ஞாயிறு, 29 ஜூலை, 2012

முதுமையின் பரிசு.?


                                         முதுமையின் பரிசு.?
                                         ---------------------------


சுருங்கிய தோலும்,சரிந்த தொப்பையும்,
நீர் கோத்த பை போன்ற கண்களுடன்,
கண்ணாடியில் காணச் சகிக்காத தோற்றம்
காணுமுன்பே,கண்களை உறுத்தும் பிம்பம்.,
முதுமை அளிக்கும் பரிசா.? இருந்தால் என்ன.?

செய்யாத குற்றத்துக்கு தண்டனையா
என்றே கேள்வி கேட்ட எனக்கு உருவம்
அன்றி முதுமை அளிக்கும் பரிசு-வாழ்வில்
நான் நானாக இருக்க ஒரு வாய்ப்பல்லவா

பெற்றோருக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்றவற்றுக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்ற கூலிக்காக உழைத்ததும் போதுமடா
சாமி. இது எனக்காக நான் வாழும் வாழ்க்கை.

.கருத்த முடிக்கும் இருகிய இடுப்புக்கும்
என் இப்போதைய இருப்பை நான் பணயம்
வைக்க மாட்டேன்.வயது முதிர்ந்து,அறிவும்
வளர்ந்த என்னை முன்னைவிட நேசிக்கிறேன்.

என் குறைகள் மறந்து முன்னை விட
என்னை நான் நேசிக்கிறேன்..விரும்பும்
இனிப்பை உண்ணும்போதும் படுத்த
படுக்கை சுருட்டாதபோதும் வேண்டாத
பொருள் ஒன்று வாங்கும்போதும் யாருக்கும்
பதில் சொல்லத் தேவையில்லாத இருப்பும்
கிடைத்த விடுதலை உணர்வின் வெளிப்பாடல்லவா?..

சில சுற்றமும் உற்றாரும் இம்மாதிரி
வாழ்வாங்கு வாழ்வது காணாது சென்றது
கண்டவன் நான்.கிடைத்த வாய்ப்பை விடுவேனா
உறங்கச் செல்வதோ விழித்து எழுவதோ,
புத்தகம் படிப்பதோ கணினியில் ஆடுவதோ
என் விருப்பம்.-இனிய அறுபது எழுபதுகளின்
இன்னிசைப் பாடல்களை கண்மூடி ரசிப்பேன்,
தோன்றினால் துள்ளி எழுந்து ஆடவும் செய்வேன்.
சில நேரம் இளமையில் தொலைத்த காதலுக்கு
கண்ணீர் வடிக்கவும் செய்வேன்.யாருக்கு என்னைக்
கட்டுப் படுத்தவோ கேட்கவோ முடியும்?

கடலோரம் நடப்பேன்,நீரில் கால்கள் நனைப்பேன்
மணலில் மல்லாந்து கிடப்பேன்.- எனைக் கடந்து
ரசித்துப் போகும்,எள்ளி நகையாடும்
பார்வைகளை அலட்சியம் செய்வேன்.

தஞ்சாவூர் ஓவியம் தீட்டுவேன் கண்ணாடியில்
கடவுளர்களை வரையவும் செய்வேன். அதை
சட்டமிட்டு மாடத்தில் வைத்து அழகு பார்ப்பேன்
எனக்குப் பிடித்த என்னைப் பிடித்தவர்களுக்கும்
பரிசாகக் கொடுத்து மகிழ்வேன், மகிழ்விப்பேன்.

சில நேரங்களில் மறதி வந்து அவதிப் படுத்தும்.
மறக்க வேண்டியதை மறந்துதானே ஆகவேண்டும்
நான் வளர்ந்த விதம்,இருந்த இருப்பு,இருக்கும் நிலை.
என்றும் என் மனம் விட்டு அகலாது.

ஆண்டுகள் கழியும்போது சில நேரம்
மனமுடைந்து போயிருக்கிறேன்.- உற்றார்
இழப்பும்,சிறார்களின் தவிப்பும்,அன்பின்
புறக்கணிப்பும்,போதாதா மனமுடைக்க?.
நிலவும் ஏற்ற தாழ்வு கண்டு இதயம்
நொருங்காதவர் வாழ்வின் நிலை உணராதவர்.

நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
கொடுத்த் வைத்திருக்க வேண்டும்.
என் இளமையின் சிரிப்பே என்
முகச் சுருக்கத்தின் அடையாளம்
சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
இருந்து இறந்தோர் ஏராளம்.

வயதாகும்போது உள்ளதை உணர்வது
எளிதாகிறது. ஏனையோர் நினைப்பேதும்
என்னை பாதிக்க விடுவதில்லை.
என்னை நானே ஏதும் கேள்வி கேட்பதில்லை.
தவறு செய்யும் உரிமையும் எனக்குண்டு
முதுமை எனக்களித்த சுதந்திரம் எனக்குப்
பிடித்திருக்கிறது. என்றும் நான் இருக்கப்
போவதில்லை.- இருந்த காலம் இருக்கும்
காலம் இப்படி அப்படி இருந்திருக்கலாமோ
இருக்க வேண்டுமே எனக் கவலைப் பட்டுக்
கழிப்பதில் எனக்கேதும் உடன்பாடில்லை.

உள்ளத்து உணர்வுகள் உண்மை பேசுகின்றன.
அடி மனத்தின் ஆழத்தில் இருந்து வருகின்றன.
அனைவரும் இன்புற்றிருக்கவும் வானவில்லின்
நிறங்கள் முகத்தில் தோன்றி ஒளிர் விடவும்
வேண்டுதல் செய்வதன்றி வேறொன்றும் வேண்டேன்.
-------------------------------------------








46 கருத்துகள்:

  1. அருமை ஐயா! அருமையான ஆழ்ந்த கருத்துகள் அடங்கிய கவிதை!

    பதிலளிநீக்கு
  2. //கடலோரம் நடப்பேன்,நீரில் கால்கள் நனைப்பேன்
    மணலில் மல்லாந்து கிடப்பேன்.- எனைக் கடந்து
    ரசித்துப் போகும்,எள்ளி நகையாடும்
    பார்வைகளை அலட்சியம் செய்வேன்.//
    :) :)

    பதிலளிநீக்கு
  3. உள்ளத்து உணர்வுகள் உண்மை பேசுகின்றன.
    அடி மனத்தின் ஆழத்தில் இருந்து வருகின்றன.
    அனைவரும் இன்புற்றிருக்கவும் வானவில்லின்
    நிறங்கள் முகத்தில் தோன்றி ஒளிர் விடவும்
    வேண்டுதல் செய்வதன்றி வேறொன்றும் வேண்டேன்.//

    அருமையான வரிகள்.

    முதுமையை ரசித்து வாழ கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
    தஞ்சாவூர் ஒவியங்கள் வரைவீர்களா!
    இசை கேட்பதே மன உற்சாகத்தை தரும்.
    முதுமை ஒரு வரம், உடல் நலம், (மனநலம்,) பணபலம் இருந்தால் இல்லை என்றால் முதுமை ஒரு சாபம்.
    முதுமையின் பரிசு நான் நானாக இருப்பது. அருமையான் வரிகள்.

    எல்லோருக்கும் முதுமை வரமாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வயது முதிர்ந்து,அறிவும்
    வளர்ந்த என்னை முன்னைவிட நேசிக்கிறேன்.

    உண்மை பேசும் உள்ளத்து
    உணர்வுகள் ரச்னை !!!

    பதிலளிநீக்கு
  5. யதார்த்தத்தை உணர்ந்து வாழ சிந்தனைத் தெளிவு வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. வாழும் வாழ்க்கையை ரசிப்போம்.

    பதிலளிநீக்கு
  6. மிகச் சிறந்த கவிதைக்குரிய லக்ஷணங்களை உள்ளடக்கி உள்ளன அத்தனை வரிகளும்.

    முதுமையின் பரிசுக்குப் பின் அந்தக் கேள்விக்குறி மட்டும் பொருத்தமாயில்லை பாலு சார்.

