Saturday, April 11, 2015

ஸ்ரீநிவாசக் கல்யாண வைபோகமே...


                             ஸ்ரீநிவாசக் கல்யாண வைபொகமே....
                           --------------------------------------------------------


நிகழ்வுகளைப் பதிவிடுகிறேன் கூடவே அடைப்புக் குறிக்குள் இருக்கும் எழுத்துக்கள் என் எண்ணங்கள் என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன்( நண்பரின் பதிவு ஒன்றுக்குப் பின்னூட்டமாக நான் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறதுநம்மைப் படைத்த் கடவுள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நாம் படைத்த கடவுளுக்கு நாம் நமக்கு எடுக்கும் விழாக்களை எடுத்துக் கொண்டாடுகிறோம் )
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கிளை ஒன்று பெங்களூரு வயாலிக்காவில் இருக்கிறது மூலவர் சிலை ஏறத்தாழ திருமலையில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேசரின் அளவில் இருக்கிறது. கடந்த பல மாதங்களாகவே என் மனைவிக்கு திருமலை சென்று வெங்கடேசரைத் தரிசனம் செய்ய வேண்டும் என்னும் ஆசை நிறைவேறுவதில் பல தடைகள் சங்கடங்கள். இப்படி இருக்கும் போது வயாலிக்காவில் இருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரருக்கு நடக்கும் கல்யாண மகோத்ஸ்வம் திருமலையில்  நடப்பது போலவே இருக்கும் - காண விருப்பமா என்று நண்பர் ஒருவர் கேட்டார். என் மனைவியும் சரியென்று சொல்லிவிட்டாள். வாரத்தில் மூன்று முறை இந்தக் கல்யாணம் நடைபெறுவதாகவும் எந்த நாளுக்கு அனுமதி சீட்டு வாங்கட்டும் என்று நண்பர் கேட்டிருந்தார்( வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பது சொல் வழக்குஒரு முறை கல்யாணம் செய்ததே போதும் என்றிருக்கும் போது வாரம் மூன்று முறையா?). வாரத்தில் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று தினங்களில் கல்யாண மகோஹ்ஸ்வம் நடக்கும் என்றும் கூறி இருந்தார். சனி ஞாயிறு நாட்களில் கூட்டம் கூட இருக்கலாம். ஆகவே ஏப்ரல் ஆறாம் தேதி திங்களன்று நடக்க விருக்கும் திருமணத்துக்கு டிக்கெட் எடுக்கும் படி கூறி இருந்தாள் ( கோவில்களில் பாராயணமாக நடக்கும் பல சுலோக நிகழ்வுகளுக்குத் தனியே செல்லும் என் மனைவி ஆண்டவனின் திருக்  கல்யாண வைபவத்துக்கு தம்பதி சமேதராய்ப் போக வேண்டும் என்று கூறியதால் அடியேனும் கூடச் சென்றேன் )
டிக்கெட்டில் காலை ஒன்பதரை மணிக்கு அங்கே இருக்கவேண்டும் என்று எழுதி இருந்தது. நண்பர் காலை ஒன்பது மணிக்கே அங்கிருந்தால் முதலில் உட்காரும் இடம் சௌகரியமாக இருக்கும் என்று கூறி இருந்தார். நாங்கள் ஒன்பதேகால் மணி அளவில் அங்கிருந்தோம் ஆனால் திருக்கல்யாண வைபவம் பத்து மணிக்குத் தான் துவங்கும் என்றார்கள்கல்யாண உற்சவத்துக்குப் போகும் போதுமேல்சட்டை கூடாதென்றும் வேட்டியில்தான் இருக்க வேண்டுமென்றும் நண்பர் முன்பே எச்சரித்திருந்தார். ( எனக்கு வீட்டில் வேட்டிகைலி கட்டிப் பழக்கமே தவிர வெளியே போகும் போது வேட்டி கட்டிப் பழக்கமில்லை. இருந்தாலும் வேட்டி கட்டி அதன்மேல் இறுக்கமாக ஒரு பெல்டும் அணிந்தேன் , வண்டியில்தானே போகிறோம்.  அதிகம் நடக்க வேண்டாமே ஐந்தாம் தேதி பெங்களூருவில் வெப்பம் 37 டிகிரி என்றிருந்தது . பெங்களூரு சீதோஷ்ணத்துக்கு 37 டிகிரி கூடுதலே , காற்றில் ஈரப்பதம் குறைவானதால் சீக்கிரமே சோர்வு ஏற்பட்டு விடும் முன்பு போல் வெப்பம் தாங்க முடிவதில்லை)
கல்யாண உற்சவத்துக்கு ஒரு டிக்கெட் ரூ. 500/- இருவர் போகலாம் நாங்கள் உள்ளே போனபோது முதலில் திருமாலைத் தரிசனம் செய்தோம் பெருமாளுக்கு வலது புறம் பத்மாவதி  தாயாரும்  இடப்புறத்தில் கோதா தேவியும் தனிப் பிரதிஷ்டையில் இருக்கிறார்கள்( பெருமாளுக்கு பூதேவி ஸ்ரீ தேவி இருவர் மனைவியர் என்று படித்தது நினைவுக்கு வந்தது பத்மாவதித் தாயார் பெயரும் கேள்விப்பட்டதாக நினைவு. இந்தக் கோதாதேவி யார் ?யாருக்கு இந்தப் பெயர் .இதைக் கோவிலில் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம் என்றால் என் மனைவி தடா போட்டுவிட்டாள் கோதை என்னும் ஆண்டாள்தான் கோதா தேவியோ?) தரிசனம் செய்த பின் திருக்கல்யாணம் நடை பெற இருந்த இடத்துக்கு வந்தோம் ஒரு முழு நீள வெல்வெட் திரைதொங்கிக் கொண்டிருந்தது. அதில் நடுவே நாமமும் அதை இருபக்கங்களிலும் சங்கும் சக்கரமும் இரு ஓரங்களில் பெரிய திருவடி மற்றும் ஆஞ்ச்நேயரும் அலங்காரமாக வரையப் பட்டு இருந்தது டிக்கெட் வைத்திருந்தவர்களுக்கு சங்கல்பம் செய்து வைக்கப் பட்டது ( என் மனைவி வீட்டில் இருக்கும் அனைவரின் பெயர் நட்சத்திரங்களோடு சங்கல்பம் வேண்டினார்) அதில் ஒவ்வொருவர் பெயரைக்கூறும்போது அர்ச்சகர் பாலசுப்பிரமணியம் நாமஸ்ய  கமலா நாமஸ்ய என்று திருப்பிக் கூறி கையில் சிறிது அட்சதையும் பூவும் கொடுத்து ஸகுடும்பநாம் க்ஷேம ஸ்தைர்ய-தைர்ய வீர்ய விஜய-ஆயுர் ஆரோக்கிய ஷ்வர்யாபி=வ்ருத்தியர்த்தம்(இதெல்லாம் புத்தகம் பார்த்து எழுதியது) என்ற வாறு ஏதோ கூறி அட்சதையும் பூவும் தட்டில் போடச் சொன்னார். திரை விலக பெருமாளுக்கு தீப ஆராதனை காண்பிக்கப் பட்டது. பளிச்சென்ற பொன் முகம் வெள்ளிக் கவசம் வெள்ளிக் கிரீடம் ( வேறு ஏதோ நிறத்துடன் கிரீடத்தில் புரியவில்லை)பெருமாளுக்கு
 வலது மேடையில் இரு தாயார்கள்.( ஒரே நேரத்தில் இருவரையும் மணக்கப் போகிறாரா)
மேடையில் நான்கு புரோகிதர்கள் அதில் ஒருவர் என்னைமிகவும் கவர்ந்தார். ஏறத்தாழ ஆறடி உயரம் நல்ல ஆகிருதி என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால் அவரது சிகை அலங்காரம் நவீன பெண்கள் இவரைப் பார்த்தால் இவரை ஒரு ட்ரெண்ட் செட்டெர் ஆக்கி விடுவார்கள். வர்ணனையைக் கவனியுங்கள். வார்த்தைகளால் சொல்ல முயற்சிக்கிறேன் .முதலில் சொல்ல வேண்டியது அவருக்கு நல்ல கூந்தல் ஒரு சொல் வழக்கு உண்டுகூந்தல் இருக்கும் மகராசி அள்ளி முடிந்தால் என்ன கொண்டை போட்டால் என்னஎன்று.அந்த மாதிரியான முடி. தலையில் முன்பக்கத்திலிருந்து இரண்டு அங்குலம் தள்ளி அதே கோட்டில் தலையில் ஒரு வட்டமாக வகிடு. வகிட்டுக்குப் பின் இருக்கும் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டை போட்டிருந்தார். வகிட்டுக்கு இந்தப் பக்கம் இருக்கும் முடியை சுருளாக்கி ஒரு சுருள் சுற்று வைத்திருந்தார். முன் பக்கம் இருந்த பார்த்தால் கொண்டை தெரியாது. பக்கவாட்டில் இருந்து பார்த்தால் ஒரு புது மோஸ்தரில் முடியை காட்டும் அழகு
