Thursday, November 23, 2017

நான்சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் ---1


                                    நான் சந்தித்த என்னை சந்திக்க வந்த  வலைப் பதிவர்கள்
                                     --------------------------------------------------------------------------------------
 2010ம் ஆண்டு இறுதியில் வலைப் பக்கம் ஆரம்பித்தேன் அப்போதெல்லாம் வலையில் எழுதுபவர்களை எப்படியாவது சந்தித்து நட்பை வளர்க்க எண்ணினேன்  பலருடைய பதிவுகளையும்  படிக்க ஆரம்பித்தேன்  மதுரையில் தலைமை ஆசிரியராய் இருக்கும்   மதுரை சரவணன் அவர்கள்பெங்களூர் யுனிவர்சிடிக்கு ஆங்கில மேம்பாட்டுக்க்கான பயிற்சிக்கு வருகிறார் என்று அவர் வலைப் பதிவின் மூலம் அறிந்தேன் அவரை சந்தித்து என்வீட்டுக்கு வரவழைக்க முடிவு செய்தேன்  முன்பின்பார்த்திராதவர் ஆனால் என் எழுத்துகளை அப்போதே ஊக்குவித்தவர் என்னும் முறையில் சரவணன் எனக்குப் பிரத்தியேக மாகத் தெரிந்தார் என் வீட்டிலிருந்து சுமார் 15 கிமீதூரமிருந்த யுனிவர்சிடி  வளாகம்சென்று அவரை சந்தித்து  அவருடன்  அங்கேயே மதிய உணவு உண்டு அவரையும்  என்வீட்டுக்கு அழைத்து வந்தேன் என் இளைய மகனை விட வயதில் சிறியவர் தன் பணியில் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர்  அவரை என் வீட்டில் தங்கிச் செல்ல வேண்டினேன் ஆனால் அதில் சிரமங்கள் இருக்கிறதென்று சொன்னார்  இரவு உணவாக என்மனைவி அவருக்கு தோசை வார்த்துக் கொடுத்த நினைவு அப்போதெல்லாம்  நான் ஒரு தனித்தாளில் எழுதி வைத்துப் பின்  தட்டச்சிடுவது வழக்கம்  அவர் நேராகவே தட்டச்சுக்குச் செல்வார் என்று அறிந்தது ஆச்சரியமாக இருந்தது ( இப்போது நானும் நேராகவே தட்டச்சு செய்கிறேன்   முதலில் வேர்ட் ஃபார்மாட்டில் எழுதி பின்  காப்பி பேஸ்ட் செய்கிறேன்  ) அன்று மாலை அவர் மதுரையிலிருந்த சீனா ஐயாவுக்குத் தொலை பேசி என்னையும்  அறிமுகம் செய்து வைத்தார் அவரை பேரூந்தில் ஏற்றி அனுப்பி வைத்தேன்  என்னை முதன் முதலில் சந்தித்த வலைப்பதிவர்  மதுரைசென்றதும்  என்னைப் பற்றி அவரது வலையில் எழுதி இருந்தது நெகிழ வைத்தது  பார்க்க  


மதுரை சரவணன்  


மதுரை சரவணன் என் வீட்டில் என்னுடன் 
அடுத்ததாக நான் சந்தித்தபதிவர் சமுத்ரா (என்னும் மது ஸ்ரீதர் )

முன்பெல்லாம் அதாவது ஓராண்டுகாலம்  முன் வரை  வலைத்தளத்தில்  எழுதிக்கொண்டிருந்தார்ஏனோ தெரியவில்லை  இப்போதுமுகநூலில் எழுதி வருகிறார் எதில் எழுதினால் என்ன அவர் ஒரு அறிவு ஜீவி  என்னை அவர் சந்திக்க வேண்டினேன் அப்போது  பெங்களூரில் இருந்தார்  இப்போது சென்னை வாசி அவர் கலிடாஸ்கோப் என்றும் அணு அண்டம்  அறிவியல் என்றும்  தலைப்பில் எழுதிக் கொண்டிருந்தார்  அவரது  மேதமை எனக்குப் பிடித்திருந்தது  சந்திக்க விரும்பி தெரிவித்தேன் என்னைக் காண வந்தே விட்டார் அவரது எழுத்துக்களைக் கொண்டு அவரை ஒரு பௌதிக பேராசிரியர், குறுந்தாடியுடன் இருப்பார் என்றெல்லாம்  கற்பனை செய்து வைத்திருந்தேன்  ஆனால் நேரில் கண்டபோது என்ன ஆச்சரியம் திருமணமே ஆகாத இளைஞர் அவரது பன்முக ஆளுமை என்னை ஆச்சரியப்பட வைத்தது அவரென்னவெல்லாமோ எழுதி இருந்தாலும்   என்னைக் கவர்ந்தது அவர் எழுதி இருந்த ஒரு சிறுகதை  கோவிலில் கூட்டிப் பெருக்கும் ஒரு மூதாட்டிபற்றிய  கதை அதன் கருத்து எனக்குப் பிடித்திருந்தது என் வீட்டுக்கு வந்தபோது என்மனைவி அவரைப்பற்றி கேட்டார் கோவையில் தந்தை இருப்பதாகச் சொன்ன நினைவு  அடிக்கடி ஓஷா சொன்னதாகச்  சில கருத்துகள் வெளியிடுவார். அவரது கலேடாஸ்கோப் விரும்பிப் படிப்பேன்  அணு அண்டம் அறிவியல் மிகவும் கனமான தலைப்புகள் கொண்டது  எனக்குப் புரியாதது அதையும்  அவரிடம் சொல்லி இருக்கிறேன்  கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர் போல் தெரிந்தது  ஒரு பாடலையும் பாடினார்  டேப் செய்திருந்தேன்   ஆனால் ரெகார்டர் பழுதானபின்  போட்டுக் கேட்க முடியவில்லை நினைப்பது அதிகம்  நினைவில் வருவது சொற்பம்  என்னைப் பற்றி சிலாகித்துச் சொன்னதாக திருமதி ஷைலஜா கூறி இருந்தார் 
மது ஸ்ரீதருடன் நான் 


மது ஸ்ரீதரனென்னும்  சமுத்ரா

தலைப்பே ஒரு மாதிரியாக இருக்கிறதே  நான்சந்தித்த பதிவர்கள் அதிகம்  பயணித்து சந்தித்தவர்களைப் பற்றி இப்போது எழுதவில்லை என்வீட்டில் வந்துசந்தித்தவர்கள்  பற்றிய தொடர் முதலில்
 ( இன்னும்  தொடரும்  )


Sunday, November 19, 2017

கலாச்சாரமா சரித்திரமா


                                        கலாச்சாரமா  சரித்திரமா
                                                             ------------------------

இப்போது தொலைக்காட்சிகளில் இரண்டு தொடர்கள் வருகின்றன
சன் டிவியில் விநாயகரும் விஜயில் தமிழ்க் கடவுள் முருகனும்  வருகின்றன இரண்டுமே நானிதுவரை அறிந்திராத கதைகளில்  பயணிக்கின்றன. இது வரை யாரும்  எந்த எதிர்ப்பும்சொன்னதாகத்தெரியவில்லை   கதைதானே சரித்திர நிகழ்வு ஏதும் இல்லையே. எழுதுபவரின் கற்பனைக்கு  நல்ல தீனி  கதை என்று யார் சொன்னது?  அவதாரக் கடவுள்களின்  வரலாறு  அல்லவா என்று சிலர் பொய்ங்கக் கூடும் ( அதிரா மன்னிக்க )என்னைப் பொறுத்தவரை இவையெல்லாம்கதைகளே  இதில் நிஜமெது பொய் எது என்னும் ஆராய்ச்சிக்கு நான்  போவது இல்லை  கற்பனையை ரசிக்க முடிந்தால் ரசிப்பேன்  அப்போதும் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது முருகன் கடவுள் என்றால் அவன்யாருக்குச் சொந்தம்தமிழர்களுக்கா  ஏன்  இந்த மொழி அடையாளம் வடக்கில் கார்த்திகேயன் என்றும்  ஸ்கந்தன் என்றும்  பிரம்ம சாரியாக அறியப்படும் கடவுள் தமிழகத்தில் ஏகப்பட்ட கதைகளுடன் உலா வருகிறார் அதில் இதுவுமொன்று  சரி எதற்கு இந்த சர்ச்சை எல்லாம்  வடக்கே பன்சாலி என்பவர் பத்மாவதி என்னும் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்  அதை வெளியிடும் முன்னே பயங்கர எதிர்ப்பு.  எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார்? ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு  அமைப்பு . இதுவரை கேட்டறியாத பெயர்  கர்னி சேனாவாம் பன்சாலின்  தலையைக் கொய்து விடுவோமென்றும்  அதில் நடித்திருக்கும்  தீபிகா படுகோனேயின்  மூக்கை அறியப் போவதாகவும் மிரட்டல்  படமே இன்னும்  தணிக்கை  ஆகவில்லை இதை வெளியிடுவது லா அண்ட் ஆர்டருக்கு பங்கம்விளைக்கும் என்று வலியுறுத்தி உத்தரப் பிரதேச காவியரசு மத்திய அரசுக்கு  வலியுறுத்தி இருக்கிறது/

இன்று ஆங்கில தினசரி த ஹிந்து வில்  ஒரு கட்டுரை சரித்திரத்தில் பத்மாவதி என்னும் பாத்திரமே இருந்ததா என்னும் சந்தேகம் எழுப்பி இருக்கிறது  நான் பள்ளியில் படிக்கும் போது சரித்திர பாடத்தில் சித்தூர் ராணி பத்மினி மேல் ஆசைப்பட்டு  அலாவுதின் கில்ஜி அவரைப் பார்க்க வந்ததாகவும் அந்த சந்திப்பில் பத்மினி ராணிக்கும் கில்ஜிக்கும்நடுவே ஒரு திரைச் சீலை இருந்ததாகவும்  சீலையின்  நிழலில் கண்டராணியின் நிழலே அழகாயிருக்க அதில் கில்ஜி மனம் பறி கொடுத்ததாகவும் படித்த நினைவு  இது நடந்த காலகட்டம்  சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முந்தையது என்றும்  சரித்திர  சான்றுகள் ஏதுமில்லை என்றும் படித்தேன் செவி வழி கேட்டு வந்த நாடோடிக் கதைகள்

 விநாயகரும்  முருகனும்  இப்போது பல்வேறு கற்பனைகளுக்கு இடம்கொடுப்பது போல் இந்த சித்தூர் ராணியின் கதையும்  செவி வழிக்கேட்டு வந்தகதைதான் போல் இருக்கிறது எதற்கென்றெல்லாம்   போராடுவது பயமுறுத்துவது என்னும்கணக்கே இல்லை. எல்லாவற்றையும்  மதம் இனம்    கலாச்சார மென்னும் போர்வையின்  கீழ் தவறாகவே பார்க்கிறார்கள் என்றே தோன்று கிறது  ஊடகங்களே பற்பலகதைகளைத் திரித்து விடும்போது சிந்தனைக்கும் கற்பனைக்கும்  வழி கொடுக்கும்  சினிமா மட்டும்  விதி விலக்கா. பல இறைக் கதைகளை சினிமா வாயிலாக அறிந்தவர்களே அதிகம் ஆனால் எல்லாவற்றையும்  உண்மை என்று மயங்கலாமா  என்பதே என்  கேள்வி 
Thursday, November 16, 2017

உதவும் கரங்கள்


                                   உதவும்கரங்கள்
                                    -------------------------
 சென்னையில் இருந்து சுமார்  20 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இடம் திருவேற்காடு  பக்தர்களுக்கு தெரிந்திருக்கும்  கருமாரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆனால் என்னை பொறுத்தவரை  இதை விட பிரசித்தி பெற்ற இடம் அங்கு இருக்கிறதுஅனாதைகளாக்கப்பட்ட சுமார் நானூறு குழந்தைகளுக்கும்  ஆதரவற்ற முதியோர்களுக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட பலருக்கும் அன்பு கரம்  நீட்டி ஆதரவளிக்கும் இல்லம்  உதவும் கரங்கள். அதை இயக்குபவர் வித்தியாகர் என்னும்பெயருடைய பிரம்மசாரி  அங்கிருக்கு எல்லாக் குழந்தைகளுக்கும்  பப்பா .
இவர்களது இயங்குமிடம் முதலில் சென்னை அரும்பாக்கத்தில் என் எஸ்கே நகரில் இருந்தது  எனக்கு இந்த தொண்டு நிறுவனம்பற்றி  1993ம் வருட வாக்கில் தெரிய வந்தது
நான் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று வந்தகாலம்  என் எஞ்சிய நாட்களை இம்மாதிரி ஏதாவது நிறுவனத்துக்கு உதவியாக செலவிட நினைத்தேன்  ஆனால் எண்ணம் மட்டும் போதாதே சூழ்நிலையும்  சரியாக இருக்க வேண்டுமே என்னதான் இருந்தாலும் என்னால் முடிந்த அளவு உதவ எண்ணம் இருந்தது  அங்கு சென்றுவிசாரித்தபோதும் அங்கு இருந்தகுழந்தைகளைப்பார்த்தபோதும் ராமனுக்கு பாலம்கட்ட உதவிய அணில் போன்று ஏதாவது செய்ய  விரும்பினேன் அனாதை குழந்தைகளுக்கு படிப்பு முக்கியமாக விளங்கும்   என்பதனாலும் எனக்கு பெண்குழந்தை இல்லை என்னும் காரணத்தாலும்  அங்கிருக்கும்  ஏதாவது ஒரு பெண்குழந்தையின்படிப்புச் செலவை நான்  ஏற்க முன்வந்தேன்   வித்தியாகரும் மகிழ்வுடன் சம்மதித்தார்  ஒரு குழந்தைக்கு படிப்புக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார்  2500 ரூபாய் செலவாகும் என்றார்  ஆனால் நான் ஒருநிபந்தனை விதித்தேன்   நான் உதவும் குழந்தை யார் என்று எனக்குத் தெரிய வேண்டும் என்றேன்   அவரும்  சம்மதித்து ஒரு பெண்குழந்தையின்  புகைப்படம் காட்டினார் அந்தப் புகைப்படத்தை நான்  எங்கோ மிஸ்ப்லேஸ் செய்துவிட்டேன்   குழந்தையின் பெயர் அழகானது நித்தியகல்யாணி எனக்கோ எந்த வருமானமும் இருக்க வில்லை ஆனால் செலவோடு செலவாக ஆண்டுக்கு ரூபாய் 2500 பெரிதாகப் படவில்லை மேலும்  நா ந் பெங்களூரில் இருந்தேன்  அந்த நிறுவனம்  சென்னையில் இருந்தது சென்னைக்கு அவ்வப்போது செல்வதுண்டு  திருவித்தியாகர் மிகுந்த சிரமங்களுக்கு இடையே அந்த தொண்டாற்றி வந்தார்.  அவருக்கு இருக்கும் இடத்தில் பல பிரச்சனைகள் இருந்தது  நல்லசெயலைப் பாராட்டா விட்டாலும்   பிரச்சனை தராமலிருந்தால் சரி என்னும் நிலையில் இருந்தார் ஆனால் விடாது உழைக்குமந்த மனிதரிந்தொண்டுநிறுவனம் இப்போது பல கிளைகள் பரப்பி சொந்த இடத்தில் வசிக்கு இடங்களுடன்    கல்வி சாலைகளும்  கொண்டுஇயங்குவது மனதுக்கு திருப்தி அளிக்கிறது அந்தப் பெண் நித்திய கல்யாணியின் வளர்ச்சி பற்றி அவ்வப்போது வித்தியாகர் தெரியப்படுத்தி வந்தார்  ஒரு முறை என் இளைய மகனுடனும் என் பேத்தி மற்றும் மருமகளுடன்  சென்று அப்பெண்ணைக் கண்டு வந்தோம்   அவள் படிப்பிலும் நுண்கலைகளிலும்   தேர்ச்சி பெற்றுவந்தாள்  ஒரு முறை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடனமும் ஆடி யிருக்கிறாள் ஆனால் சமீப காலமாக அங்கு நான்செல்லவில்லை  என் இந்தச் செயல் என்மூத்தமகனையும்   ஒரு குழந்தையை அடாப்ட் செய்ய வைத்தது  அடுத்தமுறை  சென்னை செல்லும் போது திரு வேற்காடுசெல்ல வேண்டும்  எங்கோ பிறந்து யாராலோ வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின்பள்ளி இறுதி படிப்பு வரை நான்  என்னால்முடிந்த உதவி செய்திருக்கிறேன்  என்பது மகிழ்ச்சி  தருகிறது. இங்கும் பெங்களூரில் வந்த புதிதில்  ஸ்ரீ ஐயப்பா கோவில் நடத்தும்  பள்ளிக்கும்  டொனேட் செய்திருக்கிறேன்  இதெல்லாம் மகிழ்ச்சியான செய்திகள் நினைத்துப்பார்க்க வைக்கிறது
 கோவில்களுக்கு செல்கிறோம்  ஆண்டவனுக்கு காணிக்கை செலுத்துகிறோம்   ஆண்டவனின்  குழந்தைகளுக்கும் உதவுவது நல்ல தல்லவா  சென்னையில் இருப்பவர்கள் ஒருமுறை திருவேற்காடு உதவும் கரங்களுக்குச் சென்று  பாருங்கள் உங்களை அறியாமலேயே மனதில் ஈரம் சுரக்கும்                                
 
என் பேத்தியை தூக்கிக் கொண்டிருப்பது நித்திய கல்யாணி  வலதுஓரத்தில் வித்யாகர் 
   

Sunday, November 12, 2017

பிறந்த நாளும் மண நாளும்                                       பிறந்த நாளும்  மண நாளும் (11-11 02017 )
                                       --------------------------------------------------------------
வணக்கத்துடன் பதிவு தொடங்குகிறது மயிலைப் பாருங்கள்  வரவேற்கிறது

பிறந்த நாளும் மணநாளும் 

 ஆண்டொன்று போக அகவை ஒன்று கூட
இன்றுறங்கி நாளை எழுவேனா என்றறியாமலேயே
சேர்த்துவிட்டேன் ஏழு பத்துகளுடன் ஒன்பதாண்டுகள்
ஆசை எனும் அரவமே அனைத்து வினைகளுக்கும்
ஆதி காரணம் என்றறிந்தும் பாசவலையில் கட்டுண்டு
காலம் கழிந்து விட்டது.. அன்பால் கட்டுவதும்
அன்பினால் கட்டப் படுவதும் இன்பம்தான்
மறுப்பதற்கில்லை, மறப்பதற்கில்லை. .புவியில்
வந்துதித்த நாளே இல்லத் துணையுடன் சேர
தேர்ந்தெடுத்த நாளும் எனும்போது கூடுகிறது
மகிழ்ச்சி குறையில்லாப் பொலிவுடன்

அல்லல்கள் பலவற்றோடு அனுபவங்கள்
கற்றுத் தந்த பாடங்கள் அசைபோட்டு உணரும்போது
இன்னுமொரு வாழ்வு அமையுமானால் , கேள்வி எழுகிறது,
இதையே தேர்ந்தெடுப்பேனா என்று. .நிச்சயமாய் இதையே
தேர்ந்தெடுப்பேன், என்னில் இருந்த சில குறைகள் நீக்க
எனக்கொரு வாய்ப்பு அது நல்குமல்லவா.?

குறைவற்ற வாழ்வுதனை நிறைவாக வாழ்ந்து விட்டேன்.
இனி எனக்கொரு குறையிலை நான் தயார் யாரும்
அறியாத அண்டப் பேரண்ட வெளிக்குள் ஒளியிலோ இருளிலோ
நான் நுழைய, இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
வலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..!
தந்தை
தாய்
நான் 
மனைவி 
எங்கள் திருமணத்தின் போது (1964)


சஷ்டியப்த பூர்த்தியில் (1998)
எங்கள் மண நாளில் அவளுக்கும் வாழ்த்து சொல்வது கடமையல்லவா 

ஏதுமறியாப் பாவையாய் இளங்கன்னியாய்
என் கைப்பிடித்தவளைக் காணும்போதெல்லாம்
என்  மனம் ஏனோ அல்லல் படுகிறது

வெறும்  களிமண்ணாய் வந்தவளை நன்கு பினைந்து
குயவன்  கைப் பானையாய் வளைத்துச் செதுக்கினேன்
எனப் பெருமைப் படுவாள் பாவம்
அவள் அறிய மாட்டாள் ஐம்பத்திமூன்று ஆண்டுகள்
என்னுடன் இருந்தது எத்தனை அரிய செயல் என்று
இன்று ஓர்க்கிறேன் தாயில்லா என்னைத் சேய் போல் கவனித்தாள்
தாரமும் ஒரு தாய்தானே
   அன்னையவளைத்  தேடி நான் அலைந்தபோது
சுந்தரி  இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே -,
நிறுத்தினேன்  இவளை என் அகத்தினுள்ளே.,
தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.

யாதுமாகி  நின்றாள்.. தாய்தன்னைக் காணாதவன்
 தாரமாக  வந்தவளை நெஞ்சமெலாம் 
நிரப்பி ,   சஞ்சலங்கள் நீக்கிய  சேயானேன்.
 .
பிள்ளையாய்ப்  பிறந்து ,பாலனாய் வளர்ந்து
காளையாய்க்  காமுற்றுஎனதவளைக் கைப்பிடித்து
இளமை ஒழிந்து  மூப்புறும்  நிலையில்
 எல்லாம் செத்துநாளை  எண்ணுகையில் 
எனக்கு நானே  அழாதிருக்க,

காக்கின்ற  கண்களால்  கருணை வெள்ளம்
கரைபுரளபூக்கின்ற  புன்னகையால் ,
ஆறாத  மனப் புண்ணின்  அசைவலைகள் 
அடங்கவே  அளித்தருளி அன்னையாய்
,என்னை ஆட்கொள்ள  வந்தவளே எனக்கு நீ
யாதுமாகி நிற்கின்றாய் வாழி வாழியவே

பிறந்த நாள் வாழ்த்து

வாரிசுகளுடன் 
மகன்களுடன் 

இப்போதெல்லாம் கேக் வெட்டாமல் பிறந்த நாள் இல்லையே 


பிறந்த நாள் கேக்


பதிவின் முலமும்  முகநூல் மூலமும்  அஞ்சல் மூலமும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்
    

Thursday, November 9, 2017

ஒன்றிலிருந்து இன்னொன்று


                                          ஒன்றிலிருந்து இன்னொன்று
                                          ----------------------------------------------
ஒன்றிலிருந்து இன்னொன்று
சில தினங்களுக்கு முன்  இலக்கிய சிந்தனைகள் கலந்த பதிவு ஒன்று எழுதி இருந்தேன்  ஆனால் அதில் கண்டிருந்த இலக்கிய வரிகளை கன்வீனியண்டாக ஒதுக்கிவிட்டு  பெண்களின் அழகு பற்றிய சிந்தனைகளுக்குமட்டும் பல்வேறு  பின்னூட்டங்கள் வந்திருந்தனஎனக்கும்  ஏதோ சில விஷயங்களே வாசகர்கள் கவனத்தை ஈர்க்கிறது என்பது புரிந்தது ஆகவே அதே சிந்தனையில் இதை சற்றே விரிவாக எழுதுகிறேன் அதுவும் ஒரு காதலிக்கு எழுதுவதுபோல் இருந்தால் கொஞ்சம்கூடுதலான கிக் கிடைக்கலாம்
                               
அன்புள்ள காதலிக்கு, இந்தக் கடிதம் படிக்கத் துவங்கும் போது உன் முகம் சிவப்பது உணருகிறேன். இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று  வெட்கத்தால் ஏற்படுவது அடுத்தது கோபத்தால் ஏற்படுவது. வெட்கம் புரிந்து கொள்ளக் கூடியது. கோபம்....? பொத்தாம் பொதுவாகக் காதலிக்கு என்று எழுதினால் கோபம் வராதா என்ன...?இந்தக் கடிதம் , அன்பே, எல்லாக் காதலிகளுக்கும் பொருந்தும். அதனால்தானே யாவரும் படிக்கும்படியாக எழுதுகிறேன்.

அநேகமாக காதலிப்பவர்கள் என்ன பேசுகிறார்கள்.? எல்லாம் பேசுவார்கள். ஆனால் எதுவுமே பேசி இருக்க மாட்டார்கள். இதுதானே நடைமுறை. ?. ஒருவரின் ரூப லாவண்யத்திலோ , கம்பீரத்திலோ மனதைப் பறி கொடுக்கிறார்கள், ஏதோ சொல்லத் தெரியாத கவர்ச்சியே அடுத்தவரிடம் மனம் ஈர்க்கச் செய்கிறது. அழகு என்பது அதில் ஒன்றுதான். இல்லையென்றால் அழகில்லாதவர் காதல் வசப் படுவதில்லையா ? இந்தமாதிரியான எண்ணங்களே, கண்ணே , என்னை “ இன்னார்க்கு இன்னார் “ என்று ஒரு பதிவு எழுத வைத்தது. அறிந்துகொள்ள உந்தப் பட்டால் படித்துப் பார்.

