Friday, April 6, 2012

எண்ணிப் பார்க்கிறேன்......

                                      எண்ணிப் பார்க்கிறேன்.
                                     --------------------------------
                                  ( இது என்னுடைய இருநூறாவது பதிவு.)
                                                           ---------------------------------------------------------

அன்றொரு நாள் பதிவொன்றில் குப்புற வீழ்ந்தெழுந்தபோது
முண்டாசுக் கவிஞனின் வரிகளை எண்ணி,
“காலா, அருகினில் வாடா, சற்றே மிதிக்கிறேன் உனை என்
காலால் “ என்றே எழுதினேன். காலன் யானையின் காலாக
வந்து அவனையே மிதித்து விட்டான். நான் எம்மாத்திரம்.?

காலனுக்கென்ன பைத்தியமா பிடித்தது என் காலருகே வர.?
என் தோளில் தொற்றி ஏறி,காதருகே முணுமுணுக்கிறான்,
“உன் நாட்களை எண்ணிக்கொள்”.எண்ணிப் பார்க்கிறேன்
இருக்கும் நாட்களை அல்ல, இருந்து வந்த நாட்களை.

பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,
காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?

ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?

யாரும் சிறியர், நானே பெரியோன்,எதிலும் சிறந்தது
என் செயலே,பாரினில் யாரும் எனக்கீடில்லை எனப்
பயனிலா சொற்கள் பகர்ந்தேனா.?
காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..

பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?
-----------------------------------


25 comments:

  1. அருமையான பதிவு.
    200வது பதிவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    //காலனைக் காலால் மிதிப்போம்.// காலனுக்கு கொஞ்சம் மரியாதை கொடுப்போம்!!!! எப்படியும் அவன் தயவு நமக்கு வேண்டும்.

    ReplyDelete
  3. இருநூறு என்பது ஏதும் எல்லையில்லை.
    தொடரட்டும், உங்கள் பணி.

    ReplyDelete
  4. அருமையான பதிவு.
    200வது பதிவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. 200-வது பதிவிற்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வெற்றிகரமான 200 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக் கூறும் அனைவருக்கும் என் நன்றி. இது என் 200-/வது பதிவு என்று கூறி இருக்கக் கூடாதோ.? பதிவு பற்றிய கருத்தே காணோமே.

    ReplyDelete
  9. //“உன் நாட்களை எண்ணிக்கொள்”.எண்ணிப் பார்க்கிறேன்
    இருக்கும் நாட்களை அல்ல, இருந்து வந்த நாட்களை.// என்ன கவித்துவமான சொற்கள்.

    200வது பதிவு அருமை. . தொய்வுராமல் எழுதும் தங்கள் எழுத்து 'காவியம்' போன்றது.

    உங்கள் பதிவுகள் தொடர 'தமிழன் வீதி' சார்பாக எனது மனப்பூர்வ வாழ்த்துகள் ஆய்யா.

    ReplyDelete
  10. \\\எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
    ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
    மண்ணில் நானோர் ஒளிவட்டம்.\\\ நாம் அனைவருமே அப்படித்தான் ...அருமை!

    ReplyDelete
  11. நம்பவே முடியாத உழைப்பு சார். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. GMB அவர்களுக்கு வணக்கம்! வாழ்க்கை பயணத்தில் எதுவுமே மிச்சம் இல்லை என்பதனை ஒரு பக்க கவிதையில் உணர்த்தி விட்டீர்கள்.
    // ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
    ....................................................................................................
    வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
    நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
    .................................................................................................................
    எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
    ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
    மண்ணில் நானோர் ஒளிவட்டம். //
    என்ற வரிகள் உண்மையை உணர்ந்த வரிகள்.

    ஏதோ இப்போதுதான் பிறந்தோம் வாழ்ந்தோம் என்பது போல் உள்ளது. நாட்கள் ஓடி விட்டன. “ஆசையே அலை போலே” என்று தொடங்கும் திரைப்படப் பாடலில் கண்ணதாசன் வரிகள் .......
    “வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
    வடிவம் மட்டும் வாழ்வதேன்...
    இளமை மீண்டும் வருமா....
    மணம் பெறுமா.....
    முதுமையே சுகமா...//

    ReplyDelete
  13. \\வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
    நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?\\

    சிந்திக்கத் தூண்டும் அருமையான வரிகள். இதுவரை வாழ்ந்த வாழ்வின் பயனை எழுத்தாய் எண்ணிப் பார்த்ததன் விளைவை இனிய பாவால் இன்றெமக்கு உணர்த்தினீர்.

    இதுபோல் எண்ணிப் பார்க்க எனக்கு ஏதும் இருக்குமோ தெரியவில்லை. மண்பயனுற வாழ்ந்த சுவடுகளின் வழி நானும் விழைகிறேன். எண்ணம் பயனுற எழுந்த கவிதனில் நானும் திளைக்கிறேன். பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  14. @டாக்டர் கந்தசாமி
    காலனைக் காலால் மிதித்தேன் என்று சொல்லும்போது அவனைக்( சாவைக் )கண்டு அஞ்சவில்லை என்றே பொருள் கொள்ள வேண்டுகிறேன். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. @ஜீவி
    இருநூறு ஒரு எல்லையைக் குறிக்கப் பயன்படுத்தவில்லை. ஒரு குறியீடு எனக் குறிப்பிடும் அர்த்தத்தில் எழுதினேன். நன்றி.

    ReplyDelete
  16. @தோழன் மபா.
    உங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. @கூடல் பாலா,
    உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  18. @தி.தமிழ் இளங்கோ,
    நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாயிற்று. வந்த பாதையை அசை போடும்போது திடீரென்று பிறந்த கவிதை இது, இதில் நானே ரசித்த வரிகள் “காணும் பொருளை எல்லாம் நன்றாய் தெரிய நோக்கி, தன்னையே நோக்காச் சீரின் அமைந்த கண்மணி போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ.”வருகைக்கும் உணர்ந்து பாராட்டியதற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  19. @கீத மஞ்சரி.
    உங்கள் பின்னூட்டமே உற்சாகமூட்டும் கவிதையாக மிளிர்கிறது. பாராட்டுக்களுடன் நன்றியும் .

    ReplyDelete
  20. @அப்பாதுரை.
    உழைப்பு என்று ஒன்றுமில்லை. மனதில் தோன்றுவதை எழுதுகிறேன். ஊக்கமளிக்கும் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  21. ரொம்ப ரொம்ப அருமை சார்....நெகிழ்ச்சியாய் இருக்கிறது....நிச்சயம் சூழ்ந்து நின்று புகழத் தக்கவர் :)

    ReplyDelete
  22. இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். நல்ல ஆக்கபூர்வமான சிந்தனைப் பதிவுக்கும் வாழ்த்துகள். உங்கள் பணி மேலும் தொடரவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. நீங்கள் ஏப்ரல் 2012-இல் எழுதிய 200-ஆவது பதிவை நான் படிப்பதற்குள் மேலும் 181 பதிவுகளை எழுதி விட்டீர்களே, இன்று வரை! அபார சாதனை தான்! ஆனால் இன்னும் எழுதிக்கொண்டே இருங்கள். அப்போது தான் நாங்களும் உத்வேகம் பெறமுடியும். ராஜாஜி அவர்கள் தான் இறக்கும் வரை ‘ஸ்வராஜ்யா’வில் ‘டியர் ரீடர்’ பகுதியை எழுதிக்கொண்டே இருந்தார் அல்லவா, அது தான் எழுத்தாளர்களுக்கெல்லாம் இலட்சிய எல்லைக்கோடாக இருக்க வேண்டும். இனி, தவறாமல் படிப்பேன். மகிழ்ச்சி தானே? (2) கவிதையின் கருத்தோட்டம் உருக்கமானது. மில்ட்டன் எழுதிய On his Blindness என்ற கவிதையை நினைவூட்டியது. பாரதியையும் காலனையும் எடுத்துக்காட்டினீர்கள். அதைப் பற்றி 1991இல் நான் இப்படி எழுதினேன்: “யாரைப் பிடிக்கவும் எருமையில் வருபவன்// இவனைப் பிடிக்க யானையை அனுப்பினான்”. இது எப்படி இருக்கு? –கவிஞர் இராய செல்லப்பா, சென்னையிலிருந்து.

    ReplyDelete
  24. வணக்கம் அய்யா. வாழ்க்கையின் சாரம் நன்கு தெரிகிறது படைப்பில், காலனை காலால் உதைக்கும் மனவுறுதி இருந்தால் ஒவ்வொரு நாளும் சொர்க்கம் தான். 200 ஆவது பதிவுக்கு நன்றி அய்யா. வாழ்த்த வயதில்லை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

    ReplyDelete
  25. மீண்டும் இப்பதிவைப் படித்தேன். மனம் அமைதி அடைகிறது. மண்ணில் காணாத சொர்க்கத்தையா விண்ணில் கண்டுவிடப்போகிறோம் என்ற கருத்து, 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்பதை நினைவூட்டுகிறது. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete