Tuesday, June 18, 2013

வீடு கட்டலும், வருமான(மும்) வரியும்


                                  வீடு கட்டலும் வருமான(மும்) வரியும்
                                  ------------------------------------------------------



எனக்கு அடிக்கடி எழும் சந்தேகம், எப்படி மாத வருமானம் உள்ளவர்கள் வீட்டுமனை வாங்கி வீடு கட்டுகிறார்கள் மற்றும் வருமான வரி வேறு கட்டுகிறார்கள், இன்னும் மேலாக ஓய்வு பெற்றவர்களும் வருமானவரி கட்டுகிறார்கள் என்பது போன்றவை

சற்று விளக்கமாகவே எழுதுகிறேன். நான் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் ஒரு பொறுப்புள்ள உத்தியோகத்தில் இருந்தேன். ஆரம்ப காலத்தில் குடும்பத்தில் இருப்போரின் வாய்க்கும் வயிற்றுக்கும் வழி காண்பதே முழி பிதுங்கும் நிலையாயிருந்தது. நாளாவட்டத்தில் குடும்பத்தில் இளையவர்கள் தலையெடுக்கத் துவங்கினதும் நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. அதற்குள் எனக்கென ஒரு குடும்பமும் உருவாகி இருந்தது. பலரும் சொல்வதுபோல் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.கடன் வாங்காமல் காலம் கழித்தலே நிறைவாய்த் தோன்றும்.

இந்த நிலையில் நமக்கென்று ஒரு இடம் வேண்டாமா என்று மனைவி புலம்புவாள். நான் அவளை சமாதானப் படுத்துவ்தே அலாதியாய் இருக்கும். பொதுத்துறையில் இருக்கும் வரை நமக்கென இடப் பிரச்சனை இருக்காது. இருக்கக் குடியிருப்போ, இல்லை அதற்கான வாடகையோ நிறுவனம் பொறுப்பேற்கும். 58 வயதில் ஓய்வு பெற்ற பிறகு மிஞ்சிப் போனால் ஆறேழு வருடங்கள் உயிரோடிருக்கலாம்( இந்திய சராசரி வயதுப்படி). அந்தக் காலத்தை ஓய்வு பெறும் போது கிடைக்கும் பணத்தைக் கொண்டு காலம் கடத்தி விடலாம். வீட்டு மனை சொந்த வீடு என்று எண்ணுவது அர்த்தம் இல்லாதது என்று ஏதேதோ கூறுவேன். நாங்கள் விஜயவாடாவில் இருக்கும்போது (1976-1980) என் மாமியார் பெங்களூரில் ஒரு வீட்டு மனை விலைக்கு வாங்கிப்போட மிகவும் வற்புறுத்த என் மனைவியும் சேர்ந்து என்னை நச்சரிக்க இப்போது நாஙகள் இருக்கும் இடத்தை அங்கும் இங்கும் கடன் என்று புரட்டி ரூ.8000/-க்கு வாங்கினோம். அப்போது இந்த இடம் ஒரு barren land ஆக இருந்தது.

எனக்கொரு நண்பன் இருந்தான். அவன் எப்போதும் என்னிடம் ஒரு சொந்த வீட்டின் அவசியத்தை எடுத்துக் கூறுவான் அவனிடமும் என்னுடைய பழைய லாஜிக்கையே கூறி வந்தேன். 1985-ம் ஆண்டு ( அப்போது நாங்கள் திருச்சிக்கு மீண்டும் மாற்றலாகி வந்திருந்தோம்) என் மாமனார் எங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் எங்களுடைய இடத்தை யாரோ ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள் என்றும் உடனடியாக நாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். அதெப்படி நம் இடத்தை ஒருவர் ஆக்கிரமிப்பது என்று பதறி பெங்களூர் ஓடி வந்தோம். எங்கள் மனைக்குப் பக்கத்து மனைக்காரர் வீடு கட்டிக் கொண்டிருந்தார். செங்கல் மணல் போன்றவற்றைக் கொட்டி பாதுகாப்புக்காக ஒரு கூரையும் போட்டிருந்தார். நாங்கள் வந்து கேட்டபோது அது ஒரு தற்காலிக கூரை என்றும் அவர் வீடு கட்டி முடித்ததும் அகற்றப்படும் என்றும் கூறினார். அப்போது ஓரளவுக்கு சமாதானம் அடைந்தாலும் மனசில் ஒரு சந்தேகமும் பயமும் இருந்தது. இந்த நிலையைக் கேள்விப்பட்ட என் நண்பன், மீண்டும் என்னை brain wash செய்யத் துவங்கினான். சரி. வீடு கட்டப் பணம் வேண்டுமே. அந்தகால நிலவரப்படி குறைந்தது ஒன்றரை லட்சமாவது வேண்டும் மனைவியின் நகை, கோவாப்பரேடிவெ பேங்கிலிருந்து கடன், ப்ராவிடெண்ட் ஃபண்டிலிருந்து கடன். இன்சூரன்ஸிலிருந்து கடன் உறவினரிடம் இருந்து கடன் என்று என்னவெல்லாமோ செய்து வீடு கட்ட வேண்டியதுதான் என்று தீர்மானித்தோம். இன்சூரன்ஸ் ப்ராவிடெண்ட் தவிர எல்லாக்கடன்களும் திருப்பி செலுத்த வேண்டியவை. ( மனைவியின் நகை உட்பட) என்ன செய்வது என்று ஒரே திகைப்பாய் இருந்தது. வாய்க்கும் வயிற்றுக்கும் வழிகாண்பதில் சற்றே பயிற்சி இருந்ததால் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

நாங்கள் இருந்தது திருச்சியில். வீடு கட்ட வேண்டியது பெங்களூரில். பெங்களூரில் ஒரு ஒப்பந்ததாரரைப் பிடித்து முழுப் பொறுப்பும் அவரது என்று கூறி ஒப்பந்தம் தயாரித்தோம். இப்போது நினைத்தாலும் என்னுடையை அறியாமையை நினைத்துக் கொள்வேன்(.How naïve I was.!) அந்த காண்ட்ராக்டரிடம் ஒரு ஒப்பந்தம் எழுதினேன். ஆனால் அந்த ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டு எந்த நீதி மன்றத்தையும் அணுகமுடியாது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த ஒப்பந்தம் ஒரு வெற்றுத்தாளில் எழுதியது. எங்கள் நல்ல காலம் அந்த காண்ட்ராக்டர் ஒரு நல்ல நம்பிக்கையான மனிதன். நாங்கள் திருச்சியில் இருக்க அவர் இங்கே பெங்களூரில் எங்கள் வீட்டைக் கட்டினார்.ஒன்று சொல்ல மறந்து விட்டது. அப்போது இங்கு நீர் சப்ளை என்பதே கிடையாது ஆழ்துளைக் கிணறுதான் ( borewell)  தோண்டவேண்டும். 60x30 அடி இடத்தில் எங்கு நீர் கிடைக்குமென்று நினைப்பது Water diviner களின் உதவியை நாடலாம் என்றார்கள். ஒரு வேளை அவர் இங்கு நீர் வராது என்று சொல்லிவிட்டாலோ, அல்லது இடத்தின் நடுவே எங்காவது காட்டினாலோ என்ன செய்வது. இடத்தின் ஒரு ஓரமான பகுதியில் bore போடுவது , நடப்பது நடக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று ஆழ் துளைக்கான ஏற்பாடுகளைத் தொடங்கினோம். என் மனைவி வேண்டாத தெய்வம் இல்லை. தினமும் குளிக்கும்போது கங்கை, காவிரி, கோதாவரி யமுனை என்று வேண்டிக்கொண்டு குளிப்பவள் அந்த நதிகளின் நீர் இங்கு வரவேண்டும் என்றெல்லாம் வேண்டிகொள்வாள். அவள் வேண்டுதலோ, எங்கள் அதிர்ஷ்டமோ 90 அடி ஆழ்த்தில் பாறை தென்பட்டு நீர் வரத்தொடங்கியது. எதற்கும் சேஃப் சைடாக இருக்கட்டும் என்று 150 அடி ஆழம் குழித்தோம். ந்ல்ல நீர். மனசுக்கு நிம்மதியாக இருந்தது. ஒரு அடி பம்ப் நிறுவினோம். வீடு கட்டிய பிறகு மோட்டார் பம்ப் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அப்போது அந்த போரிலிருந்து அக்கம் பக்கம் இருப்போர் எல்லாம் நீர் எடுத்து உபயோகித்துக் கொண்டனர்.

