Tuesday, January 22, 2013

இன்பம் தரும் இலக்கியம்


                                          இன்பம்-தரும் இலக்கியம்
                                          -----------------------------------



கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ....


என்ன..... மூளையில் ஏதோ பல்ப் எரிகிறதா.? எரியாவிட்டாலும் பரவாயில்லை.படிக்கப் படிக்கப் புரிந்துவிடும். அந்தக் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு தன் மனைவியிடம் கூடி இருந்தபோது ஒரு சந்தேகம் வந்ததாம்.தன் மனைவியின் கூந்தலில் இருந்து வரும் சுகந்த மணம் இயற்கையிலேயே உள்ளதா இல்லை அவள் அணிந்திருந்த மலர்களால் வந்ததா என்று.. அந்தக் காலத்து ராஜாக்களுக்கு சந்தேகம் வந்தால் மந்திரிப் பிரதானிகளோ புலவர்களோதானே தீர்க்க வேண்டும். அரசன் தன் சந்தேகத்தைத் தீர்ப்பவருக்குப் பொற்கிழி பரிசாக அறிவிக்கிறான். மந்திரிகளோ புலவர்களோ அந்தப் பணியில் ஈடுபட விரும்பவில்லை. தாங்கள் கூறும் பதில் அரசனுக்கு ஒப்பவில்லை என்றால்.... எதற்கு வம்பு என்று வாளாவிருந்து விட்டனர்.


அங்கே வறுமையில் வாடும் ஒரு புலவன்,தருமி என்று பெயர் தனக்கு அந்தப் பொற்கிழி கிடைக்காதா என்று ஏங்குகிறான். மதுரை சொக்கனாதருக்கு அந்தப் புலவனுக்கு உதவ எண்ணம்.அரசனின் ஐயத்தைத் தீர்க்கும் ஒரு பாடலை எழுதி தருமியிடம் கொடுத்து அரசனுக்குக் காட்டிப் பொற்கிழி பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்.தருமி அதனை எடுத்துக் கொண்டு போய் அரசனிடம் வாசித்துக் காட்டுகிறான் என்ன... இப்போது நினைவுக்கு வருகிறதா.? திருவிளையாடல் புராணம் என்ற படத்தில் காட்சிகளாகப் பார்த்திருப்பீர்களே.சிவாஜி கணேசனையும் நாகேஷையும் நினைவுக்குக் கொண்டு வரும் அந்தப் பாடல் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது.? திரைப்படம் மூலம் கதை விளங்கி விட்டது. அந்தப் படத்தின் மூலம் ஒரு அழகான பாடலும் பொதுமக்கள் பார்வைக்கும் கவனத்துக்கும் கொண்டு வரப் பட்டது. அந்தப் பாடலை இப்போது பார்ப்போம்.




கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி                                            
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியக் கெழீஇய நட்பின் மயிலியல்
செறி எயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே

தருமி பாடிய அப்பாடலில் குற்றம் இருக்கிறது என்று கூறி


சிவபெருமானின் கோபத்துக்கு ஆளான நக்கீரர் சிவனாரின் மூன்றாவது கண்ணால் எரிக்கப் படுகிறார். பொருட்குற்றம் இருக்கிறது என்ற நக்கீரருக்கு அது இல்லை என்று நிரூபிப்பதல்லவா அந்த ஆலவாயன் செய்திருக்க வேண்டியது.? ஆனால் அவர் செய்தது என்ன. ? கோபம் கொண்டு 




அங்கங் குலுங்க அரிவாளில் நெய் தடவி
பங்கம் பட இரண்டு கால் பரப்பிசங்கைக்
கீர் கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை
ஆராயும் உள்ளத்தவன்
என்று சாடுகிறார். சொன்னதை நிரூபிக்க இயலாதவர் கோபம் கொள்வது முறையல்ல என்று எண்ணும் நக்கீரனும்



சங்கறுப்ப தெங்கள் குலம்  சங்கரனார்க்கு ஏது குலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ- சங்கை
அரிந்துண்டு வாழ்வோம்  அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வதில்லை
என்று பதிலடி கொடுக்கிறார்

தன் பாடல் தானே முக்கண்ணனே பாடியதில் ஒரு நரன் குற்றம் காண்பதா என்று பொறுக்க இயலாமல் அரன் அவனை நெற்றிக்கண்ணைத் திறந்து பொசுக்குகிறார். 
யாராயிருந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனின் நேர்மைக்கு முன் அரனாரின் ஆவேசம் சரியா என்னும் கேள்வி எனக்குள் எழுகிறது.அவரை ஆட்கொள்ள வேண்டியே என்றும் சப்பைக் கட்டு கட்டலாம். 

