Friday, November 30, 2012

சூரா அது உன் சதியா. ?


                                 சூரா அது உன் சதியா...?
                                 --------------------------------

( அதிகம் பறந்து பார்த்து  அறியாத  மயிலின் பறக்கும் படங்கள் பதிவிட்டிருந்தேன். அதையொட்டிக் கவிதை புனையவும்  வேண்டி இருந்தேன். என் துரதிர்ஷ்டம் வாசகர்களின் வலைத் தளங்களில் படங்கள் தெரிவதில்லை எனக் குறைபட்டு பின்னூட்டங்கள். . நானே என் கற்பனையைத் தட்டிவிட்டு ஒரு கவிதை (? ) எழுதியிருக்கிறேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம். இது  ஒரு கற்பனையே.) 



தோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !

மரமாய் மாறி அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன் 
உன்னை ஒரு பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை  வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.

முருகன் என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும்  அழகு மயிலாய் நின்றாய்.. .
முருகனை அன்றொருநாள் அப்பாவியா எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா  பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி  அவனை ஏமாற்றிக்
காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? .           
.





Wednesday, November 28, 2012

மயில் ( கவிதை எழுத வாருங்கள் ).

மயில்
கவிதை எழுத வாருங்கள் 

மயில் என்றதும் அழகும் கம்பீரமும் நினைவுக்கு வருகிறது. சில அற்புதமான படங்கள் கிடைத்ததும் மயில்வாகனனின் நினைப்பும், சூரனின் நினைப்பும் வந்தது கூடவே ஏதாவது பாடல் புனையலாமா  என்று நினைக்கவும் தோன்றியது. நான் எழுதுவதை விட தமிழில் புலமை கொண்ட நம் பதிவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் ஓடியது. 





















 மயிலின் தோகை அழகு விரிந்து இருப்பதில் கண்டிருக்கிறோம். ஞாலம் வலம் வந்த ஷண்முகன் பறக்கும் மயிலில்தானே ஆரோகணித்து இருக்க வேண்டும்.? பற்க்கும் மயிலின் படங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடட்டும். பதிவர்களுக்கு நல்ல கவிதை கிடைக்கட்டும். சரிதானே நண்பர்களே. போட்டி என்று சொல்ல மாட்டேன். படைப்பு என்று கூறி ஆவலுடன் எதிர்பார்ப்போம்.   

( தமிழ் மணத்தில் இணைத்திருக்கிறேன். அதன் மூலம் பார்த்தால் படங்கள் தெரிகிறது.)











Saturday, November 24, 2012

பதிவுகளும் வாசகர்களும்.


                    பதிவுகளும் வாசகர்களும்
                    ------------------------------------


வலைப்பூவொன்று தயார் செய்து எழுதத் துவங்கின போது, ஏற்கெனவே என் ஆத்ம திருப்திக்காக எழுதி வைத்திருந்த சில கதைகள் ,கவிதைகள்( ? ) கட்டுரைகள் என்று பதிவிடத் துவங்கினேன். நினைக்கும் கருத்துக்களை வெளியிட ஒரு வடிகால் போல் இருந்தது வலைப்பூ. ஆரம்ப காலத்தில் என் பதிவுகளை படித்தவர்கள் மிகவும் குறைவு. முதலில் நான் ஒருவன் பதிவிடுகிறேன் என்பதைப் பலருக்கும் அறிவிக்க வேண்டி தமிழ் மணத்தில் இணைத்தேன். நானே பலரது பதிவுகளைப் படித்து என் கருத்துகளைக் கூறத் தொடங்கினபோது சிலர் ரெசிப்ரொகேட் செய்தனர். அப்போது நான் படித்த சில பதிவுகள் காழ்ப்புணர்ச்சியில் மிதந்தது கண்டு என் பதிவு ஒன்றில் பதிவுகள் எப்படி இருக்கலாம் என்று எழுதினேன்.

ஆரம்பத்தில் என் திருப்திக்காக எழுதியிருந்தேன். பிற்பாடு என் எண்ணங்களைக் கடத்த் என் வலையை உபயோகிக்கத் துவங்கினேன். நான் என் பதிவுகளில் கூறும் கருத்துக்கள் விமரிசிக்கப் பட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பதிவுலகில் மாற்றுக் கருத்துக்கள் கூறுவது தவிர்க்கப் பட்டே வருகிறது. எந்த சாரமும் இல்லாத பதிவுகளுக்கெல்லாம் புகழாரங்கள் இருப்பது பார்த்தேன். நான் கருத்து கூறும்போது என் மனதில் பட்டதை மனம் நோகாமல் தெரிவித்து வருகிறேன். அது அப்படி உணரப் பட்டும் வந்திருப்பது தெரிய வருகிறது. ஒரு முறை ஒரு நண்பர் என் பதிவுகளுக்கு பதில் இடுவது , : வீட்டில் லுங்கியுடன் இருந்து விருந்தாளிகளை வரவேற்பதுபோல் எந்தக் க்லக்கமும் இல்லாமல் சொல்ல முடிகிறது என்ற பொருளில் எழுதி இருந்தார். படித்தபோது நிறைவாக இருந்தது. எந்த போலித்தனத்தையும் நான் விரும்புவதில்லை என்று அவர் புரிந்து கொண்டது சரியே. புகழ்ச்சிக்கு மயங்காதவர் இல்லை. நானும் உண்மையான புகழ்ச்சி என்று தோன்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறையவே மாறுபட்ட கருத்துக்கள் பல எழுதி இருக்கிறேன். சடங்குகள், சம்பிரதாயங்கள், மனிதரிடையே ஏற்ற தாழ்வுகள் , அதற்கான காரணங்களாக நான் நினைக்கும் வர்ணாசிரம நியதிகள், , அதில் குளிர் காயும் பல ரக மனிதர்கள் என்று எழுதி இருக்கிறேன். ஒரு வேளை என் வயதை கருதியோ என்னவோ என்னுடன் கருத்து மோதல்களை பலரும் தவிர்க்கின்றனர்.

நான் நமது இறை இலக்கியங்கள் குறித்தும் எழுதி இருக்கிறேன். அவதாரங்களை கதைகள் என்று நான் குறிப்பிட்டது சிலர் அவ்வளவாக விரும்பவில்லை. அது என் கருத்து. நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்டு தெரிந்த பின் நம்பிக்கைகள் பலப்படுத்தப் படவேண்டும் நம்பிக்கை என்னும் பெயரில் புற்றுக்குப் பால் ஊற்றுவதையும் எந்தக் கேள்வி கேட்டாலும் நம்பிக்கையை குறை கூறுகிறேன் என்று நினைப்பதையும் நான் விரும்புபதில்லை. .

ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துக்கள் கூறாவிட்டாலும் பலரும் என் பதிவுகளைப் படிக்கிறார்கள். எந்த விதமான பதிவுகள் அதிகம் படிக்கப் படுகின்றன, என்று பார்த்தால் கொஞ்சம் சென்சேஷனலாக இருந்தால் .( அதுவும் தலைப்பில் தெரிய வேண்டும்) , படிக்கிறார்கள். இப்போதும் என் பழைய பதிவுகள் தேடிப்பிடித்து படிக்கப் படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது நான் பலரும் படிக்கிறார்கள் என்று அவர்கள் விருப்பமறிந்து  எழுத வேண்டுமா. இல்லை எனக்கு திருப்தி தருவதை எழுத வேண்டுமா. A MIX OF BOTH SHOULD BE THERE.  அப்போதுதான் என்னைப் புரிந்த வாசகர்கள் தொடர்வார்கள் என்று நம்புகிறேன்.என் பதிவுகள் இன்னும் பல திரட்டிகளில் இணைக்கப் பட வேண்டும் வலையகத்தில் இணைக்க நான் எடுத்த முயற்சிகள் வெற்றி அடைந்த மாதிரி தெரியவில்லை. பதிவுலக வாசக நண்பர்கள் உதவினால் எனக்காக பல்வேறு திரட்டிகளில் இணைத்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

கடைசியாக, கிட்டத்தட்ட ஆயிரம் வாசகர்கள் படித்தும் ஒரு பின்னூட்டம் கூட இல்லாத பதிவும் கண்டு என்ன நினைப்பது புரியவில்லை.           
.





Wednesday, November 21, 2012

உனக்கு என்ன தெரியும்.?


                           உனக்கு என்ன தெரியும்..?
                          ------------------------------------


கேள்வி:- உனக்கு எத்த்னை மொழிகள் தெரியும்.?
பதில்:-   எனக்கு எழுத படிக்க பேச தமிழும் ஆங்கிலமும் தெரியும். சுமாராகப் பேச , பேசினால் புரிந்து கொள்ள மலையாள்மும் , கன்னடமும்தெரியும். பேசினால் ஓரளவு புரிந்து கொள்ளும் அளவுக்கு தெலுங்கு தெரியும். கஷ்டப்பட்டு எழுத படிக்க பேச இந்தியும் தெரியும்.
கேள்வி:- தமிழ் ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமை இருக்கிறதா.?
பதில் :-  புலமை என்றால்.... குழப்பமாக இருக்கிறது. அண்மையில் கன்னட ஆசிரியர்களுள் சிறந்தவர் என்று கருதப் பட்ட டி.பி. கைலாஸ் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய DRONA என்னும் கவிதையை தமிழில் மொழி பெயர்க்க முடியாமல் தமிழாக்கம் செய்து என் ஆங்கில அறிவை வெளிப்படுத்திக் கொண்டேன்...! தமிழாக்கம் செய்ய அருகில் ஆங்கில அகராதியை வைத்துக் கொண்டு வார்த்தைகளுக்கு பொருள் தேடி  புரிந்து கொண்டேன் ஆக ஆங்கிலத்தில் புலமை என்று சொல்வதை விட WORKING KNOWLEDGE இருக்கிறது என்று சொல்வதே சரியாயிருக்கும்.
கேள்வி அப்படியானால் தமிழில் நல்ல புலமை இருக்கிறதாக எண்ணலாமா.?
பதில்:- தமிழில் எதை வைத்து புலமையை எடை போடுவது.
கேள்வி: - தமிழில் நிறையப் படித்திருக்கிறாயா.?
பதில்:- பள்ளியில் படித்ததைவிட படிக்காததே அதிகம். பள்ளியில் கற்றிருக்க வேண்டிய இலக்கண இலக்கிய தெளிவுகள் கற்காமல் விட்டதாலும் என் ஞானம் பற்றி எனக்கே சந்தேகம் வருவதாலும் இக்கேள்விக்கு பதிலை கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்.
கேள்வி:- சரி. அப்படியே செய்யலாம். இந்திய இதிகாச நூல்களைப் படிதிருக்கிறாயா.?
பதில்:- ஓ..! படித்திருக்கிறேனே.
கேள்வி:- கேள்வியை சரியாகப் புரிந்து கொள். தெரியுமா என்று கேட்கவில்லை. படித்திருக்கிறாயா என்பதுதான் கேள்வி.
பதில்.:- தெரியும் என்பதற்கும் படித்திருக்கிறேன் என்பதற்கும் அவ்வளவு வித்தியாசமா.?
கேள்வி:- ஆம். இது உன் மொழி அறிவை சோதிக்க கேட்ட கேள்வி.
பதில்:- கம்ப ராமாயணம் படித்திருக்கிறேன். பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்திருக்கிறேன்..ஏன்... சாதாரணன் ராமாயணம் என்று  ஒரு கவிதை ஒரே வாக்கியத்தில்  நானே எழுதி இருக்கிறேன்.
கேள்வி:- கவிதையா .? யாப்பிலக்கணத்தில் எதனைச் சார்ந்தது அது...?
பதில்: -யாப்பிலக்கணமா.. ? அது புதுக் கவிதை. எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராது.வார்த்தைகளை மடக்கிப் போட்டு வரிவடிவம் கொடுத்து எழுதுவது அது.
கேள்வி:-மொழியும் தெரிய வேண்டாம் இலக்கணமும் தெரிய வேண்டாம்  என்பவர்களே புதுக் கவிதைக்கும் வசன கவிதைக்கும் வக்காலத்து வாங்குபவர்கள்.. போகட்டும். வால்மீகி ராமாயணத்தை கம்பர் தமிழில் எழுதியபோது  இராம காதை என்னும் தலைப்பில் எழுதினார் என்பதாவது தெரியுமா,?ஆறு காண்டங்களுடன் 118 படலங்களுடன் பன்னீராயிரத்துக்கும் அதிகமான விருத்தப் பாடல்கள் கொண்டது கம்ப ராமாயணம் எனப் படும் இராமகாதை. அங்கும் இங்கும் சில பாடல்களைப் படித்துவிட்டு கம்பராமாயணம் படித்திருக்கிறேன் என்று கூறுவது சரியா. ,செவி வழிக் கேட்டு கதை தெரிந்து கொள்வது வேறு, பொருள் தெரிந்து படித்தறிவது என்பது வேறு. மகாபாரதத்தை தமிழில் எழுதியவர் யார் என்றாவது தெரியுமா.?
பதில்.:-தெரியும் வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம்.படித்ததில்லை. ஆனால் இதில் வியாசரால் எழுதப் பட்ட மகாபாரதத்தின் முக்கிய பகுத்யான பகவத் கீதை பற்றி எழுதப்படவில்லையாம்.. மேலும் இவரால் விடப் பட்ட சில பகுதிகளை அரங்கநாதர் பாரதம் என்ற பெயரில் எழுதினாலும் அதை வில்லிபாரதத்தின் துணை நூலாகவே கருதுகின்றனர். பாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் என்ற தலைப்பில் பாரதியார் பாடியிருக்கிறார்.
கேள்வி.:- ஐம்பெருங்காப்பியங்கள் என்னவென்று தெரியுமா. ?
பதில்.:- சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி. இவை அணிகலன்களின் பெயரால் அறியப் படுபவை. இவற்றில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தை குடிமகன் காப்பியம் என்று கூறுவார்கள். கடவுளையோ அரசனையோ பாட்டுடைத் தலைவனாக்காமல் கோவலன் எனும் ஒரு குடிமகனின் கதையைக் காப்பியமாக்கி இருக்கிறார் இளங்கோவடிகள்.  இதெல்லாம் படித்துத் தெரிந்தது. ஆனால் சிலப்பதிகாரத்தை அவர் இயற்றிய வடிவில் படித்ததில்லை. அதேபோல்தான் மணிமேகலை எனும் காப்பியமும். வளையாபதி குண்டலகேசி ... மூச். ஒன்றுமே தெரியாது. ஆனால் இந்த சீவகசிந்தாமணி கதையை மூன்றாம் சுழியில் அப்பாதுரை எழுதியது படித்தது மூலம் தெரிந்து கொண்டேன்.
கேள்வி.:- ஐஞ்சிறு காப்பியங்கள் பெயராவது தெரியுமா. ?
பதில்.:- அப்படியும் காப்பியங்கள் இருக்கின்றனவா..தெரியாதே.
கேள்வி..:- இப்போதாவது தெரிந்து கொள். அவை, நீலகேசி,யசோதரகாவியம், நாககுமாரகாவியம்,உதயண குமார காவியம், சூளாமணி.
பதில்.: -கடைசியாகச் சொன்ன தலைப்பில் அப்பாதுரை எழுதத் துவங்கி நிறுத்தி விட்டாரே அதுவா.?
கேள்வி .:- அது சூடாமுடி. பெயரைக்கூட சரியாக வாசிக்காமல் .....உனக்கு எவ்வளவு மலர்களின் பெயர்கள் தெரியும்.?
பதில்.:- ஏதோ நான்கைந்து . இல்லை ஏழெட்டு மலர்களின் பெயர்கள் தெரியும். சில நாட்களுக்கு முன் பதிவர் ஒருவர் ( சசிகலா என்று நினைக்கிறேன்) பல மலர்களின் படங்களுடன் பெயர்களையும் குறிப் பிட்டிருந்தார். நடிகர் சிவ குமார் அவ்வப்போது நூறு மலர்களின் பெயர்களை மூச்சு விடாமல் கூறி அசத்துவார்
கேள்வி.:- அவை குறிஞ்சிப் பாடலில் கபிலர் எழுதியவை ஆகியிருக்கும். மணிமேகலையில் சாத்தனார் பல மலர்களின் பெயரைக் கூறுகிறார்.
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி
ஏதாவது தெரிகிறதா. ?

பதில் :- கேள்வி கேட்பது எளிது. உண்மையில் எத்தனை பேருக்கு இந்தப் பூக்களை அடையாளம் காட்ட முடியும். சரி. நான் ஒரு பாடல் கூறுகிறேன். யார் இயற்றியது என்று ஊகிக்க முடிகிறதா பாருங்கள்.
வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண்ஆக்கிக்
கடல்வண்ணன் பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையர் கடை கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

கேள்வி.:- நான்தான் கேள்வி கேட்பேன். இருந்தாலும் பாடலைப் படிக்கும்போது ஆழ்வார்களில் யாராவது எழுதி இருக்கக் கூடும். என்பதே என் ஊகம்.

பதில்.:- அதுதான் இல்லை. நாலாயிரப் பிரபந்தப் பாடல்களின் மொழிபோல் இருந்தாலும்  இதைப் பாடியது இளங்கோ அடிகள் என்ற சமண முனிவர்..!

கேள்வி.:- குறவஞ்சி பாடல்களில் , மலர்களின் பெயர்களைப்போல், சுமார் 80 பறவைகளின் பெயர்களும் காணக் கிடைக்கும். தேடிப் படித்துப் பார். இப்போது கூறு.  உனக்குத் தமிழ் மொழி தெரியுமா.?

பதில்.:-கம்ப ராமாயணத்தில் இராமாவதாரத்தில் பாயுரச் செய்யுளாகக் கம்பனே

ஓசை பெற்று உயர் பார்கடல் உற்று ஒரு
பூசை, முற்றவும் நக்குபு  புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன், மற்று, இக்
-
காசில் கொற்றத்து இராமன் கதை அரோ

என்று. கூறுவான். தமிழ் ர்ன்னும் கடலை நக்கிக் குடிக்க நினைக்கும் பூனையா நான்.
தமிழ் கற்றேன் என்னும் அகந்தை சிறிதும் இல்லை.கற்றது கைம்மண் அளவு என்பார்கள். நானோ கடுகளவு என்பேன் உபரியாக... .சமீபத்திய தமிழ்க் காவியமாக இராவணன் காவியம் எழுதப் பட்டு வெளியிட்டிருக்கிறார்களாமே. 

( ஒரு திரைப்படத்தில் வடிவேலு, தன் வலக்கையை . ஆள்காட்டி விரல் அவரது கண்ணை நோக்கியவாறு வைத்து ஏதோ கூறுவார்.. அதுபோல் நான் என்னை நோக்கிக் கூறுவது : உனக்கு இது தேவையா.? உன் பவிசு எல்லோருக்கும் தெரிய வேண்டுமா..?)