எங்கிருந்து பார்த்தாலும் என் வீடு தனியாகத் தெரிய வேண்டும் என்று எண்ணி நான் ஒரு கார் போர்டிகோ திட்டமிட்டேன். அதாவது ஏறத்தாழ பத்து அடியிலிருந்து பதினைந்து அடிவரை cantilever  அமைப்பில் எந்த சப்போர்ட்டும் இல்லாமல் இருந்தது. மாதம் ஒருமுறை பெங்களூர் வந்து வீட்டு வேலை எந்த அளவு முன்னேறி இருக்கிறது என்று பார்த்துச் செல்வோம்.ஐந்து மாத முடிவில் ஒரு சிறிய வீடு எங்களுடையதாக கட்டிமுடிக்கப் பட்டது.
இவ்வளவு விலாவாரியாக நான் எழுதுவதன் காரணமே இந்த வீடுதான் நான் VRSல் வந்தபோது அடைக்கலம் கொடுத்தது என் மகன் திருமணமாகி ( அப்போது அவனுக்கு பெங்களூரில் வேலை) குடித்தனம் துவங்கியதும் இந்த வீட்டில்தான். நான் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு வந்த பிறகு மாடியில் வீடு கட்டினேன். ஒரு உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த வீடு தான் எனக்கு சோறு போடுகிறது  விருப்ப ஓய்வின் போது கிடைத்த பணம் மாடிவீடுகட்டவும்  வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதிலும் செலவாகி விட்டது.

என்னை பொறுத்தவரை சராசரி இந்தியனின் வாழ்க்கை இதுபோல்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நிலைமை இப்படி இருக்க வருவாய் வரி என்று பேசும்போது வருவாய் இருந்தால்தானே வரி கட்ட வேண்டும்.நான் பணியில் இருந்தபோது வருவாய் வரியை அவர்களே பிடித்துக் கொண்டு மீதியைத்தான் தருவார்கள். இப்போது கிடைக்கும் வாடகைப் பணத்தில் வாழ்க்கைச் சக்கரம் ஓடுகிறது.

ஓய்வூதியம் பெறுபவர்கள் எப்படி வரிகட்ட முடியும் அந்த அளவு வரவு எங்கிருந்து வருகிறது.?  ஒன்று குடும்ப சொத்து இருந்து வருமானம் வரவேண்டும் இல்லை மாமனார் வீட்டிலிருந்து வருமானம்வேண்டும் நிறுவனப் பணியாளராக இருந்து சொத்து சேர்க்க முடியுமா.? சேர்த்திருக்கிறேனே... ஆம் இப்போதைய என் இடம் ப்ளஸ் வீட்டின் மதிப்பு சில லட்சங்கள் தேறும் இதையே வருவாய்க்கு மீறிய சொத்து என்பார்களோ.? பல விஷயங்கள் இவ்வளவு வயதாகியும் புரிவதில்லை.ஒன்று சொல்ல வேண்டும். எங்கள் தேவைக் குறைபாடுகளை எங்கள் மக்கள் அகற்றுகிறார்கள். என்னை வீடு கட்டு என்று தூண்டிய நண்பனை அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.             

    

16 comments:

  1. இருவர் சம்பாத்தியம் உள்ளவர்கள்
    மற்றும் மேல் வரும்படி உள்ளவர்கள்
    தேவைக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள்
    இவர்களுக்குத்தான் சரிப்பட்டுவரும்
    மற்றவர்கள் பாடெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான்

    ReplyDelete
  2. அனேகமாக நான் 19 முதல்
    24 வரை பெங்களுரில் இருப்பேன்
    இந்திரா நகரில் ஒரு திருமணம்
    முடிந்தால் தங்களைச் சந்திக்கிறேன்

    ReplyDelete
  3. நேர்மையாக வாழ்பவர்கள் அனைவருக்கும் சிரமம் தான்... சொந்த வீடும் கனவு தான்...

    "அப்படி-இப்படி" கடன் வாங்கி பல லட்சங்கள் வீட்டிற்கு 'முதலீடு' செய்வதை விட, சரியான சமயத்தில் வீடு கட்டுவது தான் திறமையே... அதுவரையில் சிரமம் இருந்தாலும் சிறிய (வாடகை) வீட்டில் வாசித்தால் நல்லது...

    வேண்டும் ஆசை தேவைக்கேற்ப...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  4. நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் சொந்தவீட்டுக் கனவை நிறைவேற்றுவதென்பது பிரம்ம பிரயத்தனம்தான். நல்ல ஒப்பந்தக்காரர் அமைந்தது தங்கள் கொடுப்பினை. இல்லையெனில்.... நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. வீடு கட்டும் அனுபவங்களால் உறவுகளுக்குள் விரிசல் உண்டான பல சம்பவங்களை நான் அறிவேன். தங்கள் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. தங்களின் அனுபவங்களை மிகவும் பொறுமையாக அழகாக எழுதியுள்ளீர்கள்.

    பர்ராட்டுக்கள்.

    //பல விஷயங்கள் இவ்வளவு வயதாகியும் புரிவதில்லை.//

    இனிமேல் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இருக்காது. அதனால் கவலையே படவேண்டாம். ;)

    ReplyDelete
  6. உங்கள் அனுபவங்கள் பல பாடங்கள் சொல்கின்றன.

    ReplyDelete
  7. அன்புள்ள நண்பருக்கு, என்னுடைய சமீபத்திய வருமானவரி பற்றிய பதிவு உங்கள் சிந்தனையைத் தூண்டிவிட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    அந்தக் காலத்தில் ஒரு பழமொழி வழக்கில் இருந்தது. காலணா உத்தியோகமானாலும் கவர்மென்ட்டு உத்தியோகமாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். நான் விவசாயப் படிப்பு படித்து முடித்தவுடன் அரசு வேலைக்கான ஆர்டர் நான் கேட்காமலேயே வீடு தேடி வந்தது.

    எங்கள் குடும்பத்தில் சர்க்கார் வேலைக்குப் போகும் முதல் ஆள் நான்தான். ஒரு விவரமும் தெரியாது. சொல்லித்தரவும் யாரும் கிடையாது. நானே விழுந்து எழுந்து அடிப்படையிலிருந்து எல்லாவற்றையும் கற்று சமாளித்து ஓய்வு பெற்றேன்.

    அரசு ஓய்வூதியர்களுக்கு, குறிப்பாக நல்ல வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இன்று நல்ல ஓய்வூதியம் கிடைக்கிறது. வருமான வரிக்காரர்கள் ஓய்வூதியத்தையும் சம்பளமாகத்தான் கருதுகிறார்கள். ஆகவே அந்த வருமானம் வரி வரம்புக்கு அதிகமானால் வருமான வரி கட்டவேண்டும்.

    பொதுத்துறையில் எவ்வளவு உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இந்த வசதி இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

    ReplyDelete
  8. கல்யாணம் பண்ணிப் பார் , வீட்டை கட்டிப் பார் என்று சும்மாவா சொன்னார்கள்.
    அதுவும் இன்றிருக்கும் நிலையில் கனவில்தான் இல்லம்தான் கட்ட முடியும் அய்யா.

    ReplyDelete
  9. // எங்கள் நல்ல காலம் அந்த காண்ட்ராக்டர் ஒரு நல்ல நம்பிக்கையான மனிதன். நாங்கள் திருச்சியில் இருக்க அவர் இங்கே பெங்களூரில் எங்கள் வீட்டைக் கட்டினார். //


    நீங்கள் வெளியூரில் இருக்கும்போது ஒரு நல்ல வீட்டைக் கட்டிக் கொடுத்த அந்த காண்ட்ராக்டர் உண்மையிலேயே நல்ல மனிதராகத்தான் இருக்க வேண்டும். வயதான காலத்தில் வாடகை வீட்டில் இருந்துகொண்டு படும் சில தொல்லைகள் இல்லை.


    ReplyDelete

  10. @ ரமணி
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ கீதமஞ்சரி
    @ கோபு சார்
    @ T.N. MURALIDHARAN
    @ டாக்டர். கந்தசாமி
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ தி. தமிழ் இளங்கோ
    பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. சொந்த வீடு கட்டுவதில் அக்கறையே காட்டாமல் இருந்த நான் எப்படியோ அதில் இழுத்துவிடப்பட்டு என் தவறான எண்ணங்கள் நீக்கப்பட்டு, சுருங்கச் சொல்லப் போனால் அந்த வீட்டாலேயே ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறேன். என் வித்தியாசமான எண்ணங்களையும் முடிவையும் பகிர்ந்து கொண்டேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  11. கையில் ஒரு பைசா இல்லாமல் அரசு கொடுக்கும் கடனுதவி மூலமே வீடு கட்ட நினைத்து ஆரம்பித்துப் பின்னர் அது இழுத்துக்கொண்டு போன பக்கமெல்லாம் போய் என்னோட பதினைந்து பவுன் நகையையும் விற்று வீட்டை முடிக்கப் பத்து மாதங்களுக்கும் மேல் ஆயிற்று. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும். அந்த வீட்டைத் தான் இப்போ வாடகைக்கு விட்டுட்டு, இங்கே ஶ்ரீரங்கத்தில் வாடகை கொடுத்துக் கொண்டு, இருக்கிறோம். எங்க வீட்டிலிருந்து வரும் வாடகையை விட நாங்கள் கொடுக்கும் வாடகை அதிகம். :((

    வருமான வரி என்பது ஓய்வூதியம் பெறுபவர்கள் பெறும் ஓய்வூதியத்தைப் பொறுத்துப் பிடிக்கின்றனர். நடுத்தர மக்களிடம் அடிச்சுப் பிடிச்சு வாங்குவதில் நம் அரசுக்கு நிகர் ஏது? இதுவே ஒரு தொழிலதிபராக இருந்தால் அவரின் கடன்கள், வட்டியோடு தள்ளுபடி செய்து மேலும் கடன் கொடுத்துத் தொழிலில் போட உதவி செய்வார்கள்.

    என் கணவர் ஒவ்வொரு வருடமும் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மூன்று மாதமும் சம்பளம் அப்படியே வருமான வரிக்காகப் பிடிக்கப் பட்டுக் கையில் ஒன்றுமில்லாமல் வருவார். இதைக் கணக்குப் போட்டு டிசம்பரிலேயே ப்ராவிடென்ட் ஃபன்டில் மூன்று மாதத்துக்கும் கணக்குப் போட்டு திரும்பிச் செலுத்த முடியாக் கடன் வாங்கி வைச்சுப்போம். பல சமயங்களிலும் அந்தப்பணத்தையும் மீறிச் செலவுகள் வந்து திகைக்க வைக்கும்.

    ReplyDelete

  12. @ கீதா சாம்பசிவம்.
    ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு அனுபவம் வீட்டுக்கு வீடு வாசற்படி. ( தெலுங்கில்
    இண்டிக்கி இண்டி ராமாயணம்.!) நன்றி.

    ReplyDelete
  13. வீடு கட்டிய அனுபவங்களை நன்றாக பொறுமையாக சொல்லிவிட்டீர்கள்.
    உங்கள் மனவியின் தெய்வபக்தி சிலிர்க்க வைக்கிறது.
    அழகான வீடு அருமையான மனைவி, குழந்தைகள் எல்லாம் அமைந்து விட்டால் மகிழ்ச்சிதான். ஓய்வு காலம் மகிழ்ச்சியாக ஆக்கிவிட்டீர்கள்.உங்கள் அனுபவங்கள் அனைவருக்கும் பயன்படும்.

    ReplyDelete
  14. ரசித்துப் படித்தேன். (தேவன் எழுதிய ராஜத்தின் மனோரதம் படித்திருக்கிறீர்களா?)

    சரியான நேரத்தில் வீடு கட்டியிருக்கிறீர்கள். மாமியாரும் நண்பரும் உங்கள் விளக்குகள்.

    சில லட்சங்களா? பெங்களூர் விற்கிற விலைக்கு உங்கள் இடம் இன்னும் கணிசமாகத் தேறும் என்றே நினைக்கிறேன். உங்களுக்கு பெரும் நிறைவைக் கொடுக்கிறது என்பதே அதைவிட முக்கியம்.

    ReplyDelete
  15. கீதா சாம்பசிவத்தின் பின்னூட்டம் நிறைய நினைவுகளைக் கிளறியது.

    ReplyDelete
  16. காலாகாலத்தில்
    கஷ்ட்டப்பட்டாவது வீடு கட்டியிருப்பது
    பாராட்டுக்குரியது ..!

    ReplyDelete