. எனக்குத் தமிழ் தெரியாது என்ற   என் பதிவில் குறிப்பிட்ட அகப் பொருளுரை  எழுதிய நக்கீரரும் இவரும் ஒன்றா எனும் ஐயம் இன்னும் இருக்கிறது
                         ----------------------


அரசர்களுக்கு சந்தேகம் எழுவதும் அதை அறிந்தோ அறியாமலோ தீர்ப்பதன் மூலம் புலவர்கள் வெகுமதி பெறுவதும் குறித்து நம் தமிழ் இலக்கியங்களைப் படிக்கும்போது தெரிய வருகிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில்
ஒன்றும் அந்த வகையைச் சேர்ந்ததே. அரசன் மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறான். உயரே ஒரு நாரைக் கூட்டம் பறந்து செல்கிறது. அவற்றின் சிவந்த அலகுகள் எதற்கு ஒப்பாகும் என்னும் நினைவில் வரும் அரசன் ஒரு புலவனின் அவலப் பாட்டைக் கேட்கிறான். பொதுவாகவே துன்பத்தில் இருக்கும் போது பாடல்களும் கவிதைகளும் அழகாக வந்து விழும். இந்த என் அனுபவம் அந்தக் காலக் கவிகளுக்கும் பொருந்தும்போல. கவிதையைப் பார்ப்போம்.



நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர் வாய்ச் செங்கால் நாராய்
(அரசனுக்கு ஒரு அழகான உவமை கிடைத்து விட்டது)


நீயும் நின் பெடையும் தென் திசைக் குமரியாடி
வடதிசைக் காவிரிக் கேகுவீராயின்
எம்மூர் சத்திமுற்ற வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனை குரல் பல்லி
பாடுபார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழூஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே.



இதைவிடத்



தெளிவாக அழகாக அவலத்தை வெளிப்படுத்த முடியுமா.?எவரிடமும் சொல்லிப் புலம்ப முடியாததை நாரைகளிடம் சொல்லிப் புலம்பும் இப்புலவன் அதைக் கெட்ட அரசன் இவனுக்கு வெகுமதி  அளித்தாராம். அதன் பிறகு  அவரை குடிதாங்கி என்பவர் ஆதரித்தாராம் அப்போது இவர் பாடுவதாகக் கூறப்படும் இந்தப் பாடலையும் கவனியுங்கள்.




" வெறும்புற்கையும் அரிதாங
கிள்ளைச் சோறும் என்வீட்டில் வரும்,
எறும்புக்கும் ஆர்பதமில்லை
முன்னாள் என்னிருங் கலியாம்,
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச்
சென்று கூடிய பின்,
தெறும்புற் கொல் யானை கவளம்
கொள்ளாமற் றெவிட்டியதே."


வெறுஞ் சோறும் இருக்கவில்லை, என் வீட்டுக் கிளியும் பசியால் வாடித் தளரும்..எறும்புக்கும் ஏதுமிருக்கவில்லை. . பின் என் குறை தீர்த்த குடிதாங்கியை சென்றடைந்தபிறகு, யானையும் வாய்கொள்ளாக் கரும்புக் கழிகளை உமிழ்ந்து  சிதறடித்தது.
மலையாளத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. “ உள்ளப்போழ் ஓணம் . இல்லெங்கில் ஏகாதசி.இலக்கியங்களைப் படித்து மகிழ வேண்டும் படித்ததை பகிர்ந்தும் மகிழ்கிறேன் நான்.
------------------------------------------------    ,
   




 



 

 



   


 
 

 

 






 




 

16 comments:

  1. இன்பம் தரும் இலக்கியப்பகிர்வு அருமை. பாராட்டுக்கள்.

    //மலையாளத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு

    “ உள்ளப்போழ் ஓணம் . இல்லெங்கில் ஏகாதசி.”

    இலக்கியங்களைப் படித்து மகிழ வேண்டும் படித்ததை பகிர்ந்தும் மகிழ்கிறேன் நான்//

    எங்களுக்கும் ம்கிழ்ச்சி! ;)

    ReplyDelete
  2. முதல் பாடலை மறக்க முடியுமா?
    ஏ.பி. நாகராஜன், நாகேஷ், சிவாஜிகணேசன் மூவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தது.
    ஏ.பி நாகராஜன் வசனங்கள் இன்னும் காதில் ஒலிக்கிறது. உங்கள் பாடல் பகிர்வை படித்தவுடன்.

    இலக்கியங்களை படித்து அதை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
  3. உங்கள் இலக்கிய பதிவுக்கு மிக்க நன்றி....தொடர்ந்து எழுதுங்கள்.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. இலக்கிய தாகம் ரொம்ப அதிகமாப் போயிடுச்சு போல.

    ReplyDelete
  5. படிக்கச் சுகமாகவும், நினைவில் வைத்துக் கொள்வது கடினமாகவும் இருக்கிறது! ஹிஹி....!

    ReplyDelete
  6. படித்து சுவைத்து மறந்து போனதை மீண்டும் நினைவுபடுத்தி சுவைக்க கொடுத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

    வாழ்க வளமுடன்... இது போல மேலும் பல பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் ஐயா

    ReplyDelete
  7. தமிழ் இலக்கிய இன்பம்! படிக்க படிக்க இனிமை!

    ReplyDelete
  8. “ உள்ளப்போழ் ஓணம் . இல்லெங்கில் ஏகாதசி.” இலக்கியங்களைப் படித்து மகிழ வேண்டும் படித்ததை பகிர்ந்தும் மகிழ்கிறேன் நான்.

    இனிய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete

  9. @ வை.கோபாலகிருஷ்ணன்,பதிவுகளில் பார்ப்பதும் கருத்துக்கள் படிப்பதும் கடந்து விட்டன நாட்கள் பல. மீண்டும் வருகைக்கு நன்றி.
    @ கோமதி அரசு. திரைப்படங்கள் மூலம் இலக்கியப் பாடல்கள் பலரையும் சென்றடைவதைக் காட்டவே இப்பதிவு. வருகைக்கு நன்றி.
    @ டாக்டர் கந்தசாமி. இலக்கியத் தாகம் என்றுமே உண்டு. அண்மையில் வலையில் எழுத ஆரம்பித்த பிறகுதான் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
    @ ஸ்ரீராம். உண்மையைத்தான் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.
    @ அவர்கள் உண்மைகள்- நான் படித்ததைப் பகிர ஆசைதான். படிப்பவர்கள்தான் குறைவு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    @ தி. தமிழ் இளங்கோ
    @ இராஜராஜேஸ்வரி
    @ மலர் editorial calendar
    வரவுக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. குற்றம் குற்றமே என்ற நக்கீரனின் நேர்மைக்கு முன் அரனாரின் ஆவேசம் சரியா என்னும் கேள்வி எனக்குள் எழுகிறது.அவரை ஆட்கொள்ள வேண்டியே என்றும் சப்பைக் கட்டு கட்டலாம்.

    அப்புறம் ஏன் அறிவித்தபடி பரிசை தருமிக்கே கொடுத்து விடுங்கள் மன்னா என்று நக்கீரன் சொல்கிறார்??

    எனக்கென்னவோ இவை எல்லாம் அரசர்.. தமிழ்.. சட்ட திட்டங்கள்.. எல்லாம் தாண்டி வறுமையில் இருப்பவரை மன்னன கவனிக்க வேண்டிய அவசியம் சொல்லும் நிகழ்வுகளாலவே தோன்றுகிறது..

    ReplyDelete

  16. @ ரிஷபந்-அறிவித்தபடி தருமிக்கே பரிசை கொடுத்துவிட நக்கீரனார் சொல்ல வாய்ப்பே இல்லையே. அவர்தான் அரனாரின் கழல் வெம்மையால் வீழ்ந்துவிட்டாரே. நீங்கள் கடைசியில் சொல்வதுபோல் அவை எல்லாம் காலத்தின் கட்டாயமாக இருந்திருக்கலாம். வருகை தந்து கருத்திடதற்கு நன்றி.

    ReplyDelete