ஒருவர் கண்ணுக்குத் தெரியும் ஒருவித அழகு, மற்றவர் கண்ணுக்குப் புலப் படாமல் போகலாம். இதைத்தான் ஆங்கிலத்தில் “  BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER “  என்பார்கள். அது போகட்டும். எனக்கு உன் மீது காதல் ஏற்பட்டது ஒரு அந்திமாலைப் பொழுது. . செக்கச் சிவந்த ஆதவனின் கிரணங்கள் மேற்கே மறையும் தருவாயில் ,  உன் கன்னச் சிவப்பு முன் நிற்க முடியாமல் , கோபத்தில் அவன் வானத்தையே இருளச் செய்ய முயன்று கொண்டிருந்தானே, அப்போதுதான். கூடவே வானில் வெள்ளி நிலவு தலை காட்டி உன் அழகை மேலும் பிரகாசிக்கச் செய்தது கண்டேன். பின்னொரு தினம் அந்த நாளை நினைத்து உன்னிடம் ஒரு கவிஞன் எழுதியதை நினைவூட்டினேன். ஞாபகம் இருக்கிறதா. ?நிலவைப் பிடித்து , அதன் கறைகள் துடைத்து, ,குறு முறுவல் பதித்த முகம் “ இப்பொழுது அதை எண்ணிப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து குறு முறுவல் பதித்தால் எப்படி இருக்கும். ? கணினியில் உபயோகிக்கப் படும்  SMILEY  போல் இருக்கும். ..!ஒரு விஷயம் பிடித்து விட்டால் என்ன குறை இருந்தாலும் அடிபட்டு விடும். அன்பே.... இது முக்கியம்...! இந்தமாதிரியான விருப்பும் வெறுப்பும் புற அழகில் கட்டுண்டிருக்கும்போதோ, அதிலிருந்து மீண்ட போதோ மட்டும்தான் தலை தூக்கும். உண்மையான காதல் முதலில் புற அழகால் தோன்றினாலும்  நாள்பட நாள்பட ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்போது வலுவாகும்.
கண்டவுடன் காதல் என்பது பொதுவாக ஆண்களுக்குத் தான் ஏற்படுகிறது. பெண்கள் காதல் வசப் பட்டு இருக்கிறார்களா என்பதை அறிவதே பெரும்பாடு. அக அழகைக் காண அவர்கள் அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள் போலும். நான் முன்பே சொன்னதுபோல் காதலர்கள் சந்தித்துப் பேசும்போது, அவர்கள் காதலை உறுதிப் படுத்திக் கொள்வதாக நினைத்து அது குறித்து மட்டும் பேசுகிறார்கள். காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை திருமணத்துக்குப்பின்னும் தொடரச் செய்வது மிகவும் அவசியம். காதலிக்கும்போது குறைகள் தெரிவதில்லை. திருமணத்துக்குப் பின் அவைதான் பூதாகாரமாகத் தெரியும். A PERFECT PERSONALITY  என்று யாரும் கிடையாது. குறைகளும் நிறைகளும் ஊடுருவி இருப்பதே மனித இயல்பு.

காதலிக்கும்போது எல்லாம் இன்ப மயமாக இருக்கும். காதலிப்பவரால் தேடப் பட்டும் விரும்பப் பட்டும் இருக்கும் நிலை மகிழ்ச்சிதருவது நிச்சயம் கிடைத்த பிறகு சில எதிர்பார்ப்புகள் நிறை வேறாதபோது வருத்தம் தோன்றுவதும் நிதர்சனம். இவ்வளவையும் நான் உன்னிடம் நேரில் சொல்ல முடியாதா என்ன. ? முடியும். ஆனால் மூடியாது. .! எங்கே என்னைப் பற்றிய உன் எண்ணங்கள் மாறிவிடுமோ என்னும் பயம் என் வாயை அடைத்து விடும். உனக்குள் ஆயிரம் கனவுகள் இருக்கும். கனவுகளும் நிதர்சனங்களும் ஒரு கோட்டில் சந்திக்கும்போது திருப்தியும் மன நிறைவும் ஏற்படுமானால் காதல் வெற்றி அடைந்து விட்டதாகக் கொள்ளலாம்.

பொதுவாகக் காதலிக்கும்போது ஒன்றை மறந்து விடுகிறோம். காதலிக்கும் நபர் தனி மனிதர் என்று தோன்றினாலும் அவருக்கும் உறவு, சுற்றம்  எல்லோரும் இருக்கிறார்கள்.என்பதை மறக்கக் கூடாது. பதின்பிராயங்கள் வரையிலும், சில நேரங்களில் அதற்கு மேலும் வளர்ந்த சூழலை  எல்லாம் மறந்து விட்டு கணவன் , மனைவி என்று மட்டும் நினைப்பது சரியாகாது. நம் சமுதாயத்தில் பெண்களை நாற்றுக்கு ஒப்பிடுகிறார்கள். அவள் வேறு ஒரு நிலத்தில் பயன் தர வேண்டியவள் என்று எண்ணுகிறார்கள்.நாற்று நடும்போது, நாற்று மண்ணும் சேர்ந்திருந்தால்தன் பயிரின் பலன் சிறப்பாய் இருக்கும் . ஆகவே பெண்ணின் பிறந்த வீட்டு நல்லெண்ணங்களுடன் அவள் வாழ்க்கை துவங்க வேண்டும். ஆனால் மாறிவரும் சூழ்நிலையில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ வேண்டும். அதே சமயம் உறவுகளுடனான பந்தங்கள்  பலமாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அன்பே, திருமண பந்தத்தில் சேரவிரும்பும் நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. இந்த பந்தத்தினால் தழைக்கப் போகும் வம்ச வுருட்ச வேரூன்றி இருக்க  கண்வன் மனைவி பங்களிப்பு மகத்தானது. இது செய் ,அது செய் என்று கூறி வளர்க்கப் படும் பிள்ளைகளை விட, நாம் வாழ்ந்து காட்டும் முறையைப் பின் பற்றும் பிள்ளைகளே அதிகம். ஆகவே அவர்களது வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக நாம் இருப்பது அவசியம்.

என்னடா இது  காதல் கடிதம் எதிர் நோக்கி இருப்பவளுக்கு ,, வாழ்வு முறை பற்றிய பாடமாக இருக்கிறதே என்னும் உன் எண்ணம் புரிகிறது. செல்லமே, சிந்தித்துப் பார். நாம் எத்தனை முறை உரையாடி இருப்போம். SWEET NOTHINGS  தவிர ஏதாவது பேசியிருப்போமா. என்னை நீ நன்றாகப் புரிந்து கொள்ள என் சிந்தனைகளின் போக்கும் உனக்குத் தெரிய வேண்டும் அல்லவா. நான் எண்ணுவதைக் கூறிவிட்டேன். உன் சிந்தனைகள் ஒத்து இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. மாறுபட்ட கருத்தோ, வித்துயாசமான எண்ணமோ இருந்தால் நீயும் எழுது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையே சிறக்கும்.

கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் “ நான் வேண்டுவதெல்லாம்  நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான் “
அப்படி இருக்க இந்த மடலை இன்னுமொரு முறை படித்துப் பார். . வேண்டியது கிடைக்க நினைத்து எழுதப் பட்டதே இக்கடிதம். இது நமக்கு மட்டும் பொருந்துவதல்ல. காதலிப்பவர் அனைவரும் உணர வேண்டியது.
எங்கெங்கு நோக்கினும் சக்தியடா... என்றான் முண்டாசுக் கவிஞன். ஆனால் எனக்கோ எங்கெங்கு நோக்கினும் உன் உருவே என் முன் நிற்கிறது. என்றும் உன் நினைவுடன்........ உன் அன்பன்.
Monday, November 6, 2017

நினைவடுக்குகளில் இருந்த ஒருபயணம்


                           நினைவடுக்குகளில் இருந்த ஒரு பயணம்
                        ----------------------------------------------------------------------
  1985 என்று நினைக்கிறேன்  திருச்சி பி எச் இ எல்  லில் பணியிலிருந்தேன்  இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை குடும்பத்துடன்  பயணிக்க நிறுவனமே  பயணப் போக்கு வரத்துச் செலவை ஏற்றுக் கொள்ளும்  நாங்கள்  ஒரு சுற்றுப்பயணத்துக்குத் திட்டமிட்டோம் திருச்சி கோவை உதகை மைசூர் மூகாம்பிகா பேளூர் ஹளேபீட்  பெங்களூர் திருச்சி என்று திட்டமிட்டோம் அப்போது எங்கள் வீட்டில் எங்கள் செல்லம்  செல்லியும் (பார்க்க சுட்டி)  இருந்தது சுமார் ஒரு வாரகாலம் அதை தனியே விட்டுச் செல்ல முடியாது என்பதால் அதையும் கூட்டிச்செல்லத் திட்டமிட்டோம்    ஆனால் ஹோட்டல்களில் அதை அனுமதிப்பார்களா  என்று சந்தேகம்  இருந்தது. அப்படியானால் எங்களில் ஒருவர் காரிலேயே செல்லியுடன்  தங்கிக் கொள்கிறோம்  என்று மகன்கள்சொல்ல செல்லியையும் கூட்டிப்போக முடிவெடுத்தோம்
முதலில் திருச்சியிலிருந்து கோவை சென்றோம்  கோவையில் என் நண்பரின்  மகளும்  மருமகனும் இருந்தனர்.  நண்பரின் மருமகனுக்கு நாய் என்றாலேயே ஒரு பயம்  அலர்ஜி. அன்று மாலை சேர்ந்தோம் இரவு தங்கி  காலையில் புற்ப்படத்திட்டம்  செல்லியைநன்கு கட்டிப் போட்டு அவருடைய பயத்தை ஓரளவு குறைத்தோம்  மறு நாள் விடிகாலையிலேயே நீலகிரி நோக்கிப் பயணம்   பள்ளியில் நான்  படிக்கும் போது அப்பர் கூனூரில் இருந்தோம்  என்மனைவிக்கும்  பிள்ளைகளுக்கும் நாங்கள் தங்கி இருந்த சுற்றுப் புறத்தை காட்ட முதலில் கூனூர் போனோம்   அங்கே சிம்ஸ் பார்க் அருகே வீடு  ஆனால் வீடுஇருந்த சுவடே இல்லை  ஆனால் தோராயமாக  நாங்கள் இருந்த       இடத்தை எதிரே தெரிந்த மலை முகட்டை வைத்து அடையாளம் காட்டினேன்   அந்த மலை முகட்டுக்குப் பெயர் டானரிஃப் நாங்கள் குடி இருந்த வீட்டிற்கு டானரிஃப் வியூ என்று பெயர்   கூனூரில் நான் முதன்  முதலில் பணியிலிருந்த மைசூர் லாட்ஜ்  என்னும் இடமும் கூனூர் ரயில் நிலையத்துக்கு  மேல் முகட்டில் இருந்தது அதையும் என் பிள்ளகளுக்குக் காட்டி ஊட்டி சென்றோம் அங்கே பொடானிகல் கார்டன் இடத்தில் சிறி து உட்கார்ந்து பயணத்தைத் தொடர்ந்தோம்   எப்படியும்  மாலைக்குள் மைசூர் செல்லத் திட்டம்  போகும் வழி முதுமலைக் காட்டுக்குள் போய் ஆக வேண்டும்  போகும் வழியில் சாலை நடுவே ஒரு காட்டு யானை நின்றிருந்தது  காரை சற்று தூரத்தில்நிறுத்தினார் ட்ரைவர்  எங்களுக்கு செல்லி அசம்பாவிதமாகக் குரைத்து யானையின் கவனத்தை  ஈர்ப்பாளோ என்ற பயம் ஆனால் செல்லி எங்கள் கால்களுக்கடியே நல்ல தூக்கத்தில் இருந்தது  முதன் முதலில் இம்மாதிரிப் பயணம் அதற்கும்   புதிது ஒரு மாதிரி அனீசியாகவே இருந்தது மைசூர் போகும்  வழியில் நஞ்சன்கோடு இருந்தது கோவிலை வெளியே இருந்தே பார்த்துபயணம்  தொடர்ந்தோம்   மைசூர் சென்று ஒரு ஹோட்டலில் அறை எடுத்தோம்   செல்லி இருப்பதைச் சொல்லவில்லை  நாயும் பவ்யமாக இருந்து இருப்பைக் காட்டிக் கொள்ளவில்லை  அறைக்குச் சென்ற்தும்  எல்லா மூலைகளையும் மோப்பம் பார்த்து வந்துஓரிடத்தைல் செட்டில் ஆகியது மறு நாள் ஹோட்டலைக் காலி செய்து பயணம் புறப்பட்டோம்  நாங்கள்சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்றோம்  செல்லி காரிலேயே என் மகன் ஒருவனுடனிருந்தது  பிறகு மைசூரின் பிரதான இடமாகிய பேலசுக்குச்சென்றோம்   வெளியில் இருந்தே பார்த்து கிளம்பினோம் அங்கிருந்து மூகாம்பிகை கோவிலுக்குப்போனோம்   அங்கும்  விடுதியில் செல்லியை யாரும் கண்டு கொள்ள வில்லை 
அப்போதெல்லாம் ஒரு இடத்துக்குச்சென்றால் ஈடுபாடு எதுவும் இருந்ததில்லை எதையும் கவனித்துப்பார்த்ததுமில்லை கோவில் என்பதே போவது ஒரு மாற்றத்துக்காகத்தான்  என் மனைவிக்காகத்தான் அன்கிருந்து பேளூர் ஹளேபேட்  என்னும் இடத்துக்கும் சென்றோம்  மழை பெய்ஹு கொண்டிருந்த நினைவு இரவு வேளை சாலையில் எங்கள் கார் தவிர வேறேது மில்லை.  திடீரென்று ட்ரைவர் ப்ரேக் போட்டுக்காரை நிறுத்தினார்  ஏன்  என்று கேட்டதற்கு வழியில் ரோடில் ஒரு பாம்பு சென்றதாகவும்  அதன் மேல் காரை ஏற்றாமல் இருக்க நிறுத்தியதாகவும் கூறினார்  கார் பாம்பி மேல் ஏறினால் ட்ரைவருக்கு ஆபத்து என்னும் எண்ணத்துடன் இருந்தார்  சாலையில் பாம்பு  ஏதுமில்லை என்று உறுதி செய்து கொண்டபின்  பயணம் தொடர்ந்தது  இதன் நடுவே என் இளைய மகனுக்கு நல்ல சுரம்  இருந்தது  விந்திய கிரி என்னும் இடத்தில் கோமடேஸ்வரரின் மிகப்பெரிய சிலை இருந்தது. நானும் என்  மூத்தமகனும் மலை ஏறிப் போனோம் கீழே என் மனைவி என் இளையமகன்  கார் ட்ரைவர் மற்றும் செல்லி இருந்தனர்  சிலையைப் பார்த்துவரும்போது எங்கள்காரைச் சுற்றி ஒரே கூட்டம் என்னவென்று வந்து பார்த்தால் பலரும் எங்கள் நாய் செல்லியைப்பார்க்கக் கூடி இருந்தனர் பலருக்கும் அது நாயா கரடியா என்னும் சந்தேகம்  நாய் என்று சொன்னாலும் நம்பாமல் அதை குரைக்கச்சொல்லிக் கேட்டனர் ஒரு வழியாக அவர்களிடம் இருந்துதப்பித்துப் போனோம்  பேளூர் ஹளேபேட் போன்ற இடங்களில் சிற்பக் கலையின்  உச்சத்தைக் கண்டோம்  இன்றுபோல் இருந்திருந்தால்  எத்தனையோ செய்திகள் சேகரித்து இருப்பேன்   பிறகு அங்கிருந்து நேராகபெங்களூரில் என் மாமியார் வீட்டுக்குப் பயணித்தோம்பெங்களூரில் நல்ல வரவேற்பு  முடிந்து மறு படியும் திருச்சி நோக்கிப் பயணம்   பயணம்  முடிந்து போகும் போது ட்ரைவர் செல்லியின்  கால் நகங்களால்  காரின்  கதவுப் பகுதியில் நிறையவே ஸ்க்ராட்ச் ஆகி யிருப்பதை காட்டினார்  ஒரு வழியாக அவரை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தோம் வெறும் நிகழ்வுகளை நினைவில் இருந்து மீட்டெடுத்தபதிவு இது எனக்கே ஏதோ டாகுமெண்டரி படம்பார்த்துச் சொன்னது போல் இருக்கிறது  பழைய படங்களை டிஜிடைஸ் செய்து பதிவிட்டிருக்கிறேன் 
எங்கள் செல்லம் செல்லி 

அப்பர் குனூரில் டானெரிஃப் மலை பின்னணியில் 
 
குனூரில் நான் பணியில் இருந்த இடமருகே
  
உதகை பொடானிகல் கார்டெனில்
  
மைசூர் பாலஸ் முன்னால் 
,
மூகாம்பிகை கோவில் முன் 

           
பேளூர் ஒரு காட்சி 

பேளூர் இன்னொரு காட்சி 
 
ஹளே பேடு  சிற்பங்கள் 

ஷ்ரவனபலெகொளா  கோமடேஸ்வரர் 


பெங்களூரில் 

    ,
           

.   
Thursday, November 2, 2017

சிந்தனைகள் இலக்கியங்கள் கலந்தது


                         சிந்தனைகள் இலக்கியங்கள் கலந்தது
                                            --------------------------
 பொழுது போக்க முடியாமல் திணரும்போது வாசலில்வந்து நின்றால் பொழுதே போதாது என்னும் வகையில் சிட்டுகளைக் கண்டு ரசிக்க முடியும்  எனக்கும் அவ்வப்பொது ஒரு சந்தேகம் வரும்  பெண்களை அழகாக்கிக் காட்டுவது எது  என் மனைவியிடம் கேட்டால் அவர்களது மனம்  என்கிறாள் ஆனால் மனதைப் பார்த்தா அழகை ரசிக்கிறோம்   நீயா நானா பகுதியில் பெண்களிடமே கேட்க வேண்டிய கேள்வி இது
பதிவை எழுதும் முன்  என்னையே நான் கேட்கும் கேள்வி இந்த ஆராய்ச்சி எதற்கு அதுவும் இந்தவயதில்  வயது பற்றிய நினைப்பு இருந்தாலும்  a thing of beauty is a joy for ever  என்பதையும்மறுப்பதற்கில்லைதானே
இன்று நான்  எண்ணிப்பார்ப்பது 

அன்றொரு நாள் பதிவொன்றில் குப்புற வீழ்ந்தெழுந்தபோது
முண்டாசுக் கவிஞனின் வரிகளை எண்ணி,
காலா, அருகினில் வாடா, சற்றே மிதிக்கிறேன் உனை என்
காலால்என்றே எழுதினேன். காலன் யானையின் காலாக
வந்து அவனையே மிதித்து விட்டான். நான் எம்மாத்திரம்.?

காலனுக்கென்ன பைத்தியமா பிடித்தது என் காலருகே வர.?
என் தோளில் தொற்றி ஏறி,காதருகே முணுமுணுக்கிறான்,
உன் நாட்களை எண்ணிக்கொள்”.எண்ணிப் பார்க்கிறேன்
இருக்கும் நாட்களை அல்ல, இருந்து வந்த நாட்களை.

பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,
காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?

ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
 கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?
இப்போது அந்த எண்ணம்  ஏன் 
சரி மீண்டும் ஆராய்ச்சிக்கு வருவோம் பெண்களின்  அழகு என்று சொல்லப்படுவது எது  என்மனைவி சொல்வது தவிர.  பொழுது போக வாசலில் நிற்கும் போது  வீதியில் செல்லும் பெண்கள் என்னை கவருகிறார்கள் எங்கள் பக்கத்தில் ஒரு பெண் மூக்கும்  முழியுடனும்  மார்பும் முலையுமாக இருந்தால் அழகு என்பார்கள்  அதிலும்  அழகுக்கு அழகூட்டும்  வகையில் பல்வேறு கூந்தல் அலங்காரங்களுடன்  பெண்கள் செல்லும் போது  அம்பிகாபதியின்  பாடலே நினைவுக்கு வருகிறது (இந்த நினைவை என்னவென்று சொல்ல)
 சற்றே பருத்த தனமே குலங்கத் தரளவடம்
துற்றே அசையக் குழல்ஊச லாடத்துவர் கொள்செவ்வாய்
நல்தேன் ஒழுக நடனசிங்கார நடையழகின்
பொன்தோ் இருக்கத் தலையலங் காரம் பறப்பட்டதே.
இப்போதெல்லாம் வரும்  ஒரு  விளம்பரத்தில் ஒரு பெண்புகைப்படமெடுக்க வருவாள் விதவிதமான கூந்தல் அலங்காரங்களுடன்  அவள் சொல்லுமொரு வாக்கியம்  எனக்கு கூந்தல் இருக்கும்  மகராசி அள்ளி முடிந்தால் என்ன கொண்டை போட்டால் என்ன என்னும்  சொல்வழக்கே  நினைவுக்கு வரவழைக்கும்  
அதுவும் இப்போதெல்லாம்  அள்ளி முடிவதில் கூட ஒரு ஸ்டைல் இருக்கிறது முடியின் நுனி வெளியே தெரிய வேண்டுமாம்  எனக்கு ஒருபதிவர் இட்ட பின்னூட்டம்  நினைவுக்கு வருகிறது அப்படித்தெரிவதை அவரது மக்கள் ஒரு ரிச் லுக் தருகிறது என்பார்களாம்
 கூந்தல் பற்றிப் பேசும்போது எனக்கு ஒரு சங்ககாலப்பாடல் நினைவுக்கு வருகிறது  திருவிளையாடல்திரைப்படம்  மூலம் புகழ்பெற்ற அவ்வரிகள் பலருக்கும்நினைவிருக்கும்   ஆனால் அதன்  காரண காரியங்களும் பொருளும் முழுவதும் புரிந்திருக்காது என்றே தோன்றுகிறது(இப்படித்தான்   நினைவுகள் குறுக்கே வருகிறது)
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

தலைவன் தலைவி முதல் உடலுறவு தற்செயலாக நிகழ்ந்து முடிந்தது. இது இயற்கைப் புணர்ச்சி. இது மீண்டும் நிகழும் காலம் தடைபட்டது. பின்னும் ஒரு சூழல் வாய்த்தது. அப்போது தலைவி தலைவனின் முகத்தைப் பார்க்கக் கூசி நாணத்தால் விலகி நிற்கிறாள். அவளது நாணத்தைப் போக்க அவளது உடம்பைத் தொட ஒரு பொய்ச்சாக்குச் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இதில் தன் அன்பின் மிகுதியால் தலைவியின் நலத்தைப் பாராட்டிப் பேசுகிறான்.
 தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி என்னும் வண்டைப் பார்த்து நீ அறிந்த பூக்களில் என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூவை அறிந்ததுண்டா? என்று வினவிக்கொண்டே அவளது உச்சியை முகர்கிறான். (அவள் நாணம் நீங்குகிறது. உறவு மலர்கிறது.) (அந்தப் பாடலின்  பதவுரை வேண்டாமா )
தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா? - என்கிறான்.
 அழகு என்பதே காண்பவர் கண்களைப் பொறுத்தது என்பார்கள் சிலருக்கு அழகாகத்தெரிபவைஇன்னும்  சிலருக்கு அப்படித்தெரியாமல் போகலாம் ஆனால் இல்லாத அழகை கூட்டிக் காண்பிக்க பெண்கள் நாடும்  வகைகளில் ஒன்றே இந்தக் கூந்தல் விவகாரம் படியவாரியத் தலையில் இருந்து ஒரு சுருள் காதருகே தனித்தாடும்   பின்னல் என்பதே மறந்துபொன சமாச்சாரம்  ஒரு காலத்தில் விரித்ததலை முடி நல்லதல்ல என்பார்கள் ஆனால் அதுதான் இப்போது ஃபாஷன் பெண்கள் முடியை கோதி  விடுவதும் ஓரக் கண்ணால் தன்னைப் பிறர்கவனிக்கிறார்களா என்று நோட்டம்விடுவதும்  போதுமடா சாமி. ஒன்றும் புரியவில்லை  ஆனால் நானும்  என் இளவயதில் அழகை ஆராதித்து இருக்கிறேன் பெண்ணக் கேசாதி பாத வருணித்து எழுதியும் இருக்கிறேன் நீங்களும்  எழுதி இருக்காவிட்டாலும்  ரசித்திருப்பீர்கள் அல்லவா
வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில் 
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன 
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில் 
பெரிய வளையங்களுடன் காதுகள்
 புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை. 
 உச்சந்தலை தொடங்கி உன் அழகை 
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட
 எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென் 
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும் 
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின் 
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின் 
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும் 
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை. 
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில் 
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.
 பாவையை  மட்டும் வருணித்துஎழுதவில்லை அந்தக் கண்ணனையும்   வருணித்து எழுதி இருக்கிறேன் ( இல்லாவிட்டல் பக்தர்களுக்கு  ரசிக்காதே)
கடவுளைப் பற்றியும் ( கேசாதி பாதம்  வருணித்து ) எழுத  எனக்கு முடிந்தது எல்லாம் அவனருள்.....!
கண்டேன் நான் கண்ணனை
கார்மேக வண்ணனைக்
குருவாயூர் கோவில் நடையில்

கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )

விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )

சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த  என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )
குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)
 கண்ணன் கவிதை நாராயணீயம் நூல் படித்ததால் முடிந்தது
  பொழுது போக்க வாசலில் வந்த எனக்கு ஒருபதிவு எழுதவிஷயம்கிடைத்துவிட்டது