    எனக்குப் பிடித்தது போல் மானஸீகமாக ஒரு ஆச்சர்யக் குறியைத் தீட்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு வரியும் சிறப்பான வரிகள்...

    /// நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
    கொடுத்த் வைத்திருக்க வேண்டும்.
    என் இளமையின் சிரிப்பே என்
    முகச் சுருக்கத்தின் அடையாளம்
    சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
    இருந்து இறந்தோர் ஏராளம். ///

    அற்புத வரிகள் ஐயா. பல பேருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
    நன்றி.

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. பாலு சார்! நான் படித்ததில் இருந்தே எனக்கு இன்பவேதனை தந்த உங்கள் வார்த்தைகளில் இருந்து தொடுத்த இந்தக் கவிதையை உங்களுக்கே பரிசாய் அளிக்கிறேன்.

    முதுமையின் மலர்.

    சுருங்கிய தோல்; சரிந்த தொப்பை;
    நீர் கோத்த பையாய்க் கண்கள்;
    கண்ணாடியில் காணச் சகியாத தோற்றம்;
    காணுமுன்பே கண்களை உறுத்தும் பிம்பம்;

    பெற்றோருக்காக வாழ்ந்ததும்
    பெற்றவற்றுக்காக வாழ்ந்ததும்
    பெற்ற கூலிக்காக உழைத்ததும் போக
    இது எனக்காக நான் வாழும் வாழ்க்கை.

    கருத்த முடிக்கும் இறுகிய இடுப்புக்கும்
    இப்போதைய இருப்பை நான் பணயம் வைக்காது
    வயது முதிர்ந்த என்னை முன்னைவிட நேசிக்கிறேன்.

    விரும்பும் இனிப்பை உண்ணும்போதும் –
    படுத்த படுக்கை சுருட்டாதபோதும் –
    வேண்டாத பொருள் ஒன்று வாங்கும்போதும் –
    யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத இருப்பும்.

    உறங்கச் செல்வதோ விழித்து எழுவதோ,
    புத்தகம் படிப்பதோ கணினியில் ஆடுவதோ
    என் விருப்பம்.

    இன்னிசைப் பாடல்களை கண்மூடி ரசிக்கவும்,
    தோன்றினால் துள்ளிஎழுந்து ஆடவும்,
    இளமையில் தொலைத்த காதலுக்குக்
    கண்ணீர் வடிக்கவும் செய்வேன்.

    கடலோரம் நடப்பேன்,
    நீரில் கால்கள் நனைப்பேன்
    மணலில் மல்லாந்து கிடப்பேன்.-
    கடந்து ரசித்தோ எள்ளிநகைத்தோ போகும்
    பார்வைகளை அலட்சியம் செய்வேன்.

    என்னை நானே ஏதும் கேள்வி கேட்பதில்லை.
    தவறு செய்யும் உரிமையும் எனக்குண்டு.
    முதுமை எனக்களித்த சுதந்திரம் எனக்குப்
    பிடித்திருக்கிறது.

    என்றும் நான் இருக்கப் போவதில்லை.-
    இருந்த காலம் இருக்கும் காலம்
    இப்படி அப்படி இருந்திருக்கலாமோ
    இருக்க வேண்டுமோ எனக் கவலைப் பட்டுக்
    கழிப்பதிலும் எனக்கேதும் உடன்பாடில்லை.

    உள்ளத்து உணர்வுகள் உண்மை பேசிடவும்
    அடி மனத்தின் ஆழத்தில் இருந்து வந்திடவும்
    அனைவரும் இன்புற்றிருந்திடவும்
    வானவில்லின் நிறங்கள் முகத்தில் தோன்றி ஒளிர் விடவும்
    வேண்டுதல் செய்வதன்றி வேறொன்றும் வேண்டேன்.

    இது என்னால் எழுதப்பட்ட உங்கள் கவிதை.

    என்னை மிகவும் வசீகரித்த கவிதை

    பதிலளிநீக்கு
  10. அருமையான வரிகள். அனுபவ முதிர்ச்சியாலும், உண்மைத் தன்மையாலும் முதுமையினை வென்ற, தங்களின் இளமையான மனத்தினை பாடல் வரிகளில் கண்டேன்.நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  11. @ வரலாற்றுச் சுவடுகள்,
    @ நாக சுப்பிரமணியம்,
    @ கோமதி அரசு.
    @ இராஜராஜேஸ்வரி,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ சுந்தர்ஜி,
    @ திண்டுக்கல் தனபாலன்,
    @ கரந்தை ஜெயக்குமார்.
    வருகை தந்து படித்துக் கருத்து
    பதிவிட்ட அனைவருக்கும் என்
    நன்றி.
    நாகசுப்பிரமணியம்- எதற்கும்
    யார் என்ன சொன்னாலும்
    கவலைப் படப்போவதில்லை
    என்பதை விளக்கவே அவ்வரிகள்
    சுந்தர்ஜி. என் எழுத்தும் நன்றாக
    இருக்கிறது உங்கள் கண்பட்டு,
    கைப்பட திருதிய பிறகு.
    சுமாரான பதிவையும் நன்றாக
    பொலிவு பெறச் செய்யும் உங்கள் திறனுக்குப் பாராட்டுக்கள் மற்றும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. //விரும்பும்
    இனிப்பை உண்ணும்போதும் –படுத்த
    படுக்கை சுருட்டாதபோதும் – வேண்டாத
    பொருள் ஒன்று வாங்கும்போதும் –யாருக்கும்
    பதில் சொல்லத் தேவையில்லாத இருப்பும்
    கிடைத்த விடுதலை உணர்வின் வெளிப்பாடல்லவா?..//

    விரும்பும் உணவை உண்ணுவதே முதுமையில் ஒரு வரம். ஆகவே முதுமையை நினைத்து மனம் வருந்தாமல் முதுமையும் ஒரு வரமே என மகிழ்ந்தால் போதுமே. வாழ்த்துகள்.

    விட்டு விடுதலையாகி நிற்பாய் னு பாரதி இதைத் தான் சொன்னானோ?

    பதிலளிநீக்கு
  13. முதுமையும் வரமே என்று பறை சாற்றி, உங்கள் விடுதலை உணர்வைக்
    கொட்டும், கவிதை தந்த உங்களுக்கு ஒரு சல்யுட்

    பதிலளிநீக்கு

  14. @ கீதா சாம்பசிவம்- உண்மையிலேயே விட்டு விடுதலையாகி த்தான் நிற்கிறேன்
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    பாராட்ட்லுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. பெற்றோருக்காக வாழ்ந்ததும்- நான்
    பெற்றவற்றுக்காக வாழ்ந்ததும்- நான்
    பெற்ற கூலிக்காக உழைத்ததும் போதுமடா
    சாமி. இது எனக்காக நான் வாழும் வாழ்க்கை//

    முதுமையில் நமக்கு பிடித்ததை செய்வதும், நமக்காகவாழ்வுது வரம் தான் சார்.
    இளமையில் உழைத்தீர்கள். முதுமையில் உழைப்பின் பயனை அனுபவித்து மகிழ்கிறீர்கள். இது தான் முதுமையின் பரிசு. நிறைவான வாழ்க்கைதான் உங்கள் வாழ்க்கை.

    இளமையில் முதுமைக்கு சேர்த்து வைக்காதவர் வாழ்க்கை தான் சாபம் சார்.

    பதிலளிநீக்கு

  16. @ கோமதி அரசு-
    மீண்டும் வந்து கருத்திட்டதற்கு நன்றி. /இளமையில் முதுமைக்குச் சேர்த்து வைக்காதவர் வாழ்க்கைதான் சாபம்/ இங்கு சேர்த்து வைக்காதது என்ன என்று கூறப்படவில்லை. ஆளுக்கொரு அர்த்தம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. இங்கு சேர்த்து வைக்காதது என்ன என்று கூறப்படவில்லை. ஆளுக்கொரு அர்த்தம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.//

    இளமையில் உழைத்து பொருள் சேர்த்து வைப்பதை தான் குறிப்பிட்டேன் சார்.
    இளமையில் சேர்த்து வைத்த பொருளால் யாரையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக வாழ்வதை தான் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  18. விட்டு விடுதலையாகி நிற்பாய் - நினைவுக்கு வந்தது எனக்கும்.

    பதிலளிநீக்கு

  19. @ கோமதி அரசு
    இளமையில் சொல்லிக் கொள்ளும்படியாக சொத்து ஏதும் சேர்க்க முடியவில்லை. ஆனால் ஏராளமான நல்லெண்ணங்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

    @ அப்பாதுரை சுருங்கச் சொன்னாலும் சரியாய்ச் சொன்னீர்கள் என்றே தோன்றுகிறது

    @ கீதா சாம்பசிவம். மறுபடி வந்து வாசித்தது தெரிகிறது. எல்லோருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  21. பொதுவாகக் கவிதைப் பக்கம் போவதில்லை. ஆனால் உங்கள் கவிதை கட்டிப் போட்டது. class recognizes class என்பார்கள் அது போல் முதுமையை முதுமை மிகவும் ரசித்தது.

    பல வரிகள் எனக்கும் சொந்தம் என்றே நினைத்தேன்.

    // முகச் சுருக்கத்தின் அடையாளம்
    சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
    இருந்து இறந்தோர் ஏராளம்.//

    நல்ல வேளை ... நாமிருவரும் அப்படியில்லையென ஒரு மகிழ்ச்சி.

    இன்னும் நிறைய ...ஒவ்வொரு சொல்லையும் ‘நமக்கான’ சொல்லாக வரிக்கிறேன்.

    முதுமையில் இன்பம் கொள்வோம்.

    பதிலளிநீக்கு

  22. @ ராமலக்ஷ்மி
    @ தருமி
    வாசித்துக் கருத்திட்டதற்கு நன்றிகள்.
    தருமிக்கு/ என் இளமையின் சிரிப்பே முகச் சுருக்கத்தின் அடையாளம்/
    நிறை வாழ்வு வாழும் எல்லோருக்கும் அநேகமாக எல்லா வரிகளும் பொருந்தும். நான் இதை கவிதையாக பாவிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  23. முதிர்ச்சியில் கிடைக்கு சுதந்திரம்
    அற்புதமானதே
    அதைச் சொல்லிப்போனவிதம் அருமை
    கால இங்கே வாடா என்கிற பாரதியின்
    களிக்கூத்தின் உணர்வை இக்கவிதையில்
    புதைந்து கிடைப்பதை மிகவும் ரசித்தேன்
    மனம் கவர்ந்த பதிவு
    களி தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  24. தங்களது ஒவ்வொரு சொல்லிலும் இளமை விளையாடுகிறதே... யாருக்கு படப்படவேண்டும் நெஞ்சம் நிமிர்த்தி நடைபோடுங்கள் ஐயா இன்னும் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. உங்கள் கவிதை முதுமைக்குக்
    கிடைத்த பெருமை ஐயா. வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  26. முதுமை அழகிய பருவம் தான். அற்புதமான வரிகள். முத்தாய்ப்பாய்,

    ///என் இளமையின் சிரிப்பே என்
    முகச் சுருக்கத்தின் அடையாளம்
    சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
    இருந்து இறந்தோர் ஏராளம்.//

    மிக மிக ரசித்தேன். உண்மை தான். தோல் சுருங்காமல் இறந்தோர் ஏராளம். முதுமை நிறைவின் பூரிப்பு (y)

    பதிலளிநீக்கு

  27. # ரமணி
    @ கில்லர்ஜி
    @ அருணாசெல்வம்
    @ ஷக்திபிரபா
    வருகை தந்து ரசித்துக் கருத்திட்டதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  28. எந்தப் பருவத்தையும் ரசிக்கும் மனம் இருந்து விட்டால் போதும்!

    பதிலளிநீக்கு
  29. ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும் வரிகள். உங்கள் கவிதையை அதன் வரிகளில் எழுதிய அன்புதம்பி சுந்தர்ஜியும் அவரை நீங்கள் பாராட்டியவிதமும் அருமை. சுட்டி தந்ததிற்கு நன்றிஜி !

    பதிலளிநீக்கு
  30. உடல் வயது அதிகம் , ஆனால் உள்ளம் மிக இளமையாகத் தோன்றுகிறது . உங்களைப் போல ஆக்கச் சிந்தனைகள் நிரம்பிய முதியவர் அரியர் . பாராட்டுகிறேன் . 100 ஆம் ஆண்டுப் பிறந்த நாள் கொண்டாடி அதற்கு மேலும் வாழ முழு மனத்துடன் வாழ்த்துகிறேன் .சொ. ஞானசம்பந்தன் . 16-11-16

    பதிலளிநீக்கு
  31. எனக்குப் பிடித்திருந்தது. முதுமையை அனுபவிக்க, உங்கள் நெருங்கிய சுற்றம் (மனைவி, குழந்தைகள்) ஆதரவாக இருப்பதை நன்றாகச் சொல்கிறது. (அதுனாலதான் முதுமையைக் கொண்டாடிக் கவிதை எழுதியிருக்கீங்க).

    ஆனால் கீழ்கண்ட பகுதி சரியாகப் புரியவில்லை (அல்லது மொத்த கவிதையிலும் ஒட்டாத பகுதிபோல் தெரிகிறது).

    ஆண்டுகள் கழியும்போது சில நேரம்
    மனமுடைந்து போயிருக்கிறேன்.- உற்றார்
    இழப்பும்,சிறார்களின் தவிப்பும்,அன்பின்
    புறக்கணிப்பும்,போதாதா மனமுடைக்க?.
    நிலவும் ஏற்ற தாழ்வு கண்டு இதயம்
    நொருங்காதவர் வாழ்வின் நிலை உணராதவர்.

    முதுமையை அனுபவிக்கும்போது, மேலே உள்ள வரிகள் என்ன சொல்ல வருகிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊன்றிப் படிக்கிறீர்கள் என்று தெரிகிறது இத்தனை வயது வரை இருந்தால் இழப்புகளை சந்திக்காமல் இருக்க முடியுமா அந்த இழப்பின் ஈடு செய்ய முடியா தவிப்புகளையும் கண்டவன் அன்பு செலுத்துவர்கள் நம்மை அலட்சியப்படுத்தி புறக்கணிபதையும் அனுபவித்தவன் மேலும் வாழ்வில் நிலவிவரும் ஏற்ற தாழ்வும் மனம் பதைக்கச் செய்கிறதுமுதுமையை அனுபவிப்பவர்கள் இதை எல்லாம் உணர்ந்திருப்பார்கள் எல்லா அனுபவங்களையும் பெற்றுத் தரவல்லது முதுமை என்றே சொல்லி இருக்கிறேன்
      இவ்வாறு முதுமையின் பரிசு பற்றி எழுதியவன் முதுமை செய்யாத குற்றத்துக்கு தண்டனையா என்று எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  32. நன்றி உங்கள் விளக்கத்துக்கு. முதுமை செய்யாத குற்றத்துக்கு எப்படி தண்டனையாக இருக்கும்? எத்தனைபேருக்கு சிறு குழந்தையிலிருந்து தானே தன்னைப் பார்த்துக்கொள்ளும்வரை தனக்கு எல்லாமாயிருந்த பெற்றோரை, குறிப்பாக அம்மாவின் சேவையை நினைவுகூறுகிறார்கள். அதனை நினைவுபடுத்தும் விதமாக சிலருக்கு, தான் வெகு முதுமைப் பருவம் எய்தி தன்னால் தன் செயலைப் பார்த்துக்கொள்ள பிறர் உதவியை நாடும்போது, இயற்கை செயல்படுகிறதோ?

    "நிலவும் ஏற்றத்தாழ்வு" -- எல்லோரும் இதை அனுபவிக்கிறார்கள். வாழ்வில் வெற்றிபெற்றவர்களும், படிகளில் மேலிருப்பதாக்க் கருதப்படுபவரும். அவர்களுக்கான பாடல், "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு, உனக்கும் மேலே உள்ளவர் பலபேர் நினைத்துப் பார்த்து தலைகனம் தொலைப்பாய்" - இது மயக்கமா கலக்கமா பாடலுக்குப் பொருந்துகிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதுமை செய்யாத குற்றத்துக்குஎப்படி தண்டனையாக இருக்க முடியும் இதைப் புரிந்து கொள்ள நீங்கள் நான் எழுதி இருந்த பதிவைப் படிக்கவேண்டும் அதை இப்படி முடித்திருப்பேன்கேள்வியாகத்தான் எழுதி இருக்கிறேன்
      //உலகோரே உங்களிடம் கேட்கிறேன்
      வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
      விதிக்கப்பட்ட தண்டனையா..?/
      நிலவும் ஏற்றதாழ்வு பிறப்பால் உண்டாக்கப்படுவதே என்னைக் கலக்குகிறது. அது குறித்து நிறையவே எழுதி இருக்கிறேன் இவற்றை நீக்காமல் எதையோ கூறி சமாதானப்படுத்திக் கொள்ள நினைக்கிறோம் இதில் உங்களுக்கு மாறுபட்டகருத்து உண்டு என்பது தெரிந்து கொண்டேன்அதனால் அதிகம் சர்ச்சை செய்ய விரும்பவில்லை செய்யாத குற்றம் சுட்டி இதோ
      http://gmbat1649.blogspot.com/2010/12/blog-post_05.html மீள்வருகைக்கு நன்றி சார்
      --

      நீக்கு
    2. பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பதை நம்மால் நீக்குவது கடினம்! எவ்வாறு அதை நீக்க முடியும்? அதற்கான வழிகள் என்ன? ஒரே தாய்க்குக் குறைந்தது இரண்டு நிமிட வித்தியாசத்தில் அடுத்தடுத்துப் பிறக்கும் இரட்டையருக்கே எல்லாம் ஒரே மாதிரி நடப்பதில்லை. ஒன்றுக்கு ஒரு மாதிரி இன்னொன்றுக்கு வேறு மாதிரி என்று தான் நடக்கிறது. படிப்பிலிருந்து எல்லாமும் வேறுபடும்!

      நீக்கு
    3. ஆச்சரியம் என்றோ எழுதிய பதிவில் என் மறு மொழிக்குப் பதிலாக உங்கள் பின்னூட்டம்....!பிறப்பால் ஏற்ற தாழ்வு என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரியு ம் என்பது எனக்குத் தெரியும் இந்த உயர்வு தாழ்வுகளுக்கு ஒரு நியாயம் கற்பிப்பது என்னால் உடன் பட முடியாதது உங்கள் கருத்து அது என்று எடுத்துக் கொள்கிறேன் நன்றி

      நீக்கு
    4. பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளாயினும் சரி, ஜாதி, மத ரீதியிலானவையானாலும் சரி, இதை எல்லாம் நம்மால் மாற்ற முடியாது என்பதே உண்மை. யார் யார் எங்கே பிறக்கவேண்டும் என்று விரும்பிப் பிறப்பதில்லை. அதே போல் என்னதான் பொருளாதார ரீதியான ஏற்றத் தாழ்வுகளைச் சமன் செய்ய நினைத்தாலும் அதுவும் முற்றிலும் இயலாத ஒன்றே. இதைப் புரிந்து கொண்டாலே போதும்!

      நீக்கு
  33. மீண்டும் படிக்கும்போது வேறு வகை உனர்வுகள்...

    பதிலளிநீக்கு
  34. பல்வெறு உணர்வுகள் பலருக்கும் பின்னூட்டங்கள் சொல்லி இருக்குமே

    பதிலளிநீக்கு
  35. பல்வெறு உணர்வுகள் பலருக்கும் பின்னூட்டங்கள் சொல்லி இருக்குமே//

    ஆமாம். கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  36. என்மனசுக்குப் பட்டது கவிதை ஆயிற்று அதை எல்லோருக்கும் பொதுவாக்கி சுந்தர்ஜி எழுதி இருக்கிறார்

    பதிலளிநீக்கு