Wednesday, March 16, 2016

நாம் படைத்த கடவுள்கள்


                                         நாம் படைத்த கடவுள்கள்
                                          -----------------------------------


ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி  வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது   தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணுசிவன்  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும்  கற்பிதம் செய்து அவர்களின்  சக்திகளில்  நம்பிக்கை  வைத்து  அவர்களை  வழிபாடு செய்தால் நலம்  பெறுவோம் எனும்  நம்பிக்கை  சிறு  வயது  முதலே  வளர்க்கப்படுகிறதுதாயே  மனிதனின்  முதல் தெய்வம்  என்று  கருதப்படும்  நம் நாட்டில், கடவுளை அன்னையின்  வடிவத்திலும்  வழிபடுகிறோம்சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாகஒவ்வொரு  தெய்வமும்  ஒவ்வொரு  சக்தியின் பிரதிபலிப்பாக  வணங்க  வளர்க்கப்படுகிறோம்.
இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஆயிரமாயிரம்   கதைகளும்  புனைவுகளும்   ஏற்பட்டிருக்க வேண்டும்.

சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில்  சூரிய  வழிபாடும்பிறகு உயிர்  வாழப்  பிரதானமான  அக்னி,ம் , காற்று , நீர் , மண்  போன்றவைகளும்  வழிபாட்டுக்கு  உரியனவாயின .

எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் வரும் வழக்கம்போல் நினைப்பதைப் பதிவில் பகிர்கிறேன் ஒரு முறை அடையாளங்கள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் அதில் ஊர் பேர் அங்க அடையாளங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளர்களுக்கும் உண்டு. குழல் வைத்துக் கொண்டிருப்பவன் கண்ணன், முருகனுக்கு வேல், லக்ஷ்மிக்கு தாமரை, சரஸ்வதிக்கு வீணை, பெருவிழிகளுடன் நாக்கைத் துருத்திக் கொண்டிருந்தால் காளி சிவனுக்கு பாம்பு சூலம், கொண்டையில் அரை நிலா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் படுத்துக் கொண்டிருந்தால் அரங்கன் , நின்று கொண்டிருந்தால் பெருமாள், தவழ்ந்து கொண்டிருந்தால் கண்ணன், கோவணத்துடன் இருந்தால் குமரன். நமக்கு இருக்கும் அங்க லட்சணங்களை கடவுளுக்கும் வைத்து நம்மைப் போல் அவருக்கும் உருவம் கொடுத்து நம்மில் அவரைக் காணும்( அல்லது அவரில் நம்மைக் காணும்) பாங்கு வியக்க வைக்கிறது

இருந்தாலும் நம்மில் அவர்களை காணும்போது  நாம் சமமாகக் கருதப் படலாம் என்னும் காரணமே கடவுளர்களுக்கு  ஆடை ஆபரணங்களுடன்  சில பிரத்தியேக அடையாளங்களையும் சக்தியையும் நிர்ணயித்து கொடுத்திருக்கிறோம் தனியே வில்லுடன் ஒருவரை உருவகித்தால் அவர் யாராக வேண்டுமானாலும் எண்ணப்படலாம் ஆகவேதான் ராமர் என்று அடையாளப் படுத்த கூடவே இன்னொரு வில்லாளியை , லக்க்ஷ்மணனுடன் அனுமன் சீதை என்று சேர்த்து வைத்து அடையாளப் படுத்துகிறோம் அதே போல் கண்ணனைக் குழந்தையாகக் காட்டும்போது குமரனிடம் இல்லாத மயில் பீலிபோன்றவற்றுடன்  அறிகிறோம் குமரன் என்றாலேயே கையில் வேல் நெற்றியில் விபூதிப் பட்டை சில நேரங்களில் வெறும் கோவணமே ஆடை  என்று பாகுபடுத்தி வித்தியாசம் பாராட்டுகிறோம்காளி என்றாலேயே பயங்கரமானவள் என்று தெரிவிக்க துருத்திய நாக்கு எறியும் நிலையில்  சூலாயுதம் போன்றவற்றைத் தரித்திருபவளாகக் காட்டுகிறோம்
 மேலும் அங்க லாவண்யங்களைக் கற்பனை செய்து வைத்து எழுதிய இறைப் பாடல்களும் உருவங்களுக்கு மெருகூட்ட உதவி இருக்கலாம்இந்தமாதிரி எண்ணங்கள் எல்லாம் என் கற்பனையில் தோன்றுவதே கடவுளர்களின் உருவங்கள் இவால்வ்  ஆனவிதத்தைக் கற்பனை செய்து பார்க்கும்போது தோன்றுவனவே நான் எழுதுவது வாசகர்களுக்கும் இந்தமாதிரி உருவங்கள் உருவான கதையோ கற்பனையோ இருந்தால் தெரிவிக்கலாமே
 அதிக கற்பனை இல்லாமல் ஓரளவு காரண காரியங்களுடன் இவால்வ் ஆனதே லிங்கமும் ஆவுடையாரும் என்று தோன்றுகிறது  சிருஷ்டியின் காரணமான  ஆண்பெண் சேர்க்கையையே  உருவகித்துக் கடவுள் வடிவம் கொடுத்து விட்டார்களோ என்று தோன்றும் போது அதைச் சொன்னால் பலரும் தவறாக எண்ணக் காரணமாகலாம் என்று தோன்றுவதால்  அதிகம் விவரிக்கவில்லை ஆனால் அதுவே லாஜிக்கலாகத் தெரிகிறது
 அது என்னவோ தெரியவில்லை  நம் நம்பிக்கைகளும்  வழிபாடுகளும் என்னில் என்னவெல்லாமோ எண்ணங்களைத் தோற்றுவித்து பதிவெழுத வைக்கிறது.                                     


                   

 


40 comments:

  1. அடையாளம் கண்டுகொள்ள நாமே உருவம் கொடுத்துக் கொண்டுள்ளோம் என்கிறீர்கள்.

    லிங்க வடிவத்தைப் பொறுத்தவரை "கண்ணுக்குப் புலப்படாத அருவமான அடைவில் கண்ணுக்குப் புலப்படுவதர்காக வடிவம் ஒன்றில் காட்சியளித்தார். அந்த அடையாள வடிவத்தைக் குறியீடு என்னும் பொருளில் லிங்கமும்,

    கீழே சுற்றி இருக்கும், ஆவுடை என்று அழைக்கப்படும் பீடம் வட்ட வடிவமாகவோ, சதுர வடிவமாகவோ இருக்கலாம். ஆ என்றால் பசு ; பசு என்பது ஜீவன்களைக் குறிக்கும் சொல். ஆவுடை என்றால் ஜீவன்களை உடைய என்று பொருள்படும். நடுவில் கடவுள் உயர்ந்து நிற்க, அவரைச் சுற்றிலும் ஜீவன்கள் சூழ்ந்து நிற்கிண்டன எனும் தாத்பர்யத்தின் அடையாளமே சிவலிங்கம்" என்று சமீபத்தில் படித்தேன்.

    ".................. இத்தகைய ஆராய்ச்சிகள் தேவையற்றவை. ஊர்ப் பெரிய மனிதரை எல்லோரும் சொந்தம் கொண்டாடுவது போல, நல்ல விஷயத்துக்காக வெவ்வேறு காலகட்டங்களில் மாறுபட்ட கதைகள் உருவா(க்)கி இருக்கலாம். பற்பல கதைகள் கூறி, ஒரு சில நாட்களிலாவது கடவுளிடம் நம்மை ஈடுபடுத்த நம்முடைய முன்னோர்கள் முயற்சி செய்துள்ளார்கள். கதைகளை விட உள்ளிருக்கும் தாத்பர்யம் முக்கியம்."

    இதுவும் நான் அங்கு படித்ததுதான்!

    ReplyDelete
  2. வழக்கமாக உருவமில்லா கடவுளுக்கு உருவம் கொடுத்து என்பீர்கள். (நீங்கள் வழக்கமாகச் சொல்லும் சில வரிகள் எனக்கே மனப்பாடம் ஆகிவிட்டன.) இப்பொழுது உருவம் கொடுத்தற்கான காரணத்தை நீங்களே கற்பனை செய்திருக்கிறீர்கள். சரியோ தப்போ இந்த உணர்வு உண்மை என்றால் இனிமேல் உருவமில்லா கடவுளுக்கு உருவம் கொடுத்து என்று சொல்ல மாட்டீர்கள். ஏனென்றால் உருவம் கொடுத்ததற்காக காரணம் உங்களுக்குக் கிடைத்து விட்டது.

    ஆனால் தலைப்பு என்னவோ 'நாம் படைத்த கடவுள்கள்' என்கிறீர்கள். இதில் தான் குழப்பம்.

    உருவம் நாம் உருவாக்கியது-- நாம் படைத்தது-- என்றீர்கள். சரி. ஆனால் தலைப்பிலோ முதலுக்கே மோசமாய் கடவுள்களே நாம் படைத்தது என்கீறீர்கள்.

    இந்தப் பதிவின் படி பார்த்தால் மனிதர்கள் தம்மை[ போலவே கடவுளர்களையும் படைத்து தம்மைப் போலவான உருவங்களையும் அந்தக் கடவுளர்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்கிறீர்கள். ஆம், ஐ கரெக்ட்?..

    ReplyDelete
  3. அனைத்தும் நம் வசதிக்காகவே. அவரவர்கள் மனதைப் பொறுத்தே அனைத்தும் அமைகிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு...
    நம் மனைதைப் பொறுத்ததுதான் எல்லாமே...



    ReplyDelete
  5. " God created man out of His own Image " என்று Bible -ல் வருவதை , An Idealist's View of Life என்ற புத்தகத்தில் Dr. S.Radhakrishnan
    Man created God out of his own image, என்று paraphrase செய்திருக்கிறார் ..

    மாலி

    ReplyDelete
  6. உண்மைதான் ஐயா நமது எண்ணங்களின் வெளிப்பாடே கடவுளின் உருவங்கள் இதுவரை பார்த்தவர்கள் உண்டா ? என்றால் இல்லை

    ReplyDelete
  7. உங்களின் பார்வையில் மட்டுமல்ல, சிந்தனையிலும் ஏகப்பட்ட குழப்பம்...

    ReplyDelete
  8. தலைப்பிலேயே (தெரிந்த)தெரிய முற்படுகிற ஒருவித ஆணவம் தெரிகிறது ஐயா... மன்னிக்கவும் ...

    நன்றி...

    ReplyDelete
  9. நேரம் கிடைப்பின் : dindiguldhanabalan.blogspot.in/2012/06/blog-post.html

    ReplyDelete
  10. நாம்தான் கடவுள்களை படைத்துள்ளோமா நண்பரே...!!!

    ReplyDelete
  11. மனிதனால் சிந்திக்காமல் இருக்க முடியாது. சிந்தித்து தெளிவு பெறுவதே விவேகம். சிந்தித்து மேலும் குழப்பம் ஏற்படுமானால் அது பல சொற்களால் குறிப்பிடப்படுகிறது. (உதாரணம்-லூஸ்) அப்படிப்பட்ட குழப்ப சிந்தனைகளைத் தவிர்க்கவேண்டும்.

    வயதாகும்போது சிந்தனைகள் தெளிவடைய வேண்டும். சிந்தனைகளை நெறிப்படுத்தவேண்டும். தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்புவது வீண் வேலை.

    ReplyDelete
  12. இதைக் குறித்து நிறையவே சொல்லலாம்..

    ஆனாலும் நமது சொந்த கருத்துக்குக் கூட துணையாக வேறொன்றை மேற்கோளாகக் காட்டுவது வழக்கம்..

    அதன்படி -

    தேவன் தன் சாயலாக மனிதனைப் படைத்தார் - என்பது பைபிள்..

    அப்படியானால் ஆனைமுகன், ஆறுமுகன் இந்த வடிவமெல்லாம்?..

    அவையெல்லாம் தத்துவங்கள்..

    நாக்கைத் துருத்திக் கொண்டிருக்கும் காளி?..

    அதெல்லாம் உணர்வின் வெளிப்பாடான திருக்கோலங்கள்..

    மேலும் சிலவற்றை - எனது தளத்தில் சொல்ல முயற்சிக்கின்றேன்..

    ReplyDelete
  13. அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்!

    // ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும்.//

    பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்ட சித்தாந்தம் இது. உருவமற்ற ஒரு கடவுளை மனதில் கொண்டு வருவதை விட, ஏதேனும் ஒரு உருவத்தை கடவுளாகக் கொண்டு வருவதும், வழிபடுவதும் கடினமான வேலை இல்லை. பைபிளில் தனது சாயலாக மனிதனை ஆண்டவர் படைத்தார் என்பார்கள். பெரும்பாலான மதங்களில் உள்ள கடவுளின் உருவங்கள், வண்ண ஓவியங்களின் வளர்ச்சிக்குப் பிறகு உண்டானவை. மைக்கேல் ஏஞ்சலோ ஓவியங்களையும், இந்து மதக் கடவுள்களின் உருவங்களை வரைந்த ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களையும் இங்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

    ReplyDelete

  14. @ ஸ்ரீராம்
    என் பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறேன் என் எண்ணங்கள் எழுத்துரு பெற்றன. அவை என் கற்பனையே வேறு கற்பனைகளோ கதைகளோ இருந்தால் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்று.கதைகளைவிட/ உள்ளிருக்கும் தாத் பர்யம் முக்கியம்/ இதிலும் எனக்கு உடன்பாடே ஆனால் காரண காரியங்கள் தெரியாமல் தாத்பர்யத்தை விட்டுக் கதைகளையே கட்டி அழும் மாந்தர்களை நினைத்து எழும் எண்ணங்களே என் பதிவுகளின் முக்கிய சாராம்சங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  15. @ ஜீவி
    உருவம் கொடுத்ததற்கான காரணங்கள் கிடைத்து விட்டதால் அந்த உருவங்களை நாம் படைக்கவில்லை என்று அர்த்தமாகாதுஆகவே நாம் படைத்த கடவுளர்கள் என்னும் தலைப்பு சரியே என் பதிவை விடுங்கள் வேறு லாஜிக்கலான காரணங்கள் இருந்தால் சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  16. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    @ பரிவை சே குமார்
    சில பதில் தெரியாத விஷயங்களுக்கு அவரவர் மனம் பொறுத்தது என்று கூறி வெளியேறுகிறோம் வருகைக்கு நன்றி ஐயன்மீர்

    ReplyDelete
  17. @ வி மாலி
    ஐயா நான் திரு ராதாகிருஷ்ணனின் எழுத்தைப் படிக்கவில்லை. என் கற்பனையோடு அவர் எழுத்தும் ஒத்துப்போவதிலொரு திருப்தி/ வருகைக்கு நன்றி

    ReplyDelete

  18. @ கில்லர்ஜி
    என் எண்ணங்களோடு ஒத்துப்போவது திருப்தி தருகிறது வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  19. @ திண்டுக்கல் தனபாலன்
    உங்கள் பின்னூட்டத்துக்கு மறு மொழியாக
    /எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
    உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
    மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
    வளைவெல்லாம் .என்றறிந்தவன் தானே நீ.?/ வருகைக்கு நன்றி

    ReplyDelete

  20. @ அஜய் சுனில்கர் ஜோசப்
    இந்தப் பதிவைப் படித்தும் இதை என்னிடம் கேட்கலாமா நண்பரே நன்றி

    ReplyDelete
  21. @ அஜய் சுனில்கர் ஜோசப்
    ஒரு வேளை பல கதைகளில் தல புராணங்களில் வருவது போல் அவை சுயம்புவாக முளைத்ததாக எண்ணுகிறீர்களா ?

    ReplyDelete

  22. @ டாக்டர் கந்தசாமி
    தெளிவு குழப்பம் எல்லாமே அவரவர் மூளையைப் பொறுத்தது வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  23. @ துரை செல்வராஜு
    நாமே ஒரு உருவம் கொடுத்து அதை நியாயப் படுத்த தத்துவங்களை துணைக்கழைக்கலாம் இருந்தாலும் உங்கள் எண்ணங்களை எதிர் நோக்கி நன்றியுடன்

    ReplyDelete

  24. @ தி தமிழ் இளங்கோ
    எப்படியானாலும் கடவுள்களுக்கு உருவம் கொடுத்ததுநாம்தானே ராஜா ரவிவர்மாஎல்லாம் மிகவும் பின்னால் வந்தவர்கள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  25. @ திண்டுக்கல் தனபாலன்
    உங்கள் பதிவைப் பார்வை இட்டேன் என் பதிவு தெய்வம் எங்கே இருக்கிறார் என்பதற்கான பதிலல்ல கடவுளர்களின் உருவங்கள் எவ்வாறு வந்தன என்பது பற்றிய ஒரு சிறு சிந்தனை ஓட்டமே நன்றி

    ReplyDelete
  26. தஞ்சாவூர் கலைப்பாணியில் மயில் பீலியோடு கடவுள் ஓவியம் வரைகிறீர்கள். எந்தக் கடவுள் இவர் என்று கேட்டால் கிருஷ்ணர் என்கிறீர்கள்.

    ராமேஸ்வரம் கோயிலில் போய் தரிசித்தேன் என்கிறீர்கள். சிலை தரிசனத்தைக் கடவுள் தரிசனமாகக் கொள்கிறீர்கள்.

    நீங்கள் எழுதும் வரிகளுக்கு உங்களை வைத்துத் தான் சொல்ல முடியும். என்ன உணர்வு இந்த ஓவியம் கிருஷ்ணர் ஓவியம் என்று தெரியப்படுத்தியதோ, எந்த உணர்வில் இராமேஸ்வரர் கோயிலில் இராமநாத சுவாமியின் தரிசனம் நடந்ததோ, அந்த உணர்வு சொல்லாததையா வார்த்தைகளில் வரிகளில் யாரும் சொல்லி விட முடியும்?..

    கடவுளை உணர்வில் உணருலதே சாத்தியமாகும். வார்த்தைகளில் உணர்த்த முடிந்தால் அது விதண்டாவாத்தில் தான் முடியும்.

    ReplyDelete

  27. @ ஜீவி
    வணக்கம். நானே அடையாளங்கள் என்னும் பதிவிலும் இதிலும் ஓரோர் கடவுளுக்கான அடையாளங்களைகுறிப்பிட்டிருக்கிறேன் எனது ஓவியத்தைதஞ்சாவூர் பாணி ஓவியமாகத்தான் கொள்ள வேண்டுமே தவிர நான் எங்கும் கடவுள் ஓவியம் என்று கூறிய நினைவில்லை மயில் பீலியோடு கூடிய குழந்தைப் படம் பெரும்பாலும் கிருஷ்ணர் என்றே அறியப் படுகிறார். கோவில்களுக்குப் போகிறேன் கடவுளை தரிசிக்க அல்லஎன்று பலமுறை கூறி விட்டேன் ஒரு பொருள் பற்றி எழுதும் போது அது பற்றிய ஓரளவு அறிவு வேண்டும் அல்லவா. நான் எழுதிய பதிவில் கடவுளை உணர்த்த முற்படவில்லை. அவர்களது உருவங்கள் பற்றியே எழுதி இருக்கிறேன் கடவுள் உணர்வா அறிவா என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தேன் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் மேலும் பல நேரங்களிலும் நாம் பொதுவாக உணர்வு வழியே தான் நடத்திச் செல்லப் படுகிறோம் அறிவு தோற்கிறது என்றும் எழுதி இருக்கிறேன் நான் சொல்லாத விஷயங்களில் என்னிடமிருந்து வார்த்தைகளை வருவிப்பது உமக்குப் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  28. http://gmbat1649.blogspot.in/2016/02/1.html

    தரிசன வரிசையின் கூட்டத்தில் ஐக்கியமானோம் ஒரு வழியாக தரிசனம் முடிந்தது. இராமநாதஸ்வாமி விஸ்வநாதர் பர்வத வர்த்தினி அனைவரையும் தரிசித்தோம்

    -- மேலே காண்பது அந்த இராமேஸ்வரம் பதிவில் நீங்கள் சொன்னதே.

    ஆன்மீக விஷயங்களை எழுதுவதற்கு தனி ஆற்றலைத் தாண்டி உள்ளுணர்வு வேண்டும். ஏனென்றால் அறிவு, ஆராய்ச்சிகளால் இன்னும் இந்த உள்ளுணர்வுகளை தீர்மானிக்க இயலாத நிலையிலேயே இருக்கிறோம்.

    உள்ளுண்ர்வுகள் நம் அனுபவங்களின் வீச்சில் ஏற்படுகின்றன. அதனால் இப்படியான உணர்வுகள் நபருக்கு நபர் வித்தியாசப்படுகின்றன. இதெல்லாம் விவாதங்களில் விடை கண்டு கோண்டு விட முடியாத அளவுக்கு நம் உணர்வோடு ஒன்றிக் கலந்திருக்கின்றன.
    எனக்கு ஏன் ஏற்படவில்லை என்றால் அதற்கான அனுபவங்கள் உங்களுக்கு ஏற்படவில்லை என்றால் நீங்களே தான் அதற்கான பதிலை கண்டறிய வேண்டும்.

    ReplyDelete
  29. உருவ வழிபாடு, உருவமற்ற வழிபாடு இரண்டுமே மனிதர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை கொடுக்கத்தான்.
    கடவுள் இல்லை என்போருக்கும், இருக்கிறது என்போருக்கும் இறைவன் அருள்புரிந்து கொண்டு தான் இருக்கிறார். அதை உணர்ந்தால் போதும்.

    ReplyDelete

  30. @ ஜீவி
    /எனக்கு ஏன் ஏற்படவில்லை என்றால் அதற்கான அனுபவங்கள் உங்களுக்கு ஏற்படவில்லை என்றால் நீங்களே தான் அதற்கான பதிலை கண்டறிய வேண்டும்/நான் எதையும் எண்ணிப்பார்க்கிறேன் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று இருந்து விடுவதில்லை மேலும் இராமேஸ்வரத்தில் தரிசனம் என்று நான் கூறியது சிலைகளைக் கண்டேன் என்னும் பொருளில்தான் நானும் என்னையும் பிறரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேனே எனக்கும் நல்லவற்றில் ஈடுபாடு உண்டு. நீங்களே எழுதி இருப்பது போல் மாறாகச் சிந்தனை செய்பவர்கள் ஏன் நல்லவர்களாக இருக்கக் கூடாது எனக்கு அன்பு எம்பதி போன்றவைகள் உண்டு. பிறரிடம் அது இல்லை என்று நான் கூற மாட்டேன் என் எழுத்துக்களின் அடித்தளமே அறியாமல் சிந்திக்காமல் செயல் படும் சிலரைப் பார்ப்பதாலேயே எழுந்ததுயாரிடமும் விவாதமோ விதண்டா வாதமோ செய்யவில்லை. என் கருத்துக்களைக் கூற கணினி உபயோகமாகிறது இல்லையென்றால் என் சிந்தனைகள் என்னோடே போகும் வாசிப்பவர்களுக்கு இப்படியும் சிந்திக்கும் பலர் இருப்பது தெரியவரலாமே. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  31. @ கோமதி அரசு
    கடவுள் என்பதே ஒரு கான்செப்ட் என்று எண்ணுகிறவன் நான் As you sow . so you reap என்பதில் எனக்கு உடன் பாடு உண்டு அருளோ மருளோ அவரவர் எண்ணங்களில்தான் இருக்கிறது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  32. ஐயா! ஆத்திகன் இறைவனைக் புறக் கண்ணால் காண இயலாததால் தான் அவனுக்குத் தெரிந்த வடிவம் கொடுத்து இறைவனை வணங்குகிறான். இதில் ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து

    ReplyDelete
  33. //இராமேஸ்வரத்தில் தரிசனம் என்று நான் கூறியது சிலைகளைக் கண்டேன் என்னும் பொருளில்தான் //

    தெய்வம் என்றால் அது தெய்வம்== அது
    சிலை என்றால் வெறும் சிலை தான்
    உண்டு என்றால் உண்டு
    இல்லை என்றால் இல்லை
    -- கவியரசர்

    தெயவ சந்நிதானத்தில் நிச்சயம் கையெடுத்துக் கும்பிட்டிருப்பீர்கள் என்பது கணிப்பு. நிச்சயம் தெய்வ சந்திதானத்தில் கைகட்டி இருக்க முடியாது. மற்றவர்கள் கைகள் தொழும் பொழுது அனிச்சையாய் நம் கைகளும் எழும்புவது இயல்பானது. கைகட்டி இருக்க முடியும் என்பவர்கள் கோயிலை நாட மாடமாட்டார்கள்.

    நீங்கள் பூரண கடவுள் மறுப்பாளர் இல்லை. இதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம். நீங்கள் நாத்திகராய் இருந்தால் இதெயெல்லாம் கையாளுகிற விதமே வேறு மாதிரி இருக்கும்.

    'சொல்லடி, சிவசக்தி!' என்று சக்தியிடம் உரிமை எடுத்துக் கொண்டு கேட்டவன் பாரதி. அப்படியான உரிமைக்கு ஒரு பக்குவம் வேண்டும். அந்த பக்குவம் இல்லை என்றால் அப்படிக் கேட்கக் கூட நா புரளாது.

    வாலிப வயதில் உங்களுக்கு கடவுள் மறுப்பு கொள்கைகள் அறிமுகமாகியிருக்கலாம். இந்த அறிமுக அவஸ்தைகளெல்லாம் பட்டவன் நானும் தான். அந்தக் கால கடவுள் மறுப்பு கொள்கைகள் ரொம்பவும் மேலோட்டமானவை. 'முருகனுக்கு சளி பிடித்தால் எந்தக் கையால் சிந்துவான்?' என்று மேடைகளில் முழங்குவதான ரொம்பவும் மேலோட்டமானவை. அவர்கள் கடவுளரின் உருவங்கள் அளவிலேயே தேங்கிவிட்டவர்கள். அதற்கு மேல் உள்ளார்ந்து போக அவர்களும் விரும்பவில்லை. அதனால் தான் அவர்களிடையே அது நீடித்துப் புரையோடிப் போகவில்லை. அவர்கள் இயங்கு இயல் பொருள் முதல் வாதம் அறியாதவர்கள். அறிந்திருந்தால் இங்கர்சால் ஆகியிருப்பார்கள். போகட்டும்.

    ஆனால் என் யூகம் என்னவெனில் வாலிப வயதில் அறிமுகமான அது, நடு வயதில் காணாப்போன அது இப்பொழுது முதிய வயதில் வந்து தொந்தரவு செய்கிறது. முதிய வயது இத்தனை கால வாழ்க்கையை சிந்தனை செய்ய அருமையான வாய்ப்பு. அவற்றை நெறிபடுத்த வேண்டும். அவ்வளவு தான். நெறிபடுத்த மேலோட்டப் பார்வை உதவாது. உள்ளார்ந்து உணர வேண்டும். இயற்கையே கடவுள், பஞ்சபூதங்களே கடவுள்..--இதெல்லாம் உங்களுக்கு உடன்பாடானவை என்பது எனக்குத் தெரியும். அந்த பஞ்சபூதங்கள் எப்படி நம்மை மீறிய சக்தியாக சொரூபம் கொள்கின்றன, நம்மில் அவற்றின் ஆளுகை என்ன என்பதை ஆழ்ந்து கற்க வேண்டும்.

    ஒருபக்கம் கற்க எதுவும் இல்லை என்று எண்ணும் மன்சுக்கு எல்லாம் முரண்டு பிடிப்பதாய்த் தான் மாறிப்போகும். குறைந்தபட்சம் விண் இரகசியங்களைப் பற்றி ஆச்சரியப்படுவதையாவது செய்யுங்கள். ஓராயிரம் சூரியன்கள் இன்னும் மனிதனின் பார்வைக்கே படவில்லை என்பதை நினைத்து பிரமியுங்கள். இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்க மாட்டீர்கள் என்று தெரியும்,

    வேதாத்ரி மகரிஷியின் நூல்கள் உங்களுக்கு வழிகாட்டியாக அமையலாம். அவர் இயற்கையை கடவுளாகக் கொண்டு கைதொழுதவர். சமூக விஞ்ஞானி.

    'என் சிந்தனைகள்' என்று நீங்கள் நினைப்ப;தையெல்லாம் டிக்ளேர் செய்யாதீர்கள். சிந்தனாவாதிகள் என்று சொல்லப்படுவோரின் இலக்கணமே வேறு.

    நீங்கள் கடவுள் மறுப்பை மேலோட்டமாகப் பார்க்கிறீர்கள். அது ரொம்பவும் உள்ளார்ந்த விஷயம். வழிவழியாக வந்தது. எவ்வளவு பிர்மாண்ட கோயில்கள்?
    உள்ளத்தில் ஓர் ஆதர்ச சக்தி சுடர் விடவில்லை என்றால் இதைல்லாம் எழுப்பப்பட்டிருக்குமா? கடவுள் மறுப்பில் நம் பங்கு வெறும் கேள்விகள் கேட்பது தான் என்றாகிப்போய்விட்டது. .

    சில காட்சிகளைக் காணும் பொழுது இந்த வயதில் உங்கள் மனம் சங்கடப்படுகிறது. அதற்கு இறைவனைக் காரணப்படுத்துவது தான் உங்கள் சிந்தனையாகப் போய்விடுகிறது. போதி சத்துவர் புத்தரான கதையும் இது தான். ஆனால் அரச வாழ்க்கையை துச்சமெனத் தூக்கி எறிந்து விட்டு உலகுக்கு ஒப்பற்ற சேதிகள் சொல்ல அவர் பட்ட துன்பம் ஏகப்பட்டது. தன்னை வருத்திக் கொள்ளாமல் எதுவுமில்லை.

    நாம் நினைப்பதையெல்லாம் நினைத்தவாறே எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே வார்த்தைகள் வரிகளாகி நம்மிலிருந்து வெளிப்பட வேண்டும்.

    எதை எழுத்தில் எழுதவும் தயங்க வேண்டும். இதுவே உயர்த விஷயங்களைப் பற்றி எழுதத் தொடங்குவதற்கான ஆரம்ப நிலை. அந்த தயக்கம் இறைவனாய் நம்மை வழிப்படுத்தும்.

    ReplyDelete

  34. @ ஜீவி
    நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி என் மீதும் என் எழுத்தின் மீதும் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள அக்கறையே இதனை எழுத வைக்கிறது என்பதும் தெரியும் எனக்கென்னவோ என் எழுத்துக்களுக்குச் சாயம் பூசிப் பார்க்கிறீர்கள் என்று தோன்றுகிறது கடவுளுக்கு உருவம் வந்தது பற்றிய எழுத்துக்களை முற்றிலும் மாறுபட்ட கோணங்களில் சிந்தித்து இதனை எழுதி இருக்கிறீர்கள் என் எழுத்துக்கள் யாரையும் புண்படுத்த எழுதப்பட்டது அல்ல. ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி நினைக்கவேண்டும் என்று நினைப்பதும் எனக்கு உடன் பாடில்லை. என் சிந்தனைகள் என்று நினைப்பதை எல்லாம் டிக்லேர் செய்யாதீர்கள் என்கிறீர்கள் நான் என்னை எல்லோரும் பின்பற்ற வேண்டிய சிந்தனாவாதியாக நினைக்கவில்லை/
    சில காட்சிகளைக் காணும் பொழுது இந்த வயதில் உங்கள் மனம் சங்கடப்படுகிறது. அதற்கு இறைவனைக் காரணப்படுத்துவது தான் உங்கள் சிந்தனையாகப் போய்விடுகிறது/ உங்கள் கருத்தே தவறு என்று சொல்ல விரும்புகிறேன் கடவுளைக் குறை கூறி நான் எழுதியதில்லை. கடவுளின் பெயரில் நடக்கும் சில சங்கதிகளை நான் எழுதி இருக்கிறேன் என்பதே சரியாகும் என் எழுத்துக்கள் உங்களை இவ்வளவு தூரம் பாதிக்க வேண்டியதில்லை என்றே எண்ணுகிறேன் சில கருத்துக்களில் உடன்பாடு இல்லாதவர்களும் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்சில அபிப்பிராயங்களை எவ்வளவுதான் சொன்னாலும் மாற்ற முடியாது நான் நினைப்பதை எல்லாம் எழுதக் கூடாது என்னும் உங்கள் ஆலோசனைப்படி இதனை முடிக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  35. @ வே நடனசபாபதி
    / ஐயா! ஆத்திகன் இறைவனைக் புறக் கண்ணால் காண இயலாததால் தான் அவனுக்குத் தெரிந்த வடிவம் கொடுத்து இறைவனை வணங்குகிறான்./ இதைத்தானேசார் நான் பதிவாக எழுதி இருக்கிறேன் ஆராய்ச்சி என்பதெல்லாம் கிடையாது மனதில் தோன்றியது எழுத்தில் வந்தது அவ்வளவே வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  36. தங்கள் உணர்ந்த பதிலுக்கு நன்றி, ஐயா!

    ஏகப்பட்ட வேலைகளின் சுமையின் அழுத்தத்தில் தான் மதியம் பூராவும் யோசனைக்குப் பிறகு இதையும் எழுதினேன். எழுதியது வீணாகவில்லை என்று தெரிகிறது. மீண்டும் நன்றி. இத்துடன் இந்த விஷயத்தை முடித்துக் கொள்வோம்.

    ReplyDelete
  37. நல்ல பதிவு சார். அதாவது திறந்த மனது என்பார்கள். எதையும் அலசி ஆராய்வது. தான் வாழ்பூராம் நம்பியிருந்த ஒன்றை இன்று வெக்கமின்றி "நான் நினைத்தது தவறு" என்று சபையில் ஏற்றுக்கொள்வது. அதை நீங்கள் கடவுள் பக்தர்களிடம் பார்ப்பது அரிது. நான் நம்புகிறேன். என் நம்பிக்கை என்றாகிவிட்டாலே அங்கே திறந்த மனதில்லை. எந்த நம்பிக்கையுமே அளவு மீறும்போது அது அபாயகரமானது, கடவுள் நம்பிக்கையும்தான்.

    இதைப் பத்தி நிறையப் பேசலாம். ஆனால் அப்படிப் பேச ஆரம்பித்தால் பலர் மனதும் புண்படும். மேலும் முடியவில் யாரும் எந்த ஒரு கருத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் "என் கருத்து " "என் நம்பிக்கை " "உனக்கென்ன பிரச்சினை?" என்றுதான் முடியும். நேரவிரயம்தான். இதுபோல் பலமுறை பல விவாதங்களில் பார்த்தாச்சு. பக்தர்கள் மாறினாலும் விவாதம் ஒரே மாதிரித்தான் முடியும்.

    After all the debate and arguments and "fights" one finally will feel..

    "What a waste of time! Why did I try explain things to him/her whom I know lacks an open-mind! What an insensible guy I am to spend my time on this guy" That's how I feel all time..:)

    Take it easy, Sir!

    ReplyDelete
  38. @ வருண்
    நான் வலைத்தளத்தில் எழுதுவது எனது எண்ணங்களை. அதற்குத்தானே வலைத்தளம் என் எண்ணங்களை யார் மீதும் திணிப்பதில்லை. யாருடனும் விவாதமும் செய்வதில்லை. ஒருவேளை விவாதத்தில் நான் வென்றால் ஒரு நட்பை இழக்க நேரலாம் உங்களது இங்கு பதித்திருக்கும் கருத்துக்களில் எனக்கு உடன் பாடே. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  39. கடவுளர்களின் உருவங்கள் மனிதர்கள் உருவாக்கியவை என்பது சரிதான்...தான் நம்பும் ஒன்றை வணங்கிட ஒரு உருவம் வேண்டும் என்பதற்காகத்தான். இதுபற்றிப் பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம் சார்.

    ReplyDelete
  40. @ துளசிதரன் தில்லையகத்து
    /இது பற்றிப் பேசவேண்டும் என்றால் நிறையப் பேசலாம் சார்/ அதற்குத்தானே பதிவெழுதினேன் பேசவோ சொல்லவோ தயக்கம் ஏனோ.? வருகைக்கு நன்றி சார் /மேம்

    ReplyDelete