Tuesday, November 4, 2014

ட்ரையல் பதிவு


எனக்கு சிவகுமாரனின் கவிதை அறிமுகத்தை பதிவில் சேர்க்க முடியாத குறையை போக்க அந்தக் காணொளியை யூ ட்யூபில் கஷ்டப்பட்டு இணைத்தேன். யூ ட்யூபின்  லிங்கும் கிடைத்தது / ஆனால் அதை சிவகுமாரனுக்கு மெயிலில் அனுப்பினால் திறக்கவில்லை. ஆனால் அதையே என் பதிவில் இணைத்தால்திறக்கிறது.இந்த நெளிவு சுளிவுகளெல்லாம் கற்க வேண்டும்முழு அறிமுகமும் வீடியோ எடுக்கவில்லை. எடுத்தவரைப்பதிவிடுகிறேன். கீழே சிவகுமாரனின் வரிகள்

உச்சிமலை மீதிருந்து
  ஓடிவரும் பேரருவி.
பச்சைவயல் தோப்புகளில்
  பாடிவரும் பூங்குருவி.

காடுமலை மேடுகளைக்
  கடந்துவரும் காட்டாறு.
ஓடுகின்ற நதிநீரை
  உடைத்துவரும் பெருவெள்ளம்.

காரிருளைக்  கதிர்வீசி
  கிழிக்கின்ற செங்கதிரோன்
சூரியனை சந்திரனை
  சுற்றிவரும் வான்மேகம்.
பாலைவனப் பெரும்புழுதி
  கிளப்பிவரும் புயல்காற்று.
சோலைவனச்  சுகந்தங்கள்
  சுமந்துவரும் இளந்தென்றல்.

பார்த்தவற்றைக்  கவிதைக்குள்
  பதுக்கிவைக்கும் பகல்திருடன்.
வார்த்தைகளால் தவமியற்றி
  வரங்கேட்கும் கவிச்சித்தன்.

என் கவிதைகள்


உணர்வுகளின் போராட்டம்
  உள்மனதின் பேயாட்டம்.
மனத்தீயை அணைப்பதற்கு
  மடைதிறக்கும் நீரோட்டம்.

கனவுலகின் வீதிகளில்
  கற்பனையின் தேரோட்டம்
நனவாகும் ஆசையினில்
  நம்பிக்கை வேரோட்டம்

நரம்புகளின் முறுக்கேற்றம்
  நடத்துகிற போராட்டம்
வரம்புடைத்து மீறுகிற
  வார்த்தைகளின் அரங்கேற்றம்.

கருத்தரித்த சிறுகுழந்தை
  காலுதைக்கும் வேளையினில்
உருத்தெரியா வலிதன்னை
  உள்ளடக்கும் தாய்முனகல்.


வீறிட்டு வெளிக்கிளம்பி
 வெடிக்கின்ற எரிமலையாய்
பீறிட்டுப் பொங்கிவரும்
  பெருங்கோபத் தீப்பிழம்பு.

ஓட்டுடைத்து வெளிக்கிளம்பி
  உலகளக்கும் சிறகோசை  .
கூட்டுக்குள் அடைத்துவைத்த
  குருவிகளின் சிறு கூச்சல் .

பொங்கிவரும் அலைநடுவே
  புகுந்துவரும் நுரைக்குமிழி
கங்கைநீர் சுமந்துவரும்
  காசிநகர் சிறு கலயம் .

கடைவிரிக்க இயலாத
  காலாவதி பழஞ்சரக்கு
அடைகாக்க முடியாத
  ஆனையிட்ட பெருமுட்டை.

 வர்ணங்கள் வெளுத்திட்ட
  வானவில்லின் சோகங்கள்
கர்ணனுக்கு மறந்துபோன
  கடைசிநேர அஸ்திரங்கள்.

அவசரத்திற் கடகு வைக்க
  ஆகாத அணிகலன்கள்.
கவசகுண் டலங்களிவை
  கவிதையல்ல சத்தியமாய்



35 comments:

  1. மிக மிக அற்புதமான கவிதை
    அவர் குரல் மூலம் கேட்க இன்னும்
    உணர்வுபூர்வமாக இருந்தது
    பதிவாக்கி அனைவரும் அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. தங்கள் உரையும் மிகச் சிறப்பாக இருந்தது
    அதையும் பதிவிட்டால் வரமுடியாதவர்களும்
    அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாய் இருக்கும்

    ReplyDelete
  3. படித்ததை விட கேட்பது சுகமாக இருந்தது, இருக்கிறது!

    ReplyDelete
  4. ஆசுகவி சிவகுமாரனின் கவிதைகளின்
    சந்த அழகு பற்றி சொல்லவும் வேண்டுமோ?.. சிவகுமாரன் என்றுமே நமக்குக் குறை வைத்ததில்லை. தமிழை மாந்த இன்னும் இன்னும் என்று அள்ளித் தரும் வள்ளல் அவர்!

    அதுசரி, கவிதைவரிகளுக்கு நடுவே
    அது என்ன, 'என் கவிதைகள்' என்று ஒரு வரி?..

    புரியவில்லை!

    ReplyDelete
  5. ரசிக்கவைத்த பகிர்வுகள். பாராட்டுக்கள்.!

    ReplyDelete

  6. @ ரமணி.
    தொழில் நுட்பம் தெரியாத எனக்கு வீடியோக்கள் எல்லாவற்றையும் பகிர முடியாததில் வருத்தம் இருந்தது. மிகவும் முயன்று இதை யூ ட்யூபில் ஏற்றி அங்கிருந்து பதிவுக்குக் கொண்டு வந்தேன். வருகை தந்து ரசித்ததற்கு நன்றி.

    ReplyDelete

  7. @ ரமணி
    என் உரையை முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete

  8. @ ஸ்ரீராம்
    இந்த அறிமுகக் கவிதையை சிவகுமாரன் அவருடைய தளத்தில்பதிவிட்டிருக்கிறார். இது அதன் வீடியோ பதிவு. வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  9. @ ஜீவி.
    நான் சிவகுமாரனின் கவிதைகளின் ரசிகன்காட்டாறு போல வந்து விழும் வார்த்தைகள்
    அவரது அறிமுகத்தை இரு பாகமாகக் கூறி இருக்கிறார். முதலில் அவரைப் பற்றி “நான்”என்றும்(இந்தப் பதிவில் அது விடுபட்டுப்போனது என் கவனக் குறைவு)அடுத்து ’ என் கவிதைகள்’ என்றும் வாசித்திருந்தார். வருகை தந்து என் தவறை எனக்குப் புரிய வைத்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete

  10. @ இராஜராஜேஸ்வரி. வருகை தந்து ரசித்ததற்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  11. சிவக்குமாரன் கவிதை வாசித்தபோது ,துணைவியாருடன் நீங்கள் ரசித்ததை அருகிருந்து நானும் ரசித்தேன் அய்யா !

    ReplyDelete
  12. அய்யா. மிக்க .நன்றி
    தங்கள் பதிவில் வெளியிட்டு பெருமைப் படுத்தியதற்கு மிக்க நன்றி.
    எனக்கு எந்த வீடியோ வும் திறக்கவில்லை .கீழ்க்கண்டவாறு வருகிறது.
    இந்த வீடியோ பாதுகாப்பு பயன்முறை இயக்கப்பட்ட நிலையில் கிடைக்காது. \\\\இந்த வீடியோவைப் பார்க்க, நீங்கள் பாதுகாப்பு பயன்முறையை முடக்க வேண்டும்./////

    என்ன செய்வது என தெரியவில்லை.
    ஆனாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    என்ன கைம்மாறு செய்வேன்? தெரியவில்லை.

    என்றும் நன்றியுடன்
    சிவகுமாரன்.

    ReplyDelete
  13. மிக அருமையான கவிதை! அருவி போன்று கொட்டுகின்றதே! மிகவும் ரசித்தோம் சார்! பகிர்வுக்கு மிக்க ந்னறி!

    தங்கள் உரையைப் படித்தோம்.சார். ரொம்ப அழகான கருத்து மிக்க உரை. மார்டின் லூதர் கிங்க் போலத்தான் இருந்தது. விழ வேண்டியய்வர் காதில் விழ்ந்து நல்லது நடந்தால் சரிதான் சார்!

    ReplyDelete
  14. திரு சிவகுமாரனின் கவிதையை அவரது குரலில் கேட்டு இரசிக்க உதவியமைக்கு நன்றி!

    ReplyDelete
  15. ரசித்தேன் ஐயா... நன்றி...

    மேலும் காணொளியை தரவேற்றம் (Video upload) செய்யும் போது "public" என்பதை தேர்வு செய்ய வேண்டும்...

    ReplyDelete

  16. @ பகவான்ஜி
    வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  17. அய்யா,YOU TUBE இல் வீடியோ பார்க்க முடிந்தது. செட்டிங் மாறி இருந்தது. மாற்றி விட்டேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete

  18. @ சிவகுமாரன். மகிழ்ச்சி என்னுடையது. நான் உங்களுக்கு அனுப்பிய மெயில்களில் காணொளி எனக்குத் திறந்தது. யூ ட்யூபிலிருந்து அவர்கள் எனக்குச் செய்தி அனுப்பியதையும் உங்களுக்கு ஃபார்வேர்ட் செய்தேன். எப்படியும் நீங்களும் உங்கள் துணைவியாரும் காண வேண்டும் என்ற ஆசையே இப்பதிவாகியது. மெயில்களைப் பாருங்கள் access permitted என்றும் அனுப்பி இருந்தேன் வருகைக்கு நன்றி சிவா.

    ReplyDelete

  19. @ துளசிதரன் தில்லையகத்து
    வருகைக்கு நன்றி. இவற்றை அப்லோட் செய்ய நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது. நடுவில் மின் வெட்டானால் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டி உள்ளது. சிவகுமாரனின் கவிதைகளுக்கு நான் பரம ரசிகன்

    ReplyDelete

  20. @ வே.நடனசபாபதி
    வருகைக்கு நன்றி ஐயா. சிவகுமாரனின் கவிதைகளை அவர் பதிவில் பாருங்கள். ரசிப்பீர்கள்.

    ReplyDelete

  21. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கு நன்றி டிடி. இப்பொழுதுதான் ஒவ்வொன்றாகச் செய்து பார்க்கிறேன். நேரம் மிக அதிகம் ஆகிறது.

    ReplyDelete

  22. @ சிவகுமாரன்
    அப்பாடா. மகிழ்ச்சி.

    ReplyDelete
  23. சிவகுமாரன் அவர்கள் கவிதையை தந்தமைக்கு நன்றி.
    கவிதை நன்றாக இருக்கிறது.

    காணொளியில் அவர் வாசிப்பதையும் கேட்டேன்.
    நன்றி.

    ReplyDelete

  24. @ கோமதி அரசு.
    சிவகுமாரன் கவிதைகளைப் படித்து திருப்தி பெறாமல் போக முடியாது. சிறந்த படைப்பாளி. வந்து ரசித்ததற்கு நன்றி மேடம்

    ReplyDelete
  25. வணக்கம்
    ஐயா.
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  26. "நரம்புகளின் முறுக்கேற்றம்
    நடத்துகிற போராட்டம்
    வரம்புடைத்து மீறுகிற
    வார்த்தைகளின் அரங்கேற்றம்." என்ற
    அழகான அடிகளில் பாரும்
    நரம்புகள் முறுக்கேற
    நரம்பில்லா நாக்கால
    நாம் சொல்லுகின்ற
    சொல்களின் வீச்சை!

    ReplyDelete
  27. மிக மிக அற்புதமான கவிதை

    ReplyDelete
  28. நன்றாக வந்திருக்கிறது.

    ReplyDelete

  29. @ ரூபன்
    யான் பெற்ற பேறு பெருக வாசகப் பெருமக்கள் வருகை தந்து ரசித்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  30. @ யாழ் பாவாணன் காசிராஜலிங்கம்
    சொற்களின் வீச்சு அற்புதம் அதுவே இப்பகிர்வுக்குக் காரணம். வருகைதந்து ரசித்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  31. @ கரந்தை ஜெயக்குமார்
    அரங்கத்தில் கேட்டதுதான். இருந்தாலும் அசை போட்டு ரசிப்பதில் இன்பம் அல்லவா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  32. @ கீதா சாம்பசிவம்
    சிறிது மெனக்கெட வேண்டி இருந்தது மேடம். இருந்தாலும்நன்றாக வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
  33. பதிவினைக் கண்டேன். ரசித்தேன். தங்களது ரசனையையும் அனுபவித்தேன். நன்றி.

    ReplyDelete

  34. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    அரங்கத்தில் கேட்டு ரசித்திருப்பீர்கள்/ நானும் ரசித்தேன்/ அசைபோட ஒரு வாய்ப்பு. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  35. அனைவருக்கும் நன்றி

    ReplyDelete