான அறிவுரைகள். காலம் மாறுகிறது என்று கூறிக்கொண்டு ஒவ்வொன்றாக நாம் தொலைத்துக்கொண்டு வரும் வேளையில் நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவு.

    ReplyDelete
  10. அற்புதமான பாடல்பகிர்வு.

    பகிர்வுக்கு நன்றி.
    ”பானைபிடித்தவள் பாக்கியசாலி” படத்தில் நடிகர் டி. எஸ் துரைராஜ் பாடுவார், அவருக்கு குரல் கொடுத்தவர் திருச்சி லோகநாதன் அவர்கள்.
    திண்டுக்கல். தனபாலன் அவர்கள் பகிர்ந்த பாடல் அருமை.

    ReplyDelete

  11. ஒரு தாய் தன் மகள் மேல் உள்ள பிரியத்தால், அக்கறையால் சொல்லும் அறிவுரையை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  12. இன்றைய நாட்களில் இதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. சொன்னாலும் அப்போது மணமகனுக்கு என்ன அறிவுரை கூறினீர்கள் என்று கேட்பார்கள். மணமகனுக்கும் அறிவுரை கூற வேண்டியது தான். மனைவியை மதிக்க வேண்டும்; விட்டுக் கொடுக்கக் கூடாது; வீட்டு வேலைகளில் உதவ வேண்டும்; குழந்தை வளர்ப்பில் உதவ வேண்டும்; ஒளிவு, மறைவு கூடாது என்றெல்லாம் சொல்லலாம்.

    ReplyDelete
  13. மறந்துட்டேனே, இது முகநூல், குழுமங்களில் பகிரப்பட்டது. அநேகமாய் எல்லோருக்கும் போய்ச் சேர்ந்திருக்கும். :)

    ReplyDelete
  14. தாய்மையோடு தமிழும் கொஞ்சி விளையாடுகிறது. நல்ல கணவர், நற்புருஷன், நல்நாயகர், நல்ல மாப்பிள்ளை என்று மகளின் கணவரைக் குறிப்பிடும்போதெல்லாம் நல்ல என்ற அடைமொழி வருகிறது. மகள் நலமாய் வாழவேண்டும் என்னும் தாயின் எதிர்பார்ப்பைத் துல்லியமாகக் காட்டுகிறது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  15. @ ஸ்ரீ ராம்
    வருகைக்கு நன்றி ஸ்ரீ.பாடல் வரிகள் நினைவுக்கு வந்த போது மதுரம் பாடி இருப்பதாகத்தான் தோன்றியது. திரைப் பாடல்களில் என் நினைவு நம்புவதற்கில்லை.

    ReplyDelete

  16. @ கில்லர்ஜி
    அறிவுமதிப் பாடல்களா.? பின்னூட்டங்களில் வேறு யாரோ எழுதியதாகவல்லவா இருக்கிறது. எல்லாப் பாராட்டும் நண்பர் மாலிக்கே. வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  17. @ திண்டுக்கல் தனபாலன்
    நண்பர் மாலியின் அஞ்சலில் வந்தது. அவருக்கே பாராட்டுக்கள் உரித்தாகும்

    ReplyDelete

  18. @ துரை செல்வராஜு
    நல்ல வார்த்தைகள்மனதில்பதியும். என்பது உங்கள் பின்னூட்டம் சொல்கிறது நன்றி ஐயா.

    ReplyDelete

  19. @ திண்டுக்கல் தனபாலன்
    வலைப்பதிவர்களில் திரையிசைப் பாடல்களுக்கு டி டி யே அதாரிடியென்பது நிரூபணமாகிறது நன்றி டிடி.

    ReplyDelete

  20. @ வெங்கட் நாகராஜ்
    பாடல்கள் ஒன்றிலிருந்தே இன்னொன்று என்ற் என் கூற்று சரிதானே நன்றி வெங்கட்.

    ReplyDelete

  21. @ டாக்டர் கந்தசாமி
    நல்ல விஷயங்கள் இப்போது ஏற்று கொள்ளப் படாவிட்டாலும் இளைய தலை முறையினர் என்றாவது நினைவு கூர்வார்கள் என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  22. @ துளசி கோபால்
    வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  23. @ கரந்தை ஜெயக்குமார்
    ஐயா ஊதுகிற சங்கை ஊதுவோம். என்றாவது அது பற்றிய நினைவு வரும் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  24. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    நல்ல கருத்துக்கள் காலத்தை வென்று நிற்கும் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  25. @ கோமதி அரசு
    வருகை தந்து ரசித்ததற்கு நன்றி மேடம். திரைப்பாடல்களை நினைவு கூர்வதில் டிடிக்கு இணை இல்லை எனலாம்.

    ReplyDelete

  26. @ வே.நடன சபாபதி
    அதுதாயின் கடமை. ஆனால் இப்போதெல்லாம் யாரும் காது கொடுத்துக் கேபதில்லை என்னும் ஆதங்கம் பலருக்கு. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  27. @ கீதா சாம்பசிவம்
    மண மகனுக்கு அறிவுரையாக நீங்கள் ஒரு பாடல் எழுதலாமே வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  28. @ கீதா சாம்பசிவம்
    முகநூல் குழுமங்களிலிருந்து நீங்கள்தான் சொலி இருக்கிறீர்கள்/ நான் மறக்கவில்லை. நண்பர் மாலி அனுப்பியது என்று பதிவிலேயே சொல்லி இருக்கிறேன்

    ReplyDelete

  29. @ கீதமஞ்சரி
    நகரத்தார்கள் மொழிப்பற்று மிகுந்தவர்கள். அதுதான் பாடலிலும் தெரிகிறதோ.? வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  30. இந்த காலத்தில் அறிவுரை சொல்லவே பயமாக இருக்கிறது.

    // தப்பிதம் நீ செய்தக்கால் தாரணியில் உள்ளவர் உன்
    அப்பன் குணமென்பார் உன் ஐயாவை நிந்தை சொல்வார்
    உன் மீது ஒரு குற்றம் உண்டானால் என் மகளே
    என் மீது ஏத்தி இவள் தாயின் குணம் என்பார்கள் //

    இந்த வரிகளில் தான் எவ்வளவு எதார்த்தம்; உண்மை. நல்ல அறவுரைப் பாடல் ஒன்றை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

  31. @ தி தமிழ் இளங்கோ
    நல்ல அறவுரைப்பாடலுக்குப் பாராட்டுக்கள் திரு மாலியையே சேரும். வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete