Monday, February 6, 2023

சாந்தனுவின் சந்ததிகள்

 

சாந்தனுவின் சந்ததிகள்..


                              சாந்தனுவின் சந்ததிகள்.....
                             ---------------------------------



திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொள்வது அவரவர் வம்சம் தழைக்க என்பதுதான் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படும் செய்தி. நமது சமூகத்தில் வம்சம் தழைப்பது என்று கூறும்போது தகப்பனின் வம்சாவளி என்றுதான் பொருள்படுகிறது. இன்னாரின் மகன் என்று சொல்வதும் தந்தையைக் குறித்தே இருக்கும். நான் இங்கு கூறுவது சட்டப்படி அனுமதிக்கப் பட்ட குடும்ப வாழ்க்கை முறையையும் அதன் மூலம் வளரும் தலை முறையையும் குறிப்பிடுவதாகும். எக்செப்ஷனல் கேஸ்களைக் காட்டி என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது.
தலைமுறை இடைவெளி என்பதே தலைமுறைகளைப் பற்றிய செய்திகள் தெரியாமல் இருப்பதைக் குறிக்கிறதோ.?நான் ,என் தந்தை ,என் தந்தையின் தந்தை- இதை மீறிய தலைமுறை பற்றி இக்காலத்தில் தெரிந்து கொள்ள முடிகிறதா.? இதையெல்லாம் பற்றி சிந்தனை எழுவது நியாயம்தானே. சந்ததி தழைக்க வேண்டி மறுமணம் செய்யும் பலரையும் நாம் காணலாம். 

நம்முடைய மிகப் பெரிய இதிகாசமான மஹாபாரதத்தின்/ல் வம்சாவளி குறித்துப் படிக்கும்போது என்னவெல்லாமோ நினைக்கத் தோன்றுகிறது. சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.அவற்றைக்குறித்தஅபிப்பிராயங்களை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்..மஹாபாரதக்கதையை அதன் ஆதி வடிவில் நான் படித்ததில்லை. பலரும் படித்திருக்க வாய்ப்புமில்லை
மஹாபாரதம் வியாசமுனிவர் கூற விநாயகரால் எழுதப் பட்டது என்று நம்பப் படுகிறது. வியாசர் பராசர மஹரிஷிக்கும் சத்தியவதி எனும் செம்படவப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று அறியப்படுகிறார். இந்த வியாசமுனிவர் மஹாபாரதக் கதையின் ஒரு பாத்திரமாகவும் அறியப் படுகிறார். பராசர முனிவரிடம் கலந்ததில் இருந்து சத்தியவதியைச் சுற்றி ஒரு நறுமணம் திகழ்ந்திருந்ததாம். அந்த நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு சாந்தனு மஹாராஜா அவள் மேல் காதல் வசப்பட்டாராம். இந்த சாந்தனு மஹாராஜா ஏற்கனவே மணமானவர்.. கங்கையின் மேல் காதல் கொண்டு அவளை மணமுடிக்க விரும்பியபோது கங்கை ஒரு நிபந்தனை இட்டாள். அவளது எந்த செய்கையையும் சாந்தனு ராஜா கண்டு கொள்ளக் கூடாது என்பதே அது. சாந்தனு கங்கை திருமணத்தின் விளைவாய் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றையும் கங்காதேவி நீரில் எறிந்து விட . ஏதும் பேசாமல் இருந்த ராஜா எட்டாவது குழந்தையை நீரில் இடப் போகும்போது தடுத்துக் காரணம் கேட்கிறார். நிபந்தனையை மீறி கேள்வி கேட்ட சாந்தனு ராஜாவைவிட்டுப் பிரிந்து போகிறார் கங்காதேவி அந்த எட்டாவது குழந்தையை அரச குமாரனுக்கு வேண்டிய எல்லாத்தகுதிகளையும் கற்பித்து அவனை சாந்தனு ராஜாவிடம் ஒப்படைக்கிறார். அவர்தான் மஹாபாரதத்தில் பிதாமகர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர்.

என்ன செய்வது.?சில விஷ்யங்களைப் பற்றிக் கூறும்போது, கதையையும் கொஞ்சம் கூறத்தான் வேண்டியுள்ளது. படிப்பவர்களுக்கும் மஹாபாரதக் கதையின் ஆரம்ப பகுதிகளை ரிவைஸ் செய்ததுபோலும் இருக்கும்.

வேட்டையாடச் சென்ற சாந்தனு ராஜா சத்தியவதியை மணக்க வேண்டுமென்றால் அவளது பிள்ளைகள்தான் அரசுக்கு வாரிசாக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனையாக சத்தியவதியின் தந்தை விதித்தார். அதை ஏற்றுக் கொண்டால் தேவவிரதன் என்று பெயர் கொண்ட பீஷ்மர் அரசுரிமையைத் துறக்க வேண்டும். அவர் துறந்தாலும் அவருக்குப் பிறக்கும் வாரிசுகள் உரிமை கோராமல் இருக்க வேண்டி தேவ விரதன் பிரம்ம சாரியாய் காலங்கழிக்க சபதம் பூண்டார்.

சத்தியவதிக்கும் சாந்தனு ராஜாவுக்கும் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்று இரண்டு மகன்கள் பிறந்துஅவர்களுக்கு மணமுடிக்க பீஷ்மர் அம்பிகை அம்பாலிகை எனும் ராஜகுமாரிகளை சுயம்வரத்திலிருந்து அபகரித்து வந்து மணமுடித்தது ஒரு பெரிய கதை. அதை விட்டு விட்டு நம் கதைக்கு வருவோம். சித்திராங்கதன் அல்பாயுசில் உயிர் துறக்க விசித்திர வீரியன் மூலமும் மக்கள் இல்லாமலிருக்க சந்ததி வேண்டி ( யாருடைய சந்ததி.?), தாயார் சத்தியவதி, தன் முதல் கணவர் பராசர மஹரிஷி மூலம் பிறந்த வியாசரிடம் அம்பிகை அம்பாலிகைக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டுகிறார். வியாச மஹரிஷியும் தன் சகோதரர் மனைவிகளைப் புணர்ந்து மக்கட் செல்வம் தருகிறார். அம்பிகையுடன் சேர்ந்தபோது ரிஷியின் கோலத்தைக் கண்டு பயந்து கலவியின் போது கண்களை மூடிக் கொண்டதால் அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாகப் பிறந்ததாம், அவர்தான் திருத ராஷ்டிரர் என்னும் பெயர் பெற்றவர் அம்பாலிகையோ பயந்து முகமெல்லாம் வெளிறிப் போயிற்றாம். அந்தக் கலவியின் விளைவாய்ப் பிறந்தவர் பாண்டு என்று அழைக்கப் பட்டார். இரு பேரப் புத்திரரும் குறையுடன் பிறக்க மறுபடியும் முயல வியாசரை சத்தியவதி வேண்ட அம்பிகை அம்பாலிகை இருவரும்  விரும்பாமல் அவர்களது பணிப் பெண்ணை வியாசரிடம் அனுப்பி விடுகின்றனர். அந்த சேர்க்கை மூலம் பிறந்தவர் விதுரர்.

.திருதராஷ்டிரர், பாண்டு இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.?

இது மட்டுமல்ல. மூத்தவன் பிறவிக் குருடன் என்பதால் இளையவன் பாண்டு வுக்கு முடி சூட்டுகிறார்கள். பாண்டுவுக்கு ஒரு சாபம். மனைவியுடன் கலந்தால் மரணம். அவரும் வெறுத்துப் போய் தன் இரண்டு மனைவிகளுடன் காட்டுக்குப் போய் விடுகிறார். அவரது சந்ததி தழைக்க என்ன செய்வது.? குந்தி தேவிக்குக் கிடைத்த வரம் அதற்கு வழி வகுக்கிறது. மந்திரம் உச்சாடனம் செய்ததும் யமதர்மன், வாயு, இந்திரன் மூலம் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறாள் குந்திதேவி. தான் பெற்ற பேறு பாண்டுவின் இளைய மனைவிக்கும் அருளி, அவளும் தேவர்கள் மூலம் இரண்டு புத்திரர்களை பெற்றுக்கொள்கிறாள். இவர்களே பஞ்ச பாண்டவர்கள். இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.?

மஹாபாரதக் கதையில் தர்மம் உபதேசிக்கப் படுவதாகக் கூறப் படுகிறது. குருடன் என்னும் காரணத்தால் அரசைத் துறக்க வேண்டி வந்த திருதராஷ்டிரன் தம்பி பாண்டு இறந்தபோது தன் மக்கள் அரசுரிமை பெற விரும்பியது தவறா? துரியோதனனைவிட  யுதிஷ்டிரர் மூத்தவர் என்பதால் அவருக்கு அரசுரிமை என்பது சரியா.? இந்த மாதிரியான பின்னணியில் பங்காளிச் சண்டையை முன் வைத்து எழுதப் பட்ட மஹாபாரதம் , தன்னுள்ளே நூற்றுக் கணக்கான கிளைக்கதைகளை அடக்கி மிகப் பெரும் இதிகாசமாய் திகழ்கிறது.

சுவையான கதை என்பதை ஒப்புக்கொள்ளும்போது, பல நெருடலான விஷயங்கள் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

ஒருவரை சுய அறிமுகம் செய்து கொள்ளும்போது அபிவாதயே சொல்லச் சொல்கிறார்கள் ( ஒரு சமூகத்தில் ) அப்படி அறிமுகம் செய்து கொள்ளும்போது  தன்னுடைய குலம் கோத்திரம் போன்றவற்றைக் கூறி இன்னாரின் பேரன் இன்னாரின் புதல்வன்  இன்ன பெயர் கொண்டவன் என்று கூறி வணங்க வேண்டுமாம். அதைப்பற்றிப் படிக்கும்போது சாந்தனுவின் சந்ததிகள் சொல்வது எப்படி இருக்கும் , சரியாக இருக்குமா என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு.
மேலும் இந்தப் பதிவில் நான் குறிப்பிடும் சம்பவங்கள் படித்துப் பெற்றதும் கேட்டுப் பெற்றதுமாகும். சரியெது தவறெது என்று கூறமுடியாது. மூலக் கதையை மூல வடிவில் படித்துணர்ந்தவர் உள்ளாரோ?
----


3 comments:

  1. மூலக்கதையை (வியாசர் எழுதிய)  இதுதான் ஒரிஜினல் என்று ISI முத்திரை இட முடியாது. பல பல மூலங்கள் இருக்கக் கூடும். ஆகவே எல்லா வெர்சன்களுக்கும் பொதுவான கதையை எடுத்துக் கொள்வதே சரி. 
    Jayakumar

    ReplyDelete
  2. நம்பவே முடியாத + நடக்கவே வாய்ப்பு இல்லாத நிகழ்வுகள் + வெளியே சொல்ல முடியாத +++++ பல அசிங்கங்களும் குப்பைகளும் உள்ளன...

    ReplyDelete
  3. வழக்கில் உள்ள கதைகளே இப்படியென்றால் மூலக்கதைகள் இன்னும் மோசமாகத்தான் இருக்கும்.

    தொகுத்தளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete