Friday, October 21, 2011

கிருஷ்ணாயணம்....

கிருஷ்ணாயணம்.        ஒருஅவதாரக் கதை.
---------------------------------------------------------

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்
நிலமடந்தைத் துயர் துடைக்க வேண்டி
தேவர் புடை சூழ வந்த பிரம்மனிடம்
வல் அரக்கர் உயிர் எடுத்துக் குறை போக்க
யாதவ குலத்துதித்து ஆவன செய்ய
உறுதியளிக்கச் சென்றவர் மனம் தெளிந்து நின்றனர்.

     சூரசேனன் மகன் வசுதேவனுக்குத் தன் சகோதரி
     தேவகியை மணம் முடித்த மதுரா மன்னன் கம்சன்
     அவர்களைத் தேரிலேற்றிச் செல்கையில்,
     அவர்களுக்குப் பிறக்கும் எட்டாம் குழந்தை அவனைக்
     கொல்லும் என்ற அசரீரி சொல் கேட்டு ஆத்திரமடைந்து
     சகோதரியைக் கொல்லத் துணிந்தவனை,வசுதேவன்
     பெற்றெடுத்த குழந்தையைப் பெற்றவுடன் தர வாக்களிக்க
     அவர்களைக் காராக்கிரக சிறையில் அடைத்தான்.

எட்டாம் குழந்தையாய் வந்துதித்த திருமால்
கிரீடம் ,கைவளை, முத்துமாலையுடன் சங்கு சக்கர
கதாயுத பாணியாய்,தாமரை மலருடன் நீல நிற மேனியனாய்,
பெற்றோருக்குக் காட்சி தந்து ,கோகுலத்தில் நந்தகோபன்
மகளாய்ப் பிறந்திருக்கும் மாயையுடன் தன்னை இடமாற்றம்
செய்யக் கூறிப் பின் மானுடக் குழந்தையாய் மாறினான்.

      மாலவன் உதித்ததும்,காவலரும் மற்றவரும் கண்ணயர,
      பூட்டிய கதவு தானாய்த் திறக்க,வசுதேவன் தன்மகனைத்
     தலையிலேந்திக் கோகுலம் செல்ல ,ஆதிசேஷன் குடை
     விரிக்க, யமுனா நதி வழி விட்டு விலக ,நந்தகோபன்
     இல்லம் சென்றடைந்த வசுதேவன் ,அங்கிருந்த மாயையைக்
      கையிலெடுத்து, தன் மகன் மாதவனை விட்டு வந்தான்.

மாலவன் இடத்திற்கு மாயை வந்தவுடன்,
காவலர் கண்விழித்து கம்சனுக்குச் சேதி சொல்ல,
முன் பிறந்த குழந்தைகளை கொன்றவன்,பின்
பிறந்த குழவி பெண்ணென்றும் பாராமல், உயிரெடுக்க
மேல் வீசி வாள் வீச, உயரே சென்ற மாயாதேவி
தன் உருக்காட்டி எச்சரித்தாள் அவனைக் கொல்ல
இருப்பவன் இருக்குமிடம் வேறு என்று.

       தன் உயிர் எடுக்க வந்தவன் உயிர் குடிக்க
       பிரலம்பன்,பகன்,பூதனை போன்றோரை ஏவிய
       கம்சன் ஆணையை நிறைவேற்றக் கண்ணில் கண்ட
       குழந்தைகளைக் கொன்று குவித்த கொடியோரில் பூதனை
       அழகுருக்கொண்டு, இடைச்சிகளை ஏய்த்து மார்கொடுத்து
       விஷப்பால் கொடுத்துக் கொல்லவர,குழந்தைத் திருமால்
       மார் உறிஞ்சி அவள் உயிரெடுக்க வெட்டுப்பட்ட
       மரம்போல், வீழ்ந்து பட்டாள் அக்கொடிய அரக்கி.

அன்றொரு நாள்,அன்னை யசோதா சிறார்கள் மத்தியில்
அவனைக் கிடத்தி உள்ளே செல்ல, அருகிருந்த வண்டி
தானே நகர்ந்து மீதேறவர, கால் தூக்கி எட்டி விட
விழுந்த சகடாசுரன்(சகடம்=வண்டி)உடல் கண்டு
அனைவரும் திகைத்ததும், பிறிதொரு நாள் உடல் பாரம்
தாங்காது கீழே கிடத்தப்பட்ட பரம்பொருளை சுழல் காற்றின்
வடிவினனான திருணாவர்த்தன், புழுதிப் படலத்தால்
கண்மறைத்து மேலே தூக்கிச் செல்லப் பின் முடியாது
கீழேவிட முயல,அதுவும் முடியாமல் , பாரம் தாங்காது
பாறை மீது தான் விழுந்து உயிர் துறந்ததும் குட்டிக்
கண்ணனின் திரு விளையாடல்களில் சிலவே.

      யதுகுல ஆசிரியன்,கர்க்கமுனிவன்,ஜோதிடத்தில் வல்லவன்
      அளவிலடங்கா ஆயிரம் நாமங்கள் கொண்டவனுக்கு
      அழைக்க ஓர் நாமம்”கிருஷ்ணா”என்றே ஓதி, அது ”ஸத்”
      மற்றும் “ஆனந்தம்”ஆகியவை,உருவங்களுடன் கூடியும்,
      உலகப் பாவங்களை போக்கும் தன்மையையும்
      உரைப்பது என்றும் விளக்கம் கூறினான்.

பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதா,விண்ணுடன்
நீரும் நிலமும்,அண்ட அகிலமும் கண்டே மயங்கியதும்
மீண்டும் பின் மாயையால் கட்டுண்டு,வெண்ணெய் திருடிய
முகுந்தனை உரலில் கட்ட, அன்புக்குக் கட்டுப்பட்டவன் ,
கட்டிய உரலுடன் நகர்ந்து, நாரதன் சபிக்க மருத மரங்களாய்
நின்றிருந்த குபேர புதல்வர்”நளகூபரன்”  “,மணிக்கிரிவன் “
இடைபுகுந்து, சாபவிமோசனம் அளித்ததும் திரு விளையாடலே

      நிமித்தங்கள் சரியில்லை யெனக் கருதி கோகுலம் விட்டு
      இடையர்கள் புடைசூழ, பிருந்தாவனம் ஏகிக் குழலூதிக்
      கன்று மேய்த்திருந்த கண்ணனை, அதனுருவில் கொல்லவந்த
      வத்ஸாசுரனை வதைத்ததும், மலையனைய இறக்கைவிரித்து
      வந்த பகாசுரனைஅவன் அலகு பிளந்து கொன்றதும், மலைப்
      பாம்பொன்றுஏதும் அறியா இடைச்சிறாரை விழுங்க, அகாசுரன்
      அவன் என்றறிந்து அவனுள்ளே ஹரியும் போய் மேனி
      பெரிதாக்கி, அவனைப் பிளந்து அனைவரையும் காத்ததும்
      கமலக் கண்ணனின் லீலைகளன்றோ.

மாயையைப் பயன்படுத்திஆயர்குலச் சிறார்களையும்
கன்றுகளையும் காணாமல் போக்கியது, பிரம்மதேவன்
செயலென்றறிந்து,பரம்பொருளே இடைச் சிறுவராய்
கன்றுகளாய் உருவெடுத்து எங்கும் நீக்கமற நிறைந்து நிற்க,
மறைந்ததே யாரும் அறியாமல் காலமும் செல்ல
நான்முகன் மாயையை விலக்க, மறந்தது எது வந்தது எது
எனப் பிரித்தறிய முடியாமல் மயங்கி நிற்க, ,கணக்கிலா
நாராயண வடிவங்கள் கண்டு அவனே மாயையில் மூழ்கி
அறிவினை இழக்க, கண்ணன் மட்டும் அவனாகவே வந்த
போது, செருக்கொழிந்து பிரமன் துதித்து நின்றான்.

      தேனுவைக் (பசுக்களை) காப்பவன் தேனாசுரனைக் கொல்வது
      முறையாகாது என்றெண்ணி,அண்ணன் பலராமன் மூலம்
      கழுதை உருவிலிருந்த தேனாசுரனைக் கொல்வித்து,அவன்
      உடன் வந்த நரிக்(ஜம்புக)கூட்டத்தை அழிக்கத் துவங்க,
      அதையறிந்த வருணன் தானும் கலங்கி,தன் பெயர் (ஜம்புகன்)
      வேதத்தில் மட்டும் ஒலிக்கக் கேட்குமாறு செய்தானாம்.!

சௌபரி முனிவன் யமுனையில் பேணிக்காத்த மீன்களை
உண்டதால் சாபம் பெற்ற கருடன் வர இயலாத நதியில்
பாம்பரசன் காளியன் குடியிருந்து நீரை நஞ்சாக்க ,
நீருண்ட இடையரும் கோக்கூட்டமும் உயிர் துறக்க,
அவர்களை உயிர்ப்பித்து,காளியனை அவன் தலைமேல்
நடனமாடி வென்று, பின் கொன்று அருள் செய்து
திரும்புகையில் ,கானகத் தீயைப் பருகி மஞசள் மேனியனாய்
ஒளிர்ந்ததும், பிரலம்பாசுரனை தன்னுடன் விளையாட்டில்
பங்கேற்க வைத்துப் பின் பலராமனால் அவனைக்
கொல்வித்ததும் அவதார லீலைகளில் சிலவாம்.

      கோவிந்தன் குழல் கேட்டு மெய்மறந்த கோபியர்கள்
      அவன்பால் மையலுற்றனரா,தன்வசம் இழந்தனரா,அவனுடன்
       இணைய விரும்பினரா,அடிமையாயினரா,எதுவாயிருப்பினும்
      அவன் முன்னே,அவனைக் கண்டே,காலங்கழிக்க நினைத்தவர்
      ஆற்றங்கரையில் குளித்திருந்தோர் ஆடையெடுத்து அவனும்
      அலைக்கழிக்க, தம்மை மறந்து கை குவித்து வேண்டியவருக்கு
      அருள் புரிந்து ஆட்கொண்டவனும் கிருஷ்ணனே.

மழை கொடுக்கும் இந்திரனுக்கு வேள்வி ஏன்,
மரம் நிறைந்த மலைக்கன்றோ பலி கொடுக்க வேண்டும்
எனக் கூறிய கோபாலன்பால் கோபமுற்ற இந்திரன்,
பெருமழையுடன் இடியும் கூட்டிஇ டர் கொடுக்கக் கோவர்தன
 மலையைத் தூக்கி இடையரின் இடர் துடைத்துக் காத்த
 கண்ணன் முன் செறுக்கழிந்து நின்றான் தேவர்கோன்.

        கோகுலத்தில் கண்ணன் எனவே நாரதன் கூறக்
        கேட்ட கம்சன் வில்வேள்விகளில் பங்கு பெற
        கோவிந்தனை அழைத்துவர அக்ரூரனையனுப்ப அவனும்
        பரம்பொருளிடம் பக்தியால் கட்டுண்டு சேதி சொன்னான்.

அண்ணனுடன் கண்ணனும் மதுராபுரி சென்று
கோட்டை வாயிலில் தனை எதிர்த்த கரியின்
தந்தமதனை அடியுடன் பிடுங்கி,அதன் உயிரெடுத்துப்பின்
மற்போரில் சாணூரனுக்கும் முடிவெடுத்து மோட்சமளிக்க
நாளும் அனவரதமும் அவனையே அசரீரி சொல் கேட்ட
நாள்முதல் நினைத்திருந்த கம்சன் கோபமுற்று வாள்வீச
அசரீரி சொல்லை மெய்ப்பித்தான் கிருஷ்ணன்.

      கம்சனைக் கொன்ற கண்ணன் துவாரகையில் ஆண்டது
      ருக்குமணியைக் கவர்ந்து மணந்தது,பாரதப் போரில்
      பாண்டவருக்கு உதவியது, கீதோபதேசம் செய்தது என்றும்,
      அவதார நோக்கின்படிவதம் செய்த அரக்கர் பட்டியல்
      அவன் மணம்புரிந்தோர் கதைகளும் நிறையவே இருப்பினும்
      பிறக்கும்போதே தான் ஒரு அவதாரபுருஷன் என்றறிந்த
      கிருஷ்ணாயணத்தில் சொல்லியது குறைவு, சொல்ல
      ஏலாதது ஏராளம் இருந்தும் இத்துடன் நிறைவு செய்கிறேன்.