ஸ்ரீநிவாச கல்யாணம் பற்றிக் கூற வந்தவன் புரோகிதரின் முடி பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்பெருமாள் கையிலும் தாயார்கள் கையிலும் ---காப்பு என்று நினைக்கிறேன்சரடு கட்டினார்கள் திருமணத்துக்கு போயிருந்த எங்கள் கையிலும் கட்ட சரடு கொடுத்தார்கள். திருமணம் காணச்செல்பவர்கள்  கையில் சரடு கட்டும் பழக்கம் நான் காணாதது புரோகிதர்களைப்பற்றிக் கூறி வந்தபோது மூவர் வைஷ்ணவர்களாகத் தெரிந்தார்கள் ஒருவர் சைவச் சின்னம் அணிந்திருந்தார். அதற்கு விளக்கம் கேட்கக் கூடாது என்று மனைவியின் உத்தரவு திருமணச்சடங்கு நிகழும் போது ஒருவர் வந்தார். அவரை உட்காரவைத்து சங்கல்பம் செய்வித்தார்கள் அவர் அந்தக் கோவில் நிர்வாகி என்று பிறகு தெரிந்தது( அதனால்தானோ பிரத்யேக கவனிப்பு )
அவ்வப்போது திரையை மூடி என்னவோ செய்கிறார்கள் ஒவ்வொரு முறையும் தீபாராதனையுடன் திரை விலக்கப் படுகிறது. எல்லா வைதீகமுறைகளையும் அனுஷ்டிக்கிறார்கள் எனக்குத்தான் எது எது என்று தெரியவில்லை. மாங்கல்ய தாரணம் செய்யும் முன் தாலியை சபைக்குக் காண்பிக்கிறார்கள் கெட்டி மேளத்துடன் மாங்கல்யம் அணிவிக்கப் படுகிறது (  ஒரே நேரத்தில் இருவருக்கும் தாலி கட்டுகிறார், நமக்குத்தான் இருதார மணம் சட்ட விரோதம்) புது பட்டுப் பீதாம்பரமும் புடவைகளும் கொடுக்கப் படுகின்றன திரை விழ மறுமுறை திரை விலகும் போது பிராட்டியர்கள் இருவரும் பெருமாள் அருகே   .! நாதஸ்வர இசை கூடவே இருப்பதால் சடங்குகளை  அனுமானிக்க  முடிகிறது மாலை மாற்றல் ஊஞ்சல் எல்லாம் நிகழ்வது நாதஸ்வர இசை மூலம் தெரிகிறது
 ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் கல்யாண மகோற்சவம் நடை பெறுகிறது அத்தனை நேரமும் தரையில் சம்மணமிட்டு நான் உட்கார்ந்திருந்தது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது ஹோம குண்டத்திலிருந்து புகை அதிகம் இருக்கவில்லை  ( வாரம் மூன்று முறை சடங்குகளை நிகழ்த்திப் பழக்கப் பட்டவர்கள் ஹோம குண்டத்தில் புகை வராமல் பார்த்துக் கொள்வதிலும் தேர்ந்திருக்கவேண்டும் ) குடியிருப்பில் இருந்தபோது சீதா கல்யாணம் ருக்மிணி கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளைப் பெண்கள் நடத்துவது பார்த்திருக்கிறேன் கோவிலில் மூர்த்திக்குத் திருமணம் நடத்துவதை முதன் முதலாகப் பார்த்தேன்
திருமணம் முடிந்ததும் எங்களுக்கும்  மரியாதை செய்யப் பட்டது . எனக்கு ஒரு அங்க வஸ்திரமும் மனைவிக்கு ஒரு ஜாக்கெட் துண்டும் கல்யாணப் பலகாரங்களாக லட்டுவும் அடையும் சர்க்கரைப் பொங்கலும் தரப் பட்டது கோவிலில் புகைப் படம் எடுக்கத் தடை. சில படங்கள் இணையத்திலிருந்து எடுத்தது கீழே பதிவிடுகிறேன்       

 
வயாலிக்காவல்  பெருமாள் கோவில் நான் எடுத்த புகைப்படம்
 
ஸ்ரீநிவாச கல்யாணம்  இணையத்திலிருந்து
 
வயாலிக்காவில் பெருமாள் கோவில்  இணையத்திலிருந்து
 
கல்யாணப் பிரசாதங்கள்


35 comments:

  1. பெரும் புண்ணியம் சம்பாதித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. உங்களால் எங்களுக்குப் புண்ணியம் கிடைத்துள்ளது.

    ReplyDelete
  3. நானும் திருப்பதி கோவிலில் கல்யாண மகோஸ்தவத்தை பார்த்திருக்கிறேன்.சொன்னதும், சொல்ல நினைப்பதும் என்பதுபோல் நிகழ்வுகளோடு அடைப்புக் குறிக்குள் கொடுத்தவைகள் இரசிக்கும்படி இருந்தது.

    ReplyDelete

  4. நல்லதொரு பதிவுக்கு நன்றி ஐயா,
    தாங்கள் அடைப்புக்குறிக்குள் ஊதாக்கலரில் கொடுத்திருந்த குசும்புத்தனத்தை ரசித்தேன் அருமை.

    ReplyDelete
  5. நல்ல தரிசனம். கோவில் நன்றாக இருக்கும் எனத் தெரிகிறது.

    ReplyDelete
  6. உங்களைப் போன்றேதான் நானும் இவைப் போன்ற நிகழ்வுகளை வேடிக்கைப் பார்க்கிறேன் ,கடவுளின் பெயரால் இவையெல்லாம் வியாபாரம் தான் !

    ReplyDelete
  7. பெங்களூரில் வயாலிகா என்பது எங்கே இருக்கிறது என்று தெரிவித்தால் நலம். மிக அழகான தேவஸ்தானமாக இருக்கிறது. உங்கள் படங்களும், வர்ணனைகளும் அருமை.

    ReplyDelete
  8. பெங்களூரில் ரொம்ப நாள் இருக்கீங்க போலயிருக்கு.. உங்களுக்கு கன்னடா கொத்தா சார்?

    ReplyDelete
  9. திருப்தியான தரிசனம்... மனச்சாட்சியையும் ரசித்தேன்...

    ReplyDelete
  10. கோதா தேவி என்பவர் நம் ஆண்டாள், கோதை என்னும் தேவியே தான். வட மாநிலங்களில் கோதா தேவி என்னும் பெயரிலே தான் அறிமுகம் செய்யப் படுகிறாள். அவளே பூமாதேவியும் கூட. ஶ்ரீஎன்னும் மஹாலக்ஷ்மி தான் பத்மாவதித் தாயார் என்னும் பெயரில் இருக்கிறாள். ஶ்ரீதேவி அவளே. இரு மனைவியர் என்று நம் மனித வழக்கத்தில் பார்த்தால் தப்பே. ஆனால் சக்திகள் இரண்டு, இச்சாசக்தி, கிரியா சக்தி இரண்டும் இணைந்தே அல்லது மறைந்ததும் ஞானசக்தி! எல்லாக் கடவுளருக்கும் இந்த இரண்டு சக்திகள் இணைந்து அல்லது அவை மறைந்ததும் ஞான சக்தி என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வண்ணம் இரு மனைவியர் என்று சொல்லப்படுகின்றனர்.

    விழாக்கள் எடுப்பது எல்லாம் நம் மனமகிழ்ச்சிக்காகத் தான். அதோடு திருவிழாக்களை வைத்துப் பலருக்கு வேலை வாய்ப்பு, தொழில் போன்றவை நடைபெறுகின்றன.

    ReplyDelete
  11. நான் இதுவரை பெருமாள் கல்யாணம் பார்த்ததில்லை. ஆனால் முருகனின் கல்யாண வைபவம் பார்த்திருக்கேன்.

    மனிதக் கல்யாணச்சடங்குகள் எல்லாமே இறைவனுக்கும் இருந்தது. நாங்கள் கடைசில் மொய் கூட எழுதினோம்!

    துளசிதளத்தில் இருக்கும் படங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே!
    http://thulasidhalam.blogspot.co.nz/2014/12/5.html

    ReplyDelete
  12. எங்களுக்கும் தரிசனம் செய்வித்த தங்களுக்குப் புண்ணியமே!..

    வாழ்க வளமுடன்!..

    ReplyDelete

  13. @ டாக்டர் கந்தசாமி
    இந்தமாதிரிப் புண்ணியம் யார் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் ஐயா. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  14. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    என்னால் உங்களுக்குப் புண்ணியமா?நன்றி ஐயா?

    ReplyDelete

  15. @ வே.நடன சபாபதி
    வருகை தந்து பதிவை ரசித்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete

  16. @ கில்லர்ஜி
    பதிவைப் படித்துக் கருத்திட்டதற்கு நன்றிஜி. அடைப்புக்குறி எழுத்துக்கள் ஒரு சுவாரசியம் கொடுக்கத்தான் எழுதியது

    ReplyDelete

  17. @ ஸ்ரீராம்
    கோவில் நன்றாகவே இருக்கிறது. திருமலைக்குச் செல்ல இங்கிருந்தே டிக்கெட் வாங்கலாம்சென்னையிலும் இது போல் ஒரு கோவில் இருக்கிறது என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  18. @ பகவான் ஜி
    என் நோக்கம் வேடிக்கை பார்ப்பது அல்ல. விஷயங்களைக்கற்றுக் கொள்ளவும்தான் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டால்தான் நம்மால் கருத்துப் பதிவு செய்ய முடியும் என்றுநினைப்பவன் நான். வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  19. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    வயாலிக்காவல் பெங்களூருவின் மையத்தில் மல்லேஸ்வரம் அருகே இருக்கிறது. பெங்களூரு வருவதானால் தெரிவியுங்கள். நானே அழைத்துப் போகிறேன் வந்து ரசித்துக் கருத்டிட்டதற்கு நன்றி மேடம்

    ReplyDelete
  20. //சென்னையிலும் இது போல் ஒரு கோவில் இருக்கிறது என்று நினைக்கிறேன் //

    ஆம், சென்னையில் தி. நகர் வெங்கட்நாராயணா ரோடில் இருக்கிறது.

    ReplyDelete

  21. @ வருண்
    ஆம். நாங்கள் பெங்களுருவில் தொடர்ந்து 24 ஆண்டுகளாக இருக்கிறோம் கன்னடம் பேசினால் புரியும் கொஞ்சம் கொஞ்சம் பேசி சமாளிக்கவும் முடியும் வருகைக்கு நன்றி வருண்.

    ReplyDelete

  22. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி டிடி. மனசாட்சியா. ?அதை குசும்புத்தனம் என்றல்லவா கில்லர்ஜி சொல்கிறார்.

    ReplyDelete

  23. @ கீதா சாம்பசிவம்
    சில விளக்கங்களுக்கு நன்றி மேம்விஷயங்கள் தெரிந்து கொண்டால்தானே நாம் கருத்து எழுத முடியும்.

    ReplyDelete

  24. @ துளசி கோபால்
    வாருங்கள் மேடம் இந்தக் கல்யாணத்தை நாங்கள் நடத்தி வைத்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்று நண்பர் ஒருவர் கூறினார்முருகனும் ஒரே நேரத்தில் இருவருக்கும் தாலி கட்டுகிறாரா? வந்து கருத்திட்டதற்கு நன்றி மேடம்

    ReplyDelete

  25. @ துரை செல்வராஜு
    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதே என் குறிக்கோள். வந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  26. @ ஸ்ரீ ராம்
    செய்திக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  27. தில்லியிலும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கோவில் உண்டு. இங்கேயும் கல்யாண உற்சவம் நடக்கிறது அவ்வப்போது.

    கலந்து கொண்டது பற்றி பதிவு எழுதியதால் நாங்களும் சில விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  28. மனசாசியையும் ரசித்தேன் ஐயா
    நன்றி

    ReplyDelete

  29. @ வெங்கட் நாகராஜ்
    இங்கே அட்டவணைப் போட்டு விசேஷங்கள் கடை பிடிக்கப் படுகின்றன.நான் பெற்ற பேறு நம் வாசகர்களும் பெறவேபதிவு. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  30. @ கரந்தை ஜெயக்குமார்
    நீங்கள் மனசாட்சி என்கிறீர்கள் வேறு சிலர் குசும்பு என்கிறார்கள். வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  31. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  32. நல்ல தரிசனம். நல்ல பதிவு.

    நான் சில முறைகள் சென்றிருக்கிறேன். கோவில் திறந்த புதிதில் திருப்பதி போலவே அடுத்த தெரு வரைக்கும் நீண்ட வரிசை, கம்பித் தடுப்பு எல்லாம் இருந்தன. பிறகு நார்மலான கூட்டமாக உள்ளது.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  33. உங்கள் கருத்துகளயும் மிகவும் ரசித்தோம் சார். ஆமோதிக்கின்றோம். பல கேள்விகள் கேட்டால் அதற்கு பதில் இல்லை. கேட்கவும் கூடாது என்றும் சொல்லப்படுகின்றது.

    ReplyDelete

  34. @ ராமலக்ஷ்மி
    நானும் ஓரிரு முறை சென்றிருக்கிறேன் ஆனால்முதல் முறையாக இதுதான் ஒரு சேவையில் கலந்து கொண்டது வாழ்த்துக்களுக்கு நன்றி மேம்

    ReplyDelete

  35. @ துளசிதரன் தில்லையகத்து
    எதையும் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள் என்னும் சாக்ரடிசின் அறிவுரை சிறு வயதில் படித்தது அதுவே குணமாகிவிட்டது. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் இருந்தால்தான் அவற்றை நம் இஷ்டத்துக்கு வளைத்துக் கூறலாம் என்றும் நம்புபவன் நான். வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete