Sunday, March 18, 2012

நினைத்ததை எழுதவா.?

                         
                                      நினைத்ததை எழுதவா.?
                                      -------------------------------
                                        எண்ணச் சிதறல்கள்.
                                           -----------------------

1.        காத்திருப்பு வட்டம்.

கருவிலிருக்கும் குழந்தைப் புவியில் வந்துதிக்கக் காத்திருந்து,பிறந்து,
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வளர்ந்து, ஏதுமறியாப் பருவத்தில் எல்லாவற்றுக்கும் காத்திருந்து, உடலும் உள்ளமும் பருவமடைய இரு பாலரும் மறுபாலரைக் கவரக் காத்திருந்து,பின் மணவினையில் ஒருவர் கைப் பிடித்து, சந்ததி பெருக்கக் காத்திருந்து பின் நரை கூடிக் கிழப் பருவம் எய்தி, கூற்றுவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது , காத்திருப்பு என்பது ஒரு வட்டம் என்று நன்றாகத் தெரிகிறது.

புகழொடு தோன்றல்.

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று.. அவருக்கென்ன எழுதி விட்டார். தோன்றும்போது புகழோடு தோன்றுவது நம் கையிலா இருக்கிறது.? மேலும் புகழ் என்பது ஒரு RELATIVE TERM..அதற்கு அளவு கோல் என்ன.? வள்ளுவர் வாக்குப்படி நடப்பதென்றால் 90% க்கு மேற்பட்டவர்கள் தோன்றியே இருக்கக் கூடாது. வள்ளுவருக்கு ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். வாய்ப்புகிடைக்கப் பாடுபட்டு, தோன்றியபின் புகழடைக என்றல்லவா எழுதி இருக்க வேண்டும்.!

எதையும் எதிர்க்க வேண்டாம்.

இதை நான் எழுதுவதற்கே எதிர்ப்புகள் இருக்கலாம். இருந்தாலும் மனசில் பட்டதை எழுதாமல் இருக்க முடியவில்லை. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. என்று கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்துவிட்டால் முன்னேற்றம் பகல் கனவாகி விடும். மேலும் முன்னேற வேண்டும் என்னும் உந்துதலே நம்மை முன்னோக்கி நகர வைக்கும். ஆனால் அதற்காக இதுவரை முன்னேறவே இல்லை என்று அழிச்சாட்டியத்தில் எதையும் குறை கூறுவது எனக்கு ஏற்புடையதல்ல. நான் என்னைப் பற்றித்தானே கூற முடியும். நான் எந்த 


நிலையில் இருந்தேன். கடந்து வந்த பாதை என்ன. என் தந்தை எனக்குச் செய்தது என்ன. நான் என் மக்களுக்குச் செய்த்து என்ன. என் மக்கள் அவர்களின் குழந்தைகளுக்குச் செய்வது என்ன. செய்ய முடிவது என்ன. என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் பெற முயலும்போது. எங்கள் முன்னேற்றம் தெரிகிறது. இது இக்கால சந்ததியினர் எல்லாருக்கும் பொருந்தும் என்று நான் கூறத்தேவையில்லை. என்ன.? இன்னும் வேகமாய் வளர்ந்திருக்கலாமோ என்னும் எண்ணம் வேண்டுமானால் தோன்றலாம். நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது நம் மக்கள் தொகை சுமார் நாற்பது கோடி என்றால், இப்போது அது நூறு கோடியைத் தொட்டுவிட்டது.அப்போது சாராசரி இந்தியன் வயது 35-க்கு பக்கம் இருந்தது. தற்போது 65 வயது என்று கூறப் படுகிறது. எழுத்தறிந்தவர் தொகை 30% க்கும் குறைவாக இருந்தது. இன்று சுமார் 60% சராசரியாக இருக்கிறது. மற்றபடி வாழ்க்கையின் எல்லா வசதிகளும் எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அநேகமாக ஏற்ற தாழ்வுகள் மறைந்து கொண்டு வருகின்றது. இன்னும் சில இடங்களில் அது நீடிக்கிறதென்றால் அது நாம் போற்றிப் பாதுகாக்கும் கலாச்சாரக் காரணங்களே ஆகும். ஏற்ற தாழ்வற்ற இலவசக் கல்வி எல்லோருக்கும் பொதுவாக்கப் பட்டால் அதுவும் மறையலா.ம். ஆனால் இப்போதைய EMANCIPATED  மக்கள் அதை வரவேற்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஏற்ற தாழ்வுள்ள சமுதாயம் தான் இவர்களுக்கு ஆதிக்கம் செய்ய உதவும்.

முதல் படியாக அரசு கொண்டு வரும் சமச்சீர் கள்வியோ, இலவசக் கல்வியோ நடைமுறைப் படுத்தப் பட்டால் கல்வி வியாபாரிகள் பாடு திண்டாட்ட மாகி விடும். அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சிந்திக்க வேண்டும். விளை நிலங்கள் விற்கப்பட்டு விவசாயிகள் இடமாற்றம் செய்ய முயல்கிறார்கள். விவசாய வேலை இல்லாமல் திண்டாடும் மக்களுக்கு வருடத்தில் குறைந்தது நூறு நாட்களுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் வந்த MGNRES   திட்டம் ஒழுங்காக் ந்டைமுறைப் படுத்தப் பட வேண்டும். திட்டத்தில் குறையில்லை. நடைமுறைப் படுத்துவதில் புறங்கையை நக்குகிறவர்கள் அதற்குப் பதில் அள்ளிக் குடிக்கிறார்கள். FOOD SECURITY என்னும் திட்டம் வருமுன்பே ஏகப்பட்ட எதிர்ப்பு. எங்கெங்கு சட்டங்களில் ஓட்டை இருக்கிறதோ அதை திறமையாகப் பயன் படுத்துபவரை நமக்கு ஏனோ அடையாளம் தெரிவதில்லை. எழுபதுகளுக்கு முன்பு குடி என்றால் என்ன என்றே தெரியாத ஒரு சமுதாயம் தலை எடுக்க இருந்தது. இப்போது குடியில்லாமல் இருக்க எண்ணினாலும் முடியாது.

 நானும் பார்த்துக் கொண்டு வருகிறேன். எதையும் எதிர்க்கும் மனோபாவம் உள்ள இளைய சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் தற்போதைய மத்திய தர இளைஞர்கள் அதிகம் ஆவேசப் படுகிறார்களே அல்லாமல் ஆழ சிந்திப்பது இல்லை. இம்ம் என்பதற்குள் எல்லோரையும் இறக்கி விட்டு , உம்ம் என்பதற்குள் உயரப் பறக்க விரும்புகிறார்கள். அதற்கு ஏற்றாற் போல் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இளைஞர்களின் உணர்வுகளை சாதி மத இன மொழி என்றெல்லாம் கூறி உசுப்பேற்றுகிறார்கள். இருந்தால்தானே அவர்களது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.


எண்ணச் சிதறல்கள் என்று எழுதத் துவங்கினேன். ஆனால் சிதறிய எண்ணங்கள் என் ஆதங்க்கக் குவியலில் மூழ்கி எழ ஆரம்பித்து விட்டது.

எழுதுவதன் நிமித்தம்

என்னதான் நினைத்து எழுதினாலும் அது போக வேண்டிய இடத்துக்குப் போகிறதா என்பது சந்தேகமே. இப்படியும் சிந்திக்கலாமா என்று நினைப்பவர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை. வலையில் எதையும் சீரியஸாக எழுதினால் அது படிக்கப் படாமலேயே போகும் என்றே தோன்றுகிறது. நானும் பார்த்துவிட்டேன். மூளையைக் கசக்கி எழுதுபவை சீண்டப் படாமலும் மொக்கையாய் எழுதப் படுபவை அமோக வரவேற்பு பெறுவதையும் நான் வலையில் எழுதத் துவங்கியதிலிருந்து கவனித்து வருகிறேன். இந்த வயதுக்குமேல் மொக்கையாக எழுத மனம் வருவதில்லை. இதில் மொக்கை என்பது என் கணிப்பே அல்லாமல் மொக்கைக்கு அளவு கோல் என்னிடம் இல்லை. சொல்லாமல் செல்வதே நன்று என்று எழுதி விட்டு இவ்வளவையும் சொல்கிறேன் என்றால் என் மனத்தாங்கல் புரிந்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன். ஆமாம்  புரிந்து கொண்டு என்ன ஆகும்.? 
------------------------------  ------------------------------------------------------------------------

                            


  
                        :          .               .                                  .       






16 comments:

  1. //என்னதான் நினைத்து எழுதினாலும் அது போக வேண்டிய இடத்துக்குப் போகிறதா என்பது சந்தேகமே. இப்படியும் சிந்திக்கலாமா என்று நினைப்பவர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை. வலையில் எதையும் சீரியஸாக எழுதினால் அது படிக்கப் படாமலேயே போகும் என்றே தோன்றுகிறது.//

    உங்களுக்காக எழுத ஆரம்பித்தால் இந்த ஆயாசம் எல்லாம் தோன்றாது என்று தோன்றுகிறது.

    தனக்காகக் கூட எழுத வேண்டுமா என்ற கேள்வி எழலாம். எழுதிப் பாருங்கள், அந்த சுகம் தெரியும் என்பதே அதற்கான பதில்.

    இதில் இன்னொரு செளகரியமும் இருக்கிறது. மற்றவர்களுக்காக எழுதும் பொழுது, மற்றவர்களுக்கு எதெது பிடிக்கும் என்று தீர்மானித்து எழுத வேண்டியிருக்கிறது. உங்களுக்காக எழுதும் பொழுது அந்த அநாவசிய வேலை இல்லை. உங்களுக்குப் பிடித்த ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் உங்களைப் போன்றவர்களுடனான மனசார கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிற
    வாய்ப்பு கிடைக்கும். உங்களைப் போன்றவர்கள் நாலைந்து பேர் கிடைத்தாலும் போதும். அந்தப் பகிர்தலில் கிடைக்கிற மகிழ்ச்சியே அலாதியாகத் தோன்றும்.

    ReplyDelete
  2. ஜீவி சொன்னதை நான் அப்படியே ஆதரிக்கிறேன். நாம் எழுதுவது நம்முடைய திருப்திக்காக மட்டுமே என்று இருந்துவிட்டால் எதிர்பார்ப்புகள் இருக்காது. எதிர்பார்ப்புகள் இல்லையென்றால் ஏமாற்றமும் இல்லை.

    நிஜ வாழ்க்கையில் நம்முடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள எல்லா நேரங்களிலும் முடிவதில்லை. ஆனால் பதிவுலகில் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் நாம் நினைப்பதை எழுதலாம். அதுவே ஒரு ஆத்ம திருப்தியைக் கொடுக்கும்.

    ReplyDelete
  3. ஜீவி சொன்னது சரி... ! பின்னூட்டத்தை எதிர்ப்பார்த்து நாம் பதிவு எழுதினால்,
    நமது எண்ணவோட்டம் மங்கிப் போங்க வாய்ப்பு உண்டு.

    நான் தொடர்ந்து 2008 லிருந்து எழுதி வருகிறேன். எனது பதிவுக்கு பின்னோட்டம் என்பது மிக சொற்பமாகவே இருக்கும். எனது பதிவின் மூலமாக கல்கியில் ஒரு கட்டுரையும் மங்கையர் மலரில் ஒரு கவிதையும் எழுத வாய்ப்பு கிடைத்தது. இதை ஒரு அங்கீகாரமாக எடுத்துக் கொண்டேன்.

    பதிவுலகம் இப்போ 'மொய்' கலாச்சாரத்தில் நுழைந்து விட்டது. பின்னோட்டம் என்பது 'மொய்யாக' மாறிவிட்டது. படித்தார்களோ படிக்கவில்லையோ தெரியாது 'பதிவு அருமை' என்று பொத்தம் பொதுவாக தட்டிவிடும் கூட்டம்தான் அதிகரித்துள்ளது. எனக்கு பின்னோட்டம் போட்டினா, உனக்கு போடுறேன் என்ற மன நிலைதான் இப்போ இருக்கிறது.

    //மூளையைக் கசக்கி எழுதுபவை சீண்டப் படாமலும் மொக்கையாய் எழுதப் படுபவை அமோக வரவேற்பு பெறுவதையும் நான் வலையில் எழுதத் துவங்கியதிலிருந்து கவனித்து வருகிறேன்.// என்று தாங்கள் கூறியது நிஜமான ஒன்று. அச்சு பிச்சு எழுத்துகளுக்கு இங்கு அமோக வரவேற்பு கொடுக்கத்தான் செய்கிறார்கள்.

    நல்ல பதிவை படிக்கவேண்டும், அதன் தாக்கத்தால் பின்னோட்டம் போடவேண்டும் என்ற உந்துதல் குறைந்து வருவதாகவே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  4. பல்லாயிரக்கணக்கானவர்களிடம் சொன்ன கதைதான் ஆயினும்
    காந்தியிடம் மட்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய
    அரிசந்திரன் கதை போல தங்க்கள் படைப்பும் நிச்சயம்
    சிலருக்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தித்தான் போகும்
    எண்ணிக்கை கணக்கில் எனக்கும் நம்பிக்கை இல்லை
    தொடர்ந்து தங்கள் பதிவை பதிவு செய்ய வேணுமாய்
    அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
    மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு

    ReplyDelete
  5. எண்ணிலா எண்ணங்களைச் சிதறிக்கொண்டே இருங்கள். சிதறிய எண்ணங்களில் எனக்குத் தேவையானவற்றைத் தயங்காமல் எடுத்துச் செல்கிறேன். அனுபவங்கள் வாயிலாய் கற்பதில் அநேக சுகம் உள்ளது. அனுபவிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.

    ReplyDelete
  6. பின்னூட்டத்தை எதிர்ப்பார்த்து நாம் பதிவு எழுதினால்,
    நமது எண்ணவோட்டம் மங்கிப் போங்க வாய்ப்பு உண்டு. //

    உண்மையிலும் உண்மை நாம் நம்முடைய ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம் அது பிறரைச்சென்றடைந்தால் இரட்டிப்பு திருப்தி..

    ஆக தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  7. தோன்றிற் புகழொடு.. சரியான கேள்வி. பிறவி லாட்டரியில் பரிசு கிடைத்தால் தானே? ஒருவேளை புகழுக்கு வேறே ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும் அவர் எழுதின நாளில் :)
    எழுதுவது மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உரிமையென்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த நிறைய அற்புத சிந்தனையாளர்கள்.. நினைத்ததை எழுத முடியாமல் திண்டாடுவதை தினசரி பார்க்கிறேன். எழுத முடிவது ஒரு வரம்.

    ReplyDelete
  8. @ஜீவி,
    இத்தனை காலம் எனக்காகத்தான் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போதும் எனக்கு சரி எனப் பட்டதைத்தான் எழுதி வருகிறேன். வலையில் எழுதத் துவங்கிய பிறகு எழுதியதை பகிர்ந்து கொள்ள நீங்கள் சொல்லும் அந்த நாலைந்து பேர் கிடைக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதுதான் எப்படி.? ஆயாசம் ஒன்றும் இல்லை. ஆர்வம்தான்.வந்து உற்சாகப் படுத்துவதற்கு நன்றி,ஜீவி சார்.

    ReplyDelete
  9. @டாக்டர் கந்தசாமி,
    கட்டுப்பாடு இல்லாமல் எழுதலாம் என்றாலும் எனக்கென்று ஒரு நியதி இருக்கிறது. நான் ஒரு திறந்த புத்தகம். வலையில் என்னைப் படிப்பவர்க்கு அது புரியும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  10. @தோழன் மபா.
    பின்னூட்டம் எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் என் எழுத்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்று அறிய ஆர்வம் உண்டு. என் கருத்துக்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும் ( இருக்கும் என்றும் தெரியும் )நேர்மையாய் கூறினால் அறிந்து கொள்வேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. @ரமணி. என் எழுத்துக்கள் யாரையாவது சிந்திக்க வைத்தால் அதுவே என் வெற்றி எனக் கொள்வேன். பெங்களூர் வரும் திட்டம் இருப்பதை நீங்கள் எழுதிய ஒரு பின்னூட்டத்தில் படித்தேன். சிரமம் இல்லையென்றால் இங்கு என் அதிதியாக இருக்க வேண்டுகிறேன். YOU ARE AFFECTIONATELY AND WARMLY WELCOME.

    ReplyDelete
  12. @கீதமஞ்சரி,
    என் அனுபவங்களை நிறையவே பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் ஊக்கமூட்டும் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. @அன்புடன் மலிக்கா.
    வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. எனக்கு நினைவிருக்கிறது, நீங்கள்தான் என்னை முதலில் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியது. நிறையவே எழுதி இருக்கிறேன். படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆத்ம திருப்திக்காக எழுதுவது பிறரைச் சென்றடைந்தல் இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  14. @அப்பாதுரை.
    என் எழுத்துக்களை புரிந்து கொண்டு படிப்பவரில் உங்களுக்குத் தனியிடம் என்னுள் உண்டு. நினைத்ததை எழுதி பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வரப்பிரசாதம் வலை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாதுரை சார்.

    ReplyDelete
  15. உண்மை தான்.. ஆனாலும் உங்கள் எழுத்துகளை
    விரும்பும் ஒரே ஒரு வாசகர் இருந்தாலும் அவருக்காகவாவது
    விடாமல் நம்பிக்கையோடு எழுதுங்கள்.

    ReplyDelete
  16. எதிர்பார்ப்புகள் இல்லையென்றால் ஏமாற்றமும் இல்லை.

    ReplyDelete