Sunday, January 29, 2023

மடேஸ்நானமா ,மடஸ்நா னமா

 

.மடேஸ்நானமா இல்லை மடஸ்நானமா.?
                          ----------------------------------------------------------


கர்நாடகத்தில் ஏறத்தாழ எல்லா பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும் சென்றிருக்கிறோம். தர்மஸ்தலா மல்லிகார்ஜுனா ஆலயம். ஹொரநாடு அன்னபூரணி ஆலயம், சிருங்கேரி சாரதா தேவி கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், கொல்லூர் மூகாம்பிகை ஆலயம், குக்கே சுப்பிரமணியா கோயில்போன்றவற்றில் அன்னதானம் பிரசித்தம். பலரும் ஆண்டவனின் பிரசாதமாக உணவை உட்கொள்ளுகின்றனர். எல்லோருக்கும் உணவு என்ற மட்டில் மகிழ்ச்சியளித்தாலும் உணவு பரிமாறப் படுவதில் பேதம் காட்டுகிறார்கள். எல்லா இடத்திலும் அந்த பேதம் கடைபிடிக்கப் படுகிறதா என்று அனுபவத்தில் சொல்ல முடியாவிட்டாலும், குக்கே சுப்பிரமணியாவில் அதை நேரிலே பார்த்தேன். பிராமணர்களுக்கு தனி பந்தி .பிராமணன் என்று நிலை நாட்ட வேட்டியணிந்து பூணூல் இருக்கவேண்டும். எனக்கு இந்த வித்தியாசம் உடன்பாடில்லாததால் அங்கு உணவருந்துவதைத் தவிர்த்தோம். எங்களுடன் வந்த அந்தண நண்பர்கள், உணவருந்தி வந்தனர்.
இதையெல்லாம் மீறி அங்கு நடைமுறையில் இருக்கும் இன்னொரு வழக்கம்/ சடங்கு மிகவும் வருத்த மளிக்கிறது. அப்படி பிராமணர்கள் உண்டு முடித்த இலைகளின் மேல் அங்கப் பிரதட்சிணம்போல் உருண்டு வேண்டுதல்கள் நிறை வேற்றுகிறார்கள். அதற்கு மடே ஸ்நானா என்று பெயர். இதனை எதிர்த்துக் குரல் எழுப்பி நீதிமன்றம் வரை போய் உயர் நீதி மன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து இப்போது உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கி விட்டது. இனி என்ன .? எல்லோரும் பிராமணர் உண்ட எச்சில் இலையில் தாராளமாக உருண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
நம்பிக்கை என்னும் பெயரில் என்னென்னவோ நடக்கிறது. மனசு வலிக்கிறது. உயர்வு தாழ்வு பற்றி எழுதுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய எனக்கு செய்தித் தாள்களில் படித்தபோது மனசில் பட்டதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை இந்த கதியில் நாம் முன்னேறுவது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். குருட்டு நம்பிக்கைகளை வளர விட்டு வேற்றுமை காட்டும் பழக்கங்களை தொடர்வதில் யாருக்கோ பலன் இருக்க வேண்டும்.இந்த மாதிரி கோயில்களில் உணவு அளிப்பதில் வேற்றுமை காண்பிக்கும் போது நெஞ்சில் நியாய நிலை கொண்டவர் அதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டாமா.? ஆண்டவன் பெயரில், அவனிருக்கும் இடத்தில் வித்தியாசம் பாராட்டுவது பலரது கீழான எண்ணங்களின் வெளிப்பாடல்லவா. வர்ணாசிரம தர்மத்தின் (?) மிச்ச மீதிகளைக் கண்டு பொங்கி எழ வேண்டாமா. ? என் பதிவுகளுக்கு ஆதரவாகப் பின்னூட்டங்கள் இல்லாதிருப்பது , நம்மில் பலரும் மாறவில்லையோ, அல்லது மாற விரும்பவில்லையோ என்பதைத்தானே காட்டுகிறது. .உச்ச நீதிமன்றமே இந்த நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்பது இன்னும் வருந்தத்தக்

Sunday, January 22, 2023

காது காத்த பாடல்

 

காது காத்த பாடல்

                     
                                         காது காத்த பாடல்.
                                       ----------------------------


முதலில்அந்தப் பாடலின் பொருள்/ பதவுரை.
==================================
திதத்த ததித்த திதத்த ததித்த எனும் தாள வாக்கியங்களை தன்னுடைய நடனத்தின் மூலம் வெளிப்படுத்துகின்ற உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,மறை கிழவோனாகிய பிரம்மனும்,புள்ளிகள் உடைய படம் விளங்கும் பாம்பாகிய ஆதிகேசனின் முதுகாகிய இடத்தையும்,இருந்த இடத்திலேயே நிலைபெற்று அலை வீசுகின்ற,சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் ( தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு ) ஆயர்பாடியில் தயிர் மிகவும் இனிப்பாய் இருக்கிறதெ என்று சொல்லிக் கொண்டு,அதை மிகவும் வாங்கி உண்ட ( திருமால் ) போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியாகிய மூலப் பொருளே தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட ,கிளி போன்ற தேவயானையின் தாசனே பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பபட்டதும்,மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும் ,பல ஆபத்துகள் நிறைந்ததும் ( ஆகிய ) எலும்பை மூடியிருக்கும் தோல்பை ( இந்த உடம்பு )அக்னியினால் தகிக்கப் படும் அந்த அந்திம நாளில்,உன்னை இவ்வளவு நாட்களாகத் துதித்து வந்த என்னுடைய புத்தி உன்னுடன் ஐக்கிய மாகிவிட வெண்டும்.
சுருக்கமாக “ நடராஜமூர்த்தியாகிய சிவ பெருமானும், பிரம்மனும், இடைச் சோலையில் தயிர் உண்டு, பாற்கடலையும் ஆதிகேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆநந்த மூலப் பொருளே,தேவயானையின் தாசனே,ஜனன மரணத்துக்கு இடமாய்,சப்த தாதுக்கள் நிறைந்த இந்த பொல்லாத உடம்பை தீயினால் தகிக்கப் படும்போது உன்னை துதித்துவந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும் “ என்பதே ஆகும்.
சரி. இந்தப் பொருளுடைய பாட்டு எது என்று அனுமானிக்க முடிகிறதா.?தென்னாற்காடு மாவட்டத்தில் சனியூர் என்ற இடத்தில் பிறந்த வில்லிபுத்தூரார் தமிழில் மகா பாரதம் இயற்றினார். வைணவ குலத்தவரான இவரை வக்க பாகை எனும் இடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் ஆதரித்து வந்தான். வில்லிபுத்தூரார் புலவர்களிடையே போட்டி வைத்து வென்றவர் தோற்றவர் காதை அறுக்க வேண்டும் என்ற முடிவுக்கு உட்படுத்தப் பட்டு பலருடைய காதுகளை அறுத்து பிரசித்தி பெற்றிருந்தார்.
இதனைக் கேள்விப்பட்ட அருணகிரிநாதர் இதற்கு முடிவு கட்ட வில்லிபுத்தூராருடன் போட்டியில் கலந்து கொண்டார். ஆரம்பத்திலேயே
“ முத்தை திரு பத்தித் திருநகை “ என்ற பல்லுடைக்கும் பாடலை முருகன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடியவரிடம்  வில்லிப் புத்தூரார் தோல்வியடைந்தார். அருணகிரிநாதர் வில்லிப் புத்தூராரை மன்னித்து காதறு படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
அருணகிரிநாதர் வாதில் வென்ற பாடலின் பொருளும் பதவுரையும் தான் இப்பதிவின் முதலில் கண்டது. போதும் இந்த சஸ்பென்ஸ் . அந்தப் பாடல் இதுதான்.

திதத் தத்தத் தித்தததிதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
( நன்றி:- விக்கிப் பீடியா. )

Sunday, January 15, 2023

தையலே தைப் பெண்ணே

 



               பொங்கல் வாழ்த்துக்கள்.
               ----------------------------------

          மார்கழிப் பனி விலக
          பாவையர் நோன்பு முற்ற,
          தையலே தைப் பெண்ணே
          உன் வரவால் வழி பிறக்க

          முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
          கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
          புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
          பொங்கலாக்கிப் படைத்திடவே

          பகலவனும் பாதை மாறிப்
          பயணம் செய்யத் துவங்கும்
          இந்நாளில் பொங்கும் மங்களம்
          எங்கும் தங்க வணங்குகிறோம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்



Friday, January 13, 2023

அ,ம்மாஎனும் லெஜெண்ட்

 

AMMA THE LIVING LEGEND


                               அம்மா என்றழைக்காத உயிரும் உண்டோ
                               ----------------------------------------------------------








பிறந்ததிலிருந்தே எனக்கு கடவுளின் திருநாமங்களில் ஒரு அதீத ஈர்ப்பு இருந்தது. அதுவே என்னை எப்பொழுதும் ஆண்டவனின் திருநாமத்தை அனவரதமும் , ஒவ்வொரு மூச்சின் இடைவெளியிலும், எங்கிருந்தாலும் , என்ன செய்து கொண்டிருந்தாலும் உச்சரிக்கச் செய்யும்.இந்த இடைவிடாத, அன்பும் பக்தியுடனுமான  கடவுளின் நினைவு ஆத்ம அறிவுக்கும் புரிதலுக்கும் ( DIVINE REALIZATION) வழி வகுக்கும்
                                  ( மாதா அம்ருதானந்தமயி)




உலகம் முழுவதும் அம்மா என்று அறியப் படுபவரைப் பற்றி பார்ப்பதற்கு முன்--- கேரளத்தில்  கொயிலோன் மாவட்டத்தில் ஆலப்பாடு பஞ்சாயத்தில் பரயக் கடவு என்னும் ஒரு கிராமம்., மேற்குக் கடலோரத்திய மீனவ கிராமம். தங்களைப் பராசர முனிவரின் வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.கடவுளர்களின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடம் என்று பெருமைப் படுகின்றனர். அதில் ஒன்று......

சிவன் பார்வதி முன்னிலையில் சுப்பிரமணியர்  ஏதோ தவறு செய்து விட
சிவனார் கோபமுற்று  சுப்பிரமணியரை மீனாகப் பிறக்கச் சாபம் கொடுத்து விட்டார். மகனுக்குப் பரிந்து பேச வந்த பார்வதியும் செம்படவப் பெண்ணாகப் பிறக்கக் கடவது என்ற சாபம் பெற்றார். சற்றைக்கெல்லாம் கோபம் தெளிந்த ஈசன் தகுந்த நேரத்தில் தானே அவர்களுக்குச் சாப விமோசனம் தருவதாகக் கூறி ஆசிர்வதித்தார். சாபப்படி சுப்பிரமணியர், ஆலப்பாடு கடற் கரையில் ஒரு பெரிய மீனாக உருவம் கொண்டார். மீனவர்களின் வலைகளை அறுத்து அவர்கள் மீன் பிடிக்கக் கடலில் போவதையே அஞ்சும் அளவுக்குப் பயமுறுத்தினார். மீனவர்கள் பயந்து கடலுக்குப் போகாததால் வாழ்வாதாரத்தையே இழக்கத் துவங்கினர். அரசனிடம் முறையிட்டார். அரசனும் ஏதும் செய்வதறியாமல் , மீனைப் பிடிப்பவருக்கு நிறைய வெகுமதியுடன் அரச குமாரியையும் கை பிடித்துத் தருவதாக அறிவித்தார். நிலைமை இப்படி இருக்க அந்த ஊருக்கு ஒரு வயதான புதியவர் ஒருவர் வந்தார். அவர் பல செடியின் கொடிகளைக் கட்டி வலைபோல் செய்து கடலில் வீசி மீன் வரும்போது அவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தைக் கூறி மீனை இழுக்கச் சொன்னார். அதன்படியே நடந்து வலையில் சிக்கிய மீன் கரையில் வந்ததும் காணாமல் போயிற்று. முதியவர் அரசனிடம் வாக்களித்தபடி அரச குமாரியைத் தரக் கேட்டார். அரசனுக்கு இக்கட்டான நிலை. அரச குமாரியே முன் வந்து அரசன் சொல் காப்பாற்றப் பட வேண்டும் என்று கூறி முதியவரின் பின் சென்றாள். அவர்களைப் பின் தொடர்ந்த மக்கள் எந்த ஊருக்குப் போகிறீர்கள் என்று முதியவரிடம் கேட்க அவர் எங்களுக்கு என்று ஊர் எதுவும் கிடையாது “ செல்லுன்ன ஊரே” ஊர் என்றாராம். அவர் சென்ற ஊர்தான் மருவி ” செங்கண்ணூர்” ஆனதாகக் கதை. அந்த ஊரை அடைந்ததும் முதியவரும் அரச குமாரியும் முறையே கிழக்கையும்  மேற்கையும் பார்த்து நின்றனராம் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு கோயில் எழுப்பப்பட்டதாம் அபிஷேகத்துக்கு நீர் கொண்டு வரும்போது ஒரு வினோத நிகழ்ச்சி ஏற்படுமாம், அபிஷேக நீரில் மீன் இருக்குமாம் பிரசன்னம் வைத்துப் பார்த்ததில் முதியவருக்கு முறையாக அரசகுமாரியைத் திருமணம் செய்யாததன் விளைவு இது என்று தெரிந்ததாம். சோதிடப் பரிகாரப் படி ஆலப்பாடிலிருந்து ஒரு செம்படவப் பெண் திருமணத்துக்குத் தேவையான பரிசுப் பொருள்களுடன் செங்கண்ணூர் வந்து திருமண ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் சொல்லப் பட்டது. இன்றும் அவ்வழக்கப்படி ஆலப்பாட்டு மக்கள் செங்கண்ணூர் வந்து திருமணம்
 நடத்துவது ஒரு விழாவாகவே நடக்கிறதாம். நடுவில் சிலருக்கு “ இவ்வளவு தூரத்தில் இருந்து செங்கண்ணூர் போய் நாம் ஏன் விழா நட்க்கச் செய்ய வேண்டும் “ என்ற எண்ணம் தோன்றி விழா நடக்க முடியாதபடி செய்தனராம்.
ஈசன் சிலையை தாங்கி வரவிருந்த அலங்கரிக்கப்பட்ட யானை ஓரடி கூட நடக்காமல் நின்று விட்டதாம். ஆலப்பாடில் அம்மை நோயின் அறிகுறிகள் தெரிய வந்ததாம் . இது ஒரு தெய்வக் குற்றம் என்று தெளிந்த மக்கள் பழையபடி சடங்குகளைத் தொடர எல்லாம் நல்ல படியாயிற்றாம்.

ஆலப்பாடு பஞ்சாயத்தில் பரயக் கடவு ஒரு மீனவ கிராமம் இடமன்னெல் என்பது ஒரு குடும்பத்தவர்..மீன்பிடிப்பது அவர்கள் தொழில் பக்தியுடையவர்கள்.. விரத அனுஷ்டானங்கள் பல செய்பவர்.மீன் பிடித்து வந்ததும் முதலில் சில மீன்களைத் தானமாகக் கொடுத்த பின்னரே விற்பனை செய்வர்.கிடைக்கும் பணத்திலும் கைநிறையக் காசுகள் சிலவற்றை சிறார்களுக்குக் கொடுப்பார்கள். இத்தகைய குடும்பத்தில் உதித்தவர் சுகுணானந்தன்.  பண்டரத்துருத்தூ என்னும் அடுத்த கிராமத்துப் பெண் தமயந்தி என்பவரைத் திருமணம் முடித்தார். இந்தத் தம்பதிகளுக்குப் பிறந்த பதிமூன்று குழந்தைகளில் நான்கு பிறந்ததும் இறந்தும் ஒன்று சில நாட்கள் கழித்து இறந்தும் போயின. மீதமிருந்த எண்மரில்  சுதாமணி என்ற பெண்ணே உலகம் முழுவதும் மாதா அம்ருதானந்தமயி என்று அறியப் படுபவர்.

சுதாமணி கர்ப்பத்தில் இருக்கும்போதே சுகுணானந்தன் கனவிலும் தமயந்தியின் கனவிலும் சிவனும் கிருஷ்ணரும் வர இவர்கள் ஏனென்று தெரியாமல் தவித்தனர். மீன் பிடிக்கப் போகவர என்று கடலோரத்தில் குடிசையில் இருந்தனர். சுதாமணியைப் பிரசவிக்க நேரம் நெருங்கி விட்டது தெரிந்ததும் தமயந்தி இடமன்னெல் வீட்டுக்குப் போயிருக்கிறாள பாயை விரித்து தயாராகும் போதே திடீரெனப் பிரசவம் நிகழ்ந்து விட்டது. நிகழ்ந்த
நாள் 27-09-1953. பிறந்த குழந்தை பெண். பிறக்கும் போதும் பிறந்த பின்னும் குழந்தையின் நிறம் கரு நீலம். பிறந்த குழந்தை பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டி பிறந்ததாம் பிறக்கும்போதுஇருந்த நிறமும் , உடலின் இருப்பும் விவ்ரிக்கத் தெரியாத ஏதோ வியாதியோ என்று அவர்களை அச்சமடையச் செய்தது. மருத்துவர்களிடம் காண்பிக்க அவர்கள் குழந்தையை ஆறு மாதங்கள் குளிப்பாட்ட வேண்டாம் என்று கூறினராம்.....! ஆறு மாதங்களாயும் குழந்தையின் நிறம் மாறவில்லையாம். அது கிருஷ்ணனோ காளியோ என்று நினைக்க வைத்ததாம் பிறகு மெதுவாக நிறம் கருப்பாயிற்றாம். இருந்தாலும் குழந்தை கிருஷ்ண பக்தியில் மூழ்கும் போது கரு நீலமாக மாறுமாம். இன்றும் அம்மா ஆழ்ந்த பக்தியில் கிருஷ்ணனைக் கூப்பிடும்போது நிறம் மாறுகிறது(?)
என்கிறார்கள். இந்த நிறமே குழந்தை மீது ஒரு வித வெறுப்புணர்ச்சியாக மாறி அவரை இளவயதில் பல இன்னல்களுக்கு ஆளாக்கியது எனலாம். குழந்தைகள் பிறந்தபின் கவிழுதல் நீந்துதல் முட்டுக் குத்துதல் உட்காருதல் என்று படிப்படியாக செய்வதே முறை. ஆனால் சுதாமணி ஆறு மாதங்கள் ஆனஒரு பொழுதில் நேராகவே நிறகத் துவங்கினதும் இல்லாமல் சில நாட்களில் நடக்கவும் ஓடவும் துவங்கினாராம். ஆறு மாத முதற்கொண்டே பேச ஆரம்பித்தாராம். இரண்டு வயதுக்குள் கிருஷ்ணன் மேல் பாடத் துவங்கினாராம். விளையும் பயிர் முளையிலேயே தெரிந்ததோ. ?

                                   
அம்மா குழந்தையுடன்
     
அம்மா மூதாட்டியுடன்




அம்மாவின் தொண்டு பற்றியும் தேவைப் படுபவருக்கு உதவுவது பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். இந்த மாதிரியான ஒரு பக்திக்குக் காரணம் என்ன,?ஒரு நிகழ்வு பகிருகிறேன். என் உறவினர் ஒருவரின் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவ மனையில் சேர்த்திருந்தார். காரணம் தெரியாத தலைவலி. மகன் மயக்கத்தில் இருந்தான் தந்தையையும்  ( அவரும் ஒரு டாக்டர்) அனுமதிக்காமல் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய நம்பிக்கை இழந்த நிலையில் திருவனந்தபுரம் மருத்துவ மனையில் இருந்து கொச்சியில் இருந்த அமிர்தானந்தமயியின் மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த மருத்துவ் வளாகத்தை நெருங்கியதும் மகனின் உடலில் முன்னேற்றம் கண்டது. மருத்துவ மனையில் சேர்த்து சில தினங்களில் பூரண குணம் கிடைத்தது. அந்த மருத்துவம் படித்த M.D. டாக்டர் அது அம்மாவின் அருள என்கிறார்.

பெங்களூரில் அம்மா  வந்திருந்த போது பார்த்திருக்கிறேன். இருந்த இடம் விட்டு எழாமல் மணிக்கணக்கில் காண வரும்  பக்தர்களை ஆரத்தழுவி தரிசனம் கொடுப்பார். ஒரு கடலோரக் கிராமத்தில் பிறந்து இளமையில் பல இன்னல்களை அனுபவித்து வளர்ந்தவர் இன்று உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை கவர்கிறார் என்றால் SHE MUST BE SOME ONE SPECIAL.!     
  

Friday, January 6, 2023

விநாயகர் அகவல் ஒரு அரிய முயற்சி

 

வினாயகர் அகவல் ஒரு அரிய முயற்சி

 எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் ஔவையாரால் எழுதப் பட்ட விநாயகர் அகவலில் வரும் இந்த வரிகள் பொருள் தெரிந்து சிந்திக்கத் தகுந்தது. முதலில் விநாயகப் பெருமானை வர்ணித்துப் பிறகு வேண்டுதல்களை வைக்கிறார்.

 

“........................................................................................................................

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி,

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக்கருளி

கருவிகள் ஒடுக்கும் கருத்தறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து....

 

படிக்கும்போதே ஓரளவுக்குப் புரிகிறது.  இனி அவர் கேட்பது தெஇந்து கொள்வதே கடினம். அவரது ஒரு வார்த்தை புரிய என்னென்னவோ தெளிய வைக்கிறார்.

”......தலமொரு நான்குந் தந்தெனக் கருளி ...

 

நல்வினை தீவினை அதனால் ஏற்படும் மாய இருளை நீக்கி

சாலோகம்  சாயுஜ்யம் சாமீபம் சாரூபம்  என்னும் நான்கு தலங்களையும் எனக்குத் தந்து.....( இவையெல்லாம் எங்கிருக்கின்றன, அதன் நலங்கள் என்ன 

என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் )

 

மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே.

 

ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்களினால் ஏற்படும் மயக்கத்தை இறுத்து

 

” ஒன்பது வாசல் ஒரு மந்திரத்தால்

 ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

 ஆறாதாரத்து அங்குச நிலையும்

 பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே....

 

உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி மூலாதாரம் , சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறு ஆதாரங்களில் நிறுத்தி

அதன் பயனாய் பேச்சிலா மோன நிலை அருளி ( குறிப்பிட்ட ஆறு ஆதாரங்களும் உடலின் பல்வேறு பாகங்களைக் குறிப்பது என்று எண்ணுகிறேன் )

 

இடை பிங்கலையின் எழுத்தறிவித்து

கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்து மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்த்றிவித்து

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையுங் கூறி 

 

இடகலைபிங்கலை எனப்படும் இடதுவலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3)

சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பிஅதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லிமூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்துகுண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடிசந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும்குணத்தையும் கூறி,

 

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடற்சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

என் முகமாக இனிதெனக் கருளி

புரியட்ட காயம் புலப்படஎனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினிற் கபால வாயில் காட்டி,

இருத்திமுத்தி இனிதெனக் கருளி

என்னை அறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கிய எந்தன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டுக்கும் என்றிடமென்ன

அருள்தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்து அருள்வழி காட்டி,

சத்ததினுள்ளே சதாசிவம் காட்டி,

சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி,

அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி,

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி,

அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து

தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட

வித்தக விநாயக விரை கழல் சரணே.

 

இடையிலிருக்கும் சக்கரத்தின் பதினாறு நிலையையும் உடலின் எல்லா சக்கரங்களின் அமைப்புகளையும் காட்டி உருவமான தூலமும் ,அருவமான சூட்சுகமும் எனக்கு எளிதில் புரியும்படி விளக்கி, மூலாதாரம் முதல் சகஸ்ர தளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி

எனக்குக் காட்டித்தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்கருளி, நான் யார் என்பதை எனக்குத் தெளிவித்து,பூர்வ ஜன்ம வினையை நீக்கி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கருளி, அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி ,இருள் ஒளி இரண்டுக்கும் அடிப்படை ஒன்றே என்பதை உணர்த்தி

அருள் நிறைந்த ஆனந்தத்தை என் காதுகளில் அழுத்தமாகக் கூறி, அளவில்லாத ஆனந்தம் தந்து துன்பங்கள் அகற்றி அருள்வழி எது எனக்காட்டி, உள்ளும் புறமும் சிவனைக்காட்டி, சிறியவற்றுக்கு சிறியது பெரியவற்றில் பெரியது எதுவோ அதை கணு முற்றி உள்ள கரும்பு போல எனக்குள் காட்டி , உண்மையான தொண்டர்களுடன் என்னைச் சேர்த்து ,அஞ்சக் கரத்தினுள்ள உண்மையான பொருளை என் மனதில் நிலை நிறுத்தி எனை ஆட்கொண்ட விநாயகப் பெருமானே உன் பாதார விந்தங்கள் சரணம்

 

அது சரி முதலில் நான் எழுதத் துவங்கியதற்கும் ஔவையின் அகவலுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். எண்ணங்களை அடக்க வேண்டும் . எண்ணங்களே எல்லாவற்றுக்கும் காரணம் .எண்ணங்களை நிறுத்த முடியாது. ஆனால் அடக்க முயலலாம். மூலாதாரத்து மூண்டெழு கனலை ( அதுதான் குண்டலினி சக்தியோ ?)ஆறு ஆதாரங்களின் வழியே கொண்டுவந்து கபால வாயிலில் நிறுத்தி..... அப்பப்பா. எண்ணங்களை கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்லிச் சென்றிருக்கிறாள் ஔவைப் பாட்டி. இதனை சுருக்கமாக தியானம் என்று சொல்லலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.

உடற்கூறு பற்றி ஒரு பெரிய பாடமே அகவலில் இருக்கிறது. .

 

தலமொரு நான்கு, , மலமொரு மூன்று, ஆறாதாரம் , இட பிங்கலை, கழுமுனை , மூன்று மண்டலம், நான்றெழு பாம்பு,,குண்டலிதனிற் கூடிய அசபை, உடற்சக்கரம், சண்முக தூலம் சதுர்முக சூக்கம் .....இன்னபிற வார்த்தைகளுக்கு பொருள் முழுவதும் தெரிந்தது என்று சொல்ல முடியவில்லை. பல நூறாண்டுகளுக்கு முன்பே இதை எழுதி இருந்தார் என்றால் , எல்லாம் அறிந்ததன் பயனாய்த் தான் இருக்கும்.

 

எண்ணங்களை அடக்க வேண்டும் என்பதில் துவங்கி, அடக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சி, ஔவையின் பாடலில் கொண்டு நிறுத்தி , எனக்குத் தெரிந்தது கடுகளவு தெரியாதது உலகளவு என்னும் முத்தாய்ப் புடன் முடிக்க வைக்கிறது. பதிவுலகின் ஜாம்பவான்கள், தமிழறிஞ்ர்கள்,பாடலின் கடின ( நமக்குத் தெரியாத ) பதங்களை விளக்கினால் பலரும் பயனடையலாம்.