Tuesday, January 15, 2013

எனக்குத் தமிழ் தெரியாது.


                                       எனக்குத் தமிழ் தெரியாது.
                                       -------------------------------------



அந்தக் காலத்தில் நான் பள்ளியில் படித்தபோது, தமிழில் ஒரு பாடம். ‘இறையனார் அகப் பொருளுரைஎன்ற தலைப்பில் இருந்தது. அதில் சில வரிகள் அவ்வப்போது மனத்திரையில் ஓடும். முழுவதும் நினைவுக்கு வரவில்லை
பண்டைக் காலத்தில் பாண்டிய நாடு  பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்ல பசிகடுகுதலும், அரசன் சிட்டரை எல்லாங் கூவி , வம்மின் யான் உங்களைப் புறந்தரகில்லேன். நீவீர் நுமக்கறிந்தவாறுபுக்கு, நாடு நாடாயின ஞான்று என்னையுள்ளி வம்மின் என்றான்,என அரசனைவிடுத்து எல்லோரும் போயின பின்றைக் கணக்கின்றி பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது பெய்தப்ன்னர் அரசன் நாடு நாடாயிற்றாதலின் நூல் வல்லாரை கொணர்க என எல்லாப்பக்கமும் ஆட்போக்க,எழுத்ததிகாரமும் , சொல்லதிகாரமும் , யாப்பதிகாரமும் வல்லாரை........ “இதற்குமேல் எதுவும்

ஓடவில்லை. இந்த உரைநடை நக்கீரனார் எழுதியது என்று படித்ததாக நினைவு. இப்போது அதன் முழு பகுதியையும் படிக்கும் ஆவலில் கணினியின் உதவியுடன் உலா வந்தேன். மேலும் சில விவரங்கள் படித்தேன். படித்தபிறகு ஒரு முடிவுக்கு வந்தேன், எனக்குத் தமிழ் தெரியவில்லை என்பதுதான் அது.

சொல்லதிகாரம், எழுத்ததிகாரம், யாப்பதிகாரம் இவற்றில் வல்லவர்கள் திரும்ப வந்தனர் என்றும் முக்கியமாக பொருளதிகாரம் வல்லார் எவரும் கிடைக்கவில்லை என்றும் அரசன் அறிந்து வருந்தியபோது மதுரை ஆலவாயிற்கடவுள் அரசனுக்குதவ அறுபது சூத்திரங்களை  செப்புப் பட்டயத்தில் எழுதி பீடத்தின் அடியில் இட.அடுத்த நாள் தேவர் குலம் வழிபடுவோன் தேவர் கோட்டத்தை எங்குந்துடைத்து நீர் தெளித்துப் பூவிட்டு எங்கும் அலகிட்டான். இட்டாற்கு அவ்வலகினொடு இதழ் போந்தன.போதரக் கொண்டு போந்து நோக்கினார்க்கு வாய்ப்புடைத்தாயிற்றோர் பொருளதிகாரமாய்க் காட்டிற்று. காட்ட பிரமன் சிந்திப்பான்.அரசன் பொருளதிகாரம் இன்றிக் கவல்கின்றான். என்பது கேட்டுச் செல்லா நின்றது உணர்ந்துநம் பெருமான் அருளிச் செய்தானாகும் எனதன் அகம் புகுதாதே, கோயில் தலைக்கடை சென்று நின்று கடைக்காப்பர்க்கு உணர்த்த கடைக் காப்பர் அரசர்க்கு உணர்த்தஅரசன் புகுதுக எனப் பிரமனைக் கூவசென்று புக்குக் காட்ட ஏற்றுக்கொண்டு நோக்கிப் பொருளதிகாரம் ! இது நம் பெருமான் நம் இடுக்கண் கண்டு அருளிச் செய்தானகற்பாலது ! என்று வணங்கி சங்கத்தாரிடம் அதற்குப் பொருள் கூறு மாறு ஏவினான் 

அகப் பொருள் பற்றிய இலக்கண நூல்களில் தொல்காப்பியத்துக்குப்பிறகு தோன்றிய சிறப்பு மிக்க நூல்  இறையனார் அகப் பொருள். இந்நூலுக்கு உரை பல சங்க காலப் புலவர்கள் எழுதினராம் மாதிரிக்கு ஒன்று.

அம்பலும் அலரும் களவு என்பது இறையனார் களவியலில் உள்ள 22-ம் நூற்பா. இதனை நக்கீரனார் உரை இவ்வாறு விளக்குகிறதாம் 


        அம்பல் என்பது முகிழ்முகிழ்த்தல்,
       
அலர் என்பது சொல் நிகழ்தல்;
       
அம்பல் என்பது சொல் நிகழ்தல்,
       
அலர் என்பது இல் அறிதல்;
       
அம்பல் என்பது இல் அறிதல்,
       
அலர் என்பது அயல் அறிதல்;
       
அம்பல் என்பது அயல் அறிதல்,
       
அலர் என்பது சேரி அறிதல்;
       
அம்பல் என்பது சேரி அறிதல்,
       
அலர் என்பது ஊர் அறிதல்;
       
அம்பல் என்பது ஊர் அறிதல்,
       
அலர் என்பது நாடு அறிதல்;
       
அம்பல் என்பது நாடு அறிதல்,
       
அலர் என்பது தேசம் அறிதல்.

இதையெல்லாம் படிக்கும்போது எனக்குத் தோன்றியதைத்தான்
எனக்குத் தமிழ் தெரியவில்லை என்ற ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தேன். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல்தான். இருந்தால் என்ன ? இதனை படிக்கும் பலரும் இந்த முடிவுக்குத்தான் வருவீர்கள் என்று எண்ணுகிறேன். ஆனால் ‘உன்னை வைத்து மற்றவரை எடை போடாதே ‘ என்று இன்னும் பலர் நினைக்கலாம்.

இன்னும் ஒரு சந்தேகம் எழுகிறது. நக்கீரர் எழுதியதாகச் சொல்லப்படும் உரை நடையில், சில வார்த்தைகள் அண்மைக்காலத் தமிழ் போல் தோன்றுகிறது. மூலம் சரியாகக் கிடைக்காமல் பாடபேதமாக பிற்காலச் செர்க்கைஇருக்கலாமோ என்பதுதான் அது.

ஆங்கிலத்தில் சில வார்த்தைகளுக்கு பொருள் தெரியவில்லை என்றால் டிக்‌ஷனரி என்று சொல்லப்படும் அகராதி நோக்கித் தெரிந்து கொள்ள முடிகிறது. அதைப் போல் பரவலாக உபயோகப் பட தமிழில் அகராதி இருக்கிறதா. ? இதுவரை நான் பார்த்ததில்லை. ஒரு வேளை எல்லா வார்த்தைகளையும் அகராதியில் கொண்டு வர முடியாதோ? இல்லையென்றால் உரைகளுக்கே உரை தேடும்படி இருப்பதுதான் தமிழில் தேர்ச்சி பெறுவதன் அடையாளமோ.? சிந்திக்க சிந்திக்க எனக்கு ஒன்று மட்டும் விளங்குகிறது. எனக்கு தமிழ் எழுதப் படிக்க மட்டுமே தெரியும். மொழி அறிவு பெற நான் நிறையப் பாடுபடவேண்டும்.

----------------------------------------------------

 



 

14 comments:

  1. ஐயா.... சரஸ்வதியே “கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு” என்று சொன்னாளாம்.
    நாம் புத்தகத்தில் கற்பது வெறும் பொருள்தேடும் அளவில் தான் உள்ளது.
    ஆனால் உலகத்தில் உள்ளது... ஆதாவது உலக அனுபவம் என்பது தான் நம் வாழ்க்கையை வாழ உதவுவது.

    ஒருவன் வாழ்க்கை முழுவதும் கற்பதிலேயே செலவிட்டுவிட்டால் அவன் வாழவே பயனற்றவனாகி விடுவான்.

    ஆனால் கற்பவருக்குக் கல்வி பணம்
    போன்றது. அதைத் தேட தேட அவன்
    அதை மேலும் மேலும் அடையவே விருப்பப்படுவான்.

    ஐயா... தமிழுக்கென்று “தமிழ்-தமிழ்“
    அகராதிகள் நிறைய இருக்கிறது. நிறைய கடைகளிலும் கிடைக்கிறது.

    தவிர தொல்காப்பியத்திலும் நன்னுாலிலும் எழுத்து,சொல், மற்றும் பொருளதிகாரங்கள் தெளிவாக இருக்கிறது.
    அதில் உள்ள நுாற்பாக்கள் புரியவில்லை என்றால் அதற்கான விளக்க நுால்கள் கிடைக்கின்றன.

    தமிழ் நம் மொழி ஐயா. நமக்கேத் தமிழ் தெரியவில்லை என்று சொன்னால் எப்படி?

    உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும்.
    நன்றி ஐயா.



    ReplyDelete
  2. //மொழி அறிவு பெற நான் நிறையப் பாடுபடவேண்டும்.//

    இனிமேலா?

    ReplyDelete
  3. உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.com/

    அன்புடன்
    மனோ சாமிநாதன்

    ReplyDelete
  4. மொழி அறியும் ஆசைக்கு வாழ்த்துக்கள்.
    தமிழ் அகராதி இருக்கிறது இப்போது சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வாங்கினார்கள்.
    வலைத்தளத்தில் உள்ள தமிழகராதி.

    http://www.tamilvu.org/library/dicIndex.htm

    ReplyDelete
  5. தமிழ் அகராதியை என்கணவர் புத்தக கண்காட்சியில் புது பதிப்பு வாங்கினார்கள்.

    ReplyDelete

  6. @ அருணாசெல்வம்.என் பதிவின் கருத்தை நான் சரியாகச் சொல்லவில்லையா. நான் கற்றது கடுகளவு என்று நினைப்பவன் எனக்குத் தமிழ் தெரியவில்லை என்றுதான் கூறி இருக்கிறேன். சான்றாக அம்பலும் அலரும் களவு என்னும் சூத்திரத்துக்கு நக்கீரனாரின் விளக்கமாக சொல்லப் பட்டதை எடுத்துக் காட்டி இருக்கிறேன். தமிழ் ஒரு மிகப் பெரிய கடல். அதில் நாம் கற்பதற்கு நிறையவே இருக்கிறது. அதற்கு உதவும் வகையில் அகராதிகள் பயன்படுமா என்பதே கேள்விக்குறி. என்னை வைத்து பிறரை எடைபோடக் கூடாது என்றும் எழுதி இருக்கிறேன். தமிழ் நம் மொழிதான். அதற்காகத் தெரியாததை தெரியும் என்று சொல்லலாமா. ? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

  7. @ அறிந்து கொள்ள வயது ஒரு தடையா ஐயா டாக்டர் கந்தசாமி அவர்களே.?

    ReplyDelete

  8. @ மனோ சாமிநாதன் வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி. உங்கள் முதல் வருகையிலேயே வலைச்சரத்தில் அறிமுகம் செய்யத் தோன்றியதே அதற்கு மீண்டும் நன்றி,

    ReplyDelete

  9. @ கோமதி அரசு. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். இங்கு தமிழ் புத்தகம் கிடைப்பதே அரிது. வலைத்தளத்தில் நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்குச் சென்று பார்க்க வேண்டும். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  10. உங்களுக்கு மட்டுமல்ல இன்றைய தமிழர்கள் பலருக்குத்தமிழ்தெரியாது.

    ReplyDelete
  11. சார், நான் அந்த லிங்கில் இப்போது போய் பார்த்தேன். எனக்கு வேலை செய்கிறது.

    உங்களுக்கு ஏன் வரவில்லை என தெரியவில்லை.
    என் கணவர் கல்லூரியிலிருந்து வந்தவுடன் கேட்டு சொல்கிறேன்.

    ReplyDelete
  12. அமிழ்தான தமிழ் கற்க விரும்பும் அருமையான பகிர்வுகள்.

    ReplyDelete
  13. அகராதிகள் பற்பல உண்டுதான் ; ஆனால் அவற்றைப் பயன்படுத்திப் பழைய இலக்கியங்களைப் புரிந்துகொள்ள இயலாது . அதனால்தான் உரை எழுதினார்கள் .அந்த உரைக்கும் உரை தேவை .மூல ஆசிரியரின் கருத்து என்ன என்பதை சரியாய் அறிய முடிமையால் ஒரே நூலுக்குப் பல உரைகள் எழுந்தன . ஆகவே எனக்குத் தமிழ் தெரியாது என்றே நானும் ஒப்புக்கொள்கிறேன் ..

    ReplyDelete

  14. @ சொ.ஞானசம்பந்தன்
    ஐயா அழைப்பினை ஏற்று வந்ததற்கு நன்றி. தமிழ் தெரியாது என்று ஒப்புதல் வாக்கு மூலம்
    தருவதற்கும் திடம் வேண்டும் ஐயா

    ReplyDelete