   























   

23 comments:

  1. எளிய தமிழில் ஒரு பக்கத்தில் கண்ணனின் காவியம்! அருமை ஐயா!

    ReplyDelete
  2. அந்த வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் படமும், கண்ணன் பற்றிய காவியமும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. http://www.whispersintamilnadu.com/2011/10/success-is-not-so-sweet.html

    ReplyDelete
  4. வந்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  5. அனைவரையும் காத்ததும்
    கமலக் கண்ணனின் லீலைகளன்றோ./

    கிருஷ்ணார்ப்பணம்!

    ReplyDelete
  6. விவரங்களைக் கோர்க்கப் பட்டிருக்கும் சிரமம் வரிகளில் தெரிகிறது.

    ReplyDelete
  7. @ஜிவி--உண்மைதான். ஆங்கிலத்தில்
    PRECIS WRITING தேர்வுபோல் தோன்றியது.கதையை விஸ்தாரமாக எளிதில் எழுதிவிடலாம். நான் சுருக்கி எழுத எடுத்த முயற்சி, ஒவ்வொரு பத்தியையும் ஒரே வாக்கியத்தில் எழுத நினைத்ததும் , சிரமங்கள் தெரியும்படியாகி விட்டதோ.?

    வருகை தந்து ஊக்கப் படித்தையவருக்கு என் நன்றி.

    ReplyDelete
  8. நான்முகன் மாயையை விலக்க, மறந்தது எது வந்தது எது
    எனப் பிரித்தறிய முடியாமல் மயங்கி நிற்க, ,கணக்கிலா
    நாராயண வடிவங்கள் கண்டு அவனே மாயையில் மூழ்கி
    அறிவினை இழக்க, கண்ணன் மட்டும் அவனாகவே வந்த
    போது, செருக்கொழிந்து பிரமன் துதித்து நின்றான்.//

    ரசித்தேன். சிரமமான ஒன்றை மிக எளிதாகச் செய்திருக்கிறீர்கள். ருக்மிணி கல்யாணம் வரை முயன்றிருக்கலாமோ எனத் தோன்றியது.

    ReplyDelete
  9. கண்ணன் என்றால் வராமல் இருக்க முடியுமா ஜி.எம்.பி சார்.... இதோ வந்துவிட்டேனே.....மனிதனாகவே வாழ்ந்தவர் ராமர். இறைவன் என்று அறிந்தும் மனிதனை போல் நடித்தவன் கண்ணன். உலகில் மிக அற்புத நடிகன் அவன் தான். பந்தம் பாசம் எதற்கும் கட்டுண்டு வீழாத பரம்பொருள் தான் கட்டுண்டு பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.... அற்புதமாய் அதனை இறுதி வரியில் கூறியிருக்கிறீர்கள். ஆம் பிறக்கும் போதே இறைவன் என்று பிரகடனப்படுத்தி பிறந்தவன்...mass entry...ஆரவாரப் பிறப்பு

    ReplyDelete
  10. மிக்க நன்றி ! படித்தேன். சரளமான நடையில் காவியம் படைத்து விட்டீர்கள். நீங்கள் ம ட்டும் நினைவு படுத்தா மல் விட்டிருந்தால் ஓர் அழகிய படைப்பு என் கண்ணில் படாமலே போய் விட்டிருக்கும். மீண்டும் நன்றி.-கவிஞர் இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  11. மிகவும் ரசித்துப் படித்தோம் சார். மிக எளிமையாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள். நாங்கள் கிருஷ்ணனைப் பற்றிய கதையை ரசித்தோம் என்பதை விட தங்கள் எழுத்தை ரசித்தோம் என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  12. ஆமாம், படிச்சிருக்கேன். மறந்து போச்சு! :)

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. எளிமைத் தமிழில் இனிமையாக, சுருக்கமாக, மனங்கவரும் கண்ணன் கதையை, அனைவரும் படித்து இன்புறச் செய்த இம்முயற்சிக்கு என் பணிவன்பான வணக்கம். இத்தனை வருடங்களாக மீண்டும் மீண்டும் வெளியிட்டும், ஒரு சில தட்டச்சுப்பிழைகளைச் சரி பார்க்கவில்லையே எனும் ஒரு ஆதங்கமும் கூடவே ஏற்பட்டது. முடிந்தால் சரி செய்யவும். வணக்கம்.

    //சூரசேனன் மகன் வசுதெவனுக்குத் தன் சகோதரி//
    சூரசேனன் மகன் வசுதேவனுக்குத் தன் சகோதரி

    //அகாசுரன்
    அவன் என்ற்றிந்து அவனுள்ளே ஹரியும் போய் மேனி//

    அகாசுரன்
    அவன் என்றறிந்து அவனுள்ளே ஹரியும் போய் மேனி

    ReplyDelete
  15. அய்யா,
    இது ஒரு தொடரென்றால் இதன் நிறைவிலிருந்து கருத்திடல் முறையாகாது.
    முழுமையாகப் படிக்க வேண்டும்.
    புராணங்களில் சொல்லப்படும் கதைகடந்த தத்துவார்த்தம் விளக்கப்படின் பல ஆச்சரியங்களை அது உருவாக்கக் கூடும்.
    பழங்கதை என எளிதில் கடந்து போகின்ற பலவற்றுள் ஒளிந்திருக்கும் புதுப்பொருள்கள்..
    கதைகடந்த தத்துவங்கள்...
    இவற்றை விளக்கினால்,
    வெறுங்கதையாய்ப் பகிரப்படும் இவற்றின் உயிர் மீட்டெடுக்கப்படும் என்பது எனது எண்ணம்.
    இல்லாதவன் இருப்பவனிடம் இறைஞ்சும் தாழ்மையோடு இதைத் தங்களிடம் கேட்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete

  16. @ ஊமைக் கனவுகள்
    நிச்சயமாக இது ஒரு தொடரல்ல. அவதாரக் கதைகள் எழுதி வரும்போது கிருஷ்ணாவதாரமும் ராமாவதாரமும்சற்று வித்தியாசமாக எழுதப் புகுந்ததன் விளைவே இது. புராணங்களில் சொல்லப் படும் கதை கடந்த தத்வார்த்தங்கள் குறித்து எனக்கு சற்றே வித்தியாசமான கருத்து உண்டு, தற்சமயம் எழுதிவரும்கீதைப் பதிவுகளுக்குப் பின் என்னுடைய சில எண்ணங்களைப் பதிவில் இட உத்தேசம் நான் வெறுங்கதையாகவே காண்கிறேன்.ஆனால் இந்தக் கற்பனைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு.வித்தியாசமான பின்னூட்டத்துக்கு நன்றி.

    ReplyDelete

  17. பிரமாண்டம் மலைத்து விட்டேன் ஐயா படித்து...

    ReplyDelete
  18. கிருஷ்ணனின் பிறப்பு முதல் வீரதீர சாகசங்கள் வரை அனைத்தையும் மிக விரிவாக எழுத்தில் வடித்தமை சிறப்பு. இங்கு கிருஷ்ணனின் குறும்புகளும் காதல்லீலைகளும் இடம்பெறாதது ஒரு குறைபோல் தோன்றினாலும் இது கிருஷ்ணாவதாரக்கதை என்பதால் அவதாரத்தின் அடிப்படை நோக்கம் மட்டுமே இங்கு பகிரப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சிறப்பானதொரு ஆக்கத்துக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete

  19. @ கில்லர்ஜி
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  20. @ கீதமஞ்சரி
    அவதாரக் கதைகளெழுதி வந்தபோது கிருஷ்ணனின் அவதாரம் சற்று நீளமாய் சொல்லப் பட்டது. பாராட்டுக்கு நன்றி மேடம்

    ReplyDelete