Wednesday, November 25, 2015

விடுமுறைத் துவக்கம்-நாய் பட்ட பாடு


                            விடுமுறைத் துவக்கம்= நாய் பட்ட பாடு
                       --------------------------------------------------------------


பதிவுகள் எழுதிக் கொண்டே இருக்கவேண்டும் இல்லாவிட்டால் தொய்வு ஏற்பட்டு எங்கு துவங்குவது எதை எழுதுவது என்பது புரிபட சில நேரம் ஆகிறது. 15 நாள் இடைவெளியில் எழுத நிறையவே விஷயங்கள் இருக்கின்றன.The dilemma is where to begin how to begin and what to start with.  நான் ஒரு எழுத்தாளன் அல்லவா  சம்பவங்களின் வரிசைப்படி எழுதுவது   என்று தீர்மானித்து விட்டேன்
நான் என் மகன் வீட்டு செல்ல நாய்க்குட்டி பற்றி எழுதி இருக்கிறேன் . நாங்களும் ஒரு காலத்தில் செல்ல நாய் வளர்த்திருக்கிறோம் என்றாலும் அனுபவம் காரணமாக அதை வளர்ப்பதில் இருக்கும் இடர்பாடுகளை என் மகனுக்கு எடுத்துச் சொல்லியும் கேட்காமல்  ஒரு கோல்டென் ரெட்ரீவர் நாய்க்குட்டியைக் ரூ10000-/ கொடுத்து வாங்கி வந்து விட்டான் முன்பே எழுதி இருக்கிறேன்  இவனும் மருமகளும் வேலைக்குப் போகிறவர்கள்  பெண்காலேஜ் போகிறவள் கடைக்குட்டி பள்ளிக்குச் செல்பவன்  பகல் பொழுதில் வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள். இவன் இருப்பதோ அடுக்கு மாடிக் குடியிருப்பில்  ஏழாவது தளம் நாய் குட்டியாய்த் திரியும் போது வீட்டில் ஆங்காங்கே மலஜலம் கழித்து அசிங்கப் படுத்தும் அவற்றை அவ்வப்போது சுத்தப் படுத்த வேண்டும் சிறிது வளர்ந்ததும்  அதை வெளியே கூட்டிப் போகவேண்டும் அதன் இயற்கை உபாதைகளைக் கழிக்கப் பழக்க வேண்டும் வீடு ஏழாவது தளத்தில் இருப்பதால் நாயை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கவேண்டும்  அது விருப்பப்படி வீட்டுக்குள் வளைய வரும்போது ஆங்காங்கே எதையாவது கடித்து வைக்கும் நாற்காலியின் ஓரங்கள் போன்று பல இடங்களிலும் வாயை வைக்கும் கட்டிப்போட்டால் குரைத்தே உயிரை வாங்கும்  இதை எல்லாம் எதிர் நோக்கியே நாய் வேண்டாம் என்றோம்  கேட்கவில்லை. மகன் அடிக்கடி டூர் போபவன்  நாயைக் கூட்டிப்போவது பேத்தியின் பொறுப்பாகும் கல்லூரி மாணவி படிப்பில் கவனம் சிதறும் பிரச்சனைகளைச் சந்தித்தவர்கள் நாயைக் கொடுத்து விட முடிவெடுத்தார்கள்.  ஆனால் யாருக்குக் கொடுப்பது . நாய் நன்றாக வளர்ந்திருந்தது. மகனின் மாமனார் அதைக் கேரளாவில் தான் வளர்ப்பதாக முன் வந்தார். அப்போதும் சொன்னோம். அவருக்கும் வயதாகிறது. நாயுடன் மல்லுக் கட்ட முடியாது என்றோம் . கேட்கவில்லை. நாய்க்காக ஒரு பெரிய கென்னெல் செய்தார்கள். வீட்டைச் சுற்றி இடம் இருந்தது சௌகரியமாகிப் போனது.  ஒரு நாள் பூஜா விடுமுறையில் குடும்பத்துடன் நாயையும் காரில் ஏற்றிக் கொண்டு கேரளா சென்றார்கள். ஒரு வாரம் போல் இருக்கலாம் . அவர்களால் நாயைப் பராமரிக்க முடியவில்லை. நாயை நீங்களே கூட்டிப் போய் விடுங்கள் என்றனர்.
இதனிடையில் எங்கள் வீட்டுக்கு முன் ரோந்து வரும் காவல்துறைப் பெண்மணி ஒருவர் பக்கத்து வீட்டில் இருக்கும் நாயை கேட்க அவர்கள் தரவில்லை. இதை அறிந்த நாங்கள் அப்பெண்மணி எங்கள் நாயை வளர்க்க விரும்புவார்களா என்று கேட்டோம்  அவர் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் காட்ட மகனிடம் சொன்னோம் அவன் அவர்கள் நாயை நன்கு பராமரிப்பார்களா அதை கவனித்துக் கொள்ள வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா  என்பது போன்ற கேள்விகளை சரமாரியாகக் கேட்டான் .  நாங்கள் அப்பெண்மணியிடம் இதைக் கூறவும்  அவர் அவரது உறவினர் ஒருவரை நல்ல திடகாத்திரமானவர்  அழைத்து வந்து அவர் கவனித்துக் கொள்வார் என்றார்.  எங்களால் நாயை உடனே காண்பிக்க முடியவில்லை. அதுதான் கேரளாவில் இருந்ததே. மகனை ஓரளவு திருப்திப் படுத்தி அதை கேரளாவில் இருந்து எடுத்துவரச் சொன்னோம் இவர்கள் மீண்டும் கேரளாவுக்குக் காரில் பயணித்து நாயை இந்த மாதம் பத்தாம் தேதி மதியம் கூட்டி வந்தனர். பத்தாம் தேதி தீபாவளி. அன்று தீபாவளி உறவினர்களோடு கொண்டாடலாம் என்னும் திட்டம் பிசு பிசுத்து விட்டது
மதியம் மூன்று மணி அளவில் அந்தக் காவல் துறைப் பெண்மணி அவரது உறவினருடன் வந்து விட்டார். என் மகனும் சிறிது நேரத்தில் நாயுடன் கேரளாவிலிருந்து வந்து சேர்ந்தான் வந்தவன் அவர்களிடம் ஒரு பெண்ணை மணம் முடிக்கக் கேட்பவர்போல்  துருவித்துதுருவி கேள்விகளைக் கேட்டான். எங்களுக்குத் தெரிந்து விட்டது அவன் அவர்களிடம் நாயைக் கொடுக்கப் பிரியப்படவில்லை என்று.  இருந்தாலும் இவன் குடும்பத்துடன் நாயையும் கூட்டிக் கொண்டு  நாய் வளரப் போகும் சூழ்நிலையை அறிந்து வர காவல்துறைப் பெண்மணியுடன் சென்றான் சென்ற சிறிது நேரத்தில் போனமச்சான் திரும்பிவந்தான் என்பது போல் நாயை கொடுக்காமல் கூட்டிக் கொண்டு வந்து விட்டான்  அவர்கள் குடி இருக்கும் இடம் மிகவும் சிறியது என்றும் நாய் குடி இருக்க இடமே இல்லைஎன்றும்  அதை வளர்க்கப் போகும் உறவினருக்கு நாயின் மேல் பாசமே இல்லை என்றும் ஏதேதோ சொன்னான் இப்படியாக எங்கள் தீபாவளி கழிந்தது.  அன்றிரவு  நாயை எங்கள் வீட்டிலேயே வைத்துக் கொண்டோம்  அந்த நாய் கட்டிப்போடுவதை விரும்பவில்லை.  எங்கள் மத்தியில் எங்களில் ஒரு ஜீவனாக இருக்கவே விரும்பியது.  மறு நாள் என் பிறந்த நாள். எங்களை அழைத்துப் போக எங்கள் மூத்தமகன் வந்திருந்தான்  காலை பத்து மணி அளவில் புறப்படுகிறோம்  என்றான் ஆகபிறந்தநாள் மண நாள் கொண்டாட்டமும்  சவசவத்து விட்டது. 11-ம் தேதி காலை நாங்கள் சென்னை நோக்கிப் பயணிக்க சின்னவன் நாயைக் கூட்டிக் கொண்டு  அவன் வீடு நோக்கிச் சென்றான்
நாங்கள் சென்னையில் இருந்தபோது தொலைபேசியில் நாயை அதைக் கவனிக்கும் டாக்டரிடமே கொடுத்து விட்டதாகவும்  இப்போது நாய் ஒரு நல்ல இடத்தில் வளரும் என்றும் நம்பிக்கையுடன்  சொன்னான்
அவனுக்குத் திருப்தி என்றால் எல்லாம் சரிதான்  பேரக் குழந்தைகளிடம் அடிக்கடி செல்லத்தைக் காணச் செல்ல வேண்டாமென்று கூறி இருக்கிறோம்  நாயும் புது இடத்தில் ஒன்ற வேண்டும் அல்லவா இப்படியாக தீபாவளியும் பிறந்தநாள் மற்றும் மண நாளும் இன்னொரு நாளாகிப் போயிற்று. 


BUDDY IN OUR DINING HALL
                
BUDDY IN OUR MAIN HALL
   

BUDDY PART OF THE FAMILY

                              
THE LADY CONSTABLE INTERESTED IN BUDDY


    
DISCUSSION IN PROGRESS
             
  

26 comments:

  1. சிறிய வயதிலிருந்து ஆசையாய் வளர்த்த அந்த BUDDY – யை, முதலில் தங்கள் சம்பந்தியிடம் ஒப்படைத்ததும், பின்னர் வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டது அறிந்தும் உண்மையிலேயே மனம் வருந்தினேன். அந்த நாயின் மனம் எப்படி எப்படியெல்லாம் பாடுபட்டதோ தெரியவில்லை. இன்னொருவரிடம் கொடுத்ததற்குப் பதிலாக, மாடி வீட்டை விட்டு விட்டு , தனிவீடாக சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்து அதனையும் வைத்துக் கொண்டு இருக்கலாம்.

    ReplyDelete

  2. நாய் குட்டியை வளர்ப்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுபோல. ஆசையோடு வளர்த்த நாயை எப்படி உங்கள் மகனால் கொடுக்கமுடிந்தது? அந்த நாயும் ஏங்கியிருக்குமே?

    ReplyDelete
  3. நகர வாழ்வுக்கு அதுவும்
    அடுக்கு மாடி குடியிருப்புக்கு நாய் வளர்ப்பு
    நிச்சயம் ஏற்றதில்லை.அதனாலேயெ
    பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில்
    தடைசெய்தும் இருக்கிறார்கள்

    ஆனால் இடையில் வளர்த்துவிட்டுக் கொடுப்பது என்பது
    மிகச் சங்கடமான விஷயமே

    அந்தக் கஷ்டம் வளர்த்து அனுபவப் பட்டவர்களுக்குத்தான்
    தெரியும்.நானும் பட்டவன்

    படங்களுடன் பதிவு வெகு சுவாரஸ்யம்

    ReplyDelete
  4. வளர்ப்பதைப் பிரிவது சற்றே கடினம்தான்.

    ReplyDelete
  5. வளர்ப்பு நாய் நமது கட்டுப்பாட்டுக்குள் வருவதுவரை கஸ்டம்தான் ஐயா

    ReplyDelete
  6. மீண்டும் உங்களிடமே வர விரும்பும்...

    ReplyDelete
  7. மனம் வருந்துவது தெரிகின்றது.. படங்கள் அழகு..

    ReplyDelete
  8. வளர்த்த நாயை விட்டு பிரிவது மிகக் கடினம்தான் பிளாட்சில் நாய் வளர்ப்பது சிரமமானது.நாங்களும் நாய் வளர்த்திருக்கிறோம்.தனி வீடாக இருந்ததால் அதிக பிரச்சனை இல்லை.எங்கள் செல்ல நாய் ஜூனோ 1 1/2 ஆண்டுகள் எங்களுடன் இருந்து எதிர்பாராவிதமாக இறந்துபோனது. அப்போது செல்ல நாயின் இறப்பு ஒருமாதம் பரபரப்புஎன்ற தலைப்பில் ஒரு தொடர் பதிவும் எழுதி இருந்தேன். நாய் வளர்ப்பதில் உள்ள இடர்பாடுகள் கருதி இப்போது தவிர்த்து விட்டோம். ஆனால் தினமும் ஒருமுறையாவது ஜுனோவைப் பற்றி பேசாமல் இருக்கமாட்டோம்.

    ReplyDelete
  9. ஒரு ஐந்து ஏக்கர் பிளாட். பெரிய பங்களா. ஏகப்பட்ட வேலையாட்கள். பணத்தை எண்ணிப் பார்க்காமல் செலவழிக்கக் கூடிய செல்வம். ஒரு டஜன் செல்லப்பிராணிகள். ஜிஎம்பி போன்ற நல்ல நண்பர்கள். ஆஹா, இதுவல்லவோ வாழ்க்கை. கடவுளே, அடுத்த ஜன்மத்திலாவது அந்த மாதிரி ஒரு வாழ்க்கையைக் கொடு.

    ReplyDelete
  10. உங்கள் மனம் பட்ட பாட்டை அந்த செல்ல நாயும் உணர்ந்திருக்கும் என்பதை நினைக்கும் போது சற்றே வேதனையாக உள்ளது. நாயிற்கடையேனாய் என்கிறார்கள் நாயன்மார்கள். நாயின் நன்றியுணர்ச்சியும், பழகும் பாங்கும் என்றும் நம் மனதில் இருந்துகொண்டேயிருக்கும்.

    ReplyDelete
  11. வளர்த்த நாய்குட்டியைப் பிரிவது என்பது கடினமான செயல் ஐயா

    ReplyDelete
  12. பல நாய்களை வளர்த்த அனுபவம் இருந்தாலும் கடைசியில் மோதி எங்களை விட்டுப் பிரிந்தபோது ரொம்பவே வேதனைப் பட்டுட்டோம். அதுக்கப்புறமா ஒரு குட்டியைக் கொண்டு வந்துட்டுப் பின்னர் அதுவும் என்னிடம் ரொம்பவே ஒட்டிக்கொள்ளவே என் கணவர் அதைத் தூக்கிப் போகச் சொல்லிட்டார்! அதன் பின்னர் நாயே வேண்டாம்னு இருந்துட்டோம். :(

    ReplyDelete

  13. @ தி தமிழ் இளங்கோ
    நீங்கள் சொல்லும் வழிமுறையும் யோசிக்கப்பட்டது. முன்பே யோசித்துச் சொன்னோம் அனுபவித்துப் பின் தெரிந்து கொண்டார்கள் வருகைக்கு நன்றி. ஐயா

    ReplyDelete

  14. @ வே. நடனசபாபதி
    நாயின் பிரிவை எதிர்நோக்கத் தயங்கியதே இந்தசெயலின் தாமதத்துக்குக் காரணம். வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  15. @ ரமணி
    பிரச்சனைகள் வரும் என்று முன்பே சொன்னோம் இப்போது வருந்திப்பயன் இல்லை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  16. @ ஸ்ரீராம்
    எதை எதையோ மறக்கிறோம் இதுவும் மறந்துவிடும் நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  17. @ கில்லர் ஜி
    நாய் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது ஜி. ஆனால் நாள் முழுவதும் வீட்டுக்குள் தனியே விடுவதுதான் பிரச்சனை வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  18. @ திண்டுக்கல் தனபாலன்
    அதைக் கொடுத்தபின் சிலநாட்கள் கழித்து அதைப் பார்க்க இவர்கள் சென்றபோது அதன் மகிழ்ச்சி தெரிந்ததாம்

    ReplyDelete

  19. @ துரை செல்வராஜு
    சில சங்கடங்களைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  20. @ டி என் முரளிதரன்
    திருச்சியில் குடியிருப்பில் இருந்தபோது ஒரு காக்கர் ஸ்பானியல் நாயை வளர்த்திருக்கிறோம் அனுபவப் பட்டவர்கள் நாங்கள் எழ்ழு வருடங்கள் எங்களில் ஒருத்தியாக இருந்த செல்லி பற்றி நானும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் அது இறந்தபோது என் இரண்டாம் மகன் மூன்று நாட்கள் தூங்கினதில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளிசார்.

    ReplyDelete

  21. @ டாக்டர் கந்தசாமி
    உங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டுகிறேன் நன்றி ஐயா.

    ReplyDelete

  22. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    இலக்கியங்களில் ஏனோ நாயைக் குறைத்தே மதிப்பிட்டிருக்கிறார்கள் கம்பராமாயணத்தில் பல இடங்களில் நாயைத் தாழ்த்தி எழுதி இருப்பதைக் காட்டி நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி நன்றி ஐயா.

    ReplyDelete

  23. @ கரந்தை ஜெயக்குமார்
    மனதுக்கு மறக்கத் தெரியும் ஐயா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  24. @ கீதா சாம்பசிவம்
    நீங்கள் எப்படி நாய்களை வளர்த்தீர்களோ தெரியாது. ஆனால் நாங்கள் வளர்த்த செல்லியோ என் மகன் இப்போது கொடுத்த buddy யோ ராஜகுமாரி ராஜகுமாரன் போல் வளர்ந்தனர் என்றால் மிகையல்ல. நாயை வளர்த்துப் பிரிவது கஷ்டமே. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  25. என்ன தான் செல்லப் பிராணிகள் என்று நாம் சொல்லிக் கொண்டாலும், அவற்றை நாலு சுவற்றிற்குள் அடைத்து பட்டையிட்டு கட்டிப் போடும் பொழுது அவற்றின் இயல்பான சுதந்திரம் பறி போய்விடுகிறது.அவற்றின் மீதான நம் ஆளுகையே மிஞ்சுகிறது.

    ReplyDelete

  26. @ ஜீவி
    பிரச்சனையே அங்குதான் வந்தது ஜீவிசார் என் மகன் வீட்டில் நாயைக்கட்டிப்போடவே மாட்டார்கள் நாள் முழுவதும் ஆளில்லாத வீட்டில் கட்டிப்போடப்படாத நாய் எப்படிச் சும்மா இருக்க முடியும் மேலும் காலையும் மாலையும் அதை வெளியே வாக்கிங் அழைத்துச் செல்ல வேண்டும் நாள் போகப் போக நாய்க்கு நம் மீதான ஆளுமையே அதிகமாயிற்று.மகன் அல்லது பேத்தி இவர்கள் நேரம் நாயிடமே செலவாயிற்று, இப்போது பிரச்சனை ஓரளவு சகஜ நிலைக்கு வருகிறது வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete