செவ்வாய், 31 ஜூலை, 2012

PARANOID ( பாரநாய்ட் )


                                             PARANOID ( பாரநாய்ட் )
                                             ------------------------------


என் கால்கள் என்னை என் கட்டுப்பாட்டில் இருக்க விடாமல் எங்கோ அழைத்துச் செல்கிறது.நான் போகுமிடம் இவ்வளவு நாட்கள் உழைத்து உருவாக்கிய என் தொழிற்சாலை அல்லவா. யாரோ என்னைக் கூப்பிடும் சப்தம் கேட்டுத் திரும்பினால் அது என் தொழிற்சாலையில் என்னுடன் தோள் கொடுத்து நின்ற குமரன் அல்லவா.நீயும் வா, என்னுடன் ‘ என்று அவனையும் அழைத்துக் கொண்டு விரைகிறேன்.ஏன் இவ்வளவு அவசரம் ‘என்று கேட்கிறான். அவனுக்குத் தெரியுமா என் மனம் என்னைப் படுத்தும் பாடு..இப்போதே நான் என் தொழிற்சாலைக்குள் இருக்கவேண்டும். இதோ வந்து விட்டோம். உள்ளே போக எத்தனிக்கும் என்னை ஒரு காவலன் தடுக்கிறான். குமரன் அவனிடம் ஏதோ கூற உள்ளே அனுமதிக்கப் படுகிறேன். என் தொழிற்சாலைக்குள் போக எனக்கு சிபாரிசு தேவைப் படுகிறது.

உள்ளே நுழைந்ததும் ஆ ! அந்த சூழ்நிலையே புத்துணர்ச்சி தருகிறது.நேராக என் இருப்பிடத்துக்குப் போகிறேன். அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறது. என் இடத்தில் இருந்து என் இருக்கையை எடுத்தது யார் என்று சத்தமிடுகிறேன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திரு திருவென விழிக்கிறார்கள். அவர்களில் ஒருவன் என்னை யார் என்று கேட்கிறான். ‘ நான் தான் ஜீ.எம். பாலசுப்பிரமணியம் என்று கத்துகிறேன். குமரன் அவர்களிடம் ஏதோ பேசி சமாதானம் சொல்கிறான் வேலை செய்யாமல் நேரம் கடத்தும் அவர்களுக்கு அன்றைய சம்பளம் கட் என்று குமரனிடம் சொல்கிறேன். பாடுபட்டு முன்னுக்குக் கொண்டு வந்த
தொழிற்கூடத்தில் பணி செய்யாமல் காலம் கழிக்கிறார்கள் என்றால் தவறு எங்கே என்று என்னையே உரக்கக் கேட்கிறேன். என்னுள் இருந்து ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்கும்படி சொல்கிறது. ‘ மடையா, நீவிட்டுச் சென்ற தொழிற்கூடமல்ல இது.தெரியவில்லையா என்கிறது. நான் இருந்த காலத்தைய அடையாளங்களை முற்றிலும் தொலைத்து நிற்கும் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறேன். குமரனும் என்னுடன் வருகிறான். ‘உன் பணியை விட்டு விட்டு என்னுடன் ஏன் வருகிறாய்.? நீ போஎன்று அவனைக் கடிந்து கொள்கிறேன். விரட்டினாலும் விசுவாசமாகத் தொடரும் நாய்க் குட்டி போல் அவன் என்னைத் தொடருகிறான்.

மானியமாக பெருந்தொகை செலவு செய்து சலுகைக் கட்டணத்தில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்திருந்தேன். அது எப்படி செயல்படுகிறது என்று காண உணவுக் கூடத்துக்குப் போகிறேன். தலை வாழை இலையில் பல் வேறு வகையான உணவு பறிமாறப் பட்டது. சலுகை கட்டணம் கொடுக்கப் போனால் என்னை அடிக்கக் கை ஓங்குகிறான் ஒருவன். விளங்காது விழித்த என்னைக் காப்பாற்றிக் கூட்டிக் கொண்டு வருகிறான் குமரன்.

எனக்கு ஏதும் புரிவதில்லை. எத்தனையோ பாடு பட்டுக் கட்டிக் காப்பாற்றிய என் தொழிற்கூடம் என் கண் முன்னே சிதைந்து இருப்பது போல் தோன்றுகிறது. என்னைக் கட்டுப் படுத்த முடியாமல் அழுகிறேன். குமரன் என்னை என்னென்னவோ சொல்லித் தேற்றுகிறான். கார் வைக்கும் கராஜுக்குப் போய் என் காரைத் தேடுகிறேன். காரில் வரவில்லை. நடந்துதான் வந்தோம் என்று குமரன் கூறுகிறான். என்னைப் பைத்தியக்காரன் என்று எண்ணி விட்டான் போலும். கார் கிடைக்காமல் போனால்தான் என்ன. எனக்கு நடக்க முடியுமே என்று கூறி சிரிக்கிறேன்.வேலை பார்த்தது போதும் வீட்டுக்குப் போகலாம் என்று என்னை அழைத்துச் செல்கிறான் குமரன். நான் வீடு வந்து சேரும்போது வீட்டு வாசலிலேயே என் மனைவியும் மற்றவர்களும் காத்திருக்கிறார்கள். என்னைக் கண்டதும் என் மனைவி ஓ வென அழுகிறாள். பைத்தியக்காரி!


 

7 கருத்துகள்:

  1. பணி ஓய்வுக்குப் பின்னரும் தான் இருந்த அலுவலக நாட்களை எண்ணி எண்ணி மனச் சிதைவு அடைந்த ஒருவரின் உடல்நிலை, உள்ள நிலை பற்றிய ஒரு விவரமான பதிவு. இந்த நாளிலுமா இப்படி இருக்கிறார்கள்?

    திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்
    “SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. “SUNSHINE BLOGGER AWARD “ பெற்றதற்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. முதியவர்களின் மனநிலையைக் கதையில் கொட்டி இருக்கிறீர்கள் ஐயா.

    “பைத்தியக்காரி“ - கதையில் மனத்தை இறுக்கிய முடிச்சி.

    வணங்குகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. PARANOID ( பாரநாய்ட் )

    அனுபவித்தவர்களுக்கு புரியும்...

    பதிலளிநீக்கு
  5. பணி ஓய்வு பெற்ற பிறகு பழைய அலுவலகத்திற்கு எக்காரணம் கொண்டும் வருவதில்லை என்ற பிரதிக்னை எடுத்துக்கொண்டுதான் வெளியில் வந்தேன். காரணம் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்தவன் நான். இன்று வரை அந்தப் பிரதிக்னையை காப்பாற்றி வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. எந்த பதிவும் திறக்க முடியாமல் இருக்கிறது. பி.எஸ். என். எல் -லிடம் புகார் செய்திருக்கிறேன். சரி செய்தபின் தான் இனி வலைப் பக்கம் வரமுடியும். ஒரு கற்பனை சிறுகதை சற்று வித்தியாசமாக எழுத முயன்றிருக்கிறேன். பதிவுக்கு கருத்திட்ட அனைவருக்கும் நம்றி.

    பதிலளிநீக்கு